திங்கள், 31 ஜூலை, 2023

அமெரிக்க மண்ணில் தமிழ் உணர்வு - இமையம்


    வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை FeTNA  36ஆவது ஆண்டு விழா கலிஃபோர்னியா மாகாணம், சாக்ரமண்டோ நகரில் ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவில் எழுபதுக்கும் அதிகமான தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கூட்டமைப்புதான் FeTNA.  இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாகாணத்தின் தலைநகரில் விழாவைக் கொண்டாடிவருகிறது.

FeTNA  36ஆவது ஆண்டு, மூன்று நாள் விழாவில் ஐந்து வெவ்வேறு விதமான நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதிலொன்று ‘நாளைய தமிழ் நானிலத்தில்’ மற்றொன்று  ‘தமிழின் தொன்மையும் பெருமையும்’. பொது அரங்கம், கலை அரங்கம், பட்டிமன்றம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இசை, தொழில்முனைவோர் மாநாடு என்று ஒரே நேரத்தில் பல அரங்குகளில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.

மூன்று நாள் விழாவில் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தன்னார்வலர்கள் என்று பெரும் கூட்டம். நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. விழாவில் என்னை மிகவும் வியப்படையவைத்த விஷயம் பல மாகாணங்களிலிருந்து குடும்பம் குடும்பமாகப் பலர் வந்திருந்ததுதான். நான் இதுவரை இப்படியொரு விழாவைக் கண்டதில்லை. அமெரிக்கத் தமிழர்கள் FeTNA  விழாவுக்குக் குடும்பத்தோடு வருவது இயல்பானது என்று பலரும் சொன்னார்கள்.

அமெரிக்காவில் தெலுங்கர்கள், குஜராத்திகள் அதிகமாக வசிக்கிறார்கள். தெலுங்கர்களும் குஜராத்திகளும் கூட்டமாகக் கூடவே செய்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடத்தவே செய்கிறார்கள். அவர்களின் கூடுகை என்பது பெரும்பாலும் வியாபாரம், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால், தமிழர்கள் FeTNA  விழாவில் மொழியின் பெருமையைப் பேசுவதற்காகக் கூடுகிறார்கள். பொதுவாகவே, தமிழர்களுக்கு மொழி மீதான பற்றும் பெருமிதமும் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அந்த உணர்வை அமெரிக்கத் தமிழர்களிடம் அதிகமாகக் காண முடிந்தது. “விமானத்தை விட்டு அமெரிக்காவில் இறங்கியதும் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தானாகவே பற்று வந்துவிடுகிறது” என்று பலரும் சொன்னார்கள்.

தமிழர்கள் – தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் – தமிழ்நாடு சரியில்லை, வேலை வாய்ப்பில்லை என்று சென்றவர்கள், தமிழ்நாட்டில் நிலவுகிற இன, மத, வட்டார வேறுபாடுகள் எதுவுமின்றித் தமிழராய் மட்டுமே FeTNA விழாவில் பங்கேற்றது ஆச்சரியமளித்தது. விழாவிற்கு வந்திருந்த ஒவ்வொருவருடைய மனதிலும் பேச்சிலும் செயலிலும் தமிழ் மொழியை, அதன் இலக்கியப் பெருமையை, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பது, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவது மட்டுமே லட்சியம் என்பது தெளிவாகவே வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கும்போது இல்லாத உணர்வு அமெரிக்காவுக்குச் சென்றதும் ஏற்பட்டிருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம்.

இலங்கையில், மலேசியாவில், சிங்கப்பூரில், கனடாவில் காணாத அதிசயத்தை அமெரிக்காவில் பார்க்க முடிந்தது. அது என்னவென்றால் கூட்டுழைப்பு. வட அமெரிக்கச் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மட்டுமல்ல, தன்னார்வலர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் பராமரிப்பும் வியப்பூட்டும் வகையில் இருந்தன. விருந்தினர்களைக் கைக்குழந்தையைக் கவனித்துக்கொள்வதுபோலக் கவனித்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரின் பேச்சிலும், செயலிலும் தமிழராய் உணரவைத்தார்கள். தமிழராய் உணர்வோம், தமிழராய் உயர்வோம் என்ற வாக்கியம் அடிக்கடி மனதில் தோன்றியது. உண்மையைச் சொன்னால் அமெரிக்க மண்ணில் என்னைத் தாங்கிப் பிடித்தது தமிழ் மொழிதான். தமிழன் என்ற அடையாளம்தான்.

FeTNA விழாவில் மட்டுமல்ல, சிகாகோ தமிழ்ச் சங்க, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க, திணை அமெரிக்க, வாஷிங்டன் டி.சி. தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பெரியார் பன்னாட்டு அமைப்பினர், நியூயார்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் என்று எல்லாருமே அன்பால் நிறைத்தனர். எல்லாருடைய நோக்கமும் தமிழை, அதன் பெருமையைப் பேசுவதாக மட்டுமே இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு தமிழரை வரவேற்பதில், உபசரிப்பதில், கொண்டாடுவதில் பலரிடம் போட்டியைக் காண முடிந்தது. எனக்குக் கிடைத்த அன்பு, வரவேற்பு, மதிப்பு என்பது எனக்கானது அல்ல, தமிழ் மொழிக்கானது, அதன் இலக்கிய செழுமைக்கானது. தமிழன் என்ற அடையாளத்திற்கானது. 

FeTNA விழாவும் சரி, சிகாகோ, நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.சி., நியூயார்க்கில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகளிலும் சரி, நான் கண்ட உண்மைத் தமிழர்கள் தமிழ் மொழியைப் பெரிய பொக்கிஷமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது. உலகில் வேறு எந்த மொழிக்காரர்களிடம் இந்த மாதிரியான உணர்வு மேலோங்கி இருக்கிறதா என்று தெரியவில்லை.  ‘தமிழ் மொழி ‘தமிழ்ச்செல்வம், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி’ என்று பெயர் வைத்துக்கொள்கிற மரபு வேறு இனத்தவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. சான்பிரான்சிஸ்கோவிலிருந்த சாக்ரமண்டோவுக்கு என்னை அழைத்துச் சென்றவரின் காரின் பின்னால் ‘தமிழண்டா’ என்று எழுதப்பட்டிருந்தது. 

அமெரிக்கத் தமிழர்களிடம் அதிகமாகக் காணப்பட்ட உணர்வு தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தைக் காப்பதற்கான ஒரே வழி புதிய நூல்களை எழுதுவதும் படிப்பதும்தான். எந்த மொழியில் அதிகமாக இலக்கிய நூல்கள் எழுதப்படுகின்றனவோ, எந்த மொழி நூல்கள் அதிகமாகப் படிக்கப்படுகின்றனவோ – அந்த மொழிதான் நிலைத்திருக்கும். நீடித்திருக்கும். மொழியை வளர்ப்பதற்கான, வளப்படுத்துவதற்கான ஒரே வழி தரமான இலக்கிய நூல்களை எழுதுவதும், எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், படிக்கச் செய்வதும்தான்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய சொற்களை உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழி என்ன ஆகுமோ என்ற கவலை யாருக்கும் தேவையில்லாதது. தமிழ் மொழி காலத்துக்கேற்றவாறு உருமாறிவந்திருக்கிறது. எத்தனை படையெடுப்புகள் நடந்திருக்கின்றன, எத்தனை மொழிக் கலப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சவால்களைத் தாங்கிக்கொண்டு தமிழ் நிலைத்திருக்கிறது, நீடித்திருக்கிறது. காரணம், தமிழ் மொழி இன்றும் மக்கள் பேசும் மொழியாக இருக்கிறது, இலக்கிய மொழியாக இருக்கிறது. 

மொழிப் பற்று வேறு, மொழி வெறி வேறு. நான் எப்போதும் மொழி வெறியனாக, மாற்று மொழி வெறுப்பாளனாக இருக்க மாட்டேன். அந்தப் பண்பைத் தமிழ் மொழி இலக்கியங்கள் கற்றுத்தரவில்லை.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர், பால சுவாமிநாதன், ஜான் பிரிட்டோ, அசோகன் போன்றவர்களோடு ஜான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் பாண்டியன், சுந்தர பாண்டியன், நியூ ஜெர்ஸி பாலா, இளமாறன், கோசல், சிகாகோ சரவண குமார், மருத்துவர் சோம. இளங்கோவன், நியூயார்க் கதிர்வேல் குமாரராஜா, டெக்ஸ்சாஸ் பாண்டி போன்ற பல புதிய நண்பர்களைப் பெற முடிந்தது. இந்தப் பயணம் புதிய உறவுகளையும் ஏற்படுத்தித்தந்தது. புதிய நண்பர்களோடு அறிமுகமாவதும் பழகுவதும் சிறந்த நூல்களைப் படிப்பது போன்றதுதான். மனிதர்களைத் தவிர்த்துவிட்டு இலக்கியம் இருக்க முடியாது. படித்துத் தீராத புத்தகம் மனித உறவு.

சினிமாக்காரர்களுக்கும் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும்  பிரபலங்களுக்கும் தருகிற முன்னுரிமையை எழுத்தாளர்களுக்குத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் FeTNAமீதும் இருக்கிறது. வெகு மக்களுடைய ரசனையை ஒரு அமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு அமைப்பு பலதரப்பட்ட மக்களின் கருத்துக்கும் ரசனைக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது.

FeTNA நடத்தும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் தமிழ் மொழியை வளர்க்கிறதா, இல்லையா என்று தெரியாது. ஆனால், தமிழ் உணர்வை வளர்க்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் FeTNA விழா நடத்தப்பட வேண்டும்.


தமிழ் தி இந்து நாளிதழ்

27-07-2023 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக