ஞாயிறு, 29 மார்ச், 2015

சாவு சோறு சிறுகதை தொகுப்பு குறித்து - அம்பை.

சாவு சோறு சிறுகதை தொகுப்பு குறித்து - அம்பை.
இமையத்தின் சாவு சோறு படித்து முடித்தேன். மூன்று கதைகள் பிரசுரமாகாதவை.மற்றவை ஏற்கனவே வெளிவந்தவைதான். ஒவ்வொரு கதையில் வரும்பெண்களும் இதயத்தை வந்து முட்டுபவர்கள். சாவு சோறு கதையில் ஓடிப்போனபெண்ணைத் தேடி அலையும் அம்மா, தொட்டிநாயக்கர்
இனத்தைச் சேர்ந்த,வயதுக்கு வந்தபின் தனியாக உட்காரவைக்கப்பட்ட போது தவறுதலாகக்கடத்தப்பட்ட திருட்டுப் போன பொண்ணு என்றழைக்கபடும் பெண், கணவன்இறந்தபின் அவன் தம்பி படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அவனுக்குவாத்தியார் வேலை கிடைத்ததும் காலில் புழுதியுடன் வந்த அவன் கால்களைத்தன் முந்தானையால் துடைத்து, செருப்பில்லாமல் வேலைக்குப் போவதால்அவன் காலில் முள் குத்தும் என்று அவன் போகும் ஏழு மைல் வழியைப்பெருக்குகிறேன் என்று சொல்லும் பெண், பேயாகியபின் பூசாரியிடம் க்வார்டர்கேட்கும் பெண் பேய், கழிவறை உள்ள வீடு உள்ளவனை மணக்க விரும்பும்கிராமத்துப் பெண், ஓடிப்போன பெண் சாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும்தாய் என்று தமிழ் நாட்டின் பல கிராமங்களிலும் சிற்றூர்களிலும் வாழும் பெண்கள்.திருடப்போகும் முன் ஆகாச வீரனிடம் வாக்கு கேட்கப்போகும் திருடன், தன்னைப்படிக்க வைத்த அண்ணியின் ஒவ்வொரு செயலையும் மறக்காமல் நினைவுகூர்ந்து வயது காலத்தில் வாய்விட்டு அழும் ஆண், தன்னுடன் படித்த பெண்ணைஉள்ளூரக் காதலித்து பல ஆண்டுகளுக்குப் பின் அவள் சந்திக்கச் சொல்லும்போதுபரபரப்புடனும் கூச்சத்துடனும் போய் அவள் கடன் கேட்கும் தொகையை ஏற்பாடுசெய்ய ஒப்புக்கொண்டபின் அவள் “எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்;லாட்ஜுக்கு மட்டும் வேண்டாம்” என்று சொன்னதும் அந்த கணத்தின் இனிமைமுற்றிலும் குலைந்துவிட்டதாய் எண்ணும் ஆண், பேயுடன் பேசும் பூசாரி என்றுபலதரப்பட்ட ஆண்களும் வருகிறார்கள் கதைகளில். அதிகப்படியான விவரங்கள்இல்லாத, விளக்கங்கள் இல்லாத, கச்சிதமான கதைகள். புத்தகம் முழுவதையும்படித்து முடித்தபோது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த நிறைவுஇருந்தாலும் ஒன்று மட்டும் மனத்தை உறுத்தியது. ஓடிப் போகும் பெண்கள்அனைவரும் படித்தவர்கள். காதலில் ஏமாற்றமடைந்து தற்கொலைசெய்துகொண்டு பூசாரியிடம் செல்போன் பற்றிப் பேசும் பெண்ணும்படித்தவள்தான், சாவு சோறு தின்றுவிட்டு மகளைத் தேடி அலையும் தாயின் பெண்எம்.எஸ்ஸி படித்துவிட்டு பி.எட் படித்தவள். தாய் அவள் சாகட்டும் என்றுசாபமிடும் பெண்ணும் படித்தவள்தான். இது தவிர சற்று படித்துவிட்டு சிறுநகரங்களிலிருந்து வந்த பெண்கள் உடைகள், நகைகள், சினிமா என்றுவாழ்பவர்கள். பெரியவர்களை மதிக்காதவர்கள். பணத்துக்காக எதையும்செய்பவர்கள். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவர்கள். கணவனைஆட்டுவிப்பவர்கள். மென்மையற்றவர்கள். இந்தப் பெண் பாத்திரங்கள் வேறுமாதிரி இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. நற்குணம் கொண்ட படித்தபெண் பற்றி இமையம் ஒரு கதை எழுத வேண்டும். அதைப் படிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக