வெள்ளி, 26 டிசம்பர், 2025

SC ST - ST மாணவர்களை ஜெர்னலிசம் படிக்கவைக்கும் முதலமைச்சர்

 SC - ST மாணவர்களை ஜெர்னலிசம் படிக்கவைக்கும் முதலமைச்சர்

இமையம்

“சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று எதுவுமே ஒருவர் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது.” - மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் சமமான கல்வி என்பதுதான் தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை. பிறப்பின் அடிப்படையிலோ, பிற காரணங்களாலோ ஒருவருக்குக் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதனால், தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கல்விக்குத்தான் அதிக முன்னுரிமை தந்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூகத்தினரும் தரமான உயர்கல்விவரை பெற்றிருக்கிறார்கள். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘புதுமைப் பெண் திட்டம்’கூட அதற்காக உருவாக்கப்பட்டதுதான்.

 ‘படி’ என்று சொல்வது திராவிட மாடல். ‘படிக்காதே’, ‘படிக்கக் கூடாது’ என்பது ஆரிய மாடல். சமஸ்கிருதத்தை இன்றுவரை படிக்கக் கூடாது என்றுதான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களே சமஸ்கிருதத்தைப் படிக்கக் கூடாது என்று தடைவிதித்தவர்கள்தான். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழ் இலக்கியம், வர்ணாசிரம தர்மத்தைச் சொல்வது சமஸ்கிருத இலக்கியம். பல நூற்றாண்டுகளாகக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், மூடநம்பிக்கைகளின் பெயரால் ஒரு பிரிவினருக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இருந்துவந்தது. 1921 நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற நிலை உருவானது. அண்ணாவினுடைய ஆட்சிக் காலத்தில், கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தை எந்தெந்த விதத்தில் படிக்கவைக்க முடியுமோ அந்தந்த விதத்தில் படிக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டார்கள். மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் பல படிகள் முன்னே போய் ஆரம்பக் கல்வி முதல், உயர்கல்வி வரை உலகத் தரத்திலான கல்வி என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெண்களை உயர்கல்வி பெற வைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

 தமிழ்நாட்டில் மட்டும்தான் மாவட்டம்தோறும் மருத்துக் கல்லூரிகள், மாவட்டம்தோறும் பொறியியல் கல்லூரிகள், தாலுக்கா அளவில் ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பப் பள்ளி இல்லாத ஊரில்லை. கலைக் கல்லூரி இல்லாத தாலுக்கா இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக, அறிவியல் மனப்பான்மையுள்ள சமூகமாக மாற்ற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை. அக்கொள்கையை நிறைவேற்றியே தீருவேன்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

இன்றைய நிலையில் எல்லா கல்விப்புலங்களிலும் அனைத்துச் சமுதாய மாணவ மாணவிகளும் இருக்கிறார்கள். ஆனால், ஊடகத் துறையில் SC - ST மாணவ மாணவிகளின் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பதைக் கண்டறிந்த முதலமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தை உருவாக்கி இருக்கிறார். இந்த நிறுவனம் ஊடகவியல் படிக்க வேண்டும், ஊடகவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிற, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான கல்வியை வழங்கிவருகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் SC – ST மாணவர்களுக்கான ‘இதழியல் கல்வி நிறுவனம்’ மாநில அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் ‘முதலமைச்சர் லட்சியத் திட்டம்’ என்றுகூடச் சொல்லலாம். அறிவுத்துறை எதுவாக இருந்தாலும் அவற்றில் அனைத்துச் சமூகத்தினரும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருப்பது சமூக நீதியாக இருக்க முடியாது. ஊடகத் துறையில் சாதிய மேலாதிக்கம் இன்றுவரை இருக்கிறது. அந்நிலையை ஊக்குவிக்கக் கூடாது. ‘ஒருசிலர்தான் அறிவாளிகள், ஒரு சிலருக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது, இருக்கும்’ என்று கற்பிதத்தை உடைக்க வேண்டும். ‘ஒரு சிலருக்கு’ என்பதைப் ‘பலருக்கும், எல்லோருக்கும்’ என்ற நிலையை உருவாக்கத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தைத் தொடங்கியிருக்கிறார். எல்லாமும் எல்லோருக்கும் என்பதுதான் திராவிட மாடல் அரசு என்பது.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’ ஓராண்டு முதுகலை சான்றிதழ் படிப்பை (Diploma) வழங்குகிறது. அதோடு 9 நாட்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையும் நடத்துகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் திறமையான மாணவ மாணவிகளைக் கண்டறிந்து, விண்ணப்பங்களைப் பெற்று, அதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு ரூ.20,000 ஊக்கத்தொகையுடன் முன்னணி ஊடக நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் இருமுறை உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிரந்தர பணியாளர்களோடு பிற ஊடக நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் திறமைவாய்ந்த, புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்துடன் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரியுடன் இணைந்து ஒரு வாரக் கால உண்டு உறைவிடப் பயிற்சிக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. மொத்த நிகழ்வையும் ஒருங்கிணைப்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. இதன் அடிப்படை நோக்கம் இந்திய அளவிலும், உலக அளவிலும் SC – ST மானவ மாணவிகளை மதிக்கத்தக்க ஊடகவியலாளர்களாக உருவாக்குவதுதான்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துத் தனியார் ஊடகவியல் கல்வி நிறுவனங்களில்கூட வழங்கப்படாத பல சிறப்புப் பயிற்சிகள் ‘சென்னை இதழியல் கல்வி நிறூவன’த்தில் வழங்கப்படுகின்றன. அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செய்தியை உருவாக்கும் நடைமுறை பயிற்சிகள், செய்முறை வகுப்புகள், வீடியோ எடிட்டிங், ஒளிபரப்பு (Broadcasting), செய்தித் தொகுப்பு, தரவு இதழியல், தொழிற்நுட்பப் பயிற்சிகள், ஒலி மற்றும் ஊடகத் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடைப்படை நோக்கம் SC – ST மாணவ மாணவிகள் தகுதிவாய்ந்த ஊட்கவியலாளர்களாக மாற வேண்டும். அவர்களுடைய பங்களிப்பும் ஊடகத் துறையில் இருக்க வேண்டும் என்பதுதான்.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தைத் தொடங்குவதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் 7.75 கோடியை 18.7.2025 அன்று ஒதுக்கினார். திரு. N. ரவி, இந்த நிறுவனத்தின் தலைவராகவும் (The Hindu, Former Chief Editor), A.S.பன்னீர் செல்வம், இயக்குநராகவும் (Former Reader’s Editor of the Hindu) செயல்பட்டுவருகிறார்கள். திரு. N. ரவியின் உழைப்பும், திரு. A.S.பன்னீர் செல்வத்தின் உழைப்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் திருமதி லட்சுமி பிரியா போன்றவர்களுடைய நோக்கமும் உழைப்பும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நற்பெயரைப் பெறவும் நல்ல நிறுவனமாக வளரவும் நிச்சயம் காரணமாக இருக்கும். ஊடகவியல் கல்வி என்பது, வேலை பெறவும், திறமையைக் காட்டுவதற்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல. சமூகத்தையும் அதன் இயங்கியல் போக்கைக் கண்டுணரவும் தன் கருத்தை நேர்மையாகப் பதிவு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருப்பது ஊடகக் கல்வி. எல்லாப் படிப்பிற்கும் மேலானது சமூகக் கல்வி. சமூகத்தை யார் படிக்கிறார்களோ அவர்களே மேம்பட்டவர்கள்.

தமிழ் மொழியில், பண்பாட்டில், கலாச்சாரத்தில், வாழ்வியல் நடைமுறையில் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் மூவருமே இதழியலாளர்களே! அவர்கள் உருவாக்கிய இதழியல் நெறிகளைக் கற்க வேண்டும். படிக்கிறோம் என்பதைவிட, எதைப் படிக்கிறோம், யாரை முன்னோடிகளாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிஇனத்தவர் 19ஆம் நூற்றாண்டிலேயே பல பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் நடத்தி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கும். 1894ஆம் ஆண்டிலேயே ‘பறையன்’ என்ற இதழை இரட்டைமலை சீனிவாசன் நடத்தியிருக்கிறார். ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழை 1907ஆம் ஆண்டிலேயே அயோத்திதாசர் பண்டிதர் நடத்தியிருக்கிறார். ‘திராவிடத் தீபிகை’ – 1847, ‘சங்கமம்’ – 1870, ‘திராவிட வர்த்தமானி’ – 1882, ‘திராவிட பாண்டியன்’ – 1893 ஆகியவை திராவிட இயக்க இதழ்கள் உருவாவதற்கும், வளர்வதற்கும் முன்னோடிகளாக அமைந்தவை. தமிழில் இதழியல் துறை வளர்வதற்கு வித்திட்டவை இந்த இதழ்கள்தான். 

அண்மையில் கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் தலைவர் மற்றும் டீன், “பறையனும் புலயனும் சமஸ்கிருதத்தைப் படித்ததால் அசுத்தமாகிவிட்டது. அவற்றைச் சுத்திகரிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். சமஸ்கிருதம் மட்டுமல்ல, IIT, IIM என்று எந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கப் போனாலும், இதே போன்ற தொனியில் குரல்கள் கேட்பதை நாம் அறிவோம். “பிராமணர்கள் படிக்கும்போது தரம் உயர்ந்துவிடும், மற்றவர்கள் படிக்கும்போது தரம் தாழ்ந்துவிடும்” என்று சொல்பவர்களுடைய வாயில் ஆசிடை ஊற்றுவதுபோலத்தான் அனைவருக்கும் உயர் கல்வி என்ற நிலைப்பாட்டை எடுத்துவருகிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். எந்தத் துறையும் யாருக்கும் ஏகபோகத் துறையாக இருக்கக் கூடாது என்ற லட்சிய நோக்கில் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’, SC – ST மாணவ மாணவிகள் ஊடகத் துறையில் தங்களுடைய பங்களிப்பையும் திறமையையும் வெளி உலகிற்குக் காட்டுவதற்குப் பெரிய வாசலாக இருக்கும். எதையும் சிதைக்காது, சீர் செய்யும். யாரையும் பிரிக்காது, ஒன்றுசேர்க்கும். யாரையும் தாழ்த்தாது, சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும், எதையும் இடிக்காது, மாறாக உருவாக்கும் என்பது திராவிட மாடல். மு.க. ஸ்டாலின் அரசின் முழக்கம், கொள்கை. அந்தக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’.

முரசொலி 21.12.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக