வியாழன், 24 மார்ச், 2016

தமிழ் சினிமா : காட்டப்படுவதுவும் காண்பதுவும் – அ.ராமசாமி /விமர்சனம் – இமையம்.

தமிழ் சினிமா : காட்டப்படுவதுவும் காண்பதுவும்.ராமசாமி /                                         விமர்சனம்இமையம்.

அண்மைக் காலத்தில் வெளிவந்து பெரிதும் பாராட்டப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வசூல் ரீதியாக வெற்றி பெற்ற, தோல்வியுற்ற தமிழ் சினிமாக்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே காண்பதுவும், காட்டப்படுவதுவும். இந்த நூலின் வழியே தமிழ் சினிமா பார்வையாளனிடம் .ராமசாமி ஒரு உரையாடலை நிகழ்த்த விரும்புகிறார். இந்த உரையாடலின் மையமாக இருப்பது சினிமா சார்ந்த ரசனையை, பார்வையை உருவாக்குவது. எது நல்ல சினிமா, எது கெட்ட சினிமா, எது பார்க்க வேண்டிய படம், எது நிராகரிக்கப்பட வேண்டிய படம் என்ற கேள்விகளை முன்வைத்து தன்னுடைய கட்டுரைகளின் வழியே பதில்களை தேடுகிறார். “நான் எப்போதும் சினிமா விமர்சனம் எழுதவில்லைஎன்று .ராமசாமி சொல்கிறார். அவர் விமர்சனம் எழுதவில்லை. அது உண்மைதான். ஆனால் தன்னுடைய கட்டுரைகளின் வழியே ஒரு விவாதத்தை உருவாக்குகிறார். தமிழ் சினிமா என்று ஒன்று இருக்கிறதா, இந்திய, உலக சினிமா என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கிறார். அப்படியிருந்தால் அதற்கான காரணங்கள் என்ன? சினிமாவை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிந்துகொள்கிறோம்? கலை என்பது நமது மனதை பண்படுத்த வேண்டும். பண்பாட்டை ஒரு படி மேலே உயர்த்த வேண்டும். இவைதான் கலைக்கான விசையாக இருக்க வேண்டும். ஆனால் நமது சினிமா நம் மனதை கெடுக்கிறது. நமது பண்பாட்டை அழிக்கிறது. இது ஒரு கலை வடிவம் செய்யக்கூடிய வேலை அல்ல.
மெட்ராஸ், விஸ்வரூபம், ஏழாம் அறிவு, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, அவன் இவன், நான் கடவுள், எந்திரன், கந்தசாமி, அரவான், ராவணன், திருமணம் என்னும் நிக்காஹ், பூர்ணமை நாளில் ஒரு மரணம், ஈசன் போன்ற தமிழ் படங்கள் ஒவ்வொன்று குறித்தும் .ராமசாமி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த படங்கள் அதனுடைய ரசிகர்களான பார்வையாளனுக்கு சொன்ன செய்திகள் என்ன? எந்திரன், கந்தசாமி, நான் கடவுள், ஏழாம் அறிவு போன்ற படங்கள் எந்த அளவுக்கு யதார்த்த சமூகத்தோடு ஒட்டியிருந்தன? சாதாரண புதுமுக, தோற்றப் பொலிவுக்கூட இல்லாத ஒரு நடிகனை வைத்து எடுக்கப்பட்ட அழகர்சாமியின் குதிரை எப்படி வெற்றி படமானது? தமிழ் சினிமா பார்வையாளனுடைய ரசனையை எப்படி மதிப்பிடுவது? ஒவ்வொரு படமும் எப்படி வெற்றி பெற்றது, எதனால் தோல்வியுற்றது என்பதோடு அந்தந்த சினிமா படம் முன்னிருத்திய, முன்னிருத்த விரும்பிய மையம் எதுவென்று ஆராய்கிறார் .ராமசாமி. மணிரத்தினத்தின்ராவணன்படம் எதனால் தோல்வி படமானது, ‘கந்தசாமிபடம் மிகைக்கற்பனையால் நம்பகத்தன்னையை எப்படி இழந்து நிற்கிறது? ‘டர்ட்டி பிக்சர்ஸ்படம் சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களுககு சொல்லத்தவறியது என்ன? இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றிப் படமானதற்கு எது காரணம்? எந்திரன் ஏன் நல்ல படம் இல்லை? ‘மெட்ராஸ்திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் கவனிக்கத்தக்கப் படமாக ஏன் இருக்கிறது? சில்க் ஸ்மிதாவின் தற்கொலை எப்படி சுய அழிவின் வெளிப்பாடாக இருந்தது என்பது குறித்தெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாயகர்களின் காலம் என்பதுபோய், இயக்குநர்கள் கூடுதல் வெளிச்சம் பெற வைப்பது எது? பாலா எப்படி மற்ற இயக்குநர்களைவிட கூடுதல் வெளிச்சம் பெறுகிறார்? சினிமா என்பது முற்றிலும் கூட்டுழைப்பு அடிப்படையில் உருவாவது. ஆனால் தமிழ் சினிமா நடிகரை முன்னிருத்துகிறது. இல்லையென்றால் இயக்குநரை முன்னிறுத்துகிறது. ஏன்? தமிழ் சினிமா முன்னிருத்துகிற நடிகரோ, இயக்குநரோ அவ்வளவு சிறப்பானவர்களா? சிறப்பு எதுவும் பெறாதபோதும் எப்படி முன்னிலைப் பெறுகிறார்கள் என்பது ஆச்சரியம். சங்கர், பாலா, மணிரத்தினம் போன்ற இயக்குநர்கள் சிறப்பான தகுதி பெறுவதற்குரிய மனிதர்களா? இவர்களுக்கு மட்டும் ஏன் ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கிறது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் செயல்பாடுகள் எவை என்று முக்கியமான கேள்விகளை இக்கட்டுரையில் கேட்டிருக்கிறார். நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு கிடைக்கிற புகழ், வெளிச்சம், விளம்பரம், பணம் ஏன் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை?
அறிவார்ந்த சமூகத்தில் காட்சி குறிப்பாக சினிமா என்ற ஊடகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? தமிழ் சினிமா தனக்கான அறத்தை, பொறுப்புணர்வை செய்யாதது மட்டுமல்ல தொடர்ந்து உதாசினப்படுத்தியே வந்திருக்கிறது. தனக்கான சமூகக் கடமையை முற்றிலுமாக புறக்கணித்தே வந்திருக்கிறது. தன்னுடைய அறத்தை, சமூகக் கடமையை உணராத, ஒரு வகையில் இழிவுப்படுத்தியே வருகிற தமிழ் சினிமாவைதமிழ் ரசிகர்களால் எப்படி கொண்டாட முடிகிறது? பார்க்கவும், ரசிக்கவும் முடிகிறது? இதற்கான சமூக உளவியல் காரணங்கள் எவை என்பதை ஆராய்ந்து சொல்வதுதான் .ராமசாமியின் காட்டப்படுவதுவும் காண்பதுவும் என்ற இந்த கட்டுரைத் தொகுப்பு நூல்.
தமிழ் சினிமா அவ்வப்போது நிஜத்தைக் காட்டுவதாக பாவனை செய்கிறது. பாவனைகள் சிலநேரம் வெற்றி பெறுகின்றன. பல நேரங்களில் தோல்வியுறுகின்றன. அழகர்சாமியின் குதிரை வெற்றி பெற்றதற்கும், பாபா படம் சுருண்டு போனதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமா ஒருபோதும் நிஜத்தைக் காட்டுவதே இல்லை. காட்டியதுமில்லை. காட்டப்போவதுமில்லை. தமிழ் சினிமா என்றாலே மிகைதான். பிரம்மாண்டம்தான். யதார்த்தத்திற்கு அதில் வேலை இல்லை. தமிழ் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வை, தமிழ்ச்சமூகத்திற்கான வரலாற்றை, தொன்மத்தை, நம்பிக்கைகளை எந்த அளவிற்கு தமிழ்சினிமா வெளிப்படுத்தி இருக்கிறது? வெளிப்படுத்தவில்லை என்றால், ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை சராசரி பார்வையாளனின் நிலையிலிருந்து, சராசரி ரசிகனின் மனநிலையிலிருந்து கேட்டிருக்கிறார் .ராமசாமி. நாம் பார்த்து, ரசித்து, கொண்டாடிய சினிமாக்ககளில் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தும் பொருட்படுத்தத் தவறிய பல நுணுக்கமான விசயங்களை நூலிலுள்ள கட்டுரைகள் நினைவுப்படுத்துகின்றன.
இசை, நடனம், காட்சி அமைப்பு, கதை, கேமரா கோணம், எடிட்டிங் என்று பல விசயங்கள் தமிழ் சினிமாவில் எப்படி இருக்கின்றன என்பதை அறிவதற்கு இந்நூலைப் படிக்க வேண்டும். தமிழ் சினிமா அதனுடைய எஜமானர்களான பார்வையாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது. தற்காலிக கிளுகிளுப்பை மட்டுமே ஏற்படுத்துகிற தமிழ் சினிமாவின் நாயகர்களை தங்களுடைய கடவுளாக ரசிகர்கள் ஏன் கருதுகிறார்கள்? ரசிகர்களுடைய கடவுளாக இருக்கிற, கடவுளாக மாற்றப்பட்ட சினிமா நடிகர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? கடவுள்களாக வணங்கப்படுகிற நாயகர்கள் வணங்கப்படுவதற்குதகுதியானவர்களா? நடிகர்கள் மட்டும்தான் என்றால் அவர்கள் நிஜமான கலைஞர்களா? தமிழ் சினிமா நடிகர்கள் ஏன் எப்போதும் அரசியல்வாதிகளைப் போலவே நடந்துகொள்கிறார்கள்? ஏன் சமூகம் சார்ந்து சிறிதும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் இந்த நூலில் விடைகள் இல்லை. பதில்களும் இல்லை. கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அதுதான் இந்நூலின் நோக்கமும்.
சமூகத்திற்கான ஊடகமாக இருந்திருக்க வேண்டிய தமிழ் சினிமா என்ற கவலை வடிவம், பெரும் பணக்காரர்களுடைய, கார்ப்பரேட் நிறுவனங்களுடைய ஊடகமாக எப்படி மாறியது? சராசரி சினிமா ரசிகனுடைய வேலை சினிமாவைப் பார்த்துவிட்டு, மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு காத்திருப்பது மட்டும்தானா? தமிழ்ச் சமூகத்தைப்பற்றி ஏன் தமிழ் சினிமா ரசிகர்களும், சமூகமும் கவலை கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான் .ராமசாமியினுடைய கவலை. இது அவருக்கு மட்டுமான கவலை அல்ல. நமக்கான, சமூகத்திற்கான கவலை.
நல்ல சினிமா எது, வியாபார சினிமா எது, அழகியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஒரு படத்தை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது தெரியாததால் ஏற்படுகிற குழப்பங்கள் அதிகம். இதனால்தான் நடிகர்கள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள். மாற்றப்படுகிறார்கள். கடவுள் ஆவதற்கான தகுதியுடையவர்களா தமிழ் நடிகர்கள்? கலை என்றால் என்ன? கலைஞன் என்பவன் யார் என்று அறியாதவர்கள்தானே தமிழ் நடிகர்கள்.
தமிழ் சினிமா காட்டப்படுவதுவும், காண்பதுவும் நூலில் சினிமா சார்ந்த தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதின் வழியேதான் நிஜமான, சமூகத்திற்கான சினிமாவை உருவாக்க முடியும், பார்க்க முடியும் என்று .ராமசாமி கூறுவது மிகையான கூற்று அல்ல. சாத்தியப்படாததுமல்ல. இதுபோன்ற நூல்களை படிப்பதன் வழியேதான் சினிமா என்ற மகத்தான கலைவடிவத்தின் முழுத் திறனையும், வலிமையையும் புரிந்துகொள்ள முடியும், சினிமா சார்ந்த ரசனையை வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு இந்நூல் நிச்சயம் உதவும். சினிமா சார்ந்த புரிதலை ஏற்படுத்தும்.
மலைகள்.காம் மார்ச் 17 2016.