செவ்வாய், 14 மே, 2019

அழியாத சொற்களை உருவாக்குபவனே எழுத்தாளன் – இமையம் நேர்காணல்

அரவிந்தன்

இமையம். தொண்ணூறுகளில் தொடங்கி இன்று வரை தனி அடையாளத்துடனும் வீரியத்துடனும் எழுதிவருபவர். பின்நவீனத்துவம், கட்டுடைப்பு முதலான கோட்பாட்டு விவாதங்களும் தலித் இலக்கியம் முதலான இயக்கங்களும் முனைப்புப் பெற்றிருந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய இவர், இவை எதிலும் பட்டுக்கொள்ளாமல் தன் படைப்புகளை எளிமையாக முன்வைக்கத் தொடங்கினார். இவரது கதைகளில் பிரதிபலிக்கும் யதார்த்தத்தின் வலிமையும், அனுபவங்களின் வீரியமும் புனைவின் செழுமையும் இவரைத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. நான்கு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கும் இவர் இலக்கியம், மொழி ஆகியவை குறித்த அலாதியான, அழுத்தமான கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறார். நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் அவருடன் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.
விவசாயக் குடும்பம். அப்பாவுக்குப் படிக்கத் தெரியும். அந்தக் காலத்தில் எட்டாவதுவரை படித்தவர். அம்மாவுக்குத் தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது ‘தனிப்பட்ட வாழ்க்கைப் பின்னணி’ என்பது எனக்கு மட்டுமல்ல எந்த மனிதனுக்குமே சாத்தியமில்லை. என்னுடைய குடும்பத்தார்கள், தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதுதான் என் பின்னணி. ‘பத்து விரலால் பாடுபட்டு ஐந்து விரலால் அள்ளித் தின்ன வேண்டும்’ என்பது என்னுடைய குடும்பத்தினுடைய, தெருக்காரர்களுடைய, ஊர்க்காரர்களுடைய வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம்தான் என்னுடைய வாழ்க்கைப் பின்னணி.
எழுத்துக்கு அறிமுகமானது எப்போதுஎப்படி?
பிளஸ் டூ படிக்கும்வரை நான் செய்தித்தாள்களைக்கூடப் படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றியதுமில்லை. செய்தித்தாளைப் படிக்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொன்னதுமில்லை. பிளஸ் டூ முடிக்கிற சமயத்தில் ஒன்றிரண்டு செம்மலர் இதழ்களைப் பார்த்திருக்கிறேன். பெயருக்கு விலங்குப் பண்ணை (Animal Form) நாவலைப் படித்தேன். நான் படித்த முதல் கதைப் புத்தகம் தாய் நாவல். திருச்சியிலிருந்த NCBH புத்தகக் கடை மூலம் நிறைய ரஷ்ய நாவல்களைப் படித்தேன். திருச்சியிலிருந்த ‘நவீனம்‘ புத்தகக் கடையின் மூலம் சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
எழுத வேண்டும் எனத் தோன்றியது எப்போதுஏன்?
கொடைக்கானலில் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்தாளர் பயிற்சி முகாமில் 1985-ல் கலந்துகொண்டதன் விளைவாக எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்தப் பயிற்சி முகாம்தான் இலக்கிய உலகத்தை எனக்குக் காட்டியது. அப்போதுதான் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களையும், அவர்களுடைய புத்தகங்களின் பெயர்களையும் அறிந்துகொண்டேன். இந்திய, உலக எழுத்தாளர்களையும், அவர்களுடைய நூல்களையும் அறிந்துகொண்டேன்.
எடுத்த எடுப்பில் நாவல் எழுதுகிறீர்கள்இதற்கான உத்வேகம் எப்படி வந்தது?
நாவல் எழுதுவதற்கு முன் கொஞ்சம் கவிதைகள் எழுதினேன். ஒன்றுகூடக் காதல் கவிதை இல்லை. எல்லாம் புரட்சிக் கவிதைகள். மார்க்சிய ஈடுபட்டால், படிப்பால் புரட்சி சார்ந்த பிரமாண்டமான கனவு அப்போது எனக்கும் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே நாவல் எழுத வேண்டுமென்ற ஆசையோ, திட்டமோ இல்லை. ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் மைய பாத்திரமான ஆரோக்கியம், ஒரு நள்ளிரவில் அழுதுகொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அந்த அழுகுரல்தான் கோவேறு கழுதைகள் நாவலை எழுதத் தூண்டியது. அன்றிரவே நாவலை எழுத ஆரம்பித்தேன்.
நாவல் வடிவத்திற்கு எதை முன்னோடியாகக் கொண்டீர்கள்?
எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் அப்போது நாவல் வடிவம் குறித்து, நாவல் கலை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அப்போது நான் நிறைய நாவல்களைப் படித்திருக்கவுமில்லை. நாவல் எழுதுவதுப் பற்றி எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. எழுத வேண்டும் என்ற மன வேகம். அவ்வளவுதான். எழுதிவிட்டேன். அறிவின் பலத்தில், கற்பனையின் பலத்தில் எழுதப்பட்டதல்ல. நிஜமான வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதப்பட்டது. எழுதி முடித்தபோது எனக்கு வயது 23.
முதல் நாவலுக்கான வரவேற்பு / எதிர்ப்பு எப்படி இருந்ததுஅதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
1994-ல் வெளியிடப்பட்டதிலிருந்து இன்றுவரை கோவேறு கழுதைகள் நாவலுக்கான வரவேற்பு நல்ல விதமாகத்தான் இருக்கிறது. 22 ஆண்டுகள் கழிந்த பிறகும் அந்த நாவல் விற்பனையில் சோடை போகாமல் இருப்பது ஆச்சரியம்தான். க்ரியா பதிப்பகம் வெளியிட்டது, முதல் விமர்சனத்தை சுந்தர ராமசாமி எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தலித் இலக்கியம் குறித்த உரையாடல் உச்சத்தில் இருந்த காலம். தலித்களின் உள்சாதி முரண்களைப் பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்றார்கள் சிலர். ‘கோவேறு கழுதைகள்’ நாவலும், நானும் ‘தலித்‘ இலக்கியப் போக்கிற்கு எதிராகச் செயல்படுவதாகவும் பார்ப்பனர்களின் அடிவருடி என்றும் பேசப்பட்டது.
நாவல் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைவிட க்ரியா ராமகிருஷ்ணின் மீதும், வெங்கட் சாமிநாதன் மீதும், சுந்தர ராமசாமி மீதும்தான் அதிக விமர்சனங்களை வைத்தார்கள். அவையும் அவர்களுடைய சாதியின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாகவே இருந்தன. சுந்தர ராமசாமி, “மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிரிவுகளின் சகல கீழ்மைகளையும் மனந்திறந்து கலைபூர்வமாக முன் வைத்து மனித துக்கத்தை இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும் சரி, இதற்கு இணையாகச் சொல்லத் தமிழில் மற்றொரு நாவல் இல்லை…” (காலச்சுவடு – அக்டோபர் – 94) என்று எழுதியதற்காகவும், இதற்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்க வேண்டும் என்று ‘அசைட்’ என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னதற்காகவும் அதிகமான விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்கள், கண்டனங்கள் என்னை பாதிக்கவே இல்லை. அந்த விமர்சனங்கள் செத்துவிட்டன. நாவல் உயிரோடிருக்கிறது.
ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமான அரசியலை முன்வைத்த நாவல் என்று சொல்லப்பட்டதுகுறித்து?
நாவல் எழுதும்போது, ஒரு கதையை, வாழ்க்கையை எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் எனக்கு இருந்தது. அப்போது எனக்கு மார்க்சியம், தி.க., தி.மு.க. சார்ந்த அரசியல் பார்வைதான் இருந்தது. அதுவும் கொஞ்சம்தான். சாதி சார்ந்த அரசியல் பார்வை அப்போது மட்டுமல்ல, இப்போதும் இல்லை. சாதி உள்முரண்களை, சாதி சார்ந்த அரசியலைப் பேசுவதற்காக நான் நாவல் எழுதவில்லை. அது ஒரு நாவலாசிரியனின் வேலையும் அல்ல. நிஜ வாழ்விலிருக்கும் உண்மையை எழுத வேண்டும் என்ற திட்டம், ஆசை இருந்தது.
தலித்களின் உள்முரண்களைச் சொன்னதன் மூலம் ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமான அரசியலைநாவலில் வெளிப்படுகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன?
என்னுடைய ஊரிலிருந்த சாதிய உள்முரண்கள்தான் தமிழ்ச் சமூகத்தின் முரணாகவும் இருந்திருக்கிறது. உள்முரண்கள் பிராமணர்கள் உள்பட எல்லாச் சாதிகளிலும் உள்ளன. ஒரு படைப்பாளி தன் அனுபவத்துக்கு உட்பட்ட யதார்த்தத்தைத் தன்னுடைய கலைத் திறனுக்கு ஏற்பப் படைப்பாக்குகிறான். படைப்பு எழுத்தாளனின் திட்டமிடலையும் தாண்டிப் பல பரிமாணங்கள் கொண்டு வெளிப்படும். பல விதமாக வாசிக்கப்படும். எல்லா வாசிப்புகளுக்கும் படைப்பாளி பதில் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் என் அனுபவத்துக்கு நேர்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான்.
உங்கள் முதல் நாவலை ‘க்ரியா’ வெளியிட்டதால் ஏற்பட்ட சாதக, பாதக அம்சங்கள்?
 பாதகமான அம்சம் என்று எதுவுமில்லை. க்ரியா நேர்த்தியாக வெளியிட்டதால் பல எழுத்தாளர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. தங்களுடைய புத்தகங்கள் இவ்வளவு நேர்த்தியாக வரவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. க்ரியா வெளியிட்டதால் உடனடியாக நாவலுக்கு கவனம் கிடைத்தது. என்னுடைய மற்ற நூல்களுமே வெளியான உடனேயே கவனம் பெறுவதற்கும் ‘க்ரியா‘தான் காரணம். க்ரியா வெளியிட்டாலே எந்த நூலையும் வாங்குவதற்கென்று சில வாசகர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இது வேறு எந்த புத்தக வெளியிட்டு நிறுவனத்திற்கும் இல்லாத பெருமை.
 செடல் எழுதப்பட்ட பின்னணி என்ன?
கோவேறு கழுதைகள் நாவலின் மையப் பாத்திரமான ஆரோக்கியம், எங்களுடைய வீடு இருந்த தெருவின் கடைசியில் இருந்தவர். செடல் இரண்டு தெரு தள்ளி இருந்தவர். செடல் தெருக்கூத்து ஆடக்கூடியவர். பொட்டுக்கட்டிவிடப்பட்டவர். நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் செடலினுடைய ஆட்டத்தைப் பார்த்தவன். அழகான பெண். பெரும்பாலும் கிருஷ்ணன் வேஷம்தான் போடுவார். திருவிழா நிகழ்வில் மட்டுமல்ல சாவு விழுந்த வீடுகளிலும் ‘கர்ண மோட்சம்‘ நாடகம் நடக்கும். அதிலும் அவர் ஆடுவார். அவர் மட்டுமல்ல, அவருடைய அண்ணன், தம்பிகள், மாமா, மச்சான்கள், சித்தப்பா, பெரியப்பாக்களுடன் ஆடுவார். அவர்களுடைய குடும்பத் தொழில் அதுதான்.
ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் “மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமி” என்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது. பொங்கல் காசு கொடுத்த மறுகணத்திலிருந்து செடல் என்மனதிற்குள் வாழ ஆரம்பித்தார். என் நாவல்களிலேயே மிகவும் முக்கியமான நாவல் ‘செடல்’.
உங்கள் கதைகளில் அனுபவங்களுக்கும் புனைவுக்கும் இருக்கும் இடம் எது?
அனுபவத்தை அப்படியே எழுதுவது படைப்பல்ல, வெறும் புனைவு மட்டுமே முழு படைப்பாகாது. அனுபவத்தையும் புனைவையும் தேவை அறிந்து, எந்த அளவிற்கு இணைப்பது என்பது ஒரு திறன். அது கைகூடி வரப்பெற்ற படைப்புகளே மேம்பட்ட படைப்புகளாக இருக்கும். அனுபவம் இல்லாமல் படைப்பு இல்லை. புனைவு இல்லாமலும் படைப்பு இல்லை.
பேச்சு வழக்கை உயிர்த் துடிப்புடன் கொண்டுவருவது எப்படிச் சாத்தியமாகிறதுஅப்படிக்கொண்டுவந்தால்தான் ஒரு புனைவைப் படைப்பு என்று சொல்ல முடியுமா?
அதை நான் முடிவு செய்வதில்லை. கதையும், கதைக்குரிய மனிதர்களும்தான் முடிவு செய்கிறார்கள். உயிர்ப்பற்ற, செத்துப்போன சொற்களை நான் பயன்படுத்துவதில்லை. சத்தற்ற, எழுதி எழுதித் தேய்ந்துபோன சொற்களை மீண்டும் எழுதுவதற்கு ஒரு எழுத்தாளன் தேவை இல்லை. பேச்சு வழக்குக்கென்று ஒரு அழகு, வளம், பெரிய வீச்சு இருக்கிறது. அதனுடைய அழகை, வளத்தை, வீச்சைக் குலைக்காமல் பயன்படுத்த வேண்டும். நானே செயற்கையான ஒரு பேச்சு வழக்கை உருவாக்கக் கூடாது. ஒரு எழுத்தாளனுக்கு ஒவ்வொரு சொல்லும் முக்கியம். பணத்தைவிட, தங்கத்தைவிட முக்கியமானது, மதிப்பானது. அழியாத சொற்களை உருவாக்குபவன்தானே எழுத்தாளன். ஏற்கனவே செத்துப்போன சொற்களை நிஜமான எழுத்தாளன் பயன்படுத்த மாட்டான்.
நான் பேச்சு வழக்குக்கு மெனெக்கெட்டு முன்னுரிமை கொடுப்பதில்லை. எந்தப் பாசாங்கும் இல்லாமல், எழுத்தாளன் என்ற திமிர் இல்லாமல் மக்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எழுதுவதைவிடவும் கேட்பதுதான், பார்ப்பதுதான் முக்கியமான வேலை. அதை ஒரு எழுத்தாளன் செய்ய வேண்டும். கதையும், கதாபாத்திரமும் எந்தச் சூழலில் இருக்கிறதோ அதற்கான மொழியை உருவாக்க வேண்டும். அதுதான் நம்பகமானது. உண்மையானதும்கூட. பேச்சு வழக்கின் பலம் மட்டுமே ஒரு படைப்பின் பலமல்ல. பல கூறுகளில் அது ஒன்று. அவ்வளவுதான். என்னுடைய பல பாத்திரங்களுக்குப் பேச்சுதான், சோறு, தண்ணீர். பேச்சின் வழியாகத்தான் அன்பையும், கோபத்தையும், ஆற்றாமையையும் தங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். பேச்சுதான் அவர்களை வாழ வைக்கிறது. சிலருடைய வாழ்க்கையே பேச்சின் வழியாகத்தான் நடக்கிறது.
பொதுவாக உங்கள் கதைகளில் புறவயமான கதைமாந்தர்கள்தான் அதிகம்உதாரணம்ஆரோக்கியம்செடல்ஆனால் ‘எங்கதெ’ நாவலில் அகவயமான பயணம் ஒன்று உள்ளதுஇந்த மாற்றம் எப்படிஏற்பட்டது?
‘எங்கதெ‘ நாவல் முந்தைய மூன்று நாவல்களிலிருந்தும் வேறுபட்ட ஒன்று. மற்ற நாவல்களுக்குக் கொடுத்த உழைப்பைவிட, கவனத்தைவிட அதிக உழைப்பையும், கவனத்தையும் ‘எங்கதெ’ நாவலுக்குக் கொடுத்தேன். ஒவ்வொரு சொல்லையும் அவ்வளவு ஆசையுடன் எழுதினேன். ‘எங்கதெ’ மனித மனதின் விசித்திரங்களில் ஒன்று. நாம் பலரைப் பார்க்கும்போது, அவர்களுடைய செயல்களைப் பார்க்கும்போது முட்டாள்கள், சோம்பேறிகள் என்று நாம் நம்முடைய கருத்தைத்தான், எண்ணத்தைத்தான் சொல்கிறோம். இது மற்றொரு மனதின் ரகசியத்தை அறியாமல் உளறுவது. ஒவ்வொருவருக்கு ஒரு நியாயம் இருக்கிறது. நம்முடைய நியாயம் மட்டுமே சரியானதல்ல. பணத்திற்காக முன்பின் தெரியாத மனிதர்களைக் கொலைசெய்கிற மனம் கொண்ட மனிதர்கள் இருக்கும்போது, தான் விரும்பிய, ஆசைப்பட்ட, சொத்தாக, பொக்கிஷமாகக் கருதிய ஒரு பெண்ணுக்காக ஒரு மனம் ஏங்குவதில், தவிப்பதில், துடித்துபோவதில், செத்துப்போவதில் குற்றம் இருப்பதாக நான் கருதவில்லை. ‘எங்கதெ’ நாவலில் ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு சாகசத்தை நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியது எனக்குத் தெரியாது. நாமும் சரி, நம்முடைய இலக்கியங்களும் சரி மனதின் வலியைப் பற்றி, மனதின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. உடலுக்கென்று ஒரு வாழ்க்கை இருப்பதுபோல மனதிற்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத்தான் ‘எங்கதெ’ பேசுகிறது. அந்த நாவலுக்கும் அதன் வாக்கிய அமைப்பிற்கும் அகப்பாடல்கள்தான் முன்னுதாரணம்.
மனதின் வலி பற்றி இவ்வளவு பேசும் நீங்கள் நாவலில் கமலாவின் வலியைப் பற்றி எதுவுமேபேசவில்லைகமலாக்களின் கதையை ஏன் நீங்கள் எழுதுவதில்லை?
நான் பெண்ணியவாதி அல்ல. ஆணாதிக்கவாதியுமல்ல. எழுத்தாளன் எந்தச் சுழலுக்குள்ளும் சிக்காதவன். வாழ்வை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் இலக்கியப் படைப்பு. பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி எழுதுவது இலக்கியமல்ல. என்னுடைய நான்கு நாவல்களிலும் பெண்தான் மையப் பாத்திரம். என்னுடைய எல்லாச் சிறுகதைகளிலும் பெண்களின் அக, புற நெருக்கடிகள்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குடும்பம் என்ற நிறுவனமும், சமூகம் என்ற நிறுவனமும் பெண்களுக்கென்றே உருவாக்கி வைத்திருக்கிற ஒழுக்க விதிகள், மதிப்பீடுகள்மீது கருணையற்ற விதத்தில் கேள்விகளை எழுப்புதற்காகத்தான் நான் எழுதுகிறேன்.
கமலாக்களின் கதையை எழுதவில்லை என்பதை ஏற்க முடியாது. ‘எங்கதெ’ விநாயகத்தின் மூலம் சொல்லப்பட்ட கமலாவின் கதைதான். இதை விநாயகமே நாவலில் ஒரு இடத்தில் கூறுகிறான். விநாயகம் பேச்சாளி. கமலா செயல்பாட்டாளர். கமலாவின் மௌனம்தான் விநாயகத்தை ஏங்கவும், புலம்பவும், தவிக்கவும், அழவும், துடிக்கவும், பித்தாகி அலையவும் வைக்கிறது. கமலா பழைய தமிழ்ச் சமூகத்தின் கட்டுப்பெட்டியான பெண்ணல்ல. காதலுக்காக ஏங்குவது, கண்ணீர் விடுவது, காத்திருப்பது, புனிதம் பேசுவது, தற்கொலை செய்துகொள்வது என்ற மரபார்ந்த தன்மைக்கு, இயல்புக்கு எதிரானவள். வாழ்க்கை என்றால், உலகம் என்றால், மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற புரிதல் கொண்ட பெண் கமலா. காதலிக்கிற காலத்தில் ஆண்கள்தான் அதிகம் பேசுகிறார்கள். பெண்கள் பேசுவதில்லை. மௌனம்தான் அவர்களுடைய மொழி. நாவல் முழுவதும் கமலா பேசுகிறாள். மௌனத்தால்.
உங்கள் புனைவுகளில் பெண் கதாபாத்திரச் சித்தரிப்பில் அபாரமான நுட்பமும் யதார்த்தமும் உள்ளனஆனால்பெண்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களில் பிற்போக்கான தன்மை தென்படுகிறதுபொதுவெளிகளில் அவர்கள் புழங்குவதுதங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் பற்றியெல்லாம்ஒவ்வாமையைப் பல விதங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்பெண்களுக்கென்று இந்தச் சமூகம்வரையறுத்து வைத்திருக்கும் எல்லைகள் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இந்த கேள்வியில் ஒரு சீண்டல் இருக்கிறது. தாறுமாறான வார்த்தைகளைச் சொல்லி மலினமான முறையில் பரபரப்பை உண்டாக்கி அதனால் பெரிய எழுத்தாளனாக என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குறித்த ஒவ்வாமையெல்லாம் என்னிடம் இல்லை. சமூகம் வரையறுத்துவைத்திருக்கும் எல்லைகள் பிற்போக்கானவை என்பதைச் சொல்வதற்காகத்தான் கதை எழுதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு சிறுகதையிலும், ஒவ்வொரு நாவலிலும் அது மிகவும் வெளிப்படையாகவே வெளிப்பட்டிருக்கிறது. போலி, பகட்டு, அகங்காரம் என்னை எரிச்சலடைய வைக்கிறது. பெண்ணியம், தலித்தியம் போன்ற அடையாளங்கள் சில எழுத்தாளர்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன. இந்த அடையாளங்களை நீக்கிவிட்டால் பல எழுத்தாளர்களின் எழுத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது. செத்த பிணம்தான்.
நவீன தொழில்நுட்பமும்நவீன வாழ்க்கையும் உங்கள் புனைவுகளில் எதிர்மறையாகவேசித்தரிக்கப்படுகின்றனஇதே நவீன வாழ்க்கைதானே விளிம்பு நிலையில் உள்ள பிரிவினருக்குஓரளவேனும் கண்ணியமான வாழ்க்கையையும் பொது வெளியில் அவர்களுக்கான இடத்தையும்சமூகபொருளாதார அளவிலான வளர்ச்சியையும் தந்திருக்கிறதுநவீன வாழ்க்கையைஒட்டுமொத்தமாக எதிர்மறையாகப் பார்ப்பது சரியா?
உங்களுடைய கேள்வி, உங்களுடைய கற்பனையில் உருவானது. என்னுடைய படைப்புகளின் வழியாக அல்ல. கோவேறு கழுதைகள் நாவலில் ஆறுமுகம் சென்னைக்கு எதற்காக ஓடுகிறான்? ஜோசப்பின் மனைவி சகாயம் கணவனை இழுத்துக்கொண்டு சின்னசேலத்தில் லாண்டரிக் கடை வைக்கப் போகிறாள். ஆறுமுகத்தை ஆங்கில வழியில் படிக்க வைப்பதற்காகத்தான் தனபாக்கியம் பாண்டிச்சேரியில் குடியேறுகிறாள். செடல் நாவலில், செடலின் அக்கா மகன் சர்ச் பாதரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறான். ‘எங் கதெ‘ நாவலில் வரும் கமலா பழமைவாதப் பெண்ணா?
என்னுடைய நாவல்களின் மையமே பழைய வாழ்க்கைக்கும், நவீன வாழ்க்கைக்குமான மோதல்கள்தான். இந்த மோதல்கள் எப்படி நிகழ்கின்றன என்பதையும், மோதல்களின் சாதக பாதக அம்சங்களையும் வாழ்க்கைச் சம்பவங்களின் வழியே நிகழ்த்திக்காட்டுவதுதான் ஒரு படைப்பின் நோக்கம், அதைத்தான் என்னுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும் செய்திருக்கிறேன். பழமை பெருமை வாய்ந்தது, நவீனத்துவ வாழ்க்கை சீரழிவைக் கொண்டு வந்தது என்று சொல்வது என் நோக்கமல்ல. இரண்டையும் எழுதுவது, இரண்டுக்குமான உறவையும், முரணையும் எழுதுவது. நவீனத்துவத்துக்கு நானோ, என்னுடைய படைப்புகளோ எதிரி அல்ல. நேற்று என்பதற்குள் நாம் திரும்ப போக முடியாது என்பதை நான் அறிவேன்.
உங்களை தலித் எழுத்தாளர் என்று சொல்வதை ஏற்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. என்னை மட்டுமல்ல, எந்த எழுத்தாளனையும் சாதி சார்ந்த, மதம் சார்ந்த அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. அப்படி செய்வது எழுத்தாளனை அவமதிக்கிற செயல். படைப்பை இழிவு செய்கிற செயல்.
தலித் இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதுக்கூட தீண்டாமையின் ஒரு வடிவம்தான். இதே கேள்வியை வேறு எழுத்தாளர்களிடம் ஏன் நீங்கள் கேட்பதில்லை. மற்றவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள். அவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கியம். நான் தலித் எழுத்தாளன். நான் எழுதுவது தலித் இலக்கியம். அப்படித்தானே? ஒரு ஐயர் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளரிடம் இதுவரை யாராவது ஒரு ஆள் ஐயர் இலக்கியத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுண்டா? பிள்ளைமார், முதலியார், நாடார் என்று நாட்டில் என்னென்ன சாதிகளெல்லாம் உண்டோ. அந்தந்த சாதி எழுத்தாளர்களிடம் எல்லாம் சென்று அந்தந்த சாதி இலக்கியத்தைப் பற்றி ஏன் கேட்பதில்லை? சாதி கூடாது, சாதிய மனோபாவம் கூடாது, சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் கூடாது, சாதிய மேலாதிக்கம் கூடாது என்பதற்காகத்தானே எழுதுகிறோம். நானே எப்படி ஒரு சாதி அடையாளத்தைப் போற்றுவது? சாதிய அடையாளத்துடன் எழுதப்படுவது இலக்கியப் படைப்பே அல்ல. சாதி சார்ந்த மனோபாவத்திற்கு எதிரானது படைப்புச் செயல்பாடு.
 நீங்கள் உங்கள் எழுத்தைத் தலித் எழுத்து என அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இலக்கியத்திலும் அவர்களுக்கான இடம் கிடைக்காமல் இருந்தது. பெரும்பாலும் மறுக்கப்பட்டுவந்தது. இந்தப் பின்னணியில் தலித் என்னும் அடையாளத்தை முன்னிறுத்துவதும் அதைப் படைப்பில் அழுத்தமாகப் பதிவுசெய்வதும் முக்கியமானவை. உலகம் முழுவதிலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இலக்கியத்தில் தங்கள் அடையாளம் சார்ந்த பிரக்ஞையுடன் உரக்க ஒலித்திருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளுக்கான வரலாற்றுத் தேவையை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
 தலித்திய, பெண்ணிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, கறுப்பின இலக்கியங்களை எழுதக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கட்டாயம் எழுத வேண்டும். இதுநாள்வரை எழுதாமல் இருந்ததே, அதற்கான சூழல் அமையாமல் இருந்ததே பெரும் தவறு. ஆனால், இந்த அடையாளம் கவனம் பெறுகிறது, இதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது என்னும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட அடையாளத்துடன் வரும் எழுத்தைத்தான் கூடாது என்கிறேன். இலக்கியப் படைப்பு எழுதப்பட்ட பிறகு அதற்கு யார் வேண்டுமானாலும் எந்த அடையாளம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். விவாதிக்கலாம். அப்படிப் பல விதமாகவும் அடையாளப்படுத்தவும் விவாதிக்கவும் இடமளிப்பதே நல்ல படைப்பு. அடையாளம் பெரிதாகவும் படைப்பு சாரமற்றும் இருக்கும் எழுத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அடையாளத்தை முன்னிறுத்தாதீர்கள், படைப்பை முன்னிறுத்துங்கள் என்பதுதான் படைப்பாளிகளிடம் என் வேண்டுகோள்.
 சமகால இலக்கியப் போக்குகள் குறித்த உங்கள் மனப்பதிவு என்ன?
நிறையப் பேர் எழுதுகிறார்கள். நிறைய எழுதுகிறார்கள். புதுப்புது விஷயங்கள் குறித்தெல்லாம் எழுதுகிறார்கள். வேகவேகமாக, அவசரஅவசரமாக எழுதுகிறார்கள். நிறையப் பேர், நிறையநிறைய எழுதுவது நல்ல விஷயம். வேகவேமாக, அவசர அவசரமாக எழுதுவதும், நூலாக்கி வெளியிடுவதும் நல்ல விஷயமல்ல. ‘இலக்கியப் போக்கு’ என்று எதுவும் இப்போது இல்லை. மார்க்சியம், பெண்ணியம், தலித்யம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், விளிம்பு நிலை இலக்கியம் – என்ற பேச்செல்லாம், இப்போது இல்லை. எந்த இசமும் இல்லாத – வெற்று மைதானமாக இருக்கிறது தமிழ் இலக்கியச் சூழல். முகநூலில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட பதிவிடுவது, ‘லைக்’ போடுவது, கமெண்ட் போடுவதுதான் தற்போதைய தமிழ் இலக்கியப் போக்கு. பலருக்கும் பரிந்துரைக்க வேண்டிய புத்தகங்கள் என்று சொல்லத்தக்க புத்தகங்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கிறது. படைப்புகளைவிட, படைப்பாளிகளைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிற காலம் இது. ஒன்றுமே செய்யாதபோதும், நிறைய சாதித்துவிட்டதாகக் கற்பனை கொள்கிற காலம். படைப்பாளிகளின் கண் முன்னாலேயே படைப்புகள் செத்துப்போகிற காலம். இதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாமல் படைப்பாளிகள இருப்பதுதான் கவலையாக இருக்கிறது.
மொழி விஷயத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்கட்டுரைகளில் வெளிப்படும்நேர்த்தியானபிழைகள் அற்ற மொழி என்பதற்கும் படைப்பில் அந்த மொழி தொழிற்படும்விதத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
ஒரு கட்டுரையை நீங்கள் தீர்மானிக்க முடியும். படைப்பை ஒரு அளவுக்கு மேல் நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது தன்னளவில் செயல்பட ஆரம்பித்துவிடும். ஒரு படைப்புக்கான மொழியைப் படைப்பாளன் தீர்மானிக்கிறான் என்பது ஓரளவுதான் உண்மை. ஒரு படைப்பு தனக்கான மொழியைத் தானாகவே உருவாக்கிக்கொள்ளும். கட்டுரைக்கான மொழி வேறு. படைப்புக்கான மொழி வேறு. இரண்டுக்குமான இயங்கு தளங்கள் வேறு. கட்டுரையில் கற்பனைக்கு இடமே இல்லை. கட்டுரைக்கான மொழி என்பது மிகவும் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று. விஷயம் சார்ந்து மட்டுமே சிந்திப்பதற்கானது. கூடுதலாகச் சிந்திப்பதற்கு அதில் எதுவுமே இல்லை. படைப்பு மொழி அப்படிப்பட்டதல்ல. மொழியைப் புரிந்துகொள்வது, அணுகுவது, எப்படி பயன்படுத்துவது, எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன்.
படைப்பு மொழி என்பது ஒரு வகையில் கட்டுகள் அற்றது என்பதால் அதில் பிசிறுகளும் மீறல்களும்இருக்கத்தான் செய்யும் அல்லவா?
நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது. கட்டுகள் அற்றது என்றாலும், ஒரு கட்டமைப்புக்கு உட்பட்டதுதான். பேச்சுமொழியில் பிசிறுகள், மீறல்கள் இருக்கலாம். மொழியின் வழியாகத்தான் ஒரு காட்சியை, ஒரு சம்பவத்தை, ஒரு வாழ்க்கையை உருவாக்கி அல்ல, நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். எழுத்துக்கு அடிப்படை ஆதாரமான மொழியே பிசிறுகள் நிறைந்திருந்தால் நீங்கள் உருவாக்கிகாட்ட விரும்புகிற, நிகழ்த்திகாட்ட விரும்புகிற ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு வாழ்க்கை எப்படி முழுமைபெற்றதாக இருக்க முடியும்? மொழிதான் ஒரு சமூகத்தினுடைய அடையாளம். அந்த அடையாளத்தை உருவாக்குகிறவன், ஸ்திரப்படுத்துகிறவன் எழுத்தாளன். ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தை உருவாக்குகிற எழுத்தாளனுடைய ஆயுதம் குறைபாடு உடையதாக இருந்தால் அவன் உருவாக்குகிற அடையாளமும் குறைபாடு உடையதாகத்தானே இருக்க முடியும்? யாரையும்விடவும் ஒரு சமூகத்தில் எழுத்தாளன்தான் முக்கியமானவன். காரணம் அவன் மொழியை உருவாக்குவதால், புதுப்பிப்பதால், செழுமைப்படுத்துவதால். படைப்பில் மொழி எந்த அளவுக்குப் பிசிறற்று இருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஊனமற்ற படைப்பாகத்தான் இருக்கும். என்னுடைய ஆயுதம் கூர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
சிறு வயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள்அதை வெளிப்படையாகவும்காட்டிக்கொள்கிறீர்கள்படைப்பாளியால் ஒரு இயக்கத்தில்கட்சியில் எப்படிச் செயல்பட முடிகிறதுபடைப்பாளிக்கான தார்மிக உணர்வும் உங்கள் அரசியல் ஈடுபாடும் ஒருபோதும் முரண்பட்டதேஇல்லையா?
இந்தக் கேள்வியை இடதுசாரி இயக்க எழுத்தாளர்களிடம் கேட்பீர்களா? கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் இடதுசாரி இயக்கம் புனிதமானது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புனிதமானவர்கள். அவர்களுடைய எழுத்தும் புனிதமானது. படைப்பாளிக்கான தார்மீக உணர்வும், அரசியல் ஈடுபாடும் ஒருபோதும் அவர்களுக்கு முரண்படுவதே இல்லை. தி.மு.க.வை ஆதரிக்கிற ஒரு எழுத்தாளனுக்குத்தான் முரண்படும். என்னுடைய அரசியல் ஈடுபாடு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டது. அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கட்சி சார்ந்த ஈடுபாடும், என் எழுத்து சார்ந்த செயல்பாடும் ஒருபோதும் முரண்பட்டதே இல்லை. கட்சி சார்ந்த செயல்பாட்டை நான் அனுபவமாகவே பார்க்கிறேன்.
மார்க்ஸியப் படைப்பாளிகள் விமர்சிக்கப்படாமல் இல்லைமுற்போக்கு எழுத்து என்று சொல்லப்படும்எழுத்தின் இலக்கியப் பெறுமானம் குறித்த விமர்சனங்கள் தமிழ்ச் சூழலில் நிறையவே உள்ளன.
அந்த விமர்சனங்கள் 1980, 90களோடு முடிந்துவிட்டன. திராவிட இயக்க அரசியல் சார்புடைய எழுத்தாளர்கள் மீது வைக்கிற அளவுக்கு மார்க்சிய அரசியல் சார்புடைய எழுத்தாளர்கள் மீது காட்டமான விமர்சனம் வைப்பதில்லை. பாரதிதாசனுடைய திராவிட இயக்க அரசியல் சார்புதான் அவருடைய எழுத்தின்மீது போதிய வெளிச்சம் விழாததற்குக் காரணம். திராவிட இயக்க அரசியல் சார்பால்தான் பாரதி அளவுக்கு பாரதிதாசனை தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை.
திராவிட இயக்க எழுத்துதான் தீவிர இலக்கியவாதிகளால் விமர்சிக்கப்படுகிறது. அந்த வரையறைக்குள் உங்கள் எழுத்து வராது. நீங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் தீவிரமான படைப்பு மரபில் வருபவர். நான் கேட்க வருவது, அரசியல் இயக்கத்தில் இருந்துகொண்டு படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுவதில் எதிர்கொள்ளக்கூடிய முரண்களைப் பற்றி.
இதுவரை எந்த முரணும் ஏற்படவில்லை. எழுத்தையும், எனது அரசியல் சார்ந்த ஈடுபாட்டையும் நான் குழப்பிக்கொள்வதில்லை.
 உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள்எழுத்து?
பட்டியலிடுவது சிரமம். ஒரு சிலரை, ஒரு சில படைப்புகளைச் சொல்வதன் மூலமாக மற்றவர்களை மறைமுகமாக உதாசீனப்படுத்துவதுபோல ஆகிவிடும். நான் படித்த எல்லா எழுத்தாளர்களுமே நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னுடைய எழுத்துக்குள் இருக்கிறார்கள். ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எழுதிய எழுத்தாளர் முதல், வாழ்நாள் முழுவதும் எழுதிய எழுத்தாளர்வரை பலரும் என் எழுத்தைப் பாதித்திருக்கிறார்கள். என்னுடைய எழுத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளைத் தவிர்த்து நான் அதிகம் படித்தது. ரஷ்யா, பிரஞ்சு மொழி இலக்கியங்களைத்தான். இந்திய மொழிகளில் அதிகம் படித்தது. மலையாள மொழி இலக்கியங்களைத்தான். அந்த எழுத்துக்கள் எல்லாம் எனக்குள், என்னுடைய எழுத்துக்குள், நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செய்கின்றன. நான் படித்த எழுத்துக்களின் வழியாகத்தான் என்னுடைய எழுத்தும் உருவாகிறது.
இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கு, ஆசை ஏதாவது உள்ளதா?
எதுவுமே இல்லை. தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், திருமூலர், இளங்கோவடிகள், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சங்க காலப் புலவர்கள், சித்தர்கள், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சாதிக்காததையா நான் சாதிக்கப்போகிறேன்? இந்தப் பட்டியலில் உள்ளவர்களும், விடுபட்டவர்களும், ஒவ்வொருவரும் ஒரு பெரும் கடல். நான் ஒவ்வொரு கடற்கரையிலும் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறவன். கடலை வெல்ல இலக்கு, ஆசை இருக்க முடியுமா? கடலை அறிவதற்கான ஆசை இருக்கிறது. இதுவே பெரிய ஆசைதான். பெரிய இலக்குதான்.
தி இந்து தீபாவளி மலர் – 2016 – தி இந்து நாளிதழ் – அக்டோபர் – 27.