புதன், 15 மே, 2024

வீடியோ மாரியம்மன் - விமர்சனம் - ருஃபினா ராஜ்குமார்


சமீபத்தில் வாங்கிய புத்தகம் இமயம் எழுதிய "வீடியோ மாரியம்மன்"

இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. மொத்தம் பதினொரு சிறு கதைகள். இதில் "சத்தியக்கட்டு" "பயணம்" இரண்டு கதைகளும் வேறெங்கும் பிரசுரமாகாதன. மற்ற கதைகள் காலச்சுவடு, டைம்ஸ் ஆஃப் இண்டியா சிறப்பு மலர், தலித், தீராநதி, புதிய பார்வை, அம்ருதா, போன்றவற்றில் வெளி வந்தவை.

முதல் கதையான "வீடியோ மாரியம்மன்" இது தான் புத்தகத்தின் தலைப்பும் கூட, ஒரு கிராமத்து திரு விழாவுக்கே நம்மை அழைத்து சென்று விடுகிறது. அதில் வரும் ஆட்டக்காரி செடலுடைய குறிப்பு நம்மை ஆசிரியரின் இன்னொரு புத்தகமான "செடலு" க்கே இட்டுச் செல்லும். கரகாட்டக்காரி என்று ரொம்ப துச்சமாக நாம் நினைக்கும் ஒரு பெண் இந்த அளவுக்கு நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது ஆச்சர்யம் தான். இந்த முறை ஒரு மாற்றாக இருக்கட்டுமென ஆட்டம் இல்லாமல்  ஒரு வீடியோக்காரரை படம் போட அழைத்து வந்து , முடியும் வரை ஏற்பாடு செய்தவரின் பதற்றம் நம்மால் நன்கு உணர முடிகிறது. மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் அது திருமணமோ திருவிழாவோ இறுதியில் ஒரு கலகம் வந்தால் தானே சிறப்பாக நடந்த தோற்றம் தருகிறது. அதே போல வரும் ஒரு கலகத்தை ஊர்ப் பெரியவர்கள் எப்படி சரி செய்கிறார்கள் என்பது ரசிக்கத் தக்க விதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. 


பல கதைகளின் நாயகி பெயர் "ராணி" என்றே வருவது நம் கவனத்தைக் கவர்கிறது.  "பயணம் " என்றொரு கதையில் "சாவு வெள்ளாமை" என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது. வழக்கத்துக்கு விரோதமாக அந்த வருடம் அதிக அதிகமாக விளைந்திருக்கும். அந்த ஆண்டே வீட்டு ஆண் இறந்து போயிருப்பான். சாவை முன் கூட்டியே அடையாளம் காட்டுவதாக அதிகம் விளைவதை சாவு வெள்ளாமை என்கிறார்கள். ஒரு கதை என்பது இப்படித்தான் அந்தப் பகுதி மக்களின் குண நலம்,  நம்பிக்கை போன்றவற்றை சொல்வதாக அமைய வேண்டும்.

"குடும்பம்" என்றொரு கதை. மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னும் வேலைக்கு போன இடத்தில் "அவனோட சிரிச்சு சிரிச்சு என்ன பேசுன" என்று சந்தேகத்தில் மனைவியை அடிக்கும் ஒரு கணவனைப் பற்றிய கதை. வேலைக்குப் பெண்ணை அனுப்பி விட்டு சந்தேகத்திலேயே உழல்வதற்கு பொருளாதார ஏற்றத் தாழ்வே இல்லையா என வேதனைப்பட வைத்த கதை.

 எனக்குத் தொகுப்பிலேயே ரொம்ப பிடித்த கதை "நாளை". பெண் எப்படித் திட மனதோடு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லித் தந்த கதை. உடையார் அவர் மனைவி பார்வதி. பார்வதி பார்த்து திருமணம் செய்து வைத்த சித்தி மகள் செல்லம்மாள் , இரண்டாம் வருடமே கணவனை இழக்க உடையாருக்கு செல்லம்மாளோடு தொடர்பு ஏற்படுகிறது. அது தெரிந்த பார்வதி எதுவும் சொல்லாமல்  , உடையாரோடு தான்  இணைவதை தவிர்த்து விடுகிறார்கள். பார்வதி இறந்த பிறகும் செல்லம்மாளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளாமல் , சொத்து பிரிக்கும் போதும் செல்லம்மாளை ஒரு பொருட்டாக எண்ணாத உடையார் தன் பிள்ளைகளிடம்  அவமானப்படும் போது தன்னோடு வந்து வாழ அழைக்கிறார். தொடக்கத்திலிருந்து இறுதி வரை பெண்ணைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆணின் சுயநலம் சரியாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

 செல்லம்மாளின் முடிவும் அதற்காக சொல்லும் காரணமும் தான் இந்த கதையை எனக்கு மிகவும் பிடித்ததாக்கியது. இந்த நான்கு கதைகளும் இமயம் அவர்களின் கதைகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணங்கள். அவர் மற்ற தளங்களில் இருக்கும் மனிதர்கள் பற்றிய கதைகளும் எழுத வேண்டும் என்பது என் அவா. தனக்கு பழக்கமான பகுதியிலேயே பயணிப்போம் மற்றவற்றை எழுதத் தான் வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களே என அவர் நினைக்கலாம். ஆனால் அவற்றையும்  எப்படி எழுதுகிறார் என்று பார்க்க வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.எழுதுங்கள் இமயம்!!!!


வெளியீடு் : க்ரியா பதிப்பகம் 

 விலை : ரூ 195/-

 

ஞாயிறு, 24 மார்ச், 2024

நவீனப் புலன் விசாரணை – கவிஞர்.சுகுமாரன்


இமையத்தின் புதிய நாவல்நெஞ்சறுப்புஉள்ளடக்கம் சார்ந்தும் உருவம் சார்ந்தும் நவீனமானது. அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்ட நவீனக் கருவியால் ஏற்படும் உளவியல் நெருக்கடிகளையும் குடும்பச் சூழலில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் நாவல் விசாரணை செய்கிறது. நவீன நடைமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்விக்கு உட்படுத்துகிறது. 


சீரங்கப் பெருமாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர். கல்வி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் செல்கிறார். அங்கே பலர் புதிதாக அறிமுகமாகிறார்கள். புதிய தொடர்புகள் உருவாகின்றன. அவர்களில் சசிகலாவும் ஒருவர். நவீன வழக்கப்படி எல்லாரிடமும் தனது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொள்கிறார். சிலரது எண்களைப் பெற்றுக் கொள்கிறார். இது ஒரு புதிய சம்பிரதாயம். பெற்றுக் கொண்ட எண்களையோ கொடுத்த எண்ணையோ பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக சீரங்கப் பெருமாளைப் பொறுத்தமட்டில் அது சம்பிரதாயமல்ல. புதிய வினை. சசிகலா முதலில் சாதுவான செய்திகளைப் பகிர்கிறார்.  அவ்வப்போது அழைத்து வில்லங்கமில்லாத உரையாடல்களில் ஈடுபடுகிறார். முதலில் மேலோட்டமாகத் தொடரும் இந்தப் பரிமாற்றம் பின்னர் வேறொன்றாக உருமாறுகிறது. சசிகலா காதல் வயப்பட்டவராக மாறுகிறாள். ஆரம்பத்தில் இதில் ருசி காணும் சீரங்கப் பெருமாள் தன்னையறியாமல் அந்த மாய வலையில் மாட்டிக் கொள்கிறார். அவர் அப்படி மாட்டிக் கொண்டிருப்பதே  மனைவி காமாட்சி கையும் களவுமாகப் பிடித்த பின்னர்தான் அவருக்கும் புலப்படுகிறது. இரண்டு பிள்ளைகளைப் பெறக் காரணமான கணவன் மீது காமாட்சிக்கு அது நாள்வரை இருந்து வந்த சலிப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்த இந்த ரகசியத் தொடர்பு துணையாகிறது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் துப்புத் துலக்கல்களும் எதிர் நடவடிக்கைகளும் எல்லாருடைய சுமுக வாழ்க்கையையும் புரட்டிப் போடுகின்றன. சீரங்கப் பெருமாளின் பழிகளையும் காமாட்சியின் பழிகளையும் சுமக்கும் பாவம் சசிகலாவின் மேல் கவிகிறது. 


ஒரு நவீனக் கருவி இன்றைய வாழ்க்கையில் உண்டுபண்ணும் அபாயத்தை நாவல் முன்வைக்கிறது. அதே சமயம் உறவுகளின் உண்மை முகத்தையும் பகிரங்கப்படுத்துகிறது. சீரங்கப் பெருமாளின் கோழைத்தனம், மனைவி என்ற நிலையில் காமாட்சி செலுத்தும் ஆதிக்கம், பிள்ளைகளின் உதாசீனம், சசிகலாவின் தன்னிச்சையான துணிச்சல் ஆகியவற்றையும் நாவல் சுட்டிக் காட்டுகிறது. இது தனி நபர் தளத்தில் நிகழ்கிறது. சமூகத் தளத்தில் நிகழும் அசம்பாவிதங்களையும் நாவல் மறைப்பதில்லை. சாதி உணர்வின் அகந்தை, கல்விப் புலத்தில் நிகழும் அட்டூழியங்கள், அதிகார மட்டத்தில் நடக்கும் அநியாயங்களையும் நிகழ்ச்சிப் போக்கில் சொல்லிச் செல்கிறது. தான் வாழும் காலத்தின் நடப்புகளைப் பற்றி அக்கறை கொள்ளும் எழுத்தாளர் இமையம் என்பதன் இன்னொரு சான்று இந்த நாவல். 

பெரும்பாலும் பேச்சு வழக்கில் தன்மைக் கூற்றாகவே, சீரங்கப் பெருமாளின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கும் நாவலில் பிற பாத்திரங்களும் துலக்கமாக முன்னெழுந்து வருகிறார்கள்.இது வாசிப்பில் வேகத்தைக் கூட்டுகிறது. இமையத்தின் முந்தைய நாவல்களில் ஒன்றானஎங்கதெயும் இதே உத்தியில் எழுதப்பட்டது என்பது நினைவுக்கு வருகிறது. இரண்டும் பெண்களை மையமாகக் கொண்ட நாவல்கள். ஆனால் ஆணால் முன்வைக்கப் பட்டவை. 

இன்று கைப்பேசியையோ திறம்பேசியையோ பயன்படுத்தாதவர்கள் அநேகமாக யாரும் இல்லை. அவர்கள் அனைவரையும் இந்த நாவல் அதிர்ச்சியடையச் செய்தால் வியப்பதற்கில்லை.  எந்த ஆணின் கைப்பேசியிலும்  ஒரு சசிகலாவின் குறுஞ்செய்தியோ அழைப்போ இருக்கலாம். அதுபோலவே எந்தப் பெண்ணின் கைப்பேசியிலும் ஒரு சீரங்கப் பெருமாளின் அழைப்பும் குறுஞ்செய்தியும் இருக்கக் கூடும். இது நவீன உறவு. நவீனக் கருவிக்கு மனிதர்கள் அடிமையாகிப் போனதன் அத்தாட்சி. 

கையடக்கமான தொடர்புக் கருவியை வைத்திருப்பதாக நாம் நம்புகிறோம். இல்லை. விசை பிடுங்கப்பட்ட வெடிகுண்டை எடுத்துக் கொண்டு திரிகிறோம் என்று நாவல் சித்தரித்துக் காட்டுகிறது. அது இமையத்தின் கற்பனை அல்ல. சமகால எதார்த்தம்.

தமிழ் தி இந்து நாளிதழ் 23.03.2024 

 

திங்கள், 18 மார்ச், 2024

நெஞ்சறுப்பு: இலக்கியம் இணைத்தது; இணை(யம்) பிரித்தது - பேரா.பெ.இராமஜெயம்

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய படைப்பாளிகளில் மிகவும் நுட்பமாக யாராலும் பெரிதாக கவனிக்கப்படாத இலக்கிய பரப்புகளை சமூகத்தின் கண் முன் நிறுத்துபவர் எழுத்தாளர் இமையம். அவரது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் அனைத்தும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு போக்கில் ஏற்பட்டிருக்கும் அசைவுகளை மண் மனம் மாறாமல் அந்த மக்களின் மொழியிலேயே எழுதி அவர்களின் துயரங்களை, சந்திக்கும் சவால்களை - கோவேறு கழுதைகள், ஆறுமுகம், மண்பாரம், செடல்  போன்ற படைப்புகளில் தொடங்கி சமீபத்தில் வெளியான நெஞ்சறுப்பு வரை காணலாம். இவரது நாவல்களில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் வெளிப்பாடுகள் படிக்கும் வாசகர்களின் வலிமையான மனதையும் உலுக்கி கண்ணீரை வரவழைக்கும். அதன் விளைவாக சமூக-பண்பாட்டு தளங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்கள் குறித்த பொது பார்வையும் மாறத் தொடங்கும். அதுதான் விளிம்புநிலை மனிதர்களின் பார்வையில் எழுதும் நாவலின் நிலையான வெற்றிக்கு அடையாளம். எழுத்தாளர் ஒரு நாவலை எழுத எத்தனை புத்தகங்களை வாசிக்க வேண்டும், அதை எங்கு மிக சரியாக பொருத்த வேண்டும் என்பதற்கு நெஞ்சறுப்பு நாவல் ஒரு சாட்சி.


 

இரண்டு கல்லூரி உதவி பேராசிரியர்கள் கருத்தரங்கில் சந்தித்த நட்பில் சமூக ஊடகங்களான வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி வழியாக இயல்பாக பழகுகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் மேற்கத்திய கவிஞர்களின் கவிதைகள், கூற்றுகள், மேற்கோள்கள், வாசித்த பழைய நாவல்கள் மற்றும் கவிதைகள் குறித்த விமர்சனங்கள் நட்பின் தன்மையை மாற்றுகிறது. இலக்கிய விமர்சன அறிவு கொண்ட இருவரும் பெரும் வயது இடைவெளிக்கு அப்பால் பழக-காதலிக்க முற்படும்போது பேராசிரியரின் மனைவிக்கு தெரியவர நடுத்தர வயது உதவி பேராசிரியர் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள் நெஞ்சை பதற வைக்கிறது. அந்த இருவரும் கருத்தரங்கில் சந்தித்து உரையாடியது ஒரு மணி நேரம் கூட இருக்காது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி காதலின் காலம், தொலைவு ஆகியவற்றை குறுக்கிவிட்டது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஓர் வலையில் வீழ்த்துகிறது. காதல் எல்லா காலங்களிலும் போற்றத்தக்கதாக இருந்தாலும் இன்றைய சமூக-பொருளாதார-பண்பாட்டு கட்டமைப்பு அதற்கு சாதகமாக இல்லை. நகர நாகரிகத்தில் சுதந்திரமாக சிந்தித்து வாழும் இளம்பெண் உதவி பேராசிரியருக்கும்; குடும்ப பொறுப்பு, சமூக-பொருளாதார, பாதுகாப்பின்மை ஆகிய காரணிகளால் அதிகார பின்புலம் இல்லாத; பாடம் சார்ந்த அறிவில் சராசரிக்கும் மேலான சிறந்த ஆய்வுத்திறன் கொண்ட அரசு கல்லூரியில் பணியாற்றும் நடுத்தர வயது ஆண் பேராசிரியருக்குமான நட்புதான் நெஞ்சறுப்பு நாவல். காதல் என்பது பொதுவாக அறிவு அடிப்படையில் மலர்வது அரிது. இந்த நாவலில் காதலிப்பதாக கட்டமைக்கப்பட்ட இரண்டு ஆங்கில இலக்கிய பேராசிரியர்களுக்கும் இடையே ஏற்படும் நட்பிற்கு காரணமாய் இருப்பது இலக்கிய வாசிப்பு தான். உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க இலக்கியங்களை பட்டியலிட்டு ஒப்பீட்டு இலக்கியங்களை மேற்கோள் காட்டி எழுதி இருக்கும் விதம் ஒரு தரமான அக்கறையுள்ள இலக்கிய வாசகனுக்கு அந்த நாவல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. இத்தனை நாவல்கள் படித்த பின்னும் காதலில் சறுக்கலா? என்று கேள்விக்கு விடை காண நாவலை கடைசி பக்கம் வரை இடைவிடாமல் படிக்க தூண்டுகிறார் இமையம். கதாப்பாத்திரங்களை அவரவர் நிலையிலிருந்து வாசகனோடு உரையாட வைக்கிறது அவரது எழுத்தின் வலிமை.

தந்தையை இளம் வயதில் இழந்து, ஏழ்மையிலும் வைராக்கியத்துடன் தனது ஒரே மகனை கல்விக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு நாளும் யாரிடமும் கடன் கேட்க - வாங்க அனுப்பாமல் வறுமையிலும் சுயமரியாதையை விட்டுத்தராத கௌரவமாக வளர்த்த தாய். மனோதிடம் இல்லாத ஆண் கதாப்பாத்திரம். இலக்கிய அறிவுத்திறன் மிக்க இளம் பெண்ணிடம் மனதை பறிகொடுத்தகாதல்குழந்தைகளுக்கும் தெரிந்து குடும்பத்துக்குள் சர்ச்சையாகி விட்டதால் மன அமைதி கெடுகிறது. அதை தன் தவறான காதலை வெளி உலகுக்கு தெரியாமல் இருக்க வழக்கறிஞர், காவல்துறை உயர் அதிகாரி என்று ஒவ்வொருவரிடமும் சென்றுபிரச்சனைதெருவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தனது தன்மானத்திற்கு ஏற்படும் இழுக்கிலிருந்து தப்பிக்க தானாக முன்வந்து முன்ஜாமீன் வரை செல்லும்அறம்சார்ந்த வாழ்க்கை போராட்டம் தான் இந்த நாவலின் மையக் கரு. இது போன்ற பல மடங்கு கொடுமையான பிரச்சனைகளை தினமும் சந்திக்கும் காவல்துறை அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் இன்றைய சமூகத்தில் தொழில்நுட்பத்தால் நடக்கும் நவீன அவலங்களை எடுத்து சொல்லும் போது அதை அவர்கள் மிக எளிமையாக அணுகும் விதம் இயல்பாக ஒரு மனசாட்சியுள்ள மனிதனுக்கு ஏற்படுத்தும் உளவியல் சிக்கலை இமையம் மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார். இந்த நாவலில் பின்தங்கிய கிராமத்து சூழலில் வளர்ந்து கல்லூரி முதல் ஆராய்ச்சி பட்டமேற்படிப்பு வரையில் ஆண்கள் நகரங்களில் படித்து இருந்தாலும், நகரத்தில் வாழும் அரசு ஊழியரின் குடும்பத்து நடுத்தர வர்க்கத்து படித்த இரண்டாம் தலைமுறை பெண்களை திருமணம் செய்து கொண்டபின்அரசு பணிஅடையாளத்தை இழக்க விரும்பாமல் சமரச வாழ்க்கையை வாழ ஏற்றுக்கொள்வதை விவரிக்கும்போது நாவலின் பக்கங்கள் நகர மறுக்கிறது. பொருளாதாரத்தில் சமூகத்தில் அடுத்த நிலைக்கு செல்லவேண்டிய அழுத்தத்தில் தனது குடும்ப உறவு-வேர்களுக்கு உதவ இயலாமல் சலிப்பதையும்; வயதான காலத்திலும் மகன் நலனை மட்டுமே பிரதானமாக கருதும் தாயும்; தம்பியின் கௌரவத்திற்காக சகோதரிகளும் தங்களின் இரத்த உறவை மதிக்காத பேராசிரியரின் மனைவியிடம் முரண்படாமல் உறவாடும்நாகரிக மோதல்களையும் மிகச் சரியாக படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது நெஞ்சறுப்பு. அதனினும், அறிவியல் படிப்பு படித்தவர்கள் மற்ற கலை மற்றும் மொழியியல் பாடங்களை படிக்கும், பணியிலிருக்கும் ஆசிரிய சமுதாயத்தையே உதாசீனமாக பார்க்கும் பார்வை நிதர்சனமாக இருக்கிறது. பணி சூழலின் காரணமாக கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும்போது சமூக உறவுகள் அறுபட துவங்குவதையும், அதே நகரம் அந்த கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை என்றாலும் நகரம் எவ்வாறு கிராமத்து மக்களை அந்நியமாக்கி புறக்கணிக்கிறது என்பதை தெளிவாக எடுத்து வைக்கிறார்.

இந்த நாவலின் எந்த பக்கத்திலும் காதலிக்கும் இருவரின் சமூக-பொருளாதார பின்னணி குறித்து கடைசி வரையிலும் உரையாடலில் காணமுடியவில்லை. இதுதான் இந்த நாவலின் சிறப்பு. கதையின் களம்காதல்என்றாலும் அது யாருக்கு சாத்தியமாகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். திருமணம் குறித்து இருவரும் எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை. காதலி காதலனை சந்திப்பதற்கு வீட்டிற்கும் கல்லூரிக்கும் வருவதாக குறுஞ்செய்தி அனுப்பியதும் கதாநாயகனின் மனைவி - கதாநாயகனைக் காட்டிலும் தீவிரமாக யோசிக்க வைக்கும் போது திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையை தொலைக்க கூடாது என்ற நிலையில் கணவனை பாதுகாக்க மனைவி தனது நட்பு வளையத்தை பயன்படுத்தி பிரச்னையை சரிசெய்வது பெண் கல்வியின் பயன்பாட்டை உறுதிபடுத்துகிறது. இதுபோன்ற வயதுக்கு மீறியகாதல்தொடர்பை பற்றி தினமும் சந்தேகத்துடன் விசாரிக்கும்  கேள்விகளால் இயல்பு வாழ்க்கையிலிருந்து மன அழுத்தமான சூழலுக்கு தனது கணவரை தள்ளியது எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத அவருடைய மனைவி காமாட்சி தான். ஆனாலும் அதை அவர் தவறு என்று உணர்ந்து தன்னை சசிகலாவிடம் இருந்து விடுவித்துக்கொள்ள படும்பாடு மனதை புரட்டி எடுக்கிறது. கணவனின் குடும்பத்தாரையும் அவரது யதார்த்தத்தையும் குறைத்து மதிப்பிட்டு இணையாக கருதி பழகாததால் அவரது இலக்கிய அறிவை வீட்டில் தன் மனைவிகூட அங்கீகரிக்கவில்லை என்றதால், குடும்பத்தில் தனக்கு ஓர் அடையாளமற்ற நிலையில் வாழ்ந்து வருவது தான் இந்த சிக்கலின் மூல காரணம் என்று அறிய முடிகிறது. தன்னை ஒரு ஆதர்ச நாயகனாக பார்க்கும் மற்றொரு பெண்ணிடம் மனதை திறந்து அறிவு சார்ந்து இருவருடைய சிந்தனை போக்கும் ஒரே திசையில் பயணிக்கும் நிலையில் காதலுக்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மனைவிக்கு மறைமுகமாக உணர்த்துகிறது நெஞ்சறுப்பு. வீட்டிற்கும், கல்லூரிக்கும் வருகிறேன் என்று இரு வேறு தருணங்களில் சொல்லி கதாநாயகனை சீண்டி பரிசோதித்து வராத காதலி; தான் ஒரு நாள் உங்கள் ஊர் ஆற்றங்கரையில் பிணமாக கிடப்பேன் என்று வரும் குறுஞ்செய்தி கணவன்-மனைவி இருவரையும் தூக்கமின்றி தவிக்கவிடும் மனப்போராட்டம் மூச்சடைக்க வைக்கிறது. சசிகலா ஆற்றில் மரணமடைந்தால் தன்னை காவல்துறை கைது செய்து நீதிமன்றம் அழைத்து செல்லும் காட்சியை, செய்தி ஊடகங்கள் எப்படி சித்தரிக்கும்?. ஊடகம் யாருடைய ரகசியத்தையும் காக்கும் பெட்டகம் அல்ல. சக பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஏற்படும் களங்கங்கள் குறித்து சிந்திக்கும் நேரத்தில் தற்கொலைக்கு துணியும் விரக்தி மனதை கலங்க வைக்கிறது. அதேசமயம், ‘பார்த்துக்கொள்ளலாம்அப்படி என்ன தவறு செய்துவிட்டோம்? என்ற போராட துணிச்சலும் மனதுக்குள் மாறிமாறி வந்து போவதுதான் ஒரு சராசரி மனிதனின்மனசாட்சிஉறுத்தல். சட்டப்படி எந்த புகாரும் சசிகலா அளிக்காத நிலையில் யாருக்கும் தெரியாமல் இருந்த காதல்-நட்பு விவகாரத்தை பேராசிரியரின் மனைவி தனது பிடியை கணவர் மீது இறுக செய்யவேண்டும் என்ற காரணத்திற்காக மிரட்ட நினைத்து கணவர் செய்த தவறுக்கு பாதுகாப்பு தேடி தாமாகவே சசிகலாவின் கல்லூரி வரை சென்று காவல்துறை, பேராசிரியர்கள் என பலருக்கும் தெரியவைத்துவிடுகிறார். இரு நெஞ்சங்களுக்குள் மட்டுமே இருந்த நட்பு வழியான காதல் வாழ்வில் ஆற்ற முடியாத காயங்களை ஏற்படுத்தி விடுகிறார்.

 

கவிஞர்களின் கவிதை வரிகளை மட்டுமே பரிமாறிக் கொண்டு காதலாக நிலைப்படும் முன்பே ஊடகம் காட்டிக்கொடுத்து கருவறுத்து விடுகிறது. இலக்கியத்தில் புனிதமாக கருதப்படும்காதலைபல கோணங்களில் கற்பனை வளத்துடன் எழுதும் கவிஞர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் யாருக்கும் பெரும்பாலும் காதல் வருவதில்லை. ஆனால் அதை படித்துவிட்டு அந்த கற்பனைக்கு அப்பாற்பட்டு கோட்டையை கட்டி உயிரூட்ட நினைக்கும்போது எதிர் கொள்ளும் உளவியல் சிக்கலில்சாவதே மேல்என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார். அமைதியான வாழ்க்கையை வாழ நினைத்த அறிவாளி புத்தி பேதலித்து தான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனம் சிதறிய மனநிலையில் கல்லூரியில் கேண்டீனுக்கு செல்வதற்கு பதிலாக பெண்கள் கழிவறைக்கும், முதல்வரின் அறைக்கும் சென்றுவிட்டு கண்ணியக் குறைபாட்டால் மனநோயாளியாக மாறிவிடுவோமோ என்று எண்ணி தான் கடந்து வந்த பாதைகளை நினைத்து மீண்டு எழ துடிக்கும் மனம்; சசிகலா அனுப்பும் அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் தன்னை மரணக் குழிக்குள் அனுப்புமோ என்று எழும் சந்தேகங்கள் மூலம் கதாநாயகனை மட்டுமல்லாமல் வாசகனையும் தூங்கவிடாமல் வைத்திருக்கிறார் நாவலாசிரியர். கணவனின் இந்த மன சிக்கல்களுக்கு வடிகாலாக சிகரெட்டு புகைக்க,  மது அருந்த வீட்டிலேயே அனுமதிக்கும் கறாரான மனைவி காட்டும் பரிதாபம் கதையில் இழையோடும்சுய ஒழுக்க சறுக்கலைஅடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதுவரை கணவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி, வேறொரு பெண் தனது கணவரை கைப்பற்ற நினைப்பதை சகித்துக்கொள்ள இயலாமல் கணவரைக் காட்டிலும் முன்முனைப்புடன் அந்தநெஞ்சுறவைஅறுத்தெறிய துடிப்பதும்; கணவருடையகாதலைபற்றி குழந்தைகளுக்கு சொல்வதால் தந்தை-குழந்தைகளுக்குள் ஏற்படும் பாச இடைவெளி இயல்பாக நெருடலை ஏற்படுத்துகிறது. குக்கிராமத்தில் இரண்டு சகோதரிகள் தங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு தங்களது சம்பாத்தியத்தில் கணவருக்கு தெரியாமல் சேமித்து தனது சகோதரனுக்கு படிக்க பணம் அனுப்பி உதவியிருந்தும் பெருந்தன்மையுடன் அவரிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவாடினாலும் தன் சகோதரனின் மனைவி தங்களை சமமாக நடத்தவில்லை என்ற போதிலும் அவர் மீது வைத்த குறையாத பாசத்தையும் களங்கமில்லாத உள்ளத்தையும் வெளிப்படுத்தி இருக்கும் விதம் வாசகர்களின் இதயத்தை கனக்க வைக்கிறது. சமூக-பொருளாதார அடித்தட்டில் இருந்து படித்து இலக்கிய அறிவுக்கு உகந்த-இணையான சிந்திக்கும் ஒருவருடன் வாழ இயலாத நிலை. அதற்கான கால சூழல் அவரது வாலிப வயதில் அமையவில்லை. அந்த இடைவெளியை தான் சசிகலா நிரப்புகிறார். ஆனால் இது போன்ற ஒரு காதலை நியாயப்படுத்த முடியுமா? என்று வாழ்க்கையை பொருத்திப் பார்க்கும் விதம் பல வாசகர்களின் அறிவை தெளிவடைய செய்யும்.

 

காதல் என்பது உண்மையிலேயேபித்துதான் என்று உணர வைக்கிறது நெஞ்சறுப்பு. சமூகத்தில் அறம், நேர்மை என்று வரையறைக்குள் வாழ தன்னை ஒப்படைத்துக் கொண்ட பொருளாதார பின்புலமில்லாத, தன் அறிவை மட்டுமே நம்பி வாழ நினைக்கும் ஒரு சாமான்ய குடும்பத்து பேராசிரியர், நவீன நகர நாகரிக சூழலில் வளர்ந்த ஒரு இளம் பேராசிரியையின் மனதை பகுத்தறிய முடியாமல் பல்வேறு கோணங்களில் சிந்தித்து சந்தேகங்களும், சலிப்புகளும், விரக்தியும் மேலோங்கி சுயத்தை வெறுத்து வாழ்க்கையை தொலைக்கும் விதத்தை எந்த ஒரு இடத்திலும் கற்பனை என்று நினைத்திராத அளவுக்கு எழுத்தாளர் இமையம் கதாபாத்திரத்தினுள் வாழ்ந்து எழுதிருக்கிறார். தொழில்நுட்பத்தால் அதிவேகமாக வளர்ந்துவிட்ட காட்சி ஊடகத்தின் செய்திகளில் உள்ள நெறிமுறை பிறழ்வுகளையும் சிக்கல்களையும் அது ஏற்படுத்தும் சமூக தாக்கத்தையும் எதிர்கொள்ள அஞ்சுவதை நினைத்து சட்ட சிக்கல்கள் வந்தால் அதை சமாளிக்க இயலாத கையறுநிலையில் கிடந்து தவிக்கும் ஒரு பேராசிரியர்; காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் நண்பர்களின் உதவியை அணுகும் விதம் உயர்க்கல்வி பயின்றாலும் உலக நடப்புகளை உற்று நோக்கவேண்டும் என்று உணர்த்துகிறது. இறுதியாக, அவரது கல்வி, பொருளாதாரம், அரசுப்பணியினால் கிடைத்த அடையாளத்தை பாதுகாக்க காதலை வெறுக்கிறார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி - நவீன உலகமயமாக்கப்பட்ட நாகரிக கட்டமைப்புகளை மாற்ற அறிவு சார்ந்த கல்வி சிந்தனையில் தனிமனித கட்டுப்பாடுகளை உடைத்து ஊடுருவ துணியும்போது எவ்வாறுகுடும்ப அமைப்புசிதைந்து விடாமல் இருக்க நடுத்தர வர்க்க பெண்கள்-ஆண்கள் எவ்வாறு  போராடுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இந்த நாவலில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களாக கல்லூரியில் பயிற்றுவிக்கும் இரண்டு தலைமுறை வயது இடைவெளி கொண்ட ஆங்கில இலக்கிய பேராசிரியர்களின் பாடம் சார்ந்து நட்பாக பல்கலைக்கழக கருத்தரங்கில் பழக தொடங்கும்காதல் இலக்கியம்குறித்த உரையாடல்கள்  மெல்ல நகர்ந்து நூழிலை வேறுபாட்டுடன் காதல் என்னும் உறவை தொழில்நுட்பம் வேகமாக வளர்த்துவிடுகிறது. அதே தொழில்நுட்பம் தன்னை காட்டிகொடுக்கும் தடயங்களாக, ஆதாரங்களாக மாறி குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களை மிக துல்லியமாக முன்வைத்திருக்கிறார். காதலை அறிவியல் தொழில்நுட்பம் கண்காணிக்கும் போது ஆண் பேராசிரியருக்கு ஏற்படும் தன்மானம், சுயமரியாதை, சுய ஒழுக்கம், சமூக மதிப்பீடுகள் தனது அடையாளமான பேராசிரியர் பணியின் மாண்பை சிதைத்துவிடும் என்ற அறம் சார்ந்த தவிப்பு அவரை காதலில் இருந்து விடுபட நிர்பந்திக்கிறது. இலக்கிய வாசகியான கூர்மையான இலக்கிய புரிதல்கள், உரையாடல்கள், உலகப் புகழ்பெற்ற  இலக்கியங்களின் தன்மையை அணுகும் முறை நிஜ வாழ்க்கையில் அதன் பயன்பாடுகளை பொருத்திப் பார்க்கும் அறிவில் ஒத்த சிந்தனையுள்ள தனது காதலியை இணைத்த ஊடகமே அவரது வாழ்க்கையில் சூறாவளியாக சுழன்று நிம்மதியை துடைத்தெறியும் போது கைபேசியை கையிலெடுக்காமல் இருந்து வாழ பழகுகிறார். எதை நாம் பெரிதும் விரும்புகிறோமோ அதுவே இடைஞ்சலாக மாறும்போது வெறுத்து ஒதுக்கும் நிலை வரும். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்பதை ஆழமாக புரியவைக்கிறார் கதாபாத்திரங்களை கட்டமைத்த எழுத்தாளர் இமையம்.

 

சசிகலாவுக்கும் ஸ்ரீரங்கப் பெருமாளுக்குமான அறுபடாத காதல் என்னவாகிறது என்பது தான் நெஞ்சறுப்பு. காகிதத்தில் எழுதி வாங்கி காதலை தடை செய்தாலும் கைபேசி அலைக்கற்றைகள் அதை அறியவில்லை. இலக்கியத்தால் இணைந்த காதலை இணையதளம் என்னும் தொழில்நுட்பம் பின்னிய வலையில் சிக்கி தவிக்கும் நவீன கலாச்சார மாற்றத்தின் எதிரொலி படிப்பவர்களின் நெஞ்சை நிச்சயம் அறுக்கும்நெஞ்சறுப்பு. அதேசமயம், தொழில்நுட்பம் தவறுகளை ஒருபோதும் மறைத்துவைக்கும் சாதனம் அல்ல என்றும் சமூக பார்வையுடன் ஒரு எச்சரிக்கையை முன்வைத்து தான் ஒரு உன்னதமான எழுத்தாளன் என்பதை இமையம் இந்நாவலிலும் நிரூபித்திருக்கிறார். புதுவகை கதை சொல்லல் முறை. இதுவரைக்கும் தமிழ் இலக்கியம் பதிவு செய்யாத கதை களம்.

உயிர்மை - மார்ச் 2024

 

 பெ.இராமஜெயம், உதவிப் பேராசிரியர்,

சமூக விலக்கல் மற்றும் சேர்த்தல் கோட்பாட்டு ஆய்வு மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி-620024

E-mail: akilram11@gmail.com

Mobile No: 9884663162