செவ்வாய், 25 செப்டம்பர், 2018

காலண்டரில் கண்ட கலைஞர் - இமையம்

                                                                                காலண்டரில் கண்ட கலைஞர் - இமையம்1976-ல் கலைஞர் எனக்கு ஒரு சொல்லாகத்தான் அறிமுகமானார். சின்சாமி என்பவர்தான் அச்சொல்லை என்னிடம் சொன்னார். காலண்டரிலிருந்த ஒரு படத்தைக்காட்டி இவர்தான் கலைஞர் என்றார். முகத்திற்கு அடையாளமாகக் கருப்பு கண்ணாடி, உடலுக்கு அடையாளமாக வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு இதுதான் முதலில் நான் பார்த்த, கண்ட கலைஞர். சின்னசாமிக்கு அடுத்து, கலைஞர் பைத்தியம் என்று பெயர் பெற்ற ராமலிங்கத்திற்கு அடுத்து என்னிடம் கலைஞரைக் கொண்டுவந்து சேர்த்தவர் வெற்றிகொண்டான். அவர் திட்டக்குடி, விருத்தாசலம், உளுந்தூர்ப்பேட்டை என்று எங்கு பேசினாலும் சைக்கிளில், லாரியில் சென்றுவிடுவேன். கலைஞரை நெருக்கமாக்கியதும் எம்.ஜி.ஆரை எதிரியாக்கியதும் வெற்றிகொண்டான்தான். அவருடைய பேச்சை கேசட்டில் கேட்டு தனியாக கைத்தட்டி, சிரித்த இரவுகளும், பகல்களும் உன்னதமானவை. யாரையும்விட கலைஞரை எனக்கு நெருக்கமாக்கியது நாகூர்ஹனிபா தான். கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவேஎன்ற பாடலும்உடன்பிறப்பே கழக உடன்பிறப்பேஎன்ற பாடலும் ஓடிவருகிறான் உதய சூரியன்என்ற பாடலும்தான். எத்தனாயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.
1980-ல் விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்தான் நான் கலைஞரை கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்தேன்.  தூரத்திலிருந்து பார்த்தபோது கருப்புகண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும்தான் தெரிந்தது. ந்தக் கூட்டத்தில் இந்திராகாந்தியும் இருந்தார்.
1987-லில் கலைஞர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இரவு 8 மணிக்கு வருகிறார் என்று திருச்சி பாலக்கரைக்குப் போனேன். கலைஞர் விடியற்காலை நான்கு மணிக்குத்தான் வந்தார். எழுந்துபோனால் திரும்பிவந்து உட்கார இடம் கிடைக்காது என்று எட்டு மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணிவரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறேன் 1989-ல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கலைஞர் விருத்தாசலம் வந்தார். அப்போது என்.டி.ஆரும் வந்திருந்தார். சைக்கிளில் சென்று பார்த்தேன். 1984-87 காலகட்டத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கலைஞர் அறிவித்த அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். 1988-ல் சட்ட நகல் எரித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் 19 நாள்கள் இருந்திருக்கிறேன். 87க்குப் பிறகு கட்சி அறிவித்த சிறை நிரப்பும் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரம், சாலை மறியல் என்று எந்தப் போராட்டத்திலிருந்தும் விலகி நின்றதில்லை. கட்சி நடத்திய கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. போராட்டத்திற்கு, கூட்டத்திற்கு, மாநாட்டிற்குப் போகாமல் இருந்தால் எதையோ இழந்மாதிரியிருக்கும்.
பஸ் பயணத்தில், ரயில் பயணத்தில் என்று கருப்பு சிவப்புக் கரைத்துண்டு போட்ட வேட்டியை கட்டிய கட்சிக்காரர்களைக் கண்டால் இனம்புரியாத அன்பு ஏற்படும். எழுந்து நின்றுகொண்டு உட்காருவதற்கு இடம் தரத் தோன்றும். கட்சியில் நான் வெறுத்த ஒரே ஒரு ஆள் சண்முகநாதன்தான். தலைவரைப் பார்க்கவிடாமல் தடுப்பது அவர்தான் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒரு முறை தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நான் போனபோது முதலமைச்சருக்கு வேற வேலையில்லையா?’ என்று கேட்டுத் திருப்பி அனுப்பினார். அ.ராசாவுக்காக நான் வெளியிட்ட அ.ராசா மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லைஎன்ற நூலைக் கொடுக்கச் சென்ற போதும் நான் கொடுத்துக்கிறேன்என்று சொல்லி நூலை வாங்கிக் கொண்டு  என்னைத் திருப்பி அனுப்பினார்.கலைஞரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே ஒருமுறை சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்குச் சீட்டு கேட்டுக் கட்சியில் பணம் கட்டினேன். நேர்காணலின்போது மொத்தமாகக் கூப்பிட்டு தலைமை யாருக்கு அறிவிக்குதோ அவருக்கு வேலை செய்யுங்கஎன்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அப்போதும் நான் கலைஞரை நேரில், அருகில் சந்திக்கவில்லை. கலைஞரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்பதைத் தவிர நான் வேறு எதையும் கட்சியிடமிருந்து, கலைஞரிடமிருந்தும் எதிர்ப்பார்த்ததில்லை.தமிழ்த் தென்றல் திரு.வி.. பெயரில் தமிழக அரசு எனக்கு விருது வழங்கியபோது கலைஞர் இருந்த மேடையில் எனக்கு உட்காருவதற்கும் பேசுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த மேடையில் கலைஞர்தான் கடவுள்என்று கூறினேன். சி..டி. காலனியில் இரண்டுமுறையும் கோபாலபுரம் வீட்டில் ஒருமுறையும் கலைஞரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பையும் எனக்கு கனிமொழிதான் உருவாக்கி தந்தார். இந்த வாய்ப்புகள் எல்லாம் எழுத்தாளர் என்பதால் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. தங்களுடைய வாழ் நாளெல்லாம் கட்சிக்காகவும், கலைஞருக்காகவும் வாழ்ந்து, கடைசிவரை கலைஞரின் அருகில் நிற்பதற்கும், ஒரு புகைப்படம் எடுத்துகொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் செத்துப்போன செத்துப்போக இருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.
 மூன்று முறை அருகில் நின்று டம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான்காவதாகவும், இறுதியாகவும் 08.08.2018 விடியற்காலை 4.03 -க்கு கண்ணாடிப் பேழையில் படுக்க வைக்கப்பட்டிருந்த கலைஞரைப் பார்த்தேன். என்னுடைய அப்பா, அம்மா, தம்பி இந்தபோது நான் அழுததில்லை. இப்போது அழுதுகொண்டிருக்கிறேன். காரணம் தெரியாது.நேரில் பார்க்காமலேயே அவருடைய பேச்சைக் கேட்காமலேயே காலண்டரில் பார்த்த உருவத்தை வைத்தே அவர் எப்படி எனக்குப் பிடித்தமான மனிதராக மாறினார்? கலைஞர் என்ற பெயரைச் சொல்லும்போது ஏன் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது! பஸ்ஸில், ரயிலில், மேடைகளில் யாராவது கருணாநிதி என்று சொல்லும்போது ஏன் கோபம் வருகிறது? கலைஞரை கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும், கருணாநிதி என்று சொல்லக் கூடாது என்று மனம் ஏன் விரும்புகிறது. தொலைக்காட்சிகளில் கருணாநிதிஎன்று சொல்லும்போதெல்லாம் கோபம் வரும்.கட்சி எனக்கு எதையும் செய்ததில்லை. கலைஞரும் எனக்கு எதையும் செய்ததில்லை. நானும் கட்சியிடம் கலைஞரிடமும் எதையும் எதிர்பாக்கவில்லை. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளேஎன்று கலைஞர் சொல்வதும் டாக்டர் கலைஞர் வாழ்கஎன்று நான் சொல்வதும்தான் எங்களுக்கான உறவு. இந்த உறவு ஏன் ஏற்பட்டது. எப்படி ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது? தெரியாது. கலைஞருடைய பேச்சைக் கேட்டு, எழுத்தைப் படித்து, அவர் வசனம் எழுதிய சினிமாவைப் பார்த்து நான் கட்சிக்கு வந்தவன் இல்லை. அவருடைய பெயரை மட்டுமே கேட்டு கட்சிக்கு வந்தவன்.  இன்றும் கட்சியில் இருப்பவன். கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டியைக் கட்டும்போது விவரிக்க முடியாத உணர்ச்சிமேலிடும். அதை எழுதத் தெரியவில்லை.கலைஞருடைய எதிரிகள் எல்லாம் எனக்கும் எதிரிகள். கலைஞருடைய நண்பர்கள் எல்லாம் எனக்கும் நண்பர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வை.கோ எனக்கு எதிரிகள் ஆனது இப்படித்தான். தி.மு..க்காரன் என்பதால் மட்டுமே டி.ராஜேந்திர் படங்களைப் பார்த்தேன். 08.08.2018 அன்று மட்டுமே ஜெயா டி.வி.யைப் பார்த்தேன். அதுவும் கலைஞர் பற்றிய செய்திகளை நல்லவிதமாகக் காட்டியதால். கலைஞர் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தபோது மட்டுமே அவர் மீது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேமாதிரி நான் சார்ந்திருக்கிற சட்டமன்றத் தொகுதியையும், நாடாளுமன்ற தொகுதியையும் கூட்டணிக்கு ஒதுக்கும் போதெல்லாம் வருத்தம் ஏற்படும். ஆனாலும் இதுவரை கட்சிக்கும் கூட்டணிக்கு மட்டுமே வாக்களித்திருக்கிறேன்என்னுடைய ஊரில் டீ தம்ளாரை கழுவி வை என்று சொன்னபோது முடியாது என்று சொல்ல வைத்தது, சைக்கிளில் போகக் கூடாது என்று சொன்ன போது போயே தீருவேன்என்ரு சொல்ல வைத்தது, முடி வெட்டி விட முடியாது என்று சொன்னபோது ஏன்?’ என்று கேட்க வைத்தது; விளையாட்டில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொன்னபோது ஏன்?’ என்று கேட்க வைத்தது. சண்டை போட வைத்தது கலைஞர் என்ற சொல்தான். அந்தச் சொல்தான் எனக்குள் பெரும் ஆற்றலாக இருந்தது. வெள்ளைச் சட்டைப் போடவும் வெள்ளை வேட்டி கட்டவும் வைத்தது அச்சொல்தான். கருணாநிதி கட்சிக்காரனெல்லாம் இப்படித்தான் இருப்பானுவோஎன்று யாராவது சொன்னால் கருணாநிதின்னு சொல்லாத கலைஞர்னு சொல்லுஎன்று சண்டைக்குப் போகவைதததும் அந்தச் சொல்தான். அந்த ஒற்றைச் சொல்லுக்காத்தான் கட்சியில் இருக்கிறேன். கரை வேட்டி கட்டுகிறேன். நான் சாகும்வரை கலைஞரின் கட்சிக்காரன்தான். நான் மட்டுமல்ல என்னுடைய மகன்களும் கலைஞரின் தொண்டர்கள்தான். கலைஞரின் கட்சிக்காரர்கள்தான். எங்களுக்கு இருக்கும் ஒரே பெருமிதம் கலைஞர் கட்சிக்காரர்கள் என்பதுதான். எங்களுக்கு அதுபோதும். கலைஞர் என்ற சொல்லும் கருப்பு சிவப்பு நிறக் கொடியும்தான் இதுவரை என்னுடைய அடையாளமாக இருந்திருக்கிறாது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
1977-லிருந்து இன்றுவரை நான் தி.மு.க-விற்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். தென்னை விளக்குமாற்றுக் குச்சியில் உதய சூரியன் சின்னம் அச்சிட்ட காகிதத்தை ஒட்டி எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக ஓடி போடுங்கம்மா ஓட்டு, உதய சூரியன் சின்னத்தப் பாத்துஎன்று கத்தியிருக்கிறேன். இன்றுவரை அப்படித்தான் கத்தியிருக்கிறேன். இனியும் அப்படித்தான் கத்துவேன்.கலையை தன்னுடைய கொள்கைகளுக்கு, அரசியல் செயல்பாடுகளுக்கு முழுமையாக பயன்படுத்திய மொழிப் போராளி. சினிமா வசனம் என்றால் கலைஞர், மேடைப் பேச்சு என்றால் கலைஞர். தமிழ் என்றால் கலைஞர். அரசியல் சாணக்கியத்தனம் என்றால் கலைஞர் என்ற அடையாளங்கள் எப்படி தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள்கூட கலைஞருக்கான இந்த நான்கு அடையாளங்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிற அதிசயத்தை ஏற்படுத்தியவர் கலைஞர். இன்றும் அவர்தான் தமிழ் சினிமாவின்; மேடைப் பேச்சின், சொல் விளையாட்டின் வெளிச்சம். 95 வயதுவரை கலைஞர் உயிரோடு இருந்ததற்கு அவருடைய உடல்வாகு காரணமல்ல; அவருடைய எழுத்தும்,பேச்சும்தான் காரணம். தனக்கான உயிராற்றலை அவர் பெற்றது எழுத்திலிருந்தும் பேச்சிலிருந்தும்தான். சென்னையில் ஒருமுறை ஆட்டோக்காரர் நூறு ரூபாய் கேட்டார். நான் அதற்குவாய்ப்பே இல்லைஎன்று சொன்னேன். அதற்கு ஆட்டோக்காரர்நீ என்ன கலைஞர் மாதிரி பேசுற? நீ என்ன தி.மு..வா?” என்று கேட்டார். நல்லத் தமிழில் கலைஞர் மட்டும்தான் பேசுவார் என்ற எண்ணம்  ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் இருக்கிறது.
கல்கி வார இதழின் பேட்டியில்கட்சிக்காரர்கள் எல்லாம் மஞ்சள் நிறத் துண்டு போட வேண்டும். என்று கலைஞர் ஆணையிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று ஒரு கேள்வி. அதற்குஆணையை திரும்பப் பெறக்கோரி அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருப்பேன்.” என்று சொல்லியிருந்தேன். அதைப் படித்துவிட்டு கலைஞர் சிரித்ததாக அவருடைய உதவியாளர் ராஜமாணிக்கம் என்னிடம் கூறினார்.மொழியின் வழியாக கலைஞர் எனக்குக் கொடுத்தது ஏராளம். நான் அவருக்குக் கொடுத்தது கலைஞர் வாழ்கஎன்று கத்தியது மட்டும்தான். பல மைல் தூரம் நடந்து சென்றும், சைக்கிளில், லாரியில் சென்றும் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளேஎன்று கலைஞர் சொல்வதைக் கேட் சந்தோசத்தில் டாக்டர் கலைஞர் வாழ்கஎன்று கத்தியிருக்கிறேன். இப்போதும் கத்துகிறேன் டாக்டர் கலைஞர் வாழ்க.
கலைஞரைப் பற்றி சொல்வதற்கு சாதாரணக் கட்சிக்காரர் ஒவ்வொருவரிடமும் ஒரு கடல் அளவிற்கு செய்திகள் இருக்கும். என்னிடமும் பல கடல் அளவுக்கு செய்திகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் சொன்னால் அவர்தான் கலைஞர்.”
கலைஞரைப் பற்றி அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, உச்சரிக்கப்பட், உயிர் போவதுபோலக் கத்திச் சொல்லப்பட்ட சொல் டாக்டர் கலைஞர் வாழ்கஎன்பதுதான். கலைஞருடைய சினிமா வசனம், மேடைப் பேச்சு, கவிதை. எழுத்து 75 ஆண்டுகால வாழ்க்கை, அரசியல் சட்டம், திட்டம், போராட்டம் எல்லாம் சேர்ந்து உருவாக்கியதுதான் டாக்டர் கலைஞர் வாழ்கஎன்பது. அவர் உருவாக்க விரும்பியதும் உருவாக்கியதும் டாக்டர் கலைஞர் வாழ்கஎன்பதைத்தான். தமிழ்ச் சமூகமும் அதிகம் உச்சரித்த சொல் டாக்டர் கலைஞர வாழ்கஎன்பதைத்தான். தமிழினம் இருக்கும்வரை தமிழ்மொழி இருக்கும் வரை கலைஞர் என்ற சொல் இருக்கும். கலைஞர் என்ற சொல் பெரும் ஆற்றலாக இருக்கும். இப்போது என்னுடைய கண்களிலும், நெஞ்சிலும் இருப்பது 1976-ல் காலண்டரில் நான் பார்த்த கலைஞர் தான்.
 காற்றை, ஒலியை, ஒளியை, உணரத்தான் முடியும். காட்ட முடியாது. அப்படித்தான் கலைஞர் மீதான என்னுடைய அன்பு, காதல். கை நடுங்குகிறது. கண்களில் கண்ணீர் நிறைகிறது. எழுதமுடியவில்லை. என்னுடைய தலைவரின் நினைவுகள் என் நெஞ்சோடு இருக்கட்டும்.
ஆனந்த விகடன் e-magazine August 10
x
 

ஒளிரும் சொற்களை உருவாக்கியவர் – கலைஞர்


ஒளிரும் சொற்களை உருவாக்கியவர்கலைஞர்
-     இமையம்
        திராவிட இயக்கம் சமத்துவம், சகோதரதத்துவம், சம நீதி, சமூக நீதி, மூட நம்பிக்கை ஒழிப்பு, இன உணர்வு, மான உணர்வை உண்டாக்குவதற்கு சினிமா, நாடகம், கவிதை, பேச்சு என்று கலையின் அத்தனை வடிவங்களையும் பயன்படுத்தியதோடு, அந்தந்த துறை சார்ந்த கலைஞர்களையும் உருவாக்கியது. திராவிட இயக்கம் கலைஞர்களை உருவாக்கியதா? கலைஞர்கள் திராவிட இயக்கத்தை உருவாக்கினார்களா? இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. ஒன்றாகவே நடந்தது.
        திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவதற்காக நாடகம் எழுதினார்கள், கவிதை, சிறுகதை என்று எழுதினார்கள். சினிமாவில் கதை-வசனம் எழுதினார்கள். பேச்சுக் கலையை முழுமையாக பயன்படுத்தினார்கள். திராவிட இயக்கம் உருவாக்கிய எழுத்தாளர்களில், பேச்சாளர்களில், கவிஞர்களில், சிறுகதை ஆசிரியர்களில், சினிமா வசனகர்த்தாக்களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கலைஞர். அறுபத்தி நான்கு சினிமாக்களுக்கு கதை வசனமும், இருபத்தி ஐந்து நாடகங்களும், இருபது நாவல்களும், அறுபத்தியெட்டு சிறுகதைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளும், இனியவை இருபது என்ற பயண நூலையும் படைப்பிலக்கியமாக எழுதியிருக்கிறார். குறளோவியம், தொல்காப்பிய பூங்கா என்ற உரை நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘தாய்நாவலை தன்னுடைய உரைநடை கவிதை பாணியில் மறுஆக்கம் செய்திருக்கிறார்.
        கலைஞரின் மொத்த எழுத்தின் நோக்கமும், பேச்சின் நோக்கமும் தமிழ் சமூக மேம்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி, சம நீதி, சமூக நீதி, மூட நம்பிக்கை எதிர்ப்பு, மத கற்பிதங்களுக்கு எதிர்ப்பு, அறிவியல் ரீதியில் சமூகத்தை, அதன் சிக்கல்களை ஆராய்வது, தீர்வு காண்பது. சாதி சார்ந்த இழிவுகளுக்கு, மதம் சார்ந்த பிற்போக்கு தனங்களுக்கு எழுத்தின் வழியே சவுக்கடி கொடுப்பது. பழைய தமிழ் இலக்கியங்களை கொண்டாடுவது. பழைய இலக்கியங்களை தமிழின் அடையாளமாக, தமிழரின் அடையாளமாக, பெருமையாக, பொக்கிஷமாக நிலை நிறுத்துவது.
        கலைஞர் தன்னுடைய எழுத்துக்களை, தன்னுடைய கொள்கை முழக்கமாகவே கருதினார். கடைசிவரை தன்னுடைய கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளவில்லை. தன்னுடைய எழுத்தின் தன்மையையும் அவர் கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை. சமரசமும் செய்துகொள்ளவில்லை.
        தமிழில் உரைநடை இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. நூற்றாண்டு காலத்தில் வெகு மக்களால் அதிகமாகப் பேசப்பட்ட, கொண்டாடப்பட்ட எழுத்தும், பேச்சும் கலைஞருடையதுதான். கலைஞருடைய எழுத்தும், பேச்சும் தமிழ் சமூகத்தில் திரும்பத்திரும்ப நினைவுக்கொண்டு பேசப்பட்டிருக்கிறது. கொண்டாடப்பட்டிருக்கிறது. கலைஞரின் அளவுக்கு வேறு எந்த எழுத்தாளரின் பேச்சும், எழுத்தும் கொண்டாடப்பட்டதில்லை. நினைவுகொள்ளப்பட்டதில்லை. கலைஞர் என்றதும் பராசக்தி படமும், மனோகரா, பூம்புகார், ராஜகுமாரி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் எப்படி நினைவுக்கு வருகின்றன? கலைஞர் என்றாலும் எல்லாருக்கும் எப்படிபேச்சுஎன்ற சொல்லும், ’கவிதைஎன்ற சொல்லும் தமிழ்என்ற சொல்லும் நினைவுக்கு வருகின்றன. கலைஞர் சில சொற்களின் அடையாளமாக இருக்கிறார். அதிசயம்.
        கலைஞருடைய சினிமா வசனங்கள், நாவல், நாடகம், கவிதை, சிறுகதைகளில் வரக்கூடிய சில சொற்கள், சில வாக்கியங்கள் பலருக்கும் தெரிந்த வாக்கியமாக இருப்பது ஆச்சரியம். சில சொற்களுக்காகவும், சில வாக்கியங்களுக்காகவும்தான் அவர் திரைக்கதை எழுதிய சினிமா படங்கள் திரும்பத்திரும்பப் பேசப்படுகின்றன. கலைஞருடைய நாவல்களும், சிறுகதைகளும் பெரும்பாலும் வசனங்களால் கட்டமைக்கப்பட்டவை. பாத்திரங்கள் சார்ந்த, சூழல் சார்ந்த விவரிப்புகள் அரிதாகவே இடம்பெறும். கதை சொல்வது என்பதைவிட உரையாடலை எவ்வாறு சிறப்பாக அமைப்பது என்பது குறித்தே அதிகம் அக்கறை காட்டியிருக்கிறார். கலைஞரின் சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே உரையாடல்களால் நிரம்பியவை, உரையாடல்களின் வழியேதான் கதை சித்தரித்துக்காட்டப்படும். காரசாரமான, விவாதத்தன்மையில் அமைந்த, ஒருவிதமான உரைநடை கவிதை தன்மையில் அமைந்திருப்பதால் படிப்பவர்களை ஈர்க்கும் தன்மையை தனக்குள் கொண்டிருக்கும். கலைஞர் சிறுகதை எழுதியதும், நாவல், கவிதை எழுதியதும் தன்னுடைய கொள்கைகளை சொல்வதற்காகத்தான். சில தெறிப்பான சொற்களை, வாக்கியங்களை உருவாக்கவுமே எழுதினார்.
        சினிமாவில், நாடகத்தில், நாவலில், சிறுகதையில் அவர் உருவாக்கிக் காட்ட விரும்பிய கதைகளைவிட அவர் உருவாக்கிய சொற்களும், வாக்கியங்களும்தான் வெகுசன மக்களால் கொண்டாடப்பட்டது. அதே மாதிரி தன்னுடைய மேடைப் பேச்சுகளின் வழியாகவும், கவியரங்கங்களின் வழியாகவும் அரிதான சில சொற்களையும், அரிதான வாக்கிய சேர்க்கைகளையும் உருவாக்கிக் காட்டினார். அவர் பயன்படுத்துகிற சில சொற்களும், சில வாக்கியங்களும் வெகுசன மக்களை ஈர்த்தது என்பதைவிட, அவர்கள் அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும் செய்தார்கள்.
சிங்கார சென்னை,” “தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது.” “அய்யன் திருவள்ளுவர்” “தமிழ் வெல்லும்இது போன்று பல சொற்களை அவர்தான் உருவாக்கினார். “வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்என்பது முரசொலி நாளிதழிற்காகக் கலைஞர் உருவாக்கியது. 1984-88 காலக்கட்டத்தில் இந்த வாக்கியம் பெரும் முழக்கமாக தமிழிகமெங்கும் ஒலித்தது. ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்கள் இந்த வாக்கியத்தைத்தான் ஊர்வலத்தில் முழங்கினார்கள். பாரதிதாசனின் தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடாஎன்பது மற்றொரு முழக்கமாக இருந்தது. இந்த முழக்கங்கள் இன்றும் உயிருடன்தான் இருக்கின்றன. அதே மாதிரிஇன்றைய செய்தி நாளைய வரலாறுஎன்பது முரசொலிக்காக, எழுதப்பட்டதுதான் என்றாலும் தமிழக ஊடகங்களில், மேடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் முழக்கமாக இருக்கிறது. கலைஞர் மட்டும்தான் முழக்கத்தை உருவாக்குவார் என்றில்லை. அவருடைய கட்சிக்காரர்களும் முழக்கத்தை உருவாக்குவார்கள். தி.மு..வினரால் உருவாக்கப்பட்டஇந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்ற முழக்கமும் இன்று அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றது. ’எழுந்து வா தலைவாஎன்று கலைஞரின் கட்சிக்காரர்கள் உருவாக்கிய முழக்கம் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. எமர்ஜென்சியின் போது “Revoke Emergency, Restore Democracy” என்று சொல்லும் ஆற்றல் கலைஞருக்கு மட்டுமே இருந்தது.
        மாற்றுத்திறனாளிஎன்ற சொல்லும், ‘திருநங்கை’, ‘கைம்பெண்’ ’நெஞ்சுக்கு நீதிஎன்கின்ற சொற்களும் கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான். இந்த சொற்கள் அரசு நிறுவனங்களில் மட்டுமல்ல, பொது மக்களும் இயல்பாக பயன்படுத்துகிற சொற்களாகி, அடையாளமாகிவிட்டது. சாதி சான்றுகளில், தாழ்த்தப்பட்டேர் என்பதைதாழ்த்தப்படுத்தப்பட்டோர்என்றும், ‘பிற்பட்டோர்என்பதைபிற்படுத்தப்பட்டோர்என்றும் மாற்றியது அவர்தான். தற்போது தமிழகத்தில் இருக்கிற, இனிமேல் பிறக்கப்போகிற அனைவருக்குமான சாதி சான்றுகளில் இந்த வார்த்தை இருக்கும். தமிழினம் என்று ஒன்று இருக்கும் வரை, சாதிச்சான்று என்று ஒன்று இருக்கும்வரை, கலைஞர் மாற்றிய சொல் இருக்கும். சொற்களின் மதிப்பை கலைஞர் உணர்ந்த அளவிற்கு தமிழகத்தில் வேறுயாரும் உணர்ந்ததில்லை. கலைஞர் ஒரு சொல்லை பயன்படுத்தினால் அதற்கு உடனே தமிழகமெங்கும் மதிப்பு ஏற்பட்டுவிடும் மாயம் நிகழ்ந்த்தது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும்தமிழ் வாழ்கஎன்று எழுதவைத்தது அவர்தான். 1938ல்தமிழ் வாழ்க. இந்தி ஒழிகஎன கலைஞர் முழங்கியது எத்தனை ஆயிரம் மேடைகளில் நினைவுகொள்ளப்பட்டிருக்கும்? அன்புள்ள மு.. என்பது யாரை குறிக்கும் என்பது தமிழர்களுக்கு தெரியும். முரசொலி என்ற சொல், யாரை உணர்த்தும், அதன் அடையாளம் என்ன? அது தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம்குறித்து தமிழகம் அறியும்.
சட்டமன்றத்தில் இது சூத்திரர்கள் அரசு என்று சொன்னவர் கலைஞர். இரண்டாயிரம் ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் இது சூத்திரர்கள் அரசு என்று சொல்லும் வல்லமை இந்தியாவில் கலைஞருக்கு மட்டுமே இருந்தது.
        கலைஞர் அதிகமாக மட்டுமல்ல திரும்பத்திரும்ப எழுதிய சொல்லும், அதிகமாக மட்டுமல்ல திரும்பத்திரும் ஒவ்வொரு மேடையிலும் பயன்படுத்திய வார்த்தை – “உடன் பிறப்பேஎன்பதுதான். மற்றவர்களுக்கும், அவருடைய கட்சிக்காரர்களுக்கும்தான் தெரியும்உடன் பிறப்பேஎன்ற சொல்லின் மகத்துவம். அதே போன்றுஎன் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளேஎன்ற வாக்கியத்தின் மதிப்பு கலைஞருக்கும், அவருடைய கட்சிக்காரர்களுக்கும்தான் தெரியும். ‘உடன் பிறப்பேஎன்று அவர் எழுதும் கடிதங்கள் பத்து லட்சம் பேரை திரட்டும் வல்லமை கொண்டது என்பது ஒரு அதிசயம். உடன் பிறப்பே என்று அவர் எழுதிய கடிதங்கள் எழுபதாயிரம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதுவும் ஒரு அதிசயம்தான்.
        1952ல்அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” என்று பராசக்தி படத்திற்காக அவர் எழுதிய ஒற்றை வசனத்தை அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. “ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான்?” என்று அவர் கேட்ட ஒரு கேள்வி இந்தியாவையே உலுக்கியது. தான் எழுதிய சினிமாவிற்கான கதை வசனங்களிலும், நாடகங்களிலும், நாவல்களிலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஆயிரக்கணக்கான அழியாத வாக்கியங்களை உருவாக்கியது மட்டுமல்ல, அவ்வாக்கியங்களை வெகுமக்களும் அன்றாடம் பயன்படுத்தும் விதத்திலும் மாற்றியதில் அவருக்கு இணையான வேறு ஒரு எழுத்தாளர் தமிழ் மொழியில் இல்லை. வெகுமக்களின் மனதில் ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை நிலை நிறுத்துவது எளியக்காரியமல்ல. ஒரு சொல்லை உருவாக்குவது, ஒரு வாக்கியத்தை உருவாக்குவது என்பது மொழி சார்ந்த செயல்பாடு மட்டுமல்ல, கலாச்சார செயல்பாடு.
        செங்கோலைவிட எழுதுகோலே நிலையானதுஎன்று எழுதியது, “இதயத்தை இரவலாக தந்திடண்ணாஎன்று அவர் அண்ணாவின் மறைவிற்கு எழுதிய கவிதை வரிகள்:
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் -- அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து -- அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து...
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து
என்று எழுதியது எப்படி எல்லாத் தமிழர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த வரிகள் எழுதப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்தில் இன்று அவர்தான் சொல்விளையாட்டின் தலைவர். இலக்கியம் என்பது மக்களுக்காக என்றால் கலைஞரின் எழுத்துக்கள் மக்களுக்கானது என்பதில் சந்தேகமில்லை. கலைஞர் என்றால்தமிழ்என்று அடையாளப்படுத்துகிறார்கள். ‘தமிழ் வெல்லும்என்று எழுதிய கலைஞருக்கும்தமிழ்என்று அடையாளமிட்டது சரிதான் என்று தோன்றுகிறது.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்என்று முப்பது ஆண்டுகள் முன்பு கலைஞர் எழுதிய வாக்கியம்தான் இன்று தமிழகத்தின் முக்கியமான பேசுபொருள்
        கலைஞர் என்ற சொல் எப்படி கலைஞரை மட்டும் அடையாளப்படுத்துமோ, அதே மாதிரி அவர் உருவாக்கிய சொற்களும், வாக்கியங்களும் அவரை மட்டுமே அடையாளப்படுத்தும். அழியாத சொற்களை உருவாக்குகிறவன்தான் எழுத்தாளன்.  
நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் ஒட்டும்.” கலைஞர் உருவாக்கிய மகாத்தான வாக்கியம் இது.
மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.”
மு..வின்தமிழ் வெல்லும்என்றும்.

உயிர்மை செப்டெம்பர் 2018