ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சங்கவை – (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி விமர்சனம் – இமையம்

சங்கவை – (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி
விமர்சனம் – இமையம் 
சங்கவை பெண்ணிய நாவலல்ல. நாவலில் விவரிக்கப்படுகிற உலகம் முற்றிலும் பெண்களுடைய உலகமும் அல்ல. ஆண்கள், அவர்களுடைய மன இயல்பு, உளவியல் விருப்பம், வக்கிரம், சீண்டல், திமிர்தனம் பற்றிய நாவல். பெண்கள் பேசுகிறார்கள் ஆண்களைப் பற்றி. கலைவாணி, ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி, சௌந்தரா, விஜயா, சரோஜினி மேனன், மரகதம், பிரியா, செண்பகம், சைலு என்று நாவலுக்குள் நிறைய பெண்கள் வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய வலி, கண்ணீர், காயம், சந்தித்த அவமானம், இழிவைப் பற்றி பேசாமல் சமூகம் பற்றி பேசுகிறார்கள். ‘சங்கவை’ நாம் வாழும் உலகம் பற்றி பேசுகிறது.
கலைவாணி, ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி நான்குபேரும் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள். உயர் படிப்பிற்காக சென்னைக்கு வந்தவர்கள். இப்பெண்களின் வழியே இரண்டு உலகம் வாசகர்களுக்கு காட்டப்படுகிறது. ஒன்று சென்னை வாழ்க்கை, மற்றது கிராம வாழ்க்கை. நாவலின் எந்த இடத்திலும் கிராம வாழ்க்கை சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ, நகர வாழ்க்கை சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ பதிவாகவில்லை. இது இந்த நாவலின் பலங்களில் ஒன்று.
சங்கவை ஒரு நாவலல்ல. பல நாவல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கிய மரபில் – காவிய மரபில் ஒரு கதை என்றால் அதில் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகள் இருக்கும். அந்த கிளைக்கதைகளுக்குள் பல உட்கதைகள் இருக்கும். இதுதான் நமது இலக்கிய மரபு. வாய்மொழி கதைசொல்லலிலும்,  புராண, இதிகாசக் கதைகளிலும், நாட்டார் கதைகளிலும் இத்தன்மை இருப்பதை அறியலாம். அந்த தன்மையைச் சங்கவை நாவலில் பார்க்க முடிகிறது. பல உட்கதைகளைக் கொண்டது மட்டுமல்ல. நாவலைப் பலவிதமாகவும் பல மொழிகளிலும் எழுதிப் பார்த்திருக்கிறார். சங்கவை கனவு காணும் இடங்கள் அனைத்தும் புதுவிதமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் சீண்டலுக்குள்ளான ஒரு பேராசிரியையின் துயரம் நாட்குறிப்பு வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இது போன்ற வடிவ முயற்சிகள் ஒரு நாவலாசிரியருக்கான சாவல்கள். ஜெயசாந்தி புதிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறார். நம்முடைய புராண இதிகாசக் காப்பியங்களில் சிறுசிறு பாத்திரங்கள்கூட மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும். அதே குணத்தைச் சங்கவை நாவலில் வரக்கூடிய சிறுசிறு பாத்திரங்களும் பெற்றிருக்கிறார்கள். நாவலுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சங்கவை கல்விச் சூழலைப் பற்றிய நாவல். தமிழகத்தில் குறிப்பாகத் தனியார், தன்னாட்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களை எப்படி பார்க்கிறது? எப்படி நடத்துகிறது? ‘சிறந்த கல்லூரி’ என்ற பெயருக்காக அந்த பெயரைத் தக்கவைப்பதற்காக நிர்வாகமும் பேராசிரியர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள்?  நிர்வாகத்திற்குத் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட பேராசிரியர்கள் போடும் நாடகம், அவர்கள் பேராசிரியர்கள் தானா? படித்தவர்கள் தானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. தங்களுடைய பதவியைத் தக்க வைத்துகொள்வதற்காக என்னென்ன விதமான இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இந்நாவல் பேசுகிறது. பிறரை அவமானப்படுத்துவதில் மனிதமனம் கொள்ளும் மகிழ்ச்சி என்பது விந்தையானது. ஆண் பேராசிரியர்கள் பெண்பிள்ளைகளைப் பாலியல் தொந்தரவு செய்வது, சீண்டல், இழுத்தடித்தல், காக்க வைத்தல் போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள். பெண் பேராசிரியர்கள் ஆண் பேராசிரியர்களைவிட மோசமாக நடந்துகொள்கிறார்கள். பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள், செய்கைகள், உடுத்துகிற உடை, நடக்கிற விதம், பேசுகிற விதம் குறித்து மாணவிகளைப் பார்க்கிற பார்வை, நடத்துகிற விதம் - பெருந்துயரம். இது ஒரு நாவல்.
கலைவாணி என்கின்ற முனைவர் பட்ட ஆய்வாளர் தன்னுடைய வழிகாட்டி ஆசிரியரால் படுகிற பாலியல் துன்பங்கள், சீண்டல்கள், புறக்கணிப்புகள் போன்றவற்றை தாங்க முடியாததால் தற்கொலை செய்துகொள்கிறாள். கலைவாணியின் சாவு அவளுடைய தங்கை ஈஸ்வரிக்குக் காலம் கடந்து தெரிய வருகிறது. ஈஸ்வரியையும் கலைவாணியையும் படிக்க வைப்பதற்காக அவளுடைய குடும்பம் பட்ட துயரங்கள், ஈஸ்வரி மேற்படிப்பிற்காக செல்லவிருக்கும் பயணத் திட்டங்கள், அவர்களுடைய குடும்பப்பின்னணி, கிராமம், அதன் அமைப்பு, உறவுகள், அதன் சிக்கல்கள் இது ஒரு நாவல்.
மன்னர் மன்னன் என்ற துறைத்தலைவரால் ஓயாமல் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் மாணவியல்ல ஒரு பேராசிரியரின் துயரம். தனக்கேற்பட்டச் சித்திரவதையை, கசப்பான அனுபவத்தை நிர்வாகத்திடமும், முதல்வரிடமும், முறையிட்டுமுறையிட்டுத் தோற்றுப்போன, கல்லூரி நிர்வாகத்தாலும் சகப் பேராசிரியர்களாலும் அவதூறு பரப்பப்பட்ட, இழிவாகப் பேசப்பட்ட, நடத்தப்பட்ட ஒரு பேராசிரியையின் மனக்குமுறல், போராட்டம். கல்லூரி நிர்வாகம் – கல்லூரியின் புனிதம் என்ற பெயரைக் காப்பாற்றச் செய்யும் இழிசெயல்கள், தந்திரங்கள், ஏமாற்றுவேலைகள் – இது ஒரு நாவல்.
பத்துவயதுகூட நிரம்பாத ஆந்திரவைச் சேர்ந்த ’சைலு’ என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. அதனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு. பாலியல் பலாத்காரத்தை நேரில் பார்த்த சிறுவன். கொடூரத்தை நேரில் பார்த்ததால் தொலைக்காட்சிகளுக்கும், செய்திதாள்களுக்கும் பேட்டியளித்துபேட்டியளித்து சலித்துப் போவது, காவல்நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் சாட்சி சொல்ல சென்றுசென்று திரும்புவது, ஆதரவற்ற குழந்தைகள், அனாதை இல்லங்கள்,  காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் மனநெருக்கடிகள்,  மனம் பேதலித்து ஆற்றில் வெள்ளம் வருவதை அறியாமல் நடந்து செல்கிற சைலுவை காப்பாற்றப் போய் சங்கவை காணாமல் போவது. இது ஒரு நாவல்.
சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி, எபி, அரவிந்த், பிரான்ஸ் தேசத்துக்காரன் போன்றவர்களுடைய நட்பு மனிதர்களால் அன்பைப் பெறாமலோ வழங்காமலோ இருக்க முடியாது. காயங்கள், துன்பங்கள், துரோகங்கள், கயமைத்தனம் என்று பலதும் இருந்தாலும் மனிதர்களுடன் தானே மனிதர்கள் வாழமுடியும்? இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்விக்கும் எபிக்குமான காதல். அரவிந்துக்கும் பிரியாவுக்குமான காதல். சங்கவைக்கும் பிரான்ஸ் தேசத்துக்காரனுக்குமான நட்பு, அன்பு, மறைமுகமான காதல் . இந்த மூன்று காதல்களின் தோல்வியும் அந்த தோல்விக்குப் பின்னுள்ள துயரம் ஒருபுறம். அரவிந்த் அவனுடைய மனைவி, எபி அவனுடைய மனைவி கேத்தரின் இவர்களுக்கான உறவு. இது ஒரு நாவல் .
சைலு, மீனலோசனி, மெர்வின் சங்கீதா, ராஜா, பாலா என்று குழந்தையின் உலகம். குடும்பத்தைக் காப்பாற்ற சுண்டல் விற்கும் சிறுவன், வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட சைலு அதை நேரடியாகப் பார்த்த முதன்மை சாட்சி பாலா. இரண்டு அனாதைக் குழந்தைகள் உள்ள காப்பகங்கள் அங்கு வாழும் குழந்தைகள். இது ஒரு நாவல்.
தாயிடம் பால் குடிப்பதைக்கூட மறக்காத பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கிற வழக்கம்- எப்படி தமிழ்ச் சமூகத்தின் நாகரிகமாகப், பண்பாடாக மாறியது. அரசு இலவசமாகத் தரவேண்டிய கல்வி எப்படி தனியார் மயமாயிற்று? வியாபாரமாயிற்று? குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் பணம் பறிப்பதற்கான கருவிகளாக எப்படி மாற்றப்பட்டார்கள்? தாய்மொழியில் பேசவிடாத, தாய்மொழியில் படிக்கவிடாத, பள்ளிகள் எப்படி தரமான சிறந்தப் பள்ளிகளாக இருக்கும்? “இந்த பள்ளிக்கூடத்தில் தமிழும் சொல்லித் தர்றாங்களா? அப்படின்னா வந்திருக்கவே மாட்டேன் ”என்று கேட்டு அதிர்ச்சி அடைகிற எபியின் மனைவி கேத்தரின். இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்வி, அவளுடைய விதவைத்தாய் மருதாயி, அவளுடைய வாழ்க்கை, உழைப்பு, கிராமம், தமிழ்ச்செல்வியின் கவிதைகள், மருதாயியின் மரணம், எபியின் மீதான அன்பு, எபி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல், தனியார் பள்ளியில் வேலை செய்வது, அரசு வேலை கிடைப்பது, தமிழ்ச்செல்வியின் வாழ்க்கை. இது ஒரு நாவல்.
சென்னை சென்ட்ரல், எக்மோர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கன்னிமரா நூலகம், பாண்டி பஜார், பரந்த கல்லூரி வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், பெசண்ட் நகர் கடற்கரை என்று சென்னை சார்ந்த விவரிப்புகள் ஒருபுறம். மறுபுறம் ஆலங்குளம், கொக்கிரக்குளம், முத்தாலம்குறிச்சி, வீர மாணிக்கப்புரம், கண்டரமாணிக்கம், வண்ணாரப்பேட்டை, ஆனாப்பட்டி போன்ற கிராமங்கள் நாவலில் விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது.  சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலுக்காகக் காத்திருக்கும் பெருந்திரளான மனிதக் கூட்டத்தைக் காட்சிப்படுத்துகிற நாவலாசிரியை ஆனாப்பட்டி ஆற்றில் ஊர்க்கதை பேசியபடி நிதானமாகக் குளியல் போடும் பெண்களைப் பற்றியும் எழுதுகிறார். செயற்கையாக அல்ல இயற்கையாக.  கிராமம், நகரம், அதன் வாழ்வு. நெருக்கடி. இது ஒரு நாவல்.
சங்கவை – அரசியல் நாவல் என்றும், குழந்தைகள் நாவல் என்றும், கல்விச் சூழல் பற்றிய நாவல் என்றும், ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய நாவல் என்றும்,  பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்கள் பற்றிய நாவல் என்றும், முறிந்து போன காதல்கள் பற்றிய நாவல் என்றும், நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகள், நம்பிக்கைகள் பற்றிய நாவல் என்றும், தன்னுடைய அன்பை கண்ணீரை வலியை, கவிதையாக வெளிப்படுத்துகிற தமிழ்ச்செல்வி பற்றிய நாவல் என்றும், இயற்கை விவசாயம் பற்றி பேசுகிற சேது குமணன் பற்றிய, குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டுள்ள கமலவேணி பற்றிய நாவல் என்றும் : இப்படி பல நாவல்களின் தொகுப்பாக இருக்கிற நாவல் சங்கவை.
சங்கவை நாவலில் கிராமத்திலிருக்கும் படிக்காத, நாகரீகமில்லாத பெண்களைவிட  படித்த, நாகரீகம் மிக்க, பதவியிலிருக்கிற பெண்கள் மட்டுமல்ல பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாக அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைக் காட்சி ரூபமாக உணர முடிகிறது. சங்கவை நாவல் பெண்கள் படும் துயரம் பற்றிப் பேசினாலும் நவீனப் பெண் எழுத்தாளர்கள் மாதிரி – முலை, யோனி, பனிக்குடம், மாதவிடாய் வலி போன்ற வார்த்தைகளை எழுதி தானொரு பெண் நாவலாசிரியை, பெண் சிந்தனையாளர் போன்ற பட்டங்களைப் பெறவோ, மலினமானப் புகழைப் பெறவோ, ஜெயசாந்தியின் எழுத்து முயற்சிக்கவில்லை. இது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்று. சங்கவை நாவலில் பெண்கள், அவர்களுடைய மன உலகம் பற்றி பேசப்படுகிறது. ஆண்களின் உலகமும் பேசப்படுகிறது. ஆண்களின் இழி குணத்தைப் பேசும்போது – ஆண்களை குற்றம் சொல்லாமல் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குற்றம் சுமத்துகிறது. ஆண்களுக்கான திமிர் தனத்தை நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும்தானே தருகிறது என்ற குற்றச்சாட்டும், இந்த சமநிலை பார்வை தான் மற்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து சங்கவை நாவலை விலக்கியும், சற்று உயரத்திலும் வைத்திருக்கிறது.
நாவல் முழுவதிலும் ஒரே நேரத்தில் மூன்று விதமான மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.  நகரத்து மொழி, கிராமத்து மொழி, கனவு மொழி. மொத்த நாவலிலும் மொழி சார்ந்த குழப்பங்கள் ஏதுமில்லை. ஏழெட்டு நாவல்களின் தன்மையை உள்ளடக்கியதாக இருந்தாலும் கதையிலும் கதை சொன்ன விதத்திலும் குறைபாடு ஏதுமில்லை. இது ஜெயசாந்தியின் எழுத்திற்குக் கிடைத்த வெற்றி.
பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது சங்கவை நாவல். அதேநேரத்தில் சில சறுக்கல்களையும் கொண்டிருக்கிறது. படித்த விவரமான சங்கவை பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட சைலு என்ற குழந்தையைக் காப்பாற்றப் போய் காணாமல் போவது நம்பும்படியாக இல்லை. கதையின் வெற்றி என்பது நம்பகத்தன்மையைப் பொறுத்தது மட்டுமே.
தனியார் கல்லூரியின் தாளாளர் சேதுகுமணன், அவருடைய தாராளக் குணம்  இயற்கை விவசாயம் சார்ந்த அவருடைய ஈடுபாடு, அடித்தளமில்லாமல் இருக்கிறது. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அதனுடைய தாளாளர்கள், முதல்வர்கள் எப்போதும் கெடுபிடியாகவும் கடுமையான சட்டத்திட்டங்களை கடைப்பிடிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். கெடுபிடிகள் தானே தனியார் கல்லூரி பள்ளிகளின் பெருமை. அதை சேதுகுமணனும் கமலவேணியும் இழந்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
நாவலில் வரக்கூடியவர்கள் அனேகம்பேர் புனிதர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் பெரிய புனிதர் எபி. ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி போன்றவர்களுக்கு அவர் ஓடிஓடிச் செய்கிற உதவி ஆச்சரியம். பெண்களின் மனமறிந்து குறிப்பறிந்து செயல்படுகிறார். சங்கவையின் பிறந்தநாளுக்கு வைரமோதிரம் பரிசளிக்கிறார். அன்பு, நட்பு, உதவும் குணத்திற்கு ஒரு எல்லை உண்டுதானே. உயிராகக் காதலிக்கும் தமிழ்ச்செல்வியைப் புறக்கணித்து தாய் தந்தையரின் பேச்சை மீறாத பிள்ளையாக, புனிதராக எபி இருக்கிறார். இரவும் பகலும் ஓயாமல் ரசித்துரசித்து காதலித்த, காதலன் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்போது மிகவும் நிதானமாகவும், கண்ணீரோடும், இழப்பை ஏற்றுக்கொள்ளும தமிழ்ச்செல்வி – அதிசய பெண்தான். புனித பெருமைகள் ஏன் பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. தமிழ்ச்செல்வி பாத்திரம் செயற்கை.
கலைவாணி, சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி இவர்களின் நட்பு மொத்த நாவலில் எந்த இடத்திலும் கசப்பாகவில்லை. சங்கவை மீது அவளுடைய மாமா நரசிம்மனும், அத்தை மரகதமும் காட்டுகிற அன்பு – மிகை. நரசிம்மனும், அத்தையும் எந்த இடத்திலும் முகம் சுளிக்காதது ஆச்சரியச்சம். புனிதர்கள் எப்போதும் புனிதர்களாகவும், கழிசடைகள் எப்போதும் கழிசடைகளாகவே இருப்பார்களா?
ஆண்கள் எழுதினாலோ, பெண்கள் எழுதினாலோ கதைகளில் வரக்கூடிய பெண்கள் மட்டும் எப்போதும் ‘வெள்ளை மனம்’  கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிசயம் தான். “ஒருபோதும் வாடாத பிச்சிப்பூவாய் இருக்கும் அக்காவின் கண்கள்” (ப.435) இது போன்ற சித்தரிப்புகள் பெண்களை முடமாக்குகிற கருவிகள். இந்த கருவிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசுகிற, எழுதுகிற நாவலாசிரியர் அதை மறந்துவிட்டு எழுதுவது நாவலாசிரியரின் குற்றமல்ல. நமக்குள் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் எப்படி ஊறி இருக்கிறது என்பதற்கு இது போன்ற சித்தரிப்புகள் உதாரணம்.
சங்கவை நாவலில் மதம் சார்ந்த, தெய்வ நம்பிக்கைகள் சார்ந்த, கனவுகள், சம்பவங்கள் சித்தரிப்புகள் அதிகம் வருகின்றன. ஆனால் சாதி சார்ந்த, சாதி இழிவுகள் சார்ந்த பேச்சு எங்குமே வரவில்லை. நம்முடைய சமூகத்தில் பொதுவெளியிலும் கல்வி நிலையங்களிலும் மனிதர்களை இழிவு செய்கிற பெரிய ஆயுதம் சாதி. அது குறித்து நாவலில் ஒரு சொல்கூட இல்லை. தமிழர்கள் சாதி சார்ந்த அடையாளங்களுடன் தானே எப்போதும் வாழ்கிறார்கள்?
ஈஸ்வரியை ‘ஈஷ், ஈஷ்’ என்று அழைப்பதும் சங்கவையைச்  ‘சங்கு’,  ‘சங்கி’ என்று அழைப்பதும், செண்பகத்தைச் ‘செண்பா’ என்று அழைப்பதும் எரிச்சலூட்டுகின்றன. தமிழர்கள் ஏற்கனவே தங்களுக்கான பல அடையாளங்களை இழந்து விட்டார்கள். பெயரையும் இழப்பது நியாயமில்லை.
தமிழ் நாவல் இலக்கியப் பரப்பில் சங்கவை நாவலுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. அந்த இடம் நாவலின் மையத்திற்கு, நாவல் எழுதிய மொழிக்கு, கட்டமைப்புக்கு, கிளை கிளையாகக் கதைகளை உருவாக்கியதற்கு, நாவலின் சமூக அக்கறைக்கு மதிப்பு வாய்ந்த இடமுண்டு.

சங்கவை (நாவல்),                                         உயிர்மை – ஏப்ரல் 2015.
இ.ஜோ.ஜெயசாந்தி,
வெளியீடு – விருட்சம்,
சீத்தாலட்சுமி அப்பார்ட்மண்ட்ஸ்,
16 – ராகவன் காலணி,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 33,
விலை – 820.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக