இமையம் சமீபகாலமாக ஆவேசம் வந்தவரைப் போல எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய நாவல் 'நெஞ்சறுப்பு'.
ஸ்ரீரங்கப் பெருமாள் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறார். ஒரு பயிற்சி வகுப்புக்காக சென்னைக்குப் போனபோது, ஒரு துணைப் பேராசிரியரான சசிகலாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. வெறும் பத்து நிமிட பழக்கம்தான். அதற்குப் பிறகு இருவரும் வாட்ஸப்பில் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
இதை ஒரு நாள் பெருமாளின் மனைவி காமாட்சி பார்த்துவிடுகிறாள். பிறகென்ன, பூகம்பம்தான். அதற்குப் பிறகும் சசிகலா வாட்ஸப் அனுப்புவதை நிறுத்துவதில்லை. பொறுக்கவே முடியாத காமாட்சி, தானே சசிகலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்க்கிறாள்.
அதற்குப் பிறகு காமாட்சியின் போன் நம்பருக்கே சசிகலா வாட்ஸப் அனுப்ப ஆரம்பிக்கிறாள். வீட்டில் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது.
வீட்டில் சண்டை வரும்போது, 'அப்பா லவ் மேட்டரா?' என்று பையன் கேட்கும் அளவுக்கு போய்விடுகிறது. பிறகு காவல் துறையை அணுகி விஷயத்தை முடிவுக்கு கொண்டுவருகிறாள் காமாட்சி.
இமையத்தின் நாவல்களிலேயே ஒரு மாறுபட்ட நாவல் இது. அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களது மகிழ்ச்சியை, துயரத்தை தீவிரமான மொழியில் தொடர்ந்து பேசிவந்த இமையம், இந்த முறை வித்தியாசமான கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், மொழியில் இருந்த தீவிரம் மாறி, பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.
'சனிக்கிழம, ராத்திரி எட்டு மணி. நான் ரூம்ல படுத்துக்கிட்டுருந்தன். காமாட்சி மெதுவா ரூமுக்குள்ளார வந்தா' என்று ஆரம்பிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால், முடித்துவிட்டுத்தான் புத்தகத்தை கீழே வைக்க முடியும்.
பலரது வாழ்வில் நடக்கக்கூடிய சாதாரண நிகழ்வுதான். ஆனால், அதை கதையாக்கியிருக்கும் விதத்தில் அட்டகாசம் செய்திருக்கிறார் இமையம். சசிகலா அனுப்பும் வாட்ஸப் செய்திகளில் நிறைய ஆங்கில மேற்கோள்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதைத் தேர்ந்தெடுக்க இமையம் ரொம்பவும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
சில உதாரணங்கள், 'I have spread my dreams under your feet; Tread softly because you tread on my dreams' என மெஸேஜ். Music I heard with you was more than music என்று ஒரு மெஸேஜ். 'நெஞ்சால் நெய்த காதல் நெஞ்சறுக்குமா?' என்று ஒரு மெஸேஜ். 'I love thee with the breath, smiles, tears, of all my life; and, if god choose, I shall but love thee better after death' என்று ஒரு மெஸேஜ்.
'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவலில் இருந்த துயரத்தைப் படித்தபோது, இனிமேல் இமையத்தின் நாவலை படிக்கவேகூடாது என்று இருந்தது. ஆனால், அதற்கு நேரெதிரான ஒரு முனையில் நின்று அட்டகாசம் செய்திருக்கிறார் இமையம்.
கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
நெஞ்சறுப்பு'
வெளியீடு: க்ரியா பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 275/-
To buy click here.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக