திங்கள், 16 நவம்பர், 2015

மணியார் வீடு (சிறுகதை) - இமையம்


மணியார் வீடு - இமையம்
பஸ்ஸைவிட்டு இறங்கியதும் பத்து இருபதடி தூரம் நடந்தார் வீரமுத்து. வெயில் கடுமையாக இருந்தது. பக்கத்தில் மரம் இருக்கிறதா என்று பார்த்தார். ரோட்டை ஒட்டி கடைகளாகத்தான் இருந்தன. ஒரு மரம்கூட இல்லை. நெற்றியில், கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே கடிகாரத்தை பார்த்தார். மணி ஒன்று பத்து. வீட்டிற்கு போவதற்குள் வியர்வையில் நனைந்துவிடுவோம் என்று நினைத்தார். ரோட்டு ஓரத்திலேயே இடம் வாங்கி வீடு கட்டியிருக்க வேண்டும். வீட்டிற்குபோன வேகத்திலேயே குளிக்க வேண்டும். வெயிலில் பத்து தெருவிற்குமேல் நடந்துபோக வேண்டுமே என்று நினைத்ததுமே எரிச்சல் வந்தது. எரிச்சலில் கருவூல அதிகாரிகளை திட்டினார். "கவர்மண்ட் ஆபிசில என்னா வேல பாக்குறானுவ. ஒரு ஆள ரெண்டு மணிநேரமா காவ காக்க வைப்பானுங்க? கவர்மண்ட் வேல கேக்கறது, கொடுத்தா, கொடுத்த வேலய ஒழுங்கா செய்யுறதில்ல" வேகமாக நடக்க முயன்றார்.
கிரில் கேட்டை திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்ததுமே, "முதல்ல ஃபேன போடு" என்று வள்ளியம்மையிடம் சொன்னார். திடீரென்று நினைவுக்கு வந்தமாதிரி "லைட்ட போட்டா என்ன? அதுலயா பணம் செலவு ஆயிடும்? சனியன்புடிச்ச ஊர்ல ஒரே வெயிலா இருக்கு. எங்கப் பாத்தாலும் கட்டடமா கட்டி வச்சியிருக்கானுவ. ஒரு மரம், மட்டயக்கூட காணும்" வேகமாக சொன்னார். "கரண்ட் இல்ல." ஒரே வார்த்தையாக வள்ளியம்மை சொன்னாள். மின்சாரம் இல்லாததற்கு அவள்தான் காரணம் என்பது மாதிரி முறைத்துப் பார்த்தார். வள்ளியம்மை எதுவும் பேசவில்லை.
"கரண்ட் எப்ப நின்னுச்சி?"
"நீங்க வெளிய போன கால் மணிநேரத்திலியே நின்னுடுச்சி."
"ஒரு நாளக்கி கரண்ட்ட எத்தன தடவதான் நிறுத்துவானுவ? என்னா கவர்மண்ட்? ஆம்பள கவர்மண்ட்டவிட பொம்பள கவர்மண்டு படுமோசமா இருக்கு" வெறுப்பாக சொல்லிவிட்டு மேல்சட்டையையும் பனியனையும் கழற்றிப்போட்டார். வள்ளியம்மை எடுத்துவந்து கொடுத்த கைலியை வாங்கி கட்டிக்கொண்டு பேண்ட்டை கழற்றி போட்டார். வள்ளியம்மை கொடுத்த துண்டை வாங்கி நெற்றி, கழுத்து, முதுகு என்று வியர்வையைத் துடைத்துகொண்டார்.
"தண்ணி வேணுமா? மோர் குடிக்கிறிங்களா?"
"ஒரு மண்ணும் வாணாம், போ எட்டெ."
"இவ்வளவு நேரமா என்னா செஞ்சிங்க?" வள்ளியம்மை கேட்டதும் வீரமுத்துவுக்கு கோபம் வந்துவிட்டது.
"அஞ்சு நிமிசத்தில முடியுற வேலய ரெண்டு மணிநேரமா செய்யுறானுவ. ரிட்டயர் ஆனவங்கயெல்லாம் எதுக்காக உசுரோட இருக்கனும்ங்கிற மாதிரி பாக்குறாங்க, நடத்துறாங்க." வள்ளியம்மைதான் தவறு செய்த மாதிரி அவளிடம் கத்தினார்.
"வருசாவருசம் நேர்ல வா, நேர்ல வான்னு எதுக்காக வரச்சொல்றானுவ?"
"செத்திட்டானா, உசுரோட இருக்கானான்னு தெரிஞ்சிக்கத்தான். ஆளப் பாத்திட்டு, போட்டோவ வாங்கி விண்ணப்பத்தில ஒட்டிக்கிட்டு, ஒரு கையெழுத்த வாங்கிக்கிட்டு போன்னு சொல்லத்தான் ரெண்டு மணிநேரம் வளத்துறானுவ. மத்த ஆபிசவிட ட்ரசரிதான் படுமோசம்." வீரமுத்து உண்மையாகவே நல்ல கோபத்தில் இருந்தது வள்ளியம்மைக்கு தெரிந்தது.
"எல்லா எடத்திலயும் இப்பிடித்தான். கரண்ட் பில் கட்டப்போனா உடனே பணத்த வாங்கிக்கிட்டு போன்னு சொல்ல மாட்டானுவ. சனங்க வரிசயில நிக்கும்போதுதான் தண்ணி குடிப்பானுவ, டீ குடிப்பானுவ, அப்பத்தான் வரிசயா சிரிச்சிச்சிரிச்சி செல்போன் பேசுவானுவ. திரும்பியும் போவணுமா?"
"இனிமே அடுத்தவருசம்தான். சாவுவரைக்கும், வருசா வருசம்போயி நான் இன்னும் சாவலன்னு கையெழுத்துபோட்டுட்டு வரணும். என்னா செய்யுறது? அரசாங்கத்தோட சட்டதிட்டம். என்னோட நெலம பரவாயில்ல. அறுவத்திநாலு வயசுல ஒரு அம்மா வந்துச்சி. புருசனோட பென்சன் வாங்குதுபோல இருக்கு. அதுக்கு மறு கல்யாணம் கட்டிக்கலன்னு சர்டிபிகேட்டு கேட்டான். அந்தம்மாவும் தனக்கு ரெண்டாம் கல்யாணம் நடக்கலன்னு வி.ஏ.ஓ.கிட்ட சட்டிபிகேட் வாங்கியாந்திருக்கு. பதினஞ்சி வருசமா வாங்கியாந்து கொடுக்குதான் – அந்தம்மா” அலுப்புடன் சொல்லிவிட்டு துண்டால் விசிறிக்கொள்ள ஆரம்பித்தார்.
"காப்பி கலக்கட்டுமா?"
"ஒரு மண்ணும் வாணாம். முதல்ல குளிக்கணும்." எழுந்து குளிப்பதற்காக போனார்.
"டேங்கில தண்ணி இல்லெ."
"காலயிலியே மோட்டர் போட்டு தண்ணி ஏத்த வாணாமா?" கடுமையான குரலில் கேட்டார்.
"ஒம்போதரைக்கெல்லாம் கரண்ட் போவுமின்னு தெரியல. பாயப் போடுறன். செத்தப்படுங்க. வேர்வ அடங்கட்டும், கரண்டு வந்துடும்" சொல்லிவிட்டு ஒரு பாயை எடுத்துவந்து கூடத்தில் போட்டாள். ஒரு தலையணையையும் கொண்டுவந்து வைத்தாள். "நாள் முழுக்க வீட்டுலதான் இருக்க. ஆனா மோட்டர் போட மறந்துபோயிடிச்சி" குத்தலாக சொல்லிவிட்டு பாயில் படுத்துக்கொண்டார்.
சமையலறையிலிருந்து தக்காளி, வெண்டைக்காய், பச்சைமிளகாய், ஒரு அலுமினியப் பாத்திரம், அரிவாள்மனை என்று எடுத்துக்கொண்டுவந்தாள். வீரமுத்து படுத்திருந்த இடத்திற்கு சற்றுத்தள்ளி உட்கார்ந்துகொண்டு, வெண்டைக்காயை துண்டுப் பண்ணிப்போட ஆரம்பித்தாள் வள்ளியம்மை. திடீரென்று நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள் "ஊர்லயிருந்து சின்னசாமி மகன் கனகசபை வந்திருந்தான்."
"எந்த சின்னசாமி?"
"நம்ப வீட்டுக்கும் மேற்கால வீட்டு சின்னசாமிதான். ஊர்ல செவிடன்னு சொல்ல மாட்டாங்க? அவரோட பையன்."
"அவனோட மவனா?"
"சிங்கப்பூர்ல இருந்தானே அவன்தான். இன்னமுட்டும் உட்காந்திருந்தான். நீங்க வரதுக்கு லேட்டானதும் கடத்தெருவுக்குப்போயிட்டு வரன்னு போயிருக்கான்."
"என்ன விசயமாம்? பத்திரிக ஏதாச்சும் கொடுத்தா வாங்கிகிட்டுப் போடான்னு அனுப்பிட வேண்டியது தான?"
"வீடு கட்டப்போறானாம். அதுக்குத்தான் வந்தானாம்." வீரமுத்துவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் கைவேலையை மறக்காமல் செய்துகொண்டிருந்தாள் வள்ளியம்மை.
"அவன் வீடு கட்டுறதுக்கு நம்பகிட்ட எதுக்கு வரான்? கடன் கேக்கறதுக்கு இருக்குமா?"
"இல்லெ. ஊர்ல நம்ப எடம் சும்மா கெடக்கில்ல. அத வெலக்கித் தரிங்களான்னு கேக்கறதுக்கு வந்தானாம். ரொம்ப பெரிய வீடா கட்டுவான்போல இருக்கு."
"பிச்சக்காரப் பய வந்து என்னோட எடத்த வெலக்கிக் கேக்குறானா? அடி செருப்பால. அதெல்லாம் கொடுக்கிறதில்லன்னு ஒரே வாத்தயா சொல்லி அனுப்பிட வேண்டியதுதான? யார்கிட்டவந்து என்னா கேக்குறான்?" வீரமுத்துவுக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. ஊரில் சின்னசாமி எப்படி இருந்தார், அவருடைய குடும்பம் எப்படி இருந்தது, தீபாவளி, பொங்கல் அன்றுகூட நல்ல சோறு சாப்பிட முடியாமல் எப்படியெல்லாம் திண்டாடினார்கள் என்பதையெல்லாம் ஒரு கதையாக விவரித்துசொன்னார். கடைசி வார்த்தையாக "திரும்பி வருவானா?" என்று கேட்டார்.
"வரன்னுதான் சொல்லிட்டுப்போனான்."
"என்னோட வீட்ட வாங்குற அளவுக்கு அவனுக்கு பணம் வந்துடுச்சா? அவனோட அப்பன் ரெண்டே ரெண்டு செம்மறி ஆட்ட மேய்ச்சிக்கிட்டு கிடந்தத மறந்திட்டானா? வரட்டும் நான் அந்த நாயிக்கிட்டப்பேசிக்கிறன்." வேகமாகவும், அதே நேரத்தில் கோபமாகவும் சொன்னார்.
தக்காளியை துண்டுதுண்டாக அறிந்துபோட்ட வள்ளியம்மை கேட்டாள். "இது எந்த காலத்துப் பேச்சு? பழயகாலத்துப் பேச்சு எல்லாம் இப்ப எடுபடுமா? வெல படிஞ்சி வந்தா கொடுத்திட்டுப்போவ வேண்டியதுதான?" சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் அவள் சொன்னவிதம் வீரமுத்துவை எரிச்சல் அடைய செய்தது. ஆத்திரத்தோடு கேட்டார். "பணம் வந்திட்டா யார்கிட்ட என்னா கேக்குறதின்னு இல்லியா? செம்மறி ஆடு மேய்ச்சத மறந்திடுறதா? சோத்துக்கு இல்லாம சோள தவுட்ட வறுத்துத் தின்னத மறந்திடுறதா?"
"நம்ப எடம் சும்மாதான கெடக்கு? கொடுத்தா நம்பளுக்குத்தான பணம் வரும்?"
வள்ளியம்மை விவரம் இல்லாமல் மட்டுமல்ல அறிவும் இல்லாமலும் பேசுவதாக வீரமுத்துவுக்குத் தோன்றியது. எழுந்து உட்கார்ந்துகொண்டு வேகமாக கேட்டார். "சும்மா கிடந்தா கொடுத்திடணுமா?"
"வெறும் எடம்தான? அத வச்சிக்கிட்டு என்னா செய்யப்போறம்?"
"அது நான் பொறந்த எடம் தெரியுமா?" கோபத்தோடு கேட்டார்.
"அந்த அரண்மனய எனக்கு எப்பிடித் தெரியும்? அந்த அரண்மனயப் பாத்துத்தான எங்கப்பா என்ன உங்களுக்கு கட்டிவச்சாரு." வள்ளியம்மை வாய்விட்டு சிரித்தாள். அவள் சொன்னதைக் கேட்டு வீரமுத்து சிரிப்பார் என்றுதான் நினைத்தாள். வீரமுத்து சிரிக்காதது மட்டுமில்லை. கோபம் வந்துவிட்டது என்பதை அவருடைய முகத்தைப்பார்த்தே தெரிந்துகொண்டாள். அவரை சமாதானம் செய்ய நினைத்து "நான் வௌயாட்டுக்குத்தான் சொன்னன்" என்று சொன்னாள்.
"வாய மூடுறியா?" கோபமாக வீரமுத்து கத்தினார்.
"இருவது வருசமா சும்மா கெடக்கு, வீடும் பாழடஞ்சிப்போச்சி, அத வச்சிக்கிட்டு என்னா செய்யப்போறம்? குப்பக்காட்டுல கெடக்குற எடத்த வாங்குறதுக்கு இந்தக் காலத்தில எவன் நிக்குறான்?" வள்ளியம்மை சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் வீரமுத்து வேகமாக சொன்னார். "சீ கழுத, வாயமூடு."
"நான் கழுததான். கழுதங்கிறதாலதான் முப்பத்தியோரு வருசமா உங்ககூட இருந்திருக்கன். மூணு புள்ளையும்  பெத்திருக்கன்."
"நான் என்னா சொல்றன்? நீ என்னா சொல்ற? உங்கிட்டப்பேச முடியாது" என்று கோபமாக சொல்லிவிட்டு மீண்டும் பாயில் குப்புறப் படுத்துக்கொண்டார்.
வள்ளியம்மை அரிந்த காய்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள். காயை வேகப்போட்டாள். குக்கரில் அரிசியை வைத்தாள். ஒன்றிரண்டு பாத்திரங்களை கழுவினாள். திடீரென்று நினைவுக்குவந்த மாதிரி, "பொட்டச்சிக்கு வாயின்னு ஒண்ணு இல்லாம இருக்கிறதுதான் நல்லது" லேசான குரலில்தான் சொன்னாள். அது கூடத்தில் படுத்திருந்த வீரமுத்துவுக்கு அப்படியே கேட்டுவிட்டது.
"கொஞ்சம் வாய மூடுறியா?"
"சும்மா கெடக்கிற எடத்த வித்தா என்னான்னு கேட்டது ஒரு குத்தமா? அது என்ன பெரிய அரண்மனயா?" வள்ளியம்மைக்கும் கோபம் வந்துவிட்டது.
"நீ பொறந்த அரண்மனயயும் நான் பாத்திருக்கன்" வீரமுத்து விஷமத்தனமான குரலில் சொன்னார்.
"நான் அரண்மனயில பொறக்கலதான். எவ்வளவு பெரிய அரண்மனயா இருந்தாலும் புள்ளை பெக்காது. அதுவும் மூணு" வள்ளியம்மைக்கு கண்கள் கலங்கின. வேகவைத்த காய்குண்டானை இறக்கிவிட்டு, பருப்பை வேகப்போட்டாள்.
வள்ளியம்மைமீது வீரமுத்துவுக்கு கோபம் உண்டாயிற்று. எதற்காக எதிர்வாதம் பேசுகிறாள்? அவளுடைய வீட்டிலிருந்து யாராவது வந்திருப்பார்களா? அவளுடைய வீட்டிலிருந்து யாராவது வந்துவிட்டுபோகிற அன்று, பிறந்த வீட்டில் மிகவும் சௌகரியமாக இருந்த மாதிரியும், புருசன் வீட்டுக்கு வந்த பிறகுதான் மிகவும் சிரமப்படுவதாகவும் பேசுவாள். கல்யாணம் கட்டிய நாளிலிருந்து இந்த ஒரு குணம் மட்டும் அவளிடம் மாறாமல் எப்படியிருக்கிறது என்று யோசித்தார். அப்போது சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தாள் வள்ளியம்மை.
"ஊர்ல சும்மா கெடக்கிற எடத்த வித்திட்டு இங்க பிளாட் வாங்கிப் போட்டா என்னா?"
"அது நான் பிறந்து வளந்த வீடு தெரியுமா?"
"தெரியும். அந்த அரண்மனய" வள்ளியம்மை முகத்தைக் கோணிக்காட்டினாள். அதைப் பார்த்ததும் வீரமுத்துவுக்கு தலைவெடித்துப்போகிற மாதிரி கோபம் வந்தது.
"நீ அரண்மனயில பொறந்தியா?"
"இல்லெ."
"அப்புறம் என்ன? வாய மூடிக்கிட்டு இரு."
"நான் சொல்றத புரிஞ்சிக்குங்க. நல்லது கெட்டதுக்குக்கூட ஊருக்குப்போறது கொறஞ்சிடிச்சி. அந்த எடத்தில வீடு இருந்தாகூட பரவாயில்ல. உங்கண்ணன் புதுவீடு கட்டிக்கிட்டுப்போயிட்டாரு. இன்னொருத்தரு சொத்துக்காக பொண்டாட்டி வீட்டுக்கே போயீட்டாரு. வேணுமின்னேதான் பழயவீட்ட உங்க தலயில கட்டிவுட்டாங்க. அண்ணனுவோ முகம் கோணக்கூடாதின்னு எல்லாத்துக்கும் நீங்க ‘சரி சரி’ன்னு தலய ஆட்டிட்டிங்க. அவுங்க விவரமா வௌயுற நிலத்த கூடுதலா எடுத்துக்கிட்டாங்க. குடியிருந்திருந்தா அந்த வீடு இடிஞ்சி விழுந்திருக்காது. இங்க வீடுகட்டுனதால அத என்னா ஏதுன்னு பாக்காம விட்டாச்சி. இப்ப அது பாழ்மனயா ஆயிடிச்சி. இனிமே நீங்கப்போயி அத ‘என்னா ஏது’ன்னு பாக்கப்போறதில்ல. நீங்க பெத்த புள்ளைங்களும் பாக்கப்போறதில்ல. ஊராங்க ஆட்ட, மாட்ட கட்டி நாற அடிப்பாங்க. இதத்தான் நான் சொன்னன். உங்களுக்கு கோவம் வருது."
வள்ளியம்மையினுடைய பேச்சு மனப்பாடம் செய்துவைத்திருந்ததை ஒப்பித்தது மாதிரி இருந்தது. அவள் சொன்னதில் நியாயம் இருந்தது. அதனால் அவருக்கு லேசாக கோபம் குறைந்தது. ஆனாலும் வீம்பைவிடாமல் "இத்தன வருசமா அத நான் ஏன் விக்காம இருக்கன்னு உனக்குத் தெரியாது." கர்வத்தோடு சொன்னார்.
"நல்லது சொன்னா உங்க கூட்டத்துக்கே புரியாது. பித்துக்குளி வகயிறாதான? இன்னும் பழய பெருமய பேசிக்கிட்டு. சும்மா கெடக்குற எடத்த வித்து காசாக்க தெரியாம?" வள்ளியம்மைக்கும் கோபம் வந்துவிட்டது.
"சும்மா கெடக்கு, சும்மா கெடக்குன்னு சொல்லாத. எனக்கு கோபம் வந்திடும்."
"அடுப்புல ஏதோ தீயிற மாதிரி இருக்கே" அவசரமாக சமையலறைக்குப் போனாள். வேகவைத்திருந்த பருப்பு தீய ஆரம்பித்திருந்தது தெரிந்ததும் அடுப்பை நிறுத்தினாள். புளியை கரைத்தாள். மதிய சாப்பாட்டுக்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
"இன்னும் கரண்ட விடலியே பாவிப் பசங்க" என்று சொன்னார் வீரமுத்து. துண்டால் விசிறிக்கொண்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. சத்தமாக வள்ளியம்மையிடம் "தண்ணி கொண்டா" என்று சொன்னார். வள்ளியம்மை உடனே தண்ணீரை கொண்டுவந்து தரவில்லை. அடுப்பில் இருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுத்தான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். தண்ணீரை வாங்கி குடித்த வீரமுத்து நிதானமான குரலில் கேட்டார். "அந்த எடத்த வித்திடலாம்ன்னு சொல்ல உனக்கு எப்பிடி மனசு வந்துச்சி. ஊர் பூராவும் அது மணியாரு வீடுன்னு தெரியுமில்ல. எத்தன வருசம் நீ அந்த வீட்டுல இருந்திருக்க. மறந்திடுச்சா?”
"இப்ப அந்த எடத்தில வீடு இருக்கா?"
"இல்லெ."
"அப்பறம் எங்கயிருந்து மணியாரு வீடு வருது?"
"பேரு இருக்குதில்ல.”
“அந்த பேராலதான் எல்லா நாசமும் வந்துச்சி. இந்த ஊருக்கு வந்தப்ப ரெண்டு எடத்த வாங்கிப்போட சொன்னன். அப்ப நாலாயிரம், அஞ்சாயிரம்தான மன. இப்ப பத்துலட்சம் இருபது லட்சமின்னு விக்குது. நான் மணியாரு மவன். வெளியூர்ல எடம் வாங்குறது எதுக்குன்னு அப்ப கேட்டீங்க?"
"பழய பேச்சவிடு."
"பாகம் பிரிச்சப்ப உங்களுக்கு அஞ்சி காணி வந்துச்சி. அத உங்களால பாக்க முடியல. உங்கண்ணன்கிட்டியே வுட்டுட்டீங்க? இத்தினி வருசத்தில அவுரு ஒத்த ரூவா தந்திருப்பாரா? அப்பறம் அந்த வீடும் தோட்டமும்தான். இப்ப அந்த வீடும் இல்ல. வீடு சரிஞ்சி விழுந்தப்ப ஊருசனங்க மரம், ரீப்பரு, கருங்கல்லு, குடகல்லுன்னு ஒவ்வொண்ணா திருடிக்கிட்டுப்போயிட்டாங்க. இடிஞ்ச வீட்ட, எடுத்துவச்சும் கட்டல. வுட்டுட்டீங்க. பள்ளிக்கூடம் போறதே வேலன்னு இருந்திட்டீங்க. இத்தினி வருசத்தில ஒரு பய வந்து அந்த எடத்த கேக்கல. இப்பத்தான் ஒருத்தன் வந்திருக்கான். ஒரே தவணயில பணத்தயும் தரன்ங்குறான். பழய பெருமய பேசிக்கிட்டு யாராச்சும் வாணாம்பாங்களா?" சின்னப்பிள்ளைக்கு பாடம் நடத்துவது வள்ளியம்மை நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக சொன்னாள். அவளுடைய முகத்தை முதன்முதலாகப் பார்ப்பது மாதிரி பார்த்தார். பிறகு குதர்க்கமாக சொன்னார் : "வெலயெல்லாம் பேசியாச்சிப்போல இருக்கு".
"வெலயும் பேசல. ஒண்ணும் பேசல. நீங்க வருவீங்கன்னு ரெண்டுமணி நேரமா உட்காந்திருந்தான். அப்பத்தான் ஊர்ல நெலம் என்ன வெலபோவுது, எடம் என்னா வெலப்போவுதின்னு விசாரிச்சன். அப்பறம் உங்கண்ணன் மகன்கிட்டப் போன்போட்டு கேட்டன். சின்னசாமி மவன் சொல்றது உண்மன்னு அப்பத்தான் தெரிஞ்சிது, அந்தப் பையன் நல்ல வெலக்கித்தான் நம்ப எடத்த கேட்டான்னு" அறையில் கிடந்த நாற்காலியை எடுத்துவந்து போட்டு உட்கார்ந்துகொண்டு முகத்தில், கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
"அவன் என்னா வெல சொன்னான்? நீ என்னா வெல கேட்ட?"
வீரமுத்து சண்டையை உண்டாக்கும்விதமாக கேட்கிறார் என்பது தெரிந்தும் வள்ளியம்மை வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருந்தாள். அவள் பேசாததால் வீரமுத்து பேசினார்.
"நீ சொல்றதெல்லாம் சரிதான். நாங்க அஞ்சிபேரு பொறந்தது அந்த வீட்டுலதான். எங்கண்ணன் ரெண்டுபேருக்கும் மொத்தம் எட்டுப்புள்ளைங்க பொறந்துச்சி. அப்பறம் எங்க அக்கா ரெண்டு பேருக்கும் ஏழு புள்ளைங்க அந்த வீட்டுலதான் பொறந்துச்சி. அந்த வீட்டுல பொறந்த புள்ளைங்க ஒண்ணுகூட சாவல. சோடப்போவல. தெரியுமா? அவ்வளவு ராசியான வீடு."
"ஏன் உங்களுக்கு பொறந்த மூண வுட்டுட்டீங்க? மூணு புள்ளைப்பெத்தது மறந்து போச்சா?" கிண்டலாக சிரித்தாள் வள்ளியம்மை.
"கொஞ்சம் வாய மூடுறியா? சனியன" என்று சொன்னதோடு பல்லைக்கடித்தார் வீரமுத்து. வள்ளியம்மை சிரித்துகொண்டே சொன்னாள்.
"உங்க வீட்டுக்கூட்டம் வந்தாலே நம்ப ஊரு செல்லியம்மன் கோயிலு அன்னப்படையலுக்கு வரகூட்டம் மாதிரிதான் இருக்கும்." வள்ளியம்மைக்கு சிரிப்பு அடங்கவில்லை.
"சீ, வாய மூடு."
"உங்க வீட்டு சனங்களப் பத்தி சொன்னாலே உங்களுக்கு கண்ணுதண்ணீ வந்திடும். ஊர்ப்பட்ட கூட்டம் இருந்தும், உங்கப்பா, உங்கம்மா முடியாத கெடந்தப்பவும், செத்தப்பவும் ஒரு நாயிகூட கிட்டவல்ல. எட்டியும் பாக்கல. கடசிகாலத்தில அவங்களோட துணியெல்லாம் யாரு அலசி போட்டது? கூடயிருந்து பாத்துக்கிட்டது யாரு? நாந்தான? சாப்புடுறதுக்குத்தான் கூட்டம் சேரும்." வள்ளியம்மையின் முகம் கடுமையாகிவிட்டது.
"மத்தவங்களப் பத்தி பேசாத."
"அந்த எடத்த உங்கண்ணன் பசங்களுக்கு கொடுக்கணும். அதான? கொடுத்திட்டுப்போங்க. உங்கப்பா, அம்மா சம்பாதிச்சதின்னு எம் புள்ளைங்களுக்கு என்னிக்கி ஒரு பைசா வந்திருக்கு? இன்னிக்கி வரதுக்கு? சும்மா கெடக்குற எடத்த விக்க சொன்னா கோவம் வருது." வள்ளியம்மையின் முகம் மட்டுமில்லை. குரலும் மாறிவிட்டது. அதைப் பார்த்ததும் வீரமுத்துவினுடைய மனம் மாறிவிட்டது. ரொம்பவும் தன்மையான குரலில் சொன்னார்.
"ஒனக்குப் புரியல. வீடுங்கிறது வேற. அது ஒரு கைப் புள்ளை. அம்மாகூட இருக்கிற மாதிரி. இது நம்ப கட்டுன வீடுதான். இத்தினி வருசமா இதுலதான் குடியிருக்கம். ஆனா வீடுன்னதும் ஊர்ல இருக்கிற எடம்தான் ஞாபகத்துக்கு வருது. இந்த வீடு வர மாட்டங்குது."
வள்ளியம்மைக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. எதிராளியிடம் கத்துவது மாதிரி கேட்டாள். "எனக்கு என்னா புரியல? இப்ப அந்த எடத்தில வீடு இருக்கா? பாழடஞ்ச எடமாத்தான கெடக்கு?"
வள்ளியம்மையின் பேச்சைக் கேட்டதும் வீரமுத்துவுக்கும் கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து உட்கார்ந்தார். வள்ளியம்மையைவிட வேகமாக கேட்டார். "பாழடஞ்ச எடமா இருந்தாலும், நான் பொறந்து வளந்த எடமில்லியா? ஒண்ணுமே இல்லன்னாலும் நீ, ஒன்னோட பொறந்த வீட்டப் பத்தி நாள்தவறாம பேசத்தான செய்யுற?"
வள்ளியம்மையின் கண்கள் லேசாக கலங்கின. கண்ணீரை மறைப்பதற்காக மின்சாரம் வந்துவிட்டதா என்று பார்த்தாள். பிறகு மிகவும் சலிப்படைந்த குரலில் சொன்னாள். "பொட்டச்சிக்கு ஏதுங்க வீடு? கல்யாணம் கட்டுறவர அப்பன் வீடு. அப்பறம் புருசன் வீடு. சாவுற காலத்தில புள்ளை வீடு. பொம்பளக்கின்னு ஒலகத்தில எங்க வீடு இருக்கு? சுடுகாட்டுலதான் இருக்கு." வள்ளியம்மையினுடைய கண்கள் மீண்டும் கலங்கின.
"இப்ப எதுக்கு அழுதுகாட்டுற?" வேகமாகக் கேட்டார் வீரமுத்து.
"ஐயோ, அடுப்ப நிறுத்த மறந்திட்டனே" சொல்லிக்கொண்டே சமையலறைக்கு ஓடினாள்.
வள்ளியம்மை மீது கடுமையான கோபம் உண்டாயிற்று. கூப்பிட்டுவைத்து திட்டலாமா என்று யோசித்தார். பிறகு பாயில் குப்புறப்படுத்துகொண்டு தலையணையில் முகத்தை வைத்து அழுத்தினார். சிறிது நேரத்திலேயே கருவூல அதிகாரிகள் காக்க வைத்தது, வெயிலில் நடந்து வந்தது. வீட்டில் கரண்டு இல்லாதது, குளிப்பதற்கு தண்ணீர் இல்லாதது, இடத்தை விற்றுவிடலாம் என்று சொல்லி வள்ளியம்மை தகராறு செய்வது என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டார். தன்னுடைய ஊரைப்பற்றியும், வீட்டைப்பற்றியும் யோசித்தார்.
வீரமுத்துவினுடைய சொந்த ஊர் நற்குணம். அது பழைய காலத்துப்பெயர். இப்போது நெற்குணமாகிவிட்டது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்தில் இறங்கி மேற்காக மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். மூன்று கிலோமீட்டர் தூரமும் இருபக்கமும் வரிசையாக புளியமரங்கள் இருக்கும். அதோடு சேர்த்து அங்கங்கே ஏழு ஆலமரம் இருக்கும். ஒவ்வொரு ஆலமரத்தின் கீழும் ஒரு சுமைத்தாங்கி கல் இருக்கும். ஊர்முனையிலேயே பெருமாள் கோவில் இருக்கும். கோனார்கள் அதிகம் உள்ள ஊர். ஊரின் மையத்தில் பிள்ளையார் கோவில் இருக்கும். மொத்தம் மூன்று தெரு. வடக்குத்தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, வடக்குத்தெருவில் எட்டாவது வீடுதான் வீரமுத்துவினுடையது. அந்த வீட்டை ஊரில் எல்லாரும் மணியக்காரர் வீடு என்று சொல்வார்கள். வீரமுத்துவுக்கு வீரமுத்து என்று பெயர் இருந்தாலும் ஊரில் எல்லோரும் ‘மணியாரோட மூணாவது பையன்’ என்றுதான் சொல்வார்கள். வீரமுத்துவினுடைய தாத்தாவும், அப்பாவும் மணியக்கார்களாக இருந்தவர்கள். மூன்றுகட்டு வீடு. நாட்டு ஓடு போட்டது. தெற்குப்பார்த்த வாசல். பத்தடி நீளத்தில் ஐந்தாறு அடி அகலத்தில் இரண்டு திண்ணைகள். இரு பக்கமும் நான்கு தூண்கள் இருக்கும். ஊர்ப்பஞ்சாயத்து எல்லாம் அந்தத் திண்ணையில்தான் நடக்கும். ஊருக்குள் எந்த அதிகாரிகள் வந்தாலும் நேராக வீரமுத்து வீட்டு திண்ணையில் வந்துதான் உட்காருவார்கள். விசாரணை செய்வார்கள். வீட்டிற்கு பின்புறம் பெரிய தோட்டம். மாட்டுக்கொட்டகை, கிணறு, வைக்கோல்போர், அதற்கடுத்து பூவரசு மரம், மாட்டிற்குரிய தண்ணீர் தொட்டி, மாவாட்டுக்கல், உரல் எல்லாம் இருக்கும். தீபாவளிக்கு இட்லி சுடவும், பொங்கலுக்கு வடை சுடவும், மாவாட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார்கள். எப்போதெல்லாம் எண்ணெய்த் தேய்த்துவிடுகிறார்களோ, அப்போதெல்லாம் அந்த மாவாட்டு கல்லில் உட்கார்ந்துதான் வீரமுத்து வெயில் காய்வார்.
வீட்டின் மேற்குப்புற சுவரை ஒட்டி தானியக்குதிர் இருக்கும். அதற்குப் பக்கத்திலேயே விரைதானிய மூட்டைகள் கிடக்கும். மணியம் சம்பந்தமான கணக்குப் புத்தகங்கள் ஒரு மரப்பெட்டியில் இருக்கும். ஜாதக நோட்டுகள் ஒரு மஞ்சள் பையில் வடக்குப்புற சுவர் ஆணியில் தொங்கும். அதற்கு ஏழுஎட்டு அடித்தள்ளி மூன்று நான்கு சாமிபடங்கள் இருக்கும். உரி இருக்கும் இடம், அம்மிக்கல் கிடக்கும் இடம், துணிகொடி தொங்கும் இடம், புளிப்பானை, தண்ணீர்பானை, உப்புச்சட்டி, ஊறுகாய் களையம், அடுக்குபானைகள் இருந்த இடம், சாப்பிட்ட இடம், படுத்த இடம், விளக்கு மாடம் என்று ஒவ்வொன்றாக வீரமுத்துவின் நினைவில் காட்சிகளாக வந்தன.
மொத்த வீட்டிலும் அவருக்கு பிடித்த இடம் திண்ணைதான். தோட்டத்தில் பூவரசு மரம். மரத்தில் ஏறுவது ஒரு விளையாட்டு. இறங்குவது ஒரு விளையாட்டு. மரத்தை சுற்றிச்சுற்றி வருவது ஒரு விளையாட்டு. ஒவ்வொரு அமாவாசை அன்றும் விரத சாப்பாட்டிற்கு இலை தைப்பதற்கு பூவரசு இலையை கிழிந்துவிடாமல் பறித்துவந்து கொடுப்பது வீரமுத்துவினுடைய வேலை. பகல் முழுவதும் மாவாட்டுக்கல்லுக்கும், பூவரசு மரத்திற்குமிடையே ஓட்டப்பந்தயம் நடக்கும். பக்கத்து வீட்டு, முருகன், பெரியசாமி, சாந்தி, மரகதம் என்று தெருபிள்ளைகள் எல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடுவார்கள். பூவரசு மரம்தான் எல்லாரையும் வளர்த்தது. மாட்டுப்பொங்கல் அன்று பூவரசு மரத்தின்கீழ்தான் பொங்கல் வைப்பார்கள். கடலை, எள், சோளம், வரகு என்று தானியத்தை தோட்டத்தில்தான் காயப்போடுவார்கள். பன்றி, கோழி, ஆடு, மாடு தின்றுவிடாமல் காவல் காப்பார்கள். காவலுக்கு இருப்பவர்கள் ஒரு சாக்கைப்போட்டு பூவரசு மரநிழலில்தான் உட்கார்ந்திருப்பார்கள். வீரமுத்துவும் பூவரசு மரநிழலில் காவலுக்கு உட்கார்ந்திருக்கிறார்.
சின்னப் பிள்ளையாக இருக்கும்போது வெளியில், தெருவில் சுற்றிக்கொண்டிருந்தால் “வீட்டுக்குப்போ” என்றும், “வெயில்ல எதுக்கு சுத்துற? வீட்டுக்குப்போ“ என்றும், மழையில் நனைந்துகொண்டு நடந்தால் “வீட்டவிட்டு எதுக்கு வெளிய வந்த? ஓடு வீட்டுக்கு” என்றுதான் யார் பார்த்தாலும் சொல்வார்கள். வயதானவர்கள் பார்த்தால் "யார்வீடு?" என்றும் "மணியார் வீட்டுப்பையனா?" என்றும்தான் கேட்பார்கள். பொதுவாக ஊரில் யார் விசாரித்தாலும் "எந்த வீட்டுப்பையன்?" என்றுதான் முதலில் கேட்பார்கள். அடுத்ததுதான் அப்பா, அம்மா பெயர் எல்லாம் கேட்பார்கள்.
வீரமுத்து பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அந்த வீட்டில்தான். அவருக்கு கல்யாணம் நடந்தது, மூன்று  குழந்தை பிறந்தது எல்லாம் அந்த வீட்டில்தான். வேலை கிடைத்து திட்டக்குடியில் வந்து வீடுகட்டிக்கொண்டு தங்கும்வரை அந்த வீட்டில்தான் இருந்தார். அந்த வீட்டில் முப்பத்தி ஐந்து வருடம் இருந்திருக்கிறார். கரண்ட் இல்லை, கொசு கடிக்கிறது, காற்று இல்லை, தூக்கம் வரவில்லை என்று ஒரு நாள்கூட அந்த வீட்டில் அவர் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு இருந்ததில்லை. திண்ணையில் படுத்தாலும், வீட்டிற்குள் படுத்தாலும், தோட்டத்தில் கட்டிலைப்போட்டுப் படுத்தாலும், படுத்த பத்தாவது நிமிசத்திற்குள்ளாகவே தூங்கிவிடுவார். தன்னை அம்மா வளர்த்தாளா, வீடு வளர்த்ததா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நல்லத்தூக்கத்தில் தட்டி எழுப்பியது மாதிரி வள்ளியம்மை வந்து "சாப்புடலாம். எழுந்திருங்க" என்று சொன்னாள். எழுந்து உட்கார்ந்த வீரமுத்து வள்ளியம்மையிடம் சொன்னார். "பொறந்த வீட்டுலியே செத்துப்போவணுமின்னு ஆச."
"ஆம்பள அப்பிடி சொல்லலாம். பொம்பள அப்பிடி சொல்ல முடியுமா? எங்கியோ பொறக்கிறம், எங்கியோ சாவறம். இதுல என்னா பொறந்த வீடு, புகுந்த வீடு?"
வீரமுத்து ஆச்சரியமாக வள்ளியம்மையைப் பார்த்தார். குத்தலான குரலில் சொன்னார் "நல்லாதான் பேசுற. வாத்தியாராப் போயிருக்கலாம்."
வீரமுத்து சொன்னதை காதில் வாங்காத வள்ளியம்மை அழுத்தம் திருத்தமாகவும், தன்னுடைய பேச்சை மீறக்கூடாது என்பது மாதிரியும் சொன்னாள். "சினிமா வசனம் மாதிரி, மணியார் வீடு நான் பொறந்த வீடு’ நான் வாழ்ந்த வீடுன்னு வசனம் பேசாம அந்த பையன் வந்தா ஒரு வெலய பேசி அட்வான்ஸ் வாங்கப் பாருங்க. வீடா இருந்தாக்கூட யோசிக்கலாம். இப்ப வெறும் மண்ணுதான்."
"அது மண்ணுதான். ஆனா அது வெறும் மண்ணு மட்டுமில்ல. எத்தினியோ பேர் பொறந்த எடம். வளந்த எடம். சிரிச்சி, விளையாடிய, தன்ன மறந்து தூங்குன எடம். அந்த எடம்தான் என்ன வளத்துச்சி. எங்கம்மா இல்ல. தெரியுமா? பயமில்லாம, அச்சமில்லாம அந்த வீட்டுலதான் நான் தூங்கி இருக்கன்." சண்டைக்காரியிடம் சொல்வது மாதிரி சொன்னார். வீரமுத்து கோபப்படுவதை, வேகமாகப் பேசுவதையெல்லாம் வள்ளியம்மைப் பொருட்படுத்தியது மாதிரி தெரியவில்லை. சர்வசாதாரணமாக சொன்னாள். "இப்ப அது ஊர்ச்சனம் குப்பகொட்டுற எடமாத்தான் இருக்கு."
"பணத்துக்காகத்தான அப்பிடிச்சொல்ற? பணத்த மனுசனில்ல, நாய்கூட திங்காது தெரியுமா? பணம்ங்கிறது வெறும் பேப்பர் தெரியுமா?"
"வெறும் பேப்பர்தான். ஆனா உலகம் அதுலதான் இயங்குது தெரிஞ்சிக்குங்க. பேப்பர மனுசனும் திங்க மாட்டான். நாயும் திங்காது. ஆனா மாடு திங்கும். டவுன்ல இருக்கிற மாடெல்லாம் சினிமா போஸ்டரயும், விளம்பர பேப்பரயும்தான் விரும்பி திங்குது. பில்லு திங்கிறத டவுனு மாடுகூட மறந்திருச்சி." சிரித்தாள் வள்ளியம்மை. பிறகு சொன்னாள் "பணத்துக்காகத்தான் சனங்க ஊர்விட்டு, ஊர்போறாங்க. நாடுவிட்டு, நாடுபோறாங்க. வேலக்கிப் போறன்ங்கிற பேர்ல நீங்களும்தான் வீட்டவிட்டு, ஊரவிட்டுத்தான் இந்த ஊருக்கு வந்தீங்க?"
"எதுக்கு என் உசுர வாங்குற? முன்னால நிக்காத போ." என்று சொல்லி வீரமுத்து கத்தினார். அதற்காக வள்ளியம்மை கோபப்படவுமில்லை தூரமாக போகவுமில்லை. சிரித்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டாள். "நான் அந்தப்பக்கம் போயிட்டா, உங்களுக்கு சாப்பாடு எப்பிடி இந்தப்பக்கம் வரும்?"
"சனியன எந் தலயில கட்டிவச்சிட்டானுவ" வீரமுத்து தலையில் அடித்துகொண்டார்.
வள்ளியம்மை சிரித்துக்கொண்டே போய் சாப்பாடு, குழம்பு, ரசம், மோர் என்று ஒவ்வொன்றாக எடுத்துகொண்டுவந்து வைத்தாள். பாயைவிட்டு எழுந்த வீரமுத்து, பாயை சுருட்டி வைத்தார். சமையலறைக்கு சென்று கையை கழுவிக்கொண்டுவந்து சாப்பிட உட்கார்ந்தார். கரண்டியால் சோற்றை அள்ளி தட்டில் போட்டாள். பிறகு நிதானமாக சொன்னாள். "முட்டாளு கிறுக்குத்தனம் செஞ்சா தப்பு இல்ல. நீங்க ஹெட்மாஸ்ட்டரா இருந்தவரு."
"புரியல."
வள்ளியம்மை குழம்பை ஊற்றினாள். பிறகு சிறுபிள்ளைக்கு சொல்வது மாதிரி சொன்னாள். "நம்ப காலத்திலியே ஊருக்குப்போறது கொறஞ்சிப்போச்சி. ரெண்டு பையனும் மெட்ராசில வேலப் பாக்குறானுவ. அங்கியே செட்டிலாயிடுவானுங்க. பொண்ணுக்கு எங்க மாப்ள அமயுமோ. எந்த ஊருக்குப் போவாளோ. அவளும் மெட்ராசிலதான் வேலப்பாக்குறா. அவளுக்கு மெட்ராசிலியே மாப்ள பாக்குறதுதான் நல்லது. அவளுக்கு கல்யாணமாயி போயிட்டா, அப்பறம் நம்பளுக்கு இந்த ஊர்ல என்னா வேல? புள்ளைங்க எங்க இருக்கோ அங்க போயிட வேண்டியதுதான? இந்த ஊர்ல இருக்கிற பல பேரும், புள்ளைங்கள இஞ்ஞினியர் படிக்க வக்கிறவங்களும், படிக்க வச்சவங்களும் டெட்ராசிலதான் எடம் வாங்குறாங்க. பிளாட் வாங்குறாங்க. இஞ்ஞினியர் படிச்ச பசங்களுக்கு மெட்ராசில, பெங்களுர்லதான வேல கிடைக்குது. அதனால அந்தப் பையன் வந்தா மணியாரு வீடுன்னு பெரும பேசாம, வசனம் பேசாம, கூட்டிக்கொறச்சி ஒரு வெலயபேசி அட்வான்ஸ் வாங்கப் பாருங்க. அத வச்சி மெட்ராசில ஒரு பிளாட்ட, ஒரு மனயன்னு வாங்கிடலாம்."
“மெட்ராசில சாமி ரூமுக்கும் கக்கூஸ் ரூமுக்கும் இடையில ஒரு சுவர்தான் இருக்கும். அதான் வீடு. அதப்போயி வாங்கணுமா?”
“மெட்ராசில இருக்கிறவங்க எல்லாம் சனங்க இல்லியா?”
“ஒரு எடத்த விக்கிறது வாழப்பழத்தில தோல உரிக்கிறது மாதிரி. ஒரு எடத்த வாங்குறதுங்கிறது மரம் வளக்க கன்னு ஊனுற மாதிரி.”
“நீங்க வாத்தியாரு.”
"மோர ஊத்து."
வீரமுத்து சாப்பிட்டு முடித்து கைகழுவும்போது சின்னசாமியின் மகன் கனகசபை வந்தான். அவனைப் பார்த்ததுமே வீரமுத்துவுக்கு பாம்பைப் பார்த்தது மாதிரி இருந்தது. ஒப்புக்கு “வா” என்று சொன்னார். “சாப்புடு” என்று சொன்னார்.
"அபூர்வமாத்தான் வீட்டுக்கு வந்திருக்க. சாப்புடு" வள்ளியம்மை கட்டாயப்படுத்தினாள். மறுத்துப்பேசாமல் கனகசபை சாப்பிட உட்கார்ந்தான். வீரமுத்துவுக்கு அந்த இடத்தில் இருக்கபிடிக்கவில்லை. அதனால் “கரண்ட் இல்ல. வேர்க்குது. வெளிய நிக்குறன்” யாரிடம் என்றில்லாமல் சொல்லிவிட்டு வெளியே வந்தார். மதில்சுவரை ஒட்டி நின்றுகொண்டு தெருவைப் பார்த்தார். பக்கத்து வீடுகளையும், எதிரிலிருந்த வீடுகளையும் பார்த்தார்.அவருடைய பார்வை மட்டும்தான் தெருவில் இருந்தது.
வள்ளியம்மை சொல்வது சரியா, அவள் சொல்வது மாதிரி செய்யலாமா, மகன்களிடம் கேக்கலாமா என்று யோசித்தார். பெரிய பையனிடம் கேட்டால் "அந்த ஊர்லப்போயி யாரு இருப்பா? ஊரா அது?" என்று கேட்பான். சின்ன பையனிடம் கேட்டால் "உங்க இஷ்டம், ஆனா அந்த ஊர்ல எடம் இருக்கிறது சுத்த வேஸ்ட்" என்றுதான் சொல்வான். இருவருமே ஊரில் இருக்கும் நிலத்தையும் வீட்டையும் விற்க சொல்லி ஏற்கெனவே கட்டாயப்படுத்திக்கொண்டுதான் இருந்தனர். அவர்கள் சொல்வதுதான் சரியா? கடைசியாக ஊருக்கு எப்போது போனோம் என்று நினைத்துப் பார்த்தார். ஏழுமாதத்திற்கு முன்பு, பங்காளி வீட்டு சாவுக்கு போயிருந்தார். வீரமுத்துவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏன் அடிக்கடி ஊருக்குப்போகவில்லை? கல்யாணம், சாவு, விசேஷம் என்று தகவல்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் வள்ளியம்மையைத்தான் அனுப்பிவைப்பார். வீடு சரிந்துவிழுந்ததிலிருந்து, எங்குப்போய் உட்காருவது, எங்குப்போய் தங்குவது என்று தயக்கத்திலேயே ஊருக்குப்போவதை குறைத்துக்கொண்டார். வீடு இடிந்துவிழுந்தபோதே சரிசெய்திருக்க வேண்டும். தங்கியிருக்க வேண்டும். பதினெட்டு வருசத்திற்கு முன்பு மேற்குப்புற சுவர் சரிந்துவிழுந்துவிட்டது. பிறகு ஒவ்வொரு பகுதியாக விழந்துவிட்டது. இப்போது காலிமனை. அந்த இடத்தை விற்றுவிட்டால், அடுத்தது நிலம், அதையும் கொடுத்துவிட்டால் நற்குணத்திற்கும் தனக்கும் என்ன சம்பந்தம்?
"என்னா ஊரு?" என்று யார், எப்போது கேட்டாலும் நற்குணம் என்றுதான் சொல்வார். தவறிப்போய்க்கூட திட்டக்குடி என்று சொன்னதில்லை. அப்படி சொல்ல வாயும் வந்ததில்லை. திட்டக்குடிக்கு வந்து முப்பது வருசத்திற்குமேல் ஆகிவிட்டது. முதலில் "போக்குவரத்து வசதிக்காகவும், பிள்ளைங்க படிப்புக்காகவும்தான் இங்க இருக்கன். சர்வீஸ் முடிஞ்சதும் ஊருக்குப்போயிருவன்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். பணி ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. "ஊர்ல போயி என்னா செய்யப்போறீங்க? பசங்க மெட்ராசிலயிருந்து வந்து போவ இதுதான சௌகரியமா இருக்கு" என்று வள்ளியம்மை மட்டுமில்லை, பிள்ளைகளும் அதையேதான் சொன்னார்கள். வீரமுத்துவுக்கு பேச வழியில்லாமல் போய்விட்டது. ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்த வீரமுத்து “விக்க முடியாது. நான் செத்த பிறகு எதுனாலும் செஞ்சிக்குங்கன்னு சொல்லிடலாம்” என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தபோது, நல்ல கனவு கண்டுகொண்டிருக்கும்போது தட்டி எழுப்பியது மாதிரி வள்ளியம்மை "எதுக்கு வாசல்ல நிக்குறிங்க? உள்ளார வாங்க" சத்தமாக கூப்பிட்டாள். வீட்டிற்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
"ஒடம்பு சரியில்லியா? ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க?" கனகசபை கேட்டான்.
"அதெல்லாமில்ல. வெயில் அதான். ஊர்ல என்னா சேதி?" ஒப்புக்கு விசாரிக்க ஆரம்பித்தார்.
"ஊர்ல என்னா இருக்கு? ஒண்ணுமில்ல. எப்பவும்போல சுடுகாடு மாதிரிதான் இருக்கு" கனகசபை சிரித்தான்.
"பொறந்து வளந்த  ஊர அப்பிடி சொல்லாத தம்பி."
கனகசபை பேசவில்லை. வெறுமனே சிரிக்கமட்டுமே செய்தான்.
"சிங்கப்பூர்ல எத்தன வருசமா இருக்க?"
"ஒம்போது வருசமாயிடிச்சி."
"சம்பளம் என்னா வரும்?"
"நம்ப நாட்டு பைசாவுக்கு எம்பதாயிரம் வரும்."
"அடேயப்பா?" வீரமுத்து ஆச்சரியப்பட்டார். கனகசபை தன்னுடைய விலை உயர்ந்த செல்போனில் எதையோ பார்த்தான்.
"என்னா படிச்ச?"
"பாலிடெக்னிக்."
"உன் தம்பியெல்லாம் என்னாப் பண்றாங்க?"
"ரெண்டுபேரும் சிங்கப்பூர்லதான் இருக்காங்க."
"நல்லா இருக்காங்களா? அவுங்களுக்கும் இதே சம்பளமா?"
"ஆமாம்."
"என்னா படிச்சிருக்காங்க?"
"ஒருத்தன் டிகிரி. இன்னொருத்தன் இஞ்ஞினியர்."
"நம்ப ஊர்லயிருந்து வேற யாரு யாருலாம் இருக்காங்க?"
"நூறுபேருக்குமேல இருக்கும்."
"நிசமாவா சொல்ற? அடேயப்பா?"
"சிங்கப்பூர்ல, மலேசியாவுல, சவுதி அரேபியாவில, பக்கிரினில, துபாயிலன்னு மொத்தமா பாத்தா நம்ப ஊரு ஆளுங்க ஐநூறு பேராவது இருப்பாங்க. வீட்டுக்கு ஒரு ஆளாவது வெளிநாட்டுல இல்லாம இருக்காது. நீங்கதான் ஊருக்கு வரதயே வுட்டுட்டீங்க. அடிக்கடி ஊருக்கு வந்துபோனா ஊர் நிலவரம் தெரியும்" கனகசபை சிரித்தான். பிறகு செல்போனில் எதையோ பார்த்தான்.
"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு. ஊர்ல இப்ப யார்தான் விவசாய வேலய பாக்குறாங்க?"
சுவாரசியமான விசயத்தை கேட்டது மாதிரி கனகசபை சிரித்தான்.
"கல்ல, எள்ளு, சோளம், வரகுன்னு போடுறத எல்லாரும் எப்பியோ வுட்டுட்டாங்க. எல்லாரும் சவுக்குத்தான் போடுறாங்க. அதுக்குத்தான் அதிகமா ஆளு தேவ இல்ல. நட்டுவுட்டுட்டா போதும். ரெண்டு மூணு வருசம் கழிச்சி புரோக்கர்கிட்ட சொல்லிவிட்டா போதும். அவங்களே வந்து வெட்டிக்கிட்டுப்போயிடுவாங்க." ரொம்ப பெரிய மனுசன் மாதிரி பேசிய கனகசபை அசட்டைத்தனமாக சிரித்தான். புத்திமதி சொல்கிற தொனியில "விவசாயம் செஞ்சா சோறுதான் திங்கலாம். வீடு கட்டமுடியாது. நக வாங்க முடியாது. ஜாலியா, ஆப்பிள் ஃபோன் வச்சிருக்க முடியாது. வசதியா இருக்க முடியாது" கனகசபையின் பேச்சு வீரமுத்துவை எரிச்சலடைய வைத்தது. வெறுப்புடன் அவனைப் பார்த்தார்.
"கல்யாணமாயிடிச்சா?"
"முதல்ல வீடு கட்டணும். அப்பறம்தான் கல்யாணம்."
"கல்யாணத்துக்கும் வீடு கட்டுறதுக்கும் என்னா சம்பந்தம்?"
"நீங்க இன்னும் பழய ஆளாவே இருக்கிங்க?" கனகசபை சிரித்தான். பிறகு முக்கியமான விசயத்தை, தனக்கு மட்டுமே தெரிந்த விசயத்தை சொல்வது மாதிரி சொன்னான். "முன்னெ எல்லாம் நிலம் எவ்வளவு இருக்கு, பொட்டாங் காடா, வயக்காடான்னு பாத்துத்தான் பொண்ணு தருவாங்க. இப்பலாம் வீடு எவ்வளவு பெருசா இருக்குன்னு பாத்துத்தான் பொண்ணு தராங்க." கனகசபை வாய்விட்டு சிரித்தான். வீரமுத்துவின் மனதில் அதிக பிரசங்கி என்ற எண்ணம் உண்டாயிற்று.
கனகசபையின் அப்பா சின்னசாமி, வீரமுத்துவிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி மரியாதையாகத்தான் பேசுவார். சத்தம்போட்டு பேச மாட்டார். தேவைக்கு அதிகமாக பேச மாட்டார். நாற்காலியில், திண்ணையில் உட்கார் என்று எவ்வளவு கட்டாயப்படுத்தினாலும் கேட்காமல் நின்றுகொண்டேதான் பேசுவார். அவருடைய மகனா இவன்? பேச்சும், சிரிப்பும், உட்கார்ந்திருக்கும் விதமும் மற்றவர்களை எளிதில் எரிச்சல்படுத்திவிடும் என்று நினைத்த வீரமுத்து பேச்சை முடித்துக்கொள்ள நினைத்தார்.
"எத்தன சதுரத்தில வீடு கட்டப்போறிங்க? கூர வீட்ட என்னா செய்யப்போறிங்க?"
"அளவு தெரியல. ஆனா மொத்த செலவு எம்பது லட்சம். எஸ்டிமேட்."
"அவ்வளவு பணம் போட்டா வீடு கட்டப்போறிங்க."
"பழயகாலமா இருந்தா நெலம், தோட்டம்ன்னு வாங்கிப்போடலாம். இப்பலாம் வீடுதான். வீடுதான் இப்ப மதிப்பு. அந்தஸ்து" கனகசபை சிரித்தான். இதெல்லாம் பெரிய விசயமா என்பது மாதிரி இருந்தது அவனுடைய சிரிப்பு. அவனுடைய பேச்சையும், சிரிப்பையும், பொறுக்க முடியாமல் "என்னா விசியமா வந்த?" என்று கேட்டார்.
"வீடு கட்டப்போறம். மூணுபேத்துக்கும் சேத்துத்தான் கட்டப்போறம். எங்க வீடு ரொம்ப சின்னது. கூடுதலா எடமுமில்ல. நாலு செண்டுதான் இருக்கு. அதுல மூணுபேத்துக்கும் சேத்து வீடு கட்ட முடியாது. உங்க எடம் சும்மாதான கெடக்கு. அத வெலக்கி தரீங்களான்னு கேக்க வந்தன்."
"யோசிச்சி சொல்றன்."
"விசயத்த சொல்லிட்டுப் போயிருந்தன். உங்ககிட்ட மேடம் சொல்லலியா?" அதிகாரமாகக் கேட்டான் கனகசபை. சாப்பிட்டுவிட்டு சமையலறையிலிருந்து வந்த வள்ளியம்மை "நான் சொல்லிட்டன் தம்பி. ஊர்ல உள்ள வெலயவிட நீ இருபதாயிரம் கொறச்சி கேக்குற. அதான் யோசிக்கிறாரு. நல்ல வெல வந்தா கொடுக்கலாம். இல்லன்னா அதுபாட்டுக்கும் கெடந்தா போவுது. வெறும் மண்ணுதான? யாரு திருடிக்கிட்டுப் போவப்போறாங்க" என்று சொன்னாள்.
“வெறும் மண்ணுதான” என்று வள்ளியம்மை சொன்னது வீரமுத்துவுக்கு பிடிக்கவில்லை. அவளை முறைத்துப் பார்த்தார்.
"ஊர்ல விசாரிச்சிப் பாருங்க. இதுவர எம்பதாயிரத்துக்கும்மேல ஒரு பைசாகூட வெல ஏத்திப்போவல. நான் சொல்றது ரகசியமில்ல. பக்கத்து எடம். அதோட பரப்பளவு. அதிகமாவும் இருக்கு. அதனாலதான் வெல அதிகமா இருந்தாலும் வாங்கலாம்ன்னு முடிவு செஞ்சம். நம்ப ஊருக்கு ஒரு செண்டு எம்பதாயிரம்ங்கிறதே அதிகம். தெரியுமா?" கனகசபை அலட்சியமாகக்  கேட்டான்.
"யோசிச்சி சொல்றன். நீ போயிட்டு வா. அப்பறமா பேசிக்கலாம்."
"ஒரே தவணயா பூரா பணத்தயும் தந்திடுறன். எடத்துக்கு மட்டுமே பதினெட்டு லட்சம் செலவு ஆவுது."
"இப்ப நீ போயீட்டு வா. பேசிக்கலாம்." என்று வீரமுத்து சொன்னதும் வள்ளியம்மை அவரை முறைத்துப்பார்த்தாள். பிறகு கனகசபையிடம் சொன்னாள். "வெல படியலங்கிறதுக்காகத்தான் அப்பிடி சொல்றாரு. நீ செண்டுக்கு இன்னும் இருபதாயிரத்த சேத்துக்கொடு. ஒத்துக்குவாரு."
வீரமுத்து கோபமாக வள்ளியம்மையைப் பார்த்தார். பல்லைக்கடித்தார். என்ன பேசுகிறாள்? அவர் வெறுப்புடன் பார்ப்பதையும், முறைப்பதையும் பார்க்காத மாதிரி இருந்தாள் வள்ளியம்மை.
"உங்களுக்கும் வாணாம். எனக்கும் வாணாம். செண்டு தொண்ணூறாயிரம். அட்வான்ஸ் ஒரு லட்சம் தரன். எழுதுற அன்னிக்கி பூராப்பணத்தயும் தரன். புடிங்க பணத்த" பேண்ட் பாக்கட்டிலிருந்து ஆயிரம் ரூபா நோட்டு கட்டு ஒன்றை எடுத்து வீரமுத்துவிடம் நீட்டினான் கனகசபை.
"பணத்த உள்ளார வை. பணத்துக்கு ஒண்ணும் அவசரமில்ல. பசங்கள ஒரு வாத்த கேட்டுட்டு சொல்றன். இன்னிக்கித்தான் வந்திருக்க. என்ன அவசரம்?" வீரமுத்து நிதானமாக சொன்னார். அப்போது வள்ளியம்மை குறுக்கிட்டு "நீ இன்னும் பத்தாயிரத்த சேத்து கொடு. நான் வாங்கிக்கிறன்" என்று சொன்னாள்.
"எதுக்கு அவசரப்படுற?" வள்ளியம்மையை முறைத்தார் வீரமுத்து.
"நாங்க இல்லாதப்பட்டவங்கன்னு உங்களுக்கு தெரியும். இப்பத்தான் நாங்க கொஞ்சம் மேல வந்திருக்கம். நீங்க உதவுலன்னா வேற யாரு எங்களுக்கு உதவுவாங்க? நாங்களே கவர்மண்டு வேலயில இருந்தா உங்கள மாதிரி டவுன்லதான் எடம் வாங்கி வீடு கட்டிருப்பம்." கனகசபையின் குரல் முதன்முதலாக ஆணவம் இல்லாமல் வெளிவந்தது.
"எத்தன தலமுறயா அது மணியாரு வீடா இருந்துச்சி? எத்தன பேரு அந்த வீட்டு வாசல்ல கைகட்டி நின்னுயிருப்பாங்க? எத்தன கவர்மண்டு ஆபிசரு அந்த வீட்டுத் திண்ணையில உட்காந்திருப்பாங்க. எத்தன பஞ்சாயத்து அந்த திண்ணையில நடந்திருக்கும்? அந்த வீட்ட தெரியாதவங்க சுத்துப்பட்டு ஊர்ல இருப்பாங்களா? மணியாரு வீடுங்கிறதுக்காகவே நீ பத்தாயிரம் சேத்து கொடுக்கலாம். அவ்வளவு ராசியான எடம். வீடு கட்டுனா ஓகோன்னு இருப்பீங்க. பேரு, புகழோட வாழ்ந்த எடம் அது."
"நீ சும்மா இருக்க மாட்ட?" வள்ளியம்மையிடம் கேட்டார். பிறகு கனகசபையின் பக்கம் திரும்பி, "உங்க அப்பா அம்மா வரட்டும். பேசிக்கலாம். அவங்கள அழச்சிக்கிட்டு வா" என்று வீரமுத்து சொன்னார்.
"எங்க அப்பா, அம்மாவ எல்லாம் கேக்குறதுக்கு ஒண்ணுமில்ல" என்று சொல்லிவிட்டு சிறிதுநேரம் பேசாமல் இருந்தான். என்ன நினைத்தானோ "மணியாரு வீடுங்கிற பேருக்காக பத்தாயிரம் சேத்து தரன். செண்டு ஒரு லட்சம். புடிங்க அட்வான்ஸ்" பணத்தை நீட்டினான் கனகசபை.
"இன்னிக்கி செவ்வாக் கிழம வேண்டாம். நீ ஏன் ஒரே புடிவாதமா நிக்குற? இன்னிக்கேவா வீடு கட்டப்போற?"
"பணத்துக்கென்ன செவ்வாக் கிழம? நீ கொடு பணத்த" பணத்தை வாங்கினாள் வள்ளியம்மை.
"என்னா செய்யுற?" அதட்டலாக கேட்டார் வீரமுத்து “பொம்பள ராஜ்ஜியம் பண்ணாத” எனறு கேட்டு கத்தினார். அதை பொருட்படுத்தாத வள்ளியம்மை பணத்தை எடுத்துக்கொண்டுபோய் பீரோவில் வைத்தாள்.
"மணியாரு வீடுங்கிறது செத்துப்போயிடிச்சா? நாலஞ்சு தலமுறயா இருந்த வீட்டுக்கு பால் ஊத்திட்டிங்களா? என்னோட ஊர்ன்னு இனிமே எத சொல்லுவன்?" வீரமுத்து கேட்டார். அதை கனகசபை மட்டுமல்ல வள்ளியம்மையும் காதில் வாங்கவில்லை. சட்டென்று எழுந்து சென்று படுக்கையறையில் குப்புறப்படுத்துகொண்டார். நற்குணம் வீட்டில் தான் விளையாடிய இடங்களை எல்லாம் நினைவில் தேட ஆரம்பித்தார். கண்களில் திரண்ட கண்ணீர் காட்சிகளை மறைத்துவிட்டது.

தினமணி - தீபாவளி மலர் (2015)