என்னுடைய எட்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘திருநீறு சாமி’யை FeTNA விழாவில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார். முதல் பிரதியை மருத்துவர் சோம இளங்கோவன் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை புகழ்காந்தி பெற்றுக்கொண்டார். முதல் முறையாக என்னுடைய நூல் ஒன்று வெளிநாட்டில் வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வில் நியூ ஜெர்ஸி பாலா, டெக்ஸாஸ் பாண்டி, வாஷிங்டன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
.
பதினைந்து நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்குப் போகிறோம் என்பது மனதிற்கு உற்சாகமளித்த விஷயம். அந்த உற்சாகம் விமானப் பயணத்திலேயே வடிய ஆரம்பித்துவிட்டது. விடியற்காலை நான்கு மணிக்கு விமானப் பயணம். துபாய்க்கு மூன்றரை மணிநேரப் பயணம். அடுத்து மூன்று மணிநேரக் காத்திருப்பு. பிறகு துபாயிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்குப் பதினெட்டு மணிநேரப் பயணம். உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். தூக்கமின்மை, உடம்பு வலி எல்லாம் சேர்ந்து, ஏன்தான் அமெரிக்காவுக்குச் செல்ல சம்மதித்தோம் என்றாகிவிட்டது. அமெரிக்காவை விலைக்கா வாங்கப்போகிறோம், வேடிக்கைப் பார்க்கப்போவதற்காகவா இவ்வளவு சிரமம்? எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப் போதிய அளவுக்கு ஆங்கிலமும் தெரியாது. நான் பேசுகிற ஆங்கிலம் எனக்கு மட்டுமே புரிந்தது. மற்றவர்கள் பேசுகிற ஆங்கிலமும் உச்சரிப்பும் எனக்குச் சுத்தமாக விளங்கவில்லை. ஆங்கிலம் தெரியாமல் ஒருவன் அமெரிக்காவுக்குப் பதினைந்து நாட்கள் பயணமாகப் போவது ஒரு விதத்தில் சாகசப் பயணம்தான். நெருப்பு வளையத்திற்குள் நுழைந்து வருவதைப் போன்றதுதான். அமெரிக்காவில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று யாருமில்லை. தெரிந்த ஒன்றிரண்டு நண்பர்களும்—நான் செல்கிற நிகழ்ச்சிக்கு வர முடியாத சூழல் என்று கூறிவிட்டார்கள். எந்தத் துணிச்சலில் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினேன்? தெரியவில்லை.
சான்பிரான்சிஸ்கோவில் யார் வந்து FeTNA நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். எதுவும் தெரியாது. மனக்குழப்பம், ஒருவிதமான கவலையுடன்
சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இறங்கினேன்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தன்னார்வலர் என்று பல பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பிறகு, பேசிய பிறகு, காரில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் மனம் சமநிலை அடைந்தது. தனி காரில் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கலிஃபோர்னியா மாகாண தலைநகரான சாக்ரமண்டோவுக்கு மூன்று மணிநேரப் பயணம். கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணிநேரத்திற்கு மேல் நான் சிகரெட் குடிக்காமல் இருந்தேன். அதுவே என் மனதையும், உடலையும் போதிய அளவுக்குத் தளர்வடைய செய்திருந்தது. காரை நிறுத்தச் சொல்லி ஒன்றுக்கு இரண்டு சிகரெட்டாகக் குடித்தேன். நான் சிகரெட் குடித்த இடம் Bay area ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு அந்தக் குளிர் புதியது. என்னை அழைத்துச் சென்ற நண்பர் பிரதீப் – கோவில்பட்டிக்காரர். சாக்ரமண்டோ நகரில் Hyatt Regency ஹோட்டலில் நுழைந்த பிறகுதான் என் மனம் அமைதியானது. “நீங்கள்தான் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதிய இமையமா?” என்று ஒருவர் கேட்டார். அவர் பெயர் ஹரி. அவர்தான் அன்றிரவுக்கான உணவை வாங்கித் தந்தார். பிறகு நண்பராகிவிட்டார். அவருக்கு நான் கொடுத்தது ‘பெத்தவன்’ – நெடுங்கதையும், ‘செல்லாத பணம்’ நாவலும்தான்.
மறுநாள் காலையில் Hyatt Regency முழுவதும் தமிழ் முகங்கள்தான். எனக்குப் பயம் தெளிந்துவிட்டது. நியூஜெர்ஸி பாலா, டெக்சாஸ் பாண்டி என்று இரண்டு பேர் என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களோடு பேசி, பழகிய பிறகு, அவர்கள் இருவரும் எனக்குத் தம்பிகளாகிவிட்டார்கள். FeTNA மூன்று நாள் விழாவில் என்னுடன் இருந்தார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள்.
FeTNA விழா முடிந்த மறுநாள், FeTNA அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நூவாடா மாகாணத்திலுள்ள லேக் தஹோவுக்குப் பேருந்தில் மூன்று மணிநேரப் பயணம். பயணத்தில் என்னுடன் பயணம் செய்தவர்கள், அண்ணன் திருமூர்த்தி குடும்பத்தினர். திருமூர்த்தி என்னுடைய பெரும்பாலான புத்தகங்களைப் படித்தவர்.
சாக்ரமண்டோ நகரத்திலிருந்து லேக் தஹோ செல்கிற பயணத்தில் இரண்டரை மணிநேரம் மலைகளுக்கிடையேதான் பேருந்து சென்றது. ஒரு சில இடங்களில் காட்டுத் தீயால் எரிந்துபோன மரங்களைப் பார்ப்பதற்குச் சங்கடமாக இருந்தது. தங்கத்தைத் தேடி அமெரிக்கர்கள் அலையும் ஒரு நதியையும் பார்க்க முடிந்தது. தங்கத்திற்கான தேடுதல் அதற்கான வேட்கை – மனித மனதின் தீராத அலைச்சல் பற்றி யோசிக்கவைத்தது. அதோடு இயற்கையின் அதிசயங்களையும்தான். மனிதர்களின் எல்லா விதமான சாகசங்களும் இயற்கையின் முன் தோற்றுப்போகும் என்பதையும் நான் பார்த்த காட்சிகள் நினைவூட்டிக் கொண்டேயிருந்தன. மலைகளும் அடர்ந்த காடுகளும் நீர்வீழ்ச்சிகளும், 110, 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் உருகாத பனிப் பாறைகளும், இயற்கையின் இன்னொரு அதிசயமான முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தன.
லேக் தஹோ – 17 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட நன்னீர் ஏரி. பனிப் பாறைகள் உருகுவதால் வரும் நீர். ஏரியைப் பார்ப்பதற்கும் ஏரியில் குளிப்பதற்கும், ஏரியின் கரையில், மணற்பரப்பில் படுத்துக்கொண்டு வெயில் காய்வதற்கும் குடும்பம்குடும்பமாக வருகிறார்கள். லேக் தஹோ ஏரி தன்னுடைய அதிசயத்தால் எத்தனையோ நூறு ஆண்டுகளாக மனிதர்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. மனம் முழுவதும் நிறைந்திருந்தது. அன்று அந்த ஏரியில் குளிக்காத ஒரே மனிதன் நான்தான். வீட்டிலிருந்து எடுத்து வந்த ரப்பர் படகுகளில், சிறு படகுகளில், சற்றுப் பெரிய நீராவிப் படகுகளில் என்று மனிதர்கள் தங்களை மறந்து நீர் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
நான் சாதாரணமாக எந்த விஷயத்திலும் ‘ரிஸ்க்’ எடுப்பதற்குத் தயங்குகிற ஆள். மலைகளின் மீது ஏறுவது, கடலில் போவதெல்லாம் என் மனதிற்கு ஒவ்வாத செயல். என் வாழ்க்கையில் முதன்முதலாக ரிஸ்க் எடுத்தேன். அதுவும் நான் எடுத்ததல்ல, அண்ணன் திருமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் எடுத்த முடிவுதான். பதினேழாயிரம் மீட்டர் உயரமுள்ள மலைக்கு ரோப் காரில் செல்கிற சாகசப் பயணம். மேலே ஏறுவதற்கு 45 நிமிடம், திரும்பிக் கீழே வருவதற்கு 45 நிமிடம். மூன்று இடங்களில் இறங்கி நின்று பார்க்க முடியும். பனிப் பாறைகள் மூடியிருந்த மலைகளை, மலைகளின் அழகை பார்த்து அதிசயித்தேன்.,
மலையின் மேலே போகும்போதும், மலையிலிருந்து கீழே இறங்கும்போதும், ‘என் உயிர் என்னிடமில்லை’ என்று சொல்வதைப் போலதான் இருந்தேன். மலைகளின் அதிசயத்தைக் காண்கிற அதே கணத்தில் எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மலைகள் இருக்கின்றன, எத்தனை ஆயிரம் மனிதர்கள் இந்த மலைகளின் உச்சிக்கு வந்து சென்றிருப்பார்கள், என்ற கேள்வியும் ரோப் காரிலிருந்து தவறி விழுந்தால் என்னாகும் என்ற பயமும் மனதில் இருந்துகொண்டேயிருந்தது. மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மலைகள் அப்படியே இருக்கின்றன. மலைகளின் இருப்பு மனிதன் ரொம்ப அற்பமானவன் என்பதை நிரூபித்துக்கொண்டேயிருக் கிறது. மலைகளின் உச்சியில் உருகாத பனிப் பாறைகள் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாக உணர்ந்தேன். மலைகளிலிருந்த உயரங்களும், பள்ளங்களும், மரங்களும் காட்சிகளாக இல்லாமல் உணர்வுகளாக மாறிப்போயின.
அமெரிக்காவில் ஜூன், ஜூலை மாதங்களில் சூரியன் இரவு ஒன்பதுவரை இருக்கிறது. நீண்ட பகல் நேரம் கொண்ட காலம். எனக்கு அதிசயமாக இருந்தது. மாலை ஆறு, ஏழு மணிக்கே அமெரிக்கர்கள் சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குப் போய்விடுகிறார்கள் என்பது நம்ப முடியாத விஷயமாக இருந்தது. ஆனால், அதுதான் அமெரிக்காவில் இயல்பாக இருந்தது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பழக்கம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பழக்கம்.
சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் பாண்டியன் என்பவருடன் ஒரு பகல் முழுவதும் இலக்கியம் பற்றி, தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் எழுத்துகள் பற்றி, அமெரிக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் பற்றி, உலகெங்கும் எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏன் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள், சமூகத்திற்கு இலக்கியப் படைப்புகள் தருகின்ற செய்திகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசினோம். பாண்டியன் காபி பிரியர். அடிக்கடி காபியைப் பற்றியும் அமெரிக்கர்கள் அரை லிட்டர் அளவுக்கான காபியை எப்படி விரும்பிக் குடிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் சொன்னார். நான் எப்போதும்போல, தமிழ் நாட்டில் குடிப்பது போலவே ஒரு தம்ளர் அளவுக்கே குடித்தேன்.
பாண்டியன் வீட்டில் ஏழெட்டு நண்பர்களுடன் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்தவர் சுந்தர பாண்டியன், அமைதியானவர். நல்ல படிப்பாளி. எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பவர். தமிழ் நாட்டில் எழுதப்படும் இலக்கியப் போக்குகள் பற்றிப் பேச்சு நடந்தது. தமிழ்நாட்டில் நடக்கிற எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கும் நான்தான் பொறுப்பாளி என்பதுபோல கேள்விகள் கேட்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனுக்கான மதிப்பு என்னவென்று எனக்குத்தான் தெரியும். தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் பலர் எனக்கும் அரசியலுக்கும், அரசியல் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொறுப்பான முறையில் அறிக்கை விடுவார்கள் என்பது. அமெரிக்கவாழ் தமிழர்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகள் மீதும், இந்தியாவில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகள் மீதும், கடுமையான கோபமும், ஆதங்கமும் இருப்பது தெரிந்தது.
FeTNA நடத்திய மூன்று நாள் விழாவில், நான் FeTNA நிகழ்ச்சிகளில் பேசியதோடு, பெரியார் பன்னாட்டு அமைப்பாளர், மருத்துவர் சோம. இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்த, ‘மொத்த உலகிற்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்’, ’கலைஞர் 100’ என்ற கூட்டத்திலும் பேசினேன். சோம. இளங்கோவன் அமெரிக்கத் தமிழர்களிடையே செல்வாக்கு மிக்கவர். பெரியாரின் கொள்கைகளைத் தீவிரமாக அமெரிக்க மண்ணில் பரப்பிக்கொண்டிருப்பவர்.
நான் சான்பிராசிஸ்கோவிலிருந்து தனியாக சிகாகோ நகரத்திற்கு மூன்றரை மணிநேரம் பயணம் செய்தேன். திகில்தான். லேப் டாப், செல்போன், பாஸ்போர்ட் மூன்றையும் ஒரே பையில் வைத்துவிட்டேன். லேப் டாப், செல்போன் போன்றவற்றை ஸ்கேன் செய்யும்போது பையில் வைக்கக் கூடாது, தனியாகத்தான் வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய பை மட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு வரவில்லை. ஐந்து நிமிடமாயிற்று, பத்து நிமிடமாயிற்று. பயத்தில் வியர்த்துவிட்டது. முக்கியமாக பாஸ்போர்ட் போய்விட்டால் என் நிலைமை? செல்போன் போய்விட்டால் நான் யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. உண்மையாகவே மிரண்டுபோனேன். ஆப்பிரிக்க-அமெரிக்கரை ‘கறுப்பர்’ என்று சொன்னால் கோபம் வந்துவிடும் என்று தமிழர்கள் எனக்குச் சொல்லியிருந்தார்கள். ஒரு கறுப்பர் சந்தேகத்தின் பெயரில் என்னுடைய பையைத் தனியாக எடுத்துவைத்திருப்பது தெரிந்தது. அவரிடம் போய் பேசி, ( எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான்) என்னுடைய பையைக் கேட்டேன். அவர் மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார். லேப் டாப், செல்போனைத் தனியாக எடுத்துவைத்தேன். மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. என்னுடைய பொருட்கள் குறிப்பாக பாஸ்போர்ட், செல்போன் கைக்கு வந்த பிறகுதான் என்னுடைய பதற்றம் தணிந்தது. இருப்பதிலேயே மிகவும் கடுமையான நாடு – அமெரிக்கா. அந்த நாட்டில் அதுவும் ஏர்போர்ட்டுக்குள் பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டு நின்றால் என்னுடைய நிலைமையை நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
FeTNA 36ஆவது ஆண்டு விழாவுக்கு வந்த நாட்டுப்புற கலைஞர்களின் ஏழு பேரின் பாஸ்போர்ட்டுகள் திருடுபோய்விட்டன என்ற தகவல் எனக்குத் தெரியும். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாக்ரமண்டோ நகருக்கு காரில் வரும்போது இடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியிருக்கிறார்கள். அப்போதுதான் வேனிலிருந்து பைகள் காணாமல் போயிருக்கின்றன, நாட்டுப்புற இசைக் கருவிகளும்தான். மலேசியாவில்தான் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருக்கும் பொருட்களைத் திருடுவார்கள் என்று மலேசிய நண்பர் நவீன் சொல்ல கேட்டிருக்கிறேன். அமெரிக்காவிலும் திருடர்கள் இருக்கிறார்கள். காரில் இருக்கும் பொருட்கள் திருடுபோகும் என்பது எனக்குத் தெரிந்தது. திருடர்கள் இல்லாத நாடு என்று உலகில் ஒன்றைக் காட்ட முடியுமா?
எது எப்படியோ என்னுடைய பாஸ்போர்ட் இருக்கிறது. செல்போனும் இருக்கிறது என்ற நிம்மதியில் விமானத்தில் பயணம் செய்தேன். சிகாகோவில் எனக்காக யார் காத்திருப்பார்கள்? அவர் என்னை எப்படிக் கண்டுபிடிப்பார்? அவர் எப்படிப்பட்டவர் என்ற கவலையுடன்தான் என்னுடைய பிரயாணம் அமைந்தது.
சிகாகோ சரவணக்குமார் பொருட்களை எடுக்கும் இடத்திற்கே வந்து காத்துக்கொண்டிருந்தார். சந்தித்த பத்திருபது நிமிடங்களிலேயே அண்ணன் தம்பியாகிவிட்டோம். சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாகக் கூட்டம். சிறப்பான ஏற்பாடு. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய மகள் கூட்டத்திற்கு வந்திருந்தார். சரவணக்குமார் அன்பான மனிதர் என்பதைவிடவும் நிதானமானவர். சிகாகோ நகர் முழுவதையும் சுற்றிக்காட்டினார். சிகாகோ நகரின் மையத்தில் ஓடிக்கொண்டிருந்தது ஒரு நதி. நதியின் இரண்டு பக்கமுமிருந்த வானுயர்ந்த கட்டடங்கள். நதிக்கரையோரம் அமைந்திருந்த கட்டடத்தில்தான் நம்முடைய முன்னாள் Reserve Bank கவர்னர் திரு. ரகுராம் ராஜன் பணி செய்துகொண்டிருப்பதாக சரவணக்குமார் சொன்னார். நதியில் தனிமனிதர்களாகவும், ஸ்ட்ரீம் படகிலும், சிறு கப்பல் போன்ற படகிலும் ஓயாமல் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். நதியும், நதிக்குப் பக்கத்திலேயே இருந்த
park-க்கும் சுற்றுலாத் தளமாக இருந்தது. சிகாகோ நகரத்திற்கு வெளியே 170 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கிறது ஒரு பெரிய ஏரி. அந்த ஏரிக்கரையிலிருந்து பார்க்கும்போது சிகாகோ நகரின் அழகிய தோற்றம் தெளிவாகத் தெரியும். நாங்கள் ஏரிக்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு பெண்னும் மற்றொரு பெண்ணும் திருமணம் செய்துகொண்ட காட்சியைப் பார்க்க முடிந்தது. வானுயர்ந்த கட்டடங்களும் நகரத்தின் மையத்தில் ஓடும் நதி மட்டுமல்ல பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதும் சிகாகோவின், அமெரிக்காவின் ஒரு முகம்தான் என்று தோன்றியது. ஒரு பேருந்தில் வந்து, ஏரிக்கரையோரம் நின்று, திருமணம் செய்துகொண்டு, கால் மணிநேரத்திலேயே கிளம்பிப் போன குழுவையும் காண முடிந்தது. ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு பழக்கம். நம்முடைய தமிழ்நாட்டில் உறவினர், நண்பர்களுடன் ஒரு வேனில் சென்று கோவிலில் திருமணம் செய்துகொண்டு வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், அந்த மாதிரியான கல்யாணங்களுக்கு நானும் போயிருக்கிறேன்.
சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் செய்த தவறை மீண்டும் சிகாகோ விமானநிலையத்திலும் செய்தேன். லேப் டாப், பாஸ்போர்ட், செல்போன் மூன்றையும் பையில் வைத்து ஸ்கேன் செய்வதற்குத் தள்ளிவிட்டேன். சான்பிரான்சிஸ்கோவில் நடந்த அதே குழப்பமான விஷயம் மீண்டும் நடந்தது. ஒரே ஆறுதல் அப்போது ஊடகவியலாளர் செந்தில் என்னுடனிருந்தார் என்பதுதான்.
சிகாகோவிலிருந்து நியூ ஜெர்ஸிக்கு விமானப் பயணம். அமெரிக்கா திணை அமைப்பின் சார்பில் மாலையில் கூட்டம். நியூ ஜெர்ஸி பாலாவும், இளமாறனும்தான் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். நிறைய பேர் வந்திருந்தனர். என்னுடைய ‘எங் கதெ’ நாவலைப் படித்திருந்த ஒரு தம்பதி, ஆறு மணிநேரம் காரில் பயணம் செய்து கூட்டத்திற்கு வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடைய வருகை ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு படைப்பிற்குக் கிடைத்த மரியாதையாகவே நான் கருதினேன். கூட்டத்தில் என்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பான ‘திருநீறு சாமி’ குறித்துப் பேசினேன். என்னுடைய சிறுகதைகளின் தன்மை குறித்து நானே பேசிய கூட்டம். ஒரு எழுத்தாளன் தன்னுடைய படைப்புகள் குறித்து அவனே பேசுவது சரியா, பிறர் பேசுவது சரியா? ஒரு எழுத்தாளனின் எழுத்துகள் குறித்து, சம்பந்தப்பட்ட எழுத்தாளன் பேசுவதைக் காட்டிலும் பிறர் பேசுவதுதான் சரியானது, நியாயமானது.
நியூஜெர்ஸியில் பாலாவும் இளமாறனும் நிலம் போல் என்னைத் தாங்கினார்கள். அன்பின் மதிப்பை, உயர்வை எந்த வார்த்தைகளாலும் சொல்லித் தீர்த்துவிட முடியாது. அதுதான் அன்பின் ரகசியம்.
வாஷிங்டன் டி.சி.க்கு காரில் பயணம். மூன்று மணிநேரம். வழி நெடுகிலும் இரண்டு பக்கங்களும் மரங்கள், காடுகளாக இருந்தன. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச்செல்வது போல் இருந்தது. சாலை வசதிகள் ஏற்படாத காலத்தில், மனிதர்களின் பெருக்கம் அதிகம் இல்லாத காலத்தில் இந்தக் காடுகள் எப்படி இருந்திருக்கும்? விவரிக்க முடியவில்லை. மண்ணின் அதிசயத்தை உலகில் இதுவரை எழுதப்பட்ட மொத்த இலக்கியமும் விவரித்து விடவில்லை என்றுதான் தோன்றுகிறது. மண்ணும் அதன் மீது இருக்கும் மலைகளும், நதிகளும், மரம், செடிகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அதிசயத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதை மனிதன்தான் புரிந்துகொள்வதில்லை.
பாலா, அமெரிக்க வாழ்க்கை முறை, அமெரிக்கர்கள் பூர்வ குடிகளை எப்படி ஒழித்தார்கள் என்பது பற்றியெல்லாம் வழி நெடுக பேசிக்கொண்டிருந்தார்.
வெர்ஜினியா மாநிலத்தின் வாசலாக அப்பலேச்சியன் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. 1600-களில் ஆரவாரமில்லாத வனப்பகுதியாக இருந்தது. வகுண்சேனாக்கவ் என்பவர் 30-க்கும் மேற்பட்ட பூர்வ குடிகளின் தலைவனாக இருந்தார், அவருடைய மகள் போகண்ட்ஸ். அட்லாண்டிக் கடலைக் கடந்து, கேப்டன் ஸ்மித் – அமெரிக்க மண்ணில் காலடி வைத்தார், ஜேம்ஸ் டவுன் உருவானது, 1613இல் போகண்ட்ஸ் பிணைக்கைதியானாள், ஜான் ஸ்மித்தைத் தொடர்ந்து, ஜான் ரால்ப், புகையிலை வியாபாரத்திற்காக வந்தார். அமெரிக்கப் பழங்குடியினர் புகையிலையைப் பயிரிட்டு வந்தனர். அந்த ரகசியத்தை ஜான் ரால்ப் தன்னுடைய மக்களுக்குக் கற்றுத் தந்தார். சகஜீவியா, ஷோஷோன் பழங்குடி இனத் தலைவனின் ஐட ஹோ மாநிலத்துக் காட்டுமிராண்டி என்று வர்ணிக்கப்பட்ட பெண்தான் வழிநடத்தினாள் பசிபிக் பெருங்கடலை மேற்குலகம் காண்பதற்கு.
1800-களில்தான் புதிய உலகம் என்று அமெரிக்கா கொண்டாடப்பட்டது. அமெரிக்கா, பழங்குடிகளை அழித்து உருவான வரலாறு குறித்துப் பேசினோம். அமெரிக்காவின் மொத்த வரலாறு முந்நூறு நானூறு ஆண்டுகளுக்குள்தான் இருக்கும். தமிழர்களின் வரலாறு எத்தனை நூறு ஆண்டுகள் என்பதையும் பேசினோம். பேச்சு மனித உறவை வளர்க்கிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது
பாலா அதிகம் பேசக்கூடியவர். அரசியல் அறிவு பெற்றவர். அரசியல்வாதியாக ஆக வேண்டியவர். நல்ல பேச்சாளி. இளமாறன், பாலாவுக்கு நேரெதிர் அமைதியானவர், அன்பானவர். ஒரு காரியம் என்றால் அதை செய்து முடிப்பதிலேயே குறியாக இருப்பவர்.
அரசு செல்லய்யாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாஷிங்டன் டி.சி. தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் பேசினேன். அந்தக் கூட்டத்தில் இலக்கியம் அரசியல் என்று எனது பேச்சு இருந்தது. இலக்கியம் அரசியலைப் பேசுகிறது. அரசியல் இலக்கியத்தைப் பேசுகிறது. இரண்டையும் தனித் தனியாகப் பிரித்துவிட முடியாது. அரசு செல்லய்யா சூழலியல் ஆர்வலர். அன்பானவர். தமிழ் மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பழகுவதற்கு எளிமையானவர். அந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துறை சந்திரசேகரின் மகள் அறிவுப் பொன்னி, மருமகன் எழில் வடிவன் கலந்துகொண்டனர். எழில் வடிவன் அதிகம் பேசாதவர். காரியத்தில் கெட்டிக்காரர்.
லூசியானாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு விமானப் பயணம். குட்டி விமானம். அப்படியொரு விமானத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. பயணம் செய்ததில்லை. நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் பேச்சு. வழமையானது. கூட்டம் குறைவுதான். கேள்விகள் அதிகமாக இருந்தன. வந்திருந்த நண்பர்கள் இலக்கிய வாசகர்களாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவரும், கதிர்வேல் குமாரராஜாவும்தான் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, FeTNA-வின் தலைவர் முனைவர் பால சுவாமிநாதன் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல்போனது வருத்தமாக இருந்தது. நான் நியூயார்க்கில் இருந்த சமயத்தில் அவர் ஒரு சுற்றுப் பயணத்தில் இருந்தார். தன்னுடைய சொந்தப் பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திருக்கிறார். நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. அவர்தான் கதிர்வேல் குமாரராஜாவிடம் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நியூயார்க்கில், குஜராத்தி ஒருவர் ஹோட்டல் வைத்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் எழுத்தாளன் என்றதும் அவருடைய முகமே மாறிவிட்டது. கூகிளில் என்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்த்துவிட்டு, அவர் பேசியது நினைவுகொள்ளத் தக்கது.
பெருமாள்தான் அழைத்துச் சென்றார். நியூயார்க் விமானநிலையம் பெரியது. பத்திரமாகவும் நேரத்துடனும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த ஹோட்டலில் சமையலராக வேலை செய்தவர் ஒரு ஈழத் தமிழர். முதன்முதலாக அமெரிக்காவில் ஒரு ஈழத் தமிழரின் முகத்தைப் பார்த்தேன். நானும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. தமிழ் நாட்டில் கிடைப்பது போன்று பொடி தோசை கிடைத்தது.
பெருமாள், நியூயார்க்கிலிருந்து மான்ஹாட்டன் என்ற இடத்திற்கு காரில் அழைத்துச்சென்றார். அவர், மான்ஹாட்டன் தீவு உருவான வரலாறு, இப்போது அங்கு எழுந்துள்ள வானுயரக் கட்டடங்கள், மான்ஹாட்டனுக்குச் செல்வதற்கு 200-ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பற்றியெல்லாம் விவரித்தார். நம் நாட்டில் கட்டப்படும் பாலங்களின் நிலை பற்றியும் சொன்னார். பாலத்தில் காரில் பயணம் செய்வது அலாதியானது. நடந்து சென்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லை. ஐக்கிய நாடுகளின் சபை கட்டடத்தின் முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்த பெருமாள்- அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் காட்டினார். அது ஒவ்வொரு பள்ளியிலும் நிரோத் பாக்கெட் வைக்கப்பட்டிருக்கும் என்பதுதான். பள்ளியில் படிக்கும்போதே கர்ப்பமாகிவிடும் பிள்ளைகளின் கர்ப்பத்தைக் கலைத்துவிடாமல் அரசு பாதுகாக்கிறது, பள்ளியில் படிக்கும்போதே குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை அரசே தத்தெடுத்துப் பராமரிக்கிறது என்பதைச் சொன்னபோது நான் ஆச்சரியப்படவில்லை. எல்லாவிதமான ஆச்சரியங்களுக்கும் இடமளிக்கிற நாடுதானே அமெரிக்கா.
பெருமாள் மற்றொரு விஷயத்தையும் சொன்னார். சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஒரு இளைஞர் சென்றார். திருமணத்திற்காகப் பெண் தேடினார். தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று கேட்டார். பெண் கிடைத்தது. ஆனால், திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பெண். முதன்முதலாக அமெரிக்காவுக்கு வந்தவர் என்றால், எதற்கெடுத்தாலும் கணக்குப் பார்ப்பார். செலவு செய்யும்போதெல்லாம், அமெரிக்கா பணத்தையும், இந்திய பணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பார். அதனால் அந்த மாப்பிள்ளை வேண்டாம், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன் என்றால் சரி என்று சொல்லிவிட்டாள் அந்தப் பெண்.
முதல் தலைமுறையாக அமெரிக்காவுக்குச் சென்று வாழ்கிறவர்களுக்கும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்கிற பிள்ளைகளுக்குமான மன வேறுபாடு என்ன என்பதை பெருமாள் சொன்னார். அமெரிக்கவாழ் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கு, மனப்போக்கு என்னவாக இருக்கிறது என்பதை பல மனிதர்களின் கதைகளைச் சொல்லி விளக்கினார்.
நியூயார்க் நகரத்தைச் சுற்றிக்காட்டுவதற்கு தம்பி பாலாவும், இளமாறனும் கோசலும் வந்திருந்தனர். வால் மார்ட், இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடம் என்று பார்த்தேன். உலக வர்த்தக மையமாக விளங்கிய இரட்டை கோபுரக் கட்டடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் இப்போது சிறு குளம் போன்றும் அமைத்திருக்கிறார்கள். அதன் சுற்றுச் சுவரில், தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நாளன்று உயிர்பிழைக்க முடியும் என்ற எண்ணத்தில், மாடியிலிருந்து குதித்து இறந்தவர்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். உலகின் உயரமான கட்டடமாக, அமெரிக்காவின் பெரிய அடையாளமாக இருந்த கட்டடங்கள் இப்போது தரைமட்டமாக இருக்கிறது. தற்போது பக்கத்தில் புதிதாக ஒரே ஒரு கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது.
வால் மார்ட் தெருவில் நடக்கும்போது உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கர்கள் எப்படித் தீர்மானிக்கிறார்கள், அவர்களுக்கு அந்த அதிகாரம் எப்படி வந்தது? வளைகுடா நாடுகளில் எண்ணெய் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை அமெரிக்காவின் டாலர் மதிப்பில்தான் விற்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் எப்படித் தீர்மானித்தார்கள். அதற்கான அதிகாரம் எப்படி அவர்களுக்கு வந்தது என்பதைப் பற்றி யோசித்தேன். அந்தத் தெருவில் சீறிப்பாயும் ஒரு காளையின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காளையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு நீண்ட வரிசை நின்றது. பாலாவும், இளமாறனும் எவ்வளவு சொல்லியும் நான் காளை மாட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருக்கிற எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தாமல் ஏன் பிறநாட்டு எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்டிக்கொண்டிருக்கிறது. பிற நாட்டு வளங்கள் அழிந்த பிறகு தன்னுடைய நாட்டின் வளத்தை அதிக விலைக்கு விற்பதற்குத் திட்டம் போடும் அமெரிக்காவின் மனநிலை எத்தகையது?
அமெரிக்காவில் ஐம்பது மாகாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தலைநகரமும் சிறு நகரங்களில் மட்டுமே இருக்கின்றன. தொழில் நகரங்கள் வேறு ஒரு இடத்தில் இருக்கின்றன. கலிஃபோர்னியா என்பது ஒரு மாகாணம். ஆனால், அதன் தலைநகரம் சாக்ரமண்டோ. வாஷிங்டனும் அப்படித்தான்.
வாஷிங்டனில், நாடாளுமன்ற கட்டடம், அதிபரின் வெள்ளை மாளிகையைப் பார்த்தேன். காவல் துறையினரின் அச்சுறுத்தல் எங்குமே இல்லை. அமெரிக்காவிலிருந்த 15 நாட்களில் நான் காவல்துறையினரை அரிதாகவே பார்த்தேன். சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூஜெர்ஸி, வாஷிங்டன், நியூயார்க் லூசியானா என்று நான் போன எந்த விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் என்று யாருமே என்னுடைய கண்ணில் படவில்லை. சோதனையிட்டவர்கள்கூட அரசு அதிகாரிகளாகவே இருந்தனர். சென்னை மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கிற எல்லா விமானநிலையங்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறைந்திருப்பார்கள். அவர்கள் பார்க்கிற பார்வை, பயணிகளைக் குற்றவாளிகளைப் பார்ப்பதுபோலவும் குற்றவாளிகளை நடத்துவதுபோலவும்தான் இருக்கும்.
அமெரிக்காவில் நான் பயணித்த எல்லா விமானநிலையங்களிலும், டிக்கெட் வாங்குகிற, உடமைகளை ஒப்படைக்கிற இடம்வரை, நண்பர்கள், உறவினர்கள் வர முடியும். அதே மாதிரி பயணம் முடிந்து உடமைகளை எடுக்கிற இடம்வரை நண்பர்கள், உறவினர்கள் வந்து காத்துக்கொண்டிருக்க முடியும். இந்த இரண்டு வசதிகளால்தான் என்னால் அமெரிக்காவில் எளிதாக விமானத்தில் பயணம் செய்ய முடிந்தது. ஏற்கனவே அமெரிக்காவிற்குச் சென்ற தமிழர்கள், இந்தியர்கள், பயமுறுத்தியதுபோல எச்சரிக்கை செய்தது போல, எனக்கு எதுவுமே நிகழவில்லை.
அமெரிக்காவில் அடிப்படையான பணிகளைச் செய்பவர்களாக இருப்பவர்கள் ஸ்பானியர்கள்தான். ஒரு காலத்தில் ஸ்பானியர்கள் அமெரிக்காவின் பூர்வ குடிகளாக இருந்தவர்கள். இப்போது இரண்டாம் தர குடிமக்களாக இருக்கிறார்கள். இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அடிமட்ட வேலை செய்பவர்களாக எங்குமே இல்லை. நாகரிகமான, நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஏற்றமான பொருளாதார நிலையிலும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் திருட நினைப்பவர்கள் இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே திருட திட்டம் போடுகிறார்கள். இந்தியர்கள்தான் பணமும், நகையும் நிரம்ப வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அமெரிக்கவாழ் திருடர்களின் மனதில் இருக்கிறது என்று சான்பிராசிஸ்கோ பாண்டி கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நண்பர்களின் பேச்சில் அமெரிக்காவில் கொட்டிக் கிடக்கும் பணம், சட்டவிதிகள், தனிமனித, குடும்ப, சமூக ஒழுங்குகள், வேலை வாய்ப்பு குறித்த பெருமிதம் வெளிப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா குறித்த மதிப்பீடும் வெளிப்பட்டது. இந்தியாவின் மக்கள்தொகையையும், அமெரிக்காவின் மக்கள்தொகையையும், இந்தியாவின் நிலப்பரப்பையும், அமெரிக்காவின் நிலப்பரப்பையும் அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.
தமிழர்கள், இந்தியர்கள், அதிலும் குஜராத்திகள் பொருளாதார ரீதியாக வலுவாக அமெரிக்காவில் இருக்கிறார்கள். மக்கள்தொகை கணக்கின்படி குஜராத்திகள் தெலுங்கர்களுக்கு அடுத்த நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். வட மாநிலத்தவர்கள் குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.
தமிழர்கள் அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் மனதில் கொஞ்ச வருத்தமும் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். பள்ளிக்கல்வி வரைதான் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உறவு இருக்கிறது. கல்லூரிப் படிப்பிற்குச் சென்ற பிறகு ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறைதான் பெற்றோர்களைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். அதுவும் இஷ்டம் இருந்தால் மட்டுமே.
பல பெற்றோர்கள் தங்களுடைய மகன், மகள் திருமணம் செய்துகொள்வார்களா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள். தன்னுடைய மகன் ஒரு ஆணையோ, திருநங்கையையோ திருமணம் செய்துகொள்வானோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். தன்னுடைய மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் போதும். பெண் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். வயதுக்கு வந்த மகனிடமோ, மகளிடமோ, அவர்களுடைய திருமணம் குறித்துப் பேசுவதற்கே அச்சப்படுகிறார்கள். பன்னாட்டுக் கலாச்சாரத்திற்குள் வாழ்கிற தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த கவலையும் அச்சமும் பல பெற்றோர்களிடம் இருப்பது தெரிந்தது. முதல் தலைமுறையாக அமெரிக்காவுக்குச் சென்ற பெற்றோர்களிடம்தான் இந்தக் கவலை அதிகமாக இருக்கிறது. இரண்டு, மூன்று தலைமுறைகள் கடந்துவிட்டால் எந்த அச்சமும் எந்தக் கவலையும் இருக்காது என்றே நான் கருதுகிறேன். எல்லாம் பழகிவிடும்தானே. கனடாவில் ஒரு இலங்கைத் தமிழரைச் சந்தித்தேன். அவருடைய ஒரு மகள் கனடியரைத் திருமணம் செய்திருக்கிறார். மற்றொருவர் நைஜீரியாவைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருக்கிறார்.
குழந்தைகளை அடிக்கிற உரிமை பெற்றோர்களுக்குக் கிடையாது. மனைவியை அடிக்கிற, துன்புறுத்துகிற உரிமையும் கிடையாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும். தண்டனைக்குப் பயந்துகொண்டே பல தமிழர்கள், இந்தியர்கள், மனைவி, கணவன், குழந்தைகள் செய்கிற தவறுகளைப் பொறுத்துக்கொள்ளவில்லை, சகித்துக்கொள்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். எல்லாம் நண்பர்கள் சொல்லக் கேட்டதுதான்.
அண்மை காலமாக அமெரிக்கர்கள் திருமணம் செய்துகொள்வதையும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதையும் தவிர்க்கிறார்கள் என்று ஒரு தகவல். உண்மையா, பொய்யா, தெரியாது. பிள்ளைகளின் திருமணம் பற்றி பேசுவதற்கான முழு உரிமை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கை, அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அதில் தலையிட முடியாது. அமெரிக்க சட்டம் அப்படி இருக்கிறது என்று ஆதங்கத்தோடு பல நண்பர்கள் பேசினார்கள்.
என் மனதும், சிந்தனையும், யோசனையும், தமிழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன் இயல்புக்குப் பழக்கப்பட்டதாகவே இருக்கிறது. அது ஒருபோதும் அமெரிக்காவின் இயல்புக்கு ஒத்துப்போகாது.
அமெரிக்காவில் சனி, ஞாயிறுகளில் பெரும்பாலான லாட்ஜ்கள் நிரம்பியே இருக்கின்றன. அமெரிக்கர்கள் சனி, ஞாயிறுகளில் ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுகிறார்கள். நாளை என்னாகும் என்ற இந்திய மனதின் கவலை, அச்சம் அமெரிக்கர்களின் மனதில் இருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள்தான் இருக்கின்றன. ஆனால், 70-க்கும் மேற்பட தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேர்தல் என்பது நம்மூரில் M.L.A., M.P. தேர்தலுக்கு ஓட்டு கேட்பதற்குப் போவதுபோல போவோம் என்று டெக்ஸாஸ் பாண்டி சொன்னார். தமிழ்நாடு வேண்டாம், இந்தியா வேண்டாம், வேலை வாய்ப்பில்லை, பொருளாதர ஏற்றமில்லை என்று சொல்லி அமெரிக்காவுக்குச் சென்ற தமிழர்கள் தமிழ்ச் சங்கங்களை அமைப்பதிலும், தமிழ்ச் சங்க நிகழ்வுகளை நடத்துவதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். மொழி ஒன்றிணைக்கிறது. இனப் பற்று ஒன்றிணைக்கிறது, தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கிற தமிழர்களைக் காட்டிலும் அமெரிக்கவாழ் தமிழர்களிடம்தான் அதிகமான மொழிப் பற்று, இனப் பற்று இருக்கிறது. வள்ளுவர் குறித்த, சங்க இலக்கியங்கள் குறித்த பெருமிதம் இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைத் தங்களுடைய அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த வேண்டும் என்ற உத்வேகமும் காண முடிகிறது.
சான்பிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, நுவாடா, சிகாகோ, நியூ ஜெர்ஸி, லூசியானா, வாஷிங்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் இருக்கும் வானுயர்ந்த கட்டடங்கள் மனதை ஈர்க்கத்தான் செய்தன. பிரமிப்பை உண்டாக்கத்தான் செய்தன. பரந்த பசுமையான நிலப்பரப்பு மயக்கத்தான் செய்தன. அதே நேரம் அமெரிக்காவில் அழிக்கப்பட்ட பூர்வ குடிகளின் வரலாறுகளும் அமெரிக்கா குறித்து ஜான் ஸ்டீன் ஃபெக் எழுதிய The Grapes of Wrath என்ற நாவலும், டோனி மாரிசனின் - The Bluest eye என்ற நூலும், ஹேரியட் ஜேக்கபிஷ் எழுதிய ‘ஓர் அடிமை சிறுமியின் வாழ்க்கை நதி’ என்ற தன்வரலாறு நூலும் நினைவுகளில் வந்துகொண்டேயிருந்தன. ஒரு நாட்டின் மதிப்பு என்பது அந்த நாட்டிலுள்ள கட்டடங்கள் அல்ல, அந்த நாட்டில் எழுதப்பட்ட படைப்புகளே, கட்டடங்கள் ஒருபோதும் மனித மனம் குறித்துப் பேசுவதில்லை.
அமெரிக்காவில் வீடற்ற மனிதர்களை நிறைய பார்க்க முடிந்தது. பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். என்னிடமே மூன்று பேர் சிகரெட் வாங்கி குடித்தார்கள்.
நான் அமெரிக்காவில் 26 மணிநேரத்திற்கும் மேலாகப் பல இடங்களுக்கு காரில் பயணம் செய்திருக்கிறேன். எந்த ஒரு ஹைவேயிலும் தவறிபோய்க்கூட ஒரு மனிதரைக் கண்டதில்லை. சைக்கிள், டூவீலர் என்று எதுவுமே இல்லை. கார்கள் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தன. அமெரிக்காவில் டஸ்ட் அலர்ஜி வருவதற்கு வாய்ப்பே இல்லை. கிராமம், நகரம் என்று எல்லா இடத்திலும் எல்லாத் தெருக்களிலும் தூய்மை நிறைந்திருந்தது. தெருவின் தூய்மைக்கு, சாலையிலிருக்கும் போக்குவரத்துக்குக் காரணம் கடுமையான சட்டங்களும் அபராதங்களும்தான் காரணம்.
கிராமப்புற நூலகங்கள்வரை எல்லாமே மேம்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. தனியாகப் படிப்பதற்கும் இடம் ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்குத் தனியாக, முதியோர்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். நம்முடைய அரசு நிறுவனங்கள் இது குறித்து அக்கறைப்படலாம். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் படிப்பை முதன்மைப்படுத்துவதுதான் காரணமாக இருக்க முடியும்.
சிகாகோவில் ஒரு கிராமத்தில் காதுகேளாத குழந்தை இருக்கிறது என்பதற்காக அந்தத் தெருவில் காரில் போகிறவர்கள் ஹாரன் அடிக்கக் கூடாது என்று எழுதிவைத்திருக்கிறார்கள். கார் ஓட்டிகள் அந்தத் தெருவைக் கடக்கும்போது ஹாரன் அடிக்காமல்தான் போகிறார்கள். அதே மாதிரி இன்னொரு கிராமத்தில் ஒரு வீட்டின் முன் ஒரு பெட்டி இருக்கிறது. அதில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டுத் திரும்ப கொண்டுவந்து வைத்துவிடலாம் என்று சரவணக்குமார் கூறினார்.
தனிமனித சுதந்திரத்தைக் கொண்டாடுகிற நாடு, கட்டற்ற சுதந்திரம் குழந்தைகள் அளவில், பள்ளிக் குழந்தைகள் அளவில் இருப்பது ஏற்றதா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய இந்திய மனம் பல விஷயங்களை ஏற்க மறுக்கிறது.
நம்முடைய ஊரில் மருந்துக்கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை வாங்குவதுபோல அமெரிக்காவில் பல மாகாணங்களில் போதைப் பொருள் வாங்க முடியும். போதைப் பொருள் சட்டப்பூர்வமாக இருக்கிறது. தனக்கு மாற்று உறுப்பு அறுவைச் சிகிச்சை செய்யும்போது, போதைப் பொருள் தந்ததாக சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் பாண்டியன் கூறினார்.
இப்படிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கான இடம் இதுவல்ல. இப்போது அமெரிக்காவில் எனக்கு நிறைய அண்ணன்களும் நிறைய தம்பிகளும் இருக்கிறார்கள. அமெரிக்கப் பயணம் எனக்கு அளித்த அரியச் செல்வங்கள்.
என்னுடைய அமெரிக்கா பயணம் என்பது அசோகன் தங்கராஜ் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நான் விசாவுக்கு விண்ணபித்தது முதல் நான் சென்னையில் விமான ஏறியதுவரை, நான் அமெரிக்காவிலிருந்து சென்னை வரும்வரை அனைத்துவிதமான உதவிகளையும் செய்தவர், என்றும் நினைவில் இருப்பவர். அசோகன் இல்லாவிட்டால் என்னுடைய அமெரிக்கப் பயணமே சாத்தியமாகி இருக்காது. அசோகனும் என்னுடைய ஆசைத் தம்பிதான்.
அமெரிக்கா எப்போதும் போல அதன் இயல்பில் இருக்கிறது. நான் என் இயல்பில் தமிழ்நாட்டிற்கு வந்தேன். அவரவருக்கு அவரவர் நாடு மனதுக்கு உகந்தது.
அந்திமழை ஆகஸ்ட் 2023
இங்கு இருந்துகொண்டே உங்களுடன் அமெரிக்காவில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றுக் தந்தது உங்களுடைய இந்தப் பயணக் கட்டுரை.
பதிலளிநீக்குதொய்வில்லாத நடையும், கண்ட காட்சிகளையும் எண்ணங்களையும் வாசகரின் மனதில் பதியும் வகையில் விவரித்த முறையும் தாங்கள் ஆகச் சிறந்த ஓர் எழுத்தாளர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
வணக்கம் சார்,
பதிலளிநீக்குநான் உங்கள் கதைகளை முக்கால் அளவிற்கு படித்துமுடித்துவிட்டேன். எந்த நாவல்கள் மற்றும் சிறுகதைகள் படித்தாலும் அக்கதையில் நான் உண்மையாக கதைக்குள் சென்று வருகின்றேன். எடுத்துக்காட்டாக நேரில் பார்த்த அனுபவத்தை தரும்.
இந்த அமெரிக்கா பயணம் நான் என்னுடைய கண்ணில் நேரில் பார்ப்பது போன்று உணர்கின்றேன். அதுமட்டுமின்றி உங்களுடைய அனைத்து எழுத்துக்களும் மனதில் நீங்காமல் இன்றும் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். உங்களுடைய இந்த அற்புதமான அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்.