வெள்ளி, 26 டிசம்பர், 2025

எளியவர்களுடைய குரலைக் கேட்கும் முதலமைச்சர்

 எளியவர்களுடைய குரலைக் கேட்கும் முதலமைச்சர்

இமையம்

தமிழ்நாட்டில் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் வழங்கப்படும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, தெலுங்கானாவிலும் பஞ்சாப்பிலும் டெல்லியிலும் பின்பற்றப்படும் என்று அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்திருக்கிறார்கள். கனடா நாட்டுப் பிரதமரும், இங்கிலாந்து நாட்டுப் பிரதமரும் ‘காலை உணவுத் திட்ட’த்தை வரவேற்றதோடு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதே போன்று, ‘விடியல் பயணத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’ போன்றவை இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய திட்டங்களாக இருக்கின்றன. இத்திட்டங்கள், மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டுவரப்பட்டவை அல்ல. மு.க.ஸ்டாலினின் சிந்தனையில், சமூக அக்கறையில் உருவான திட்டங்கள். அதே மாதிரி எளியவர்களின் குரலைக் கேட்டு, கோரிக்கைகளை ஏற்று புதிய திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றிவருகிறார்.

என்னுடைய கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பல அரசாணைகளை வெளியிட்டுள்ளார். நம்ப முடிகிறதா? என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’ நாவலைக் கடலூர் மத்தியச் சிறையில் படித்ததாகவும், பரோலில் வரும்போது தங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். பிறகு ஒருநாள் அந்தக் கைதி என்னைப் பார்க்கவந்தார். சிறைச்சாலையிலுள்ள பல கைதிகளுக்கு மூச்சுக்காற்றாகவும், சூரிய வெளிச்சமாகவும் இருப்பது நூலகம்தான். ஆனால், சிறைச்சாலையில் உள்ள நூலகங்களில் போதிய நூல்கள் இல்லை. காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கை வசதியும் இல்லை என்று சொன்னார். அதோடு, “நம்முடைய முதலமைச்சரின் கவனத்திற்குப் போனால் செய்து தந்துவிடுவார்” என்றும் சொன்னார். “எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். “நடப்பது தி.மு.க. ஆட்சி. முதலமைச்சர், கலைஞரின் மகன். புத்தகங்களின் அருமை எப்படித் தெரியாமல் இருக்கும்?” என்று கேட்டார். ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் ஒரு கைதியின் கோரிக்கையையும் நம்பிக்கையையும் எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை. முதலமைச்சரின் கவனத்திற்கு எப்படிக் கொண்டுசெல்வது என்பதும் எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’ நாவலைப் படித்துவிட்டு, ‘புதிரை நலவண்ணார் வாரியம்’ அமைத்தார் கலைஞர். நான் கோரிக்கை வைக்கவில்லை, திரு. ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசினார். அதை வைத்து கலைஞர் நாவலைப் படித்தார், வாரியம் அமைத்தார் என்பது என் நினைவுக்கு வந்தது. GOMS No: 114. AD & TW6 Department நாள்: 15.10.2005இன் படி தமிழ்நாட்டிலுள்ள புதிரை நல வண்ணார் வாரியத்தின், உறுப்பினர்களுக்காக ஆண்டுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 24,588 உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அட்டவணைப் பிரிவுகளில் 60ஆவது இடத்தில் உள்ளது புதிரை வண்ணார் சமூகம். தலைவர் கலைஞர் செய்யும்போது என் அண்ணன் தளபதி செய்ய மாட்டாரா என்ற எண்ணத்தில் மார்ச் 25, 2022 அன்று ‘தி தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சிறைச்சாலை நூலகங்கள் மேம்படுத்தப்படுமா?’ என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினேன். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்காக அன்று துபாயில் இருந்தார். எப்படித்தான் கட்டுரையைப் படித்தாரோ தெரியவில்லை. அவருடைய தனிச் செயலாளராக இருந்த திரு. உதயச்சந்திரன் இ.ஆ.ப.விடம், “ஊருக்கு வந்ததும் அரசாணை வெளியிடப்பட்டு உடனடியாகச் சிறைச்சாலை நூலகங்கள் மேம்படுத்தப்படும், சொல்லிவிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அந்தத் தகவலை துபாயிலிருந்த திரு. உதயச்சந்திரன் அவர்கள் என்னிடம் தொலைபேசி வாயிலாகச் சொன்னார். நான் வியந்துபோனேன்.

முதலமைச்சர் நாடு திரும்பிய மறுநாளே 9 மத்தியச் சிறைகளுக்குத் தலா 2000 நூல்களும், 5 பெண்கள் சிறப்பு சிறைகளுக்குத் தலா 500 நூல்களும் 14 மாவட்டச் சிறைகளுக்குத் தலா 500 நூல்களும், 113 கிளைச் சிறைகளுக்குத் தலா 500 நூல்களும் நூலகத் துறையின் வழியாக அனுப்பிவைத்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கினார். பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக சிறைச்சாலை நூலகங்களை மேம்படுத்தியவர் என்றால் அது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாகத்தான் இருக்க முடியும். இது ஒரு உலக அதிசயம்.

சிறைச்சாலை நூலகங்களுக்குப் புத்தகத் தானம் தருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு தனிநபர் தன்னுடைய புத்தகச் சேகரிப்பைத் தானமாகச் சிறைச்சாலைகளுக்கு அனுப்ப இயலாத நிலை இருக்கிறது. பல அடுக்கு தணிக்கை இருக்கிறது. அதனால் எளிதில் ஒருவர் சிறைச்சாலைக்குப் புத்தகம் அனுப்ப முடியாது. பழைய நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என்று திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. மூலமாக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். மறுநாளே தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளிலும், சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியிலும், ஐம்பெரும் இலக்கிய விழாக்களிலும் தனி அரங்கு ஏற்படுத்தப்படும், அந்த அரங்கில் புத்தகத் தானம் செய்ய விரும்புகிறவர்கள் புத்தகங்களைத் தரலாம். அந்த அரங்கில் சிறைத் துறையைச் சார்ந்த பணியாளர் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வார். தானமாகப் பெறப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறை நூலகங்களுக்கும் நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவித்தார்கள். முதலமைச்சர் அறிவித்ததுபோல, சென்னை புத்தகக் காட்சியிலும் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளிலும் தனி அரங்கு அமைக்கப்பட்டு, புத்தகங்கள் பெறப்பட்டுவருகின்றன. இப்போது சிறைச்சாலை நூலகங்கள் புத்தகங்களால் நிரம்பியிருக்கின்றன. தனக்கு அன்பளிப்பாக வரக்கூடிய புத்தகங்கள் அனைத்தையும் நூலகங்களுக்கு அளித்துவருகிறார். இச்செயல் இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத அரிய செயல்.

“என்னைச் சந்திக்க வருகிறவர்கள், புத்தகங்களுடன் வர வேண்டும். சால்வை, துண்டு, வேட்டி கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும். புத்தகங்கள் மூலமாகத்தான் சமூகத்தில் அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும்” என்று அறிவித்தார்கள். அதோடு, “அறிவுதான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும். அறிவியல் பாதைக்கு அழைத்துச் செல்லும். சமூகம் அறிவியல் பாதையில்தான் செல்ல வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்தார்.

மூன்றாவதாக நான் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கை, “சென்னை பாரிமுனையிலிருந்து, தாம்பரம்வரை பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்பது. முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. அவர்களிடமும் கடிதம் வழங்கினேன். மிக முக்கியமான கோரிக்கை என்று முதலமைச்சர் பாரிமுனைமுதல் தாம்பரம்வரை பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டார். தேவையான நிதியையும் ஒதுக்கித் தந்தார். பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதில் திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. முனைப்புடன் செயல்பட்டார்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள், மாற்றுச் சீறுநீரக அறுவைச் சிகிச்சையைத் தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்ள அரசு உதவி பெற வேண்டுமானால் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.75,000 என்றிருந்தது. கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான குடும்ப ஆண்டு வருமானத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பல முறை கோரிக்கை வைத்தேன். காது கொடுத்துக்கூடக் கேட்கவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் மனுவாக அளித்தேன். மறுவாரமே குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 75,000 என்பதை மாற்றி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையால் தமிழ்நாட்டில் பல ஆயிரக் கணக்கான நோயாளிகள் பலன் பெற்றுவருகின்றனர். அதே மாதிரி டயாலிஸிஸுக்குச் செல்லும் நோயாளிக்கு மட்டுமல்ல, அவருடன் செல்லும் உதவியாளருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிறைவேற்றி தந்தார்கள்.

தொழில் முதலீடு ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் 27.08.2025 அன்று அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இரவு ஒன்பது மணிக்கு Dr. அருள் செலஸ்டீன் பிரேமா என்பவர் திருநெல்வேலியிலிருந்து எனக்கு போன் செய்து ஒரு தகவலைச் சொன்னார். அவர் பணிபுரியும் கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராக மணிமேகலை என்பவர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் அதே கல்லூரியில் படித்தவர். யார் யாரெல்லாம் அவருக்குப் பாடம் நடத்தினார்களோ அவர்களோடு சரிசமமாக உட்கார வேண்டிய சூழல். அதனால் மணிமேகலைக்கும் பிற உதவி மற்றும் பேராசிரியர்களுக்கிடையே மனக்கசப்பு, வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குச் சாதியும் ஒரு காரணம். இதனால் மணிமேகலையின் மீது புகார் கொடுக்க, விஷயம் துணை வேந்தர் வரை சென்றது. ஈகோ பிரச்சினை. விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையின்போது விசாரணைக்குழுவினர் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் உடனடியாக, தயங்காமல் பதில் சொன்ன மணிமேகலை தன்னுடைய ஊரின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார். மூன்று, நான்கு மணிநேரம் வற்புறுத்திக் கேட்டும் ஊரின் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார். அதனால் அந்தப் பெண்ணை பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்பதை Dr. அருள் செலஸ்டீன் பிரேமா சொன்னார். மணிமேகலையின் ஊரின் பெயர் ‘பறையன்குளம்’. அதைத்தான் அவர் சொல்ல மறுத்துவிட்டார் என்பதையும் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். அப்போதே அமெரிக்காவிலிருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரின் தனிச் செயலாளர் மருத்துவர் உமாநாத், இ.ஆ.ப.விடம் ‘பறையன்குளம்’ என்ற பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். “ஊருக்கு வந்ததும் செய்துவிடலாம்” என்று சொன்னார். முதலமைச்சரின் சிறப்பு தனிச் செயலர் அண்ணன் தினேஷ் அவர்களிடமும் அன்றிரவே பேசினேன். “தலைவரிடம் சொல்கிறேன், ஊருக்கு வந்ததும் மாற்றிவிடலாம்” என்று சொன்னார்.

நான் தமிழ்நாட்டில் சாதிப் பெயர்கள் உள்ள பட்டியலைத் தயாரித்தேன். அதோடு ஆதார், பேன் கார்டு, குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் காலனி, ஹரிஜன காலனி, புதுக்காலனி, மேட்டுக் காலனி, பழையக் காலனி, அருந்ததியர் காலனி, அம்பேத்கார் காலனி, அருந்ததியர் தெரு என்று பதிவாகி இருப்பது குறித்து ஆராயவும் சிந்திக்கவும் தொடங்கினேன். ஆவணங்களைச் சேகரித்தேன். தமிழ்நாட்டில் பறையன்குளம், பள்ளப்பட்டி, நாவிதன்பட்டி, சக்கிலிபட்டி என்று பல ஊர்ப்பெயர்கள் இருப்பதையும் அறிந்துகொண்டேன். இதற்கிடையில் நான் மணிமேகலையை மனதில் கொண்டு ஆனந்த விகடனில் (19.12.2024) ‘அடங்காத அழுகை’ என்ற சிறுகதையை எழுதினேன். அக்கதை பரவலான கவனத்தை ஈர்த்தது. பேசுபொருளானது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்தார். 28.2.2025 அன்று நான் பொறுப்பேற்றுகொண்டேன். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் விஜிலென்ஸ் கமிட்டி மாநிலக் கூட்டம் நடைபெற ஆரம்பித்தது. 2025இல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்னைப் பேச அனுமதித்தார். முதலமைச்சர் வழங்கிய அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, “தமிழ்நாட்டில் காலனி என்ற சொல் இழிவுபடுத்தும் சொல்லாக இருக்கிறது. அச்சொல்லை அரசு ஆவணங்களிலிருந்து நீக்க வேண்டும். பறையன் குளம், பள்ளப்பட்டி, நாதவிதன்பட்டி, சக்கிலிப்பட்டி என்று சாதிப்பெயர்களைக் கொண்ட கிராமங்களின் பெயர்களை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். நான் சொன்னபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டார். எதுவும் செய்ய மாட்டாரோ என்று நான் சந்தேகப்பட்டேன். ஆனால், நான் மட்டுமல்ல, தமிழ்நாடே எதிர்பார்க்காத, ஒரு கோடி மக்களுக்கும் மேலாக வாழக்கூடிய ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் காலம்காலமாக ஒரு சொல்லின் வழியாக சுமந்துவந்த இழிவை, அவமானத்தை, சங்கடத்தைப் போக்கும் விதமாக 29.4.25 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்ததோடு நிற்காமல் 6.10.25 அன்று அரசாணையும் வெளியிட்டார். ‘அரசாணை (நிலை) எண் 313’ஐ வெளியிட்டதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் 14.10.25க்குள் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொது சொத்துகள், பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பெயர் மாற்றம் தொடர்பாக 24.10.2025க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும். 19.11.2025க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். “இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுப்படுத்தும் அடையாளமாக ‘காலனி’என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால், இனி இந்தச் சொல்லை அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சாதி சார்ந்த தொனியோ, அடையாளமோ குறிக்காத வகையில் மாற்றுப் பெயர்களை வைக்க வேண்டும். இப்பணி 19.11.2025 தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று உத்தரவிட்டார். ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த போர்டுகளில் எழுதப்பட்டிருந்த ‘காலனி’ என்ற சொல் அழிக்கப்பட்டு புதிய பெயர்கள் எழுதப்பட்டுவருகின்றன. பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு, பெயர்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அரசு ஆவணங்களிலும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் குறித்த பணி துரிதகதியில் நீக்கப்பட்டுவருகின்றன.

நான் தி இந்து நாளேட்டில் ‘Signing off an entrenched symbol of stigma (on 11.08.2025)’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். Front Line (28.05.2025) பத்திரிகையிலும் The New Indian Express (01.06.2025) நாளேட்டிலும் விரிவான பேட்டி அளித்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தேன். சன் தொலைக்காட்சியில் 20 நிமிடப் பேட்டி அளித்தேன். ‘காலனி’ என்ற சொல்நீக்கத்தின் மூலம் ‘வரலாற்று நாயகனான முதலமைச்சர்’ என்ற கட்டுரையை முரசொலியில் 12.6.25 அன்று எழுதினேன். அதோடு ‘ஆனந்த விகடன்’ மற்றும் பல யூடியூப் சேனல்களுக்கு ‘காலனி’ சொல் நீக்கத்தின் அவசியம் குறித்துப் பேசினேன். நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் திரு. கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்களையும்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்களையும் சந்தித்து காலனி சொல் நீக்கத்தின் அவசியம் குறித்து விரிவாகப் பேசினேன். தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் இ.ஆ.ப. அவர்களிடமும் முதலமைச்சரின் தனிச் செயலர் திரு. சண்முகம் இ.ஆ.ப. அவர்களிடமும் தொடர்ந்து பேசினேன். பெரும் போராட்டம். ஒற்றை ஆளாகப் போராடிக்கொண்டிருந்தேன்.

நான் சாதாரணமான ஆள். சமூகத்தின் விளிம்புநிலையில் வாழக்கூடியவன். என்னுடைய கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் அறிவித்து, அரசாணை வெளியிட்டு காலம்காலமாக இழிவின் அடையாளமாக அவமானத்தில் அடையாளமாக வாழ்விடத்தின் அடையாளமாக இருந்த ‘காலனி’ என்ற சொல்லை நீக்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரலாற்றில் நீடித்த, நிலைத்த, என்றும் அழியா புகழைப் பெற்றுள்ளார். சாதிய வன்மம் நிறைந்த நம் சமூகத்தில் இப்படியொரு அரசாணையை வெளியிட்டு அதைச் செயல்படுத்துவது என்பது மு.க.ஸ்டாலின் என்ற கொள்கைவாதியால், லட்சியவாதியால் மட்டுமே செய்ய முடியும்.

முதலமைச்சர் செய்த வரலாற்றுச் சாதனையை, காலகாலத்துக்குமான பெருமையைப் பற்றி தமிழ் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், இந்திய அளவிலான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், யூடிபர்கள் வாயைத் திறக்கவில்லை. மௌனம் காத்தார்கள். எல்லாருமே சாதியவாதிகள் என்பதை நிரூபித்தார்கள். ஆனால், முதலமைச்சர் துணிச்சலாக முடிவெடுத்தார். இப்படியொரு முடிவை இந்திய அளவில் எடுத்த முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் மட்டும்தான். தன் முடிவில் வெற்றியும் கண்டார்கள். ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, “நான் ஆட்சிக்கு வந்ததும், அந்த அரசாணையை ரத்து செய்வேன்” என்று பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். சாதியைக் காக்க விரும்புகிறவர்கள் யார்? சாதிச் சார்ந்த இழிவைப் போக்க விரும்புகிறவர்கள் யார் என்பதைக் காலம் சொல்லும். வரலாறு சொல்லும். காலத்தின் நாயகன் மு.க.ஸ்டாலின்.

‘காலனி’ என்ற சொல்லை, பொதுப் புழக்கத்திலிருந்தும், அரசு ஆவணங்களிலிருந்தும் நீக்கிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள், இந்த பூமி உள்ளவரை, காலம் உள்ளவரை, வரலாறு உள்ளவரை, நன்றிக் கடன் பட்டவர்கள். 

ஒரு எழுத்தாளனாக நான் இதுவரை ஒன்பது நாவல்கள் ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், பல கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அதனால் எனக்குக் கிடைத்த பெயர் புகழைவிட சந்தோஷத்தைவிட, பெருமையைவிட எனக்குக் கிடைத்த கௌரவமாக, மரியாதையாக நான் கருதுவது ஒரு எழுத்தாளனின் கோரிக்கைகளை ஏற்று அரசாணையை வெளியிட்டதோடு, ‘காலனி’ என்ற சொல்லையும் பறையன் குளம், பள்ளப்பட்டி, நாவிதன்பட்டி, சக்கிலிபட்டி என்றிருந்த பல ஊர்களின் பெயர்களையும் மாற்றி, நதிகள், மலர்கள், மற்றும் அறிவியல் அறிஞர்களின் பெயர்களாக மாற்ற அரசாணை வெளியிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதுதான் என்னுடைய வாழ்நாள் சாதனையாக, பெருமையாகக் கருதுகிறேன். எனக்கு அந்தப் பெருமையை தேடித்தந்தவர் என்னுடைய அண்ணனும், என்னுடைய தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்தான்.

வாழ்க எம்மான் மு.க. ஸ்டாலின்

முரசொலி 17.12.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக