விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன்
விமர்சனம் – இமையம்.
தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம்
இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம்,
அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து,
தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு
மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம் என்று கொண்டாடுகிறோம்.
பொய், புகழ் உரைகளை நாடுகிறவன், வெகுமதி எனக் கருதுகிறவன் இலக்கியப் படைப்பாளி அல்ல.
ஒரு படைப்பை படிப்பதற்கும், அது குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அறிவும், பயிற்சியும்
வேண்டும். ரசனை உணர்வும் வேண்டும். பிற வறுமைகளை எளிதில் போக்கிவிட முடியும். அறிவு
வறுமையை எப்படி போக்க முடியும்? போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டில், வறுமை, பசி நிறைந்த
நாட்டில் வாழ முடியும். ஆனால் அறிவு வறுமை நிறைந்த நாட்டில் வாழ்வது எளிதல்ல. தமிழ்ச்
சமூகம் அறிவு வறுமைக்கு உட்பட்ட சமூகமாக இருக்கிறது. அறிவு வறுமை நிறைந்த சமூகத்தில்
எங்காவது சிறு வெளிச்சம் தென்பட்டால் அதுதான் பெரிய மகிழ்ச்சி. ம.நவீன் எழுதிய – ‘விருந்தாளிகள்
விட்டுச் சொல்லும் வாழ்வு’ கட்டுரைத் தொகுப்பில் – கைவிளக்கு வெளிச்சம் இருக்கிறது.
அண்மைக்காலத்தில் ம.நவீன் படித்த நூல்களைப்பற்றிய
விமர்சனங்கள்தான் – பனிரெண்டு கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாவல்களையும்,
தன் வரலாற்றுக் கதைகளையும் படிக்கும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எவ்விதமான பாசாங்கும்
இல்லாமல், என்ன நினைப்பார்களோ என்ற பயமில்லாமல் எழுதியிருக்கிறார். எழுத்தின் பலம்
என்பது உண்மைதான். அது இந்தத் கட்டுரை நூலில் இருக்கிறது.
அ.ரங்கசாமி எழுதிய ‘நினைவுச் சின்னம்’, ‘இமையத்
தியாகம்’ நாவல்கள் குறித்து இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இந்த இரண்டு நாவல்களும்
எப்படி மலேசிய வாழ்வை, வரலாற்றை, சமூக இயங்கியலை புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறது,
வரலாறு எப்படி நாவலானது என்பதை ரசனை உணர்வுடன் சொல்கிறார் ம.நவீன். ஒரு நாவலாசிரியனின்
வேலை கதை சொல்வது மட்டுமல்ல. கதையை அல்ல காலத்தை எப்படி ஆவணமாக்குகிறான், அதை எப்படி
கலையாக்குகிறான் என்பதையும், அக்காரியத்தை அ.ரங்கசாமி எப்படி நேர்மையான முறையில் செய்திருக்கிறார்
என்பதையும் அழகாக சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். அதே நேரத்தில் ‘இமையத் தியாகம்’ நாவலில்
என்னென்ன விதமான குறைபாடுகள் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். ஒரு படைப்பில்
குறைகளைக் காண்பது என்பது காழ்ப்புணர்வால் ஏற்படுவதல்ல.
ப.சிங்காரத்தின் – ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின்
கதைக் களம், கதை நிகழும் காலம், அன்றைய மனிதர்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், இரண்டாம்
உலகப்போர் ஏற்படுத்தும் விளைவுகள், நாவலின் மையப் பாத்திரமான பாண்டியனின் மன உலகு எப்படிப்பட்டதாக
இருந்தது என்பதை நாவலாசிரியர் எப்படி விவரித்திருக்கிறார் என்பதை ம.நவீன் சொல்கிறார்.
நாவலை படிக்கத்தூண்டும் விதமாக, நன்றாக கதை சொல்லத் தெரிவது மட்டுமல்ல, ஒரு நாவலை மற்றொரு
நாவலுடன் ஒப்பிட்டும் சொல்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த விதத்தில் முக்கியமானது?
அதற்கான காரணங்கள் எவை? இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் பல நாவல்கள் தமிழ் மொழியில்
எழுதப்பட்டுள்ளன. பல நாவல்கள் இருந்தும் – குறிப்பாக இந்த நாவலை மட்டும் ஏன் பேச வேண்டும்?
ஒரு நாவல் எப்படி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விக்கு – மொழி, கதையின்
மையம், கதையை சொன்னவிதம், சமூகப் பொருத்தம் என்று பலதும் சேர்ந்துதான் நாவலுக்கான மதிப்பை
ஏற்படுத்துகிறது ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும், அ.ரங்கசாமியின் ‘இமையத் தியாகமும்
எப்படி ஒன்றுக்கொன்று இணைந்தும், முரண்பட்டும் நிற்கின்றன என்பதையும் ம.நவீன் ஒப்பிடுகிறார்.
இந்த ஒப்பீடு புதிதாக நாவல்களை படிப்பவர்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடும். படைப்பு
குறித்த வெளிச்சத்தைக் கூட்டும். ஒரு விமர்சகன் செய்ய வேண்டிய வேலை இதுதான். அன்பை
சொல்வதல்ல விமர்சனம்.
சா.ஆ.அன்பானந்தனின் – ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல்
மலேசிய மக்களின் இருண்டகால, வறுமை நிறைந்த வாழ்வை நேர்மையோடும் அழகியல் உணர்வோடும்
எப்படி பதிவு செய்தது? அந்நாவல் எப்படி மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப்
பிடித்தது? என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு இலக்கியப் படைப்பு
எழுதப்படுவதின் நோக்கம் வாசகர்களை குஷிப்படுத்துவதல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைத்
தருகிறவன் எழுத்தாளன் அல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைப் படிக்கிறவன் தேர்ந்த வாசகனும்
அல்ல. ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் குறிப்பிட்ட கால வாழ்வை அப்பட்டமாக சொன்னது. இப்படியான
நாவல்களின் மூலம்தான் – நாம் நமக்கான வேர்களை அறிய முடியும் என்று சொல்கிற ம.நவீன்,
ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு எப்படியானதொரு வாழ்வை பதிவு செய்தது என்பதையும் சொல்கிறார்.
ஒரு இனக்குழு மக்கள் எப்படி ஓயாமல் போராடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்? அதற்கான
எத்தனங்கள், போராட்டங்கள், பலிகள், எவைஎவை என்பதை மனச்சாய்வின்றி கலைஞன் எப்படி பதிவு
செய்கிறான் என்பதையும் நாவலாசிரியனுக்கான கடமை என்ன என்பதையும் ‘மரவள்ளிக் கிழங்கு’,
‘ஆழி சூழ் உலகு’ நாவல்களின் வழியே விளக்கமாக சொல்கிறார்.
ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, நாளை மற்றுமொரு
நாளே’ – இரண்டு நாவல்களைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டு நாவல்களின் அசலான
தன்மை குறித்தும் கட்டுரை ஆசிரியர் பேசுகிறார். ஜி.நாகராஜின் பலம் எது, பலவீனம் எது
– அதையும் எழுதிருக்கிறார். அதே நேரத்தில் ஜி.நாகராஜனின் எழுத்துலகம் பற்றி தமிழ் அறிவுலகம்
புனைந்து வைத்திருக்கும் கற்பனை என்பது மோசடி என்கிறார். ஒருவர் ஒரு படைப்பை பிரமாதம்
என்று சொல்லிவிட்டால் ஏன் எல்லாருமே ‘பிரமாதம்’ என்று சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தை
முன்வைத்தால் தான் ரசனையற்றவன், இலக்கிய அறிவு அற்றவன் என்று சொல்லிவிடுவார்கள் என்ற
பயமா என்று ம.நவீன் கேட்கிறார். தங்கமான கேள்வி. ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும்.
புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நல்ல விளக்கங்களைத் தந்திருக்கிறார் கட்டுரை
ஆசிரியர். திறம் மிக்க செயல்.
‘நாடு விட்டு நாடு’ (முத்தம்மாள் பழனிச்சாமி), ‘கருக்கு’ (பாமா), ‘நான்
வித்யா’ (ஸ்மைல் லிவிங் வித்யா), ‘முள்’ (முத்து மீனாள்) ஆகிய நான்கு தன் வரலாற்றுக்
கதைகளைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. நான்கு நூல்களையும் ஆழமாகவும்,
விமர்சனப்பூர்வமாகவும் படித்திருக்கிறார். அதே நேரத்தில் நான்கு நூல்களையும் ஒப்பிட்டும்
பார்த்திருக்கிறார். மற்ற தன் வரலாற்றுக் கதைகளைவிட நாடு விட்டு நாடு – மட்டும் எப்படி
மேலோங்கி நிற்கிறது. அதற்கான காரணத்தை விரிவாக சொல்கிறார். ஒரு படைப்பு தனக்கான தரத்தை,
மதிப்பை தானே உருவாக்கிக்கொள்ளும். எந்த ஒரு படைப்பையும் புறக் காரணிகளால் தூக்கி நிறுத்த
முடியாது- அப்படி நிறுத்தினாலும் கொஞ்ச காலம்தான். சொல்லிக் கொடுத்த பேச்சும், கட்டிக்கொடுத்த
சோறும் கொஞ்ச நாளைக்குத்தான் நிற்கும். ‘கருக்கு’, ‘முள்’, ‘நான் வித்யா’ ஆகிய நூல்களைவிட
‘நாடு விட்டு நாடு’ – முதன்மையான இடத்தை எப்படி பெறுகிறது என்றால் – எழுத்திலுள்ள நேர்மை.
உண்மை. அதுதான் மற்ற படைப்புகளை பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு நல்லப் படைப்பின் வழியேதான்
மோசமான படைப்புகளை அடையாளம் காணமுடியும். இதுதான் கலைப்படைப்பிற்கான அளவுகோல். நல்ல
தரமான படைப்பு பல தரமற்ற படைப்புகளுக்கு சாவுக் குழியை வெட்டும் என்று ம.நவீன் சொல்கிறார்.
நல்ல விமர்சனம். நல்ல பார்வை.
தரம் கெட்ட படைப்புகளை தரமான படைப்புகளின் வழியேதான்
அறிய முடியும் என்பதற்கு ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ (எம்.குமாரன்) என்ற நாவலை அடையாளப்படுத்துகிறார்
ஒரு கட்டுரையில். மலேசிய நாவல் பற்றி பேசும்போது ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலை
தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்று நாவல் குறித்தும், நாவலாசிரியர் குறித்தும் கட்டுரை
ஆசிரியர் தருகிற தகவல்கள் மனதிற்கு இசைவாக நம்பும்படியாக இருக்கிறது. மலேசியாவில் நல்ல
இலக்கியம் உருவாவதற்கு தன் எழுத்தின் வழியே புதிய சத்தான விதைகளைத் தூவியவர்களில் எம்.குமாரனும்
ஒருவர். ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலின் உண்மைத் தன்மை, புனையப்பட்ட விதம்,
சொல்முறை என்று நாவலைப்பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். ம.நவீனுடைய எழுத்து
– விமர்சனம் என்பது – படைப்பு சார்ந்தது, அதன் தரம் சார்ந்தது. எழுத்தாளன் சார்ந்தது
அல்ல.
‘இராமனின் நிறங்கள்’ (கோ.முனியாண்டி) என்ற நாவலும்,
’சூதாட்டம் ஆடும் காலம்’ (ரெ.கார்த்திக்கேசு) என்ற நாவலும் என்ன தரத்திலானவை? மையக்
கதையில், கதையை சொன்ன முறையில், கதையை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், சோதனை, புதுப்போக்கு,
வடிவ முயற்சி என்று எதுவுமே இல்லாத படைப்புகள் எப்படி கவனம் பெறுகின்றன? சமூகத்தில்
அங்கீகாரம் பெறுகின்றன? என்ற முக்கியமான கேள்வியை ம.நவீன் எழுப்புகிறார். அதற்கு ‘இராமனின்
நிறங்கள்’, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற இரண்டு நாவல்களையும் எடுத்துக்கொள்கிறார்.
அரசியல்வாதிகளை, பிரமுகர்களை வைத்து நாவல்களை வெளியிடுவதால் ஏற்படுகிற விளம்பர வெளிச்சம்தான்.
நாவல் கலையின் வெற்றியா? மேடை நாகரீகம் கருதி புகழப்படும் பொய்யான புகழுரைகளும், அலங்கார
வார்த்தை ஜோடனைகளும்தான் இலக்கிய விமர்சனமா? இப்படியான சொற்களில் மயங்கி திரிபவன் நிஜமான
கலைஞனா? மலேசிய இலக்கிய உலகம் அரசியல்வாதிகளின் வாழ்த்துகளையே பெரும் வெகுமதியாக கருதுகிறது.
(இது தமிழ்நாட்டிற்கும் அப்படியே பொருந்தும்) இப்படியான இழி செயல்களுக்கு, மலிவான புகழ்
வெளிச்சத்திற்கு எதிரானவனே கலைஞன். புகழ் தேடி அதிகாரத்திற்குப் பின்னால், பணத்திற்குப்
பின்னால் போவதற்கு நேர் எதிரான மனம் கொண்டவனே நிஜமான எழுத்தாளன் என்று சொல்கிற கட்டுரை
ஆசிரியர் அதற்கான காரண காரியங்களையும் எழுதுகிறார். போலிகளை அறிந்துகொள்வதற்கு இது
மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் உதவவே செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதை
பயப்படாமல் சொல்கிறார். கட்டுரை ஆசிரியரின் கோபம் தனி மனிதக் காழ்ப்பு அல்ல. படைப்பின்
பலவீனம் சார்ந்த கோபம். போலிகள் கொண்டாடப்படுவதால் ஏற்படுவது. தார்மீகக் கோபம்.
இசங்கள் பல எழுத்தாளர்களுடைய எழுத்தின் வலிமையைக்
குன்ற செய்திருக்கிறது. புதிய பாணி, புதிய மொழி, புதிய எழுத்து என்ற போக்கில் பல எழுத்தாளர்கள்
தங்களுடைய எழுத்தின் வலிமையை இழந்திருக்கிறார்கள். அப்படி தன் எழுத்தின் வலிமையை இழந்த
எழுத்தாளர்களில் ஒருவர் கே.பாலமுருகன். அவருடைய நாவல் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்.
நல்ல எழுத்தாளர் வளமான அனுபவத்திற்குச் சொந்தக்காரர். கதை சொல்லவும், அதை தெளிவாக சொல்லவும்
தெரியும். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார். அண்மைக்காலமாக மொழியின் கவர்ச்சியில்
சிக்கி – கதையை உருவாக்குவதற்குப் பதிலாக – மொழியை, உயிரற்ற, சாரமற்ற மொழியை மட்டுமே
உருவாக்குகிறார். அதற்கு நல்ல உதாரணம் – நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – என்று சுட்டிக்
காட்டுகிறார் ம.நவீன். மொழி ஒருபோதும் வாழ்கையை உருவாக்காது. வாழ்க்கைதான் ஒரு மொழியை
உருவாக்கும் என்று சொல்லும் கட்டுரை ஆசிரியரின் வாதம் மெய். வரலாற்று நாவல்கள் என்று
தமிழ் எழுத்தாளர்கள் தண்டிதண்டியாக, குப்பைகளாக எழுதி குவித்துக்கொண்டிருக்கும்போது
அண்மைக் காலத்தில் நடந்த ‘வீரப்பன்’ தேடுதல் வேட்டையில் நடந்து கொடூரங்களைப்பற்றி ச.பாலமுருகன்
எழுதிய ‘சோளகர் தொட்டி’ எப்படி நாவலாகி இருக்கிறது, கலையாகி இருக்கிறது என்று ஒரு கட்டுரையில்
எழுதியிருக்கிறார்.
விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – நூலின்
வழியே ம.நவீனுக்கு ஆழ்ந்தப் படிப்பு இருக்கிறது.
படித்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் திறன் இருக்கிறது. அதை நல்ல மொழியில்
சொல்லவும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சி. கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்
படைப்பு, அதன் தரம், முக்கியத்துவம் சார்ந்ததாக மட்டுமே இருப்பது ஆரோக்கியமானது. தனி
மனித வெறுப்பு, குழு சார்ந்த வெறுப்பு எங்குமே
இல்லை. பன்னிரெண்டு கட்டுரைகளின் வழியே இருபது நூல்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’
– கட்டுரைத் தொகுப்பு பெரிய வீட்டில் சிறிய அகல் விளக்கை ஏற்றியதைப் போன்றது. விளக்கு
சிறியதுதான். ஆனால் நல்ல வெளிச்சம். இது விட்டுக்கொடுத்தல்கள், சமரசங்கள், உள்நோக்கங்கள்
இல்லாததால் ஏற்பட்ட வெளிச்சம்.
‘விருந்தாளிகள்
விட்டுச் செல்லும் வாழ்வு’
(கட்டுரைத் தொகுப்பு)
ம.நவீன்,
வெளியீடு – வல்லினம்
(2013),
28, C Jalan SG
3/2,
Taman Sri
Gombak,
Batu Caves,
Selangor,
Malaysia.
கணையாழி – ஏப்ரல் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக