மதுரையில் கட்டப்பட்டிருக்கிற கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து ஒரே பேச்சாக இருக்கிறதே என்ற ஆச்சரியத்தில் அண்மையில்தான் நான் ஒரு வாசகனாக, ஒரு எழுத்தாளனாக அங்கு போனேன். சென்னையில் இருக்கிற அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்த பெரிய நூலகம். அரசு நூலகம் என்றாலே வாடகை கட்டடத்தில் அதுவும் பழைய கட்டடத்தில் இயங்கும் எந்த வசதியும் இருக்காது, போதிய புத்தகங்கள் மட்டுமல்ல, வெளிச்சம், காற்றுக்கூட இருக்காது என்ற நம்முடைய கற்பனையைப் பொய்யாக்குகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
சமணர் படுக்கை, மதுரை காஞ்சி, வைகை நதி, கண்ணகி நீதியை நிலைநாட்டிய இடம், பாண்டியர்களின் தலைநகரம், மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழா, நாயக்கர் மகால், தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாரியம்மன் குளம், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, இலக்கியம் வளர்த்த மண் என்று மதுரைக்குப் பல அடையாளங்கள், பெருமைகள் இருக்கின்றன. வரலாற்று அடையாளங்களோடு, நிலவியல், பண்பாட்டு, இலக்கிய அடையாளங்களோடு மற்றுமொரு அறிவுசார் அடையாளமாகச் சேர்ந்திருப்பது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரம்மாண்ட கட்டடம், நுழைவுவாயிலில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் மொழியின் அடையாளங்களான பழந்தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காகச் செய்யப்பட்டிருக்கும், திருநங்கைகளுக்காகச் செய்யப்பட்டிருக்கும் வசதிகள், பார்வை குறைபாடு உடையவர்கள் படிப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள், அரிய நூல்கள், சிறுவர்கள் பிரிவு, அறிவியல் பிரிவு, தமிழ், ஆங்கில இலக்கிய நூல்களின் பிரிவு, கலைஞர் பிரிவு, போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கான பிரிவு, கூட்ட அரங்கம், ஆய்வரங்கம், வாசகர்களுக்கான வசதிகள், வெளிச்சம், செண்ட்ரல் ஏசி, நகரும் படிகட்டுகள், வண்ணமயமான விளக்குகள், ஸ்டார் ஹோட்டலில் இருப்பது மாதிரியான ஷோபாக்கள் என்று ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியப்படுத்தினாலும் - எல்லாவற்றையும்விட எனக்கு முக்கியமானதாக இருந்தது வேலை நாட்களில் மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் பேர் வருகை தருகிறார்கள், சனி, ஞாயிறுகளில் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் பேர் வருகை தருகிறார்கள் என்பதுதான். வருகிறவர்களில் ஒன்றிரண்டு சதவிகிதம் பேர்தான் படிக்கிறார்கள். நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் வேடிக்கைப் பார்ப்பதற்காக வருகிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது. அது உண்மைதான். ஒரு நூலகத்தை வேடிக்கைப் பார்ப்பதற்காக ஒரு நாளைக்கு ஒன்பதாயிரம் பேர் வருகை தந்த நூலகம் வேறு உலகில் இருக்கிறதா? முப்பது நாட்களில் ஒரு லட்சத்து முப்பத்து மூன்று பேர் வருகை தந்திருக்கிறார்கள். உலக அதிசயம்தான். கேட்பதற்கே நம்ப முடியாத விஷயம். ஆனால் உண்மை, நிஜம்.
ஒரு நூலகக் கட்டடத்திற்குள் வாழ்நாளில் ஒரு முறைகூடச் செல்லாதவர்கள் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள்? நூலகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதுகூடப் பல பேருக்கு இன்றுவரை தெரியாது. அதிசயமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஒரு நூலகத்திற்குள் மூன்று மணி முதல் நான்கு மணி நேரம்வரை செலவிடுவது, புத்தகங்களைக் கண்குளிரப் பார்ப்பது, எடுத்துப் பார்ப்பது, புத்தகத்தின் அட்டையைத் தடவி புரட்டிப் பார்ப்பது, புத்தகங்களின் வாசனையோடு இருப்பது என்பது அதிசயம். அந்த அதிசயத்தைக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. வேடிக்கைப் பார்ப்பதற்காகவாவது, செல்ஃபி, போட்டோ எடுப்பதற்காகவாவது நூலகத்திற்குள் படைபடையாகத் தமிழ் மக்கள் வருகிறார்களே. ஆச்சரியம்தான். இப்போது நூலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். நாளை நூலகத்தைப் பயன்படுத்துவார்கள். போட்டித் தேர்வு எழுதுகிறவர்கள் நூலகத்தைச் சௌகரியத்துடன் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து கல்லூரி மாணவர்கள், பத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பேருந்துகளில், வேன்களில் வந்துபோகிறார்கள். ஒரு நூலகம் சுற்றுலாத் தலமாக மாறி இருப்பதை முதன்முறையாக உலகம் கண்டிருக்கிறது. அதைக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சாதித்திருக்கிறது. நூலகத்தை, புத்தகங்களை வேடிக்கைப்பார்ப்பதற்காக மக்கள் வருவது முக்கியமான பண்பாட்டு மாற்றம்.
நூலகத்தின் நுழைவு வாயிலில் இருக்கிற கலைஞரின் சிலையின் முன், கலைஞரின் நூலகப் பிரிவிற்குள், கலைஞரின் அரிய புகைப்படங்கள் வருகிற திரையின் முன், கலைஞர் நேரில் நம்மோடு பேசுகிற மாதிரி இருக்கிற காட்சித் திரையின் முன் நின்று, உட்கார்ந்து செல்ஃபி நிழற்படம் எடுத்துக்கொள்வதற்காக நீண்ட வரிசை காத்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்தபோது கலைஞர் இறப்புக்குப் பின்புதான் பெரும் புகழ் ஈட்டியிருக்கிறார் என்பது தெரிந்தது. அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கலைஞர் தன் எழுத்தால், தன் பேச்சால், தான் இயற்றிய சட்டத்தால் நிலைபெற்றிருப்பார் என்று தோன்றியது.
படிப்பும், நூலகமும் ஒருநாளில் பலன் தருவதில்லை. அறிவு வளர்ச்சி, கலாச்சார மாற்றம் ஒரு நாளில், ஒரு மாதத்தில் ஏற்பட்டுவிடுவதில்லை. ஒரு நாட்டுக்கான வரலாறு மட்டுமல்ல, கல்வியும், அறிவும் நூலகத்திற்குள்தான் இருக்கிறது. மனிதர்கள் இறந்துவிடுவார்கள். நல்ல புத்தகங்களுக்கு என்றுமே மரணமில்லை. மரணமிலா பெருவாழ்வைப் பாதுகாக்கிற நூலகத்திற்கும் பெரு வாழ்வுதான். மரணமிலா செல்வத்தைப் பாதுகாப்பதும், பலரும் அதை பயன்படுத்த வைப்பதும்தான் அரசின், சமூகத்தின் கடமை. நாம் அடுத்தடுத்து வரும் தலைமுறைக்குச் சேர்த்துவைத்திருக்கிற சொத்து.
நூலகம் கட்டுவது பெரிதல்ல, அதைப் பராமரிப்பதுதான் பெரிது. சவாலானது. தமிழ்நாடு அரசு நூலகத்தை நன்றாகப் பராமரிக்கிறது என்றால் தமிழ்ச் சமூகப் பண்பாட்டை, கலாச்சாரத்தை, அறிவைப் பாதுகாக்கிறது என்று அர்த்தம். சென்னை, மதுரை என்று மேம்பட்ட நூலகத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசு கோவையிலும் இதுபோன்ற ஒரு அதிசய நூலகத்தை உருவாக்க வேண்டும். ‘அறிவிற் சிறந்த தமிழ்நாடு’, ‘நூலகத்தில் சிறந்த தமிழ்நாடு’ என்பதற்கு நூலகமே சாட்சியாக இருக்க வேண்டும். நிகழ்கால சமூகத்திற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கும் நாம் செய்யவேண்டிய அரிய, உயரிய பணி.
தி இந்து தமிழ் - 26.08.2023
அருமையான பதிவு நன்றி சார். இப்படி ஒரு நூலகம் கோவைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு