புதன், 23 பிப்ரவரி, 2022

Ippothu Uyirodirukkiren Novel Short Note - Dr.Arulselesteen Prema.A

 

C:\Users\Shalom Coputer\Desktop\WhatsApp Image 2022-02-21 at 8.19.04 PM.jpeg  Writer Imayam’s works reflect the concerns of society all through his works. His latest novel ‘Ippothu Uyirodirukkiren’ deals with patients, their Sufferings, the cruelty of their diseases and their pains. The medical Business world is ready to expose guilt and inferiority complex with sickening air and punishments: human beings who make sense of compassion and humanity meaningless. The invisible ideology is being transformed into machines, agents, hospitals, courts, offices. Unsolved science that can only be discovered and told, cruel systems created and managed by human beings for human beings, the substance of the neighbourhood manam.

The novel is all about a 15 years old narrator with a failing kidney. The novel expresses the untold miseries experienced by the patient and his attenders. The narrator is undergoing the cruelty of end-stage renal disease. How the narrator undergoes the trauma and the family member’s suffering are aptly brought out in this novel.

Tamilarasan is a patient who suffers from renal failure. His parents knew the nature of his illness.  They knew very well that he can’t live for a long time. Nevertheless, they decided to do something.  

  At present, he is undergoing dialysis twice a week. Every time he undergoes the same, he experiences excruciating pain, which is unbearable to both Tamilarasan and his parents. They wanted to put a full stop to this once for all.


       As per the medical personnel’s advice, they opt for kidney transplantation. His mother decided to donate one of her kidneys to her son. 

        The writer expresses his disappointments and anxieties in the following manner after learning the rules, regulations and procedures for Kidney transplantation. ‘The attendee of the patient is more of a sinner than the patient himself... The one who dies in his sleep is the most fortunate’.

       For the transplant to take place, the patient has to undertake at least 13 tests and that donor 15 tests. There should be matching at every stage. Only then the transplantation will be done. In Tamilarasan’s case, everything was meticulously planned and carried out. The kidney transplantation was done. A rude shock awaited both Tamilarasan and his parents days after the transplantation. The creatinine level was a cause for concern. Moreover, there was a rejection of the kidney. The very thought that Tamilarasan has to undergo dialysis once again gave much mental agony to Tamilarasan and his parents.

    Tamilarasan’s family has the wherewithal to undergo the procedures. They have to the money, have men to help etc. The writer at the same time is conscious about the ordinary lay people who are placed in similar situations. He raises a question that even when the haves with men and materials find it very difficult to comply with all the necessary requirements for Kidney transplantation, the plight of the ordinary lay people who undergo a similar predicament cannot be expressed in words. 

           In the novel writer, Imayam exemplifies the power and effect of language could have on the readers as it has become the medium of his expression in the medical terms, corporate system and power of money. And he rising questions and the quest for answers the basis of writing not providing all answers or conclusions or solutions it’s up to the readers and society, the writer brings out the concerns of the society through this novel. 


திங்கள், 7 பிப்ரவரி, 2022

ஆண்டவரின் கிருபை - இமையம்

 

ஆண்டவரின் கிருபை - இமையம்

“சீக்கிரம் படும்மா.  காலயில ஆப்ரேசனுக்குப் போக வாணாமா?” என்று சொன்ன சுலோச்சனாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத மாதிரி கட்டிலில் உட்கார்ந்திருந்தாள் பிரேமா.

            நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் சுலோச்சனா.  தாயும் மகளும்தான்,  ஆனாலும் இருவருமே ஒருவரையொருவர் தவிர்ப்பது போல்தான் உட்கார்ந்திருந்தனர்.

“பசிக்குதா?”

“இல்லெ.”

“பசி இல்லாம எப்பிடி இருக்கும்? வெறும் வயிறு எப்பிடி கண்ண மூட விடும்?” என்று சுலோச்சனா சொன்னதற்கு பிரேமா எதுவும் பேசவில்லை.

            பிரேமா எரிந்துகொண்டிருந்த இரவு விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு யாருடனாவது மனம்விட்டு பேச வேண்டும்போல இருந்தது.  ஆனால், யாருடன் பேசுவது  என்பது மட்டும்தான் புரியவில்லை.  கர்ப்பப்பையை எடுப்பதற்காக மருத்துவமனையில் மதியம் சேர்ந்ததிலிருந்து சுலோச்சனாவின் முகத்தைப் பார்க்கத்  தைரியம் இல்லாமல் இருந்தது.  எப்போதும்போல் இல்லாமல் சுலோச்சனாவும் இன்று அளந்துஅளந்து ஒவ்வொரு வார்த்தையாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். 

செல்போனை எடுத்த பிரேமா, ‘யாருடன் பேசலாம்?’ என்று யோசித்தாள்.  ‘மேனகா’ என்ற பெயர்தான் முதலில் நினைவுக்கு வந்தது.  ‘அவளுக்கு போன் போடலாமா? தூங்கி இருப்பாளா? விழித்துக்கொண்டிருப்பாளா?’ என்று தயங்கினாள். பிரேமாவுடன் வேலை செய்கிற பெண்தான் மேனகா.  அவளுடன்தான் மனதிலுள்ளதையெல்லாம் ஒளிவுமறைவில்லாமல் பேசுவாள்.  இருவருமே உதவிப் பேராசிரியர்கள்தான் என்றாலும் ‘வாடி போடி‘ என்று பேசிக்கொள்வார்கள். பிரேமாவைவிட மேனகாவுக்கு நான்கு வயது கூடுதல். இன்று பிரேமா மருத்துவமனையில் சேரப்போகிறாள் என்பது அவளுக்குத் தெரியும்.  தெரிந்த விஷயத்தையே திரும்பவும் பேச வேண்டுமா என்று யோசித்தாள்.  பிடிக்காத பொருள் கையில் இருப்பதுபோல செல்போனை வெறுப்புடன் படுக்கையில் வைத்தாள். நேரத்தைப் பார்த்தாள்.  கடிகாரம் இரவு பத்து மணி என்று காட்டியது.  நாளைக் காலை ஏழு மணிக்குக் கர்ப்பப்பையை எடுப்பதற்கான எல்லா நடைமுறைகளையும் இரவு எட்டு மணிக்கே முடித்துவிட்டுப் போய்விட்டார்கள்.  இனி நாளைக் காலையில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துக்கொண்டு போவதற்கு மட்டும்தான் நர்சுகள் வருவார்கள் என்பதே கோபத்தை உண்டாக்கியது. செல்போனை எடுத்தாள்.  ‘முகநூல், வாட்ஸப் பார்க்கலாமா?’ என்று யோசித்தாள்.  ‘எல்லா சனியனும் தன்ன விளம்பரப்படுத்திக்கிட்டுக் கெடக்கும்’ என்று முனகிக்கொண்டே செல்போனை முன்பு இருந்த இடத்திலேயே வைத்தாள்.

“இதோட முடிஞ்சா போதும்.  நீ ஆஸ்பத்திரிக்கி அலயாம இருந்தா போதும்.  அதத்தான் கர்த்தர்கிட்ட தினமும் ஜெபிக்கிறன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுலோச்சனாவுக்கு அழுகை வந்துவிட்டது.

“நாளைக்கி என்னோட வாழ்க்கயில முக்கியமான நாள். பிறந்த நாளப்போல. சாவுற நாளப்போல” முணுமுணுத்துக்கொண்டே பிரேமா கண்களை மூடிக்கொண்டாள்.  மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உட்கார்ந்திருந்தால் வாய்விட்டு அழ நேரிடலாம் என்ற பயத்தில் குப்புறப்படுத்துக்கொண்டாள். நிதானமாக இருக்கத்தான் விரும்பினாள். முடியவில்லை. படபடப்பாக இருந்தது.

பிரேமாவுக்குக் கல்யாணமாகும்போது இருபத்தி ஆறு வயது.  கல்யாணமாகி இரண்டு வருசம் கழிந்தும் அவளுக்குக் குழந்தை உண்டாகவில்லை.  உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்யும் பேராசிரியர்கள் என்று எல்லோருமே உலகிலேயே மிகவும் முக்கியமான விஷயம் அவளுக்குக் குழந்தை உண்டாகவில்லை என்பதுதான் போல, “நல்ல செய்தி உண்டா?”, “நல்ல செய்தி சொல்ல மாட்டியா?”, “என்ன விசேஷம்?”, “விசேஷம் இல்லியா?”, “ஸ்வீட் தர மாட்டியா?” என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  ஆரம்பத்தில் ‘சொல்றன்’ என்று சொன்னாள். அடுத்தடுத்த ஆண்டுகளில் “ட்ரீட்மன்டுல இருக்கன்” என்று சொன்னாள்.  நாளாக நாளாக “இருந்தா சொல்ல மாட்டனா?” என்று திருப்பிக் கேட்டாள். பிறகு வந்த நாட்களில் யார் கேட்டாலும், எது கேட்டாலும் காதில் விழாததுபோல் நகர்ந்து தூரமாகப் போய்விடுவாள். யாருடைய விசேஷத்துக்கும் போகக் கூடாது என்று முடிவெடுத்து, அதன்படியே நடந்துகொண்டாள்.  கூட்டமாக இருக்கிற இடத்துக்குக்கூட போவதைத் தவிர்த்துவந்தாள். அப்படி இருந்தும் விட மாட்டார்கள்.  போன் போடும்போது கேட்கிற முதல் கேள்வியே “விசேஷம் ஒண்ணுமில்லியா?” என்பதாகத்தான் இருக்கும். அடுத்த கேள்வி “இன்னுமா பொறக்கல?” என்பதாக இருக்கும். இந்த கேள்விகளை கேட்கும்போதெல்லாம் மண்டையே வெடித்துப்போகிற மாதிரி கோபம் வரும். “புருசன்கூட படுத்து புள்ள வாங்கிட்டியா?” என்று எப்படி எல்லோராலும் பச்சையாகக் கேட்க முடிகிறது?

கல்லூரியில் பேராசிரியர்களாக இருப்பவர்கள்கூட, “கல்யாணமாகி எத்தன வருசமாகும்? இன்னும் இஷ்யூ இல்லியா? ஆச்சரியமா இருக்கே.  எனக்கெல்லாம் ரெண்டே மாசத்தில கன்ஃபார்மாயிட்டுது தெரியுமா? தள்ளிப் போடாதிங்க” என்பதோடு நிற்காமல், தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் பெயர்களை, மருத்துவமனைகளின் பெயர்களைச் சொல்வார்கள். கொஞ்சம் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், “கோயிலுக்குப் போயிட்டு வாங்க.  வயித்தில நின்னுடும்” என்று சொல்வார்கள்.  மற்றவர்கள் சொல்கிற அறிவுரைகளைக் கேட்கும்போதெல்லாம் “தனக்குக் குழந்தை பொறக்கல” என்பதுதான் அவர்களுடைய வாழ்நாள் கவலைபோல என்று நினைத்துக்கொள்வாள்.

“ஆஸ்பத்திரிக்கிப் போனியே என்னாச்சி?” என்று உறவினர்கள் கேட்கும்போதெல்லாம் அழுகை வந்துவிடும்.  என்ன பதில் சொல்வது? “ட்ரீட்மன்டுல இருக்கன்” என்று எத்தனை வருசத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் “தத்தெடுத்துடுங்க அதுதான் பெஸ்ட்” என்று மற்றவர்கள் சொல்லும்போதெல்லாம் அழுகையைவிட கோபம்தான் அதிகமாக வரும்.  பிரேமா கோபப்படும் போதும், அழும்போதும் “விடு, சனங்கன்னா அப்பிடித்தான் இருப்பாங்க” என்று விக்டர் சொல்வான்.

உறவினர்கள், நண்பர்கள், கல்லூரிப் பேராசிரியர்களைப் பற்றி நினைத்ததுமே பிரேமாவுக்கு  எரிச்சல் அதிகமாயிற்று.  “கர்ப்பப்பையை எடுத்துவிட்டேன்” என்று சொல்லும்போது அவர்களுடைய முகபாவம் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பது பூமிக்கடியில் படுத்துக்கொண்டிருப்பது போல் இருக்கவே எழுந்து உட்கார்ந்துகொண்டு சுலோச்சனாவைப் பார்த்தாள்.  பரிதாபமாக இருந்தது.  தன்னால்தான் இப்படி உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்ததுமே அவளுக்கு அழுகை வந்தது.

இன்னும் ஏன் குழந்தை உருவாகவில்லை என்று உறவினர்கள், தெரிந்தவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகுதான் மருத்துவரிடம் போனாள்.  கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வளர்ந்திருக்கிறது.  அதனால்தான் குழந்தை உருவாகவில்லை.  சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னார்.  மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாள்.  ஊசிகளைப் போட்டுக்கொண்டாள்.  சாப்பாட்டு விஷயத்திலும் மருத்துவர் சொன்னபடிதான் நடந்துகொண்டாள்.  எதுவும் பலன் தரவில்லை.

சாதாரணமாகப் பெண்களுக்குக் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும்.  அவை தானாகவே அழிந்தும்போகும்.  பலருக்கு மருந்து மாத்திரைகளின் மூலம் கரைந்துவிடும்.  மிகச் சிலருக்குத்தான் லேப்ராஸ்கோபி சிகிச்சையின் மூலம் கரைய வைக்க வேண்டும்.  பிரேமாவுக்கு மாதவிடாயின்போது நீர்க்கட்டிகள் தானாகவும் கரைந்து போகவில்லை.  மருந்து மாத்திரைகளுக்கும் சரியாகவில்லை.  லேப்ராஸ்கோபி சிகிச்சை அளித்தாலும் ஆறு மாதங்கள்வரைதான் வளராமல் இருக்கும்.  பிறகு மீண்டும் வளர்ந்துவிடும்.  நீர்க்கட்டிகள் வளராமல் இருக்கிற காலத்தில் கருத்தரிக்கலாம் என்றால் அதற்கும் இடையூறாக ஹார்மோன் இம்பேலன்ஸால் மூன்று நான்கு மாதங்களுக்கு விட்டுவிட்டு மாதவிடாய் வரும். வந்தால் ஒரு வாரத்துக்கு நிற்காது. சீரற்ற மாதவிடாய்க்கான சிகிச்சைக்காக  நாட்டு மருந்து, சித்த மருந்து, ஆங்கில மருந்து என்று மாற்றிமாற்றி சாப்பிட்டாள்.  எதுவும் நடக்கவில்லை.  கர்ப்பப்பையில் கேன்சரும், வலது பக்க மார்பகத்தில் கேன்சர் கட்டியும் வந்ததுதான் மிச்சம்.  கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் மார்பகத்தில் புற்றுநோய் வளர்வதற்கு வாய்ப்பு குறைவு என்று மருத்துவர் சொன்னார்.  ஒரு வருடமாகக் கர்ப்பப்பையை எடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்தாள். வேண்டுமானால் மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று சொன்னாள்.  ஆறு மாதத்துக்கு முன்புதான் வலது பக்க மார்பகத்திலிருந்து புற்று நோய் கட்டி எடுக்கப்பட்டது.  மார்பகத்தை முழுமையாக அகற்றிவிடுவார்களோ என்ற கவலையில் அன்று அவள் அழுத அழுகைக்கு அளவே இல்லை. தன்னுடைய மார்பகங்கள் குறித்த பெருமிதம் எப்போதும் அவளிடம் உண்டு. ‘கொடூரம்’ என்று அன்று முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தாள். மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்த பிறகும் கர்ப்பப்பையில் கேன்சரின் வளர்ச்சி குறையவில்லை.  கடைசியாக, “எடுக்கலன்னா உயிருக்கு ஆபத்து” என்று மருத்துவர் சொன்னதையும், “எடுத்திடலாம். பிரச்சனய வளத்துக்கிட்டே போக வேண்டாம்” என்று விக்டர் சொன்னதையும், “ஒடம்பு எம்மாம் தாங்கும்?” என்று சுலோச்சனா சொன்னதையும் கேட்கவில்லை. “ரிமூவ் பண்றதுதான் நல்லது. நம்ம சேஃப்டிதான் முக்கியம்” என்று நண்பர்கள், உடன் வேலை செய்யும் பேராசிரியர்கள் சொல்லியும் கேட்கவில்லை. “அத எடுத்திட்டா எப்பிடி புள்ள பொறக்கும்” என்று எதிர் கேள்வி கேட்டாள்.  முந்தின நாள் கர்ப்பப்பையை சோதித்த மருத்துவர் “வெரி சீரியஸ். கால் பிளாடர்ல ஸ்டோன் ஃபார்ம் ஆயிடிச்சி. அதுக்கும் ட்ரீட்மண்ட் எடுக்கணும். பிராப்ளம் கூடிக்கிட்டே போகுது. லேட் பண்ண வேண்டாம்” என்று சொன்ன பிறகுதான் இன்று வந்து மருத்துவமனையில் சேர்ந்தாள்.

 “உயிரில்லாதது ஒடம்புக்குள்ளார எதுக்கு? எந்த நோய்க்குன்னுதான் மருந்து சாப்புடுறது? எந்த நோய்க்குன்னுதான் ஆஸ்பத்திரிக்கி அலயுறது?” என்று சுலோச்சனா கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. 

சிறு  வயதில் மாத்திரை என்றாலே அவளுக்கு வெறுப்பாக இருக்கும். ஊசி என்றாலே பயமாக இருக்கும். பெரிய போராட்டம் நடத்திதான் சுலோச்சனா, பிராமாவை மாத்திரைகளை விழுங்க வைப்பாள். ஊசியைப் போட்டுக்கொள்ள வைப்பாள். “மாத்திர, ஊசின்னா எனக்கு அலர்ஜி” என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பாள். ஆனால், குழந்தை பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை வந்த பிறகு ஊசி போட்டுக்கொள்ள அவள் தயங்கியதே இல்லை. கொத்துக்கொத்தாக மாத்திரைகளை விழுங்கினாள். “எல்லாம் புஸ்வானமாயிடிச்சி” என்று வாய்க்குள்ளாகவே சொல்லி உதட்டைப் பிதுக்கிக் காட்டினாள். 

“சீக்கிரம் படு. காலயில ஆப்ரேசன் தியேட்டருக்குப் போவணும்?”

“நான் சொன்னத நீ எப்ப கேட்டிருக்க?“ என்று சுலோச்சனா சீண்டுவது மாதிரி கேட்டாள்.  எதற்காக அப்படி கேட்கிறாள் என்பது பிரேமாவுக்குப் புரிந்தது.  அவள் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் வந்திருக்காதோ என்று நினைத்தாள்.  ‘அப்படி சொல்ல முடியாது’  என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

பி.எச்.டி. ஆய்வுக்காக பிரேமா சேர்ந்தபோதுதான் விக்டரும் பி.எச்.டி. ஆய்வுக்காக சேர்ந்தான்.  விக்டரை பிரேமாவுக்குப் பிடித்துப்போய்விட்டது.  கல்யாணம் செய்தால் அவனைத்தான் செய்துகொள்வேன் என்று சொன்னாள்.  “ஒன்னோட வாய் துடுக்குக்கு அளவில்லியா?” என்று கேட்டு சண்டை பிடித்தாள் சுலோச்சனா. அருள்தாஸ்  “அவசரப்படாதம்மா” என்று சொன்னார். 

சிறு வயதிலிருந்தே வீட்டில் பிரேமாவின் இஷ்டம்தான்.  ஒரே பிள்ளை என்பதால் அருள்தாஸும், சுலோச்சனாவும் அதிகமாகக் கண்டிக்க மாட்டார்கள்.  பொறியியல் படி என்று சொன்னதைக் கேட்காமல், ஆங்கில இலக்கியம் படித்தாள்.  பி.எச்.டி. பண்ண வேண்டாம்,  கல்யாணம் கட்டிக்கொள் என்று சொன்னதையும் கேட்கவில்லை.  அருள்தாஸின் அக்கா மகன் மருத்துவராக இருந்தான்.  அவனைக் கட்டிக்கொள் என்று சொன்னதைக் கேட்காமல் விக்டரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறு வழியில்லாமல்தான் பி.எச்.டி. முடிந்ததும் விக்டருக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.  ஒரே மதம், ஒரே சாதி என்பதால்தான் கல்யாணம் நடந்தது. உள்ளூரிலேயே ஒரு கல்லூரியில் வேலைபார் என்று சொன்னதைக்கூடக் கேட்காமல் கல்யாணமான கையோடு கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தாள்.  விக்டருக்கும் அதே கல்லூரியில்தான் வேலை. 

மாமியார் சண்டை போட்டார், வீட்டில் பிரச்சினை என்று எப்போதெல்லாம் பிரேமா சொல்கிறாளோ அப்போதெல்லாம் சுலோச்சனா சொல்கிற ஒரே வார்த்தை, “அப்ப நான் சொன்னத நீ கேட்டியா?” என்பதுதான்.  எதையும் சொல்லக் கூடாது என்றுதான் நினைப்பாள்.  சொல்லிவிட்டு மூக்கறுபடுவாள்.

சுலோச்சனா உட்கார்ந்திருந்த விதமும், அவள் பிரேமாவைப் பார்த்த விதமும் சரியில்லை என்பதால் கட்டிலைவிட்டு கீழே இறங்கி  வந்து, “ஊர்லயிருந்து நேர ஆஸ்பத்திரிக்கி வந்திருக்க. டயர்டா இருக்கும் படும்மா” என்று சொன்னாள்.

            “எனக்கொன்னும் கஷ்டமில்ல நீ படு” என்று சொல்லும்போதே சுலோச்சனாவினுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்த பிரேமா, “எதுக்கு அழுவுற? கவலப்பட்டு இனி என்னதுக்கு ஆகப்போகுது. ஒரு புள்ளயப் பெக்குறதுக்காக அலஞ்சி வரிசயா புதுபுது நோய வாங்கிட்டன். ஒடம்புல இருக்கிற ஒவ்வொரு உறுப்பா எடுத்துக்கிட்டிருக்கன். நீ எதுக்காக இப்ப அழுவுற?  இதுல என் தப்பு ஒண்ணும் இல்லியே.  எல்லாப் பொம்பளங்களையும்போல எனக்கும் குழந்த பிறக்கணும்னு ஆசப்பட்டன்.  அவ்வளவுதான்.  இது ஒண்ணும் பெரிய ஆச இல்லியே.”

            “ஒங்கூட சேந்து நானும்தான் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலஞ்சன்.  எதுக்காக?” முன்பை விட இப்போது சுலோச்சனாவுக்கு அதிகமாகக் கண்ணீர் வழிந்தது.  பிரேமா, சுலோச்சனாவின் தோளில் கையை வைத்து,  “பேசாம இரும்மா. கர்த்தரோட அருள் இதுதான்னா, நாம்ப என்னா செய்ய முடியும். என்னோட கண்ணீர், வேதனயப் பாக்கிறதுக்கு அவருக்கு மனசில்ல. ஆண்டவரும் எனக்கெதிராக இருக்கும்போது நான் என்ன செய்யட்டும்?” என்று சொன்னாள்.

            விக்டருக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன்.  மூன்று பேருக்குமே மூன்று, நான்கு என்று குழந்தைகள் இருக்கின்றன.  ஆனாலும், விக்டரின் அம்மாவுக்கு பிரேமாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் கவலை.  “பசுமாடுன்னா கண்ணு போடணும், பால் கொடுக்கணும். வரட்டு மாடு” என்று நேரிலேயே பலமுறை சொல்லியிருக்கிறார்.  “ஒங்கம்மா இப்பிடி சொன்னாங்க” என்று சொன்னால், “எங்கம்மா பேச்சயெல்லாம் கேக்காத” என்று ஒரே வார்த்தையாக விக்டர் சொல்லிவிடுவான்.  பத்து பன்னிரண்டு பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்ட விக்டரின் அம்மாவுக்கே வருத்தம் இருக்கும்போது ஒரு பேரக்குழந்தையைக்கூடப் பார்க்காத சுலோச்சனாவுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று யோசித்த பிரேமாவுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.  தான் அழுதால் சுலோச்சனா கஷ்டப்படுவாள் என்பதால் வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, “எதயும் யோசிக்காதம்மா, தூங்கு” என்று சொல்லிவிட்டு வந்து கட்டிலில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். 

            கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது.  “யாரு?” என்று பிரேமா கேட்டாள்.

            “நான்தான்” என்று சொல்லிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் விக்டர். “இன்னும் படுக்கலியா” என்று கேட்டான்.

            “படுக்கணும்”

“காலயில ஆப்ரேசன் தியேட்டருக்குப் போவ வாண்டாமா?”

“ஆப்ரேசன் செஞ்சி குழந்த பெத்துக்கவா போறன்?” என்று பிரேமா கேட்டதும், விக்டரின் முகம் அப்படியே சுருங்கிப்போயிற்று. விக்டர் நின்றுகொண்டிருந்த விதமும் அவனுடைய முகம் இருந்த விதமும் ரொம்ப நாட்களாகத் தீராத நோயில் படுத்திருந்த ஆள் மாதிரி இருந்தது.  

            குழந்தைக்காக அலைய ஆரம்பித்ததிலிருந்து விக்டரும் பிரேமாவுடன் சேர்ந்து வந்துகொண்டிருக்கிறான். “அலஞ்சி சாகவேண்டியிருக்கு. ஒன்னாலதான் என்னோட வாழ்க்கை வீணாயிடுச்சி” என்று சொன்னதில்லை.  அப்படி மனதில் இருந்தாலும், “இதுல நம்ம தப்பு ஒண்ணும் இல்ல” என்றுதான் சொல்லியிருக்கிறான்.  “ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியது ஒன்னோட வேல,  என்னால வர முடியாது” என்று ஒருமுறைகூட சொன்னதில்லை.  “இன்னொரு கல்யாணம் கட்டிக்க” என்று அவனுடைய அம்மா சொன்னபோதெல்லாம், “பேசாம இருக்கணும் சரியா?” என்று ஒரே வார்த்தையில் அடித்துச் சொல்வான். பிரேமா அளவுக்கு அவ்வளவு நிறமில்லைதான்.  ஆனாலும் நல்ல உயரம்.  கொஞ்சம் வாட்டசாட்டமான ஆள்தான்.  விக்டரைப் பார்த்தாள்.  பார்த்ததுமே அவனுக்கும் தான் ஒரு தகப்பனாக  வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும். அதற்கு இனி வழி இல்லை என்ற பிறகு அவனுடைய மனம் எப்படி இருக்கும் என்று நினைத்ததுமே பிரேமாவுக்குக் கண்கள் நிறைந்துவிட்டன. தன்னுடைய உடலில் குறை இருந்ததால்தான் பொறுத்துகொண்டோம். விக்டரிடம் குறை இருந்திருந்தால் அவனை என்ன சொல்லி அசிங்கப்படுத்தி இருப்போம்? மனதுக்குள் அவனைப் பற்றி என்ன விதமான எண்ணம் உண்டாகியிருக்கும் என்று யோசிப்பதற்கே தயக்கமாக இருந்தது. விக்டரின் அளவுக்குப் பக்குவமாக, பொறுமையாக இருந்திருப்பேனா என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள். அதற்குப் பதிலாக அவளிடமிருந்து பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.

“உன்னால் ஒளிர்கிறது இந்த இரவு. உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது இந்த இரவு. நெஞ்சில் நின்றெரியும் நெருப்பு நீ” என்று விக்டர் முதன் முதலாக அவளுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வரிகள் நினைவுக்கு வந்தது. திருமணமான பிறகு கடிதமோ, கவிதை வரிகளோ தனக்கு அவன் எழுதித் தந்ததில்லை என்பதும் நினைவுக்கு வந்தது.

            இனி குழந்தைக்கு வாய்ப்பில்லை என்று  இரண்டு மூன்று வருசத்துக்கு முன்பே தெரிந்துவிட்டது.  டெஸ்ட் டியூப் பேபிக்கான வாய்ப்பும் இல்லை என்பதால் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறலாம் என்று சொன்னதற்கு, “உளறாம இரு” என்று சொன்னான்.  பிரேமா ரொம்பவும் நச்சரிக்க ஆரம்பித்ததால் மூன்று, நான்கு மாதம் வாடகைத் தாயை தேடும் முயற்சியில்  அலைந்தான். அதில் நிறைய சட்ட சிக்கல்கள் இருப்பதைக் கண்டு மிரண்டு போனான்.  அடுத்த முயற்சியாகத் தத்தெடுக்கலாம் என்று ஒவ்வொரு அனாதை ஆசிரமமாக அலைந்தான்.  பிறந்த சில மணிநேரத்திலேயே குழந்தை கிடைக்க வேண்டும் என்று நண்பர்கள் மூலம் சில மருத்துவமனைகளிலும் சொல்லி வைத்தான்.  அதற்காகவும் பிரேமாவுடன் அலைந்தான்.  செலவு செய்யவும் தயாராக இருந்தான். விஷயத்தைத் தெரிந்துகொண்டு “யாரோ பெத்த புள்ளயக் கொண்டாந்து என் வீட்டு பிள்ளையா ஆக்கப் பாக்குறியா? அப்படி செஞ்சா என் சொத்தில ஒரு பாக்கு அளவுக்குக்கூட ஒனக்குக் கெடைக்காது. வரடிக்கு எதுக்கு சொத்து” என்று கேட்டு விக்டரின் அம்மா சண்டை போட்டாலும், தத்தெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டான்.  “ஒனக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு” என்று சொன்னாலும், பிரேமா கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போகவே செய்தான்.  அப்படிப்பட்டவன் இப்படி நின்றுகொண்டிருக்கிறானே என்று வருத்தப்பட்டாள்.  “போயிப் படுங்க” என்று சொன்னாள்.

            “ஒக்காருங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து கழிவறைக்குள் போனாள் சுலோச்சனா.

            “சீக்கிரமா படு” என்று சொல்லிவிட்டு வெளியே போனான் விக்டர்.

            கழிவறையிலிருந்து வந்த சுலோச்சனா நாற்காலியை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த போர்வையை விரித்துப்போட்டு படுத்துக்கொண்டு, “ஒங்கப்பா எவ்வளவு கஷ்டப்படுறார்னு ஒனக்குத் தெரியாது.  நீ நல்லபடியா இருக்கணும். அதுதான் அவரோட ஆச. காலயிலியே வந்திடுவாரு” என்று சொன்னாள்.  அதற்கு பிரேமா எந்தப் பதிலும் சொல்லவில்லை.

            உட்கார்ந்திருப்பதற்குப் பிடிக்காமல் படுத்துக்கொண்டாள்.  எதையும் நினைக்காமல், யோசிக்காமல் இருந்தால் தூங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.  ‘இரவு தூங்கிக்கொண்டிருக்கிறது.  கண்களும், மனமும் விழித்துக்கொண்டிருக்கிறது’ என்ற ஆங்கில கவிதை வரி நினைவுக்கு வந்தது. 

            இப்படி படுத்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்ததுமே வந்த தூக்கமும் போய்விட்டது. “இன்னிக்கி மட்டுமா இப்படி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறன்” என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள். “இனிமே எதுக்காகவும் அலைய வேண்டியதில்ல” என்று முனகிய அடுத்த நொடியே விக்டரின் அம்மா, “தண்ணி இல்லாத குடமும் கர்ப்பப்பை நெறயாத பொண்ணும் ஒண்ணுதான்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது. 

            “தூங்க மாட்டியா? ஒலகத்தில ஒனக்கு மட்டும்தான் குழந்த பொறக்கலியா? நம்ப ஊர்லியே ஏழெட்டு பேருக்கு மேல குழந்த இல்ல.  ஒங்க அத்தைக்கும்தான் குழந்த இல்ல. நாம்ப போன ஒவ்வொரு ஆஸ்பத்திரிலயும் எம்மாம் கூட்டம் இருந்துச்சி?  எல்லாத்தயும் பார்த்ததான?” என்று சுலோச்சனா சொன்னதும், “பொம்பளைங்கிறது கர்ப்பப்பைதான்.  அது நெறையாதவ பொணம்தான்.  அழகு பாக்கவா கல்யாணம் கட்டியாருவாங்க?” என்று விக்டரின் அம்மா கேட்டது நினைவுக்கு வந்தது. பிரேமாவுக்குப் படுத்துக்கொண்டிருக்க முடியவில்லை.  எழுந்து எங்காவது போகலாமா? போனாலும் வராண்டா வரைதான் போக முடியும்? கீழே போக முடியாது.  கதவைப் பூட்டி வைத்திருப்பார்கள் என்ற எண்ணமே அவளை கோபமடைய செய்தது.  கோபத்தில், “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று கேட்டுக்கொண்டாள். “என்னெ சாகடிச்ச கண்ணிவெடி என்னோட கர்ப்பப்பைதான்” என்று சொல்லி முனகினாள்.

            யார் யாருக்கெல்லாமோ ஏசு நல்லது செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறாள்.  படிப்பு தந்ததாக, வேலை தந்ததாக, நோயைக் குணப்படுத்தியதாக, தனக்கு மட்டும் ஏன் அவர் எதையும் செய்யவில்லை.  பிரேமாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச்சுக்குப் போய்  திருப்பலி நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கிறாள். பைபிளைப் படிக்காத நாளில்லை. ஏசுவை அவள் ஒரு நாளும் சந்தேகப்பட்டதில்லை. ஏசுவை நினைக்காமல் அவள் எந்த காரியத்தையும் செய்ததில்லை.

            குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக சர்ச்சுக்குப் போகிற ஒவ்வொரு முறையும் காணிக்கை செலுத்தியிருக்கிறாள். மருத்துவமனைக்குப் போகிற ஒவ்வொரு முறையும் விக்டரைத் தன்னுடைய வயிற்றில் சிலுவை குறியை இடச் செய்வாள். ஒரு குழந்தை பிறந்தால் போதும்.  அதுதான் அவளுடைய ஆசையாக இருந்தது.  கர்ப்பப்பையில் பிரச்சனை என்று தெரிந்த பிறகு அவளுடன் விக்டர் இணையும்போதெல்லாம், “ஆண்டவரே என்னை ஆசிர்வதியும்” என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்திருக்கிறாள்.  தன்னை அவர் கைவிட மாட்டார் என்றுதான் எப்போதும் நம்பிக்கொண்டிருந்தாள்.  இப்போது “ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர்” என்று கேட்கத் தோன்றியது. குழந்தை அழுகிற சத்தம் கேட்டது.  பக்கத்து அறையில் குழந்தை பெற்ற பெண் இருக்கலாம் என்று நினைத்தாள்.  அந்தக் குழந்தை ஆணாக இருக்குமா, பெண்ணாக இருக்குமா எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். கண்களால் பார்க்க முடியாத அந்த குழந்தையைப் பற்றியும், அதனுடைய தாயைப்பற்றியும் யோசித்தாள். குறிப்பிட்ட தேதியில், நட்சத்திரத்தில், நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று திட்டம்போட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கிறார்கள். ஒரே பிரவேசத்தில் மூன்று குழந்தை பெற்றவர்கள், ஆண் குழந்தைக்காக நான்கைந்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இருக்கிறார்கள். தனக்கு கர்ப்பமே தரிக்கவில்லை. ஒரு கத்தியை எடுத்து தானே தன்னுடைய வயிற்றைக் கிழித்துகொள்ள வேண்டும் என்ற வெறி பல முறை அவளுக்கு வந்திருக்கிறது. இப்போதும் அதே எண்ணம் உண்டாயிற்று. 

            கல்யாணம் முடிந்ததும் தனக்கு முதலில் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நினைத்தாள்.  பிறக்க இருக்கும் குழந்தை எப்படி இருக்கும், சிரிக்கும், அழும், நடக்கும், அடம்பிடிக்கும், அடம்பிடித்தால் அடிப்பதா, வேண்டாமா, விக்டர் மாதிரி இருக்குமா, தன்னை மாதிரி இருக்குமா, பிரி கே.ஜி. எந்தப் பள்ளியில் சேர்ப்பது, இரண்டாவது குழந்தைக்கு மூன்று நான்கு வருச இடைவெளியாவது இருக்க வேண்டும். குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்ற யோசனைகளிலும், பெயர்களை எழுதிப்பார்ப்பதிலும் நிறைய நேரத்தைச் செலவிட்டிருக்கிறாள். மருத்துவமனைக்குப் போகும்போது, மருத்துவரைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது தனக்குப் பிறக்க இருக்கிற குழந்தை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருப்பாள்.  கற்பனையில் உருவான குழந்தைகள் அவளுடைய மனதில் இரவும் பகலும் வளர்ந்துகொண்டிருக்கும். அப்படி அவள் கற்பனையில் நெய்து உருவாக்கிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது இருநூறுக்கு மேல் இருக்கும். 

              மருத்துவமனைகளுக்குப் போக ஆரம்பித்த பிறகு ஆணோ, பெண்ணோ பிறந்தால் போதும் என்ற எண்ணம் இருந்தது.  ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்த பிறகு குழந்தை என்று ஒன்று பிறந்தால் போதும் என்று நினைத்தாள்.  அப்பறம் பெயருக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தாள். அதுவுமில்லை என்றானபோது குழந்தை ஊனத்துடன் பிறந்தால்கூட சரிதான் என்ற நிலையும் மாறி, குழந்தை உயிருடன் பிறக்க வேண்டுமென்ற அவசியம்கூட இல்லை.  வயிற்றிலேயே இறந்து பிறந்தால்கூட போதும் என்ற மனநிலைக்கு வந்தாள்.  எதுவும் நடக்காததால் மூன்று நான்கு மாதம் கர்ப்பமாக இருந்து, கலைந்தால்கூட சரிதான் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள்.  “ரெண்டு மூணு மாச கருவுலியே கலஞ்சிபோச்சி.  எதனாலன்னு தெரியல” என்று சொல்ல ஆசைப்பட்டாள்.  அதுதான் அவளுடைய கடைசி ஆசையாகவும் வேண்டுதலாகவும் இருந்தது.  அதற்கும் வழியில்லை என்று தெரிந்துவிட்ட பிறகுதான் கர்ப்பப்பையை எடுப்பதற்கு சம்மதித்தாள். “எப்படியெல்லாம் அலஞ்சன்” என்று நினைத்ததுமே அழுகை வந்தது.  அழுகையை அடக்குவதற்காக எழுந்து கதவைத் திறந்துகொண்டு வராண்டாவுக்கு வந்தாள்.

            தெற்கு வடக்காக இருந்தது வராண்டா.  ஒவ்வொரு பக்கத்துக்கும்  பத்து அறைகள் என்று இரண்டு பக்கங்களிலும் இருந்தது.  வராண்டாவின் கடைசிவரை வந்தாள்.  திரும்பி தன்னுடைய அறை பதினெட்டாம் எண் வரை வந்தாள்.  எல்லா அறைகளுமே சாத்தப்பட்டிருந்தன.  பகலாக இருந்தால் நர்சுகள் நடக்கிற, பேசுகிற சத்தங்கள் கேட்கும். நோயாளிகளின் நடமாட்டம் இருக்கும். பேச்சு சத்தம் கேட்கும். இரவு என்பதால் எந்த சத்தமுமில்லை. வராண்டா மங்கலான வெளிச்சத்தில் இருந்தது.  மீண்டும் வராண்டாவின் கடைசிவரை வந்தாள்.  திரும்பி நடந்து வரும்போது வாசலில் சுலோச்சனா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

            “எதுக்காக நீ ராத்திரியில பேயாட்டம் தூங்காம கெடக்குற” சுலோச்சனா கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அறைக்குள் வந்து கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டு  போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டாள்.  கதவை சாத்திவிட்டு வந்து படுக்கையை ஒட்டி நின்றுகொண்டு “கர்ப்பப்பையை எடுக்கிறது ஒண்ணும் அதிசயமில்ல.  நூத்தில பத்து பொம்பளங்க கர்ப்பப்பையை எடுத்திட்டுத்தான் இருக்காங்க.  மனசபோட்டு ஒலப்பிக்காம படு.  வேண்டிய அளவுக்குப் பட்டுட்ட. ஒடம்பும் ஓரளவுக்குத்தான் தாங்கும்” என்று சுலோச்சனா சொன்னதும் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு, “இப்பிடியாவறதுக்கா அவ்வளவு கஷ்டப்பட்டன். என்னோட கஷ்டம், கண்ணீர் கர்த்தருக்குத் தெரியும்தான?” என்று கேட்டாள்.  பேச்சை வளர்க்க விரும்பாத மாதிரி பிரேமாவின் நெற்றியில் சிலுவை குறியிட்டுவிட்டு “தூங்கு. இல்லாத உசுருக்காக ஒன்னோட உசுர வுட்டுடாத” என்று சொல்லிவிட்டு போய்ப் படுத்துக்கொண்டாள். 

“எல்லாத்தயும் மறந்திட்டு தூங்கு.”

“கனவா இது மறந்திட்டு தூங்குறதுக்கு?” கோபமாகக் கேட்ட பிராமாவுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை சுலோச்சனா.

            மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தது, மருத்துவர்களைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தது, டெஸ்ட் கொடுப்பதற்காக, டெஸ்ட் ரிசல்ட்டை வாங்குவதற்காகக் காத்திருந்தது, ஒரு வேளை தவறாமல், ஒரு நாள் தவறாமல் மாத்திரைகளை விழுங்கியது, மாதவிடாய் சமயத்தில் உயிர்போகுமளவுக்கு ஏற்பட்ட வயிற்று வலி, பித்த பையில் உருவாகி இருக்கும் கற்களால் ஏற்படும் வலி, வயிறு வீக்கம் என்று எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாள். கருமுட்டை நல்ல வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மாதவிடாய் சீராக வருவதற்கும், வந்தால் நிற்காமல் போகிறதே என்பதற்கும் மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள்.  மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் வயிறு புண்ணாகிப்போனது, புண்ணாகிப்போன வயிற்றைச் சரிசெய்வதற்காகவும் மாத்திரைகளை சாப்பிட்டாள். ஒரு நாள், இரண்டு நாள் மாத்திரை போட மறந்துவிட்டால் சினைப் பிடித்த பசுமாட்டின் வயிறுபோல வயிறு வீங்கிப் போய்விடும். உடலிலிருந்த உயிர் சத்து முற்றிலுமாக வடிந்துவிட்டபோதும் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை பிறந்துவிடும் என்ற நம்பிக்கையோடுதான் இருந்தாள்.

            ஆறு மாதத்துக்கு  ஒருமுறை கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் கரைந்துவிட்டனவா, வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக மருத்துவர், பிறப்புறுப்புக்குள் கையைவிட்டுப் பார்ப்பதோடு விடாமல் “ஸ்கேனிங்” என்று சொல்லுவார்.  ஸ்கேனிங் இயந்திரமும் அவளுடைய பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும்.  ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும்  மருத்துவர் முன்பும், ஸ்கேனிங் இயந்திரத்தின் முன்பும் புடவையை விலக்கி, கால்களை அகட்டி காட்டிக்கொண்டு படுத்திருக்க வேண்டும்.  நரகமாக இருக்கும்.  அதையும்தான் பல வருடங்களாகப் பொறுத்துக்கொண்டாள்.  கர்ப்பப்பை கேன்சர், மார்பக கேன்சர் என்று கீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது ஏற்படும் வலியைப் பொறுத்துக்கொண்டாள். வலது பக்க மார்பகத்தை அகற்றிய அன்று செத்துவிடலாம்போல இருந்தது.  “எல்லாம் போச்சி” என்று சொன்னாள்.  அவள் குழந்தை பெறுவதற்காக அலைந்தது, மழைத் துளியை ஆற்று வெள்ளத்தில் பிடிப்பதற்குப் போனது போலாகிவிட்டது.

பிரேமா வேலை செய்கிற கல்லூரியில் வேலை பார்க்கிற எல்லா பெண்களுக்குமே குழந்தை இருந்தது. அவளுடன் படித்தவர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்குமே குழந்தைகள் இருந்தன. அவளுடைய தோழி மேனகாவுக்குக்கூட மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. அவளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த பெண்கள் பலருக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. பிரேமாவுக்கு மட்டும்தான் இல்லை. இதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரியின் ஓய்வறையில் உட்கார்ந்திருக்கும்போது, உதவி பேராசிரியைகள் பேசுகிற விஷயம் தங்களுடைய குழந்தைகள் பற்றியதாக மட்டுமே இருக்கும். அதையெல்லாம் கேட்கும்போது அழுகை முட்டிக்கொண்டு வரும். அழுகையை மறைப்பதற்காகக் கழிவறையை நோக்கி போய்விடுவாள். 

மருத்துவமனைக்கு போக ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கணக்கிட்டுப் பார்த்தால் வீட்டிலிருந்த நேரத்தைவிட, கல்லூரியில் இருந்த நேரத்தைவிட, மருத்துவமனையில் இருந்த நேரம்தான் அதிகம். பிரேமா வேலை பார்க்கிற கல்லூரி, தனியார் நடத்துகிற நிறுவனம், தற்காலிகமான பணிதான்.  மாதம் இருபதாயிரம்தான் சம்பளம்.  விடுமுறை கேட்கப் போகிற ஒவ்வொரு முறையும் “நின்னுடுங்க. லீவ் தர முடியாது” என்று சொல்லி தாளாளர் அசிங்கப்படுத்தும்போதெல்லாம், “என்னடா வாழ்க்கை இது” என்று நினைப்பாள்.  அவளுடைய சம்பளத்திலும், விக்டரின் சம்பளத்திலும் வீட்டுக்கு வாங்கிய சாமான்களுக்கான பணம் ஒரு சதவிகிதம்தான் இருக்கு.  மற்றதெல்லாம் மருத்துவமனைக்குதான் போனது. “எல்லாம் பண்ணியும் எதுவும் நடக்கல” என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தாள். நேரத்தைப் பார்த்தாள்.  இரவு இரண்டு மணி.

            வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற பைபிள் வாசகமும், மாதா மாதம் சர்ச்சிலிருந்து வரக்கூடிய  ‘நற்செய்தி’  என்ற பத்திரிகையும் ஞாபகத்துக்கு வந்தது.   ‘இனிமே எனக்கு என்னா நற்செய்தி வரப்போகுது? அன்பானவரே, ஆவியானவரே” என்று சர்ச்சில் பாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது.  அந்த நினைவுகளை மறக்க நினைத்ததுபோல்  தன்னிடமே “தூங்கிடு தூங்கிடு” என்று சொன்னாள்.  அவளுடைய இஷ்டத்துக்கு எப்படி அவளுடைய உடம்பு ஒத்துழைக்கவில்லையோ அதே மாதிரிதான் அவளுடைய மனமும் ஒத்துழைக்கவில்லை.

‘ஏன் குழந்தை பிறக்கவில்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்த பிறகுதான் பிரேமாவுக்குத் தூக்கம் குறைய ஆரம்பித்தது.  மருத்துவமனைகளுக்குப் போகபோக உடம்பிலிருக்கும் ஒவ்வொரு நோயும்  தெரியவரதெரியவர தூக்கம் என்பது அவளுக்கு எப்போதாவது வருகிற திருவிழா மாதிரியாகிவிட்டது.  ஒருவேளை இன்று எட்டு, ஒன்பது மணிக்கு சாப்பிட்டிருந்தால் தூக்கம் வந்திருக்கலாம்.  நான்கு மணிக்குப் பிறகு சாப்பிடக் கூடாது என்று நர்சுகள் சொல்லிவிட்டார்கள்.

            இரண்டு நாள் கழித்து கல்லூரிக்குப் போகும்போது “ரெண்டு நாளா எங்கப் போன?” என்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தாள். இதற்கு முன்பு கேட்டபோதெல்லாம் “ட்ரீட்மன்டுக்குப் போனன்” என்று சொல்வாள்.  இப்போது கர்ப்பப்பையை எடுப்பதற்காகப் போனேன் என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் இனிமேல் பிரேமாவுக்குக் குழந்தை பிறக்காது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும்.  “தத்தெடுத்திடு, தத்தெடுத்திடு” என்று புத்திமதி சொல்வார்கள், அதையெல்லாம் எப்படி தாங்கிக்கொள்வது? கெட்ட விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடந்துவிட்டதுபோல் பிரேமாவுக்குத் தோன்றியது.

வருசம் தவறாமல் வேளாங்கன்னிக்குப் போயிருக்கிறாள். மூன்று கிலோமீட்டர் தூரம் உச்சி வெயிலில் முட்டிப்போட்டுக்கொண்டு போய் வேண்டினால், தென்னம்பிள்ளை வாங்கிக் கொடுத்தால், வெள்ளியில் தொட்டில் கட்டினால் பிள்ளை பிறக்கும் என்று மற்றவர்கள் சொன்னதையெல்லாம் கேள்வி கேட்காமல் வேளாங்கன்னி மாதா கோவிலில் செய்தாள். கூடுதலாக தங்க தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டிக்கொண்டதெல்லாம் ‘இது என் பிள்ளை‘ என்று ஒரு குழந்தையை காட்டுவதற்குத்தான்.

நவீன கருத்தரிப்பு மையம் என்று எங்கெல்லாம் மருத்துவமனைகள் இருந்தனவோ அங்கெல்லாம் போனாள். ‘குழந்தைபேறு’ என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்தரிப்பு குறித்து பேசும் மருத்துவர்கள் பேசியதை எல்லாம் கேட்டாள். ‘குடும்ப நலம்’, ‘பெண்கள் நலம்’ என்று வந்த பத்திரிகைகளை எல்லாம் வாங்கிப் படித்தாள். யூடியூப் சேனல்களில் கருத்தரிப்பு பிரச்சினைகள் குறித்து பேசிய மருத்துவர்களுடைய பேச்சையெல்லாம் கேட்டாள். பல்பையூறு கருப்பை நோய்க் குறித்து, (PCOS) அதற்கான தீர்வு குறித்து வந்திருந்த பெரும்பாலான வீடியோக்களை எல்லாம் பார்த்தாள். குழந்தை பிறப்பதற்கு என்னென்ன விதமான முயற்சிகளைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தாள். நவீன கருத்தரிப்பு மையம் என்று இருக்கிற எல்லா மருத்துவமனை விளம்பர போர்டுகளிலும் ‘உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம். நம்பிக்கையாக இருங்கள்’ என்று எழுதியிருக்கும். ஏனோ அந்த வாசகம் இப்போது நினைவுக்கு வந்தது.  

            “தல எழுத்தே” என்று பிரேமா சொன்னாள்.  அப்படிச் சொன்னது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.  வகுப்பறைகளில் பாடம் நடத்தும்போது, “தல எழுத்தின்னு ஒண்ணு இல்லெ.  அப்படி நம்புறது அறிவுபூர்வமானது இல்ல” என்றெல்லாம் ‘லெக்சர்’ கொடுப்பாள். வகுப்பறையில் மாயா ஏஞ்சலோவின் கவிதை வரிகளைத்தான் அதிகமாக மேற்கோள் காட்டுவாள். Phenomenal Woman என்ற கவிதையைத் திரும்பத்திரும்ப சொல்வாள். வகுப்பில் பேசிய பேச்செல்லாம் நினைவுக்கு வந்தது. தனக்கு நடப்பதெல்லாம் தலை எழுத்தால்தானா?

            பிரேமாவுக்கு எப்போதுமே தான் அழகாக இருக்கிறோம் என்ற கர்வம் உண்டு.  பள்ளியில் படிக்கும்போது இருந்ததைவிட கல்லூரியில் படிக்கும்போது இருந்ததைவிட, பி.எச்.டி. ஆய்வு செய்யும்போது சற்று கூடுதலாகவே இருந்தது.  வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய உடலின் மீதான கர்வத்தை அவள் காட்டுவதற்குத் தவறியதும் இல்லை.  தயங்கியதும் இல்லை. குழந்தையாக இருக்கும்போது சர்ச்சில் பாட கூப்பிடுவார்கள்,  பள்ளியில் தேசிய கீதம், நாட்டுப்பண் பாட கூப்பிடுவார்கள், கல்லூரியில் படிக்கும்போது, நடக்கும் கருத்தரங்குகளுக்கு காம்பியராகக் கூப்பிடுவார்கள்.  ஆளும் அழகாக இருக்கிறாள்,  குரலும் நன்றாக இருக்கிறது.  வார்த்தைகளையும் தனித்தனியாக உச்சரிக்கிறாள் என்று எல்லா விஷயத்திலுமே பிரேமாவைத்தான் முன்னிறுத்துவார்கள்.  ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது தன் உடலின்மீதான கர்வத்தை அவள் காட்டத் தவறியதே இல்லை.

மின்விசிறி ஓடுகிற சத்தத்தைத் தவிர அறைக்குள் வேறு எந்த சத்தமுமில்லை. அறைக்குள் அழுகல் வாடை அடிப்பதுபோல் இருந்தது. இந்த இரவு எப்போது முடியும் என்றிருந்தது. ‘மறையும் சூரியன்’ என்ற கவிதைப் புத்தகத்திலிருந்த ‘வாழும் கலை’ என்ற கவிதை நினைவுக்கு வந்தது.

 “இனிமே அலைய வேண்டியதில்ல. பான இருந்தாதான தண்ணி இருக்கும்? இனி பானயும் இல்ல, தண்ணியுமில்ல. என்னெவிட பிறக்காத குழந்தையத்தான் அதிகம் விரும்புனன். அதுக்காகத்தான் அதிக கவலப்பட்டன். ஏங்குனன். காத்திருந்தன். அலஞ்சன். அலச்சல்லியே காத்தில காணாம போன தூசு மாதிரி எட்டு வருசம் ஓடிப்போயிடிச்சி. இனி என்ன? அவ்வளவுதான். முடிஞ்சிடிச்சி. நாடகத்தோட கடைசி சீன். என் நெஞ்சால எத்தன குழந்தைகளப் பெத்தன்? நெஞ்சில நினைவுல பிறந்து வளருரதும் குழந்ததான?” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அவளுக்குத் தன்னுடைய உடம்பு சூடாக இருப்பதுபோல் தோன்றியது. நெற்றியில், கழுத்தில் தொட்டுப் பார்த்தாள். சூடாகத்தான் இருந்தது. அவளுக்குத் தான் ஒரு காலியான பாத்திரம் என்ற எண்ணம் உண்டானது. மூச்சுவிட முடியாத அளவிற்கு ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துவது போலிருந்ததது. 

            “பொம்பளங்கிறது கர்ப்பப்பைதான்.  அதுவே செத்துப்போயி இருந்தா அப்பறமென்ன பொம்பள? புடவை, ஜாக்கெட் போட்டுட்டா மட்டும் பொம்பளயா ஆயிட முடியாது” என்று விக்டரின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்ததும், “நான் பொம்பள இல்ல. என் ஒடம்புதான் எனக்கு எதிரி. ஆண்டவரின் கிருபையால என் கர்ப்பப்பைய விடிஞ்சதும் எடுத்திடுவாங்க. இதுதான் ஆண்டவரோட அருள்போல. ஆண்டவரோட நியாயம்போல” என்று சொன்னாள்.  படுக்கையைவிட்டு இறங்கி கழிவறைக்குச் சென்றாள். சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காகத் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டாள்.  “ஏசுவே” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

 ஆனந்த விகடன் 02.02.2022