வியாழன், 1 ஜனவரி, 2015

காதில் விழுந்த கதைகள் – இமையம்.

காதில் விழுந்த கதைகள் – இமையம்.

நடராஜன் வேட்டியை எடுத்துக் கட்டினார். மேல்சட்டையைப் போட்டபோது சமையல் அறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த சாரதா சொன்னாள்.
சட்டுன்னுபோயி சட்டுன்னு வாங்க. சுகரும் பீபியும் இருக்குங்கிற மறக்க வேணாம். அறியாப்புள்ளை மாரி ரோட்டுல எதயாச்சும் வேடிக்க பாத்துக்கிட்டு நிக்க வாணாம். வயசு அம்பத்தி அஞ்சி ஆச்சுன்னு தெரியணும். என்னெ எதுக்கு முறச்சிப் பாக்குறீங்க? கண்ணாடிக்கிட்டியே எம்மாம் நேரம்தான் நிப்பீங்க?...ஆஸ்பத்திரியில அண்ணன் மவள்னு ஒண்ணும் ஒறவாடிக்கிட்டு உருக வாணாம். மாத்திர வாங்கப்போறன், பில் கட்டப்போறன்னு பெருமப்பண்ணிக்கிட்டு காச கரியாக்க வாணாம். இந்த ஊருக்கு அவ குடிவந்து ரெண்டு வருசம் ஆவுது. ஒரு வாட்டியாவது இந்த ஊட்டுக்கு வந்திருக்காளா? அம்மாம் திமுறு. அம்மாம் கர்வம். அரசாங்க வேலயில இருக்கம்ங்கிற மம்மத. சாதி சனத்துக்கூட சேறுறதில்ல. சேந்தா காசு பணம் செலவு ஆயிடுமாம். எல்லாம் அவ அம்மாளோட ட்ரயினிங். நீங்களும்தான் மூண பெத்தீங்க. மூணும் ஒரு நூலு மாறாம அப்பிடியே இருக்குதுவோ ஒங்கள மாரியே. தண்டமா. எதுக்கு இப்ப என்னெ முறச்சிப் பாக்குறீங்க? உண்மயத்தான சொல்றன். பெரியப்பன் மவ மருந்த குடிச்சிட்டான்னதும் மூணு நாயிவுளும் நேத்துகிட்டு ஆஸ்பத்ரிக்குப்போனதுதான். இன்னம் ஊடு திரும்பல. அதது சாதிசனம்தான். அதது ரத்த பாசம்தான். நானும் இந்த ஊட்டுக்கு வந்து முப்பது வருசமாச்சி. வந்த அன்னிக்கி அடுப்புக்கிட்ட போனதுதான். இன்னம் அடுப்பவுட்டு வெளிய வல்லெ. நான் படுத்துகிடந்தப்பலாம், ஆபரேசன் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரியில எட்டு நாளு கெடந்தப்பலாம் ஒருநாயிம் வந்து ‘என்னா, ஏது‘ன்னு கேட்டதில்ல. எந் தல எழுத்து வந்து மாட்டிக்கிட்டன். கழுத்த நீட்டுன பாவத்துக்கு சாவுறமுட்டும் அழுதுதான் தீக்கணும்... எதுக்கு நிக்குறீங்க? ஆஸ்பத்திரிக்கி போறது மறந்துப் போச்சா? பொட்டச்சிக்கு எதுக்கு அம்மாம் ஆங்காரம்? புருசன் சண்ட போட்டா பொட்டச்சி பொறுத்து போறதுதான? எதுக்கு மருந்தக் குடிச்சா? எல்லாரயும் அலயவுடுறதுக்கா? அவ போனுக்கு ஒரே மிஸ்டுகாலா வருதாம்? எடுத்தா பேச மாட்டன்ங்குறாங்களாம். நெம்பர மாத்துன்னா மாத்த மாட்டன்ங்குறாளாம். அதனாலதான் சண்டயாம். என்னெ எதுக்கு அப்பிடி பாக்குறீங்க? கேள்விப்பட்டததான் சொல்றன். பொட்டச்சிக்கு எதுக்கு செல் போனு? நேத்து ராத்திரியே கொஞ்சம் நெனவாத்தான் இருந்தா. இப்ப சரியாயி இருக்கும். நேரத்திலியே போங்க. டிஸ்சார்ச் செஞ்சாலும் செஞ்சிடுவாங்க. அதுக்குள்ளாரப்போயி மூஞ்ச காட்டிட்டு வந்துடுங்க. அப்பறம் வந்து பாக்கலன்னு அவப்பேராயிடும். ஒங்க போன்ல சார்ச் இருக்கான்னு பாத்துக்கிட்டுப் போங்க.
நடராஜன் எதுவும் பேசவில்லை. போய்விட்டு வருகிறேன் என்றும் சொல்லவில்லை. வாசலுக்கு வந்து செருப்பை போட்டுக்கொண்டு கதவ சாத்திக்க என்று மட்டும் சொன்னார். பிறகு தெருவில் இறங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
   பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததுமே பாக்கியம் மருத்துவமனை வழியாக நரிமேடு செல்கிற மினிபேருந்து நிற்கிறதா என்று பார்த்தார். பேருந்து இல்லை. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் கேட்டார். இன்னம் கால்மணி நேரம் ஆவும் என்று கடைக்காரன் சொன்னதும் பயணிகள் உட்காருவதற்காக போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் நடராஜன். தரையில் குப்பையும் எச்சிலுமாக இருப்பதைப் பார்த்து முகத்தைச் சுளித்தார். எங்குப் பார்த்தாலும் ஒரே ஈயாக இருந்தது. மினி பேருந்து வருகிறதா என்று பார்த்தபோது இருபது வயது மதிக்கதக்க ஒரு பெண் காதில் செல் போனை வைத்துக்கொண்டே வேகமாக  நடராஜனுக்கு வலது பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்ப சொல்லு என்று பேச ஆரம்பித்தாள்.
நடராஜன் அந்த பெண்ணையே வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தார். நடராஜன் பார்ப்பது, சனங்கள் நடந்துபோவது, பழக்கடைக்காரர்கள், பூ விற்பவர்கள் கத்துவது, பேருந்துகளின் ஹாரன் ஒலி எதுவுமே அந்த பெண்ணை தொந்தரவு செய்த மாதிரி தெரியவில்லை. குப்பையில், சளியில் நிற்கிறோம் என்பதோ, ஈ மொய்க்கிறது என்பதோ அவளுடைய கவனத்தில் இருந்த மாதிரி தெரியவில்லை.
   ஹலோ, சொல்லு. ஒதுங்கித்தான் நிக்குறன். ஒரே சத்தமா இருந்துச்சி. இப்ப கேக்குது. நாளைக்கி வர மாட்டன். காலேஜ் லீவ். இனிமே அடுத்த வாரம்தான் வருவன். லீவுல விருத்தாசலம் வர எங்கம்மா வுடாது. கோமங்கலத்துக்கு எத்தினி மணிக்கு பஸ் வரும்ன்னு தெரியாதா? சீ, பொய், பத்தாம் நெம்பரு பஸ்ன்னு ஊருக்கே தெரியுமே. ம். ஆமாம். என் தங்கச்சியும் இங்கதான் படிக்கிறா. பத்தாவது. ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் வருவம். ஆமாம். அவபேரா? நன்மதி. எனக்கு பூமழைன்னு பேருவச்சதும் அதனாலதான். எங்கப்பா தமிழ் பைத்தியம் எல்லாம் இல்ல. எங்கண்ணன் பேரா? கார்மேகம், ஆமாம். ஒனக்கு எப்பிடித் தெரியும்? கவர்மண்டு வேலதான் செய்யுது. தாலுகா ஆபீஸில. ம். நாங்க மூணுபேரு மட்டும்தான். என்னா வேல? தனியாரா? சீசீ. சும்மாதான் கேட்டன். ஏன்? நான் கேக்கக் கூடாதா? ம். எம்.ஏ.தான் படிக்கிறன். அடுத்த வருசம் முடியும். ஆமாம். ரெண்டாயிரத்தி பதினாலுலதான். அப்பறம்? சொல்லு. அதிகமா கோபப்படுவியா? சும்மாதான் கேட்டன். ஆமாம். ம். என் பிரண்டு பேரா? கோமளா. ஆமாம். எங்கூடதான் படிக்கிறா. அவ ஊரா? மதுர வள்ளி. சரி வச்சிடுறன். அப்பிடியில்ல. எம்மாம் நேரம்தான் பேசுறது? சுமாராதான் படிப்பன். எங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். கொன்னே போட்டுடும். இங்க ஒரே சத்தமா இருக்குது. அதான் சரியா கேக்க மாட்டன்ங்குது. என்னது? எங்க ஊருக்கு வரியா? வந்தா அவ்வளவுதான். புடிச்சி கட்டி வச்சிடுவாங்க. எங்க ஊரு ஆளுங்க ரொம்ப மோசமானவங்க. நிஜமா? யேய், பொய்தான சொல்ற? ம். எனக்குத் தெரியும். ஐயோ சாமி. நான் வர மாட்டன். மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். ஐயோ! நீ பேச வாணாம். நானே பேசுறன். நீ மிஸ்டு கால் மட்டும் கொடு. என்னா ஒண்ணு, சனியன் புடிச்ச எங்க ஊருல டவரே கெடைக்காது. யாரு சொன்னா? எங்க ஊரு பட்டிக்காடெல்லாம் கெடையாது. அங்கலாம் எங்கம்மா அனுப்பாது. ம். சரி. அப்பறம்? பயமா இருக்கு? நீ என்னாத்த பாத்துக்குவ? மாட்டிக்கிட்டா நாந்தான சாவணும்? ம். பாக்குறன். காலயில பத்து மணிக்கா? சினிமா தியேட்டருக்கெல்லாம் வர மாட்டன். யாராச்சும் பாத்துடுவாங்க. ஒனக்கென்ன? நீ பாட்டுக்கும் போயிடுவ. எங்க ஊரு பையன் ஒருத்தன் என்னியவே பாக்குறான். ஆமாம். ஐயோ சாமி வாணாம். மிஸ்டுகால் மட்டும் கொடு. நானே பேசுறன். போன்ல சார்ச் வேற இல்லெ. கோயிலுக்குன்னாத்தான் வருவன். எங்க ஊரு பஸ் நிக்குற எடத்திலியே நிக்குறன். பஸ் வந்துடுச்சி. நான் போறன். அப்பறமா பேசுறன்“ என்று சொல்லிக்கொண்டே அந்த பெண் ஓடினாள்.
   நடராஜன் அந்த பெண் நின்றுகொண்டிருந்த இடத்தைப் பார்த்தார். வெறுமையாக இருந்தது. அந்த பெண்ணின் முகத்தையும், அவள் பேசிய வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்தார். சட்டென்று தன்னுடைய மகள் கோதையை நினைத்துப் பார்த்தார். தலையை ஆட்டிக்கொண்டார். என்ன தோன்றியதோ எழுந்துசென்று பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரட்டை வாங்கி பற்றவைத்துகொண்டு முன்பு உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்துகொண்டார். அவர் உட்கார்ந்து ஒரு நொடிகூட இருக்காது. முன்பு போனில் பேசிக்கொண்டிருந்த பெண் நின்றுகொண்டிருந்த இடத்தில் வந்து இரண்டு பெண்கள் நின்றனர். ஒருத்தி கத்தரிப்பூ நிறத்தில் சீலைக் கட்டியிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. மற்றொருத்தி மஞ்சள் நிறத்தில் சீலைக் கட்டியிருந்தாள். இரண்டு பேருக்குமே முப்பத்தி ஐந்து வயதிற்குள்தான் இருக்கும். பார்ப்பதற்கு இரண்டு பேருமே லட்சணமாக இருந்தார்கள். பெண்கள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்ததால் நடராஜன் சிகரட்டை அணைத்தார். மினி பேருந்து வந்துவிட்டதா என்று பார்த்தார். பிறகு கத்ரிப்பூ நிற சீலைக்கட்டியிருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் கையில் வைத்திருந்த மணிபர்சிலிருந்து போனை எடுத்து பேசினாள்.
   ஹலோ, பஸ்ஸ்டாண்டுல நிக்குறன். புள்ளைக்கி ஒடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரிக்கி வந்தன். பதினோறு மணிக்குத்தான் பஸ். அதுக்குத்தான் அவசரமா ஓடியாந்தன். சரியா கேக்கல. ஒரே சத்தமா இருக்கு. ஊட்டுக்கு வந்து பேசுறன். என்னாது புருசன் வந்ததும் மாறிட்டனா? நீதான் கண்ட. பேச மாட்டனா? பொய்ச் சொல்றனா? பக்கத்தில ஆளு இருக்காதா? பஸ்ஸ்டாண்டுலதான் நிக்குறன். கேக்கலியா? எதுக்கு இப்ப ஒண்ணுமில்லாததுக்கு சண்ட பண்ற? பேசுறதுக்கு ஒரு நேரம்காலம் வாணாமா? அது இன்னம் இருவது நாளுல போயிடும். அப்பறம் ஒன்னிஷ்டம்தான். ஒனக்கு இல்லாதது அப்பறம் யாருக்கு இருக்கு? நான் இருக்கமட்டும் எல்லாம் அப்பிடியேதான் இருக்கும். அதெவந்து எந்தத் திருடனும் தூக்கிக்கிட்டுப்போயிட மாட்டான். ஒரு இருபது நாளு பொறுசாமி. அப்பறம் ஆச தீர செஞ்சிக்கலாம். பண்ணிக்கலாம். என்னெ புரிஞ்சிக்க மாட்டியா? என்னாது? ஒரு சனியனும் காதுல விய்ய மாட்டங்குது. போனில சார்ச் வேற இல்ல. கட்டாயிட்டா என்னெ திட்டக் கூடாது. ஆமாம் ஆமாம் போனுக்கு சார்ச் போடுறது மட்டும்தான் எனக்கு வேல பாரு.    புள்ளெ தோளுல தூங்குது. பக்கத்தில அந்த அக்கா வேற இருக்குது. அப்பறம் பேசுறனே, ஆமாம் பத்மினி அக்காதான். சீ. என்னா பேசுற? ஊருல இருக்கிற பொட்டச்சிவோ எல்லாம் ஒனக்குத் தேவிடியாதான். வாய மூடு. என்னெ மாரி இல்லெ அது. ஊட்டுக்குப்போயி பேசுறனே, சத்தியமா பேசுறன். சொன்னா நம்பு. ஊட்டுல ஆளு இருக்கும்போது அங்கலாம் நான் எப்பிடி வர முடியும்? அது வந் பத்து நாளா ஊட்டுலியேதான் குந்தியிருக்குது. பொய். அது துபாயில இருந்தப்ப நீ கூப்புட்டப்பலாம் நான் வல்ல. ஆஸ்பத்திரிக்கிப் போறன்னு எத்தனவாட்டி வந்திருக்கன்? சும்மா பேசாத. நாலு மாசத்துக்கு மின்னாடி தூரம் நின்னுப்போயி நான் பட்டது எனக்குத்தான தெரியும். என்னாது? ஒனக்கொரு புள்ளைய பெத்து கொடுக்கணுமா? சரியாப்போச்சி போ. ஊட்டுக்காரன் கேக்கலன்னாலும் ஊருக்காரன் கேக்க மாட்டான்? ஒம் பேர சொல்லவா? அதுக்கு நான் செத்துப்போவலாம். நீ பாத்துக்குவியா? என்னாத்த பாப்ப? எதா இருந்தாலும் அப்பறம் பேசுறன். பஸ்ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு பேசமுடியுமா? மாறிட்டனா? எதுக்கு ஒண்ணுமில்லாமியே சண்ட பண்ற? இங்கப்பாரு வாயில வந்தப்படியெல்லாம் பேசக் கூடாது. இப்ப எதுக்கு என்ன கொல்ற? என் வாயக் கிண்டாத. அப்பிடித்தான் வச்சிக்க. நீ கலாவோட புருசனா இருக்கும்போது நான் முருகனோட பொண்டாட்டியா இருக்கக் கூடாதா? என்னாது? நீபாட்டுக்குப் பேசிக்கிட்டே போற? ரெண்டு வருசத்திலெ எனக்காக நீ என்னா கைய அறுத்துக்கிட்ட? அப்பிடியா? தப்புத்தான். நாடகக்காரியா இருந்திட்டுப்போறன். அது இப்பத்தான் ஒனக்குத் தெரியுதா? ரெண்டு வருசமா எங்கூட படுக்கும்போது தெரியல? சரிதான். விவரம் தெரிஞ்சா நான் எதுக்கு ஒங்கூட வரன்? நான் இன்னுமா தேவிடியாளா ஆவணும்? தப்புத்தான். ஒருத்தனோட பொண்டாட்டியா இருந்துகிட்டு, அவன் சம்பாரிச்சிப்போடுறத தின்னுக்கிட்டு இன்னொருத்தன்கூட படுக்கிறது எம்மாம் பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது. ஓ அப்பிடியா? இந்த வாத்தய ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லுவியா? திருப்பி சொல்லு கேக்கல. எனக்கு என்னா செஞ்சன்னு கேக்குறியா? புதூர் பூராவும், தெருவுல, ஊருல ஒன்னால பேருகெட்டுப்போயி கெடக்குறனே அதுபோதாதா? சரி. பேசவாணாம் வுட்டுடு. ஆமாம். புத்தி கெட்டுப்போயித்தான் ஒங்கூட படுத்தன். தாலி கட்டுன பொண்டாட்டியா இருந்தா இப்பிடி பேசுவியா? பொய்ச்சொல்றனா? சரி அப்பிடித்தான் இருக்கட்டும். என்னெ வுட்டுடுறியா? வுட்டுடு. நல்லதாப் போச்சி. எதாயிருந்தாலும் நாந்தான அழுது சாவணும். சாவுறமுட்டும் தேவிடியாங்கிற பட்டத்தோட நாந்தான சாவணும்? எம் பிரிசன் என்னெ வுட்டுட்டா. நாந்தான தெருவுல நிக்கணும்? சரிவுடு. நான் செத்துப்போறன். நல்லவன ஏமாத்துன பாவம் என்னெ சும்மா வுடுமா? கண்டபடிபேசக் கூடாது. ஒனக்கும் ஒரு கும்புடு. ஒன்னோட அதுக்கும் ஒரு கும்புடு. பஸ் வந்துடுச்சி போன வச்சிடு. பேசாட்டி போ. இந்த சனியன எந்த நாயி கண்டு புடிச்சான்னு தெரியலியே. கரண்டவிட மோசமா சனங்கள கொல்லுது என்று கத்திய வேகத்திலேயே எதிரில் வந்து நின்ற பஸ்சை நோக்கி அந்த பெண் ஓட ஆரம்பித்தாள். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மஞ்சள் சீலைக்காரியும் கூடவே ஓடினாள்.
   அந்த பெண்கள் ஏறிய பஸ் நகர ஆரம்பித்ததை நடராஜன் பார்த்தார். சட்டென்று கத்திரிப்பூ நிற சீலைக்கட்டியிருந்த பெண்ணின் தோளில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையினுடைய முகம் நினைவுக்கு வந்தது. வேகமாக எழுந்துவந்து முன்பு மினி பேருந்து எப்போதுவரும் என்று கேட்ட கடைக்காரனிடமே பஸ் எப்வரும்? என்று கேட்டார். வர நேரந்தான். பாத்துக்கிட்டே நில்லுங்க என்று சொன்னான். சலிப்பு ஏற்பட்டது. பக்கத்தில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் வந்து ரெண்டு பழம் கொடு“ என்று வாங்கி அந்த இடத்திலேயே நின்றுகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். அப்போது செல் போன் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. இடுப்பில் செருகி வைத்திருந்த போனை எடுத்து சத்தமாகக் கேட்டாள் வாழைப்பழக் கடைக்காரி.
   என்னாடி விசியம்? எங்கடி ஒங்கப்பன்? ஊட்டுல இல்லியா? காலயிலியே சாராய கடக்கிப்போயிட்டானா? அப்பிடியா? அப்பிடின்னா அங்கியே சாவச்சொல்லு. மூணு புள்ளை பெத்திருக்கானே. அதுவுளுக்கு யாருசோறு போடுறதின்னு கேளு. காலயிலியே வந்து வியாபாரத்தப் பாப்பானா? பிராந்தி கடயிலபோயி குந்தியிருப்பானா? ஒம் மூத்தரத்த புடிச்சிக்கொடு குடிக்கட்டும். எதக் குடிச்சாலும் அவன் திருந்த மாட்டான். ஊருல எம்மாம் காரு, பஸ் போவுது. ஒண்ணுல மாட்டி அவன் சாவக் கூடாது? பாஞ்சி வருசமா என்னெ புடிச்ச சனியன் வுடாது? எம்மாம் சாராயம் குடிக்கிறான்? வவுறுவெந்து சாவக் கூடாது. சத்தத்தில ஒரு கருமாதியும் கேக்கல. இப்பியே அப்பனுக்கு பரிஞ்சிப் பேசுறியா? நீ உருப்பட மாட்ட. அவங்கூட சேந்து நீயும் மண்ணாத்தான் போவ? பல ஆயிரம்பேரு வந்துபோற எடத்தில நின்னு ஒரு பொட்டச்சி தொழிலுபண்றாளேன்னு அவனுக்கு அக்கர வாணாம்? சீ வாய மூடு, பேசுறாப்பாரு மசுருபேச்சு. பழம் வாங்க வரவனெல்லாம் மொதல்ல என் சட்டயயும், சீலயயும்தாண்டி பாக்குறான். இது அந்த குடிகாரப் பயலுக்கு தெரியவாணாம்? நெருப்பாட்டம் சுடுறவெயிலுல நாள் முழுக்க நின்னுக்கிட்டே இருக்கிறனே எனக்கு கால வலிக்காது? ஒடம்பு வலின்னு ஒங்கொப்பனாட்டம் நான் தெனமும் பிராந்தியா குடிக்கிறன்? காலயிலிருந்து நிக்குறன். நான் சோறு தண்ணி குடிக்க வாணாமா? என்னெ மாத்தி வுடுனுமா வாணாமா? நீ எதுக்கு வர? பஸ் ஸ்டாண்டுல நிக்குறப் பயலுவோ இடிச்சிஇடிச்சியே ஒன்னெ பழமாக்கிட்டுப் போயிடுவானுவ. கண்ணாலியே புள்ள கொடுத்திடுவானுவோடி. ஒனக்கென்ன பள்ளிக்கூடம் போறன்னு நீ போயி குந்திக்குவ. அப்பிடியா? நல்லா ஆக்கி வையி. குடிச்சிட்டுவந்த களைப்புக்கு தின்னுட்டு தூங்கட்டும். சீ, சனியன. நான் கத்துறனா? வாழப்பழம் ஒரு நாளக்கி மேல தாங்காது. மறுநாளே வீணாப்போயிடும். வாழ மண்டிக்காரனுக்கு ஒங்கப்பனா பணம் தருவான்? பெரியசாமிங்கிற திருட்டுப்பயலுக்கு பொறந்தவதான நீ? அவன் ரத்தம்தான ஒன் ஒடம்புல ஓடுது, அதான் இப்பிடி பேசுற? செல்லம்மான்னு எனக்குபேர வச்சி எங்கப்பன்காரன் வெயிலுல நில்லுடின்னு பெத்துபோட்டுட்டான். எல்லாத்துக்கும் எங்கப்பன் கோனூராத்தான் சொல்லணும். அந்த நாதேறி வந்தா ஒடனே இங்க வரச்சொல்லு. எந் தல எழுத்து நான் சாவுறன். ஒங்கண்ணன்காரன் எங்க? கிரிக்கெட் வௌயாடப் போயிட்டானா? வௌயாடிட்டு வந்து சாப்பிடச்சொல்லு. நீ கறி மீனு எடுத்து ஆக்கி வையி. வந்து திங்கட்டும். சும்மா இருக்கிற நேரத்தில டி.வி.ய. பாத்துக்கிட்டே குந்தியிருக்காதடி. நோட்டுப்புத்தகத்த எடுத்து எழுதுடி சண்டாளி. இல்லன்னா நீயும் வந்து இந்த மாரி பஸ்ஸ்டாண்டுலதான் நிக்கணும். சாவணும். வையிடி போன. வியாபாரத்தப் பாக்கணும். சார்ச் வேற இல்லெ. என்று சொல்லிவிட்டு நடராஜனிடம் சில்லரயா தாங்க என்று கேட்டு காசை வாங்கினாள். வாழைப்பழத்தோலை ஒரு ஓரமாகப்போட்டுவிட்டு திரும்பியபோது மினிபேருந்து வந்தது. நடராஜன் பஸ்ஸிற்குள் ஏறினார்.
பேருந்து பஸ்ஸடாண்டை விட்டுவெளியே வரும்போது நடராஜனுக்கு போன் வந்தது, அவருடைய மகன் அரவிந்தன் பேசினான். பஸ்ஸில் வந்துகிட்டிருக்கன். கால்மணி நேரத்திலியே வந்துடுவன். நார்மலா ஆயிடிச்சா? அப்பிடியா? நல்லது. வந்துடுறன். சரி. பஸ் சத்தத்தில சரியா கேக்கல. ரூட்டு பஸ் அங்க நிக்காது. மினி பஸ் மட்டும்தான் நிக்கும். அது நாலு தப்படிக்கு நாலு தப்படி நின்னுநின்னுதான் வரும். நடந்தே வந்திருந்தாலும் இந்நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கலாம். நேர்ல பேசிக்கலாம். சரி. வச்சிடு என்று சொல்லிவிட்டு போனை மேல்சட்டை பையில் வைத்தபோது அவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுள்ள பெண் போனில் பேசினாள்.
இதென்ன மாமா கேள்வி? ஊட்டுலதான் இருக்கன். சோறுதான் ஆக்கிக்கிட்டு இருக்கன். டி.வி.தான் ஓடுது. சின்னக்குட்டி த்ரிஷாதான் அம்மாம் சத்தமா வச்சியிருக்கா. நீ பெத்த புள்ளை ஒன்னெ மாரிதான் இருக்கும்? அடங்காம. யே குட்டி சவுண்ட கொறடி. அப்பன மாரியே அடங்காம நிக்குறா பாரு. சரி வச்சிடவா? அவசரமில்ல. சார்ச் இல்ல. சார்ச்போடல. கரண்டு எப்ப வருது, எப்ப போவுதின்னே தெரியில. சனியன். சரி. சார்ச் போட்டுவைக்கிறன். ஆமாம்ஆமாம். ஒங்கம்மா பக்கத்து ஊட்டுலதான் குந்தி இருக்குது. நீ இருக்கிற எடத்திலதான் காரு லாரி போற மாரி சத்தம் வருது. நிஜமாத்தான் சொல்றன். இல்லியே. நான் யாருகிட்டயும் பேசலியே. கால்மணி நேரமா என்கேஜீடா இருந்துச்சா? தெரியல. நான் எதுக்குப் பொய்ச்சொல்லப்  போறன்? யாரும் பேசாதப்ப எப்பிடி போனு பிஸியா இருக்கும்? எதுக்கு என்னெ சாவடிக்கிற? என்னாது? பேச்ச மாத்துறனா? காருப்போற மாரி சத்தம் கேக்குதா? ஒனக்கு மட்டும் எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கற்பன ஓடுமோ. ஒனக்குத் தெரியாம நான் எதுக்கு காரு ஏறப்போறன்? காலம் பூராவும் என்னெ நீயும் ஒங்கம்மாவும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருங்க. ஒங்க சந்தேகத்திலியே நான் சாவப்போறன். ஒன் புள்ளிவுள நீயே பாத்துக்க. டி.வி.சத்தத்தில் சரியா கேக்க மாட்டங்குது. நான் சாவுறமுட்டும் கண்ணன் பொண்டாட்டிதான். கழுதூர்ல பொறந்து அரியநாச்சியில வாக்கப்பட்டபொண்ணு இந்த ஜெயமணின்னு தெரியுமில்லெ. அடுப்புல குழம்பு கொதிச்சிக்கிட்டிருக்கு. அடுப்ப நிறுத்திட்டு வந்து பேசுறன்.... என்று அந்தப்பெண் சொன்னாள்.
   நடராஜன் திரும்பி அந்த பெண்ணைப் பார்த்தார். போனில் அவள் எதையோ குடைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தால் அசிங்கமாக நினைக்கக்கூடும் என்ற எண்ணம் வந்ததுமே நேராக திரும்பி உட்கார்ந்தார். கல்யாண வீட்டில் கட்டியிருக்கும் ஸ்பீக்கர்செட் கத்துவது மாதிரி பஸ்ஸிலிருந்த ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது.
பாக்கியம் ஆஸ்பத்திரி என்று கண்டக்ட்டர் கத்தினான். பேருந்து நின்றது. நடராஜனோடு மூன்று நான்கு பேர் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள்.
மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே ஒரு நர்சிடம், நேத்து மருந்து குடிச்ச பொண்ணு எங்கம்மா இருக்கு? என்று நடராஜன் கேட்டார். சித்தலூர் தேன்மொழிங்கிற கேசா? எட்டாம் நெம்பர் ரூம்ல இருக்கு. இப்ப உள்ள போவாதீங்க, டாக்ட்டர் இருக்காரு. வெளிய வந்ததும் போங்க என்று சொன்னாள்.
எவ்வளவு நேரம் ஆவும்?
தெரியாது. பெஞ்சில உட்காருங்க. இல்லன்னா வெளியில வெயிட்ப்பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கிற இடத்திற்குப் போய்விட்டாள். ஐந்து சேர்கள்தான் இருந்தன. ஐந்திலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். எட்டாம் எண் அறைக்குமுன்போய் நின்றார். மருத்துவர் உள்ளே இருப்பது தெரிந்தது. பத்தாம் எண் அறையிலிருந்து வந்த ஒரு நர்சு வழியில நிக்கக் கூடாது. போயி ஒக்காருங்க. சொன்னா கேளுங்க. டாக்டர் பாத்தா எங்களத்தான் திட்டுவாரு. என்று கத்தினாள். நடராஜனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. தயங்கி நின்றுகொண்டிருந்தார். பிறகு வெளியே வாசலுக்கு வந்தார். ஒதுங்கி நின்றுகொண்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். அப்போது வழியில நிக்கக் கூடாது என்று கத்திய நர்சு வெளியேவந்தாள். வந்த வேகத்திலே கையில் வைத்திருந்த போனை காதில் வைத்துக்கொண்டுஇப்ப சொல்லு கேட்டாள்.
எத்தன மாசமா பீரியடு வல்லெ. மூணு மாசமா? சரிதான். ஸ்கூல்ல யாருக்காச்சும் தெரியுமா? மிஸ்டுகால் வந்து. அத யாருன்னு கேக்கப்போயீதான் மாட்டுனீயா? என்னது ஆட்டோ ஓட்டுறானா? நல்ல ஆளாதான் புடிச்சியிருக்க. தமிழ்ச் சிங்கம்ங்கிற நடிகரோட ரசிகர் மன்ற தலைவரா? சரிதான். உருப்பட்டுடும். சீ வாய மூடு. இப்ப எதுக்கு அழுவுற? ஊருக்காரின்னு சொல்றதுக்கே எனக்கு அசிங்கமா இருக்கு. +2 படிக்கும்போதே ஒனக்கு எதுக்கு இந்த வேல? அப்பிடியா? தெருவுல போனா நாயெல்லாம் பின்னால வரத்தான் செய்யும். நாம்பதான் பாத்துப்போவணும். நிக்காம, திரும்பிப் பாக்காமப்போவணும். என்னாது? காதல் பண்றீயா? இதுக்குப்பேருதான் காதலா? சரிதான். ஒம் பேர கையில பச்சகுத்தியிருந்தானா? கையில சிகரட்டால சுட்டுக்கிட்டு வந்து ஒங்கிட்ட காட்டுனானா? இப்ப அழுது என்னாப் பண்றது? அவன் பச்சகுத்தியிருந்தா என்ன, சிகரட்டால சுட்டுக்கிட்டிருந்தா ஒனக்கு என்னா? இப்ப அழுவறதால வயித்தில புள்ளை வளர்றது நிக்காதுடி லூசு. அப்பிடியா? மாத்தர போட்டும் சரியா ஆவலியா? ஆமாம். டி.ன்.சிதான் பண்ணணும். ரெண்டாயிரம் ஆவும். ஆமாம். ஊட்டுக்குத் தெரிஞ்சிடும்ன்னு இப்ப கவலப்பட்டு என்னா செய்யுறது? பணம் இல்லாம செய்யணுமின்னா நீ கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குத்தான் போவணும். நீ படிக்கிற புள்ளைன்னு தெரிஞ்சா செய்ய மாட்டாங்க. ஆமாம். ஸ்கூலுக்கு சொல்லிடுவாங்கதான். கேக்கல. சத்தமா சொல்லு. அந்தப் பய எங்க இருக்கான்? ஒரு வாரமா போன எடுக்கலியா? இனிமே வர மாட்டாண்டி. அவங்கிட்ட காட்டுறதுக்கு இனிமே ஒங்கிட்ட என்னா புதுசா இருக்கு? இப்ப அழுது ஒண்ணும் செய்ய முடியாது. நீ சாவுறமுட்டும் அழுதுதான் தீரணும். சொல்லு. நான் டூட்டியிலதான் இருக்கன். கழுத்தில செயினு கெடந்தா அத அடவு வையி. இல்லன்னா தோடு மூக்குத்தியத்தான் விக்கணும். மூக்குத்திப்போடலியா? இந்தக் காலத்தில யாருதான் மூக்குத்திப் போடுறாங்க? நீ போட. செயினத்தான் விக்கணும். ஊட்டுல கேட்டா எங்கியோ அறுந்து வியிந்திடுச்சின்னு சொல்லு. ஒன்ன மாரிதான் வாரத்துக்கு ரெண்டு மூணு ஸ்கூல்ல படிக்கிறப் பிள்ளைங்க இங்க வருதுவோ. டி.ன்.சி. பண்ணிக்கிட்டுப்போவுதுங்க. அவுங்களும் இதே பொய்யத்தான் சொல்லியிருப்பாங்க. பொய் சொல்ல மாட்டன்னு சொன்னா வயித்தத் தள்ளிக்கிட்டு நில்லு. சீ. வாயமூடு. எங்க ஊரு பொண்ணு, சொந்தக்காரப் பொண்ணுன்னு சொன்னா கொஞ்சம்தான் கொறப்பாங்க. சொல்றன். காலயிலதான் வரணும். வெறும்யித்தோடதான் வரணும். நாந்தான் சொல்லிட்டனில்ல. யார்கிட்டயும் சொல்ல. சத்தியம். மூணுமணி நேரத்திலியே போயிடலாம். வா. நாளக்கே கிளியர் பண்ணிடலாம். சத்தியமா செய்யுறன்டி. நாளக்கி மொத கேசா பண்ணசொல்றன். டாக்ட்டரம்மா என்ன கூப்புடுவாங்க. அப்பறமா பேசுறன். வையி. அழுது சாவாத. பாத்துக்கலாம். போனில சார்ச் வேற இல்லெ என்று சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அந்த நர்சு.
ர்சு ஓடுவதையே பார்த்த நடராஜனுக்கு முகம் சுண்டிப்போயிற்று. வெளியே வந்து ஐந்து நிமிசத்திற்குமேல் ஆகியிருக்கும். உள்ளே போகலாமா என்று யோசித்தார். சிறுநீர் வருவதுபோல இருக்கவே. மறைவாக எங்காவது இடம் இருக்குமா என்று பார்த்தார். அப்போது ஒரு பையன் ரோட்டிலிருந்து நடராஜனை இடித்துவிடுவது மாதிரி வேகமாக வந்து வண்டியை நிறுத்தினான். நடராஜனுக்கு உயிரே போய்விட்டது மாதிரி இருந்தது. கோபத்துடன் பையனை முறைத்துப் பார்த்தார். அவன் நடராஜனை ஒரு நூல் அளவுகூட பொருட்படுத்தாமல் சட்டைப்பையிலிருந்து வேகமாக போனை எடுத்து பேச ஆரம்பித்தான். நடராஜனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கொலை செய்துவிடுவது மாதிரி பையனையே வெறித்துப் பார்த்தார். அவன் அவரை ஒரு மயிராகக்கூட நினைக்காமல் போனில் கத்த ஆரம்பித்தான்.
எங்க இருக்க? மணிவேலன் ஆஸ்பத்திரியிலயா? நான் ஒன்னெ பாக்கியம் ஆஸ்பத்திரிக்குத்தான போவ சொன்னன்? அதுதான் ஒரு கொலகார ஆஸ்பத்ரியாச்சே? அந்த டெஸ்ட்ட எடு, இந்த டெஸ்ட்ட எடுன்னு காச புடுங்கிடுனுவானே. சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு மாத்தரய எழுதுறவனாச்சே. சத்தமா சொல்லுடி மூதேவி. என்னது? ஸ்கேன் அங்கமட்டும்தான் இருக்கா? சரி இப்ப எங்க இருக்க? பஸ்ஸிக்கு காசு இல்லியா? போன்போட வேண்டியதுதான? ஆமாம். ஒரு மணிநேரம் அணச்சி வச்சியிருந்தன். மேனேஜர் கழுத்த அறுப்பான்னுதான் செஞ்சன். சொல்லு. சரி. ஒங்கிட்டயிருந்த பணம் என்னாச்சி? மணி பர்சோட ஐநூறு ரூவாய தொலச்சிட்டியா? தேடிப் பாத்தியா? ஒம் மூஞ்சிக்கு எப்பிடி கெடைக்கும்? பஸ்ஸில தொலச்சியா, ஆஸ்பத்திரிலியா? எங்கன்னே தெரியலியா? ஒனக்கு என்னதான் தெரியும்? ஐநூறு ரூவாய்க்கி நானு மூணு நாளு பீங்கான் பேக்ட்டரியில நெருப்புல நிக்கணுமின்னு தெரியுமா? எதுக்குடி இப்ப அழுவுற? திருட்டு முண்டச்சி. ஒன்னெ போயி காதலிச்சி கல்யாணம் பண்ணுனன்பாரு. ண்டா காதலிச்சம்ன்னு இருக்கு. என்னடி முணவுற? ஐநூறு ரூவா எப்பிடி வரும்? ஒங்கப்பன் தருவானா? பன்னிமேய்க்கிறவன் மவகிட்டவந்து மாட்டிக்கிட்டன் பாரு. என்னாது? போனில சார்ச் தீரப்போவுதா? போனுக்கு சார்ச்கூட போடாம என்னா புடுங்குற வேல செய்யுற? யேய். யேய். இங்கப்பாரு. அழுதுகாட்டுன மூஞ்சிய ஒடச்சிப்புடுவன். எட்டுமாச புள்ளத்தாச்சின்னுகூட பாக்க மாட்டன். பஸ்ஸிக்கு காசு இல்லாம நடந்து போனியா? பூவனூரு முடக்குக்கிட்ட நிக்குறியா? நில்லுநில்லு. ஒன்னெவந்து சாயங்காலம் வச்சிக்கிறன். இன்னம் ஒரு மையிலுதான அப்பிடியே நடந்துபோ. அப்பத்தான் ஒனக்கெல்லாம் புத்தி வரும். யே. இப்ப என்னா சொன்? திருப்பி சொல்லு. ஒங்கூட ஒம்போது மாசம் இருந்ததே ஒம்போது வருசம் இருந்த மாரி ஆயிப்போச்சிடி. பிச்சக்காரன் மவள. முன்ன என்னமோ சொன்னியே அதை சொல்லு. ஒண்ணும் சொல்லலியா? வாயிக்குள்ளாரியே பேசுறதுக்கு எங்கடி கத்துக்கிட்ட திருட்டுப்பய மவள. ராத்திரி நேரத்தில குழம்பு சட்டிய கவுத்து வச்ச மாரி இருக்கிற ஒனக்கு எப்பிடிடி ஒங்கப்பன் ‘அழகு நிலா‘ன்னு பேரு வச்சான்? என்னது? ஒங்கப்பனப் பத்திப் பேசக் கூடாதா? அந்த கொடுக்கூரான் கிட்டப்போயி சொல்லு. இந்த அம்பேரிமேடு சேகரு யாருன்னு. வாயத்தொறந்து பேசுடி திருட்டுமுண்டச்சி. அப்பியே எங்கம்மா சொல்லுச்சி. கொடுக்கூருக்காரிவுள நம்பாதன்னு. பிரண்ட்ஸ்ம் சொன்னாங்க. காதலிச்சி கல்யாணம் கட்டாதன்னு. ஆமாண்டி, எங்கம்மா சொன்ன பொண்ண கட்டியிருந்தா புது பைக்கு வந்திருக்கும், பத்து பவுனு நகையும் வந்திருக்கும். சோத்துக்கு இல்லாதவன் மவள கட்டுனது எந்தப்புத்தான். வாய மூடுறியா? ஒத வாங்குறியா? எனக்கின்னே பொறந்திருக்கா பாரு முண்டச்சி. சாவப்போறியா? போ. செத்துத்தொல. என்னெ புடிச்ச சனியன் வுட்டுதின்னுப் போறன். டாக்ட்டரு ஒண்ணுமே சொல்லலியா? என்னா புள்ளைன்னும் சொல்லலியா? பொண்ணா இருக்கலாமின்னு நெனக்கிறியா? ஒன் நெனப்புல நெருப்பத்தான் கொட்டனும். பொட்டயாப் பெத்துப்போடு. ஒன்ன மாரியே எவங்கூடயாவது ஓடிப்போவட்டும். போன வையிடி சனியன. எதுக்குடி இப்ப ஊள வுடுற? பிச்சக்காரன் மவள. என் தல எழுத்து வந்துமாட்டிக்கிட்டன்னுதான இப்ப சொன்ன? இல்லியா? மாத்தி சொன்ன, பல்லப் பேத்திடுவன். ஊட்டுக்குப்போ. சாயங்காலம் வந்து ஒனக்கு பாடகட்டுறன். ஒன் பொணம் இன்னிக்கி சுடுகாட்டுக்குப் போவுதா இல்லியான்னு பாரு என்று கத்திய வேகத்திலியே வண்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் அந்தப் பையன். அவன் போன் பேசி முடித்ததும் தகராறு செய்யலாம் என்று நடராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். அதற்கு அவன் சிறுஅவில்கூட வாய்ப்புக் கொடுக்கவில்லை. வெறுப்படைந்தார்.
என்னா ஒலகம்ண்டா சாமி இது? நரக ஒலகம்தான் என்று சொல்லிக்கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார் நடராஜன்.



அந்திமழை – ஜனவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக