வியாழன், 1 ஜனவரி, 2015

09.12.2014 சென்னை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டில் பேசியது - தினகரன் பதிவு


09.12.2014 சென்னை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாட்டில் பேசியது - இந்து பதிவு


இமையத்தின் ஆகாசத்தின் உத்தரவு நாடகமாக நடத்தப்பட்டது. (28.12.14) விருத்தாசலம். தினமணி பதிவு.


இமையத்தின் சிறுகதை - ஆகாசத்தின் உத்தரவு நாடகமாக நடத்தப்பட்டது. (28.12.14) விருத்தாசலம்


காதில் விழுந்த கதைகள் – இமையம்.

காதில் விழுந்த கதைகள் – இமையம்.

நடராஜன் வேட்டியை எடுத்துக் கட்டினார். மேல்சட்டையைப் போட்டபோது சமையல் அறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த சாரதா சொன்னாள்.
சட்டுன்னுபோயி சட்டுன்னு வாங்க. சுகரும் பீபியும் இருக்குங்கிற மறக்க வேணாம். அறியாப்புள்ளை மாரி ரோட்டுல எதயாச்சும் வேடிக்க பாத்துக்கிட்டு நிக்க வாணாம். வயசு அம்பத்தி அஞ்சி ஆச்சுன்னு தெரியணும். என்னெ எதுக்கு முறச்சிப் பாக்குறீங்க? கண்ணாடிக்கிட்டியே எம்மாம் நேரம்தான் நிப்பீங்க?...ஆஸ்பத்திரியில அண்ணன் மவள்னு ஒண்ணும் ஒறவாடிக்கிட்டு உருக வாணாம். மாத்திர வாங்கப்போறன், பில் கட்டப்போறன்னு பெருமப்பண்ணிக்கிட்டு காச கரியாக்க வாணாம். இந்த ஊருக்கு அவ குடிவந்து ரெண்டு வருசம் ஆவுது. ஒரு வாட்டியாவது இந்த ஊட்டுக்கு வந்திருக்காளா? அம்மாம் திமுறு. அம்மாம் கர்வம். அரசாங்க வேலயில இருக்கம்ங்கிற மம்மத. சாதி சனத்துக்கூட சேறுறதில்ல. சேந்தா காசு பணம் செலவு ஆயிடுமாம். எல்லாம் அவ அம்மாளோட ட்ரயினிங். நீங்களும்தான் மூண பெத்தீங்க. மூணும் ஒரு நூலு மாறாம அப்பிடியே இருக்குதுவோ ஒங்கள மாரியே. தண்டமா. எதுக்கு இப்ப என்னெ முறச்சிப் பாக்குறீங்க? உண்மயத்தான சொல்றன். பெரியப்பன் மவ மருந்த குடிச்சிட்டான்னதும் மூணு நாயிவுளும் நேத்துகிட்டு ஆஸ்பத்ரிக்குப்போனதுதான். இன்னம் ஊடு திரும்பல. அதது சாதிசனம்தான். அதது ரத்த பாசம்தான். நானும் இந்த ஊட்டுக்கு வந்து முப்பது வருசமாச்சி. வந்த அன்னிக்கி அடுப்புக்கிட்ட போனதுதான். இன்னம் அடுப்பவுட்டு வெளிய வல்லெ. நான் படுத்துகிடந்தப்பலாம், ஆபரேசன் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரியில எட்டு நாளு கெடந்தப்பலாம் ஒருநாயிம் வந்து ‘என்னா, ஏது‘ன்னு கேட்டதில்ல. எந் தல எழுத்து வந்து மாட்டிக்கிட்டன். கழுத்த நீட்டுன பாவத்துக்கு சாவுறமுட்டும் அழுதுதான் தீக்கணும்... எதுக்கு நிக்குறீங்க? ஆஸ்பத்திரிக்கி போறது மறந்துப் போச்சா? பொட்டச்சிக்கு எதுக்கு அம்மாம் ஆங்காரம்? புருசன் சண்ட போட்டா பொட்டச்சி பொறுத்து போறதுதான? எதுக்கு மருந்தக் குடிச்சா? எல்லாரயும் அலயவுடுறதுக்கா? அவ போனுக்கு ஒரே மிஸ்டுகாலா வருதாம்? எடுத்தா பேச மாட்டன்ங்குறாங்களாம். நெம்பர மாத்துன்னா மாத்த மாட்டன்ங்குறாளாம். அதனாலதான் சண்டயாம். என்னெ எதுக்கு அப்பிடி பாக்குறீங்க? கேள்விப்பட்டததான் சொல்றன். பொட்டச்சிக்கு எதுக்கு செல் போனு? நேத்து ராத்திரியே கொஞ்சம் நெனவாத்தான் இருந்தா. இப்ப சரியாயி இருக்கும். நேரத்திலியே போங்க. டிஸ்சார்ச் செஞ்சாலும் செஞ்சிடுவாங்க. அதுக்குள்ளாரப்போயி மூஞ்ச காட்டிட்டு வந்துடுங்க. அப்பறம் வந்து பாக்கலன்னு அவப்பேராயிடும். ஒங்க போன்ல சார்ச் இருக்கான்னு பாத்துக்கிட்டுப் போங்க.
நடராஜன் எதுவும் பேசவில்லை. போய்விட்டு வருகிறேன் என்றும் சொல்லவில்லை. வாசலுக்கு வந்து செருப்பை போட்டுக்கொண்டு கதவ சாத்திக்க என்று மட்டும் சொன்னார். பிறகு தெருவில் இறங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
   பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததுமே பாக்கியம் மருத்துவமனை வழியாக நரிமேடு செல்கிற மினிபேருந்து நிற்கிறதா என்று பார்த்தார். பேருந்து இல்லை. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் கேட்டார். இன்னம் கால்மணி நேரம் ஆவும் என்று கடைக்காரன் சொன்னதும் பயணிகள் உட்காருவதற்காக போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் நடராஜன். தரையில் குப்பையும் எச்சிலுமாக இருப்பதைப் பார்த்து முகத்தைச் சுளித்தார். எங்குப் பார்த்தாலும் ஒரே ஈயாக இருந்தது. மினி பேருந்து வருகிறதா என்று பார்த்தபோது இருபது வயது மதிக்கதக்க ஒரு பெண் காதில் செல் போனை வைத்துக்கொண்டே வேகமாக  நடராஜனுக்கு வலது பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்ப சொல்லு என்று பேச ஆரம்பித்தாள்.
நடராஜன் அந்த பெண்ணையே வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தார். நடராஜன் பார்ப்பது, சனங்கள் நடந்துபோவது, பழக்கடைக்காரர்கள், பூ விற்பவர்கள் கத்துவது, பேருந்துகளின் ஹாரன் ஒலி எதுவுமே அந்த பெண்ணை தொந்தரவு செய்த மாதிரி தெரியவில்லை. குப்பையில், சளியில் நிற்கிறோம் என்பதோ, ஈ மொய்க்கிறது என்பதோ அவளுடைய கவனத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை.
   ஹலோ, சொல்லு. ஒதுங்கித்தான் நிக்குறன். ஒரே சத்தமா இருந்துச்சி. இப்ப கேக்குது. நாளைக்கி வர மாட்டன். காலேஜ் லீவ். இனிமே அடுத்த வாரம்தான் வருவன். லீவுல விருத்தாசலம் வர எங்கம்மா வுடாது. கோமங்கலத்துக்கு எத்தினி மணிக்கு பஸ் வரும்ன்னு தெரியாதா? சீ, பொய், பத்தாம் நெம்பரு பஸ்ன்னு ஊருக்கே தெரியுமே. ம். ஆமாம். என் தங்கச்சியும் இங்கதான் படிக்கிறா. பத்தாவது. ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் வருவம். ஆமாம். அவபேரா? நன்மதி. எனக்கு பூமழைன்னு பேருவச்சதும் அதனாலதான். எங்கப்பா தமிழ் பைத்தியம் எல்லாம் இல்ல. எங்கண்ணன் பேரா? கார்மேகம், ஆமாம். ஒனக்கு எப்பிடித் தெரியும்? கவர்மண்டு வேலதான் செய்யுது. தாலுகா ஆபீஸில. ம். நாங்க மூணுபேரு மட்டும்தான். என்னா வேல? தனியாரா? சீசீ. சும்மாதான் கேட்டன். ஏன்? நான் கேக்கக் கூடாதா? ம். எம்.ஏ.தான் படிக்கிறன். அடுத்த வருசம் முடியும். ஆமாம். ரெண்டாயிரத்தி பதினாலுலதான். அப்பறம்? சொல்லு. அதிகமா கோபப்படுவியா? சும்மாதான் கேட்டன். ஆமாம். ம். என் பிரண்டு பேரா? கோமளா. ஆமாம். எங்கூடதான் படிக்கிறா. அவ ஊரா? மதுர வள்ளி. சரி வச்சிடுறன். அப்பிடியில்ல. எம்மாம் நேரம்தான் பேசுறது? சுமாராதான் படிப்பன். எங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். கொன்னே போட்டுடும். இங்க ஒரே சத்தமா இருக்குது. அதான் சரியா கேக்க மாட்டன்ங்குது. என்னது? எங்க ஊருக்கு வரியா? வந்தா அவ்வளவுதான். புடிச்சி கட்டி வச்சிடுவாங்க. எங்க ஊரு ஆளுங்க ரொம்ப மோசமானவங்க. நிஜமா? யேய், பொய்தான சொல்ற? ம். எனக்குத் தெரியும். ஐயோ சாமி. நான் வர மாட்டன். மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். ஐயோ! நீ பேச வாணாம். நானே பேசுறன். நீ மிஸ்டு கால் மட்டும் கொடு. என்னா ஒண்ணு, சனியன் புடிச்ச எங்க ஊருல டவரே கெடைக்காது. யாரு சொன்னா? எங்க ஊரு பட்டிக்காடெல்லாம் கெடையாது. அங்கலாம் எங்கம்மா அனுப்பாது. ம். சரி. அப்பறம்? பயமா இருக்கு? நீ என்னாத்த பாத்துக்குவ? மாட்டிக்கிட்டா நாந்தான சாவணும்? ம். பாக்குறன். காலயில பத்து மணிக்கா? சினிமா தியேட்டருக்கெல்லாம் வர மாட்டன். யாராச்சும் பாத்துடுவாங்க. ஒனக்கென்ன? நீ பாட்டுக்கும் போயிடுவ. எங்க ஊரு பையன் ஒருத்தன் என்னியவே பாக்குறான். ஆமாம். ஐயோ சாமி வாணாம். மிஸ்டுகால் மட்டும் கொடு. நானே பேசுறன். போன்ல சார்ச் வேற இல்லெ. கோயிலுக்குன்னாத்தான் வருவன். எங்க ஊரு பஸ் நிக்குற எடத்திலியே நிக்குறன். பஸ் வந்துடுச்சி. நான் போறன். அப்பறமா பேசுறன்“ என்று சொல்லிக்கொண்டே அந்த பெண் ஓடினாள்.
   நடராஜன் அந்த பெண் நின்றுகொண்டிருந்த இடத்தைப் பார்த்தார். வெறுமையாக இருந்தது. அந்த பெண்ணின் முகத்தையும், அவள் பேசிய வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்தார். சட்டென்று தன்னுடைய மகள் கோதையை நினைத்துப் பார்த்தார். தலையை ஆட்டிக்கொண்டார். என்ன தோன்றியதோ எழுந்துசென்று பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரட்டை வாங்கி பற்றவைத்துகொண்டு முன்பு உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்துகொண்டார். அவர் உட்கார்ந்து ஒரு நொடிகூட இருக்காது. முன்பு போனில் பேசிக்கொண்டிருந்த பெண் நின்றுகொண்டிருந்த இடத்தில் வந்து இரண்டு பெண்கள் நின்றனர். ஒருத்தி கத்தரிப்பூ நிறத்தில் சீலைக் கட்டியிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. மற்றொருத்தி மஞ்சள் நிறத்தில் சீலைக் கட்டியிருந்தாள். இரண்டு பேருக்குமே முப்பத்தி ஐந்து வயதிற்குள்தான் இருக்கும். பார்ப்பதற்கு இரண்டு பேருமே லட்சணமாக இருந்தார்கள். பெண்கள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்ததால் நடராஜன் சிகரட்டை அணைத்தார். மினி பேருந்து வந்துவிட்டதா என்று பார்த்தார். பிறகு கத்ரிப்பூ நிற சீலைக்கட்டியிருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் கையில் வைத்திருந்த மணிபர்சிலிருந்து போனை எடுத்து பேசினாள்.
   ஹலோ, பஸ்ஸ்டாண்டுல நிக்குறன். புள்ளைக்கி ஒடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரிக்கி வந்தன். பதினோறு மணிக்குத்தான் பஸ். அதுக்குத்தான் அவசரமா ஓடியாந்தன். சரியா கேக்கல. ஒரே சத்தமா இருக்கு. ஊட்டுக்கு வந்து பேசுறன். என்னாது புருசன் வந்ததும் மாறிட்டனா? நீதான் கண்ட. பேச மாட்டனா? பொய்ச் சொல்றனா? பக்கத்தில ஆளு இருக்காதா? பஸ்ஸ்டாண்டுலதான் நிக்குறன். கேக்கலியா? எதுக்கு இப்ப ஒண்ணுமில்லாததுக்கு சண்ட பண்ற? பேசுறதுக்கு ஒரு நேரம்காலம் வாணாமா? அது இன்னம் இருவது நாளுல போயிடும். அப்பறம் ஒன்னிஷ்டம்தான். ஒனக்கு இல்லாதது அப்பறம் யாருக்கு இருக்கு? நான் இருக்கமட்டும் எல்லாம் அப்பிடியேதான் இருக்கும். அதெவந்து எந்தத் திருடனும் தூக்கிக்கிட்டுப்போயிட மாட்டான். ஒரு இருபது நாளு பொறுசாமி. அப்பறம் ஆச தீர செஞ்சிக்கலாம். பண்ணிக்கலாம். என்னெ புரிஞ்சிக்க மாட்டியா? என்னாது? ஒரு சனியனும் காதுல விய்ய மாட்டங்குது. போனில சார்ச் வேற இல்ல. கட்டாயிட்டா என்னெ திட்டக் கூடாது. ஆமாம் ஆமாம் போனுக்கு சார்ச் போடுறது மட்டும்தான் எனக்கு வேல பாரு.    புள்ளெ தோளுல தூங்குது. பக்கத்தில அந்த அக்கா வேற இருக்குது. அப்பறம் பேசுறனே, ஆமாம் பத்மினி அக்காதான். சீ. என்னா பேசுற? ஊருல இருக்கிற பொட்டச்சிவோ எல்லாம் ஒனக்குத் தேவிடியாதான். வாய மூடு. என்னெ மாரி இல்லெ அது. ஊட்டுக்குப்போயி பேசுறனே, சத்தியமா பேசுறன். சொன்னா நம்பு. ஊட்டுல ஆளு இருக்கும்போது அங்கலாம் நான் எப்பிடி வர முடியும்? அது வந் பத்து நாளா ஊட்டுலியேதான் குந்தியிருக்குது. பொய். அது துபாயில இருந்தப்ப நீ கூப்புட்டப்பலாம் நான் வல்ல. ஆஸ்பத்திரிக்கிப் போறன்னு எத்தனவாட்டி வந்திருக்கன்? சும்மா பேசாத. நாலு மாசத்துக்கு மின்னாடி தூரம் நின்னுப்போயி நான் பட்டது எனக்குத்தான தெரியும். என்னாது? ஒனக்கொரு புள்ளைய பெத்து கொடுக்கணுமா? சரியாப்போச்சி போ. ஊட்டுக்காரன் கேக்கலன்னாலும் ஊருக்காரன் கேக்க மாட்டான்? ஒம் பேர சொல்லவா? அதுக்கு நான் செத்துப்போவலாம். நீ பாத்துக்குவியா? என்னாத்த பாப்ப? எதா இருந்தாலும் அப்பறம் பேசுறன். பஸ்ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு பேசமுடியுமா? மாறிட்டனா? எதுக்கு ஒண்ணுமில்லாமியே சண்ட பண்ற? இங்கப்பாரு வாயில வந்தப்படியெல்லாம் பேசக் கூடாது. இப்ப எதுக்கு என்ன கொல்ற? என் வாயக் கிண்டாத. அப்பிடித்தான் வச்சிக்க. நீ கலாவோட புருசனா இருக்கும்போது நான் முருகனோட பொண்டாட்டியா இருக்கக் கூடாதா? என்னாது? நீபாட்டுக்குப் பேசிக்கிட்டே போற? ரெண்டு வருசத்திலெ எனக்காக நீ என்னா கைய அறுத்துக்கிட்ட? அப்பிடியா? தப்புத்தான். நாடகக்காரியா இருந்திட்டுப்போறன். அது இப்பத்தான் ஒனக்குத் தெரியுதா? ரெண்டு வருசமா எங்கூட படுக்கும்போது தெரியல? சரிதான். விவரம் தெரிஞ்சா நான் எதுக்கு ஒங்கூட வரன்? நான் இன்னுமா தேவிடியாளா ஆவணும்? தப்புத்தான். ஒருத்தனோட பொண்டாட்டியா இருந்துகிட்டு, அவன் சம்பாரிச்சிப்போடுறத தின்னுக்கிட்டு இன்னொருத்தன்கூட படுக்கிறது எம்மாம் பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது. ஓ அப்பிடியா? இந்த வாத்தய ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லுவியா? திருப்பி சொல்லு கேக்கல. எனக்கு என்னா செஞ்சன்னு கேக்குறியா? புதூர் பூராவும், தெருவுல, ஊருல ஒன்னால பேருகெட்டுப்போயி கெடக்குறனே அதுபோதாதா? சரி. பேசவாணாம் வுட்டுடு. ஆமாம். புத்தி கெட்டுப்போயித்தான் ஒங்கூட படுத்தன். தாலி கட்டுன பொண்டாட்டியா இருந்தா இப்பிடி பேசுவியா? பொய்ச்சொல்றனா? சரி அப்பிடித்தான் இருக்கட்டும். என்னெ வுட்டுடுறியா? வுட்டுடு. நல்லதாப் போச்சி. எதாயிருந்தாலும் நாந்தான அழுது சாவணும். சாவுறமுட்டும் தேவிடியாங்கிற பட்டத்தோட நாந்தான சாவணும்? எம் பிரிசன் என்னெ வுட்டுட்டா. நாந்தான தெருவுல நிக்கணும்? சரிவுடு. நான் செத்துப்போறன். நல்லவன ஏமாத்துன பாவம் என்னெ சும்மா வுடுமா? கண்டபடிபேசக் கூடாது. ஒனக்கும் ஒரு கும்புடு. ஒன்னோட அதுக்கும் ஒரு கும்புடு. பஸ் வந்துடுச்சி போன வச்சிடு. பேசாட்டி போ. இந்த சனியன எந்த நாயி கண்டு புடிச்சான்னு தெரியலியே. கரண்டவிட மோசமா சனங்கள கொல்லுது என்று கத்திய வேகத்திலேயே எதிரில் வந்து நின்ற பஸ்சை நோக்கி அந்த பெண் ஓட ஆரம்பித்தாள். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மஞ்சள் சீலைக்காரியும் கூடவே ஓடினாள்.
   அந்த பெண்கள் ஏறிய பஸ் நகர ஆரம்பித்ததை நடராஜன் பார்த்தார். சட்டென்று கத்திரிப்பூ நிற சீலைக்கட்டியிருந்த பெண்ணின் தோளில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையினுடைய முகம் நினைவுக்கு வந்தது. வேகமாக எழுந்துவந்து முன்பு மினி பேருந்து எப்போதுவரும் என்று கேட்ட கடைக்காரனிடமே பஸ் எப்வரும்? என்று கேட்டார். வர நேரந்தான். பாத்துக்கிட்டே நில்லுங்க என்று சொன்னான். சலிப்பு ஏற்பட்டது. பக்கத்தில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் வந்து ரெண்டு பழம் கொடு“ என்று வாங்கி அந்த இடத்திலேயே நின்றுகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். அப்போது செல் போன் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. இடுப்பில் செருகி வைத்திருந்த போனை எடுத்து சத்தமாகக் கேட்டாள் வாழைப்பழக் கடைக்காரி.
   என்னாடி விசியம்? எங்கடி ஒங்கப்பன்? ஊட்டுல இல்லியா? காலயிலியே சாராய கடக்கிப்போயிட்டானா? அப்பிடியா? அப்பிடின்னா அங்கியே சாவச்சொல்லு. மூணு புள்ளை பெத்திருக்கானே. அதுவுளுக்கு யாருசோறு போடுறதின்னு கேளு. காலயிலியே வந்து வியாபாரத்தப் பாப்பானா? பிராந்தி கடயிலபோயி குந்தியிருப்பானா? ஒம் மூத்தரத்த புடிச்சிக்கொடு குடிக்கட்டும். எதக் குடிச்சாலும் அவன் திருந்த மாட்டான். ஊருல எம்மாம் காரு, பஸ் போவுது. ஒண்ணுல மாட்டி அவன் சாவக் கூடாது? பாஞ்சி வருசமா என்னெ புடிச்ச சனியன் வுடாது? எம்மாம் சாராயம் குடிக்கிறான்? வவுறுவெந்து சாவக் கூடாது. சத்தத்தில ஒரு கருமாதியும் கேக்கல. இப்பியே அப்பனுக்கு பரிஞ்சிப் பேசுறியா? நீ உருப்பட மாட்ட. அவங்கூட சேந்து நீயும் மண்ணாத்தான் போவ? பல ஆயிரம்பேரு வந்துபோற எடத்தில நின்னு ஒரு பொட்டச்சி தொழிலுபண்றாளேன்னு அவனுக்கு அக்கர வாணாம்? சீ வாய மூடு, பேசுறாப்பாரு மசுருபேச்சு. பழம் வாங்க வரவனெல்லாம் மொதல்ல என் சட்டயயும், சீலயயும்தாண்டி பாக்குறான். இது அந்த குடிகாரப் பயலுக்கு தெரியவாணாம்? நெருப்பாட்டம் சுடுறவெயிலுல நாள் முழுக்க நின்னுக்கிட்டே இருக்கிறனே எனக்கு கால வலிக்காது? ஒடம்பு வலின்னு ஒங்கொப்பனாட்டம் நான் தெனமும் பிராந்தியா குடிக்கிறன்? காலயிலிருந்து நிக்குறன். நான் சோறு தண்ணி குடிக்க வாணாமா? என்னெ மாத்தி வுடுனுமா வாணாமா? நீ எதுக்கு வர? பஸ் ஸ்டாண்டுல நிக்குறப் பயலுவோ இடிச்சிஇடிச்சியே ஒன்னெ பழமாக்கிட்டுப் போயிடுவானுவ. கண்ணாலியே புள்ள கொடுத்திடுவானுவோடி. ஒனக்கென்ன பள்ளிக்கூடம் போறன்னு நீ போயி குந்திக்குவ. அப்பிடியா? நல்லா ஆக்கி வையி. குடிச்சிட்டுவந்த களைப்புக்கு தின்னுட்டு தூங்கட்டும். சீ, சனியன. நான் கத்துறனா? வாழப்பழம் ஒரு நாளக்கி மேல தாங்காது. மறுநாளே வீணாப்போயிடும். வாழ மண்டிக்காரனுக்கு ஒங்கப்பனா பணம் தருவான்? பெரியசாமிங்கிற திருட்டுப்பயலுக்கு பொறந்தவதான நீ? அவன் ரத்தம்தான ஒன் ஒடம்புல ஓடுது, அதான் இப்பிடி பேசுற? செல்லம்மான்னு எனக்குபேர வச்சி எங்கப்பன்காரன் வெயிலுல நில்லுடின்னு பெத்துபோட்டுட்டான். எல்லாத்துக்கும் எங்கப்பன் கோனூராத்தான் சொல்லணும். அந்த நாதேறி வந்தா ஒடனே இங்க வரச்சொல்லு. எந் தல எழுத்து நான் சாவுறன். ஒங்கண்ணன்காரன் எங்க? கிரிக்கெட் வௌயாடப் போயிட்டானா? வௌயாடிட்டு வந்து சாப்பிடச்சொல்லு. நீ கறி மீனு எடுத்து ஆக்கி வையி. வந்து திங்கட்டும். சும்மா இருக்கிற நேரத்தில டி.வி.ய. பாத்துக்கிட்டே குந்தியிருக்காதடி. நோட்டுப்புத்தகத்த எடுத்து எழுதுடி சண்டாளி. இல்லன்னா நீயும் வந்து இந்த மாரி பஸ்ஸ்டாண்டுலதான் நிக்கணும். சாவணும். வையிடி போன. வியாபாரத்தப் பாக்கணும். சார்ச் வேற இல்லெ. என்று சொல்லிவிட்டு நடராஜனிடம் சில்லரயா தாங்க என்று கேட்டு காசை வாங்கினாள். வாழைப்பழத்தோலை ஒரு ஓரமாகப்போட்டுவிட்டு திரும்பியபோது மினிபேருந்து வந்தது. நடராஜன் பஸ்ஸிற்குள் ஏறினார்.
பேருந்து பஸ்ஸடாண்டை விட்டுவெளியே வரும்போது நடராஜனுக்கு போன் வந்தது, அவருடைய மகன் அரவிந்தன் பேசினான். பஸ்ஸில் வந்துகிட்டிருக்கன். கால்மணி நேரத்திலியே வந்துடுவன். நார்மலா ஆயிடிச்சா? அப்பிடியா? நல்லது. வந்துடுறன். சரி. பஸ் சத்தத்தில சரியா கேக்கல. ரூட்டு பஸ் அங்க நிக்காது. மினி பஸ் மட்டும்தான் நிக்கும். அது நாலு தப்படிக்கு நாலு தப்படி நின்னுநின்னுதான் வரும். நடந்தே வந்திருந்தாலும் இந்நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கலாம். நேர்ல பேசிக்கலாம். சரி. வச்சிடு என்று சொல்லிவிட்டு போனை மேல்சட்டை பையில் வைத்தபோது அவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுள்ள பெண் போனில் பேசினாள்.
இதென்ன மாமா கேள்வி? ஊட்டுலதான் இருக்கன். சோறுதான் ஆக்கிக்கிட்டு இருக்கன். டி.வி.தான் ஓடுது. சின்னக்குட்டி த்ரிஷாதான் அம்மாம் சத்தமா வச்சியிருக்கா. நீ பெத்த புள்ளை ஒன்னெ மாரிதான் இருக்கும்? அடங்காம. யே குட்டி சவுண்ட கொறடி. அப்பன மாரியே அடங்காம நிக்குறா பாரு. சரி வச்சிடவா? அவசரமில்ல. சார்ச் இல்ல. சார்ச்போடல. கரண்டு எப்ப வருது, எப்ப போவுதின்னே தெரியில. சனியன். சரி. சார்ச் போட்டுவைக்கிறன். ஆமாம்ஆமாம். ஒங்கம்மா பக்கத்து ஊட்டுலதான் குந்தி இருக்குது. நீ இருக்கிற எடத்திலதான் காரு லாரி போற மாரி சத்தம் வருது. நிஜமாத்தான் சொல்றன். இல்லியே. நான் யாருகிட்டயும் பேசலியே. கால்மணி நேரமா என்கேஜீடா இருந்துச்சா? தெரியல. நான் எதுக்குப் பொய்ச்சொல்லப்  போறன்? யாரும் பேசாதப்ப எப்பிடி போனு பிஸியா இருக்கும்? எதுக்கு என்னெ சாவடிக்கிற? என்னாது? பேச்ச மாத்துறனா? காருப்போற மாரி சத்தம் கேக்குதா? ஒனக்கு மட்டும் எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கற்பன ஓடுமோ. ஒனக்குத் தெரியாம நான் எதுக்கு காரு ஏறப்போறன்? காலம் பூராவும் என்னெ நீயும் ஒங்கம்மாவும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருங்க. ஒங்க சந்தேகத்திலியே நான் சாவப்போறன். ஒன் புள்ளிவுள நீயே பாத்துக்க. டி.வி.சத்தத்தில் சரியா கேக்க மாட்டங்குது. நான் சாவுறமுட்டும் கண்ணன் பொண்டாட்டிதான். கழுதூர்ல பொறந்து அரியநாச்சியில வாக்கப்பட்டபொண்ணு இந்த ஜெயமணின்னு தெரியுமில்லெ. அடுப்புல குழம்பு கொதிச்சிக்கிட்டிருக்கு. அடுப்ப நிறுத்திட்டு வந்து பேசுறன்.... என்று அந்தப்பெண் சொன்னாள்.
   நடராஜன் திரும்பி அந்த பெண்ணைப் பார்த்தார். போனில் அவள் எதையோ குடைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தால் அசிங்கமாக நினைக்கக்கூடும் என்ற எண்ணம் வந்ததுமே நேராக திரும்பி உட்கார்ந்தார். கல்யாண வீட்டில் கட்டியிருக்கும் ஸ்பீக்கர்செட் கத்துவது மாதிரி பஸ்ஸிலிருந்த ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது.
பாக்கியம் ஆஸ்பத்திரி என்று கண்டக்ட்டர் கத்தினான். பேருந்து நின்றது. நடராஜனோடு மூன்று நான்கு பேர் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள்.
மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே ஒரு நர்சிடம், நேத்து மருந்து குடிச்ச பொண்ணு எங்கம்மா இருக்கு? என்று நடராஜன் கேட்டார். சித்தலூர் தேன்மொழிங்கிற கேசா? எட்டாம் நெம்பர் ரூம்ல இருக்கு. இப்ப உள்ள போவாதீங்க, டாக்ட்டர் இருக்காரு. வெளிய வந்ததும் போங்க என்று சொன்னாள்.
எவ்வளவு நேரம் ஆவும்?
தெரியாது. பெஞ்சில உட்காருங்க. இல்லன்னா வெளியில வெயிட்ப்பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கிற இடத்திற்குப் போய்விட்டாள். ஐந்து சேர்கள்தான் இருந்தன. ஐந்திலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். எட்டாம் எண் அறைக்குமுன்போய் நின்றார். மருத்துவர் உள்ளே இருப்பது தெரிந்தது. பத்தாம் எண் அறையிலிருந்து வந்த ஒரு நர்சு வழியில நிக்கக் கூடாது. போயி ஒக்காருங்க. சொன்னா கேளுங்க. டாக்டர் பாத்தா எங்களத்தான் திட்டுவாரு. என்று கத்தினாள். நடராஜனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. தயங்கி நின்றுகொண்டிருந்தார். பிறகு வெளியே வாசலுக்கு வந்தார். ஒதுங்கி நின்றுகொண்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். அப்போது வழியில நிக்கக் கூடாது என்று கத்திய நர்சு வெளியேவந்தாள். வந்த வேகத்திலே கையில் வைத்திருந்த போனை காதில் வைத்துக்கொண்டுஇப்ப சொல்லு கேட்டாள்.
எத்தன மாசமா பீரியடு வல்லெ. மூணு மாசமா? சரிதான். ஸ்கூல்ல யாருக்காச்சும் தெரியுமா? மிஸ்டுகால் வந்து. அத யாருன்னு கேக்கப்போயீதான் மாட்டுனீயா? என்னது ஆட்டோ ஓட்டுறானா? நல்ல ஆளாதான் புடிச்சியிருக்க. தமிழ்ச் சிங்கம்ங்கிற நடிகரோட ரசிகர் மன்ற தலைவரா? சரிதான். உருப்பட்டுடும். சீ வாய மூடு. இப்ப எதுக்கு அழுவுற? ஊருக்காரின்னு சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருக்கு. +2 படிக்கும்போதே ஒனக்கு எதுக்கு இந்த வேல? அப்பிடியா? தெருவுல போனா நாயெல்லாம் பின்னால வரத்தான் செய்யும். நாம்பதான் பாத்துப்போவணும். நிக்காம, திரும்பிப் பாக்காமப்போவணும். என்னாது? காதல் பண்றீயா? இதுக்குப்பேருதான் காதலா? சரிதான். ஒம் பேர கையில பச்சகுத்தியிருந்தானா? கையில சிகரட்டால சுட்டுக்கிட்டு வந்து ஒங்கிட்ட காட்டுனானா? இப்ப அழுது என்னாப் பண்றது? அவன் பச்சகுத்தியிருந்தா என்ன, சிகரட்டால சுட்டுக்கிட்டிருந்தா ஒனக்கு என்னா? இப்ப அழுவறதால வயித்தில புள்ளை வளர்றது நிக்காதுடி லூசு. அப்பிடியா? மாத்தர போட்டும் சரியா ஆவலியா? ஆமாம். டி.ன்.சிதான் பண்ணணும். ரெண்டாயிரம் ஆவும். ஆமாம். ஊட்டுக்குத் தெரிஞ்சிடும்ன்னு இப்ப கவலப்பட்டு என்னா செய்யுறது? பணம் இல்லாம செய்யணுமின்னா நீ கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குத்தான் போவணும். நீ படிக்கிற புள்ளைன்னு தெரிஞ்சா செய்ய மாட்டாங்க. ஆமாம். ஸ்கூலுக்கு சொல்லிடுவாங்கதான். கேக்கல. சத்தமா சொல்லு. அந்தப் பய எங்க இருக்கான்? ஒரு வாரமா போன எடுக்கலியா? இனிமே வர மாட்டாண்டி. அவங்கிட்ட காட்டுறதுக்கு இனிமே ஒங்கிட்ட என்னா புதுசா இருக்கு? இப்ப அழுது ஒண்ணும் செய்ய முடியாது. நீ சாவுறமுட்டும் அழுதுதான் தீரணும். சொல்லு. நான் டூட்டியிலதான் இருக்கன். கழுத்தில செயினு கெடந்தா அத அடவு வையி. இல்லன்னா தோடு மூக்குத்தியத்தான் விக்கணும். மூக்குத்திப்போடலியா? இந்தக் காலத்தில யாருதான் மூக்குத்திப் போடுறாங்க? நீ போட. செயினத்தான் விக்கணும். ஊட்டுல கேட்டா எங்கியோ அறுந்து வியிந்திடுச்சின்னு சொல்லு. ஒன்ன மாரிதான் வாரத்துக்கு ரெண்டு மூணு ஸ்கூல்ல படிக்கிறப் பிள்ளைங்க இங்க வருதுவோ. டி.ன்.சி. பண்ணிக்கிட்டுப்போவுதுங்க. அவுங்களும் இதே பொய்யத்தான் சொல்லியிருப்பாங்க. பொய் சொல்ல மாட்டன்னு சொன்னா வயித்தத் தள்ளிக்கிட்டு நில்லு. சீ. வாயமூடு. எங்க ஊரு பொண்ணு, சொந்தக்காரப் பொண்ணுன்னு சொன்னா கொஞ்சம்தான் கொறப்பாங்க. சொல்றன். காலயிலதான் வரணும். வெறும்யித்தோடதான் வரணும். நாந்தான் சொல்லிட்டனில்ல. யார்கிட்டயும் சொல்ல. சத்தியம். மூணுமணி நேரத்திலியே போயிடலாம். வா. நாளக்கே கிளியர் பண்ணிடலாம். சத்தியமா செய்யுறன்டி. நாளக்கி மொத கேசா பண்ணசொல்றன். டாக்ட்டரம்மா என்ன கூப்புடுவாங்க. அப்பறமா பேசுறன். வையி. அழுது சாவாத. பாத்துக்கலாம். போனில சார்ச் வேற இல்லெ என்று சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அந்த நர்சு.
ர்சு ஓடுவதையே பார்த்த நடராஜனுக்கு முகம் சுண்டிப்போயிற்று. வெளியே வந்து ஐந்து நிமிசத்திற்குமேல் ஆகியிருக்கும். உள்ளே போகலாமா என்று யோசித்தார். சிறுநீர் வருவதுபோல இருக்கவே. மறைவாக எங்காவது இடம் இருக்குமா என்று பார்த்தார். அப்போது ஒரு பையன் ரோட்டிலிருந்து நடராஜனை இடித்துவிடுவது மாதிரி வேகமாக வந்து வண்டியை நிறுத்தினான். நடராஜனுக்கு உயிரே போய்விட்டது மாதிரி இருந்தது. கோபத்துடன் பையனை முறைத்துப் பார்த்தார். அவன் நடராஜனை ஒரு நூல் அளவுகூட பொருட்படுத்தாமல் சட்டைப்பையிலிருந்து வேகமாக போனை எடுத்து பேச ஆரம்பித்தான். நடராஜனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கொலை செய்துவிடுவது மாதிரி பையனையே வெறித்துப் பார்த்தார். அவன் அவரை ஒரு மயிராகக்கூட நினைக்காமல் போனில் கத்த ஆரம்பித்தான்.
எங்க இருக்க? மணிவேலன் ஆஸ்பத்திரியிலயா? நான் ஒன்னெ பாக்கியம் ஆஸ்பத்திரிக்குத்தான போவ சொன்னன்? அதுதான் ஒரு கொலகார ஆஸ்பத்ரியாச்சே? அந்த டெஸ்ட்ட எடு, இந்த டெஸ்ட்ட எடுன்னு காச புடுங்கிடுனுவானே. சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு மாத்தரய எழுதுறவனாச்சே. சத்தமா சொல்லுடி மூதேவி. என்னது? ஸ்கேன் அங்கமட்டும்தான் இருக்கா? சரி இப்ப எங்க இருக்க? பஸ்ஸிக்கு காசு இல்லியா? போன்போட வேண்டியதுதான? ஆமாம். ஒரு மணிநேரம் அணச்சி வச்சியிருந்தன். மேனேஜர் கழுத்த அறுப்பான்னுதான் செஞ்சன். சொல்லு. சரி. ஒங்கிட்டயிருந்த பணம் என்னாச்சி? மணி பர்சோட ஐநூறு ரூவாய தொலச்சிட்டியா? தேடிப் பாத்தியா? ஒம் மூஞ்சிக்கு எப்பிடி கெடைக்கும்? பஸ்ஸில தொலச்சியா, ஆஸ்பத்திரிலியா? எங்கன்னே தெரியலியா? ஒனக்கு என்னதான் தெரியும்? ஐநூறு ரூவாய்க்கி நானு மூணு நாளு பீங்கான் பேக்ட்டரியில நெருப்புல நிக்கணுமின்னு தெரியுமா? எதுக்குடி இப்ப அழுவுற? திருட்டு முண்டச்சி. ஒன்னெ போயி காதலிச்சி கல்யாணம் பண்ணுனன்பாரு. ண்டா காதலிச்சம்ன்னு இருக்கு. என்னடி முணவுற? ஐநூறு ரூவா எப்பிடி வரும்? ஒங்கப்பன் தருவானா? பன்னிமேய்க்கிறவன் மவகிட்டவந்து மாட்டிக்கிட்டன் பாரு. என்னாது? போனில சார்ச் தீரப்போவுதா? போனுக்கு சார்ச்கூட போடாம என்னா புடுங்குற வேல செய்யுற? யேய். யேய். இங்கப்பாரு. அழுதுகாட்டுன மூஞ்சிய ஒடச்சிப்புடுவன். எட்டுமாச புள்ளத்தாச்சின்னுகூட பாக்க மாட்டன். பஸ்ஸிக்கு காசு இல்லாம நடந்து போனியா? பூவனூரு முடக்குக்கிட்ட நிக்குறியா? நில்லுநில்லு. ஒன்னெவந்து சாயங்காலம் வச்சிக்கிறன். இன்னம் ஒரு மையிலுதான அப்பிடியே நடந்துபோ. அப்பத்தான் ஒனக்கெல்லாம் புத்தி வரும். யே. இப்ப என்னா சொன்? திருப்பி சொல்லு. ஒங்கூட ஒம்போது மாசம் இருந்ததே ஒம்போது வருசம் இருந்த மாரி ஆயிப்போச்சிடி. பிச்சக்காரன் மவள. முன்ன என்னமோ சொன்னியே அதை சொல்லு. ஒண்ணும் சொல்லலியா? வாயிக்குள்ளாரியே பேசுறதுக்கு எங்கடி கத்துக்கிட்ட திருட்டுப்பய மவள. ராத்திரி நேரத்தில குழம்பு சட்டிய கவுத்து வச்ச மாரி இருக்கிற ஒனக்கு எப்பிடிடி ஒங்கப்பன் ‘அழகு நிலா‘ன்னு பேரு வச்சான்? என்னது? ஒங்கப்பனப் பத்திப் பேசக் கூடாதா? அந்த கொடுக்கூரான் கிட்டப்போயி சொல்லு. இந்த அம்பேரிமேடு சேகரு யாருன்னு. வாயத்தொறந்து பேசுடி திருட்டுமுண்டச்சி. அப்பியே எங்கம்மா சொல்லுச்சி. கொடுக்கூருக்காரிவுள நம்பாதன்னு. பிரண்ட்ஸ்ம் சொன்னாங்க. காதலிச்சி கல்யாணம் கட்டாதன்னு. ஆமாண்டி, எங்கம்மா சொன்ன பொண்ண கட்டியிருந்தா புது பைக்கு வந்திருக்கும், பத்து பவுனு நகையும் வந்திருக்கும். சோத்துக்கு இல்லாதவன் மவள கட்டுனது எந்தப்புத்தான். வாய மூடுறியா? ஒத வாங்குறியா? எனக்கின்னே பொறந்திருக்கா பாரு முண்டச்சி. சாவப்போறியா? போ. செத்துத்தொல. என்னெ புடிச்ச சனியன் வுட்டுதின்னுப் போறன். டாக்ட்டரு ஒண்ணுமே சொல்லலியா? என்னா புள்ளைன்னும் சொல்லலியா? பொண்ணா இருக்கலாமின்னு நெனக்கிறியா? ஒன் நெனப்புல நெருப்பத்தான் கொட்டனும். பொட்டயாப் பெத்துப்போடு. ஒன்ன மாரியே எவங்கூடயாவது ஓடிப்போவட்டும். போன வையிடி சனியன. எதுக்குடி இப்ப ஊள வுடுற? பிச்சக்காரன் மவள. என் தல எழுத்து வந்துமாட்டிக்கிட்டன்னுதான இப்ப சொன்ன? இல்லியா? மாத்தி சொன்ன, பல்லப் பேத்திடுவன். ஊட்டுக்குப்போ. சாயங்காலம் வந்து ஒனக்கு பாடகட்டுறன். ஒன் பொணம் இன்னிக்கி சுடுகாட்டுக்குப் போவுதா இல்லியான்னு பாரு என்று கத்திய வேகத்திலியே வண்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் அந்தப் பையன். அவன் போன் பேசி முடித்ததும் தகராறு செய்யலாம் என்று நடராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். அதற்கு அவன் சிறுஅவில்கூட வாய்ப்புக் கொடுக்கவில்லை. வெறுப்படைந்தார்.
என்னா ஒலகம்ண்டா சாமி இது? நரக ஒலகம்தான் என்று சொல்லிக்கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார் நடராஜன்.அந்திமழை – ஜனவரி 2015

இலக்கியமாகுமா தன் வரலாற்றுக் கதைகள் : இமையம்

இலக்கியமாகுமா தன் வரலாற்றுக் கதைகள் : இமையம்
 நான் உபாராவை எழுதியதும் என்னுடைய வாழ்க்கை வியக்கத்தக்க அளவுக்கு மாற்றமடைந்துவிட்டது.  மராத்தி வாசகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பும், பாராட்டும் என்னுடைய கட்டுப்பாடற்ற கனவுகளையே விஞ்சிவிட்டது.  வாழ்க்கையின் முட்களைத்தவிர வேறெதையும் அறிந்திராத ஒருவனுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.  உபாராவுக்குக் கிடைத்த வரவேற்பு ஒரு வெள்ளத்தைப் போன்றது என்றால் அது மிகையல்ல.  இப்போதும் அது தொடர்கிறது.  மகாராஷ்டிராவின் பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்களும், வானொலியும், தொலைக்காட்சியும்கூட உபாராவை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தன.  மகாராஷ்டிராவின் மூலைமுடுக்கெல்லாம் இந்நூலின் அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அதற்காக நூற்றுக்கணக்கான பாராட்டுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன... சதாராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டுக்கூட்டத்திற்கு தொலை தூரத்திலிருந்த கிராமாங்களிலிருந்து ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர்... மராத்தி வாசகர்கள் உபாராவை தங்கள் தலைமீது வைத்து கொண்டாடினார்கள்... அப்பட்டமான பொருளியல் நோக்கிப் பார்த்தாலும் நான் பெற்றது ஏராளம்.... போர்டு நிறுவனத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயும், அமெரிக்கப் பயணமும் அளிக்கப்பட்டது.  எனக்கு முப்பத்திரெண்டே வயதாகியிருந்தபோது சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது... எனது தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எனது நூல் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற்றுவிட்டது.  உண்மையில் நானே ஒரு பிரமுகராகிவிட்டேன்.   சாலையோரங்களிலும், சாக்கடையின் விளிம்புகளிலும் வளர்ந்த மனிதன் மேலான இடத்திற்கு உயர்த்தப்பட்டுவிட்டான் 1  லஷ்மண் மானே
       1980-க்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் நாவல், கவிதை, சிறுகதை நூல்களுக்குக் கிடைக்கிற வரவேற்பைவிட தன்வரலாற்றுக் கதைகளுக்குத்தான் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது.  தன்வரலாற்றுக் கதைகள் எழுதப்பட்ட உடனேயே உள்நாட்டு மொழிகளில் மட்டுமல்ல ஆங்கிலம், பிரஞ்ச் போன்ற பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.  படிக்கப்படுகின்றன,  பாராட்டப்படுகின்றன, பரிசுகள் வழங்கப்படுகின்றன.  இதனால் நாவல், கவிதை, சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக தன்வரலாற்றுக் கதைகள் அதிகமாக எழுதப்படுகின்றன. தன்வரலாற்றுக் கதைகள் அரசியலாக்கப்படுகின்றன. வியாபாரமாக்கப்படுகின்றன. உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தியாவில் விளிம்புநிலை, நாடோடி பழங்குடியின, தாழ்த்தப்பட்டோரின் தன்வரலாற்றுக் கதைகளுக்குக் கிடைக்கிற அமோக வரவேற்பைப் பார்க்கும்போது-இந்திய சமூகம் பெரிய மனமாற்றத்தை அடைந்துவிட்டதோ, இனி தீண்டாமையைக் கடைபிடிக்காதோ, நாடோடி பழங்குடியின மக்களை நல்லவிதமாக நடத்துவார்களோ என்ற எண்ணம் ஏற்படலாம்.  கல்வி, பொருளாதார மேம்பாடு, ஊடக வளர்ச்சி, போக்குவரத்து, உலக மயம், தாராளமயம், வியாபாரமயம், பன்னாட்டு ஐ.டி.கம்பனிகளின் பெருக்கம் எல்லாம் சேர்ந்து இந்தியர்களின் மனதில், பெரிய மாற்றத்தை நிகழ்த்திவிட்டது என்றே நினைக்கவைக்கும். ஆனால் சமூக நிகழ்வுகள் உண்மை அதுவல்ல என்று நிரூபிக்கின்றன. 
தீண்டாமையைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிற ஒரு சமூகம் எப்படித் தீண்டதகாதவர்களின் தன்வரலாற்றுக் கதைகளை, நாவல்களை, நாடோடி பழங்குடியின தன்வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்கிறது, அமோகமாக வரவேற்கிறது?  பரிசு கொடுக்கிறது, பாராட்டுக்கூட்டம் நடத்துகிறது, மொழியாக்கம் செய்கிறது?  ஐயோ பாவம்என்று சொல்வதற்காகவா?  இப்படியெல்லாம் இன்னும் இருக்கிறதா?என்று கேட்பதற்காகவா?  நான் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லைஎன்று காட்டிக்கொள்வதற்காகவா?எல்லாமும்தான். தற்காலத்தில் இது ஒரு நாகரீக செயல்பாடு, போக்கு. தன்வரலாற்றுக் கதைகள் ஏன் எழுதப்படுகின்றன?  வரவேற்கப்படுகின்றன?  தலித் அல்லாதவர்களின் தன்வரலாற்றுக் கதைகள் ஏன் தலித் சுயசரிதைஎன்று மொழியாக்கம் செய்யப்படுகின்றன. எழுதப்படுகிற எல்லா தன்வரலாற்றுக் கதைகளுக்கும்-வரவேற்பு இருக்கிறதா? மராத்தி மொழியில் எழுதப்பட்ட உச்சாலியா, உபாரா, குலாத்திஎன்று பிற்பட்ட இனத்தவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்களுக்கு கிடைத்த வரவேற்பு மஹர் இனத்தைச் சார்ந்த பல எழுத்தாளர்களுக்குக் கிடைக்கவில்லை.  அதே மாதிரி தமிழ்நாட்டில் அழகிய நாயகியம்மாள் எழுதிய கவலைக்கும் (1998), ச.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டிக்கும்’ (2004) கிடைக்கவில்லை.  (இவர்கள் இருவரும் இடைநிலை சாதியினர்)  கே.ஏ.குணசேகரன் எழுதிய வடு (2005)வுக்கும், ராஜ்கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம்(2002), ‘காலச்சுமை’(2003), ‘லண்டனில் சிலுவைராஜ்’ (2004)வுக்கும் கிடைக்கவில்லை. “My brother always told me, ‘nobody would have bothered to look at your book, If it had been published ten years before. That’s true. There was a context for it. I must say that it was great luck for me. Because, it was at that time that I came out with my writing.”2 என்ற பாமாவின் கூற்றுப்படி அரசியல், சமூகச் சூழல்தான் ஒரு படைப்புக்கான மதிப்பைத் தீர்மானிக்கிறது.
       அரசியல் சூழலால், சமூக சூழலால், புதிய போக்கால் கவனம் பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துக் குறித்து என்ன மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்? “I don’t have any passion for writing”3 என்று பாமா கூறுகிறார். ஒரு எழுத்தாளர் இப்படிக் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. நிகழ்காலத்தில் எழுத்தாளர்களின் கண்முன்னாலேயே அவர்கள் எழுதிய நூல்கள் செத்துப்போகிற அவலத்தை – எழுத்தாளர்கள் மட்டுமல்ல சமூகமும் பார்த்துகொண்டுதான் இருக்கிறது.  புதிய போக்குக்காக எழுதப்படும் படைப்புகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவானதே. தன் வரலாற்றுக் கதைகளுக்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு என்பது அதனுடைய கலைத்தன்மைக்காக அல்ல, அதனுடைய அழகியல் தன்மைக்காக அல்ல. அதனுடைய வணிகத் தன்மைக்காக மட்டுமே. தன் வரலாற்றுக் கதைகளை எழுதுவதில் காட்டுகிற ஆர்வம் படைப்பிலக்கியங்களில் இல்லை.
       தலித் மக்களின் வாழ்க்கைக்கும் நாடோடி பழங்குடியின மக்களின் வாழக்கைக்கும்-பொருளாதார ரீதியாக, வாழ்க்கைமுறை ரீதியாக பெரிய வேறுபாடு இருப்பதில்லை.  பொது சமூகம் தீண்டத்தகாதவர்களையும், நாடோடிப் பழங்குடியினரையும் ஒரே விதமாகத்தான் பார்க்கிறது, நடத்துகிறது. ஆகவே நாடோடிப் பழங்குடியினரும் தலித்கள்தான், அல்லது தலித்என்ற அடையாளத்தின் கீழ்கொண்டுவருவதில் பிழையில்லை.  தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் இலக்கியம், இயக்கம் எழுச்சிப்பெற்று வரும் நிலையில்-உள் சாதி முரண்களை, உள் பிரிவு முரண்களை பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்ற வாதம் சரியானதுதானா? தீண்டாமை என்னும் சவுக்கால் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு இடைநிலை சாதியினர் எப்படி அடிக்கிறார்கள் என்பதை சொல்லக் கூடாது என்கிறார்கள். பிராமணிய கொடுமைகள் குறித்து பேசுகிற அளவிற்கு இடைநிலை சாதியினரின் கொடுமைகள் குறித்து பேசுவதில்லை. பிராமணிய கொடுமைகளைக்காட்டிலும் இடைநிலை சாதியினரின் கொடுமைகள் வலிமையானது.
உபாரா, உச்சாலியா, குலாத்தி-மூன்றும் நாடோடிப் பழங்குடியின சாதி.  இந்த மூன்று பிரிவினரும் ஒருபோதும் தங்களை தீண்டாமைக்குட்பட்ட சாதி என்று உணர்ந்தது இல்லை. இந்த மூன்று நூல்களும் தலித்-வாழ்வையோ, துயரத்தையோ அவமானத்தையோ பேசவில்லை.  மாறாக தீண்டாமையைக் கடுமையாக கடைப்பிடிக்கிறவர்கள்.  உபாரா-வை எழுதிய லஷ்மண்மானே, உச்சாலியாவை எழுதிய லஷ்மண் கெய்க்வாட், குலாத்தியை எழுதிய-கிஷோர் சாந்தாபாய் காலே- ஆகியோர் தன்வரலாற்றுக் கதையைத்தான் எழுதியுள்ளார்கள்.  மூன்று பேரும் தங்களை மராத்திய எழுத்தாளர் என்றுதான் பதிவுசெய்துள்ளனர். இந்தியாவின் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யும்போதும், ஆங்கிலத்தில மொழியாக்கம் செய்யும்போது-தன்வரலாற்றுக் கதை என்றுதான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  நூலை எழுதியவர்களோ, அச்சிட்டவர்களோ, மொழியாக்கம் செய்தவர்களோ- தலித்சுயசரிதை-என்று சொல்லவில்லை.  ஆனால் அவற்றை தமிழில் வெளியிட்ட விடியல் பதிப்பகம் மட்டும் தலித்சுயசரிதை-என்று வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பின் அடிப்படை என்ன? மூல நூலுக்கு குந்தகம் ஏற்படாமல் மொழிபெயர்ப்பதுதானே. நூலின் வகைப்பாட்டையே சொந்த விருப்பத்தின் பெயரில் மொழிபெயர்ப்பது – என்ன நியாயம்? மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கிறார்கள். வசந்த் மூன் எழுதிய - ஒரு தலித்திடமிருந்து என்ற தன்வரலாற்றுக் கதையை ‘Gail Omvedt’ ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்த்தார் என்பதை சொல்கிறார். இந்நூலின் ஆங்கில மொழியாக்கம் அமெரிக்க வாசகர்களை மனதில்கொண்டு செய்யப்பட்டுள்ளதால், சில சாதிப் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் அந்தந்த சாதிகளின் தொழிற் பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எண்ணெய் தயாரிக்கும் சாதி, தோட்டக்கார சாதி, விவசாய சாதி.“4 இப்படியான மொழிபெயர்ப்புகள் மூல நூலையும் அதை எழுதிய எழுத்தாளனையும் இழிவுப்படுத்துகிறது. உலகிலேயே அமெரிக்க வாசகர்கள்தான் முக்கியமானவர்களா? அவர்களுக்காகத்தான் இலக்கியங்கள் எழுதப்படுகின்றனவா?
       கைக்காடி என்னும் நாடோடிப் பழங்குடி இனத்தில் பிறந்தவர் லஷ்மண் மானே.  கைக்காடியில் 143-உபசாதிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட தனியான மொழியும், தனியான பண்பாடு, மரபுகள், நெறிமுறைகளும் இருக்கின்றன.  கைக்காடி சமூகத்தின் முக்கியமான தொழில் மூங்கிலை வெட்டிவந்து கூடை, முறம் பின்னி விற்பது.  பழைய கூடை, முறம் போன்றவற்றை சீர் செய்து தருதல்.  இதற்குக் கூலியாக பணமோ, ரொட்டியோ, பழைய குழம்போ கிடைக்கும்.  முந்தாணையில் வாங்கி வந்து சாப்பிடுவார்கள்.  கழுதை மீது பொருள்களை ஏற்றிக்கெண்டு ஒவ்வொரு ஊராகப் போவார்கள்.  ஒவ்வொரு ஊரிலும் மேல்சாதியினர் பீபேளுகின்ற இடத்தில் சுத்தம் செய்துவிட்டு தங்குவார்கள்.  இப்படி ஒவ்வொரு ஊராகப் போகும்போது-லஷ்மண் மானே அந்தந்த ஊரில் படிக்கிறார்.  இண்டர் மீடியட் படிப்பை முடிக்கிறார்.  படிக்கும்போதே இவர் சாஷி என்ற பெண்ணைக் காதலிக்கிறார்.  திருமணமும் செய்துகொள்கிறார்.  கைக்காடி-என்ற நாடோடி பழங்குடியின சமூகம்- மஹர்களை எப்படி பார்த்தது, எப்படி நடத்தியது என்பதையும் சாஷியை திருமணம் செய்துகொண்டதற்காக-தனது உறவினர்களும், சாதிப்பஞ்சாயத்தும், தன்னையும் சாஷியையும் எப்படி நடத்தியது என்பதையும் அவரே சொல்கிறார்:
                மகனே... நல்லா ஞாபகம் வச்சுக்க.  சாதிய காப்பாத்துறதுக்காக, ஒருத்தன் மண்ணக்கூடத் திங்கலாம்.  சாதியில்லாம மோட்சம் கிடையாது.5  (ப.221) என்றும், இப்ப எங்கள சாதியிலிருந்து ஒதுக்கி வைப்பாங்க... நாங்க இனிமே எப்படிப் பொழைக்க முடியும்?  சாதி சனங்க எல்லாரும் எங்க வாயீல பீயத் திணிக்கும்போது நான் என்னா பேச முடியும்?6 (ப.245) என்றும், நாங்க போறம்.  நீ எங்க ஊருக்கு வரவும் வாணாம்.  எங்க மூஞ்சியில முழிக்கவும் வாணாம்.  நான் செத்தாலும் வரவும் வாணாம்.  நாஞ் செத்தாலும் நீ எம் பொணத்த தொடவே முடியாது.  உனக்கும் எனக்கும் உறவு அத்துப்போச்சி.  என்னப் பொருத்தவர நீ பொறக்கவே இல்ல.7 (ப.247) என்றும் லஷ்மண் மானேவின் அப்பா கடுமையாகப் பேசுகிறார்.
அவ கர்ப்பமா இருக்காளா? என்று ரகசியமாக அப்பா என்னிடம் கேட்டார்.  நான் ஆமாம் என்று சொன்னவுடன் அவருடைய முகம் வெளிறிப் போனது.8  (ப.227) என்று தனது அப்பாவின் மனநிலை குறித்து மானே எழுதுகிறார்.
 எங்கள பாழாக்கிப் போட்டியே... அட நாயே... உன்னப் பெத்ததுக்கு ஒரு கல்லப் பெத்திருந்தாக்கூட பரவாயில்லியே... நீ பொறந்தப்பவே செத்திருக்கக் கூடாதா?  எங்களுக்கு உன்னால ஒரே அவமானந்தான்... சாதிசனங்க முன்னால நீ எங்க மூஞ்சியில கரியப்பூசிட்டியே.  நீ செத்து சுடுகாட்டுக்குப் போவ மாட்டியா?9 (ப.243) என்றும், அவ மஹர் இல்லங்கிறதுக்கு என்ன   அத்தாட்சி?10 (ப.244) என்றும், அட நாசமாப்போனவளே, எங்க குடும்பத்த ரெண்டாக்கிட்டியே.  மனுசத்தனமே இல்லாம நடத்துகிட்ட நீ இப்ப எங்களுக்கு டீ போடுறியா?  எதிரிங்க வூட்டுலயாவது டீக்குடிச்சாலும் குடிப்பமேத்தவிர, ஒம் பாழாப்போன கையிலிருந்து வாங்கிக் குடிக்க மாட்டம்...எங்க வேணுமின்னாலும்போயி பிச்ச எடுத்து வயித்த நெரப்புவோமேத்தவிர உன்னோட வூட்டுல  ஒரு சொம்புத் தண்ணீ குடிக்க மாட்டம்.11  (ப.244) என்றும் மானேவின் அம்மா சாஷு-யிடம் வெறித்தனமாக சண்டை பிடிக்கிறாள்.
       ஒனக்கு சாதி வேண்டியதில்ல.  ஆனா நாங்க என்ன பண்ணுவம்?  ஒனக்குப் பொறக்கிறப் பசங்க பெரிய ஆளாயிட்டா அவுங்களுக்கு யார் பொண்ணு தருவா?  நீ செத்தா எழவுக்கு யார் வருவாங்க?  ஒங்கப்பன் செத்தா பொணத்த யார் தூக்குவாங்க?... உஞ்சொந்த சனங்களுக்கே  நீ எதிரி ஆயிட்டியே... எங்க தலமுறையயே நாசம் பண்ணிட்டியே.12 (ப.245) என்று மானேவின் தாத்தா பேசுகிறார். பிறக்கப்போகிற குழந்தைகளுக்காக அவர் கவலைப்படுகிறார்.
       இவள இவங்கம்மா பெத்தபோது நீ அவ கால் மாட்டுல நின்னுக்கிட்டிருந்தியா?  அவ மராத்திக்காரிதான்ங்கிறதுக்கு என்ன அத்தாட்சி?... அவ பாப்பாத்தியாவே இருந்தாலும் அவளுக்கு நம்ப சாதியில எடமில்லெ.  அவ மஹராவோ, மாங்காவோதான் இருக்க வேணும் 13 (ப.275) என்றும், பந்தயம் வச்சுக்கலாமா?  அவ இவனோட சாமானப் பாத்துத்தான் இவனோட வந்திட்டா.  அவ வேற எதுக்கு வந்திருக்கா?... அவ கீழ்ச்சாதிக்காரியாத்தான் இருக்க வேணும்.  அதனாலதான் அவ  உங்கூட வந்திட்டா.  மேல்ச்சாதிக்கார புள்ளைங்க கீழ்ச்சாதிக்காரப் பசங்களக் கல்யாணம் பண்ணுவாங்கன்னு நெனச்சிக்கிட்டியா?14  (ப.247)  என்றும் பஞ்சாயத்தார்கள் தங்களுடைய கைக்காடி சாதிக் குறித்தப் பெருமையைப் பேசுகிறார்கள்.
       சாஷி-என்ற மஹர் இனத்துப் பெண்ணை மணந்துகொண்டதற்காகத்தான் இவ்வளவும் பேசப்பட்டது.  லஷ்மண் மானே-தன் உறவினர்களிடம் என் மனைவி ஒரு மராத்திக்காரிதான்என்று வாதிட்டாலும், மராத்திக்காரி என்றாலாவது ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் அவர் அப்படி சொல்கிறார்.  ஆனால் மானேவின் உறவினர்களோ, சாதிக்காரர்களோ சாஷியை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனால் சாஷி-ஒரு மஹர் அல்லது மாங்-இன பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.  இதை உங்கள் இருவரில் ஒருவர் தீண்டத்தகாதவராக இருந்தால் மட்டுமே எங்களால் உதவ முடியும்15 (ப.252) என்று கலப்புத் திருமண நிதிஉதவி அளிக்கும் அதிகாரி சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. சாஷியை மஹர்-அல்லது மாங்-இனப்பெண் என்று மொத்த நூலிலும் அவர் ஒரு இடத்தில்கூட சொல்லவே இல்லை.  ஆனால் சாஷியை திருமணம் செய்துகொண்டதால் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார்கள்.16 (ப.258) என்று எழுதுகிறார். அது மட்டுமல்ல ஒரு மஹர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு, இறந்து போன விலங்குகளின் தோலை உரிக்கின்ற தொழிலாவது இருக்கிறது.  நல்ல முறையில் இல்லாவிட்டாலும் அவன் ஒதுங்குவதற்கு ஒரு கூரை இருக்கிறது.17 (ப.252) என்று எழுதி தன்னுடைய சாதிக்கு அதுவுமில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறார்.  தனது சாதி மஹர்களை எப்படி நடத்தியது என்பதை தாம் இடம் பெயரும்போது எதிரே மஹர் சாதிக்காரர் யாராவது வந்துவிடக் கூடாது என்பதில் கைக்காடிகள் கவனமாக இருக்கின்றனர்.18 (35) என்று எழுதியுள்ளார்.  என்னுடைய சாதி பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்தேன்19. (ப.210) என்று எழுதுகிற மானே-வுக்குத் தெரியும்-தான் ஒரு தீண்டப்படாத சாதியை சேர்ந்தவன் அல்ல என்பது.
       லஷ்மண் மானேவின் குடும்பத்தார், பஞ்சாயத்தார், பேசும் பேச்சுகளின் வழியாக, செய்யும் செயல்பாடுகளின் வழியாக, சாஷிஅவமானப்பட்டு சந்திக்கும் கொடூரங்களின் வழியே-உபாரா-ஒரு தலித் தன்வரலாற்றுக் கதை அல்ல என்று நிரூபணமாகிறது. மஹர்கள் எதிரில் வருவதைக்கூட அபசகுனமாக பார்க்கிற மனோபாவம் கொண்டதாக இருக்கிறது கைக்காடி சமூகம்.  உபாரா-மானே படிப்பதற்காகப் பட்டக்கஷ்டங்கள் முதல் பகுதியாகவும், இரண்டாவது பகுதி-அவர் சாஷியை திருமணம் செய்துகொண்டதால்-ஏற்பட்ட பிரச்சனைகளையும் பேசுகிறது.  இது தீண்டத்தகாதவர்களின் கதையோ, தீண்டதகாதவர்களுக்கு ஆதரவான கதையோ அல்ல.  ஒரு வகையில் தீண்டத்தகாதவர்களை இழிவுப்படுத்திய கதை.
       லஷ்மண் மானே எழுதிய உபாராவில்தான் இந்த நிலை இருக்கிறது என்றில்லை.  ராஜஸ்தானிலிருந்து மேற்கு மகாராஷ்டிரத்தில் குடியேறிய நாடோடி பழங்குடியின சமூகமான ‘குலாத்தி‘ மஹர்களை இன்னும் மோசமாகத்தான் நடத்தியுள்ளது.
                குலாத்தி சமூகத்தினர் ஆரம்ப காலக்கட்டத்தில் கழைக்கூத்தாடிகளாக இருந்தனர்.  பிறகு பொது வெளியில் நடனமாடினர்.  படிப்படியாக நடனமுறை மாறி பொதுமேடைகளில் ஆடுவது, பாடுவது, இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பேசுவது, ஆண்களை உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது.  இதுதான் குலாத்தி சமூகத்தின் தொழில்.  இந்த ஆட்டத்திற்கு லாவணி ஆட்டம், தமாஷா, ஜல்ஜா ஆட்டம் என்றும் பெயர்.  ஒரு கட்டத்தில் தமாஷா ஆட்டக்காரிகளின் மீது இருந்த கவர்ச்சியை சினிமாவும், தொலைக்காட்சியும் கவர்ந்துவிட, தமாஷா ஆட்டக்காரிகள் படிப்படியாக பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர்.  லாவணி ஆட்டத்திற்காக பெண்களுக்கு நடனம் மற்றும் பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.  தமாஷா ஆட்டத்தில் மட்டுமல்ல பாலியல் தொழிலிலும், சகோதரன், தந்தையே அவர்களை ஈடுபடுத்துவார்கள்.  பலநேரங்களில் இப்பெண்கள் குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படுவார்கள்.  தமாஷா ஆட்டக்காரிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை யார்  என்பது தெரியாததால் – தாயின் பெயரையே குழந்தைகளுக்கு பயன்படுத்துவார்கள்.  இது குலாத்தி சமூகத்தின் நடைமுறை. மரபு. ஒரு தமாஷா ஆட்டக்காரிக்கு முறையற்ற உறவில் பிறந்தவர்தான் Dr.கிஷோர் சாந்தாபாய் காலே.  அவர் 1994-ல் எழுதியதுதான் குலாத்தி (தந்தையற்றவன்).
       நூறு, ஆயிரம்பேர் கூடியிருக்கக்கூடிய பொது வெளியில் கிட்டத்தட்ட நிர்வாண நடனம் ஆடி, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி, ஆண்களை குஷிப்படுத்தி, பல ஆண்களோடு உறவுகொண்டு, ஒரு கட்டத்தில் நானா என்ற (நெசவாளர்) இடைநிலை சாதி ஆணுடன் சேர்ந்து வாழ்ந்த சாந்தாபாய்-தன் மகன் கிஷோர்-ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க மறுக்கிறாள்.  ஒரு தமாஷா ஆட்டக்காரியைவிடவும்-மஹர் இனத்துப்பெண்-கேவலமானவளாகப் பார்க்கப்படுகிறாள்.
       தன் மகனுக்கு இவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையை அவன் மணக்க மறுத்ததால், ஏற்கெனவே அவள் அவன் மீது கோபமாக இருந்தாள்.  ஏனென்றால் அவள் பார்த்த பெண் (குலாத்தி) வரதட்சணையாக ஐந்து லட்சம் ரூபாய் கொண்டு வருவதாக இருந்தது.  அதற்குப் பதிலாக கிஷோர் ஒரு தலித் எழுத்தாளரின் மகள் சங்கீதாவை மணம் செய்துகொண்டார்... இதனால் இவரின் தாயார் இவருடன் தன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டார்20 என்றும் சக்தி வாய்ந்த பஞ்சாயத்தார் அவரை சாதியிலிருந்து விலக்கி வைத்தார்கள்21 என்றும் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. தந்தையால், சகோதரனால், சொந்தசாதியால் நிர்வாண நடனம் ஆடவிடுகிற, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிற, பலமுறை பணத்திற்காக விற்கப்படுகிற பெண்களைக் காட்டிலும் மஹர் இனப்பெண் கேவலமானவள் என்று குலாத்தி சமூகம் சொல்கிறது.
       குலாத்தி இனப் பெண் ஒரு மஹர் ஆணுடன் ஓடிவிட்டால் என்ன நிகழும் என்பதற்கு குஷும் என்ற பெண்ணின் கதையை காலே சொல்கிறார். குஷும் அழகான பெண்ணாகவும், குலாத்திகளிலேயே சிறந்த நடனக்காரியாகவும் இருந்தவள்.  அவள் நடனம் மிகவும் பிரபலமானது.  ஏராளமாக பணம் சம்பாதித்தாள்.  என் அம்மாவைவிட ஓரிராண்டு மூத்தவள்.  நெர்லா குலாத்திகள் சிறந்த நடனக்காரிகள் என்பதை என் அம்மாவும் இவளும் நிலைநாட்டியிருந்தார்கள்.  குஷும் ஒருமுறை பம்பாய் சென்று, லால்பாக்கிலிருந்த அனுமான் அரங்கில் தன் நிகழ்ச்சியை நடத்தியிருந்தாள்.  இந்த நடனத்தைப் பார்த்து மிகவும் கவரப்பட்ட பம்பாய் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் நடிக்க அவளுக்கு வாய்ப்புத் தந்தார்கள் தன் வெற்றியின் உச்சத்திலிருந்தபோது, ஒருநாள் தன் குடும்பத்தை உதறிவிட்டு கும்ளே என்பவருடன் ஓடிப்போனாள்.  ஓடிப்போனது மட்டுமல்ல, மிகத்தாழ்த்தப்பட்ட மஹர்சாதிக்காரனோடு ஓடிப்போயிருந்தாள்.  என் அம்மாவைப்போலவே குஷுமும், தன் குடும்பத்தின் கோபத்திற்கும், வசைகளுக்கும் ஆளானாள்.  அவள் மகன் சஞ்சயை அவளிடமிருந்து பறித்துவிட்டார்கள்.  குலாத்தி சாதியிலிருந்து அவள் விலக்கி வைக்கப்பட்டாள்.  அவளை வீட்டிற்குள் அனுமதித்தால், அவள் குடும்பத்தையும் சாதியிலிருந்து விலக்குவதாக எச்சரித்தார்கள்.  குலாத்திப்பெண் மஹரை மணந்து கொள்வது மாபெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. 22 (ப.74) 
       மஹருடன் ஓடிப்போவதற்கு முன்பு குஷும்-க்கு பிறந்த சஞ்சய் என்ற மகனை ஹரினானா – என்ற குலாத்தி ஆண் குஷுமிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார். அதற்காக அவரை சாதியிலிருந்து விலக்கி வைக்கிறார்கள்.
       உன்னோட மகன் ஒரு குலாத்தி பையனை தூக்கிட்டு போயி, மஹரோட வீட்டுல விட்டுட்டான்.  அதனால நாங்க அவனை சாதியைவிட்டு விலக்கிட்டோம்.  உன்னோட மகனை எப்புவுமே ஊட்டுக்குள்ளவிடக் கூடாது.  இதுக்கு நீ ஒத்துக்கிறயா. 23 (ப.75)
       ஹரினானாவின் அப்பா அமைதியாக ஆமாம் என தலையாட்டினார்.  தன் சொந்தக் குடும்பத்திலிருந்து, தன் பெற்றோர், மனைவி, சகோதர, சகோதரிகளிடமிருந்து ஹரினானா பிரிக்கப்பட்டார்.  திருடன் என அறிவிக்கப்பட்டார்.  தாயையும், மகனையும் ஒன்று சேர்த்ததுதான் அவர் செய்த குற்றம்.... ஹரினானாவால் பல ஆண்டுகள்வரை தன் குடும்பத்தைச் சந்திக்க முடியவில்லை.  அவளுடைய இளம் மனைவி, அவன் இழப்பை மௌனமாகத் தாங்கிக் கொண்டாள். 24 (ப.75)
       குஷும், பம்பாயிலிருந்து லாத்தூருக்குக் குடிபெயர்ந்தாள்.  கும்ளே மூலம் அவளுக்கு இரு மகள்கள்.  குலாத்திகளைப் பொருத்தவரையிலும், அவர்கள் மஹர்சாதிக்காரர்கள்.  ஆகவே, அவர்களை முற்றாக விலக்கி வைத்திருந்தார்கள்... இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொந்த ஊருக்கு அவள் வந்து சேர்ந்தாள்.  ஆனால், காலம் எதையும் மாற்றிவிடவில்லை.  நெர்லாவின் குலாத்திகள் அவளை மன்னிக்கவே இல்லை.  பெரும்பாலானோர் அவளுடன் பேசவோ அல்லது அவளை தங்கள் வீட்டுக்கு அழைக்கவோ இல்லை.  தங்களை குலாத்திகளாக ஏற்றுக்கொள்ளும்படி பெரியவர்களிடம் அவள் மகள்கள் அழுது கெஞ்சினார்கள்.  ஆனால், பெரியவர்கள் சம்மதிக்கவில்லை.  கடைசியாக, அவர்கள் கனத்த மனத்தோடு நெர்லாவை விட்டுச்சென்றார்கள்.25 (ப.76) என்று மகருடன் ஓடிப்போன குஷும்-க்கும், அவளுடைய இரண்டு மகள்களுக்கும் நடந்த துயரத்தை காலே எழுதியுள்ளார். இதன் மூலம் குலாத்தி சமூகம் மஹர்களை மிகவும் கேவலமான முறையில் நடத்தியிருக்கிறது என்பதை அறிய முடியும். சட்ட ரீதியாகவும் குலாத்தி சமூகம் பிற்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறது. மருத்துவப்படிப்புக்கான இடம் பிற்பட்டோர் பட்டியலில்தான் காலேவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆகவே குலாத்தியும் தலித் தன்வரலாற்று கதை அல்ல.
       கைக்காடி, குலாத்தி சமூகங்கள் மஹர்களை எப்படி நடத்தியது என்பதோடு மற்றொரு நாடோடிப் பழங்குடியின சமூகமான உச்சாலியா- மஹர்களை எப்படி நடத்தியது என்பதை லஷ்மண் கெய்க்வாட் எழுதியுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பழங்குடியின சமூகங்களில் ஒன்று பத்ரூத்.  அதில் ஒரு உப பிரிவு உச்சாலியா.  ஆங்கிலேயர்கள் இவர்களை குற்றப்பரம்பரையினர் பட்டியலில் வைத்திருந்தனர்.  உச்சாலியா சமூகத்தினரின் முக்கியமான தொழில்-திருட்டு.  இந்தியா முழுவதும் இச்சமூகத்தினர் சாந்த் மூர்ச்சாஎன்று அழைக்கப்படுகின்றனர்.  சாந்த்என்றால் சந்தை.  மூர்ச்சாஎன்றால் திருடன்.  அதாவது உச்சாலியாஎன்றால் சந்தையில் திருடுபவன் என்று பொருள்.  ஜேப்படித் திருட்டு, சாமான்களைத் திருடுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், பேசிக்கொண்டே ஏமாற்றித் திருடுவது, போலி தங்க நகைகளைக் காட்டி உண்மையான தங்க நகைகளைப் பறிப்பது.  ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திறமையாகத் திருடுவார்கள்.  நல்ல தேர்ச்சிப்பெற்ற திருக்காட்டுக்காரியாக இருந்தால் அந்தப் பெண்ணை மணப்பதற்கு போட்டியிருக்கும்.  உச்சாலியா சாதியில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அது பிறக்கும்போதே-குற்றப் பரம்பரையினர் என்ற முத்திரையோடுதான் பிறக்கும்.  இப்படியான உச்சாலியா நாடோடிப் பழங்குடியின மக்கள் மஹர்களை எப்படி நடத்தினார்கள்?
       பாவானி அம்மன் வழிபாட்டின்போது கெடா வெட்டப்பட்டது.  மாமிசத்திற்காகப் பல சாதியினரும் கூடைகளை வைத்துள்ளனர்.  மாங் சாதிக்காரர்களின் கூடைகள் மற்ற கூடைகள் இருந்த இடத்திற்குச் சற்று தூரத்தில் வைக்கப்பட்டிருந்தன.  அந்தக் கூடைகளிலும் அம்மா மாமிசத்தை வைத்தாள்.  ஆனால் கூடையின் மீது கை பட்டுவிடாதவாறு எச்சரிக்கையாக இருந்தாள்.26 (ப.49) என்றும், மஹர்’, ‘மாங்ஆகிய சாதிக்காரர்களுக்கு பாட்டில்களும் தேஷ் முக்குகளும் தனியாக டம்பளர்களும், தட்டுகளும் வைத்திருப்பது மாதிரி நாங்களும் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்காக உணவும், தண்ணீரும் கொடுப்பதற்காக தனியாகத் தட்டுகளை வைத்திருந்தோம்.27 (ப.81) என்று எழுதியதின் வழியே உச்சாலியா சமூகம் மஹர்களை நடத்தியவிதம் தெளிவாகிறது.
       பிற்பட்டவர்களுக்கான பால் பண்ணை ஒன்றை அண்ணி நடத்தினார்28 (ப.219).  என்பதின் மூலம் உச்சாலியா – தலித்தன்வரலாற்றுக் கதை அல்ல என்பது நிரூபணமாகிறது.  ஆனால் உச்சாலியாவை தமிழில் மொழிபெயர்த்த எஸ்.பாலச்சந்திரன் தமிழ் இலக்கியச் சூழலில் உச்சாலியாவை வாசிக்கும் நமக்கு இவ்விசயம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.  இக்காரணத்தால்தான் உச்சாலியாதலித் படைப்பு என்ற மதிப்பையும் பெறுகிறது29 என்று முன்னுரையில் சொல்கிறார்.  இவ்விசயம் மிகவும் கவனத்திற்குரியது என்று எழுதியுள்ளார்.  ஆனால் கவனத்திற்குரிய விசயம் எது என்று எழுதவில்லை.  பதிப்பாளர் உரையில் மராத்தி தலித் படைப்புகளாக லட்சுமண் மானேவின்-உபாரா, லட்சமண் கெய்க்வாட்டின் உச்சாலியா, கிஷோர் சாந்தபாய் காலேவின் குலாத்தி-ஆகிய நூல்கள் இப்பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு முன்னுதாரணங்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை30 என்று எழுதப்பட்டுள்ளது.  இப்பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு முன்னுதாரணங்களாக விளங்கும்’- என்று எழுதிய பதிப்பாளர்-என்ன பிரச்சனைகள் என்று எழுதவில்லை.
சாதிய அடுக்கில் மராத்திகளுக்கான இடம்?
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய நாடோடி பழங்குடியின சமூகத்தினர் மஹர், மாங் – போன்ற தீண்டாமைக்குட்படுத்தப்பட்ட சாதிகளை மட்டுமல்ல, மராத்திக்காரர்களையும் தீண்டத்தகாத சாதியாகவே பார்க்கிறது. நடத்துகிறது. காசிபாய் என்கிற பெண்ணுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அந்தநேரத்தில் காசிபாயின் தாய்வழி பாட்டி எப்போதோ ஒரு மராத்திக்காரனுடன் ஓடிப்போய்விட்டிருந்த கதையை பேசுகிறார்கள். மராத்திக்காரனுக்கு பிறந்த காசிபாயின் தாய் தீண்டதகாதவள். ஆகவே இந்தத் திருமணத்தை நடத்தக் கூடாது என்று பஞ்சாயத்தார் முடிவெடுக்கின்றனர்.
பெண்ணோட அம்மா கறை படிஞ்சவ. நம்ப பஞ்சாயத்தில வச்சி அவ இன்னும் தீட்ட தொலைக்கல31 (ப.160) என்றும், காசிபாய் அவளோட பாட்டி மக வயத்திலதானே பொறந்தா? அதனால அவப்பொறப்பே கறைப்படிஞ்சதுதானே காசிபாய் கறைபடியாதவள் என்றும், (ஏனென்றால் தாய் ஒரு உச்சாலியா சாதிக்காரனுக்குப் பிறந்தவள்) தன்னுடைய அம்மா வீட்டைப் பொருத்தவரையில் சிறிது கறை படிந்தவள் என்றும் பஞ்சாயத்து முடிவு செய்தது32 (ப.83) என்றும் உச்சாலியா சாதிப்பஞ்சாயத்தில் நடந்த நிகழ்வுகளை லஷ்மண் கெய்க்வாட் எழுதுகிறார்.
என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பஞ்சாயத்து ஆராய்கிறது. மணப்பெண்ணின் தாய்வழிப்பாட்டி ஒரு மராத்திக்காரனோடு வாழ்ந்துவந்தாள். ஆகவே மணப்பெண்ணின் தாய் மராத்திக்காரனுக்குப் பிறந்தவள். அவள் எங்கள் சாதியைச் சேர்ந்த ஒருவனை திருமணம் செய்திருந்தாலும், அவள் மீது ஏற்கெனவே படிந்திருந்த கறையை அவள் இன்னும் கழுவியிருக்கவில்லை. முகூர்த்த நேரம் கடந்துவிட்டது. எனினும் அவர்கள் திருமணத்தை நடத்தவிடவில்லை... சிலர் அவளை மலம் தின்ன வைக்கலாம் என்றார்கள். சிலர் அவளுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்றார்கள். மணப்பெண்ணின் தாயின் தலையை மொட்டை அடித்துவிடலாம் என்று ஒருவர் எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்க யோசனையைக் கூறினார். பஞ்சாயத்தார்கள் இதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த பெண்ணின் தலையை மொட்டை அடிப்பது என்று ஏகமனதாக பஞ்சாயத்து முடிவு செய்தது... மணப்பெண்ணின் தாய்க்கு மொட்டை அடித்தபிறகுதான் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது மொட்டை அடித்த தலையை மறைப்பதற்காக ஓயாமல் மணப்பெண்ணின் அம்மா போராடிக்கொண்டேயிருந்தாள்33 (ப.161) என்று தன் சாதிப் பஞ்சாயத்தில் நடந்த கொடூரம் குறித்து எழுதுகிறார். உச்சாலியா சமூகத்தினர் மஹர், மாங், சுஹ்ரா சாதிகளை மட்டுமல்ல மராத்தியர்களையும் தீண்டத்தகாத சாதியாகத்தான் நடத்தியுள்ளது என்பதை காசிபாயின தாய்க்கு நடந்த கொடூரத்தின் மூலம் அறிகிறோம்.
       கீழ்ச்சாதிக்காரர்களை விலைக்கு வாங்கி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துகிற பழக்கமும் உச்சாலியா சமூகத்தினரிடம் இருந்தது என்பதை வண்ணார் சாதியைச் சேர்ந்த நாரய்யா –வின் இரண்டு மகன்களை விலைக்கு வாங்கிய கதையை கெய்க்வாட் சொல்கிறார். “அந்த வண்ணானின் மூத்த மகன் தகதய்யாவை ஹால்காராவின் கோபால் நூற்றைம்பது ரூபாய்க்கு வாங்கினான். திருடும் தொழிலுக்கு அவன் விரைவிலேயே பயன்படுவான் என்பது அவனுடைய எண்ணம். இளையவன் நாரய்யாவை எங்கள் கும்பலைச் சேர்ந்த துளசிராம் நூறு ரூபாய்க்கு வாங்கினான்.“34 (ப.35).
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று தன்வரலாற்றுக் கதைகளும், மஹர், மாங்-சமூகத்தினரை எவ்வளவு இழிவுப்படுத்தியிருக்கிறது பாருங்கள்.  இழிவுப்படுத்தியதற்காக-அதை தலித் சுயசரிதை என்று கொணடாட வேண்டும், தலித் இலக்கியத்திற்கு, எழுச்சிக்கு முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று விடியல் பதிப்பகம் சொல்கிறது. மொழிபெயர்ப்பாளர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். கேவலப்படுத்தியது எப்படி பெருமைக்குரியதாக, ஆக்கச் சக்தியாக இருக்க முடியும்?  இந்த மூன்று நூல்களையும், தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணங்களாக கொள்ள வேண்டும் என்று சொல்வது-என்ன அரசியல்? கைக்காடி, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று நாடோடி பழங்குடியின மக்களை-பொது சமூகம் தீண்டதகாதவர்களாக ஒரு இடத்திலும் நடத்தவில்லை.  அப்படிப் பார்க்கவுமில்லை.  சாதிசார்ந்த இழிவுகளை இவர்கள் எங்குமே சந்திக்கவில்லை.  இந்த மூன்று சமூகத்தினரும் ஒரு இடத்தில்கூட தங்களை தீண்டதகாதவர்களாக உணரவில்லை.  இந்த மூன்று நூல்களிலும் விவரிக்கப்படுகிற வாழ்க்கை 1970-1994-காலக்கட்டம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஒரு மஹர் சாதிப்பெண் சந்திக்கும் தீண்டாமையின் கொடுமையை பேபி காம்ப்ளி எழுதுவதையும் பார்க்கவேண்டும். மேல் சாதியினர் பயன்படுத்தும் ஒழுங்கான பாதையில் அவர்கள் போகக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் யாராவது அந்தப் பாதையில் எதிரில் நடந்து வந்தார்களென்றால் மஹர் சாதியினர் பாதையிலிருந்து இறங்கி முட்கள் நிறைந்த புதர்களுக்கிடையில் நடந்து செல்ல வேண்டும்.  மேலும், எதிரில் ஏதாவது மேல் சாதி ஆண்கள் வந்தார்கள் என்றால் அப்பெண்கள் புடவையால் உடல் முழுவதையும் மூடியபடி, அருகில் வந்தவுடன் இந்த ஏழை மஹர் சாதிப் பெண் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகின்றேன் முதலாளி என்று சொல்ல வேண்டும்.35 (ப.82) இந்தநிலை எந்த நாடோடிப் பழங்குடியினருக்கு ஏற்பட்டது?
       கைக்காடி, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று நாடோடி பழங்குடியின சமூகம் – எப்போதும் தங்களுடைய – சாதியப் பெருமையை, சாதிய ஒழுக்கத்தை மரபை முழுமையாக கடைப்பிடித்தே வந்திருக்கிறது. லட்சுமண் மானே, கிஷோர், லட்சுமண் கெய்க்வாட் மூன்றுபேருமே படித்தவர்கள். படிக்கும்போது பள்ளியிலோ, கல்லூரியிலோ, விடுதியிலோ, பொதுவெளியிலோ, வேலை பார்த்த இடங்களிலோ தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டோம், தீண்டாமையினால் ஒதுக்கிவைக்கப்பட்டோம், தீண்டாமையின் கொடுமையை அனுபவித்தோம் என்று எந்த இடத்திலும் எழுதவில்லை. மாறாக செய்கிற தொழிலின் காரணமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பினால் ஏற்பட்ட அவமானத்தை, இழிவை, ஒதுக்குதலை, புறக்கணித்தலை இவர்கள் ஒருபோதும் அனுபவித்ததே இல்லை.
 நாடோடி பழங்குடியின சமூகம் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படவே இல்லை. கைக்காடி சமூகம் கூடை, முறம் செய்து ஊரில்தான் விற்கவேண்டியிருக்கிறது. லாவணி ஆட்டத்தை குலாத்தி சமூகம் பொதுவெளியில்தான் நடத்தவேண்டும். அதேமாதிரி திருட்டுத்தொழிலைச் செய்கிற உச்சாலியா சமூகத்தினர் மக்கள்கூடும் – சந்தையில்தான் செய்திருக்கிறார்கள். ஊரின் பொது இடங்களில் நடப்பதற்கு இவர்களுக்கு எந்த தடையும் இல்லை. இவர்களைப் பார்த்து மேங்குலத்தவர்கள் ஒரு போதும் தீட்டுப்பட்டுவிடும் என்று ஒதுங்கிச் சென்றதே இல்லை. பழைய கூடை, முறங்களை சீர்செய்து கொடுத்துவிட்டு ரொட்டியும், பழைய குழம்பையும் ஊர்ப்பஞ்சாயத்து தலைவர் வீட்டிலிருந்து என் அம்மா வாங்கி வந்தாள் என்று உபாராவில் லட்சுமண் மானே எழுதுவதிலிருந்து தெரிகிறது. பொது வெளியில் இயங்குவதற்கு இவர்களுக்கு எப்போதும் எந்தத்தடையும் இருந்ததில்லை. இந்த மூன்று நூல்களிலும் எங்குமே தலித் என்றோ, தீண்டதகாதவர்கள் என்றோ குறிப்பிடப்படவே இல்லை. ஆனால் தங்களுடைய மக்கள் தீண்டாமையை எவ்வாறு கடைப்பிடித்து வந்தனர் என்பதையும் எந்தக் கலப்பு இருந்தாலும் – பெண் கலப்பு மட்டும் கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தனர் என்பதையும் தெளிவாக எழுதியுள்ளனர்.  அப்படியிருக்கும் போது, இந்நூல்களை பதிப்பகங்களும், ஊடகங்களும், குறிப்பாக தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் தலித் படைப்புகளாகவும்,, தலித்படைப்புகளுக்கான முன்மாதிரிகளாகவும் எப்படி முன்னிறுத்தின? ‘It as a remarkable of a dalit autobiography’36 என்று அர்ஜுன் டாங்களே உபாராவிற்கு கூறியிருப்பதும், ‘This book also brings in the problems of faced by the dalits in india’37 என்று உச்சாலியாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பதும் வினோதமானது. உச்சாலியா தீண்டாமையைக் கடைப்பிடிக்கிற சாதியாக இருக்கும்போது அது எப்படி தலித் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு சிறந்த நூலாக இருக்க முடியும். தலித், நாடோடி பழங்குடியின தன்வரலாற்றுக் கதைகளை வெளியிடுகிற பதிப்பகங்கள், அவற்றை பிறமொழிகளில் மொழிபெயர்க்கிறவர்கள் பெரும் அரசியல் செய்கிறார்கள். இந்த அரசியல் முற்றிலும் வியாபாரத்தை முதன்மையாகக் கொண்டது. தற்காலத்தில் தலித் படைப்புகள், நாடோடிப்பழங்குடியினரின் கதைகள் அமோகமாக விற்பனையாகக்கூடியப் பொருளாக இருக்கிறது. அதனால்தான் இந்த அரசியல். விற்பனைக்காகவே பலபடைப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை “I am aware of the translation market and how dalit literature has now become marketable.”38 என்று பாமாவும் ஒப்புக்கொள்கிறார்.
நாடோடிப்பழங்குடியினரின் தன்வரலாற்றுக் கதைகளுக்கும், மதம்மாறிய கிருத்துவர்களின் தன்வரலாற்றுக் கதைகளுக்கும், தீண்டத்தகாதவர்களின் தன்வரலாற்றுக் கதைகளுக்கும் உள்ள  பெரும்வேறுபாட்டை பேபி காம்ப்ளி, சரண்குமார் லிம்பாலே ஆகியோரின் தன்வரலாற்றுக் கதைகளிலிருந்து அறியமுடியும்.  
கடையின் வாசலில், கடைக்காரனைவிட்டு மிகவும் விலகி நின்று, தன் முந்தானையை எடுத்துத் தன் தலையைச்சுற்றி இரண்டு கைகளால் விரித்துப்பிடித்துப் பணிவும் மரியாதையும் கலந்த குரலில், மிகுந்த அடக்கத்துடன் தனக்கு வேண்டிய பொருட்களைத் தரும்படி கேட்பாள், முதலாளி, தயவு செய்து இந்த இழிவான மஹர் இனப் பெண்ணிற்கு ஒரு பைசாவிற்கு சிகைக்காயும் அரை மூடித் தேங்காயும் தருவீர்களா? அந்தக் கடைக்காரரின் குழந்தைகள் காலைக் கடனைக் கழிக்க வரிசையாக முற்றத்திற்கு வருவார்கள்.  கடைக்காரர் அந்த கபடமற்ற குழந்தைகளுக்கு சமூக நடத்தையைக் கற்றுக் கொடுப்பார்.  டேய், சாபு அந்த அழுக்கான மஹர் பொம்பளை அங்கு நின்றுகொண்டிருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா?  அவளைத் தொட்டு விடாதே. தள்ளிப் போ’, உடனே நம் மஹர் இனப் பெண், தன் கந்தல் உடையை அந்தச் சிறுவன் மீதுபட்டு அவனை தீட்டுப்படுத்திவிடாமல் ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு, பார்த்துப் போங்க சின்ன முதலாளி, அந்தப் பக்கம் போங்க.  என்னருகில் வராதீர்கள்.  என்னைத் தொட்டுவிட்டீர்கள் என்றால் தீட்டுப்பட்டுவிடுவீர்கள்கடைக்காரர் வெளியில் வந்து அவளைவிட்டு விலகி நின்று அவள் கேட்ட பொருட்களைத் தூக்கி வீசுவார்.  அவற்றை அவள் தன் முந்தானையை விரித்துப் பிடித்துக்கொள்வாள்.  அவள் மிகவும் பணிவுடன் தன் கையிலுள்ள காசை வாயிற்படியில் வைப்பாள்.  அந்தக் காசு அந்த முதலாளியை தீட்டுப் படுத்தாது.39 (ப.31,32) என்று பேபி காம்ப்ளி எழுதியுள்ளார்.
சரண்குமார் லிம்பாலே எழுதிய அனார்யா (நாதியற்றவன்)–வில் எங்கள் ஊரில் சிவராம் என்பவனுக்குச் சொந்தமான டீக்கடை ஒன்று இருந்தது. அங்கே மஹர்களுக்கும் மாங்குகளுக்கும் தனியாகக் குவளைகள் வைக்கப்பட்டிருந்தன... நாங்கள் சாலையில் நடந்து செல்லும்போது மேல் ஜாதிக்காரர்கள் யாராவது எதிரில் வந்தால் நாங்கள் அவர்களுக்கு வழிவிட்டு விலகிச்செல்ல வேண்டும்... நாங்கள் பிறப்பதற்கு முன்பே எங்கள் மீது ஜாதி திணிக்கப்பட்டுவிடுகிறது40 (ப.114) என்று எழுதியுள்ளார். ஆனால் கைக்காடி, உச்சாலியா, குலாத்தி சமூகத்துப் பெண்கள் தெருவில் நடப்பதற்கு எந்தத் தடையும் இல்லை, கடைகளில் பொருள்களை வாங்கும்போது ஒருபோதும் அவமானப்படுத்தப்படவில்லை என்பதையும் ஒப்பு நோக்க வேண்டும்.
        பிற்பட்டோர் இனத்தைச் சேர்ந்த நாடோடிப் பழங்குடியின மக்களின் தன்வரலாற்றுக் கதைகளை-தலித்தன்வரலாற்றுக் கதைகள் என்று வெளியிட்டதுப்போலவே, தன்வரலாற்று கதைகளை-நாவல் என்று வெளியிட்ட செயலும் தமிழில் நடந்துள்ளது. பாமாவின் கருக்கு (1992). ராஜ்கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரமும் (2002 தமிழினி பதிப்பகம்) காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் - தன்வரலாற்றுக் கதைகள்தான். சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்‘ (2012) ஆகிய நூல்களும் நாவல் கலையின் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை எளிய வாசகனால்கூட புரிந்துகொள்ள முடியும்.  மீறி இவைகள் நாவல்கள்தான் என்று சொன்னால்-தமிழ் வாசகர்ளின் தரம் குறித்த சந்தேகம் வருகிறது.   
மதம்மாறிய தலித் கிருத்துவர்கள் – யார்?
       கைக்காடி, உச்சாலியா, குலாத்தி ஆகிய நாடோடிப் பழங்குடியின சமூகமக்கள் எப்படி தீண்டாமையைக் கடைப்பிடித்தார்களோ, அதே மாதிரிதான் தலித் கிருத்துவர்கள், தலித்கள் மீது ஒரு வகையான தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள். 
மதம்மாறிய தலித் கிருத்துவர்கள் தாங்கள் தீண்டாமைக்குட்பட்ட இனம் அல்ல என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையினர் தங்களை உயர்ந்த குலமாகவே கருதுகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓயாமல் அந்த மனப்பான்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். தாங்கள் மேம்பட்டகுலம் என்று சொல்லிக்கொள்வதில்தான் அவர்களுக்கு பெருமிதம். கர்வம்.
 ‘In reality, there is no difference between Hindus and Christians in the way they treat dalits.’41 என்று பாமா கூறுகிறார்.  இந்நிலையில் கிருத்துவர்கள் (தலித்) எழுதுகிற படைப்புகள் மட்டும் எப்படி தலித் படைப்புகளாக இருக்க முடியும்?  நிஜத்தில்-நாடோடிப் பழங்குடியினர் எழுதிய தன்வரலாற்று கதைகளையும், தலித் கிருத்துவர்கள் எழுதிய நாவல்-தன்வரலாற்றுக் கதைகளையும்-கொண்டாடுவதின் வழியே-நிஜமாகத் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவர்களின் எழுத்தைப் புறக்கணிக்கிற செயல் நடந்துள்ளது.  இச்செயல் பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து செய்கிற கூட்டுச் செயலாக இருக்கிறது.  இதற்கு வெறும் லாப நோக்கம் மட்டும் காரணமாக இருக்க முடியாது. 
ஒவ்வொரு சாதியும் எப்படி தனக்குக்கீழ் அடுக்கிலுள்ள சாதிகளை தீண்டாமைக்குள்ளாகியது என்பதை உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று நூல்களின் மூலம் அறியமுடியும். அதே நேரத்தில் மஹர்களை இழிவுப்படுத்தியதில் இந்த மூன்று இனங்களும் ஒன்றாக இருந்தாலும் – இவர்கள் மஹர்களைவிட பொருளாதார ரீதியாக, கல்விரீதியாக மேம்பட்ட சமூகம் அல்ல. இச்சமூகங்களின் அவலம், துயரம், வேதனை, கண்ணீர், பொய் என்று சொல்ல முடியாது. இந்த மூன்று நூல்களையும் எழுதியவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்கள் அல்ல. ஆனால் தங்களுடைய சமூகம் எப்படித் தீண்டாமையை பிராமணிய இந்து மத நடைமுறைகளை வெறியோடு கடைப்பிடித்தார்கள் என்பதை பகட்டு இல்லாமல் சொன்னவர்கள். ஒருவகையில் இந்திய சாதியப் படிநிலைகளை புரிந்துகொள்ள உதவியவர்கள்.
முள் (2008 – முதல் பதிப்பு, ஆழி பதிப்பகம்) என்பது முத்து மீனாள் எழுதியது. (முத்துமீனாள் இடைநிலை சாதியைச் சார்ந்தவர். ) புத்தகத்தில் தன்வரலாற்றுக் கதைஎன்றோ, நாவல் என்றோ குறிப்பிடப்படவில்லை.  நான்கு பதிப்புகள் வந்துவிட்டன.  முள்’-ளிற்கு  இந்தியா டுடே இதழில் விமர்சனம் எழுதிய சுகுமாரன் முத்து மீனாளின் வாழ்க்கைக் கதையின் சில பகுதிகளைச் சொல்லும்  இந்நூல் சில காரணங்களால் முக்கியமானது.  முத்து மீனாளின் பிள்ளைப்பருவத்திலிருந்து தொடங்கி திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சொல்கிறது இந்த புத்தகம்44 என்று எழுதுகிறார்.  அதே நூலுக்கு தினமணி நாளிதழ் யாரும் அறியாத ஓர் உலகத்தை வாசகர் தெரிந்துகொள்வதற்கான பதிவு இந்நாவல்.  தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனி இடம்  இந்நூலுக்கு உண்டு45 என்று எழுதுகிறது.  ஒரே நூலுக்கு நாவல் என்றும், தன்வரலாற்றுக்கதை என்றும் எப்படி விமர்சனம் வர முடியும்?  மீறி வந்தாலும் நூலாசிரியரோ, பதிப்பகத்தாரோ இரண்டையும் எப்படி நூலில் சேர்த்தார்கள்? நூலாசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும்-‘முள்‘ நாவலா, தன்வரலாற்றுக் கதையா- என்று தெரியுமா?  தெரியாதா?  இந்நூல் பல கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். கல்லூரிகளில் இந்நூலை – நாவல் என்று பாடம் நடத்துவார்களா? தன்வரலாற்றுக் கதை என்று நடத்துவார்களா? கேள்வித்தாள் எப்படித் தயாரிப்பார்கள்?
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று நூல்களும் மூலத்திலும் மொழிபெயர்ப்புகளிலும் தன்வரலாற்று கதை-என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மூன்று நூல்களுக்கும் சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்த- கருப்புஎன்ற இலக்கியத் தொகுப்பு நூலில் விமர்சனம் எழுதிய அ.மார்க்ஸ் - ‘புதினம்என்றே எழுதியுள்ளார். ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி (2004)‘ நிச்சயம் நாவல் அல்ல. அது ஒரு வரலாற்று பதிவு. வீரப்பனைத் தேடிய கர்நாடக அதிரடி படையினர் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவு. நெஞ்சை பதறவைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. 2004ல் ‘வனம்‘ வெளியிட்ட ஐந்து பதிப்புகளிலும், 2009ல் வெளியிட்ட விடியல் பதிப்பகமும், 2013ல் வெளியிட்ட எதிர் வெளியீடும் – நாவல் என்றே வெளியிட்டுள்ளன. தன்வரலாற்றுக் கதைகளை நாவல் என்று வெளியிடுகிற எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் செய்ய விரும்பும் அரசியல் என்ன?
 ‘உண்மைக்கு முன்னும் பின்னும்‘ (2012 உயிர்மை பதிப்பகம்), என்பது சிவகாமி எழுதிய நாவல். இந்நூலை படிக்கிற சாதரண வாசகனுக்கும் இது நாவலல்ல. தன்வரலாற்றுக் கதைதான் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஒரு நூலை படிக்கும்போதே “இது அவரோட கதெதான். எனக்குத் தெரியும்“ என்று ஒரு வாசகன் சொல்வானானால் அது நாவலல்ல. தன்வரலாற்றுக் கதையை எழுதுவதற்கு -  எழுதபடிக்க தெரிந்தால் மட்டுமே போதும்.
கன்னட மொழியில் எழுதப்பட்ட ஊரும் சேரியும்‘ (1996) சித்தலிங்கையா, கவர்மண்ட் பிராமணன்‘ (1998) அரவிந்த மாளகத்தி, பசித்தவர்கள்‘ (1999) தேவனூரு மகாதேவ – ஆகிய நூல்கள் மிகவும் தெளிவாக தலித் தன்வரலாற்றுக் கதைகள் என்று வெளியிடப்பட்டுள்ளன. அதேமாதிரி இந்தி மொழியில் வெளியான பேபி ஹால்தார் எழுதிய விடியலை நோக்கி‘ (2007) என்ற நூலும் தன்வரலாற்றுக் கதை என்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மலையாள மொழியில்தான் அதிக அளவில் தன்வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. ஸீ.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு (2003), நளினி ஜமீலா, ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (2005) டி.இ.ஈச்சரவாரியார், நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சிகள் (2007) நாயர், திருடன் மணியன் பிள்ளை (2013) ஜி.ஆர்.இந்துகோபன், ஆமென் (2011) - சிஸ்டர் ஜெஸ்மி போன்ற தன்வரலாற்றுக் கதைகள் கேரளத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொண்டாடப்பட்டன. தற்காலத்தில் நாவல், கவிதை, சிறுகதைகள் எழுதுவதைவிட தன்வரலாற்றுக் கதைகளையே மலையாளிகள் அதிகம் எழுதுகின்றனர். இதனால் நாவல், சிறுகதைகள், கவிதை நூல்கள் அதிக கவனம் பெறாமல் போகின்றன. மலையாள மொழிகளில் எழுதப்படுகிற தன்வரலாற்றுக் கதைகள் நாவல் என்ற பெயரில் வெளியிடப்படுவதில்லை. மலையாள மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு தன்வரலாற்றுக் கதையும் சாதியை, சாதியப் பிரச்சினைகளைப் பேசுவது இல்லை. அதனால் கேரளத்தில் சாதிகள் இல்லை என்றோ, சாதிய இழிவுகள், கொடுமைகள் இல்லை என்றோ பொருள் இல்லை. அங்கும் சாதிகளும் இருக்கின்றன. சாதிய இழி செயல்களும் இருக்கின்றன. ஆனால் சாதிக் குறித்த இழிவுகள் இதுவரை பேசப்படவில்லை. மலையாளிகள் சாதிக்குப் பதிலாக வர்க்கப் பிரச்சினையை முதன்மைப்படுத்துகிறார்கள். வர்க்க பிரச்சினையும் சாதி பிரச்சினையும் ஒன்றா? வர்க்கப் பிரச்சினை ஒழிந்தால் சாதி பிரச்சினை தானாக தீர்ந்துவிடும் என்று நம்புவது – சாதிகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் இது - எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை.
இலங்கையில் தோட்டக்காட்டீ என்ற சொல் குறிக்கும் – பெண், அவளுடைய வாழ்க்கை முறை – குறித்து எழுதப்படவில்லை. தோட்டக்காட்டீகள், தோட்டக்காட்டான் குறித்து மௌனம் மட்டுமே இன்றுவரை இருக்கிறது. மலையாளிகள் வர்க்கப் பிரச்சினையை முதன்மைப்படுத்துவதை போன்றது இது – இலங்கையில் தமிழர் என்ற பொது அடையாளத்தைப் பேசுவது. நாம் வாழும் வெளியை சாதி என்ற அதிகாரம்தான் தீர்மானிக்கிறது. யாழ்ப்பாணத் தமிழரும் மலையகத் தமிழரும் ஒன்றல்ல. வெற்றி பெற்ற வியாபாரிகளாக கல்லாவுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள், நிலவுடைமையாளர்களாக இருப்பவர்கள், அதிகம் படித்த, அதிகாரத்தில் இருந்த, பாதுகாப்பாக முதலில் வெளிநாடுகளுக்கு பயணப்பட்டவர்கள் யார்? நிச்சயம் தோட்டக்காட்டீகளோ, தோட்டக்காட்டான்களோ அல்ல.
தன்வரலாற்றுக் கதைகளில் மட்டும்தான் எழுத்தாளர்கள் தன்னுடைய கதையை எழுதுகிறார்கள் என்று இல்லை. நாவல் என்ற வடிவத்திலும் எழுத்தாளர்கள் தங்களுடையக் கதையைத்தான் எழுதுகிறார்கள். ஒவ்வொரு கதையிலும் நாவலிலும் அதன் ஆசிரியர்தான் முதன்மையான பாத்திரமாக இருக்கிறார். நவீன நாவல், கலையின் தேடல், கலைஞனின் தரிசனம் என்பது என்ன? தன்னைத்தவிர வேறு எதையும் பார்க்காத, எதையும் கற்றுத்தராத படைப்புகளே உற்பத்தி செய்யப்படுகின்றன. எழுத்தாளர்கள் சாட்சியம் சொல்கிறார்கள். அதையே நாவல் கலை என்கிறார்கள். சாட்சியம், வாக்கு மூலம் அளிக்கவே தமிழ் எழுத்தாளர்கள் போட்டிப்போடுகின்றனர். இது இலங்கை எழுத்துக்கும் பொருந்தும். ஞானம் பத்திரிக்கையில் தொடராக வந்த தெணியானின் இன்னும் சொல்லாதவை என்பது மட்டும்தான் தன்வரலாற்றுக் கதை என்ற பெயரில் வெளிவந்தது. நாவல் கலைக்கான அழகியல் கூறுகளும், தன்வரலாற்றுக் கதைக்கானக் கூறுகளும் அடிப்படையில் வேறுபட்டவை. இந்த வேறுபாட்டை அறிந்து செயல்படுபவனே நுட்பமான கலைஞன். வரலாறு, அரசியல், சமூகநிகழ்வு, தன் கதை என்று அனைத்தையும் இணைத்து எழுதப்படுவதுதான் நாவல்.
தலித் சுயசரிதை என்பது இப்படித்தான் இருக்கமுடியும். மிகவும் களைப்புடனும் அழுக்குடனும் உள்ள மஹர் சாதிப் பெண்கள் சாலையின் ஒரு பக்கத்தில் மிகுந்த அடக்கத்துடன் யாரையும் அவமதித்துவிடாமல் செல்வர்.  மற்றவர்களிடம் இருந்து மறைந்து தங்களை முழுவதுமாய் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முயல்வார்கள்.  முடிந்தவரை அவர்கள் மற்ற கீழ்ச்சாதியினர் வசிக்கும் சந்துகள் வழியாகத்தான் செல்வர்.  அந்தத் தெருக்கள் வின்கர் சந்து, மலி சந்து, டெலிசந்து என்று அழைக்கப்படும்.  அங்குள்ள அனைத்து வீடுகளிலும் மார்பு உயரத்திற்கு சுவரைப்போல மேடை கட்டப்பட்டிருக்கும்.  மஹர் சாதியினர் நேராக தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டி வைத்திருப்பார்கள்.  மஹர் சாதிப் பெண்கள், மேடைக்கு இந்தப் பக்கம் நின்று சத்தம் கொடுப்பார்கள்.  அம்மா விறகு வந்திருக்கிறது!  மஹர் சாதிப் பெண் விறகு கொண்டுவந்திருக்கிறேன்... விலை பேசி முடித்து விட்ட பிறகு மஹர் சாதிப் பெண்களின் வேலை முடிந்துவிடாது.  அவர்கள் அந்த விறகுக் கட்டுகளை எடுத்துச் சென்று வீட்டின் பின்பக்கம் வைத்துக் கட்டை அவிழ்த்து விறகுகளை ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு விறகிலும் தன் தலை முடியோ, தன் புடவையிலிருந்த நூலோ ஒட்டிக்கொண்டிருக்கிறதா  என்பதையும் கவனமாய் ஆராய வேண்டும்.  மஹர் சாதிப் பெண் வேலை செய்வதை நிழலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் விறகை வாங்கிய பெண் (பார்ப்பன) கவனமாகப் பார்.  ஒவ்வொரு விறகையும் எடுத்து நன்றாகப் பார்.  உன் புடவையின் நூல் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்துவிட்டது என்றால் பெரும் பிரச்சனையாகிவிடும்.  உனக்கு என்ன?  நீ போய் விடுவாய்.  எங்களுக்குத்தான் செலவு.  எங்கள் வீடு தீட்டுப்பட்டுவிடும்.  நாங்கள் மாட்டுச் சாணி போட்டுத் தரையை மெழுகிவிட வேண்டிவரும்.  எங்கள் வீட்டில் உள்ள அனைத்துத் துணிகளையும் துவைக்க வேண்டிவரும்.  உன் முட்டாள் தனத்தால் எங்களுக்கு இவ்வளவு தொந்தரவு வந்துவிடும்.  கடவுள், இவற்றை எப்படிப் பொறுத்துக்கொள்வார்.  சொல்?  கடவுளுக்கும் தீட்டுப்பட்டுவிடும் அல்லவா?  அதனால்தான் சொல்கிறேன்.  ஒவ்வொரு விறகையும் நன்றாகப் பார்த்து அடுக்கி வை!”42 (ப.85,86)
       ஒரு மஹர் இனப்பெண் விற்கும் விறகில் அவளுடைய தலைமுடியோ, கட்டியிருக்கும் சீலையின் ஒரு நூலோ ஒட்டியிருக்கக் கூடாது. அப்படி ஒட்டியிருந்தால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தீட்டை ஏற்படுத்திவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக விற்கப்படுகிற விறகில் மஹர் இனப்பெண்ணின் இரத்தம் பட்டிருந்தால் அது பெரும் தீட்டாகிவிடுகிறது. தீண்டாமைக் கொடுமை என்பது இதுதான். உண்மையான தலித் தன்வரலாற்றுக் கதை தனிமனித துயரத்தைவிட ஒடுக்கப்பட்ட இனத்தின் வலியையும் கண்ணீரையும் பேசும். அப்படிப் பேசுவது வியாபாரத்திற்காக. நிகழ்காலப் போக்கிற்காக அல்ல. பிராமணிய இந்து மதம் உருவாக்கிய கடவுள்களும், சாதி அமைப்பும், மத அமைப்பும் தீண்டாமையை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று கற்றுத்தருவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியே நம்முடைய இலக்கியப் படைப்புகளும் இருப்பது ஏற்புடையதல்ல.
                                                                                       ***
துணை நூற்பட்டியல்.
1.        லஷ்மண் மானே               -      உபாரா (அன்னியன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 1,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,36.
                                                               
2.        பாமா                          -      Vendatta – 2011. Oxford University press,
Chennai.
மேற்கோள் வரிசை எண்  - 2,3,38,41.

3.        Dr. கிஷோர் சாந்தாபாய் காலே   -      குலாத்தி (தந்தையற்றவன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 20,21,22,23,24,25.

4.        லஷ்மண் மாருதி கெய்க்வாட்   -      உச்சாலியா (பழிக்கப்பட்டவன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 26,27,28,29,30,31,32,33,34,37.

5.        பேபி காம்ப்ளி                  -      சுதந்திரக்காற்று (2010), எதிர் வெளியீடு,    
96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.
மேற்கோள் வரிசை எண் – 35,39.

6.        சரண்குமார் லிம்பாலே          -      அனார்யா (நாதியற்றவன்) 2003,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 40.

7.        முத்துமீனாள்                  -      முள் (2008) – ஆழிப்பதிப்பகம், 12 முதல்
பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா
காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24.
மேற்கோள் வரிசை எண் – 44,45.

8.        வசந்த் மூன்                    -      ஒரு தலித்திடமிருந்து, விடியல்பதிப்பகம்,
11 பெரியார் நகர், மச்சக்காளி பாளையம்,
கோவை – 15
மேற்கோள் வரிசை எண் – 4.


உயிர்மை – ஜனவரி 2015