மொழி அழிவைத் தடுத்த முதலமைச்சர்
இமையம்
2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்களுடைய மொழி அழியும் நிலையில் இருக்கிறது. அதை அழியவிடக் கூடாது, பாதுகாக்க வேண்டும். அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வாய்மொழிப் பாடல்களையும், பேச்சு வழக்கினையும் பாதுகாக்க வேண்டும். மொழி இழப்பு என்பது கலாச்சார, பண்பாட்டு இழப்பு. நாம் நமது கலாச்சார, பண்பாட்டு செல்வங்களை இழக்கக் கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அதன் மூலம் ‘தொல்குடி மின்னணுக் காப்பாகம்’ உருவாக்கப்படும். அதன் மூலம் தோடர் சமூகத்தின் சடங்குப் பாடல்கள், இருளர் சமூகத்தின் மரபுவழி மருத்துவ நடைமுறைகள், காணிக்காரர் சமூகத்தின் கதை சொல்லும் ஓவியங்கள், வாய்மொழிப் பாடல்கள், வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்காக www.tholkudi.com இணையதளம் உருவாக்கப்படும். பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (SPPEL) என்ற அமைப்பு உருவாக்கப்படும். நான் அறிவித்த இந்தப் பணிகளை எல்லாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இவ்வண்டே செய்து முடிக்கும்” என்று அறிவித்தார்கள்.
முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 2024, செப்டம்பர் 27, 28 தேதிகளில் ‘தமிழகப் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருக்கிற மொழியியல் அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள், சமூக விழுமியங்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்து, அதன் அடிப்படையில், அழியும் நிலையிலுள்ள தமிழகப் பழங்குடியின மக்களின் மொழியையும் பண்பாட்டையும் வாய்மொழிப் பாடல்களையும் வாய்மொழிக் கதைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகப் பழங்குடியினர் நாளன்று, ‘தொல்குடி மின்னணுக் காப்பக’த்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இந்தத் தொல்குடி மின்னணுக் காப்பகத்தின் மூலம் தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களான காணிக்காரர், நரிக்குறவர், இருளர், தோடர், குறும்பர் இன மக்களுடைய பேச்சு மொழி, மரபுவழி பண்பாடு, கலாச்சாரம், பாட்டு, இசை, நடனம், பழக்கவழக்கம், சடங்கு முறைகள், வழிபாட்டு முறைகள் ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவிட்டதென்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இருக்கிற பழங்குடியின மக்களின் வாழ்வை முழுமையாக அறிவதற்கு, படிப்பதற்கு இனி www.tholkudi.in என்ற இணையதளம் அமைந்துவிட்டது.
’தொல்குடி மின்னணுக் காப்பகம்’ அமைப்பதில் www.tholkudi.in இணையத்தை உருவாக்குவதிலும், இணையத்தில் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைசார்ந்த அனைத்துத் தரவுகளையும் தொகுத்துப் பதிவேற்றம் செய்ததிலும், அமைச்சர் மதிவேந்தன், அரசு செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரை ஆகியோரின் அக்கறையும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் போற்றத் தக்கது. இனி தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களுடைய மொழியும் பண்பாடும் காலம் முழுவதும் வாழும்.
மொழியையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இதற்குக் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தினார் என்பதை அறிய வேண்டும். ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவன் பேசுகிற, அவன் வாழ்கிற சமூகம் பேசுகிற மொழி முக்கியமாக, அந்த மொழியில் இருக்கிற இலக்கியம் முக்கியமானது. தனக்கென்று ஒரு மொழியும் இலக்கியமும் இலக்கணமும் இல்லாத மனிதன் கிட்டத்தட்ட ஆடையற்ற மனிதனுக்குச் சமம். தமிழ்நாட்டின் பழங்குடியின மக்கள் ஆடையற்ற மனிதர்களுக்குச் சமமாக வாழக் கூடாது, அவர்களுடைய மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வரலாறு நெடுகிலும் நிலைத்துநின்று வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் இதற்காக அக்கறை கொண்டிருக்கிறார்.
மொழி ஏன் முக்கியமானது, அதை ஏன் பாதுகாக்க வேண்டும், மனிதன் எப்போது பேசினான் என்பதை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தான் நினைப்பதைப் பிறரிடம் சொல்ல வேண்டும், பிறர் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதுதான் பேச்சு மொழி உருவாகி இருக்க வேண்டும். சத்தத்தை எழுப்பி தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். சத்தம் அல்லது ஒலி என்பதுதான் பேச்சு. அல்லது மொழி என்பது. பிற விலங்குகளிடமிருந்து எந்தவிதத்தில் மனிதன் மேம்பட்டவன், வேறுபட்டவன் என்பதற்கு அவன் பேசுகிற மொழியும் எழுதுகிற மொழியும்தான் காரணம்.
1996இன் கணக்கெடுப்பின்படி உலகில் 6703 மொழிகள் பேசப்பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதன்படி அமெரிக்கா கண்டத்தில் 1000த்துக்கும் அதிகமான மொழிகளும் ஆசியக் கண்டத்தில் 2165 மொழிகளும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 2011 மொழிகளும் பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றன. இது துல்லியமான புள்ளிவிவரமல்ல. இந்தப் புள்ளிவிவரங்கள் 21ஆம் நூற்றாண்டிலும் அப்படியே இருக்கின்றன என்று சொல்ல முடியாது. உலகமயமாக்கலின் காரணமாகப் பல பேச்சு மொழிகள் வேகமாக அழிந்துவருகின்றன. இந்திய ஒன்றிய அரசுகூட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறது. இந்த முழக்கம் இந்திப் பண்பாட்டை நிலைநிறுத்தவும், பல தேசிய இனங்களுடைய மொழியை, பண்பாட்டை அழிப்பதற்குமான முயற்சியே, இதுபோன்ற சூழ்ச்சிகளிலிருந்து மொழியை, பண்பாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்? தாய் மொழி பேசுபவர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல், கல்வி நிலையங்களில் பாடத் திட்டத்தை உருவாக்குதல், சிறுபான்மை மொழிகளைப் பாதுகாக்க, கொள்கைகளை வகுத்தல், நிதி ஒதுக்கீடு செய்தல், சிறுபான்மை மொழியை மதிக்கும் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற காரியங்களால்தான் அழியும் மொழிகளைத் தக்க வைக்கவும், பாதுகாக்கவும் முடியும். மொழியைப் பராமரித்தல், ஆவணப்படுத்துதல், இலக்கண சொல்லகராதி, வாய்மொழி மரபுகளை ஆவணப்படுத்துதல் போன்ற காரியங்கள்தான் அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் அளிக்கும். அப்படியான பணியைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்துவருகிறார். மொழியியலாளர்கள், பூர்வீகச் சமூகங்கள், அரசுசாரா அமைப்புகள், யுனெஸ்கோ போன்ற சர்வ தேச அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகின் தொன்மையான மொழிகளான பாபிலோனியா, தமிழ், சமஸ்கிருதம், பழங்கால எகிப்திய மொழி என்று சொன்னாலும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட செத்துப்போன ஒரு மொழிக்கு ஒப்பானதாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழியின் வயது 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் அது எதனால் உயிர் வாழ்கிறது என்றால் அதுவே பேசும் மொழியாகவும் இருக்கிறது, இலக்கிய, இலக்கண மொழியாகவும் இருப்பதால்தான். மொழி மனிதர்களுக்கான தொடர்புக்கானது மட்டுமல்ல, வாழ்விற்கானது. அந்த மக்களின் அடையாளத்திற்கானது. திராவிட மொழிக் குடும்பத்திலேயே மிகவும் பழமையானது தமிழ். சில மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றன. அதனால், எளிதில் மறைந்துபோகின்றன. சில மொழிகள் இன்றும் வீட்டிற்குள்ளேயே பேசப்படும் மொழியாக இருக்கின்றன.
பழங்குடியின மக்களுடைய மொழி, பண்பாடு, கதைகள், வாழ்வியல், நெறிமுறைகளைக் காப்பதற்காக மட்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் போராடவில்லை. பழங்குடியின மாணவ மாணவிகளைப் படிக்க வைக்கவும் அவர்களைச் சமூகத்தில் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும் போராடுகிறார். திட்டங்களைக் கொண்டுவருகிறார்.
மலைப்பகுதியில் வாழக்கூடிய பழங்குடியின மாணவ மாணவிகள் குடும்பச் சூழல், நிலவியல் காரணிகள், போக்குவரத்துப் பிரச்சினைகள் என்று பல காரணங்களால பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலும் இடைநிற்றலும் அதிகரித்துவருவதைத் தடுப்பதற்காக ‘தொல்குடி திட்ட’த்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின குடியிருப்புகளில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான். அதன் அடிப்படையில் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவிகளுக்காக 26 வாகனங்கள் வாங்கப்பட்டன. திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பள்ளிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டது. இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் 74 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 3600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ‘இன்னாடு’ என்ற கிராமத்தில் வாகன வசதியை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடைநிற்றல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழங்குடியின மாணவர்கள் கல்வி நலனில் காட்டும் அக்கறையைப் பற்றியும் பழங்குடியின செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரையின் செயல்பாடுகளைப் பாராட்டி, ஆனந்த விகடன் இதழும், தி இந்து நாளேடும் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கின்றன. பழங்குடியின மக்கள் மட்டுமல்ல, பொதுச் சமூகமும் ஊடகங்களும் பாராட்டுவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகும்.
பழங்குடியின மக்களுடைய சுகாதார சேவைகளுக்காக நடமாடும் 20 வேன்களும் அவசரகால சேவைகளுக்காக 25 ஆம்புலன்ஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன. அக்டோபர் 5, 2025 முதல் இந்த வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பழங்குடியின மாணவ மாணவிகள் ஆரம்ப கல்வி மட்டுமல்ல, உயர் கல்வி பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் மதிவேந்தன், துறையின் செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரையும் பெரும் முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதானே சமூக நீதி, சமநீதி என்பது. கல்வியில் சமூக நீதியை நிலைநாட்டிய விதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்குத் திசைகாட்டிகளாக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மேற்கொண்ட சீரிய முயற்சிகளால இதுவரை இல்லாத அளவிற்குப் பழங்குடியின மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளில் 20 சதவிகிதம் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் தமிழ்நாட்டு பழங்குடியின மாணவ மாணவிகள் உயர் கல்வியில் எந்தளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர் என்பதையும் அறிய வேண்டும்.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவ மாணவிகள் தேசிய ஃபேஷன் தொல்நுட்ப நிறுவனத்தில் 42 பேர் சேர்ந்துள்ளனர். காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் 39 பேர் சேர்ந்துள்ளனர். பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (ராஞ்சி) 16 பேர் சேர்ந்துள்ளனர். இந்திய சுற்றுலா பயண மேலாண்மை நிறுவனத்தில் 10 மாணவர்களும் மத்திய பிளாஸ்டிக் பொறியல் மற்றும் தொழில் நிறுவனத்தில் 9 பேரும் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேரும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 பேரும் உயர் கல்வி பயில்வதற்காகச் சேர்ந்துள்ளனர். அதோடு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பகல்பூர், நேஷனல் இன்ஸ்டிடியூட் அஃப் ஹேண்லூம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் கோரக்பூர், இந்திய கடல்சார் நிறுவனத்தில் 6 பேரும், ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் 4 பேரும் சேர்ந்துள்ளனர். இப்படிப் பட்டியலிட்டுகொண்டே போகலாம். அந்தளவிற்குத் தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறும் பழங்குடியின மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
நீலகிரி மலையில் வசித்துவரும் தோடா மக்களால் பேசப்படும் மொழி தோடா. இம்மொழியைப் பேசக்கூடியவர்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் இல்லை. அதனால் அம்மொழி அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. அதே மாதிரி ‘கோட்டா’ என்ற மொழியும் படுகர் இன மக்களால பேசப்படும் ‘படுகா’ என்ற மொழியும், இருளர் இன மக்கள் பேசும் ‘இருளா’ என்ற மொழியும் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. பழங்குடியின மக்களுடைய மொழி மட்டும்தான் அழிந்துவருகின்றன என்று சொல்லிவிட முடியாது. பழங்குடியின மக்கள் தமிழில் பேச அதிகம் விரும்புகின்றனர் என்பதும் மேற்சொன்ன பழங்குடியின மொழிகள் அழிவிற்குக் காரணமாக இருக்கின்றது. இன்றைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர். கல்வி, மற்றும் பொது வாழ்வில் பயன்படுத்தும் மொழியின் பரவலும் தாக்கமும் சிறுபான்மை மொழிகளை அழிவை நோக்கி நகர்த்துகின்றன. எழுத்து வடிவம் இல்லாத பல நாடோடி இன மக்களுடைய மொழிகள் அழிவதைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதே மாதிரிதான் நீலகிரி மலையில் பேசப்பட்டு வந்த ‘எரவல்லா’ என்ற பழங்குடியின மொழி கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரா இன மக்களால் பேசப்பட்டு வந்த மொழி சரிவைக் கண்டுள்ளது. அதே மாதிரி தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த மராத்தியர்கள் பேசிய மொழியும் இன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு இனம் தனக்கான மொழியை இழக்கிறது என்றால் அந்த இனம் தனக்கான கலாச்சார அடையாளத்தை இழக்கிறது என்று அர்த்தம்.
மொழி வளர்ச்சியிலும் அழிவிலும் அரசியல் பொருளாதாரம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. மொழி பயன்பாட்டிலும் ஆதிக்கம் செய்கிற மொழிகள் இருக்கின்றன. ஆதிக்கத்திற்குட்படுகிற அழிந்துபோகிற சிறுபான்மை மொழிகளும் இருக்கின்றன. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் இந்த நூற்றாண்டிற்குள் 1500 மொழிகள் மறைந்துபோய்விடும். மொழியியல் வல்லுநர்கள் கூறுவது மிகைக்கூற்று அல்ல.
இந்தி எதிர்ப்பு என்ற நெருப்பு தமிழ்நாட்டில் ஏன் இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை எந்த விதத்திலாவது தமிழ்நாட்டிற்குள் புகுத்திவிட வேண்டும் என்று விரும்புகிற ஒன்றிய அரசின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை (National Educational Policy) ஏன் ஒன்றிய அரசு கொண்டுவர முயல்கிறது? இது ஒரு வகையான மொழித் திணிப்புத்தான். முயற்சிதான்.
Central Institute of Indian Congress நிறுவனத்தின் முன்னால் இயக்குநர் D.G. ராவ், “இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220 மொழிகள் அழிந்துள்ளன” என்று அறிவித்திருக்கிறார். “இந்தியாவில் இருக்கின்ற மொழிகளில் 197 மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன” என்று UNESCO அறிவித்துள்ளது. இமய மலையிலும் அதனை ஒட்டியுள்ள பிரதேசங்களிலும் வாழும் பழங்குடியின மொழிகளான அகோம், ஆண்ட்ரோ, ரெங்காஸ், செங்மாயி, டோல்சா போன்ற மொழிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.
முரசொலி 12.11.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக