வெள்ளி, 26 டிசம்பர், 2025

காலத்தில் வாழும் வாக்கியங்களை உருவாக்கிய முதலமைச்சர்

 காலத்தில் வாழும் வாக்கியங்களை உருவாக்கிய முதலமைச்சர்

இமையம்

மனித இனம் எப்போது பேச ஆரம்பித்தது என்பது குறித்து, தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. அதே மாதிரி எழுத்துகளை எப்போது உருவாக்கினார்கள் என்பது குறித்தும் இறுதியான ஆய்வு முடிகள் வெளியிடப்படவில்லை. உலகின் மூத்த மொழிகளாக, ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்று இறுதி செய்யப்பட்டுள்ளன. சைகை மொழியிலிருந்து ஒழுங்கற்ற ஒலிகளின் வழியே தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்ட பிறகு ஓரளவு சொற்களின் ஒழுங்கமைவிற்கு வந்தவன் பேச ஆரம்பித்த மனிதன், பேச்சை ஒரு கலையாக வளர்த்தெடுத்தான். இன்று அதிகம் பேசுபவர்களை ‘ஓட்டை வாயன்’ என்றும், அதிகம் பேசதவர்களை, ‘உம்மணாமூஞ்சி’ என்று பல பட்டப்பெயர்களைச் சொல்லி அடையாளப்படுத்துகிறோம்.

மனிதர்கள் பிறந்ததிலிருந்து சாகும்வரை பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு வார்த்தைகளைப் பேசியிருப்பான்? கணக்கிட முடியாது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பேசுகிற வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தமுள்ளது, எவ்வளவு அர்த்தமற்றது என்பது பிரித்துப்பார்க்கவும் முடியாது. எண்ணிப்பார்க்கவும் முடியாது. பேசிய வர்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் நினைவில் இருக்கும், தெரியாது, பேச்சிலேயே சிறந்த பேச்சு, பேசாமல் இருப்பதுதான். வார்த்தைகளைக் குறைத்துப் பேசுவதும், தேர்ந்தெடுத்துப் பேசுவதும் முக்கியமானது. பேசுகிற வார்த்தைகளைவிட பேசாத வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு அதிகம். உலகிலேயே சிறந்த மொழி, மௌனம்தான். பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். பேச தேவையில்லாத இடத்தில் பேசாமல் இருப்பது சிறந்தது.

 மனிதர்கள் அதிகம் செலவழிப்பது வார்த்தைகளாக இருக்கிறது. பணத்தை எண்ணிஎண்ணி செலவு செய்கிறார்கள். வார்த்தைகளை மட்டும் எண்ணாமல், சிந்திக்காமல் செலவு செய்கிறார்கள். காரணமே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்தக் கடையில் சாப்பிட வேண்டும், எந்தக் கடையில் சாப்பிடக் கூடாது, எந்தக் கடையில் துணி எடுக்க வேண்டும், எந்தக் கடையில் துணி எடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறவர்கள், பேச்சு என்று வரும்போது கவனமாக இருப்பதில்லை. சாதாரணமாக இருக்கும்போது பேசுகிற வார்த்தைகளுக்கும், கோபத்திலிருக்கும்போது பேசுகிற வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்பாக இருக்கிற நேரத்தில் பேசுகிற வார்த்தைகளைவிட கோபத்தில் பேசுகிற வார்த்தைகளைத்தான் அதிகம் நினைவில் வைத்திருக்கிறார்கள். வாயில் வருவதையெல்லாம் பேசுவது, பேச்சு அல்ல. வார்த்தைகள் அல்ல. தேர்ந்தெடுத்து, யோசித்து, திட்டமிட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை 90% பேரிடம் இல்லை. அதை ஒரு குற்றமாகவும் கருத முடியாது. பொதுவாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது என்பது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து மட்டுமே. சமூகம் சார்ந்து பேசுகிறவர்கள் அரிது. அதிகம் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது அரிது. எழுத்தாளர்கள் எழுதும்போது மட்டும்தான் வார்த்தைகளின் மீது அக்கறை கொண்டிருப்பார்கள். பேசும்போது அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக மனிதர்கள் பேசிக்கொள்வது இயல்பானதாக இல்லாமல் செயற்கையாகவே இருக்கும். இவன் பொய் சொல்கிறான், நடிக்கிறான் என்ற விதத்தில்தான் இருக்கும்.

கவிஞர்கள் கவிதையைப் பற்றியும், பொருளாதார அறிஞர்கள் பொருளாதாரத்தைப் பற்றியும், அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், கல்வெட்டியல், தொல்லியல் அறிஞர்கள் அந்தந்த துறை சார்ந்தவற்றை மட்டுமே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். யார் என்ன பேசினாலும், எழுதினாலும் ஒருசிலர் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே மக்களால் திரும்பத்திரும்ப நினைவுகூரப்படுகின்றன, மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. வால்டேர், பெர்னாட்ஷா, தாகூர், காந்தி, அம்பேத்கர், ஷேக்ஸ்பியர், பெரியார், அண்ணா, கலைஞர்கள் போன்றவர்கள் சொன்னது, எழுதியது மட்டுமே சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் நினைவுகொள்ளப் படுகின்றன. 

வெற்று முழக்கங்களை, கோசங்களை உருவாக்குவது எளிது. அது அந்தந்தக் கணத்தில் தோன்றி மறைந்துவிடும். எக்காலத்துக்குமான, எல்லா மக்களுக்குமான வாக்கியங்களை உருவாக்குவது எளிதல்ல. சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவர்கள் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே காலத்தில் நிற்கின்றன. அரசியல் கூட்ட மேடையாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி, பட்டிமன்றம் என்று எதுவாக இருந்தாலும், எல்லா மேடைகளிலும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியங்களை உருவாக்குவதும், அப்படி உருவாக்கப்பட்ட வாக்கியங்கள் காலம் கடந்து நிற்பதும் எளிய காரியமல்ல. மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். எப்படி?

18ஆம் நூற்றாண்டிலிருந்தே ‘திராவிடம்’ என்ற சொல், அரசியல் களத்தில் அதிகமாகப் புழக்கத்திலிருக்கிறது. ‘திராவிட மரபு’ குறித்து, ‘திராவிட மொழி குடும்பம்’ குறித்து பல நூற்றாண்டுகளாகப் பேச்சு இருந்துவருகிறது. ‘திராவிடம்’, திராவிட இனத்தவரின் தனித்தன்மை குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். மொழியியல் வல்லுநர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். தற்காலத்தில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார். திராவிடம், திராவிடர் என்ற சொல் யாரைப் பற்றிப் பேசுகிறது. எந்த அடையாளத்தை முன்னிறுத்துகிறது. ‘திராவிட மாடல்’ என்ற புதிய சொல்லாட்சியை உருவாகியிருக்கிறார். ‘திராவிடம்’ என்பது என்ன என்பதைப் பற்றியும், அது பேசுகிற அரசியல் பண்பாட்டைப் பற்றியும் மு.க.ஸ்டாலின் புதிதாக உருவாக்கிய, பேசிய, எழுதிய வாக்கியங்களை உருவாக்கி இருக்கிறார். உலகிலேயே மிகவும் கடினமானது காலத்தால் அழியாத சொற்களை உருவாக்குவது.

 ‘உயர்ந்தவர் தாழ்ந்தவர்’ என பிரிப்பதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

“ ‘திராவிடம்’ என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக வழங்கப்பட்டு வந்திருந்தாலும், இன்று ‘திராவிடம்’ என்றால் அது ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது.”

“ ‘திராவிட மாடல்’ என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும். எதையும் சிதைக்காது, சீர் செய்யும். யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும்.”

“இரத்த பேதம் கூடாது, பால் பேதம் கூடாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை.”

“திராவிட இயக்கத்தில் அடிப்படைக் கொள்கை என்பது சாதி ஒழிப்பும் பெண்ணுரிமையும்தான்.”

உலகில் தோன்றிய மொழிகளில் தமிழும் ஒன்று. மூத்தமொழிகள் என்று சொல்லப்படுவதில் இன்று பல மொழிகள் புழக்கத்தில் இல்லை. ஆனால், தமிழ்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் பேசும் மொழியாகவும், இலக்கிய, இலக்கண, செம்மொழியாகவும் இருப்பது தமிழ். எத்தனையோ படையெடுப்புகள், அரசு நிர்வாக மாற்றம், மொழி திணிப்பு, மொழி அழிப்பு, மொழி ஆதிக்கம் என்பதோடு அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் என்று கொடுத்தும்கூட தமிழ் மொழி இன்றும் உயிரோடு இருக்கிறது. உலகில் எந்த நாட்டினரைவிடவும், தமிழர்கள் கூடுதலான மொழிப்பற்றுக் கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று. நீதிக் கட்சியும் திராவிட இயக்கமும் தி.மு.க.வும் மொழியை முதன்மைப்படுத்தி அரசியலைக் கட்டமைத்தவர்கள். அண்ணாவும் கலைஞரும் தமிழை முதன்மையான பண்பட்டுக் கருவியாக மாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்கள் மரபில் வந்த மு.க.ஸ்டாலின் மொழி குறித்து என்ன பேசினார், எழுதினார்?

    “தமிழால் நாம் இனைந்தால் நம்மை

    மதத்தால், சாதியால் பிரிக்க முடியாது.”

 “தமிழ் வாழ்க என்று சொல்வதால் நாம் மற்ற மொழிக்காரர்களுக்கு எதிரிகள் அல்ல. தமிழன் என்று சொல்வதால் மற்ற தேசிய இனத்தவர்களுக்கு நாம் எதிரிகள் அல்ல.”

“எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நமது தாய் மண்ணை மறந்துவிடாதீர்கள் என்பதே தமிழர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.”

“எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேர்களை விட்டுவிடுவதில்லை. என்பதைப் போல தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடாதீர்கள்.” 

இந்தியாவில் இருக்கிற கட்சிகளில் முதன்மையான கட்சி தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்தும் வலிமையோடு இருக்கிற கட்சியின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிற தான் எப்படிப்பட்டவன், எந்தக் கொள்கையால் வளர்க்கப்பட்டவன், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கட்சியை வழிநடத்துகிறேன், ஆட்சியை எந்த லட்சிய நோக்கத்தின் அடிப்படையில் நடத்துகிறேன் என்பதை மிகவும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் ‘சில சொற்களில்’ சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன சில வார்த்தைகளே அவர் யார் என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதைக் காலம் நிரூபிக்கும்.

“கழகம்தான் என் களம். திராவிடம்தான் என் உயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மையே எனது அன்றாடப் பணி. சிறு வயதிலிருந்தே நான் என்னை இப்படித்தான் வடிவமைத்துக்கொண்டேன்.”

“சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் அண்ணா, இயக்கத்தை வழிநடத்துவதில் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் இவர்கள்தான் என்னை செத்துக்கிய சிற்பிகள்.”

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளவர்கள் கடவுள்கள் அல்ல, மனிதர்கள். தமிழ்நாடு வளர வேண்டும். உயர வேண்டும் என்ற லட்சியத்திற்காகப் போராடியவர்கள். சமூக மேம்பாட்டிற்காக யார் போராடினார்களோ, ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை மறுஉருவாக்கம் யார் செய்தார்களோ, அவர்கள்தான் தன்னை உருவாக்கிய, செதுக்கிய சிற்பிகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, வெற்று அறிவிப்பல்ல. சாதாரணமாக மு.க.ஸ்டாலின் அதிகமாகப் பேசுபவர் அல்ல. அதிகமாகச் சிந்திப்பவர். குறைவாகப் பேசுபவர்தான், பேச்சைவிட மௌனத்தை விரும்புகிறவர் அவர். பேச வேண்டிய நேரத்தில் பேசுகிறார். அவர் ஒரு வார்த்தை பேசினால் அது இந்தியாவையே அதிர வைப்பதாக இருக்கும். ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று அவர் சொன்ன வார்த்தை ஹைகூ கவிதை மாதிரி இருந்தாலும் அச்சொல் இந்தியாவையே அதிரவைத்தது. காலத்தால் அழியாத சொற்களாக நிலைபெற்றுவிட்டது. “தமிழ்நாடு போராடும், தமிழ் வெல்லும்” என்பது இன்று தமிழ்ச் சமூகத்தில் பெரிய முழக்கமாக, வரலாற்று முழக்கமாக மாறிவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் அரசியல் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தை வழிநடத்துபவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்குத் தனது லட்சியமாக இருப்பது என்ன என்பதைப் பற்றி மு.க.ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்?

“இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கொள்கை. இலக்கு.”

“என்னுடைய இலக்கு, திராவிட மாடல் என்று பெயர்.”

“தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் வைக்க கோரிக்கை மனு இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும். அதுதான் லட்சியம்.”

“ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக, தொழில் வளர்ச்சியாக மட்டுமே இருக்கக் கூடாது, சமுதாய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.”

“தமிழ்நாட்டு அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும் என்பதே எனது ஆட்சியின் முழுமுதல் இலக்கு.”

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தமிழ்நாட்டை எந்தப் பாதையில் வழிநடத்த விரும்புகிறேன். வழிநடத்துகிறேன் என்பதை வெளிப்படுத்தியிருப்பதை அவருடைய வார்த்தைகளே வெளிப்படுத்திவிட்டது. அதோடு, 

“இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி. சாமானியர்களின் ஆட்சி” 

என்றும் சொல்லியிருக்கிறார். ஒரு ஆட்சி என்பது எளிய மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். அதுதான் நல்லாட்சிக்கான இலக்கணம்.

“மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக, மக்கள் கனவு காணும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழகம் அரசு செயல்படும்” 

என்ற பிரகடனத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார், இது வெறும் அறிவிப்பல்ல, வெற்று பேச்சல்ல, முதல்வரின் லட்சியம், கனவு. செயல் திட்டம்.

உலகில் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். பண்டைய காலத்திலேயே தமிழர்கள் மொழி அறிவைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் கல்வி அறிவைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அரிய இலக்கிய படைப்புகள் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கல்வியைப் பெறுவதில் தமிழ்ச் சமூகம் முன்னோடியாக இருக்கிறது. மதம், கடவுள், நம்பிக்கை – மனுஸ்மிருதி போன்ற கற்பிதங்களால் கல்வி பலருக்கும் மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால், நீதிக்கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்று ஆட்சிக்கு வந்ததோ அதிலிருந்து முதன்மையான நோக்கமாக இருப்பது கல்வி மறுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை வழங்குவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார். கல்வியைப் பற்றி கூறும்போதெல்லாம், ‘அறிவாயுதம் ஏந்துக’ என்றுதான் சொல்லிவருகிறார்.

“கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும், கல்வி மட்டும்தான் நமக்கு மதிப்பைத் தேடித் தரும். கல்வியால் பெறக்கூடிய பெருமை மட்டும்தான். எதனாலும் அழிக்க முடியாது.”

“மனிதர்களை மதிவாளர்களாக்குவதும் மாமேதைகளாக்குவதும் மனிதர்களாக்குவதும் கல்விதான்.”

நான் எழுத்தாளனில்லை, கவிஞனில்லை என்று பல இடங்களில் பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். ஆனாலும், அவர் கல்வி, அரசு, பொருளாதாரம், சமூகம், மொழி, கொள்கைப் பற்றி பேசியிருப்பதும், எழுதியிருப்பதும், அவர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பது தெரிகிறது. இருநூறு பக்கங்களில் எழுதுவதை விடவும் இரண்டு வரிகளில் எழுதுவதுதான் சவாலானது. அந்தச் சவாலில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

“அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது, மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது. பால்பேதம் பார்க்காது.”

இந்த வாக்கியங்கள் மு.க.ஸ்டால்னுடைய உலகளாவிய பார்வையைக் காட்டுகிறது. சாதி, மதம், இனம், நாடு என்று மக்களிடையே பல வேற்றுமைகளும் வெறுப்புணர்வுகளும் மேலோங்கியிருக்கிறது. அவை தேவையற்றவை. ‘மனிதர்களாக இருப்போம். மனித மாண்பைக் காப்போம்’ என்பதுதான் மு.க.ஸ்டாலினுடைய வேண்டுதலாக இருக்கிறது. சகமனிதர்களிடம் அன்பாக இருப்பதில் என்ன பிரச்சினை, உண்மையான அன்பு எல்லா வேறுபாடுகளுக்கும் பிரிவினைகளுக்கும் இடமளிக்காது.

 “மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்துவாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள்மீது இரக்கம் காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக் குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல்.”

இது வேதம் சொன்னதல்ல. யோகிகள், முனிவர்கள், தத்துவவாதிகள், சமய போதகர்கள் சொன்னதல்ல. மு.க.ஸ்டாலின் சொன்னது. ஜென் தத்துவம்போல இருக்கிறது. புத்தர் சொன்னதுபோல் இருக்கிறது. மனிதர்கள் மீதான அன்பு யாருக்கு இருக்கிறதோ, எல்லையில்லா கருணை யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம்தான் இது போன்ற சொற்களைப் பெற முடியும். ஒரு சாமியார் சொன்னார், ஒரு கடவுள் சொன்னார் என்று சொன்னால், அதிலும் வெளிநாட்டினர் என்றால், அந்த வார்த்தைகளின் மீது சமூகத்திற்கு ஒரு மதிப்பு வருகிறது. அதையே ஒரு அரசியல்வாதி சொன்னால் ஏற்க மறுக்கிறது. ஒரு அரசியல்வாதியாக நின்று இந்த வார்த்தைகளை ஸ்டாலின் எழுதவில்லை. ஒரு மனிதனாக, சமூகத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக சொன்ன வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்றும் சாகாது. “போலியான பெருமைகளால் யாரும் வளர முடியாது” என்று அவர் சொன்னது இந்த இடத்தில் நினைவூட்டுவது முக்கியம். வாழ்க்கை அனுபவம்தான். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சமூகத்திற்காகப் பேசவைக்கிறது. சகமனிதனின் மீது, சமூகத்தின் மீது பற்று இல்லாதவர்களால் சமூகம் எப்போதும் நினைவுக் கொள்ளும், கொண்டாடும் வார்த்தையை உருவாக்கிவிட முடியாது. 

“மக்களுக்காக இருப்பவர்கள் நாங்கள். மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். மக்களுக்காகவே வாழ்பவர்கள் நாங்கள்.”

மொழிப் பற்றி, கல்வி, அரசு நிர்வாகம், சமூகம், கட்சி, கொள்கை, விவசாயம், பொருளாதாரம், தொல்லியல், ஜனநாயகம், நாடு, மக்கள், மாணவர்களின் முன்னேற்றம் என்று பல துறைகள் பற்றி பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். அது கொள்கை பிரகடனமல்ல. அரசியல் கோஷமல்ல. எதிரிகளுக்கு விடுக்கப்பட்ட சவால்கள் அல்ல. அன்றாட அறிவிப்புகளுக்காக, அறிக்கைகளுக்கு மு.க.ஸ்டாலின் பேசியவை அல்ல. எழுதியவை அல்ல. ஒவ்வொரு துறை சார்ந்தும் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் அந்தந்தத் துறைகளின் முக்கியத்துவம் அறிந்து பேசப்பட்டவை. எழுதப்பட்டவை. காலத்தில் கரைந்துபோகாத சொற்கள்.

 “எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைவதற்கு உழைப்புதான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்றுசேர்ந்தால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது” என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். இந்த வாக்கியம் எக்காலத்திற்கும் பொருந்தும். எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதனும் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது. இலக்கு, உழைப்பு இரண்டும் இல்லாதவர்களால் வாழ்க்கையில் எந்த இலக்கையும் அடைய முடியாது. இந்தச் சொற்கள் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையிலிருந்து அவருடைய உழைப்பிலிருந்து உருவாகிவந்த சொற்கள். கால்த்தில் நிற்கும் சொற்கள்.

பொதுவாக அரசியல்வாதிகள் மாற்றிமாற்றிப் பேசுவார்கள் என்றும் சந்தர்ப்பத்திற்கேற்ப பேசுவார்கள்,சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள் என்றும் சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது பொய்யென்று சொல்ல முடியாது. பொது சமூகத்தின் நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்குப் பொருந்தும். நீதி கட்சியின் கொள்கை என்னவோ, தி.மு.க.வின் கொள்கை என்னவோ, அதுதான் மு.க.ஸ்டாலினின் கொள்கை. கட்சியின் அடிப்படை கொள்கைகளிலிருந்து அவர் ஒரு நூல் அளவுகூட மாறவில்லை. அதுதான் அவருடைய பலம். தி.மு.க.வின் பலம். மு.க.ஸ்டாலின் பேசிய வாக்கியங்களும், எழுதிய பல வாக்கியங்களும் ஏன் இன்று திரும்பத்திரும்ப நினைவுகூரப்படுகின்றது. மேற்கோள் காட்டப்படுகின்றது என்றால், கொள்கை வழி வந்த பேச்சு, கொள்கை வழி எழுத்து என்பதால்தான்.

“நான் என் பலத்தை நம்பியே அரசியல் செய்ய நினைக்கிறேன். எனது பலம் எனது இலக்கில் இருக்கிறது.” 

மு.க.ஸ்டாலினின் இந்த வாக்கியம் அவர் யார் என்பதைக் காட்டுகிறது. அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதையும் காட்டுகிறது. ஒவ்வொரு அரசியல்வாதியும் பின்பற்ற வேண்டிய அரசியல் நெறி. பிறருடைய பலவீனத்தை நம்பி அரசியல் செய்கிறவர், நிஜமான அரசியல்வாதி அல்ல.


07.12.2025 முரசொலி

08.12.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக