புதன், 21 பிப்ரவரி, 2024

லூசாடி நீ – காலச் சித்தன் (விமர்சனம்) - இமையம்

சிறுகதை, நாவல், கவிதை எழுதுவதற்கெல்லாம் நிறையப் படித்திருக்க வேண்டும், எழுத்துப் பயிற்சி, மொழிப் பயிற்சி இருக்க வேண்டும், வடிவம் பற்றி, உள்ளடக்கம், கட்டமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். என்னைப் பொறுத்த அளவில் சிறுகதை, நாவல், கவிதை எழுதுவதற்கு அடிப்படையாக இருக்கவேண்டியது சமூகத்தின் மீதான அக்கறைதான். சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவரால், சமூகம் இப்படி இருக்கிறதே என்று கவலைப்படாத, கோபப்படாத ஒருவரால், ஒரு நல்ல சிறுகதையை, நாவலை, கவிதையை எழுதிவிட முடியாது.

காலச் சித்தனுக்கு, அவர் வாழ்கிற சமூகத்தின் மீது நிறைய கோபங்களும் அக்கறைகளும் இருக்கின்றன என்பதற்கான சாட்சிதான் ‘லூசாடி நீ’.  இது அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.


தமிழ்நாட்டில் வறுமை, வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல், நோய் போன்றவை பெரிய பிரச்சினையாக இல்லை. சாதிதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சாதி - தனிமனித, குடும்ப, சமூக வாழ்வை முற்றிலுமாகக் குலைத்துவிடுகிறது. தமிழ்நாட்டில் சாதி எந்தெந்த விதத்தில் செயல்படுகிறது, யாருடைய வாழ்வை அது சீர்குலைக்கிறது, யாராருக்கெல்லாம் அரசியல், அதிகாரச் செல்வாக்கைப் பெற்றுத் தருகிறது என்பதை ‘அண்டர் கட்’, ‘திரௌபதியின் காதல்’, ‘ரயிலிசை’, ‘நீல நிறத்தில் ஒரு சைரன் விளக்கு’ போன்ற கதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. 

சாதி உக்கிரமாக இயங்குகின்ற இடங்களைக் காட்டுகிற காலச் சித்தன், அதே சமயத்தில் சாதி பணத்தின் முன், அதிகாரத்தின் முன் சமரசம் செய்துகொள்கிற மாதிரி, பணிந்துபோகிற மாதிரி எப்படி நாடகமாடுகிறது என்பதையும் மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.


‘அண்டர் கட்’, ‘திரௌபதியின் காதல்’, ‘ரயிலிசை’, ‘நீலநிறத்தில் ஒரு சைரன் விளக்கு’ போன்ற கதைகள் கற்பனைத் திறத்தால் எழுதப்பட்டவை அல்ல, நிஜம். 


நாம் தினமும் பார்க்கிற, கேள்விப்படுகிற, சந்திக்கிற, ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று ஒதுங்கிப் போகிற விஷயங்களைத்தான் காலச் சித்தன் கதைகளாக்கியிருக்கிறார். சாதி மாறி காதலிக்கிற, சாதி மாறி திருமணம் செய்துகொள்கிறவர்களுடைய வாழ்க்கையில் ஏன் சாதிச் கட்சிகள், சாதி சங்கங்கள் தலையிடுகின்றன? சாதி மாறி காதலிக்கிற, சாதி மாறி திருமணம் செய்துகொள்கிறவர்களுடைய வாழ்க்கையில் தலையிட்டு, சிக்கலை உருவாக்கி, அதன் மூலமாக, சாதிக் கட்சியை வளர்ப்பதற்கு, சாதி சங்கங்களை வலுப்படுத்துவதற்கு சாதி ஒற்றுமையை உருவாக்குவதற்கு, அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு முனைகிறார்கள் என்பதைத் துணிச்சலாக எழுதியிருக்கிறார் காலச் சித்தன்.

சாதி மாறி காதலிப்பதால், திருமணம் செய்துகொள்வதால் பெண்கள்தான் சித்திரவதைக்கு ஆளாவார்கள். ஆனால் காலச் சித்தனுடைய கதைகளில் ஆண்கள்தான் மன அவஸ்தைகளுக்கு ஆளாகிறார்கள். மேல்சாதி பெண்களைக் காதலிக்கிற, திருமணம் செய்துகொள்கிற கீழ்ச்சாதி ஆண்கள் சந்திக்கிற இழிவுகளை, அவமானங்களைப் பல கதைகளில் பார்க்க முடிகின்றன.

காலச் சித்தன் சாதி சார்ந்த கொடூரங்களைப் பற்றி மட்டுமே கதை எழுதக்கூடியவர் அல்ல. குழந்தையின்மையால் அவதிப்படுகிற கணவன், மனைவி, குடும்பங்களின் மனப் போராட்டங்களைப் பேசுகிறது ‘தள்ளு வண்டி’ கதை. குழந்தையின்மையும், நோயும், வறுமையும், மரணமும் கீழ்ச்சாதியினருக்கு மட்டும் வருவதில்லை. கூரியர் அலுவலகத்தில் வேலை செய்யக்கூடியவனின் அன்றாட அல்லகளைப் பற்றிப் பேசுகிறது ‘கருஞ்சாத்தன் கதை’.

செல்போன் கொலைக் கருவியாக எப்படி மாறுகிறது, ஏன் மாறுகிறது, எல்லா மனிதர்களையும் ஏன் சந்தேகப்பட்ட வைக்கிறது, ஏன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ரகசிய உலகத்தை உண்டாக்குகிறது என்பதைச் சொல்கிற, நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிற கதைதான் ‘லூசாடி நீ’. 

கணவனுக்கும் மனைவிக்குமிடையில், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் பெரிய இடைவெளியை உருவாக்கி இருக்கிறது ‘செல்போன்’. இது ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசிய உலகத்தையும் உண்டாக்கித் தந்திருக்கிறது. யாரும் யாருடைய ரகசிய உலகத்திற்குள்ளும் எளிதில் செல்ல முடியாது. கணவனுடைய செல்போனின் பாஸ்வேர்டைக் கண்டுபிடிப்பதற்காக மனைவிப் படுகிற அவஸ்தைதான் ‘லூசாடி நீ’ கதை. 

சமகால குடும்பச் சிக்கல்களுக்கு மூலக்காரணமாக இருக்கின்ற கருவியைப் பற்றிய கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற கதை. ‘லூசாடி நீ’ கதையும் ‘ரயிலிசை’ கதையும் வாசகர் மனதில் என்றும் நிலைத்துநிற்கும். காலச் சித்தனுக்குக் கலைநேர்த்தியைவிடக் கதையின் மையம்தான் முக்கியமாக இருக்கிறது.

ஐயப்பனுக்கு நாற்பது நாள் விரதம், பழனி கோவிலுக்குப் பாதை யாத்திரை, பங்கு சந்தையில்  முதலீடு என்றெல்லாம் யோசிக்காமல் சமூகப் பிரச்சனைகளை எழுதியிருக்கிறார் காலச் சித்தன். 


இதைவிடச் சமூகத்திற்குச் செய்வதற்கு மேலான காரியம் எதுவுமில்லை. கதை எழுதுவதென்பது சமூகத்தைப் படிப்பது, காலச் சித்தன் தமிழ்ச் சமூகத்தை நன்றாகவே படித்திருக்கிறார். 

‘லூசாடி நீ’ – படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

"She & I" ஆங்கில நாவல் - "எங் கதெ" நாவல் மொழிப்பெயர்ப்பு

என்னுடைய “எங் கதெ” நாவல் ஆங்கிலத்தில் “She & I” என்ற தலைப்பில் Speaking Tiger Books  பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மொழிப்பெயர்ப்பாளர் Prof.D.வெங்கடரமணன்.

The Speaking Tiger

125A, Ground Floor, Shahpur Jat, 

New Delhi 110049

ISBN - 978-93-5447-905-2



நெஞ்சால் நெய்த காதல் நெஞ்சறுக்குமா? (விமர்சனம்) - முரளிதரன்.Kபிபிசி ஊடகவியாளர்)

இமையம் சமீபகாலமாக ஆவேசம் வந்தவரைப் போல எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய நாவல் 'நெஞ்சறுப்பு'.

ஸ்ரீரங்கப் பெருமாள் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறார். ஒரு பயிற்சி வகுப்புக்காக சென்னைக்குப் போனபோது, ஒரு துணைப் பேராசிரியரான சசிகலாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. வெறும் பத்து நிமிட பழக்கம்தான். அதற்குப் பிறகு இருவரும் வாட்ஸப்பில் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இதை ஒரு நாள் பெருமாளின் மனைவி காமாட்சி பார்த்துவிடுகிறாள். பிறகென்ன, பூகம்பம்தான். அதற்குப் பிறகும் சசிகலா வாட்ஸப் அனுப்புவதை நிறுத்துவதில்லை. பொறுக்கவே முடியாத காமாட்சி, தானே சசிகலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்க்கிறாள். 

அதற்குப் பிறகு காமாட்சியின் போன் நம்பருக்கே சசிகலா வாட்ஸப் அனுப்ப ஆரம்பிக்கிறாள். வீட்டில் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது.

வீட்டில் சண்டை வரும்போது, 'அப்பா லவ் மேட்டரா?' என்று பையன் கேட்கும் அளவுக்கு போய்விடுகிறது. பிறகு காவல் துறையை அணுகி விஷயத்தை முடிவுக்கு கொண்டுவருகிறாள் காமாட்சி. 

இமையத்தின் நாவல்களிலேயே ஒரு மாறுபட்ட நாவல் இது. அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களது மகிழ்ச்சியை, துயரத்தை தீவிரமான மொழியில் தொடர்ந்து பேசிவந்த இமையம், இந்த முறை வித்தியாசமான கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், மொழியில் இருந்த தீவிரம் மாறி, பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

'சனிக்கிழம, ராத்திரி எட்டு மணி. நான் ரூம்ல படுத்துக்கிட்டுருந்தன். காமாட்சி மெதுவா ரூமுக்குள்ளார வந்தா' என்று ஆரம்பிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால், முடித்துவிட்டுத்தான் புத்தகத்தை கீழே வைக்க முடியும். 

பலரது வாழ்வில் நடக்கக்கூடிய சாதாரண நிகழ்வுதான். ஆனால், அதை கதையாக்கியிருக்கும் விதத்தில் அட்டகாசம் செய்திருக்கிறார் இமையம். சசிகலா அனுப்பும் வாட்ஸப் செய்திகளில் நிறைய ஆங்கில மேற்கோள்கள் இடம்பெற்றிருக்கின்றன.  அதைத் தேர்ந்தெடுக்க இமையம் ரொம்பவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். 

சில உதாரணங்கள், 'I have spread my dreams under your feet; Tread softly because you tread on my dreams' என மெஸேஜ். Music I heard with you was more than music என்று ஒரு மெஸேஜ். 'நெஞ்சால் நெய்த காதல் நெஞ்சறுக்குமா?' என்று ஒரு மெஸேஜ். 'I love thee with the breath, smiles, tears, of all my life; and, if god choose, I shall but love thee better after death' என்று ஒரு மெஸேஜ். 

'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவலில் இருந்த துயரத்தைப் படித்தபோது, இனிமேல் இமையத்தின் நாவலை படிக்கவேகூடாது என்று இருந்தது. ஆனால், அதற்கு நேரெதிரான ஒரு முனையில் நின்று அட்டகாசம் செய்திருக்கிறார் இமையம்.

கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.

நெஞ்சறுப்பு'

வெளியீடு: க்ரியா பதிப்பகம், சென்னை

விலை: ரூ. 275/-

To buy click here