வியாழன், 18 பிப்ரவரி, 2016

வீடும் கதவும் - இமையம்

வீடும் கதவும் - இமையம்
       பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும் எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. போன்போட்டு கேட்கலாமா என்று யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள் 'அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு' நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கிலிருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன் நின்றாள். வீட்டின் தோற்றம் அவள் முன்பு பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது. குழப்பத்தை உண்டாக்கிற்று. வீட்டின் எண்ணைப் பார்த்தாள்எண்பது என்றிருந்தது. வீட்டின் எண்ணும் அவளுக்கு மறந்து போயிருந்தது. பெயர்பலகை இருக்கிறதா என்று பார்த்தாள். சபாநடேசன் எம்.., எம்.எட்., ஆசிரியர் என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததைப் பார்த்ததும் 'இந்த வீடுதான்' என்று சொல்லிக்கொண்டே அழைப்பு மணி எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்து அழுத்தினாள். அப்போது வெளிநாட்டு நாய் ஒன்று அவளைப் பார்த்து முறைத்தது. நாயைப் பார்த்துப் பயந்தாள். இரண்டாவதுமுறை மணியை அழுத்தி சிறிது நேரம் கழிந்தபிறகுதான் கதவை திறந்தாள் ரேவதி. சகுந்தலாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு "பிரசிடண்டு மேடம் என்ன திடீர்னு வந்து நிக்குறாங்க?" என்று கேட்டு சிரித்தாள்.
"வீட்டு நெம்பரு மறந்துபோச்சி. அஞ்சாவது வீடுங்கிறது மட்டும்தான் ஞாபகத்தில இருந்துச்சி. ஒரு நிமிசம் டென்சன் ஆயிடிச்சி. என்ன நாயெல்லாம் புதுசா இருக்கு?"
"நாலுஅஞ்சு வருசம் கழிச்சி வந்தா அப்பிடித்தான். உள்ளார வா" என்று சொல்லி சகுந்தலாவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றாள் ரேவதி. ஷோபாவில் அருகருகே உட்கார்ந்துகொண்டனர்.
"என்ன திடீர்னு வந்து வாசல்ல நிக்குற? ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாது?"
"நான் உனக்கு போன் பண்ணிட்டுத்தான் வரணுமா" கோபம் வந்த மாதிரி சகுந்தலா கேட்டாள். "சீ, கழுத, நீ எப்ப வேணுமின்னாலும் வா. போ. திடீர்னு பாத்ததும் ஆச்சரியமா போச்சி. அதனாலதான் சொன்னன். என்னா சாப்புடுற?"
"ஒண்ணும் வாணாம். உங்கூட உட்காந்து ஒரு பத்து நிமிசம் தனியா பேசனா போதும். மனசு நெறஞ்சிடும்."
"காலேஜில படிக்கும்போது விடியவிடிய பேசினதெல்லாம் மறந்திட்டியாடி கழுத." ரேவதி உற்சாகமாக சிரித்தாள்.
"நீதான் எல்லாத்தயும் மறந்திட்ட. போன்போடுறதில்ல. நான் போட்டாலும் பேசுறதில்ல."
"உங்கிட்ட பேசாம நான் எங்கப்போறன்? கிளாஸ்ரூம்ல இருக்கும்போது போன் வந்தா நான் பேச மாட்டன்." என்று சொன்ன ரேவதி கேட்டாள். "திருடி, திடீர்னு வந்திருக்கியே என்னா விஷயம்? வந்தவ நேரா வீட்டுக்குள்ளார வரவேண்டியதுதான? எதுக்கு மணிய அடிச்சிக்கிட்டு நிக்குற?"
"நானும் அவுரும்தான் வரதா இருந்தம். கிளம்பும்போது திடீர்னு பீ.டி.. ஆபிசிலயிருந்து போன் வந்துச்சி. அதனால நீ போயிட்டு வந்திடு’ன்னு சொல்லிட்டாரு. அவரோட வந்தா கிளம்பு கிளம்புன்னு நச்சரிப்பாரு. உங்கிட்ட அஞ்சு நிமிசம்கூட பேசமுடியாது. நீ போயிட்டு வந்திடுன்னு சொன்னதுமே சரின்னு கிளம்பிவந்திட்டன்" உற்சாகமாகச்  சொன்னாள் சகுந்தலா. திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி "எங்க உங்க சார காணும்?" என்று கேட்டாள்.
"நீ என்ன பாக்க வந்தியா? அவரப் பாக்க வந்தியா?"
"உன்னதான் பாக்க வந்தன். எங்கன்னு கேக்கக் கூடாதா? உங்க சார நான் பிக்கப் பண்ணிக்கிட்டுப் போயிடுவன்னு நெனச்சியா?" சகுந்தலா வாய்நிறைய சிரித்தாள்.
"பிக்கப் பண்ணிக்கிட்டுப்போயன். சனியன் வுட்டுதின்னு போறன்" சிரித்த ரேவதி "பொண்ண பாத்திட்டு வரன்னு மெட்ராசுக்குப் போயிருக்காரு." என்று சொன்னாள்.
"நீயாவது வீட்டுல இருந்தியே அதுவே போதும்" என்று சொன்ன சகுந்தலா ஜவுளிக்கடை பையில் வைத்திருந்த சில்வர் தட்டை எடுத்து அதில் வாழைப்பழம், ஆப்பிள், வெற்றிலைப்பாக்கு, பூ, கல்யாணப் பத்திரிகை என்று ஒவ்வொன்றாக வைத்துகொடுத்தாள். தட்டை வாங்கிக்கொண்டே ரேவதி "யாருக்குடி கல்யாணம்? எனக்கு எதுக்கு வெளி ஆள் மாதிரி  பார்மாலிட்டிசு எல்லாம் செய்யுற?" என்று கேட்டாள். தட்டை வாங்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். ஆச்சரியப்பட்ட மாதிரி "நம்ப ரம்யாவுக்கா கல்யாணம்? போன வருசம்தான் பி.எட். முடிச்சிது. அதுக்குள்ளார எதுக்கு கல்யாணம்? சின்ன புள்ளைதான? வேல கிடச்சப்பிறகு செய்யவேண்டியதுதான?" அக்கறையுடன் கேட்டாள்.
"சொன்னன். கேக்கல. வேல வர்றப்ப வரட்டும். வர எலக்சினில ஜெயிக்க முடியுமோ முடியாதோ. பவர்ல இருக்கும்போதே கல்யாணத்த முடிக்கணும். அப்பதான் நல்ல கூட்டம் வரும். மரியாதயா இருக்கும்ன்னு சொல்லிட்டாரு. நானும் வேல முடிஞ்சா சரின்னு சொல்லிட்டன்."
"பையன் என்னா பண்றான்?" என்று கேட்ட ரேவதி கல்யாணப் பத்திரிகையைப் பிரித்து மாப்பிள்ளை பெயர் போட்டிருந்த இடத்தில் பார்த்தாள். "இன்ஞினியரா? நல்ல கம்பனியிலதான் வேலப்பாக்குறான். இன்ஞினியருக்கு இன்ஞினியர் பொண்ணுதான் பாப்பாங்க" என்று கேட்டாள்.
"முன்னதான் அப்பிடி. இப்ப இன்ஞினியர், டாக்டர், படிச்சவனெல்லாம் டீச்சருக்கு படிச்ச பொண்ணா இருந்தா பரவாயில்லன்னு சொல்லி அலயுறானுவ" சகுந்தலா சிரித்தாள்.
"சொந்தமா?"
"பிறத்திதான். பீ.டி.ஓ..ஆபிசில வேல பாக்குறவரோட சொந்தக்கார பையன். அவருக்குப்புடிச்சிடிச்சி. முடிச்சிட்டாரு."
"உனக்குப் புடிக்கலயா?"
ரேவதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் "நான் முன்னாடி வந்தப்ப இருந்ததவிட வீடு ரொம்ப மாறி இருக்கு" வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்.
"ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் மேல்மாடிய கட்டுனன். தரயயும் மாத்திட்டன். வீட்டயும் கொஞ்சம் ஆல்ட்டர் செஞ்சன். நீ அடிக்கடி வந்தாதான தெரியும்?" கோபித்துக்கொண்டாள் ரேவதி.
"நான் உன்ன பாக்க வந்து மூணு நாலு வருசம் இருக்குமா?"
"இருக்கும். மேடம் ரொம்ப பிசிதான். பிரசிடண்டு ஆயிட்டில்ல. அப்பிடித்தான் இருப்ப. அதிகாரத் திமிருடி உனக்கு" சகுந்தலாவின் தொடையில் லேசாக அடித்தாள்.
"பசங்க எப்பிடி இருக்காங்க?"
"பையன்தான் முன்னாடியே வேலக்கிப் போயிட்டான். உனக்குத் தெரியும். பொண்ணு இப்பதான் வேலக்கிப்போனா. ஆறு மாதம் இருக்கும். பழயகாலம் மாதிரி இல்ல. இன்ஞினியர் படிச்சவங்களுக்கு இப்ப வேல கெடக்கிறது பெரிய கஷ்டமா இருக்கு. இன்ஞினியரிங் ஏன் படிக்க வச்சமின்னு இருக்கு. டீச்சருக்கு படிக்கவச்சி இருக்கலாம். சம்பளமும் அதிகம். வேலயும் கம்மி." என்று ஆரம்பித்த ரேவதி தன்மகன் எப்படி படித்தான். எப்படி வேலைக்குப்போனான், எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று சொல்ல ஆரம்பித்தாள். பிறகு கல்லூரியில் படித்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், சகுந்தலாவும் சேர்ந்துகொண்டு கல்லூரியில் படித்த காலத்தைப் பற்றி, நண்பர்கள், பேராசிரியர்களைப் பற்றி பேச ஆரம்பித்தாள். இருவரும் மாறிமாறி தங்களுடைய கல்லூரி காலத்தைப்பற்றி பேசினார்கள். நேரம் பற்றிய கவனம் இருவரிடமுமில்லை. ஏதோ நினைவுக்கு வந்தமாதிரி "நான் கிளம்பட்டுமா?" சகுந்தலா கேட்டாள்.
"அதுக்குள்ளார என்னா அவசரம்?"
"நேரமாயிடிச்சி."
"ஒரு நேரமும் ஆவல. புருசன், புள்ளைன்னு இல்லாம இன்னிக்கித்தான் அதிசயமா ரெண்டு பேரும் ஒண்ணா உட்காந்து பேசிக்கிட்டிருக்கம். அதுக்குள்ளார போறாளாம்." சகுந்தலாவின் தலையில் கொட்டிய ரேவதி, "என்னடி தலயில பாதி முடிய காணும்?" என்று கேட்டாள்.
"வயசாவுதில்ல. சரி, நான் கிளம்பறன்."
"பிரசிடண்டுங்கிற திமிர்ல பேசிறியாடி நாய".
"பிரசிடண்டுதான். ஆனா எப்பவும்போல சோறுதான் ஆக்குறன். துணிதான் துவைக்கிறன். வீட்டு வேலதான் செய்யுறன்." சகுந்தலா சிரிக்க முயன்றாள். ஆனால் சிரிப்பு வரவில்லை.
"ரெண்டு பீரியடுதான ஜெயிச்ச?" சந்தேகப்பட்டது மாதிரி ரேவதி கேட்டாள்.
"ம்" என்று சகுந்தலா தலையை மட்டும் ஆட்டினாள். சகுந்தலாவின் முகம் வாடிப்போனதை பார்த்த ரேவதி கேட்டாள் "என்னாச்சி? எதுக்கு அவ்வளவு சலிப்பா சொல்ற?"
"பிரசிடண்டுதான். ஒம்போது வருசம் முடிஞ்சிப்போச்சி. பீ.டி.. ஆபிஸ், கலெக்ட்டர் ஆபிஸ்ன்னு இதுவர நான் எங்கியும் அதிகம் போனதில்ல. அவுருதான் போவாரு. வருவாரு."  சொல்லிவிட்டு அடுத்த சோபாவில் கிடந்த நாய் பொம்மையைப் பார்த்தாள். அது தன்னையே பார்ப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது.
"என்னடி சொல்ற சகுந்தலா?" ஆச்சரியமாகக் கேட்டாள் ரேவதி.
"நிசம்தான்."
"ஊராட்சிமன்ற அலுவலகம்ன்னு இருக்குமே அங்கியாச்சும் நீ போய் இருக்கியா?"
"இல்லெ."
"ஒரு நாளுகூட போனதில்லியா?" சகுந்தலா சொன்னதை நம்பாத மாதிரி கேட்டாள்.
"பொய்யா சொல்றன்? போனதில்ல. ஒம்போது வருசத்தில பிரசிடண்டு நாற்காலியில நான் உட்காந்ததில்ல." சிரித்தாள். சிரிப்பில் மகிழ்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை.
"ஆச்சரியமா இருக்கு?" ரேவதியின் குரல் மாறிவிட்டது. சகுந்தலா சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. கிண்டலாகக் கேட்டாள் "கையெழுத்தாவது நீ போடுவியா?"
"இல்லெ."
"பொய் சொல்லாதடி. "
"அவுருதான் போடுவாரு."
"உன் கையெழுத்தயா?" நம்ப முடியாத விசயத்தைக் கேட்ட மாதிரி வாய் அடைத்து போனாள் ரேவதி. "அதிசயம்தான்" என்று சொல்லிவிட்டு சகுந்தலாவின் முகத்தைப் பார்த்து கேட்டாள். "நூறு நாள் வேலத்திட்டம், கட்டடம் கட்டுறது, ரோடு போடுறது, தெரு விளக்குப்போடுறதுன்னு பணம் வருமே அதயெல்லாம் யாரு எடுப்பா?"
"அவுருதான்."
"கவர்மண்டு பணம் செக்காதான வரும்?"
"செக்க அவரே மாத்திடுவாரு."
"சத்தியமா?"
"ஆமாண்டி. இதுல என்னா புதுசா இருக்கு? நூத்தியெட்டு கேள்வி கேக்குற?"
"யாரும் கேக்க மாட்டாங்களா?"
"எதுக்கு?"
"கையெழுத்து போடுறதுக்கு, தலவர் சீட்டுல உட்காருறதுக்கு."
"பீ.டி.. ஆபிசலயும் சரி, பள்ளிக்கூடம், பேங்க்ன்னு எங்க போனாலும் அவரத்தான் தலவருன்னு சொல்லுவாங்க தெரியுமா?" வாய்விட்டு சிரித்தாள் சகுந்தலா.
"சத்தியமா?" சகுந்தலா சொல்கிற விசயங்களில் ஒன்றைக்கூட ரேவதியால் நம்ப முடியவில்லை.
"பொம்பள பிரசிடண்ட், கவுன்சிலரா, சேர்மேனா இருக்கிற எடத்தில எல்லாம் இப்பிடித்தான் நடக்கும். இது ஊரு உலகத்துக்கே தெரியும். ரகசியம் ஒண்ணும் இல்ல. பள்ளிக்கூடத்தில கொடியேத்தக்கூட அவுருதான் போவாரு. தெரியுமா? யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க."
"நீ என்னாதான் செய்வ?" கிண்டலாகக் கேட்டாள்.
"நாமினேஷன் கொடுக்கும்போது கூடப்போவன். அப்பறம் கவுண்டிங்குக்குப் போவன்." சகுந்தலா வாய்விட்டு சிரித்தாள்.
"நீ ஒண்ணும் கேக்க மாட்டியா?"
"என்னா கேக்குறது? அவுருதான் இருபத்தி நாலு மணிநேரமும் அலயுறாரு. பணம் புரட்டுறாரு. ஊருஆளுங்கள எல்லாம் சரிகட்டுறாரு. பிராந்தி வாங்கித் தராரு. என்னால இதெல்லாம் செய்ய முடியுமா?" லேசாக சிரித்த சகுந்தலா சட்டென்று உற்சாகமாகி  "ஊருசனங்க திட்டுறதயும் வாங்கிக்கிகுவாரு. சங்கடப் படமாட்டாரு" என்று சொன்னாள். சிரித்தாள்.
"கஷ்டம்தான்" என்று சொன்ன ரேவதி "கூல்ட்ரிங்க் குடிக்கிறியா?". சகுந்தலா என்ன பதில் சொல்கிறாள் என்று கேட்காமல் எழுந்துபோய் பிரிட்ஜைத் திறந்து சாக்லேட் டப்பாவை எடுத்துவந்து கொடுத்தாள். ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில்போட்டு மென்றுதின்ற சகுந்தலா "நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் முடியாது. இன்னொரு சாக்லேட் எடுத்துக்க. நீ சொல்ற எதயும் என்னால நம்ப முடியல. நம்பாம இருக்கவும் முடியல." என்று சொன்னாள்.
“இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.”
“என்னா கூல் ட்ரிங்க் குடிக்கிற? கோக், ஃபேண்டா?”
“மோர் இருந்தா கொடு. இல்லன்னா எலுமிச்சை ஜுஸ்.”
“அதெல்லாம் வுட்டு பத்து வருசத்துக்குமேல ஆயிடிச்சி. இப்பலாம் யாரு வந்தாலும், யார் வீட்டுக்குப் போனாலும் கூல்ட்ரிங்க்தான்.”
“வேணாம். ஏப்பம் ஏப்பமா வரும். நெஞ்ச கரிக்கும்”
       சகுந்தலா நாய் பொம்மையைப் பார்த்தாள். அதனுடைய கண்களைப் பார்த்தாள். பிறகு ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். பிறகு ரொம்பவும் களைப்படைந்துவிட்ட மாதிரி சொன்னாள். "எங்க கடன் வாங்குறாரு. என்னா செலவு செய்றாரு, எதுவும் எனக்குத் தெரியாது. நானும் கேக்குறதில்ல. மீறிக் கேட்டா இதுல ஒனக்கு வேல இல்ல’ன்னு சொல்லுவாரு. நானும் சனியன் நமக்கு எதுக்குன்னு கேக்குறதில்ல. எப்பவும் போல எனக்குண்டான வேல என்னவோ அத செஞ்சிக்கிட்டிருக்கன்."
"சரி, ஓட்டுக் கேக்கவாவது நீ போனியா இல்லியா?"
மொட்டையாக சொன்னாள். "இல்லெ."
"அப்பிடியா? நிசமாவா?" கேட்டதையே திரும்பத்திரும்ப கேட்டாள். சகுந்தலா எவ்வளவு சொல்லியும் ரேவதி நம்பவில்லை.
"அப்பறம் எப்பிடி ரெண்டு முற ஜெயிச்ச?"
"உள்ளுர்தான? அவுரு பாத்துக்குவாரு."
       சகுந்தலாவின் முகம், கை கால்கள், கட்டியிருந்த புடவை என்று ஒவ்வொன்றாகப் பார்த்த ரேவதி சட்டென்று நினைவுக்கு வந்த மாதிரி "என்னடி இவ்வளவு நரச்சிப்போச்சி? சாட்டசாட்டயா நீட்டுநீட்டா முடியும் இருக்கும், எல்லாம் கொட்டிப்போயி எலி வாலாட்டம் இருக்கு. தல முடிய வச்சிக்கிட்டுத்தான காலேஜில பெரிய ராணி மாதிரி சுத்துன? எல்லாப் பயலயும் ஒம் பின்னாடி சுத்தவுட்ட?" என்று சொல்லிவிட்டு சகுந்தலாவின் சடையை எடுத்துப் பார்த்தாள்.
 லேசாக சிரித்த சகுந்தலா சொன்னாள். "வயசாவுதில்ல. நீயும் நானும் காலேஜில படிச்சி இருபத்தி அஞ்சு வருசமாயிடிச்சி தெரியுமா? நீ டீச்சர், டை அடிப்ப."
       தலைக்கு டை அடிக்கிற விசயத்தை சகுந்தலா சொன்னதும் பேச்சை மாற்றினாள் ரேவதி. "உங்க வீட்டுக்காரரு நல்ல ஆளுதான?"
"எத்தன வருசம் கழிச்சி கேக்குற? எலக்ஷனில நின்னதிலிருந்துதான் கொணம் கெட்டுப்போயி நிக்குறாரு. ஊரு ஆளுங்களுக்கு பிராந்தி வாங்கி கொடுக்கிறன்னு ஆரம்பிச்சி இப்ப அவுரும் தினம் குடிக்கிறாரு. வர எலக்ஷன்ல எங்க யூனியன் பொம்பளக்கின்னு மாறப்போவுதாம். அதனால அடுத்தமுற சேர்மனுக்கு நிக்கணும். அதுக்கு கவுன்சிலர் ஆவணும்ன்னு இப்பவே மூணு ஊர்ல கட்சிப் பக்கமே ஓட்டுப்போடுங்க. ஊருக்கு இவ்வளவுன்னு மொத்தமா பணம்தரன். காலனிக்கும் ஊருக்கும் தனித்தனியா கோவில் கட்டிதரன்’னு பேசிக்கிட்டு இருக்காரு. பிராந்தி வாங்கி தந்துகிட்டு இருக்காரு."
“இந்த மாதிரி வர பணத்தில கோவில் கட்டலாமா?”
“ஊரு ஒலகத்துல எல்லாம் அப்பிடித்தான நடக்குது?”
"நான் நிக்க மாட்டன்னு சொல்ல வேண்டியதுதான?" அக்கறையுடன் சொன்னாள் ரேவதி.
"சொன்னா கேட்டாதான? பிரசிடண்டுக்கு நின்னாலும், கவுன்சிலருக்கு நின்னாலும் நான் சும்மாதான? பேருக்குத்தான எம் பேரு. பிரசிடண்டுன்னும், கவுன்சிலருன்னும் அவுரத்தான கூப்புடப்போறாங்க. சாராய போதயவிட அதிகார போத பெருசு தெரியுமா?"
"ஆச்சரியமா இருக்கு. மத்த பொம்பள பிரசிடண்டு எல்லாம் எப்பிடி?"
"பி.எஸ்ஸி படிச்ச எனக்கே இந்த நெலமன்னா, படிக்காத, பத்தாவது, பன்னிரண்டாவது படிச்ச பொம்பளங்க எப்படி இருப்பாங்க? வெறும் பேருதான்” சகுந்தலா சத்தம்போட்டு சிரித்தாள்.
"நீ சொல்ற எதுவும் எனக்கு புரியல. இரு வரன்" என்று சொல்லிவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றாள். அடுப்பைப் பற்றவைத்தாள். பால் குண்டானை எடுத்து அடுப்பில் வைத்தாள். பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து ஊற்றி கொதிக்க வைத்தாள்.
       ரேவதி சமையலறைக்கு போனதும் சகுந்தலா வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். பிளாட் டி.வி., பெரியபெரிய சோபா, அழகான ஷோகேஸ், விலை உயர்ந்த சன்னல் திரைச்சீலைகள், இரண்டு ஏ.சி.அறை, கிரானைட் தரை, டைனிங் டேபிள், ட்ரஸிங் டேபிள் என்று வீடு பார்ப்பதற்கு அமர்க்களமாக இருந்தது. எழுந்து நின்று வீட்டை சுற்றிப் பார்த்தாள். அழகாக இருந்தது. கடைசியாக சமையலறைக்கு வந்தாள். மாடுலர் கிச்சன். பிரமாதமாக இருந்தது. சமையலறைக்கு எவ்வளவு  செலவு செய்தாய் என்று கேட்கத் தோன்றியது. தவறாக நினைப்பாள் என்பதால் எதுவும் கேட்காமல் ரேவதிற்கு பக்கத்தில் வந்து நின்றுகொண்டு "உங்க சார் எப்பிடி இருக்காரு? எப்ப வருவாரு?" என்று கேட்டாள்.
"நல்லா இருக்காரு" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
"எதுக்கு இழுத்தாப்ல சொல்ற?"
"ஒண்ணுமில்ல." ரேவதியின் முகம் கோணிற்று. அதைப் பார்த்த சகுந்தலா "எனக்கு தெரிஞ்சி உங்க சார் நல்லவர்தாண்டி" என்று சொன்னாள்.
"ஆமாம்." அழுத்தமாக சொன்னாள். பிறகு சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் உயிரில்லை. கொதித்துக்கொண்டிருந்த பாலின்மீது டீத்தூளை கொஞ்சம் போட்டாள். பொங்கிவிடாமலிருக்க அடுப்பைக் குறைத்து வைத்தாள். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரேவதியைப் பார்த்த சகுந்தலா கேலியாக சொன்னாள். "நம்ப ரூம்மேட்டுலியே நீதான் அழுத்தம் புடிச்சவ. எதயும் வெளிய சொல்ல மாட்ட. நீ என்ன மாதிரி ஓட்ட வாயும் இல்ல. நீ பெரிய திருடின்னு நம்பகூட படிச்ச எல்லாருக்குமே தெரியும்" கலகலவென்று சிரித்தாள். ரேவதியும் சிரித்தாள். ஆனால் சத்தம் வெளியே வரவில்லை.
       டீ நன்றாக கொதித்துவிட்டது தெரிந்ததும் அடுப்பை நிறுத்தினாள் ரேவதி. டீயை வடிக்கட்டினாள். சர்க்கரை போட்டாள். இரண்டு மூன்றுமுறை நன்றாக ஆற்றினாள். இரண்டு தம்ளர்களில் ஊற்றினாள். ஒரு தம்ளரை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள்.
"மத்தவங்க டீ போட்டு தந்து அத வாங்கி குடிக்கிறப்ப இருக்கிற சுகமே தனிதான்" என்று சொல்லிவிட்டு டீயை ஒருவாய் குடித்தாள். பிறகு சிரித்துக்கொண்டே "உனக்கு ஒண்ணும் சக்கர வியாதி இல்லியே." என்று கேட்டாள்.
"இருக்கு, நீ வந்ததால சக்கரய கொறச்சிப்போட மறந்திட்டன்."
"அதான பாத்தன். வாத்தியாரு, பேராசியருகளுக்கு சக்கர நோவு இல்லாம இருக்காதே” சகுந்தலா சிரித்தாள்.
"மகளுக்கு கல்யாணம் கட்டப்போற. ஆனா உனக்கு அந்த காலத்தில இருந்த குசும்பு பேச்சு மட்டும் போவல. கழுத" ரேவதி சிரித்தாள். பிறகு "வா. ஹாலுக்குப்போவம்" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்து முன்புபோலவே ஷோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பின்னாலயே வந்த சகுந்தலாவும் முன்புபோலவே உட்கார்ந்துகொண்டு டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
"என்ன திடீர்னு டல்லாயிட்ட?"
       ரேவதி வாயைத் திறக்கவில்லை. தம்ளரிலிருந்த டீயையே பார்த்தாள். பிறகு ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த  சபாநடேசனுடைய போட்டோவைப் பார்த்தாள். திரும்பவும் டீ தம்ளரைப் பார்த்தாள். சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை. சந்தேகப்பட்ட சகுந்தலா கேட்டாள் "என்னாச்சி?"
       சிறிதுநேரம் ரேவதி எதுவும் பேசவில்லை. ஒரு வாய் டீ குடித்தாள். அங்குமிங்குமாக பார்த்தாள். அதனால் மிகவும் முக்கியமான கேள்வியை கேட்பது மாதிரி சகுந்தலா கேட்டாள் "நீ சந்தோசமா இருக்கியாடி?"
"இல்லாம என்ன?" மொட்டையாக பதில் சொன்னாள் ரேவதி. பெரிதாக மூச்சுவிட்டாள். நிதானமான குரலில் சொன்னாள்.
"நான் முதன்முதலா வேலக்கிப் போனப்ப எல்லாம் சேத்து தொளாயிரத்து பத்து ரூபாதான் சம்பளம். இப்ப அறுவத்தி நாலாயிரம். சம்பளம் கூடியிருக்கு. வீடு மூணுமாடி ஆயிருக்கு. வீட்டுல பொருள் கூடியிருக்கு. ரெண்டு ஏ.சி இருக்கு. கார் இருக்கு. பேங்கில பணம் இருக்கு. ரெண்டு புள்ளையும் வேலக்கிப்போயிடிச்சி. லாக்கர்ல நக இருக்கு. வீட்டு வாசல்ல வெளிநாட்டு நாய் கட்டியிருக்கு. அதுக்கு மட்டும் ஒருநாளக்கி இரநூறு ரூபா செலவு ஆகுது. எல்லாம் இருக்கு. காலேஜில நீயும் நானும் சிரிச்சமே அந்த சிரிப்பு மட்டும் இல்ல" பேச்சை நிறுத்திவிட்டு ஒரு வாய் டீ குடித்தாள். என்ன தோன்றியதோ பாதி தம்ளரில் டீ இருக்கும்போதே, குடிக்கப் பிடிக்காதவள் மாதிரி தம்ளரை தரையில் வைத்தாள். சகுந்தலாவின் கையை எடுத்து மடியில் வைத்துகொண்டு உடைந்துபோன குரலில் சொன்னாள்.
"பணம், நக, காரு, வீடு, புருசன், புள்ளைங்க… எல்லாம் இருக்கு. ஆனா சந்தோசம் மட்டும் இல்ல." ரேவதியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றதைப் பார்த்து பதறிப்போன சகுந்தலா "என்னடி சொல்ற? எதுக்கு கண்ணு கலங்குது" என்று கேட்டாள். சகுந்தலா கேட்டது, தன்னையே பார்ப்பது என்று எதையும் கவனிக்காத ரேவதி ரொம்பவும் தாழ்வான குரலில் சொன்னாள்.
"நாம்ப படிக்கிறப்ப எங்கப்பா மாசத்துக்கு இருவத்தி அஞ்சு ரூபாதான் மணியார்டர் அனுப்புவாரு. உனக்குத்தெரியும். அந்த பணத்த வாங்குறப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா? மனசு நெறஞ்சியிருக்கும். அறுவத்தி நாலாயிரம் வாங்குறப்ப அது இல்ல." ரேவதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் வந்தது. சகுந்தலாவைப் பார்க்காமல் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள். "அப்பா அம்மாகூட புள்ளையா இருக்கோம்பாரு, அதோட முடிஞ்சி போவுது சந்தோசம். சிரிப்பு. வாழ்க்க"
ரேவதியினுடைய பேச்சும், அழுகையும் சகுந்தலாவை ஆச்சரியப்பட வைத்தது. பொதுவாக அதிகம் பேசக்கூடிய ஆளில்லை. அதிகம் சிரிக்க மாட்டாள். சத்தம்போட்டுக்கூட பேச மாட்டாள். பத்து வார்த்தைப் பேசினால் ஒரு வார்த்தைதான் பேசுவாள். அவளா அழுகிறாள், அவளா கூடுதலாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியப்பட்ட சகுந்தலா மேலும் நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து ரேவதியினுடைய கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள் "என்னடி ஆச்சி உனக்கு?"
"காலயில எங்கம்மா வந்திட்டுப் போச்சி. கவர்மண்டு ஆஸ்பத்திரியில சுகர் மாத்திர வாங்க வந்துச்சாம்." சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சொன்னாள். "எங்கம்மா சுகர் பேஷண்டு தெரியுமா? நான் அறுவத்தி நாலாயிரம் சம்பளம் வாங்குறன். எங்கம்மா கவர்மண்டு ஆஸ்பத்திரியில இலவச மாத்திரைக்கு வரிசயில பொழுது முழுக்க நிக்குது" ரேவதியின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.
"நீ வாங்கி தரவேண்டியதுதான?"
"பணம்?"
"என்னடி சொல்ற?"
"உண்மயத்தான் சொல்றன். எங்கிட்ட ஏது பணம்?" கண்ணீரை மறைப்பதற்காக தொலைக்காட்சியைப் பார்த்தாள். புதிதாக பார்ப்பது மாதிரி ஷோ கேஸிலுள்ள பொருட்களைப் பார்த்தாள். வீட்டிலுள்ள மற்றப் பொருட்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் பார்க்கப்பார்க்கத்தான் அவளுக்கு கண்ணீர் கூடுதலாக வந்தது.
"சம்பளப் பணத்த என்னா செய்யுற?"
".டி.எம்.கார்டு அவர்கிட்டதான் இருக்கு."
"நீ பணத்த எடுத்துத்தர வேண்டியதுதான?"
"தபால்ல ஏ.டி.எம்.கார்டு வந்த அன்னிக்கிப் பாத்ததுதான். இந்த பத்து வருசத்தில அத எடுத்துக்கிட்டுப்போயி நான் ஒரு நாளும் பணம் எடுத்ததில்ல. அதோட பின் நெம்பர்கூட எனக்குத் தெரியாது." முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள். முந்தாணையால் கண்களைத் துடைத்தாள். சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை. ரேவதியின் பேச்சு சகுந்தலாவை அமைதியாக்கிவிட்டது. என்ன பேசுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் போட்டிருந்த வளையல்களை மேலேயும் கீழேயும் நகர்த்திவிட்டபடியே ரேவதி சொன்னாள்.
".டி.எம்.கார்டு வந்த இந்த பத்து வருசத்தில என்னோட சம்பள பணத்த நான் மொத்தமா ஒருமுறகூட கண்ணால கண்டதில்ல. ஸ்கூல்ல சம்பளம் வாங்குறப்ப இருந்த சந்தோசம் இப்ப இல்ல. சம்பளம் வாங்குற அன்னிக்கி மதியானம் சாப்பிட்டதுமே சாப்பாட்டு டப்பாவ, கேரியர கழுவி வெயில்ல காய வச்சிடுவம். சம்பளத்த வாங்கி மூணு முற எண்ணுவன். அப்பறம் ஹேன்ட் பேக்குல வச்சா திருடன் அடிச்சிட்டுப் போயிடுவான்னு சாப்பாட்டு டப்பாவுல, கேரியருல வச்சி எடுத்தாருவன். ஸ்கூல்லயிருந்து வீடுவரவரைக்கும் சாப்பாட்டுக் கூடை நெனப்பாவே இருக்கும். இப்ப எதுவுமில்ல. அப்ப லோன் போட்டா அஞ்சாயிரம் ஆறாயிரம்தான் வரும். அத ஒரு கோடி ரூவாயா தூக்கிகிட்டு வரமாரி வருவன். எல்லா டீச்சர்சும் அப்பிடித்தான் செய்வாங்க. இப்ப அறுவத்தி நாலாயிரம் சம்பளம், எதுக்கு பணம்ன்னு ஆயிப்போச்சி. தொளாயிரத்து பத்து ரூவா கொடுத்த சந்தோசத்த அறுவத்தி நாலாயிரம் கொடுக்கல" ரேவதியின் கண்கள் கலங்கின.
"காரணமில்லாம எதுக்கு நீ அழுவுற?" ரேவதியின் தோளில் தட்டினாள் சகுந்தலா.
"சம்பளத்தில ஒரு எட்டணா மாத்தி இப்ப சொல்ல முடியாது தெரியுமா? சம்பளம் அக்கவுண்டுல ஏறுன மறுநிமிசமே மெசேஜ் வந்துடும். அதுவும் அவருக்குத்தான் வரும்."
"உன்னோட செல் நெம்பர் என்னாச்சி?"
"முதல்ல அவருதான் செல்போன் வாங்குனாரு. அப்பறம் நாலுஅஞ்சி வருசம் கழிச்சித்தான் எனக்கு வாங்குச்சி. அதனால அவரோட நெம்பர பேங்குல கொடுத்தாச்சி."
       ரேவதி தொலைக்காட்சியைப் பார்த்தாள். பிறகு ஹாலை ஒரு பார்வை பார்த்தாள். சுவரில் சிரித்தபடி தொங்கிக்கொண்டிருந்த சபாநடேசனுடைய போட்டோவைப் பார்த்தாள். அடுத்து மகனுடைய மகளுடைய போட்டோக்களைப் பார்த்தாள். போட்டோக்களில் எல்லாரும் நன்றாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். ரேவதி சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை. அப்போது சோர்ந்துபோய் சகுந்தலா சொன்னாள்.
"நம்ப ரூம்மெட்டு நாலு பேர்ல நீ ஒருத்திதான் டீச்சராப்போயி வசதியா, சந்தோசமா இருக்கன்னு நெனச்சன்."
"தெனம் இருபது ரூபா பஸ்ஸிக்குன்னு டேபிள்மேல வச்சிடுவாரு. அதுவும் சில்லரயா?"
"நீ கூடுதலா கேக்க வேண்டியதுதான? உனக்கு துப்பு இல்லெ."
"டீ குடிக்க, காபி குடிக்க காசுதாங்கன்னா?" ரேவதி கேட்டவிதம், அவள் ரொம்பவும் கோபமாக இருக்கிறாள் என்பதை காட்டியது. சிறிதுநேரம் பேசாமல் இருந்துவிட்டு சகுந்தலா கேட்காமலேயே சொன்னாள்.
"முன்னெல்லாம் ஸ்கூலுக்கு பொடவக்காரங்க சம்பளம் வாங்குற அன்னிக்கி வருவாங்க. இரநூறு ரூவா பொடவய முந்நூறு ரூவான்னு சொல்லுவம். ரெண்டு மூணு பொடவ எடுத்தா இரநூறு முந்நூறு ரூபா ரகசியமா கிடைக்கும். அதத்தான் நெறயா டீச்சர்ஸ் அப்பா அம்மாவுக்கு கொடுப்பாங்க. இல்லன்னா தம்பி, தங்கச்சிக்குக் கொடுப்பாங்க. நானும் அப்பிடி செஞ்சியிருக்கன். எனக்குன்னு எடுக்கிற பொடவய எங்கம்மாவுக்கு தம்பி பொண்டாட்டிக்கி கொடுத்திருக்கன். இப்ப அந்த மாதிரியெல்லாம் செய்ய முடியாது. மளிகக்கட, துணிக்கடன்னு எல்லாத்திலியும் கம்ப்யூட்டர் பில் வந்துடுச்சி. காபிக்குக்கூட கம்ப்யூட்டர் ‘பில்’தான். ஒரு ரூவா மாத்தி சொல்ல முடியாது. பில் எங்கன்னு கேப்பாரு."
"நீ பணம் கேட்டா உங்க சார் கொடுக்க மாட்டாரா?"
"டீ குடிக்க, காபி குடிக்க, தலவலி மாத்திர வாங்க காசு கொடுங்கன்னு நான் கேக்கணுமா? நான் கேக்க மாட்டன்" வீம்பாக சொன்னாள் ரேவதி. "அவுரு வாத்தியாருதான? மனுசங்கள புரிஞ்சிக்க வாணாம்? அப்பறம் என்னா வாத்தியாரு?" கோபமாகக் கேட்டாள்.
"நீ எதுக்கு சாதாரண விசயத்துக்கெல்லாம் அழுவுற, பணம் கொடுங்கன்னு நீ கேட்டு அவரு தரமுடியாதின்னு சொன்னாரா?" சகுந்தலா அதிகாரமாகக் கேட்டாள்.
"இல்ல. எவ்வளவு கேட்டாலும் எண்ணி டேபிள்மேல வச்சிடுவாரு."
"அப்புறமென்ன?"
"நீயே எடுத்துக்கன்னு சொல்ல மாட்டாரு. எண்ணாம வைக்க மாட்டாரு. அதுதான் சிக்கல்." ரேவதியின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.
"நீ ஏன் அவர்கிட்ட கேக்குற? நீயே எடுத்துக்க வேண்டியதுதான? அப்பா அம்மாவுக்கு கொடுக்கிறதுக்கு இல்லாத பணம் வேற எதுக்கு இருக்கு?"
"உனக்கு புரியல சகுந்தலா. அது ஒரு ஃபீலீங், சில விசயங்கள பேசாம, நெனக்காம இருக்கிறதுதான் மனசுக்கு நல்லது. மீறி நெனச்சா என்னென்ன பூதமெல்லாம் வருமோ. நீ என்னோட பிரண்ட். உங்கிட்ட உண்மய சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறன் என்னோட பணம்தான். ஆனா நான் செலவு செய்ய முடியாது. இந்த வீடு எம் பேர்லதான் இருக்கு. மூணு பிளாட்டும் எம் பேர்லாதான் இருக்கும். பேங்கில லோனும் எம் பேர்லதான் இருக்கு”  என்று சொன்ன ரேவதி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு நிதானமாக சொன்னாள்.
       "ஊருக்காரங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, வேண்டியானவங்கன்னு யாராச்சும் வீட்டுக்கு வந்திட்டுப்போவும் போது ‘இந்தா இத பஸ்சுக்கு வச்சிக்குங்க’ன்னு ஒரு பத்து ரூவாய என்னிஷ்டத்துக்கு கொடுத்ததில்ல. அவர்கிட்ட சொல்லிதான் கொடுக்கணும். அப்பிடி சொல்லும் போதெல்லாம் எவ்வளவு அசிங்கமா இருக்கும் தெரியுமா? ஊர்ல என் தம்பி மூணு பிள்ளைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுறான். அவனோட பிள்ளைங்களுக்கு பொங்கல் தீவாளிக்குக்கூட ஒரு துணி எடுத்துத்தர முடியல. நூறு இரநூற மறச்சி கொடுக்கலாம். அது அசிங்கம். என்னோட பணத்த நானே திருடனுமா? வெக்கமா இருக்குடி."
"நீ பேசுறது புதுசா இருக்கு" லேசாக சிரித்தாள் சகுந்தலா.
“எங்க தாத்தா காலத்திலிருந்து, எங்கப்பா காலத்திலிருந்து, என் தம்பி காலம் வரைக்கும் எங்க வீட்டுல வேலை செஞ்சவரு போன வாரம் செத்துப்போயிட்டாரு. இரநூறு ரூவாய்க்கு மால வாங்குங்கன்னு சொன்னன். அம்பது ரூவாய்கு மால வாங்கிப்போட்டாரு. அன்னிக்கிப் பூராவும் நான் சாப்பிடவே இல்ல. அவுரு செத்தது ஒரு கஷ்டம். இரநூறு ரூவாய்கிகி மால வாங்கி என்னிஷ்டத்துக்குப் போட முடியலியேன்னு இன்னொரு கஷ்டம். மனசு ரொம்பப் பாரமாயிடிச்சி. சாவு செலவுக்கு வச்சிக்கன்னு ஆயிரம் - ரெண்டாயிரம்ன்னு கொடுக்க முடியல.” ரேவதியினுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
“சின்ன விசயத்தயெல்லாம் பெருசு பண்ணாத”
"இது என்னோட ஏ.டி.எம். எங்கிட்டதான் இருக்கும்ன்னு சொல்லி சம்பளத்த தானே எடுத்து செலவு செய்யுற ரகம் ஒண்ணு இருக்கு. எங்கப் போனாலும் நானும்தான் கூட வருவன்னு சொல்லி ஜோடிப்போட்டுகிட்டு போற ரகம் ஒண்ணு இருக்கு. ஏ.டி.எம். பின் நெம்பர்கூட தெரியாத ரகம் இருக்கு. டீச்சர்ஸ்ல இப்பிடி மூணு வக இருக்கு."
"எது அதிகம்?"
"பின் நெம்பர்கூட தெரியாத என்னோட ரகம்தான்." ரேவதி லேசாக சிரித்தாள். பிறகு லேசாக உற்சாகம் வந்த மாதிரி சொன்னாள். "புருசன் டீச்சரா இல்லாம வேற டிபார்ட்மண்டுல இருக்கிற வீட்டுல பரவாயில்ல. புருசனும் டீச்சரா இருந்தா கத முடிஞ்சிடும். ஒரு பைசா மாத்தி சொல்ல முடியாது" முன்பைவிட இப்போது ரேவதி கூடுதலாக சிரித்தாள்.
"வீட்டுக்கு வீடு பிரச்சனதான."
"அது இல்லடி சகுந்தலா. ஒரு கடக்கிப்போறம், நம்ப கையால நாலு காச செலவு செய்யணுமின்னு ஒரு ஆச இருக்காதா? நான் செலவு செஞ்சாலும் இந்த வீட்டுக்குத்தான செலவு செய்யப்போறன்? என்னா வாழ்க்க?" உடைந்து போன குரலில் சொன்னாள்.
"மாசம் அறுவத்தி நாலாயிரம் சம்பளம் வாங்குற உனக்கே இந்த நெலமன்னா என்னப் பத்தி என்னா சொல்றது?" சகுந்தலா சிரித்தாள். பிறகு "எங்க வீட்டுக்கு எப்பிடி பணம் வருது, எப்பிடி பணம் போவுதுன்னே எனக்குத் தெரியாது. கேட்டா ‘உங்கப்பன் வீட்டுலயிருந்து கொண்டாந்தியா’ன்னு கேப்பாரு. அதனால நான் வாயத்தொறக்கிறதில்ல. மீறி வாயதொறந்தா பிரசிடண்டுங்கிற திமிர்லப் பேசுறியான்னு கேப்பாரு" என்று சொல்லும்போது அவளுடைய செல்போன் மணி அடித்தது. "அவருதான் கூப்புடுவாரு" ரேவதியிடம் சொல்லிவிட்டு போனை எடுத்து "ஹலோ" என்று சொன்னாள். "இன்னம் கால் மணி நேரத்தில பஸ்ஸ்டாண்டுக்கு வரணுமா? ரெண்டு பேரும் சேந்து போயிடலாமா? சரி நான் வந்துடுறன். வச்சிடுங்க" போனை வைத்தாள்.
"சரி. நான் கிளம்பட்டுமா?"
"என்ன அவசரம்? ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கித்தான் வந்திருக்க. இப்பத்தான பேச ஆரம்பிச்சம். இன்னம் ஒண்ணுமே பேசல."
"அவுரு பஸ்ஸ்டாண்டுக்கு கால் மணி நேரத்தில வந்துடுவாரு. இப்பப் போனா ரெண்டு பேரும் வண்டியிலியே போய்டுவம். இல்லன்னா நான் டவுன் பஸ் புடிச்சிப் போறதுக்சுகுள்ளார நேரமாயிடும். திட்டுவாரு.”
"திரும்பி எப்ப வருவ?"
"நீ போன் பேசு. வரன். கல்யாணத்துக்கு மறக்காம வந்திடு."
"வராம எப்பிடி இருப்பன்? நீ சீக்கிரம் போறியேன்னுதான் வருத்தமா இருக்கு. சாப்புடக்கூட ஒண்ணும் கொடுக்கல."
"உங்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததே எனக்கு போதும். ஒம் பையன் ரமேசுக்கு கல்யாணம் முடிக்கலயா?”
“அவன் ஏதோ – கூட வேல செய்யுற புள்ளைய லவ் பண்றான்னு நெனைக்கிறன். அந்த பொண்ணு சாதியில கொஞ்சம் மட்ட ரகம்போல. இவுரு முடியாதின்னுட்டாரு. படிச்சிட்டா, வேலக்கிப் போயிட்டா எல்லாரும் பெரிய சாதியா ஆயிட முடியுமான்னு கேக்குறாரு. என்னாத்த சொல்ல? ரெண்டு வருசமா இழுத்துக்கிட்டு கெடக்கு. இப்ப பொண்ணுவேற மெட்ராசுக்குப் போயிருக்கா. என்னா நடக்கப்போவுதோ?"
“ஒண்ணும் நடக்காது. கவலப்படாம இரு.”
"மனசுல உள்ளத பேசக்கூட எனக்கு ஆள் இல்லடி" ரேவதியின் கண்கள் கலங்கின.
"சாதாரண விசயத்த பெருசு பண்ணாம இரு. ஒவ்வொரு வீட்டுக்கும் வாசலும் இருக்கு. கதவும் இருக்கு. நீ வீடா இருக்க. உங்க சார் கதவா இருக்காரு. உலகம் பூரா அப்படித்தான். சரி நான் கிளம்பறன்" என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது வாசலில் கட்டியிருந்த வெளிநாட்டு நாய் எழுந்து நின்றுகொண்டு சகுந்தலாவையே முறைத்துப் பார்த்தது.

24.02.16 – ஆனந்த விகடன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக