வியாழன், 5 ஜூன், 2025

ஆசைகள் - இமையம்

ஆசைகள் - இமையம்

டுத்த எடுப்புலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? போன வருசமே மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் மய நல்லா பேஞ்சி, கொல்ல நல்லா வௌயணுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப் பார்த்ததும், சங்கரும் ராணியும் தாங்களாகவே விழுந்து கும்பிட்டனர். அவர்கள் கும்பிட்டதைப் பார்த்ததும் மாரியம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “கிராக்குக்குப் பொறந்ததுங்க” என்று சொன்னாள்.

“இந்த வருசம் என்னா கதயா ஆவப்போவுதோ? நாம்ப ஒண்ணு நெனச்சா காடு ஒண்ணு நெனைக்குது. மானம் பேஞ்சிக் கெடுக்கப்போவுதா? காஞ்சிக் கெடுக்கப்போவுதா? யாரு கண்டா?” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்து இலந்தை முள் செடியை வெட்டினான் துரைசாமி. அடுத்து, கண்ணில் பட்ட புல், பூண்டு, நுனா செடிகள் என்று வெட்ட ஆரம்பித்தான். அவன் வெட்டிப்போடுகிற செடிகளை எடுத்து ஒன்றுசேர்த்து குவிப்பதற்காக சங்கரும் ராணியும் போட்டி போட்டனர். “இந்த செடிய வெட்டுப்பா, இந்த முள்ள வெட்டுப்பா” என்று சங்கரும் ராணியும் ஒவ்வொரு செடியின் முன்னும் ஓடிச் சென்று காட்டினர். 

புல், பூண்டு, காவாளச் செடி, ஊனான் கொடிகளையும் இன்னும் கையால் பிடுங்க முடிகிற செடி, கொடிகளையும் மாரியம்மா பிடுங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள். மழை பெய்து இரண்டு நாட்களாகிவிட்டாலும் மண்ணில் ஈரம் இருந்ததால் செடிகொடிகளைப் பிடுங்குவது எளிதாக இருந்தது. 

 “கிட்டகிட்ட வராதீங்க, ஒரு நேரம் மாரி ஒரு நேரம் இருக்காது. மம்பட்டியோட எல கழட்டிக்கிட்டு வந்து மேல பட்டாலும் பட்டுடும். வெட்டுன பிறவு எடுங்க, வெட்டுறதுக்கு மின்னாடியே கிட்ட வராதீங்க” என்று துரைசாமி சொன்னான். அவன் சொல்வதைக் காதில் வாங்காமல், முன்பு போலவே ஓடிஓடிச் சென்று செடி, கொடிகளைக் காட்டவும், வெட்டுவதற்குள்ளாகவே அவற்றை எடுக்கவும் சங்கரும் ராணியும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர்.

வரகு விதைத்து அறுத்திருந்த நிலம் என்பதால் பூண்டுச் செடிகள்தான் அதிகமாக முளைத்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நுணாச் செடிகள், இலந்தை முள் செடிகள், ஓணான் கொடிகள் முளைத்திருந்தன. எரு கொட்டி வைத்திருந்த இடங்களில் மட்டும் கோரையும், அம்மக்காய் செடியும் நாத்து நட்டு வளர்த்தது போல் முளைத்திருந்தன. கோரைப்புல்லையும் அம்மக்காய்ச் செடிகளையும் வேரோடு பிடுங்கிப்போட ஆரம்பித்தாள் மாரியம்மா.

“நீங்க ஒண்ணும் செடியக் காட்ட வாணாம். நானே பாத்து வெட்டிக்கிறன். நீங்க அம்மாகிட்டப் போங்க” என்று சொல்லி துரைசாமி விரட்டியதும் சங்கரும் ராணியும் ஓடிவந்து மாரியம்மாவுடன் சேர்ந்து கோரைப் புல்லையும் அம்மக்காயையும் பிடுங்க ஆரம்பித்தனர். இருவரும் வேகவேகமாகப் பிடுங்கியதால் கோரையும் அம்மக்காய் செடியையும் வேரோடு பிடுங்காமல் அரைகுறையாகப் பிடுங்கினார்கள். அதைப் பார்த்த மாரியம்மா, “பாதிப் பாதியா புடுங்குனா திலுப்பியும் மொளச்சிக்கும், ரவ ஈக்கு இருந்தாக்கூடப் போதும், உசுரு பொழச்சிக்கும். செடியோட தலையப் புடிச்சிப் புடுங்கக் கூடாது. செடியோட சூத்துல புடிச்சிப் புடுங்கணும்” என்று சொன்னதோடு, செடிகளைப் பிடுங்கியும் காட்டினாள். அவள் பிடுங்கியது மாதிரியே சங்கரும் ராணியும் பிடுங்க ஆரம்பித்தனர்.

மூன்று தக்காளிச் செடிகளும், ஏழெட்டு மிளகாய்ச் செடிகளும் வளர்ந்திருந்தன. அவற்றை ராணியும் சங்கரும் போட்டிபோட்டுக்கொண்டு பிடுங்கினர். மிளகாய், தக்காளிச் செடிகளை மாரியம்மாவிடம் காட்டி, “இதெ நான் எடுத்துக்கிட்டுப்போய் ஊட்டுக்குப் பின்னால நட்டு வைக்கப்போறன்” என்று ராணி சொன்னாள். சங்கர், “நானும்தான்” என்று சொன்னான். “ஊட்டுக்குப் போறதுக்குள்ளார வதங்கிப்போயிடும். நட்டு வச்சாலும் மொளைக்காது. தூக்கிப்போட்டுட்டு வேலயப் பாருங்க” என்று மாரியம்மா சொன்னாள். மிளகாய், தக்காளிச் செடிகளை இடது கையில் வைத்துக்கொண்டே குனிந்து கோரை, அம்மக்காய் செடிகளைப் பிடுங்கிப்போட ஆரம்பித்தனர். மாரியம்மா எரு கொட்டி வைத்திருந்த அடுத்த இடத்திற்குப் போனாள். போகும்போதே கண்ணில்பட்ட பூண்டு செடிகளையும் சீலைப் புல்லையும் பிடுங்கிப்போட்டுக்கொண்டே போனாள். அவளோடு சேர்ந்துகொண்டு சங்கரும் ராணியும் போனார்கள். 

துரைசாமி கண்ணில்பட்ட முள் செடிகளையும் பிற செடி, கொடிகளையும் வெட்டிப்போட்டுக்கொண்டே போனான். நிலத்தின் சனி மூலையில் ஒரு தோட்டப்பாய் அளவுக்கு அருகு முளைத்திருந்தது. அதை வெட்ட ஆரம்பித்தான். அருகுவின் வேர் படர்ந்திருந்த இடமெல்லாம் ஓர் அடி ஆழத்திற்கு வெட்டினான். ஒரு கணு அருகு இருந்தால்கூட போதும், முளைத்துவிடும். முளைப்பதோடு கொடி மாதிரி படர்ந்துவிடும். அதனால் சிறு துண்டு அருகுகூட இல்லாமல், வேர்கூட இல்லாமல் வெட்டி போட்டான். 

“இங்க ஒரு எடத்தில் அருவம் புல்லு இருக்கு, வந்து வெட்டு” என்று மாரியம்மா கூப்பிட்டாள். “வட்டம் போட்டு அடையாளம் பண்ணி வை, வந்து வெட்டுறன்” என்று துரைசாமி சொன்னான். அருகு படர்ந்திருந்த இடம்வரை வட்டமாகக் காலால் வட்டமிட்டாள் மாரியம்மா. அவள் வட்டமாகப் போட்ட இடத்திலேயே சங்கரும் ராணியும் காலால் வட்டம் போட ஆரம்பித்தனர். 

ஒரு இடத்தில் வரகு பயிரும், அம்மக்காய் செடியும் கொசகொசவென்று தண்ணீர் ஊற்றி வளர்த்தது மாதிரி வளர்ந்திருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மாரியம்மா, “ஒரம் போட்டு வளத்த மாதிரி வளந்து நிக்குது பாரேன்” என்று சொல்லிவிட்டு அம்மக்காய் செடிகளைப் பிடுங்க ஆரம்பித்தாள். சங்கரும், ராணியும் வரகுச் செடியைப் பிடுங்கிப்போடுவதைப் பார்த்த மாரியம்மா, “அதெப் புடுங்க வாணாம். ஏர் ஓட்டும்போது தானாவே செத்துப்போவும்” என்று சொன்னாள். 

அப்போது பக்கத்து நிலத்துக்காரி கருப்பாயி வந்தாள். “என்னா மாரியம்மா விடியறதுக்குள்ள வந்திட்டியா? கொல்ல வேல பாதி முடிஞ்சிப்போச்சே!” என்று சொன்னாள். சங்கரும் ராணியும் புல் பூண்டு செடியைப் பிடுங்குவதைப் பார்த்துவிட்டு, “பள்ளிக்கூடத்துப் புள்ளிவுள ஏண்டி கொண்டாந்து காட்டுலப் போட்டு அடிக்கிற?” என்று கேட்டாள்.

“இப்பியே காடு எது, ஊடு எதுன்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதான. நம்ப காட்டுலதான செய்யுதுவோ” என்று மாரியம்மாள் சொன்னாள்.

“இப்பத்தான் பத்தாவது படிச்சவனே பெரிய படுப்புப் படிச்சாப்ல குனிஞ்சி நிமிந்து வேல செய்ய மாட்டங்கிறான். காட்டுக்கு எதுக்கு என்னெ கூப்புடுறன்னு கேக்குறான்.”

“ஒங் கொல்லயிலெ வேல முடிஞ்சிப் போச்சா?”

“அட நீ ஒண்ணு, நான் ஒருத்தியா எம்மா வேல செய்ய முடியும்? தண்ணீ கொண்டாந்தன், கால் தடுக்கி ஊத்திப்புட்டன். குடமும் ஒடுக்கு வியிந்துப்போச்சி, அதுக்காக சாயங்காலம் ஊட்டுல என்னா சண்ட நடக்கப் போவுதின்னு தெரியல.”

“வேணுமின்னா போட்ட? காலு தடுக்கிறதுக்கு யாரு என்னா பண்ண முடியும்? ஆனாலும் ஒம் மாமியாக்காரி இருக்காளே யே அப்பா.”

“அந்தப் பாவியப் பத்தி பேசி, எதுக்கு இந்த நேரத்தில வவுத்து எரிச்சலக் கிளப்புற? குதிரன்னு சொன்னா கழுதன்னு அர்த்தம் பண்ணிக்கிறவகிட்ட வந்து மாட்டிக்கிட்டன். எந்த நேரத்திலெ என்னப் புடிச்சி அந்தக் குருடி மவன்கிட்ட கொடுத்தாங்களோ, அன்னாமுன்னா நான் படுறது சொல்லி மாளாது. நாக்க வறட்டுது, ரவ தண்ணி கொடு” என்று கருப்பாயி கேட்டதும், மாரியம்மா தண்ணீர் எடுத்துக்கொண்டு வா என்று சொல்வதற்குள்ளாகவே வன்னி மரத்தின் கீழ் வைத்திருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி சங்கர் ஓட்டமாக ஓடினான்.

“ஒனக்குத் தேவலாம். வரவு வெறச்ச கொல்ல. வேல சட்டுன்னு முடிஞ்சிடும், எனக்கு அப்பிடி முடியுமா? சோளம் வெறச்ச கொல்ல. ரெண்டு காணி பூராவும் தட்டய இயித்து ஆவுணுமே” என்ற சலிப்புடன் சொன்னாள் கருப்பாயி.

“இந்த வருசம் என்னா பயிரு வுடப் போற?”

“இனிமே இந்த சோளம், வரவு மொகத்திலியே முழிக்கக் கூடாது. கல்ல, எள்ளுன்னு பணப்பயிறா வுட வேண்டியதுதான்.”

“சோத்துக்கு என்னாப் பண்ணுவ?”

“இன்னம் எம்மாம் நாளக்கித்தான் சோள சோத்தயும், வரவு சோத்தயுமே தின்னுக்கிட்டு இருக்கிறது. இப்பத்தான் ரேசன் கடயில இலவசமா அரிசிப் போடுறானே. அப்பறம் என்னா இருக்கு?”

“அதுவும் சரிதான்.”

தண்ணீரைக் குடித்து முடித்த கருப்பாயி, “வெயில்ல புள்ளியுளப் போட்டு வாட்டாத” என்று சொல்லிக்கொண்டே தன் நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

நான்கு இடங்களிலிருந்த அருகம்புல்லை வெட்டினான் துரைசாமி. அதோடு கண்ணில்பட்ட இலந்தை, நுனா செடிகளையும் வெட்டினான். ஒன்றிரண்டு இடங்களில் முனைத்திருந்த எருக்கஞ்செடிகளையும் வெட்டினான். ஒரே இடத்தில் ஏழு எட்டு பனங்கன்றுகள் முளைத்திருந்ததைக் கண்டு, “நடு கொல்லயில எப்பிடி மொளச்சியிருக்கும்” என்று சொல்லிவிட்டு பனங்கன்றுகளை வெட்ட ஆரம்பித்தான். அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் ராணி.

ஒரு இடத்தில், தோட்டப்பாய் அளவுக்குச் சுக்கங்காய் செடி படர்ந்திருந்தது. முதலில் செடியை வெட்டாமல் அதிலிருந்த காய்களைப் பறித்தான். ராணியிடம் இரண்டு, மூன்று காய்களைத் தின்னச் சொல்லிக் கொடுத்தான். தன் வாயிலும் ஒரு காயைப் போட்டு மென்று தின்றான். சங்கரைக் கூப்பிட்டு அவனிடமும் மூன்று, நான்கு காய்களைக் கொடுத்தான். எஞ்சிய பத்து, இருபது காய்களைத் துண்டில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு செடியை வெட்டினான். வெட்டிய செடியைச் சுருட்டி அவனே எடுத்துக்கொண்டுபோய் குவியலாகப் போட்டிருந்த இடத்தில் போட்டான். நிலத்தில் புல், பூண்டு, செடி, கொடி, முள்செடி என்று இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தான். அவன்கூடவே சங்கரும் ராணியும் போனார்கள். “நிழலுக்குப் போங்க. சுக்கங்காய எடுத்துக்கிட்டுப்போயி தின்னுங்க” என்று சொன்னான். துரைசாமியின் பேச்சைக் கேட்காமல் சங்கரும் ராணியும் அவன் பின்னாலேயே அலைய ஆரம்பித்தனர்.

தண்ணீர்க் குடத்துடன் வந்த கோசலை, “என்னாடி மாரியம்மா வேல முடிஞ்சிட்டாப்ல இருக்கு” என்று கேட்டுக்கொண்டே வந்தாள். “இதென்ன ஐம்பது, நூறு காணியா? கோமணத்துணியாட்டம் ரவ நெலம். வேல முடியாம என்னா செய்யும்? தல சொமயோட நிக்குற போ, போயி நேரத்தோட ஆளுவுளுக்குத் தண்ணியக் கொடு” என்று மாரியம்மா சொன்னாள்.

“என்னாத்த பாத்து என்னாத்துக்கு ஆவப்போவுது? நாம்ப ஒண்ணு நெனச்சா மானம் ஒண்ணு நெனைக்குது, பூமி ஒண்ணு நெனைக்குது. சாவுற முட்டும் இந்தக் கல்லுகருமாந்தரம்தான். இந்த வருசம் மானம் என்னாத்த செய்யப்போவுதோ? எம்மாம் பாடுபட்டு என்னாத்துக்கு ஆவப்போவுதோ? நாலு புதுத்துணிய எடுத்துக் கட்டிப்பாக்க போறமா, ஒரு நக நட்டத்தான் எடுத்துப் போட்டுப்பாக்கப் போறமா? நம்ப சுயிநாதம் மண்ணுல கெடந்து பொரள வேண்டியதுதான். யே, தண்ணி கொடத்துல காக்கா ஒக்காருது பாரு” என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.  

“யே, யேய்” என்று கத்திக்கொண்டே காக்காவை விரட்ட ஓடினான் சங்கர்.

“கருப்பாயி ஊட்டுக் காட்டுல போயி சோளத்தட்டயும் சருவும் கொண்டா. நெருப்ப வச்சி கொளுத்தி வுட்டுட்டுப் போவலாம்” என்று துரைசாமி சொன்னான். “செடி கொடி, முள்ளு மெளாறலாம் காய வாணாமா? பச்சயா இருந்தா எப்பிடி எரியும்” என்று பதிலுக்குக் கேட்டாள். 

“காஞ்சிது போதும், போயி சோளத்தட்டயக் கொண்டா, எரியுறவர எரியட்டும்.”

“சொன்னா கேக்கணும். மூள இருந்தாத்தான கேக்குறதுக்கு?” என்று சொல்லி முனகிக்கொண்டே கருப்பாயி நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மாரியம்மா. அவள் எங்கே போகிறாள் என்று தெரியாமல் சங்கரும் ராணியும் அவளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

பிடுங்கிப்போட்டிருந்த, வெட்டி, கொத்திப் போட்டிருந்த செடி, கொடி, முள் எல்லாவற்றையும் ஏழெட்டு இடத்தில் குவியலாகக் குவித்துப் போட்டிருந்தான். மாரியம்மா கொண்டு வந்திருந்த சருகையும், சோளத்தட்டையையும் வைத்து ஒரு குவியலில் நெருப்பை உண்டாக்க முயன்றான் துரைசாமி. செடி கொடிகள் பச்சையாக இருந்ததால் நெருப்பு பற்றவில்லை. நெருப்புப் பற்றாததைப் பார்த்து, “காயணும் காயணுமின்னு சொன்னத கேட்டாதான” என்று சொல்லி மாரியம்மா முனகினாள். அவள் முனகியதைப் பொருட்படுத்தாமல், “இன்னம் ஒரு கொடங்க சோளத்தட்ட கொண்டா” என்று துரைசாமி சொன்னான். அவனை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள் மாரியம்மா. 

பெரும்பாடுபட்டுத்தான் நெருப்பை உண்டாக்கினான் துரைசாமி, “நெருப்புக்கிட்ட போவாதீங்க. நெருப்புப் பொறி கண்ணுல பட்டுடும்” என்று மாரியம்மா கத்திக்கொண்டேயிருந்தாள். அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் சங்கரும் ராணியும் எரிகிற நெருப்புக்குப் பக்கத்தில் கிடந்த செடி, கொடி, புல் பூண்டுகளை எடுத்துப் போட்டவாறு இருந்தனர். துரைசாமி ஒவ்வொரு குவியலுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டே போனான். கடைசி குவியலுக்குப் பக்கத்தில் ஒரு முறம் அளவுக்கு ‘அருகு’ முளைத்திருந்தது தெரிந்ததும் மண்வெட்டியை எடுத்துவரச் சொல்லி வெட்டினான். மண்ணுக்குள்ளிருந்து மூன்று, நான்கு பூரான்கள் வெளியே வந்து அங்குமிங்கும் ஓடின. ஒவ்வொரு பூரானாக அடித்துக் கொன்றான். செத்த பூரான்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் போடப்போவது மாதிரி சங்கரும் ராணியும் பயமுறுத்தி பாசாங்கு செய்தனர்.

“சீ நாயிவுள, எதுல வௌயாடுறதின்னு ஒரு இது இல்லியா? வாங்க கயிதவுளா” என்று சொல்லி ராணியையும் சங்கரையும் அழைத்துக்கொண்டு வன்னிமர நிழலில் வந்து உட்கார்த்தாள் மாரியம்மா. வன்னி மரத்தின் அடியில் கட்டெறும்புகள் திரிந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும், “மரத்துக்கிட்டெ போவாதீங்க, ஒரே எறும்பா கெடக்கு. கடிச்சா தடிச்சிப்போயிடும்” என்று சொன்னாள்.

பொன்வண்டு ஒன்று பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதைப் பிடிப்பதற்காக சங்கர் ஓடினான். அவனோடு ராணியும் ஓடினாள்.

ஒவ்வொரு குவியலாகப் பார்த்துக்கொண்டே வந்தான் துரைசாமி. எரியாமல் கிடந்த செடி கொடிகளை எடுத்து நெருப்பில் போட்டான். ஒரு சில குவியல்களை நன்றாக எரியும்படி கிண்டி கிளறிவிட்டான். தவறிப்போய் எதையாவது வெட்டாமல் விட்டுவிட்டோமோ என்ற சந்தேகத்தில் நிலத்தை ஒருமுறைச் சுற்றிப் பார்த்துவிட்டு வன்னி மர நிழலுக்கு வந்தான். வியர்வையைத் துடைத்துக்கொண்டே தரையில் உட்கார்ந்தான். “கருப்பாயி வந்தாளே என்னா சொல்லிட்டுப்போனா?” என்று கேட்டான்.

“வரவு, சோளமின்னு வெறைக்காம, எள்ளு கல்லன்னு வெறைக்கப்போறாளாம். நம்பளும் கல்ல எள்ளுன்னு இந்த வருசம் வெறைக்கலாமா?”

“சோத்துக்கு ஒங்கப்பன் ஊட்டுலயிருந்து வருமா?”

“எங்கப்பன் ஊட்டெ எதுக்கு இப்ப இயிக்கிற? இப்பத்தான் ரேஷன்ல இலவச அரிசி கொடுக்கிறான்னுல. வரவ அரச்சிச் சாவணும். சோளத்த துவச்சி சாவணும். இதுன்னா அரிசிய வாங்குனமா ஓலயில போட்டமான்னு போயிடும்.” 

“மாட்டுக்குத் தீனி?”

“இப்பத்தான் டிராக்டர வச்சி ஏறு ஓட்டுறாங்க. வரவு, சோளம், நெல்லு அறுக்கவும் மிஷினு வந்துடுச்சி.”

“அப்ப மாடு வாணாங்கிற? வாசல எதால தெளிப்ப? ஊட்ட எதால மொழுவ?”

“நீ வரவு, சோளமின்னே வெறச்சிக்கிட்டு இரு. நானா வாணாங்கிறன். இந்தா, அடுத்த எட்டாம் நாளு மூட்டுத்தரன்னு காதுல, மூக்குல கெடந்ததோட, காலுல கெடந்த கொலுசயும் அடவுவச்ச. ஆச்சி, வருசம் அஞ்சி. போன பொருளு இன்னம் ஊடு திரும்பல. கேட்டா வட்டியே சாப்புட்டிருக்கும், புதுசா வாங்கிப்புடலாம்ங்கிற. நான் செத்தாதான் வாங்குவ?” என்று சொல்லும்போதே மாரியம்மாவுக்குக் கண்கள் கலங்கின.

“வித்து சாராயம் குடிச்சிட்டனா?”

“எனக்குத்தான் இல்லெ. அந்தக் குட்டிக்கி ஒரு பொருளு எடுத்து வைக்க வாணாமா?”

“பாலு குடிக்கிற புள்ளைக்காடி சீரு கேக்குற?”

“அவ பாலு குடிக்கிற புள்ளயா? ஆச்சி பதனாலு வயசு. பள்ளிக்கூடம் தொறந்தா ஒம்பதாவதுக்குப் போவப்போறா, எந்த நேரத்திலயும் வயசுக்கு வந்துடுவா. அன்னிக்கிப் போயி ஒவ்வொரு பொருளும் வாங்குவியா?”

“அதான் ஒந்தம்பி இருக்காரில்ல பட்டி பரூர் ஜமீன், அவுரு கொண்டாந்து வண்டி வண்டியா எறக்கிட மாட்டாரா?” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தான். துரைசாமியை எரித்துவிடுவது மாதிரி பார்த்த மாரியம்மா. “எந் தம்பிகிட்டெ போவலன்னா ஒனக்குத் தூக்கம் வராது. நேத்தா தாலி கட்டிக்கிட்டு வந்தன், எந் தம்பி கொடுக்கிறதுக்கு. எனக்கு இருக்கிறதே ஒரு தம்பி. போன மொற வந்தப்ப, என்னா எதுன்னு கேக்கலன்னு கோவிச்சிக்கிட்டு போனவன் ரெண்டு, மூணு மாசமா இந்தத் திச திரும்பாம இருக்கான்” என்று சொல்லும்போதே மாரியம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“வெளயுற கொல்லயும் வௌயாமப் போறதுக்கு அயிவுறியா? நானே ஆத்த மாட்டாதவன் ஊத்த வெட்டி எறக்கிறமாரி இந்த மண்ணுல கெடந்து உருண்டு புரண்டுக்கிட்டு கெடக்குறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து ஒவ்வொரு குவியலாகச் சென்று எரியாமல் கிடத்தவற்றைக் குவித்துப்போட்டு எரிய விட்டான்.

வன்னி மர நிழலுக்கு ராணியும் சங்கரும் வந்தனர். ராணியைப் பக்கத்தில் உட்கார வைத்து அவளுடைய தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள் மாரியம்மா. வன்னி மரத்துக்கு வந்த துரைசாமி, “வெளயுற கொல்லயில எவளாவது பேனு பாப்பாளா? நேரம் என்னா ஆவுது? பொடி சுட ஆரம்பிச்சிடிச்சி, ரெண்டு மையிலு தூரம் போவ வாணாமா? புள்ளிவோ எப்பிடி இந்தப் பொடியில ஊடுப் போயிச் சேரும்?” என்று கேட்டான்.

“புள்ளிவோமேல ரொம்ப அக்கறதான்” என்று ஒரு தினுசாகச் சொன்னாள் மாரியம்மா. 

“புள்ளப் பெத்தவனுக்குத் தெரியாதாடி? புள்ளக்கி என்னா செய்யுறதின்னு?”

“தெரியாம என்னா கெடக்கு. பள்ளிக்கூடத்துக்குப் போற எடத்தில ‘இந்தமாரி’ ஆயிப்போச்சின்னு வந்து நின்னா அன்னிக்கி ஆடுவியா?” என்று கேட்டாள். துரைசாமி பதில் பேசவில்லை. தூரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“காதுல, மூக்குல போட்டுக்கிறதுக்கு ஒரு பொட்டுத் தங்கம் எம் பொண்ணுக்கு இருக்கா? காலுக்கு ஒரு கொலுசுகூட இல்ல. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு பொட்டப் புள்ளெ, அதுக்கு இந்த வயசில போட்டு அழகு பாக்காம அப்பறம் எப்பப் போட்டுப்பாக்கறது?” 

“நாளக்கி ஏறு ஓட்டணும். பருவத்தில மய பேயணும். வெரைக்கணுமேன்னு கவலப்படாம துணிய எடு, நகய எடுன்னு என்னமோ பேசிக்கிட்டு இருக்கிறவ?”

“நல்லத் துணி கட்டாம, நல்ல சோறு திங்காம இருக்குறதுக்கு எதுக்குக் காட்டுல வந்து பாடுபடணும்?”

“நகதான எடுக்கணும்? எடுத்திடலாம், கொல்ல வௌயட்டும்.”

“கொல்ல என்னிக்கி நல்லா வெளஞ்சிருக்கு? நீ நக எடுத்து எம்புள்ளக்கிப் போடுறதுக்கு. ஒரு கருவ மணிகூட எடுத்துப்போட மாட்ட. நான் போட்டுக்கிட்டு வந்தது இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்ட கேக்கப்போறன்?” என்று சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான் துரைசாமி. 

“ஒடம்புத் தெரியாமத்தான் பூட்டிவுட்டு அனுப்புனாங்க ஒங்க அப்பனும், அம்மாளும். ஏண்டி போக்கத்தப் பேச்சப் பேசிக்கிட்டுக் கெடக்குற?”

“கட்டுன துணியோடதான் வந்தனா? ஏயி எட்டு பவுனு போட்டுக்கிட்டு வல்ல? எல்லாத்தயும் வித்துத் தின்ன வாயாலதான் சொல்ற ஒண்ணும் போட்டுக்கிட்டு வல்லன்னு. அதயும்தான் மண்ணாப்போன சாமிவோ பாத்துக்கிட்டு இருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ எம்பொண்ணு தெரண்டு நிக்கப்போறா, அதுக்கு என்னாச் செய்யப்போற?” என்று எதிராளியிடம் கேட்பது மாதிரி கேட்டாள். அதற்குச் சிரித்துக்கொண்டே, “அதான் ஒந்தம்பி இருக்காரில்ல மந்திரி. அவுரு எடுத்துக்கிட்டு வர மாட்டாரா அக்கா மவளுக்குக் கிலோ கணக்குல தங்கத்த?” 

“இன்னொரு தரம் எந் தம்பிய இயித்தா மானம் மரியாத பூடும். நீ பெத்தப் புள்ளக்கி எந் தம்பி எதுக்குக் கிலோ கணக்குல தங்கம் போடணும். இந்த வருசம் காட்டுல என்னா பயிர் வுடப் போற?” என்று கேட்டாள்.

“என்னாடி புது கேள்வியெல்லாம் கேக்குற? எப்பியும் போல வரவு, சோளமின்னு தூவி வுட்டுட்டுப் போவ வேண்டியதுதான?”

“எள்ளு, கல்லப் போடு. மூணு மாச பயிறு. கார்த்திக ஐப்பசியில கையிக்குக் காசி வந்துடும். எள்ளு, கல்லயப் புடுங்குனதும் கொத்தமல்லிய தூவி வுடு, அதுவும் மூணு மாசம்தான். பொங்க கழிஞ்சி திருனா போடுற சமயத்தில் கையிக்குக் காசி வந்துடும். போன வருச பொங்க, தீவாளிக்குக்கூட ஒரு சீட்டித்துணிகூட எடுத்துத் தரல. காடு வெளயட்டும்ன்னு சொன்ன. காடு என்னிக்கி வௌயறது, நீ என்னிக்கி புது துணிய எடுத்துத் தர்றது? ஊரு ஒலகத்திலே பொட்டச்சிவோ எல்லாம் எப்பிடி மேனி கொலயாம இருக்காளுவோ, நம்பளுக்குத்தான் எந்தக் கொடுப்பனயும் இல்லியே.”

“எள்ளு, கல்லன்னு போட்டுட்டு சோத்துக்கு ரேசன் கடயிலப்போயி நிக்கப்போறியா?”

“ஊரே நிக்குதில்ல.”

“வெக்கம் மானம் இருந்தா நிக்க மாட்டானுவோ.”

“ஊரு நடப்பு தெரியணும். இல்லன்னா ஒலக நடப்பாவது தெரியணும். ஒண்ணுக்கும் ஒதவாத மண்ணாந்தய கட்டிக்கிட்டு என்னாப் பண்றது? தண்ணி வேணுமின்னா குடிச்சிபுட்டு மிச்சத் தண்ணிய கீய ஊத்திப்புட்டு கொடத்த எடு” என்று ராணியிடம் சொல்லிலிட்டு எழுந்தாள். தலைமுடியை அவிழ்த்து, உதறித் தட்டிவிட்டு மீண்டும் கொண்டை போட்டாள். “வாடா பயலே" என்று சங்கரைக் கூப்பிட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். 

மாரியம்மாளுக்கு அடுத்து சங்கரும், அவனுக்கு அடுத்து ராணியும் நடந்துகொண்டிருந்தனர். கடைசியில் துரைசாமி நடந்துகொண்டிருந்தான். வண்டி பாட்டைக்கு வந்தபோது யாரிடமோ சொல்வது மாதிரி, “வர எட்டாம் நாளு பள்ளிக்கூடம் தொறக்கப்போவுது. பயலக் கொண்டுபோயி ஆறாவது சேக்கணும். அவனுக்கு ஒரு புதுத்துணி எடுக்க வாணாமா?” என்று கேட்டாள்.

“தோளுல மாட்டுறமாரி பையும் வேணும்மா” என்று சங்கர் சொன்னான்.

“எனக்குப் புதுப்பாவாடயும் சட்டயும் எடுக்கணும்மா. யூனிபார்ம் கிழிஞ்சிப்போச்சி. புள்ளைங்க கிண்டல் பண்ணுதுவோ” என்று ராணி சொன்னாள்.

“புது பேனா, புது ஜாமண்டரி பாக்ஸ், செருப்பு எல்லாம் வாங்கித் தரணும். இப்பியே துணி எடுத்து கொடுத்தாத்தான் டெய்லரு தச்சி தருவான்” என்று சங்கர் சொன்னான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ராணி, “எனக்கும் புது பேனாவும் ஜாமண்ட்ரி பாக்ஸும் வேணும்” என்று சொன்னாள். “பாதயப் பாத்து போம்மா” என்று துரைசாமி சொன்னான்.

ஆறாம் வகுப்பு போவது பற்றியும், என்னென்ன பொருள்களை வாங்கித்தர வேண்டும் என்பது பற்றியும் சங்கர் சொல்லிக்கொண்டே நடந்தான். ராணியும் தன் பங்குக்குத் தனக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலைச் சொல்ல ஆரம்பித்தாள்.

 “எல்லாம் வாங்கித்தரன். காடு வெளயட்டும். மொதல்ல தடத்தப் பாத்து நடங்க. எல்லாத்துக்கும் மானத்து மகாராசன் மனசு வைக்கணும், கொல்ல வெளயணும்” என்று சொன்னான். 

 ‘எல்லாம் வாங்கித் தரன்’ என்று துரைசாமி சொன்னதைக் கேட்டதும் சங்கரும் ராணியும் தாங்கள் கேட்ட எல்லாப் பொருள்களும் கிடைத்துவிட்டது மாதிரி மகிழ்ச்சியில் மாரியம்மாளைத் தாண்டி முன்னால் போட்டிபோட்டுக் கொண்டு ஓடினர். சிறிது தூரம் சென்றதும் சட்டென்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ராணி உட்கார்ந்தாள். 

“கால இடிச்சிக்கிட்டியாடி” என்று 

கேட்டுக்கொண்டே விஷயம் புரியாமல் ராணியை நோக்கிப் போனாள் மாரியம்மா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக