செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நேர்காணல் – எழுத்தாளர் இமையம் 12.04.15 – கல்கி வார இதழ்.

நேர்காணல் – எழுத்தாளர் இமையம். 12.04.15 – கல்கி வார இதழ்.

1.   நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? வாசக காதலிகள் என்று யாரும் உங்களுக்கு உண்டா?
எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், வாசிப்பின் ஈர்ப்பினால்
காதலிகள் ஏற்படுகிறார்கள், ஏற்படுவார்கள், ஏற்பட்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனது முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை காதல் ஏற்படவில்லை. இனிமேலும் ஏற்படாது. மீறி ஏற்பட்டாலும் என்னால் காதலிக்க முடியாது. காரணம் உலகிலேயே பெரிய வேலை, கடினமான வேலை காதலிப்பது. காத்திருத்தலைவிட பெரும் துயரம் வேறு என்ன இருக்கிறது? சிரித்துசிரித்து வளர்க்கிற காதல் பிறகு காயமாகி, சீழ்பிடித்து நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும். எனக்கு அப்படியான காதல் வேண்டாம். எழுதுவது என்பது சமூகத்திற்கு எதிர்விணையற்றவே. வாசக காதலிகள் ஏற்படுவார்கள் என்பதற்காக அல்ல.
       இருநூறு பக்கம், முந்நூறு பக்கம் என்று நாவல் எழுதுகிறவனை, சிறுகதை என்றால் பத்து முதல் இருபது பக்கம் எழுதுகிறவனுடைய எழுத்தை இப்போது யார் படிக்கிறார்கள்? அவ்வளவு பக்கங்களை படிப்பதற்கு இன்று யாருக்கு நேரம் இருக்கிறது? இப்படி பக்கம்பக்கமாக எழுதுவதை யார் விரும்புகிறார்கள்? முகநூலிலும், பிளாக்கிலும், வெப்சைட்டிலும், விக்கிப்பீடியாவிலும் உண்மையான பிறந்தநாளை போடுகிற என்னைப் போன்றவர்களை ‘அங்கிள்’, ‘தாத்தா’ என்றுதான் இளம்பெண்கள் அழைக்கிறார்கள். முகநூலில் ‘லைக்’ போடுகிறவர்களுக்கும், இரண்டு வரி நான்கு வரி கவிதை என்று துணுக்கு செய்திகளை எழுதுகிறவர்களுக்கும்தான் இன்று செல்வாக்கு.
       எனக்கு வாசகக் காதலிகள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் இருக்கலாம். என்னைவிட அதிகம் பெண்களை நேசித்த தமிழ் எழுத்தாளர் யாருமில்லை என்பது என் கருத்து. என் மூன்று நாவல்களில் வருபவர்கள் அநேகம்பேர் பெண்கள்தான். செடல், தனபாக்கியம், ஆரோக்கியம் என்று. நான் இதுவரை எழுதியிருக்கிற ஐம்பது சிறுகதைகளிலும் பெண்கள்தான் முதன்மைப்பாத்திரம். சின்னம்மாள், மலர், செல்வராணி, பொன்னம்மா, திருட்டுப்போன பொண்ணு, திருட்டுப்போன பொண்ணு, சந்திரவதனம், பொம்மி, பூங்குழலி என்று மொத்தத்தில் நூறு பெண்களாவது இருப்பார்கள். இவர்களைத்தான் நான் விரும்பினேன். அதனால்தான் எழுதினேன். என் எழுத்தில் வரும் பெண்களையே காதலிக்கிறேன். அவர்களுக்காகவே காத்திருக்கிறேன். அவர்களுக்காகவே சிரிக்கிறேன். அழுகிறேன். இதுதான் என்னுடைய காதல் என்பது.

2.   கட்சியில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் வரை ‘மஞ்சள்’ நிறத் துண்டு அணிய வேண்டும் என்று கட்டளை வந்தால் என்ன செய்வீர்கள்?
அப்படி ஒரு அறிவிப்பு, கட்டளை கட்சியிடமிருந்தோ, தலைவரிடமிருந்தோ நிச்சயம் வராது. மீறி வந்தால் அதை ஏற்கமாட்டேன். எதிர்க்கவே செய்வேன். தலைவரிடம் கடிதம் கொடுத்து அறிவிப்பை திரும்பப் பெறச் செய்வேன். சாதாரண தொண்டனின் கருத்தை கேட்கிற கட்சித் தலைமை தி.மு.க.தான்.

3.   உங்களுக்கு யாராவது பட்டப் பெயர் அளித்துள்ளனரா? நீங்களாக சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ஏதாவது உண்டா?
எனக்கு யாரும் பட்டப்பெயர் தரவில்லை, நானாகவும் சூட்டிக்கொள்ளவில்லை. பட்டப்பெயர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறுகதைச் செம்மல், பதிப்புச் செம்மல், காலத்தின் கலைஞன், நாவல், சிறுகதையின் முன்னோடி, மகா கலைஞன், உன்னதக் கலைஞன், மாமணி, வித்தகக் கவிஞன், உரைநடை மேதை, இலக்கிய வழிகாட்டி, கவிக்கோ, கவியரசு, கவிப்பேரரசு, காவிய எழுத்தாளன், காவியக் கவிஞன், மகாகவி – என்பது போன்ற பெயர்கள் எல்லாம் ஐம்பது, அறுபதுகளுக்கு பிறகுதான் உருவாகிற்று. இப்படியான பட்டப்பெயர்களில் எனக்கு துளி அளவும் மரியாதை இல்லை. இதுபோன்ற பட்டப்பெயர்கள் என்னை அருவருப்பு அடையச் செய்கின்றன.

4.   ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி நீங்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதவில்லை. வாய்ப்பு தரவில்லையா, கதை வசனம் எழுத விரும்பவில்லையா?
இதுவரை மட்டுமல்ல இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதமாட்டேன். காரணம் தமிழ் சினிமா மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது. தமிழ் சினிமாவின் பெரிய கதாநாயகர்கள் என்று கொண்டாடப்படுகிற விக்ரம், விஜய் மட்டுமல்ல, புரட்சியும், சீர்த்திருத்தக் கருத்தும் பேசுகிற விவேக், சந்தானம் போன்றவர்கள் ஷகிலாவோடு போட்டிப்போட்டு நடிக்கிறார்கள். இப்போது ஷகிலாதான் நகைச்சுவை காட்சிகளில் அதிகம் வருகிறார். ஷகிலா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, குற்றச்சாட்டும் இல்லை. நம்முடைய கதாநாயகர்கள் மீதுதான் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஷகிலாவோடு நடித்தவர்களைத்தான் தமிழகத்தின் எதிர்காலம் என்று கொண்டாடுகின்ற அவலம். இப்படியான அவல, இழிவான சூழல் நிரம்பிய தமிழ் சினிமாவிற்கு நான் என் வாழ்நாளில் ஒருபோதும் கதை வசனம் எழுத மாட்டேன்.

5.   தமிழ் சினிமாவில் உங்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால், நீங்கள் யாரை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பீர்கள்?
குருடர் பார்க்கிறார். செவிடர் கேட்கிறார். நொண்டி நடக்கிறார் என்று யேசுசபை பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசங்கம் செய்வது மாதிரி என்றுமே நடக்காத விஷயத்தை கேட்கிறீர்கள்? எனக்கு நடிக்கத் தெரியாது. நடிக்கவும் வராது. தனி மனித வாழ்க்கையிலும், இலக்கிய, அரசியல் வாழ்க்கையிலும் நான் இதுவரை நடித்ததில்லை. நான் எழுத்தாளன். குறைந்தபட்ச நேர்மையுடனாவது வாழவேண்டும். நடிப்பிற்கு, போலித்தனத்திற்கு எதிரானது எழுத்து. மீறி நடிக்க வந்தால் – குறைந்தபட்சம் நாற்பது ஐம்பது சதவிகித உடலையாவது பாடல் காட்சிகளில் மறைத்துக்கொண்டு நடிப்பேன் என்று நிர்ப்பந்தம் செய்கிற நடிகையோடு மட்டும்தான் நடிப்பேன். அப்படியான குணம்கொண்ட நடிகையையே கதாநாயகியாக தேர்வு செய்வேன். அப்படி ஒருவர் வருவாரா? ஆடைகளைக் குறைத்து நடிப்பதில்தானே இப்போது நம்முடைய நடிகைகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

6.   அண்மையில் கல்லூரிகளில் முத்தமிடுகிறப் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்தார்கள். முத்தமிடுவதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் யாருக்காவது முத்தமிட்டு இருக்கிறீர்களா?
நான் இதுவரை யாருக்கும் முத்தமிட்டதில்லை. எனக்கும் யாரும்
முத்தமிட்டதில்லை. எச்சில் வழியாகத்தான் அதிகப்படியான நோய்கள் பரவுகின்றன என்பது என் கருத்து. நோயைப் பரப்புகிற காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? தற்காலத்தில் வீட்டில் அந்தரங்கமாக செய்ய வேண்டிய பல காரியங்களை எல்லாம் பொது வெளியில் செய்கிறார்கள். அது சரியான நடவடிக்கை அல்ல. கல்லூரிகளில் முத்தமிடும் போராட்டத்தை மாணவ மாணவிகள் அறிவித்திருந்தார்கள். அது ஏற்கத்தக்கது அல்ல. கல்லூரி என்பது கற்பதற்கான, கற்பிப்பதற்கான இடம். முத்தமிடுவதற்கான இடம் அல்ல. தனிமனித விருப்ப செயல்பாட்டில் சாதியோ, மதமோ அதனுடைய அமைப்புகளோ ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. தனிமனித விருப்பத்தில் மதம் சார்ந்த அமைப்புகள் தலையிட்டதால்தான் முத்தப்போராட்ட அறிவிப்பு வெளியானது.

7.   கருப்பு சிவப்பு நிறத்தைத்தவிர வேறு என்ன நிறம் பிடிக்கும்?
ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அழகுதான். அதனால் நான் நிறங்களில் பேதம் பார்ப்பதில்லை. கட்சி நிறம் கருப்பு சிவப்புதான். இதுவரை நான் கட்சி மாறியதில்லை. நிறத்தையும் மாற்றியதில்லை. நான் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். வேட்டி என்றால் வெள்ளை வேட்டி. பேண்ட் என்றால் கருப்பு.

8.   சர்ச்சை, தடை, போராட்டம் – ஏற்படும் வகையில் நாவல், சிறுகதை எழுத திட்டம் உண்டா?
ஒரு வாழ்வை – அதன் இயல்பில் எழுத வேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். சர்ச்சையை, தடையை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எழுதுவதில்லை. என் நாவலோ, சிறுகதையோ சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் நான் ஒருபோதும் எழுதியதில்லை. அப்படி சிந்தித்ததும் இல்லை. மலினமான வகையில் புகழ் பெறுவது எழுத்தாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அப்படி எழுதுகிறவன் எழுத்தாளன் அல்ல. சர்ச்சையை, தடையை, பரபரப்பை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எழுதப்படுவது இலக்கியப் படைப்பே அல்ல.

9.   தாமரைக்கனி போன்று மோதிரம் அணியவும், அதை கொண்டு குட்டவும் விரும்பியதுண்டா?
நிச்சயமாக இல்லை. தாமரைக்கனி மட்டுமல்ல அவரைப் போன்று மோதிரம் அணிந்திருப்பவர்களை நான் விரும்பியதில்லை. ஒருபோதும் மதித்ததுமில்லை. தாமரைக்கனி போட்டிருந்தது மோதிரம் அல்ல. முறம். அது ஜால்ரா போடுவதற்கான அடையாளமாக, கூழைக் கும்பிடு போடுவதற்கான அடையாளமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. எந்த கட்சியினர் போட்டிருந்தாலும் சரி, அதுபோன்ற மோதிரங்களை நான் இழிவின் சின்னமாகவே பார்க்கிறேன். இப்படியான மோதிரம் அணிந்திருப்பவர்கள் தங்களை தாங்களே பச்சோந்திகள் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்கள். இந்த இழிவான கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

10.  நீங்கள் ஏன் உண்மையான அரசியல்வாதி ஆகவில்லை?
எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரியாக இருப்பவர்களும், கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களும் மட்டும்தான் அரசியல்வாதியா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறான கருத்து. சிறு சிறு செயல்களிலும் அரசியல் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சரியாக சொன்னால் உண்மையான அரசியல்வாதி எழுத்தாளன்தான். எழுத்து செயல்பாடு என்பதே அரசியல் செயல்பாடுதான். விட்டுக்கொடுத்தல் இல்லாத, சமரசம் செய்துகொள்ளாத அரசியல்வாதி – எழுத்தாளன் மட்டுமே.

11.  வெளியில், மேடைகளில் சாமி, கடவுள் இல்லையென்று பேசிவிட்டு, வீட்டில் மட்டும் சாமி, கடவுளை கும்பிடும் நபரா நீங்கள்?
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி’ என்று பேசியவன். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பேய் என்று ஒன்று இல்லை என்று சுடுகாட்டில் ஒரு இரவு முழுவதும் நண்பர்களுடன் இருந்தவன். இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால்தானே கும்பிடமுடியும்? நம்முடைய கடவுள்கள் மனிதால் மண்ணாலும், மரத்தாலும், உலோகத்தாலும் செய்யப்பட்டவைதான். சாமி படங்கள் எல்லாம் ஆர்ட்டிஸ்டுகள் வரைந்த ‘பொம்மை’ சித்திரங்கள்தான். நான் எழுத்தாளன். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, மக்கள் விரோதப் போக்கின் செயல்களுக்கு எதிராக எழுதுகிறவன்தானே எழுத்தாளன். அப்படி எழுதுகிறவன்தானே நிஜமான எழுத்தாளன். அந்த வகையில் என்னுடைய வேலையை மிகச் சரியாக செய்துகொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

12.  யாரையாவது உதைக்க வேண்டும் என்று தோன்றியதுண்டா?
இல்லை. என்னை யாரும் உதைத்துவிடக்கூடாது என்ற கவலையும் பயமும்தான் எனக்குள் எப்போதும் இருக்கிறது. அதனால் அதிக நெரிசல்மிக்க இடங்களுக்கு செல்வதைத்தவிர்த்துவிடுவேன். எழுத்தாளனின் நோக்கமும், எழுத்தின் நோக்கமும் சமூகத்தில் தனிமனித வன்முறை, அரசியல் வன்முறை, குழு, சமூக வன்முறையோ நிகழக்கூடாது என்பதுதானே. அப்படியிருக்கையில் என் மனதில் பிறரை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படப்போகிறது? அது சமூக விரோத செயல். அதை நான் விரோதத்தில், கோபத்தில்கூட செய்யமாட்டேன். இதுவரை செய்ததுமில்லை. செய்ய நினைத்ததுமில்லை.

13.  முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்க்க வாய்ப்பு இருந்தால் – நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள், கட்சி நிர்வாகிகளே அவரைப் பார்க்க முடிவதில்லை. இப்படியான நிலையில் நான் எப்படி அவரைப் பார்க்க முடியும்? உங்கள் ஆசைப்படி அவரைப்பார்க்க நேர்ந்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்,
   சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வை, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை உன் பெயரில் வாங்கு, இங்கிலாந்தில் ப்ளசண்ட் டே ஹோட்டலை வாங்கு, கொடநாடு எஸ்டேட்டையும், பையூர் பங்களாவையும், சிறுதாவூர் பங்களாவையும் வாங்கு என்று கலைஞர் சொன்னாரா? அவருடைய உத்தரவின் பேரிலா இந்த காரியங்களை எல்லாம் செய்தீர்கள்? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக – கவர்னரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டது சுப்பிரமணியன் சுவாமி தானே? நீங்கள் செய்த காரியங்களுக்கெல்லாம், நீங்களும், உங்களுடைய கட்சியினரும்தானே காரணம். ஏன் கலைஞரைத் திட்டுகிறீர்கள்? அதில் ஞாயம் இருக்கிறதா?

12.04.15 – கல்கி வார இதழ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக