ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஐயா – இமையம்.
       அலுவலகத்திலிருந்து வந்த வேகத்திலேயே கதவைத் தட்டினான் கந்தசாமி. கதவு திறக்கப் படாததால் விடாமல் கதவைத் தட்டினான். “ந்தா வந்துட்டன்” சொல்லிக்கொண்டே வந்த காமாட்சி கதவைத் திறந்தாள். “எதுக்கு இம்மாம் நேரம்?”
       கந்தசாமி பதில் சொல்லவில்லை. ஆனால் எரித்துவிடுவது மாதிரி காமாட்சியைப் பார்த்தான். விர்ரென்று வீட்டிற்குள் போனான். கயல்விழியும், வேல்விழியும் தொலைக்காட்சியின் முன் படுத்து சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் “ராவும் பகலும். டி.வி.பாக்குற வேலதான். இருங்க ஒரு நாளக்கி டி.விய ஒடச்சிப் போடுறன்.” கத்தினான். பிள்ளைகள் இரண்டும் எழுந்து நின்றன. காமாட்சி தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்தாள். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் வேகமாகப் போனான்.
       அலுவலகத்திலிருந்து தாமதமாக என்று வர நேர்கிறதோ, அதிகாரி அவனை என்று அதிகமாக திட்டுகிறாரோ அன்று வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம்வரை கத்துவான் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் காமாட்சி  வாயைத் திறக்காதது மட்டுமல்ல, அறைக்குள் போன கந்தசாமியிடமும் போகவில்லை.
       “எழுந்திருங்க. சாப்புட்டுட்டு சீக்கிரம் படுங்க” பிள்ளைகளிடம் சொன்னாள். வேல்விழியும், கயல்விழியும் காமாட்சி சொன்னதைக் காதில் வாங்காமல் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.
       முகம், கை, கால் என்று கழுவிக்கொண்டு, கைலியைக் கட்டிக்கொண்டுவந்த கந்தசாமி பிள்ளைகள் இரண்டும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். “இருவத்திநாலு மணிநேரமும் டி.வி.யே பாத்துக்கிட்டு இருங்க. உருப்பட்டுடலாம். நோட்டுப் புத்தகத்த தொடுற பழக்கமே இல்ல. நாளக்கே டி.வி. கனக்ஷன நிறுத்துறன்.” கத்தினான்.
       கந்தசாமி கத்திய வேகத்தில் இரண்டு பிள்ளைகளுடைய கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. அழுதுகொண்டே எழுந்து நின்றன. பிள்ளைகளுடைய கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவனுக்கு மனம் மாறிவிட்ட மாதிரி இருந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்துகிற மாதிரி “ஒரு நேரம் டி.விய பாத்தமா, ஒரு நேரம் படிச்சமான்னு இருக்க வாணாமா? மணி ராத்திரி பதினொன்னு. இன்ன முட்டுமா பொம்பள புள்ளைங்க டி.வி. பாப்பாங்க? ஒங்கம்மா அதிர்ஷ்டம் செஞ்சவ. நாள் பூராவும் வீட்டுல குந்திக்கிட்டு டி.வி. பாக்குறா. சீரியல் பாக்குறா. நல்ல அதிர்ஷ்டமான நேரத்தில அவ அப்பன் அவளப் பெத்திருக்கான். நீங்க அப்பிடியா பொறந்து இருக்கிங்க?” என்று கேட்டான்.
“நீ பெத்த தருதலைங்க டி.வி. பாக்குறதுக்கும் எங்கப்பன் என்னெப் பெத்ததுக்கும் என்னா சம்பந்தம்?” காமாட்சி கேட்டதும் கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது.
“நீ டி.வி. பாக்குறதாலதாண்டி எம் புள்ளைங்களும் டி.வி. பாக்குது?”
“நீ பெத்த குட்டிவுளுக்கு ஒண்ணுமே தெரியாது பாரு? அப்பன வித்துத் தின்னுடுவாளுங்க. பேரு வச்சிருக்கிறத பாரு. வேல்விழி, கயல்விழின்னு. திரிஷா, நயன்தாரான்னு வைக்காம. பேரு வைக்கிறதால தமிழ் வளந்திடுமா?” காமாட்சி லேசாக சிரித்தாள்.
“வாய மூடுறியா?” வேகமாகக் கேட்டான் கந்தசாமி.
“எதுக்கு இம்மாம் நேரம்? ஆபிசரு திட்டிட்டாரா?”
       காமாட்சி வாயைத் திறப்பதற்காகவே காத்திருந்த மாதிரி “ஆபிசரு உங்கப்பனா? நேரத்திலியே வீட்டுக்குப் போடான்னு சொல்ல?” எரிந்து விழுந்தான்.
       கந்தசாமி கோபப்பட்டதை பொருட்படுத்தாமல் “என்னிக்கும் உள்ளதுதான? இன்னிக்கென்ன புதுசா? வேலக்கின்னு போன நாளிலருந்து சனி, ஞாயிறுலயும் தினம் ராத்திரி பத்து மணி கச்சேரிதான”. அவள் சொன்னதை அவன் காதில் வாங்கவில்லை. தரையில் கிடந்த பாயைப்பார்த்து “இது ஏன் இங்க கெடக்கு?” என்று கேட்டான். காமாட்சியும்-சரி வேல்விழியும், கயல்விழியும் சரி வாயைத் திறக்கவில்லை கந்தசாமி கோபத்தில் பானையைத் திறந்து யானையைத் தேடுவான்’ என்பது அவர்களுக்குத் தெரியும்.
       “இது ஏன் இங்க கெடக்கு? அது ஏன் இங்க கெடக்கு?” என்று கண்ணில்பட்ட பொருள்களையெல்லாம் தூக்கிதூக்கி இடம்மாற்றிப் போட்டான். காமாட்சி, கயல்விழி, வேல்விழி என்று மூன்று பேரையும் திட்டினான். “மூணு பொட்டச்சிங்க இருக்கிற வீடு மாதிரி தெரியல. குப்பக் காடா கெடக்கு.” கோபத்திலேயே படுக்கிற அறைக்குள் போய் உட்கார்ந்துகொண்டான். யாராவது வந்து என்ன வேண்டும், சாப்பிடுகிறாயா என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஒருவரும் அந்த அறைக்குள் வரவில்லை. ஒரு வார்த்தையும் பேசவில்லை. வேறுவழியின்றி தானாகவே “ஏய் இங்க வா” என்று கூப்பிட்டான்.
காமாட்சி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அவளை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்துவிட்டு வீம்புடன் "ஒரு சொம்பு தண்ணி கொண்டா" அதிகாரமாகச் சொன்னான்.
காமாட்சி ஒரு வார்த்தையும் பேசவில்லை. தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"ஒரு கிளாஸ் கொண்டா."
காமாட்சி இயந்திரம் மாதிரி ஒரு தம்ளரைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
"முட்டக்கிட்ட இருக்கா."
"இல்லெ."
"நீ இருக்கிற வீட்டுல எப்பிடி இருக்கும்? ஒண்ணும் இருக்காது. நீ மட்டும்தான் இருப்ப. அதுவும் சாப்புடுறதுக்கு."
                        காமாட்சி வாயைத்திறக்கவில்லை. அவளுக்கு நின்றுகொண்டிருப்பதா, அந்த இடத்தைவிட்டு போவதா என்றும் தெரியவில்லை. நின்றுகொண்டிருந்தாலும் திட்டுவான், போனாலும் திட்டுவான் என்பதால் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தாள்.
"எதுக்கு நிக்குற?"
காமாட்சி வாயைத்திறக்கவில்லை.
"முறுக்குகிறுக்கு ஏதாச்சும் இருக்கா?"
"இல்லெ."
"ஊருகா?"
காமாட்சி வாயைத் திறக்கவில்லை.
"வேற என்னா இருக்கு?"
"சோறு. குழம்பு. ரசம் சூடா இருக்கு."
"அந்த மண்ணயெல்லாம் நீயே தின்னு. முன்னால நிக்காத. போ. எட்டெ." கத்தினான்.
"ஆபிசரு திட்டிட்டாரா?"
"எட்டப் போறியா இல்லியா?"
"என்னாச்சி?"
"எட்டப் போவணும்." வேகமாக சொல்லிவிட்டு எழுந்து ஆணியில் மாட்டியிருந்த பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பிராந்தி பாட்டிலை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். பாட்டிலைத் திறந்து கொஞ்சம் பிராந்தியை தம்ளரில் ஊற்றினான். சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து தம்ளரிலிருந்த பிராந்தியில் ஊற்றினான். தம்ளரை எடுத்து ஒரே மூச்சாக பிராந்தியைக் குடித்தான்.
"பிராந்திய குடிக்கத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?" சீண்டுகிற மாதிரி காமாட்சி கேட்டாள். கந்தசாமி பதில் பேசவில்லை. அவளைப் பார்க்கவுமில்லை.
"என்னா புதுசா இருக்கு?"
"புதுசுமில்ல. பழசுமில்ல. போ எட்ட." கத்தினான்.
"நடு வீட்டுல குந்திகிட்டுத்தான் பிராந்தி குடிப்பியா? வயசுக்குவர மாதிரி ரெண்டு பொட்டப் புள்ளை இருக்கிற வீட்டுல."
"சனியன் மாதிரி பேசிக்கிட்டு இருக்கக் கூடாது. எட்டப் போவணும்?"
"ஆபிசரு கண்டபடி திட்டிப்புட்டாரா?"
"கல்லா மண்ணா பொறந்திருக்கணும். மனுசனா பொறந்திருக்கக் கூடாது. பொறந்திட்ட பின்னால எந்த வேலைக்கி வேணுமின்னாலும் போவலாம். பியூன் வேலைக்கி மட்டும் போவக் கூடாது" கந்தசாமியின் குரல் உடைந்துவிட்டது. கண்களும் லேசாக கலங்கிவிட்டன. அதைப் பார்த்து காமாட்சி பதறிப்போனாள்.
        சாதாரணமாக அதிகாரி திட்டிவிட்டாலோ, கோபமாக பேசிவிட்டாலோ அன்று அரைமணிநேரம், ஒரு மணிநேரம் அதையே சொல்லிப் புலம்புவான். மந்திரித்துவிட்ட கோழிபோல ஆடுவான். எவ்வளவு கோபமாக இருந்தாலும், கண் கலங்க மாட்டான். ஆனால் இன்று அவனுடைய குரலும் மாறிவிட்டது. கண்களும் கலங்கிவிட்டன. மாதத்திற்கு ஒரு முறை, இரண்டுமுறை என்று எப்போதாவது குடித்துவிட்டு வருவான். புதுப்பழக்கமாக இன்று வாங்கிக்கொண்டுவந்து வீட்டில் குடிக்கிறான். அதிகாரி அதிகமாகத் திட்டியிருக்க வேண்டும். கோபப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த காமாட்சி "அதிகாரியா இருக்கவங்க முன்னபின்னதான் பேசுவாங்க. இன்னிக்கா பாக்குற. எங்கியோ இருக்கிற கோவத்த எங்கியோதான் காட்டுவாங்க. அவுங்களுக்கு எம்மாம் பிரச்சனயோ" சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னாள். கந்தசாமிக்கு சற்று தள்ளி உட்கார்ந்தாள். அவள் சொன்னதை, உட்கார்ந்ததைப் பொருட்படுத்தாமல் யாருக்கோ சொல்வது மாதிரி "அதிகாரியா இருக்கவங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல. அதிகாரியான மறுநாளே செத்திடும்போல இருக்கு. அதிகாரத்துக்கு மனசு இல்ல. உசுரு இல்ல. கல்லு. அடுத்தவன் மண்டய ஒடைக்கிற கல்லு" அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். பிறகு பிராந்தி பாட்டிலை எடுத்து கொஞ்சம்போல தம்ளரில் ஊற்றி. அடுத்து தண்ணீரை எடுத்து ஊற்றினான். தம்ளரை எடுத்து ஒரே மடக்காக பிராந்தியைக் குடித்தான்.
"இன்னிக்கு என்னா ஆச்சி ஆபிசுல?"
"ஒண்ணும் ஆவல. எட்டப் போ" கந்தசாமி ஓங்கி தரையில் அடித்தான். பிறகு உடைந்துபோன குரலில் சொன்னான்: "ஐயா, மணி ஆயிடிச்சின்னு சொன்னதுதான். அதுவும் எனக்காக சொல்லல. அப்ப அவன் என்னெ பாத்த பார்வ இருக்கே. பீயகூடய யாரும் அப்பிடி பாக்க மாட்டாங்க. செத்திடலாம்போல இருந்துச்சி."
"அதிகாரியா இருக்கவங்க முன்னபின்னதான் இருப்பாங்க. அதெல்லாம் பாத்தா சோறு திங்க முடியுமா?" காமாட்சி சொன்னதுதான். சட்டென்று கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது. "ஒனக்கென்ன சொல்லிப்புட்டு டி.வி.பாத்துக்கிட்டு வீட்டுல குந்தியிருப்ப. கதவுக்கு முன்னால நாள் பூராவும் எப்ப மணி அடிப்பான்னு காவ காத்துக்கிட்டு நாய்க்குட்டி மாதிரி நிக்குறவனுக்கில்ல தெரியும்."
"எந்திரிச்சி வந்து சோத்தத்தின்னு. ஆறிடப்போவுது. புள்ளைங்களும் இன்னும் சாப்புடல."
காமாட்சி சொன்னதைக் காதில் வாங்காத கந்தசாமி "சில நேரத்தில பஸ்ஸில, லாரியில, அடிப்பட்டு செத்திடலாம்ன்னு இருக்கு. யாண்டா உசுரோட இருக்கம்ன்னு இருக்கு" நொந்துபோன குரலில் சொன்னான்.
"என்னா பேசுற நீ? நீ செத்துப்புட்டா ரெண்டு பொட்டக் குட்டிவுள வச்சிக்கிட்டு நான் எங்கப்போறது?"
கந்தசாமி ஒன்றும் பேசாமல் பிராந்தி பாட்டிலையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.
"அப்பா வந்ததும் சாப்புடுறன்னு ரெண்டு குட்டிவுளும் சாப்புடாம குந்தியிருக்காளுவ. வா. வந்து சோத்தத் தின்னு. மணி பதினொன்னுக்குமேல ஆயிப்போச்சி."
"புள்ளைங்கள சாப்புட வைக்காம புடுங்கிக்கிட்டு இருந்தியா?" கோபமாகக் கேட்டான். பட்டென்று எழுந்து வேல்விழி, கயல்விழி இருந்த இடத்திற்கு வந்தான். "சாப்புடாம எதுக்கு குந்தியிருக்கிங்க? சாப்புடுங்க. இப்பத்தான் அப்பன்மேல பாசத்த காட்டுறிங்களா?" வேகமாகக் கேட்டான். காமாட்சியைக் கூப்பிட்டு சாப்பாடு போடச் சொன்னான்.
"நீயும் சாப்புடு" என்று சொன்ன காமாட்சியை முறைத்துப்பார்த்தான். அவள் எதிர்த்துப் பேசாமல் பிள்ளைகளுக்கு மட்டும் சாப்பாடு போட்டு வைத்தாள். "சாப்புட்டு சீக்கிரம் படுங்க" வேகமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்குவந்து உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் காமாட்சி வந்தாள்.
கந்தசாமி தம்ளரில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றினான். பிறகு தண்ணீரை ஊற்றி, தம்ளரை எடுத்து ஒரே மூச்சாக பிராந்தியைக் குடித்தான்.
"எதுக்கு ஒரே முட்டா குடிக்கிற? இதோட போதும். மிச்சத்த வை. நாளக்கிக் குடிச்சிக்கலாம்."
கந்தசாமி வாயைத்திறக்கவில்லை.
"இது எம்மாம் ரூவா?"
"எர நூறு."
"யே அப்பா, ரேசன் கடயில திருட்டுத்தனமா விக்கிற அரிசியில ஒரு மூட்ட வாங்கலாமாட்டம் இருக்கு. ஒரு மாசத்து சோத்துக்கு வரும்."
காமாட்சி சொன்னதை கந்தசாமி காதில் வாங்கவில்லை. எதிரிலிருந்த பிராந்தி பாட்டிலை, தண்ணீர் சொம்பை, தம்ளரை மாறிமாறிப் பார்த்தான். திடீரென்று கோபம் வந்த மாதிரி சொன்னான். "எள வயசுதான் முப்பதுக்குள்ளாரதான் இருக்கும். எல்லாரயும் ஆட்டிப்படைக்கிறான். போன் பேசுனா பட்டுன்னு முடிக்க மாட்டான். நான் ஃபைல் உள்ள பேட வச்சிக்கிட்டே நிக்கணும். பேட வச்சிட்டு போன்னு கையால, கண்ணால சாடகூட காட்ட மாட்டான். அவன் சொன்னாதான் நான் பேட வச்சிட்டுப்போவ முடியும். நானா என்னிஷ்டத்துக்கு வச்சிட்டுப் போவ முடியாது. கையெழுத்துப் போட்ட பேட எடுத்துக்கிட்டுப் போவ முடியாது. போன் பேசிக்கிட்டே ஆள பாப்பான். ஆனா, பேட வச்சிட்டுப்போ, எடுத்துக்கிட்டுப்போன்னு மட்டும் சொல்ல மாட்டான். என்னெ பாக்காத மாதிரியே போன்ல பேசிக்கிட்டு இருப்பான். நான் நிமிந்து பாக்கமுடியாது. சத்தம்வர மாதிரி நடக்க முடியாது. அவன் போன்ல பேசி முடிக்கிறவர எந்த வேலயும் செய்யக் கூடாது. சத்தம் வந்திடும். அதனால நின்னது நின்னப்படியேதான் நிக்கணும். அவன் பேசுறத கேக்காத மாதிரி நிக்கணும். அப்பிடி நிக்குறப்ப கோவம் வரும்பாரு. செத்திடலாம்போல இருக்கும்."  அவனுடைய கண்கள் லேசாக கலங்கிவிட்டன. அதைப்பார்த்த காமாட்சி ஒரு அடி தூரம் நெருங்கி கந்தசாமியை ஒட்டி உட்கார்ந்தாள். என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தாள். எதையாவது சொல்லப்போய் அதிலிருந்து சண்டையை ஆரம்பித்துவிடுவானோ என்ற பயமும் இருந்தது. அதேநேரத்தில் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் அவளால் முடியவில்லை.
"பெரிய படிப்பு படிச்சதால மத்தவங்கள ஆட்டிப்படைக்கிறாரு. கலெக்ட்டருக்கு அடுத்தப்படியில இருக்கிறவரு அப்பிடித்தான் இருப்பாரு. நாம்பதான் பெருசா படிக்கல. நாம்ப பெத்த புள்ளைங்களாவது நல்லா படிக்கும்ன்னா, நீ பெத்துதுங்க சாப்புடுறதுக்குத்தான் லாயக்கு." காமாட்சி சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் கந்தசாமிக்கு முகம் மாறிவிட்டது. கோபம் வந்துவிட்டது.
"நீ பெரியபடிப்பா படிக்க வேண்டியதுதான, ஒங்கப்பன் ஒன்னெ படிக்க வச்சானா?"
காமாட்சிக்கும் கோபம் வந்துவிட்டது.
"எங்கப்பன எதுக்கு இழுக்கிற?"
"ஆறு ஏழு கப்பலு வாங்கித்தான்னு கேக்கத்தான்."
"ஆறு-ஏழு கப்பலு வாங்கித்தந்தா  எங்கப்போயி ஓட்டுவ? கடலு ஒங்கப்பன் வீட்டுதா?" காமாட்சி கேட்டதும் கந்தசாமிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. வேண்டும் என்றே முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான். அப்போது அறைக்குள் வந்த வேல்விழி "காலயில நூறு ரூவா வேணும்ப்பா. நோட்டு வாங்கணும்" என்று சொன்னதும் கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது. "பணமும் இல்ல. கிணமும் இல்ல போ" முகத்திலடிப்பது மாதிரி அவன் சொன்னதுதான் வேல்விழியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அழுதுகொண்டே போனாள். அதைப்பார்த்த காமாட்சிக்கு லேசாக கோபம் வந்துவிட்டது.
"எதுக்கு அவள முறச்ச? புள்ளை அழுதுகிட்டு போறா பாரு."
கந்தசாமி பதில் பேசவில்லை. கொஞ்சம் பிராந்தியைக் குடித்தான்.
"பத்து நாளாவே ஒம்போக்கு சரியில்ல. தெனம் குடிக்கிற. இன்னிக்கி வாங்கியாந்து வச்சிக்கிட்டு வீட்டுலியே குடிக்கிற. கேட்டா அடிப்ப. ஒதப்ப. ஒங்கப்பன் வாங்கி தந்தானான்னு கேப்ப. பிராந்தி வாங்கிதர்ற மாமனாரு எந்த நாட்டுல இருக்கான்? என்று சொல்லும்போதே காமாட்சிக்கு கண்கள் கலங்கிவிட்டன. "தெனம் தெனம் குடிச்சி குடலு வெந்துப்போயி நீ செத்திட்டா, ரெண்டு பொட்டப் புள்ளைய வச்சிக்கிட்டு நான் நடுத்தெருவுல நிக்கணுமா?" கோபமாகக் கேட்டாள்.
 "அப்பகூட நான் சாவுறனேன்னு கவல இல்லெ" கோபமாகக் கேட்டான். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒரு பிரச்சனையைப் பேசினாள்.
"கிரகம் சரியில்லயோ என்னமோ. ஜாதகத்த பாத்திடன். பக்கத்துத் தெருவுல ஒருத்தரு நல்லா பாக்குறாராம். எல்லாரும் சொல்றாங்க" ரொம்ப அக்கறையோடு சொன்னாள்.
"சும்மா இருடி பிச்சக்காரன் மவள. நல்லத சொல்றன்னு சொல்லி புது பிரச்சனய கிளப்பிவுட்டுட்டுப் போயிடுவானுவ. அப்பறம் புதுத் தலவலியா ஆயிடும். அவன் சொன்னத நம்பிகிட்டு இருக்கிற வேலயவுட்டுட்டு அலயணும். நாட்டுல உள்ளவங்களுக்கெல்லாம் நல்லத சொல்றன்னு சொல்ற எல்லாப் பயலுவுளும் ஜோசியம், ஜோசியம்ன்னு சொல்லி கத்திக்கிட்டு தெருவுலதான் அலயுறானுவ." லேசாக சிரித்தான்.
"போதயில எதயாச்சும் உளறாத." முகத்தைக் கோணிக்காட்டினாள்.
"ஜோசியக்காரன் சொல்றதெல்லாம் நடந்தா நாட்டுல அப்பறம் என்னா இருக்கு? ஆபிசரு பயலுவோ மோசமா இருக்கானுவன்னு சொன்னா, இவ ஜோசியக்காரன இயிக்கிறா."
"எல்லா ஆபிசலயும் ஒன்னெ மாதிரி ஆளுங்க இருப்பாங்கதான."
"இருக்காங்க."
"ஒங்க ஆபிசரு மட்டும்தான் மோசமா?"
"நாட்டுல உள்ள எல்லா அதிகாரிவுளும் ஒரே மாதிரிதான் இருப்பானுங்க. நாட்டுல உள்ள எல்லா பியூனுக்கும் ஒரே வேலதான். சாவுற வேல." கந்தசாமியினுடைய குரலில் அவ்வளவு கடுமை ஏறியிருந்தது.
"அவுங்கயெல்லாம் ஒன்னெ மாதிரிதான் புலம்பிகிட்டு, தெனம் பிராந்தி குடிச்சிக்கிட்டு இருக்காங்களா?" கோபமாகக் கேட்டாள் காமாட்சி.
"பலருக்கு கல்லு மனசு. சிலருக்கு கூழு மனசு."
"மனசுதான் எமன். சாவு. குழப்பிக்காத. எயிந்திரிச்சி வந்து சோத்தத் தின்னுட்டு தூங்கு. தூங்கிட்டா எல்லாம் சரியாப்போயிடும். அதிகாரியா இருக்குறவங்களுக்கு எரக்கப்படுற மனசு இல்ல." சொல்லிவிட்டு எழுந்துநின்றாள். கந்தசாமி எழுந்து சாப்பிட வருவான் என்று எதிர்பார்த்தாள். அவன் எழுந்திருப்பது மாதிரி தெரியவில்லை. காமாட்சி கேட்கிறாளா இல்லையா என்றுகூட பார்க்காமல் ரொம்பவும் களைப்படைந்தவன் மாதிரி சொன்னான் "ஒரு கிளார்க்கு எதயோ தப்பா எழுதி வச்சியிருப்பான்போல இருக்கு. அதுக்கு நான் என்னா செய்ய முடியும்? அவனுக்குத் தமிழ் எழுதத் தெரியுமா, தெரியாதான்னு கேட்டு எங்கிட்ட கத்துறான். பேட தூக்கிக் கெடாசுறான். அப்ப எம் மனசே செத்துப்போச்சி. யாண்டா இந்த வேலயில இருக்கம்ன்னு இருக்கு. நிமிசத்துக்கு நிமிசம் தேள் கொட்டுற மாதிரி கொட்டிக்கிட்டேயிருக்கான்."
"எதுக்கு சின்ன விசயத்தயெல்லாம் பெருசு பண்ற? எல்லா ஆபிசலயும் இப்பிடித்தான இருக்கும்? எழுந்திரிச்சி வா."
"வயிறு மட்டும் பசிக்காம இருந்தா எவங்கிட்டயும் கையக்கட்டி நிக்க வேண்டியதில்ல. ஐயா வேலயா இருக்காரு, ஐயா கேம்புக்குப் போயிட்டாரு. இப்பிடி ஒரு நாளக்கி ஐயா - ஐயான்னு எத்தன வாட்டி சொல்றது? ஐயாங்கிற வார்த்தய தவுத்து வேற வாத்த வாயில வர மாட்டங்குது. யாரப்பாத்தாலும் நான் ஐயா, ஐயான்னுதான் சொல்லணும்." போதை ஏறஏற அவனுடைய பேச்சு – குழறுவதற்குப் பதிலாக நிதானமாக இருந்தது.
கந்தசாமியினுடைய பேச்சு புதிதாக இருந்தது. அதேநேரத்தில் பனிரெண்டு வருசமாக செய்கிற வேலைதானே, சொல்கிற வார்த்தைதானே. புதிதாக ஒன்றுமில்லையே. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்ற எண்ணமும் இருந்தது. அதை சொன்னால் இப்போதிருக்கிற மனநிலையில் திட்டுவான். அடிப்பதற்கும் வருவான் என்பதால் காமாட்சி வாயை மூடிக்கொண்டு நின்றாள். தொலைக்காட்சியின் சத்தம் அதிகமாக கேட்கவே சட்டென்று வேல்விழியும், கயல்விழியும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்திற்குப் போனாள். "மணி என்னாடி ஆவுது? ராத்திரி நேரத்தில ஊருக்கே கேக்குற மாதிரி எதுக்கு சத்தமா வைக்கிறிங்க? டி.வி.யும் பாக்க வாணாம். ஒண்ணும் பாக்க வாணாம். படுங்க. இல்லாட்டி அப்பாகிட்ட சொல்லிடுவன்" கோபமாக சொன்னதோடு வேகமாகப்போய் தொலைக்காட்சியை நிறுத்தினாள். அதே வேகத்தில் திரும்பி கந்தசாமியிடம் வந்தாள்.
"நேரமாவறது தெரியலியா? காலயில வேலக்குப் போவ வாணாமா"
"ஒன்னோட சோத்த நீயே தின்னுக்க" வீம்பாக சொல்லிவிட்டு பிராந்தி பாட்டிலை எடுத்து தம்ளரில் கவிழ்த்தான். சொம்பிலிருந்த தண்ணீரை கொஞ்சம்போல ஊற்றி, ஒரே மடக்காக குடித்தான். காரமான சாப்பாட்டை சாப்பிட்ட மாதிரி மூன்று நான்குமுறை வாயை ஊதினான்.
"நாத்தம் குடல புடுங்குது. இந்த சனியன எப்பிடித்தான் குடிக்கிறியோ" காமாட்சி திட்டினாள். அவள் திட்டியதை காதில் வாங்கவில்லை.
"அதிகாரிய பாக்க வர ஒவ்வொருத்தனும். கலக்ட்டர் வர மாதிரிதான் வருவானுவ. வந்த வேகத்திலியே உள்ளாரவுடச் சொல்லி கேப்பானுவ, ‘உட்காருங்க. ஐயாகிட்ட சொல்றன்’னு சொன்னா கேக்க மாட்டானுங்க. ஒதுங்கி நில்லுங்கன்னா நிக்க மாட்டானுவ. ‘நீயென்ன பெரிய ஆபிசரா? உள்ளாரவுட மாட்டியா’ன்னு வாயால கேக்க மாட்டானுவ. அப்பிடி கேக்குற மாதிரி கண்ணாலியே முறச்சிப்பாப்பானுங்க. வரவனுவோ கொடுக்கிற அட்டய, பேரு எழுதி கொடுக்கிற சீட்ட உள்ளாரப்போயி டேபிள்மேல வச்சிட்டு வந்தா, அதிகாரிக்கு எப்ப மனசு இருக்கோ அப்ப, மணி அடிச்சி ஒவ்வொரு ஆளா கூப்புடுவான். உள்ளார போன ஆளு வெளிய வந்தாதான நான் அடுத்த ஆள உள்ளார வுடமுடியும். அதுவும் அடுத்த ஆள அனுப்புன்னு அதிகாரி மணிய அடிச்சா மட்டும்தான் அனுப்ப முடியும். கதவ வேகமாகத் தொறந்தாலும் போச்சி. சத்தமா கதவ சாத்தனாலும் போச்சி. தவறிப்போய் லேசா சத்தம் வந்துட்டா போச்சி. அப்ப ஒரு பார்வ பாப்பான்பாரு. அச்சு அசல் நல்ல பாம்புதான். இது வெளிய நிக்குற நாயிவுளுக்குத் தெரியாது. வந்த வேகத்திலியே உள்ளார வுடு-வுடுன்னு கேப்பானுவ. ‘ஐயா சொன்னாதான் வுடமுடியும். நானா யாரயும் உள்ளார வுடமுடியாதி’ன்னு சொன்னா எவன் கேக்குறான்? தூங்குறப்பவும் மணிஅடிக்கிற சத்தம் காதில கேட்டுக்கிட்டே இருக்கு. அந்த சத்தம் பெரிய சொமயா இருக்கு. ஒருத்தனுக்கும் மனுசனா இருக்கிறது என்னான்னு தெரிய மாட்டேங்குது. எங்கிட்ட பணமுமில்ல. அதிகாரமுமில்ல. அந்த காலத்தில புள்ளைக்கி சோறு போடுறது மட்டும்தான் பெத்தவங்க வேல. இப்ப ஒண்ணாவது ரெண்டாவதுக்கே லட்சம் லட்சமா கொடுக்க வேண்டியிருக்கு. அதனாலதான் இந்த வேலயில இருக்கன். வாங்குற சம்பளம் பள்ளிக்கூடத்துக்கே பத்தலன்னா சோறு எப்பிடி திங்குறது? குடும்பம் எப்பிடி நடத்துறது?" கந்தசாமி தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.
கந்தசாமியினுடைய பேச்சையும், செய்கையையும் பார்த்தால் என்றும் இல்லாத அளவுக்கு  இன்று அவனுடைய அதிகாரி மோசமாகத் திட்டியிருக்க வேண்டும். அவனை சமாதானப்படுத்த விரும்பினாள்.
“இந்த அதிகாரி எப்ப மாறுவாரு?”
“இந்த ஐயா போனா, இன்னொரு ஐயா வருவாரு. இல்லாட்டி ‘அம்மா’ வருவாங்க. அதிகாரி மாறுறதால என்னா ஆவப்போவுது? ஒண்ணுமில்ல. அதிகாரிகள மட்டுமா நான் ‘ஐயா’, ‘அம்மா’ன்னு சொல்லணும்? அதிகாரிய பாக்குறதுக்கு வர்றவங்களும் எனக்கு ‘ஐயா’தான். ‘அம்மா’தான். எனக்கு எல்லாருமே ஐயாதான். வேற வார்த்த எங்கிட்ட இல்லெ.”
"என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன ஆச்சி" கேட்டுக்கொண்டே கந்தசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கையைப்பிடித்து "வா. சோத்தத் தின்னு" எழுப்ப முயன்றாள். அவன் கையை உதறிவிட்டான்.
"நீதான் இப்பிடி சொல்ற. குறிஞ்சிப்பூ தெருவுல இருக்கிற சரோஜா புருசனும் ஒ.ஏ.வாதான் தாலூகா ஆபிசில இருக்காரு. தெனம் முந்நூறு நானூறுன்னு வரவங்ககிட்ட புடுங்கியாந்து வண்டி, மெத்த வீடுன்னு இருக்காரு. புள்ளைங்கள கான்வெண்டுல படிக்க வைக்கிறாரு. ஒனக்கு துப்பு இல்லெ. பயந்துகிட்டு ஒருத்தன்கிட்டயும் கைய நீட்டுறதில்ல." காமாட்சி சொல்லி வாயைக்கூட மூடவில்லை. அதற்குள் கந்தசாமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ. காட்டுக்கத்தலாக கத்தினான்.
"சும்மா இருடி பிச்சக்காரன் மவள. வரவன் போறவனெல்லாம் ஒங்கப்பனா, இந்தா வச்சிக்கன்னு நோட்டு நோட்டா எடுத்து கொடுத்திட்டுப்போறதுக்கு? வர்ற நாயெல்லாம் பிச்சக்கார நாயிவோதான். ‘போறப்ப கவனிச்சிட்டுப் போங்க’ன்னு ரெண்டு மூணுவாட்டி சொல்லணும். அப்பிடி ஒரு ஏழெட்டுபேர்கிட்ட சொன்னா அதுல ஒருத்தன் ‘இந்தா அஞ்சிரூவா’ன்னு கொடுப்பான். அதயே கோடி ரூவாயக் கொடுக்கிற மாதிரி கொடுப்பான். இதுல கட்சிக்காரங்க, எம்மானோ தேவலாம். நகர செயலாளரு, ஒன்றிய செயலாளரு, மாவட்ட செயலாளரு, எம்.எல்.ஏ, எம்.பின்னு வரவங்கதான் அம்பது நூறுன்னு தருவாங்க."
"மத்த ஓ.ஏ. எல்லாம் எப்பிடி சம்பாரிக்கிறாங்க? வீடுகட்டுறாங்க, புள்ளைங்கள படிக்கவைக்கிறாங்க?" கோபமாகக் கேட்டாள் காமாட்சி. முன்பைவிட இப்போதுதான் கந்தசாமிக்கு கோபம் அதிகமாக வந்தது. வெறுப்புடன் அவளைப் பார்த்தான். பல்லைக்கடித்துகொண்டே சொன்னான்.
"போடி இவள. வரவன்கிட்டயெல்லாம் ‘ஒரு டீத்தண்ணிக்கி வழிப்பண்ணிட்டுப்போங்க. காபிதண்ணிக்கி கொடுத்திட்டுப் போங்க’ன்னு சொல்லி பல்ல இளிச்சிக்கிட்டு, தலய சொறிஞ்சிக்கிட்டு மத்தவங்க மாதிரி என்னால நிக்க முடியாது. அப்பிடி செய்யறவன்தான் ஒரு நாளக்கி நானூறு ஐநூறுன்னு சம்பாதிக்கிறான். இந்தா வச்சிக்கன்னு தானா வந்து யாராச்சும் கொடுத்தாதான் வாங்குவன். நானா போயி எவன்கிட்டயும் போயி கையேந்த மாட்டன். கொஞ்சம் காசு பணம் இருந்தா இந்த வேலய எப்பியோ வுட்டுத் தொலச்சிருப்பன்" பிராந்தி பாட்டிலைப் பார்த்தான். வெறும் பாட்டிலாக இருந்ததைப் பார்த்ததும் கோபம் வந்தது. "ஒரே சனியனா இருக்கு" என்று சொன்னான். அவனுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி "கோபப்பட்டு அதிகாரிகிட்ட அப்பிடி இப்பிடி நடந்துபுடாத, வேலய வுட்டு எடுத்துப்புட்டா அப்பறம் நாம்பதான் நடுத்தெருவுல நிக்கணும்" என்று சொன்னாள்.
"அதுக்காக நான் தெனம் தெனம் சாவணுமா? உசுரோட இருக்கிறதாலதான எல்லா அசிங்கமும், அவமானமும்? பேருதான் கவர்மண்டு வேல." அவனுடைய கண்கள் சிவந்து போயிருந்தது. கோபத்தில் உதடுகள் துடித்தன. அவனை சமாதானப்படுத்துவது மாதிரி காமாட்சி சொன்னாள்.
"நீ சொல்றபடி பாத்தா ஒலகத்தில யாராலயும் உசுரோட இருக்க முடியாது. எல்லாரும் மான வெக்கத்த வித்திட்டுத்தான் உசுரோட இருக்காங்க."
"எட்டப் போறியா? இல்லெ ஒத வாங்குறியா?" கோபமாகக் கேட்டான். அவன் கேட்டதைப் பொருட்படுத்தாத காமாட்சி நிதானமாகச் சொன்னாள்.
"ஒன்னெ ஒங்க ஆபிசரு திட்டுறாரு. ஒன்னோட ஆபிசர கலக்ட்டரு திட்டுவாரு. கலக்ட்டர மந்திரி திட்டுவாரு. மந்திரிய, மந்திரிக்கு மேல இருக்கிறவங்க திட்டுவாங்க.  இதுக்கெல்லாம் கவலப்பட்டா, வெக்கப்பட்டா ஆபிசரா, எம்.எல்.ஏ.வா மந்திரியா, இருக்க முடியுமா? நீ என்னெத் திட்டுறதில்லியா அப்பிடித்தான் உலகம் பூராவும். அவமானமில்லாத, அசிங்கமில்லாத வாழ்க்க ஒலகத்தில யாருக்கு இருக்கு?"
காமாட்சியை அதிசயமாகப் பார்த்தான். அவள்பேசியதை அவனால் நம்பவே முடியவில்லை. லேசுப்பட்டவளில்லை என்ற எண்ணம் மட்டும் உண்டானது. “நீயே பெரிய ஆபிசரு மாதிரிதான் பேசுற” என்று சொல்லத் தோன்றியது.  ஆனால் சொல்லவில்லை.
இப்ப புதுசா வந்திருக்கிற அதிகாரி பழய அதிகாரி மாதிரி ஒன்மூலமா பணம் வாங்குறதில்லியா?”
“வாங்குறதில்ல. படிப்படியா புரமோஷன்ல வர்றவங்கதான் அப்பிடி செய்வாங்க. இவுரு நேரடியா வந்தவரு. புதுசுல வாங்க மாட்டாரு. நாளானா பழகிக்குவாரு. பழக்கி வுட்டுடுவாங்க” வினோதமாக சிரித்தான் கந்தசாமி. காமாட்சிக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி சொன்னான்: “நான் வேலயில சேந்தப்ப இருந்ததவிட இப்ப கவர்மண்டு ஆபிசுலாம் ரொம்ப மோசமாயிடிச்சி. போகப்போக இன்னும் மோசமாயிடும்” ரொம்பவும் அலுத்துக்கொண்டான். அவனுடைய குரலில் அவ்வளவு கசப்பும் வெறுப்பும் நிறைந்திருந்தது.
காமாட்சி ஆர்வமாகக் கேட்டாள் “என்ன ஆளு?”
“தெரியல. பெரிய சாதியா இருந்தா வேலயில சேந்த அன்னிக்கே தெரிஞ்சிடும். தானாகவே சொல்லிடுவாங்க. மட்ட சாதியா இருந்தா வெளிய தெரியிறதுக்கு கொஞ்ச நாளாவும். தானாவும் சொல்லிக்கமாட்டாங்க.”
“நம்ப ஆளா இருந்தா கொஞ்சம் ஒத்தாசயா இருப்பாங்க”
காமாட்சி சொன்னதைக் கேட்டதும் கந்தசாமிக்கு அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது. “போடி லூசு. மத்த எனத்துக்காரனாச்சும் பேசுறதுக்கு முன்னபின்ன யோசிப்பானுவ. நம்பாளுவோதான் மோசம். சொந்த சாதின்னாலே மட்டரகமாதான் நடத்துவானுங்க. பேசுவானுங்க.”
“அப்பிடியுமா செய்வாங்க?” அப்பாவியாகக் கேட்டாள் காமாட்சி.
 "எந்த சாதியா இருந்தாலும் அதிகாரிங்க அதிகாரிங்கதான். பியூன் அப்பிடியா? அதிகாரிக்கி மட்டுமா நான் பயப்படணும். வரவன்போறவன் யாருன்னு தெரியுமா? அதனால் எதுக்கு ஊர்ச்சனியன்னு எல்லாரயும் ஐயான்னு சொல்லணும். ஒரு ஆள மணி அடிச்சி. மணி அடிச்சா ஒருத்தன் கூப்புடுவான்? “கந்தசாமிக்கு கண்கள் கலங்கிவிட்டன. லேசாக அழுதுகொண்டே சொன்னான். "அதிகாரியோட பொண்டாட்டி, புள்ளைக்கு மட்டும் நேரா நேரத்துக்கு எல்லாம் சரியா நடக்கணும். ஆனா பியூனுக்கு மட்டும் பொண்டாட்டி புள்ள வாணாம். சொந்த வேலன்னு ஒண்ணு இருக்கக் கூடாது."
கந்தசாமி அழுததைப் பார்த்ததும் காமாட்சிக்கு மனது மாறிவிட்டது.
"வாங்குற சம்பளமே போதும். நீ யாருகிட்டயும் பல்லக்காட்டிக்கிட்டு அஞ்சி பத்துக்கு நிக்க வாணாம். ஊர்ல நிலம் நீச்சின்னு இருந்தாக்கூட இந்த வேலய வுட்டுட்டுப் போயிடலாம். இருந்த ரெண்டு காணி நெலத்தயும் வித்துதான் இந்த வேலய வாங்குன?"
"எங்கப்பன்தான் அந்தகாரியத்த செஞ்சிப்புட்டான். காட்டுக்குப்போனமா வீட்டுக்கு வந்தமான்னு நான் பாட்டுக்கும் ராசா மாதிரி எவனுக்கும் கையக்கட்டிக்கிட்டு நிக்காம இருந்திருப்பன்."
"போன கதய எதுக்கு பேசுற? கையகட்டி நின்னாலும் அவமானப்பட்டு தல குனிஞ்சி நின்னாலும் கவர்மண்டு வேல வேணும்ன்னுதான எல்லாரும் அலயுறாங்க. லட்சம்லட்சமா லஞ்சம் கொடுத்து கவர்மண்டு வேல வாங்குறாங்க?"
"நான் கவர்மண்டுல வேல செய்யல. நெருப்புலதான் வேல செய்யுறன், வயிறுன்னு ஒண்ணு இல்ல, பசின்னு ஒண்ணு இல்லன்னா மனுசனுக்கு எந்த அசிங்கமும் இருக்காது."
"அந்த ரெண்டும் இல்லன்னா உலகம் ஏது? எந்திரிச்சி வா. சோத்த சாப்புட்டு படு. தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரியாப்போயிடும்” கந்தசாமியின் கையைப்பிடித்துத் தூக்கினாள் காமாட்சி.

       அம்ருதா – பிப்ரவரி 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக