ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

இமையம் - கார்ட்டூன்


சங்கவை – (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி விமர்சனம் – இமையம்

சங்கவை – (நாவல்) இ.ஜோ.ஜெயசாந்தி
விமர்சனம் – இமையம் 
சங்கவை பெண்ணிய நாவலல்ல. நாவலில் விவரிக்கப்படுகிற உலகம் முற்றிலும் பெண்களுடைய உலகமும் அல்ல. ஆண்கள், அவர்களுடைய மன இயல்பு, உளவியல் விருப்பம், வக்கிரம், சீண்டல், திமிர்தனம் பற்றிய நாவல். பெண்கள் பேசுகிறார்கள் ஆண்களைப் பற்றி. கலைவாணி, ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி, சௌந்தரா, விஜயா, சரோஜினி மேனன், மரகதம், பிரியா, செண்பகம், சைலு என்று நாவலுக்குள் நிறைய பெண்கள் வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய வலி, கண்ணீர், காயம், சந்தித்த அவமானம், இழிவைப் பற்றி பேசாமல் சமூகம் பற்றி பேசுகிறார்கள். ‘சங்கவை’ நாம் வாழும் உலகம் பற்றி பேசுகிறது.
கலைவாணி, ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி நான்குபேரும் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள். உயர் படிப்பிற்காக சென்னைக்கு வந்தவர்கள். இப்பெண்களின் வழியே இரண்டு உலகம் வாசகர்களுக்கு காட்டப்படுகிறது. ஒன்று சென்னை வாழ்க்கை, மற்றது கிராம வாழ்க்கை. நாவலின் எந்த இடத்திலும் கிராம வாழ்க்கை சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ, நகர வாழ்க்கை சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ பதிவாகவில்லை. இது இந்த நாவலின் பலங்களில் ஒன்று.
சங்கவை ஒரு நாவலல்ல. பல நாவல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கிய மரபில் – காவிய மரபில் ஒரு கதை என்றால் அதில் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகள் இருக்கும். அந்த கிளைக்கதைகளுக்குள் பல உட்கதைகள் இருக்கும். இதுதான் நமது இலக்கிய மரபு. வாய்மொழி கதைசொல்லலிலும்,  புராண, இதிகாசக் கதைகளிலும், நாட்டார் கதைகளிலும் இத்தன்மை இருப்பதை அறியலாம். அந்த தன்மையைச் சங்கவை நாவலில் பார்க்க முடிகிறது. பல உட்கதைகளைக் கொண்டது மட்டுமல்ல. நாவலைப் பலவிதமாகவும் பல மொழிகளிலும் எழுதிப் பார்த்திருக்கிறார். சங்கவை கனவு காணும் இடங்கள் அனைத்தும் புதுவிதமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் சீண்டலுக்குள்ளான ஒரு பேராசிரியையின் துயரம் நாட்குறிப்பு வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இது போன்ற வடிவ முயற்சிகள் ஒரு நாவலாசிரியருக்கான சாவல்கள். ஜெயசாந்தி புதிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறார். நம்முடைய புராண இதிகாசக் காப்பியங்களில் சிறுசிறு பாத்திரங்கள்கூட மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கும். அதே குணத்தைச் சங்கவை நாவலில் வரக்கூடிய சிறுசிறு பாத்திரங்களும் பெற்றிருக்கிறார்கள். நாவலுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சங்கவை கல்விச் சூழலைப் பற்றிய நாவல். தமிழகத்தில் குறிப்பாகத் தனியார், தன்னாட்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களை எப்படி பார்க்கிறது? எப்படி நடத்துகிறது? ‘சிறந்த கல்லூரி’ என்ற பெயருக்காக அந்த பெயரைத் தக்கவைப்பதற்காக நிர்வாகமும் பேராசிரியர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள்?  நிர்வாகத்திற்குத் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட பேராசிரியர்கள் போடும் நாடகம், அவர்கள் பேராசிரியர்கள் தானா? படித்தவர்கள் தானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. தங்களுடைய பதவியைத் தக்க வைத்துகொள்வதற்காக என்னென்ன விதமான இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இந்நாவல் பேசுகிறது. பிறரை அவமானப்படுத்துவதில் மனிதமனம் கொள்ளும் மகிழ்ச்சி என்பது விந்தையானது. ஆண் பேராசிரியர்கள் பெண்பிள்ளைகளைப் பாலியல் தொந்தரவு செய்வது, சீண்டல், இழுத்தடித்தல், காக்க வைத்தல் போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள். பெண் பேராசிரியர்கள் ஆண் பேராசிரியர்களைவிட மோசமாக நடந்துகொள்கிறார்கள். பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள், செய்கைகள், உடுத்துகிற உடை, நடக்கிற விதம், பேசுகிற விதம் குறித்து மாணவிகளைப் பார்க்கிற பார்வை, நடத்துகிற விதம் - பெருந்துயரம். இது ஒரு நாவல்.
கலைவாணி என்கின்ற முனைவர் பட்ட ஆய்வாளர் தன்னுடைய வழிகாட்டி ஆசிரியரால் படுகிற பாலியல் துன்பங்கள், சீண்டல்கள், புறக்கணிப்புகள் போன்றவற்றை தாங்க முடியாததால் தற்கொலை செய்துகொள்கிறாள். கலைவாணியின் சாவு அவளுடைய தங்கை ஈஸ்வரிக்குக் காலம் கடந்து தெரிய வருகிறது. ஈஸ்வரியையும் கலைவாணியையும் படிக்க வைப்பதற்காக அவளுடைய குடும்பம் பட்ட துயரங்கள், ஈஸ்வரி மேற்படிப்பிற்காக செல்லவிருக்கும் பயணத் திட்டங்கள், அவர்களுடைய குடும்பப்பின்னணி, கிராமம், அதன் அமைப்பு, உறவுகள், அதன் சிக்கல்கள் இது ஒரு நாவல்.
மன்னர் மன்னன் என்ற துறைத்தலைவரால் ஓயாமல் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் மாணவியல்ல ஒரு பேராசிரியரின் துயரம். தனக்கேற்பட்டச் சித்திரவதையை, கசப்பான அனுபவத்தை நிர்வாகத்திடமும், முதல்வரிடமும், முறையிட்டுமுறையிட்டுத் தோற்றுப்போன, கல்லூரி நிர்வாகத்தாலும் சகப் பேராசிரியர்களாலும் அவதூறு பரப்பப்பட்ட, இழிவாகப் பேசப்பட்ட, நடத்தப்பட்ட ஒரு பேராசிரியையின் மனக்குமுறல், போராட்டம். கல்லூரி நிர்வாகம் – கல்லூரியின் புனிதம் என்ற பெயரைக் காப்பாற்றச் செய்யும் இழிசெயல்கள், தந்திரங்கள், ஏமாற்றுவேலைகள் – இது ஒரு நாவல்.
பத்துவயதுகூட நிரம்பாத ஆந்திரவைச் சேர்ந்த ’சைலு’ என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. அதனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு. பாலியல் பலாத்காரத்தை நேரில் பார்த்த சிறுவன். கொடூரத்தை நேரில் பார்த்ததால் தொலைக்காட்சிகளுக்கும், செய்திதாள்களுக்கும் பேட்டியளித்துபேட்டியளித்து சலித்துப் போவது, காவல்நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் சாட்சி சொல்ல சென்றுசென்று திரும்புவது, ஆதரவற்ற குழந்தைகள், அனாதை இல்லங்கள்,  காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் மனநெருக்கடிகள்,  மனம் பேதலித்து ஆற்றில் வெள்ளம் வருவதை அறியாமல் நடந்து செல்கிற சைலுவை காப்பாற்றப் போய் சங்கவை காணாமல் போவது. இது ஒரு நாவல்.
சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி, எபி, அரவிந்த், பிரான்ஸ் தேசத்துக்காரன் போன்றவர்களுடைய நட்பு மனிதர்களால் அன்பைப் பெறாமலோ வழங்காமலோ இருக்க முடியாது. காயங்கள், துன்பங்கள், துரோகங்கள், கயமைத்தனம் என்று பலதும் இருந்தாலும் மனிதர்களுடன் தானே மனிதர்கள் வாழமுடியும்? இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்விக்கும் எபிக்குமான காதல். அரவிந்துக்கும் பிரியாவுக்குமான காதல். சங்கவைக்கும் பிரான்ஸ் தேசத்துக்காரனுக்குமான நட்பு, அன்பு, மறைமுகமான காதல் . இந்த மூன்று காதல்களின் தோல்வியும் அந்த தோல்விக்குப் பின்னுள்ள துயரம் ஒருபுறம். அரவிந்த் அவனுடைய மனைவி, எபி அவனுடைய மனைவி கேத்தரின் இவர்களுக்கான உறவு. இது ஒரு நாவல் .
சைலு, மீனலோசனி, மெர்வின் சங்கீதா, ராஜா, பாலா என்று குழந்தையின் உலகம். குடும்பத்தைக் காப்பாற்ற சுண்டல் விற்கும் சிறுவன், வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட சைலு அதை நேரடியாகப் பார்த்த முதன்மை சாட்சி பாலா. இரண்டு அனாதைக் குழந்தைகள் உள்ள காப்பகங்கள் அங்கு வாழும் குழந்தைகள். இது ஒரு நாவல்.
தாயிடம் பால் குடிப்பதைக்கூட மறக்காத பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கிற வழக்கம்- எப்படி தமிழ்ச் சமூகத்தின் நாகரிகமாகப், பண்பாடாக மாறியது. அரசு இலவசமாகத் தரவேண்டிய கல்வி எப்படி தனியார் மயமாயிற்று? வியாபாரமாயிற்று? குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் பணம் பறிப்பதற்கான கருவிகளாக எப்படி மாற்றப்பட்டார்கள்? தாய்மொழியில் பேசவிடாத, தாய்மொழியில் படிக்கவிடாத, பள்ளிகள் எப்படி தரமான சிறந்தப் பள்ளிகளாக இருக்கும்? “இந்த பள்ளிக்கூடத்தில் தமிழும் சொல்லித் தர்றாங்களா? அப்படின்னா வந்திருக்கவே மாட்டேன் ”என்று கேட்டு அதிர்ச்சி அடைகிற எபியின் மனைவி கேத்தரின். இது ஒரு நாவல்.
தமிழ்ச்செல்வி, அவளுடைய விதவைத்தாய் மருதாயி, அவளுடைய வாழ்க்கை, உழைப்பு, கிராமம், தமிழ்ச்செல்வியின் கவிதைகள், மருதாயியின் மரணம், எபியின் மீதான அன்பு, எபி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல், தனியார் பள்ளியில் வேலை செய்வது, அரசு வேலை கிடைப்பது, தமிழ்ச்செல்வியின் வாழ்க்கை. இது ஒரு நாவல்.
சென்னை சென்ட்ரல், எக்மோர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கன்னிமரா நூலகம், பாண்டி பஜார், பரந்த கல்லூரி வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், பெசண்ட் நகர் கடற்கரை என்று சென்னை சார்ந்த விவரிப்புகள் ஒருபுறம். மறுபுறம் ஆலங்குளம், கொக்கிரக்குளம், முத்தாலம்குறிச்சி, வீர மாணிக்கப்புரம், கண்டரமாணிக்கம், வண்ணாரப்பேட்டை, ஆனாப்பட்டி போன்ற கிராமங்கள் நாவலில் விஸ்தாரமாக விவரிக்கப்படுகிறது.  சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலுக்காகக் காத்திருக்கும் பெருந்திரளான மனிதக் கூட்டத்தைக் காட்சிப்படுத்துகிற நாவலாசிரியை ஆனாப்பட்டி ஆற்றில் ஊர்க்கதை பேசியபடி நிதானமாகக் குளியல் போடும் பெண்களைப் பற்றியும் எழுதுகிறார். செயற்கையாக அல்ல இயற்கையாக.  கிராமம், நகரம், அதன் வாழ்வு. நெருக்கடி. இது ஒரு நாவல்.
சங்கவை – அரசியல் நாவல் என்றும், குழந்தைகள் நாவல் என்றும், கல்விச் சூழல் பற்றிய நாவல் என்றும், ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய நாவல் என்றும்,  பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்கள் பற்றிய நாவல் என்றும், முறிந்து போன காதல்கள் பற்றிய நாவல் என்றும், நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகள், நம்பிக்கைகள் பற்றிய நாவல் என்றும், தன்னுடைய அன்பை கண்ணீரை வலியை, கவிதையாக வெளிப்படுத்துகிற தமிழ்ச்செல்வி பற்றிய நாவல் என்றும், இயற்கை விவசாயம் பற்றி பேசுகிற சேது குமணன் பற்றிய, குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டுள்ள கமலவேணி பற்றிய நாவல் என்றும் : இப்படி பல நாவல்களின் தொகுப்பாக இருக்கிற நாவல் சங்கவை.
சங்கவை நாவலில் கிராமத்திலிருக்கும் படிக்காத, நாகரீகமில்லாத பெண்களைவிட  படித்த, நாகரீகம் மிக்க, பதவியிலிருக்கிற பெண்கள் மட்டுமல்ல பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாக அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைக் காட்சி ரூபமாக உணர முடிகிறது. சங்கவை நாவல் பெண்கள் படும் துயரம் பற்றிப் பேசினாலும் நவீனப் பெண் எழுத்தாளர்கள் மாதிரி – முலை, யோனி, பனிக்குடம், மாதவிடாய் வலி போன்ற வார்த்தைகளை எழுதி தானொரு பெண் நாவலாசிரியை, பெண் சிந்தனையாளர் போன்ற பட்டங்களைப் பெறவோ, மலினமானப் புகழைப் பெறவோ, ஜெயசாந்தியின் எழுத்து முயற்சிக்கவில்லை. இது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்று. சங்கவை நாவலில் பெண்கள், அவர்களுடைய மன உலகம் பற்றி பேசப்படுகிறது. ஆண்களின் உலகமும் பேசப்படுகிறது. ஆண்களின் இழி குணத்தைப் பேசும்போது – ஆண்களை குற்றம் சொல்லாமல் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குற்றம் சுமத்துகிறது. ஆண்களுக்கான திமிர் தனத்தை நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும்தானே தருகிறது என்ற குற்றச்சாட்டும், இந்த சமநிலை பார்வை தான் மற்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து சங்கவை நாவலை விலக்கியும், சற்று உயரத்திலும் வைத்திருக்கிறது.
நாவல் முழுவதிலும் ஒரே நேரத்தில் மூன்று விதமான மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.  நகரத்து மொழி, கிராமத்து மொழி, கனவு மொழி. மொத்த நாவலிலும் மொழி சார்ந்த குழப்பங்கள் ஏதுமில்லை. ஏழெட்டு நாவல்களின் தன்மையை உள்ளடக்கியதாக இருந்தாலும் கதையிலும் கதை சொன்ன விதத்திலும் குறைபாடு ஏதுமில்லை. இது ஜெயசாந்தியின் எழுத்திற்குக் கிடைத்த வெற்றி.
பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது சங்கவை நாவல். அதேநேரத்தில் சில சறுக்கல்களையும் கொண்டிருக்கிறது. படித்த விவரமான சங்கவை பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட சைலு என்ற குழந்தையைக் காப்பாற்றப் போய் காணாமல் போவது நம்பும்படியாக இல்லை. கதையின் வெற்றி என்பது நம்பகத்தன்மையைப் பொறுத்தது மட்டுமே.
தனியார் கல்லூரியின் தாளாளர் சேதுகுமணன், அவருடைய தாராளக் குணம்  இயற்கை விவசாயம் சார்ந்த அவருடைய ஈடுபாடு, அடித்தளமில்லாமல் இருக்கிறது. தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அதனுடைய தாளாளர்கள், முதல்வர்கள் எப்போதும் கெடுபிடியாகவும் கடுமையான சட்டத்திட்டங்களை கடைப்பிடிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். கெடுபிடிகள் தானே தனியார் கல்லூரி பள்ளிகளின் பெருமை. அதை சேதுகுமணனும் கமலவேணியும் இழந்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
நாவலில் வரக்கூடியவர்கள் அனேகம்பேர் புனிதர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் பெரிய புனிதர் எபி. ஈஸ்வரி, சங்கவை, தமிழ்ச்செல்வி போன்றவர்களுக்கு அவர் ஓடிஓடிச் செய்கிற உதவி ஆச்சரியம். பெண்களின் மனமறிந்து குறிப்பறிந்து செயல்படுகிறார். சங்கவையின் பிறந்தநாளுக்கு வைரமோதிரம் பரிசளிக்கிறார். அன்பு, நட்பு, உதவும் குணத்திற்கு ஒரு எல்லை உண்டுதானே. உயிராகக் காதலிக்கும் தமிழ்ச்செல்வியைப் புறக்கணித்து தாய் தந்தையரின் பேச்சை மீறாத பிள்ளையாக, புனிதராக எபி இருக்கிறார். இரவும் பகலும் ஓயாமல் ரசித்துரசித்து காதலித்த, காதலன் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்போது மிகவும் நிதானமாகவும், கண்ணீரோடும், இழப்பை ஏற்றுக்கொள்ளும தமிழ்ச்செல்வி – அதிசய பெண்தான். புனித பெருமைகள் ஏன் பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. தமிழ்ச்செல்வி பாத்திரம் செயற்கை.
கலைவாணி, சங்கவை, ஈஸ்வரி, தமிழ்ச்செல்வி இவர்களின் நட்பு மொத்த நாவலில் எந்த இடத்திலும் கசப்பாகவில்லை. சங்கவை மீது அவளுடைய மாமா நரசிம்மனும், அத்தை மரகதமும் காட்டுகிற அன்பு – மிகை. நரசிம்மனும், அத்தையும் எந்த இடத்திலும் முகம் சுளிக்காதது ஆச்சரியச்சம். புனிதர்கள் எப்போதும் புனிதர்களாகவும், கழிசடைகள் எப்போதும் கழிசடைகளாகவே இருப்பார்களா?
ஆண்கள் எழுதினாலோ, பெண்கள் எழுதினாலோ கதைகளில் வரக்கூடிய பெண்கள் மட்டும் எப்போதும் ‘வெள்ளை மனம்’  கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிசயம் தான். “ஒருபோதும் வாடாத பிச்சிப்பூவாய் இருக்கும் அக்காவின் கண்கள்” (ப.435) இது போன்ற சித்தரிப்புகள் பெண்களை முடமாக்குகிற கருவிகள். இந்த கருவிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசுகிற, எழுதுகிற நாவலாசிரியர் அதை மறந்துவிட்டு எழுதுவது நாவலாசிரியரின் குற்றமல்ல. நமக்குள் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் எப்படி ஊறி இருக்கிறது என்பதற்கு இது போன்ற சித்தரிப்புகள் உதாரணம்.
சங்கவை நாவலில் மதம் சார்ந்த, தெய்வ நம்பிக்கைகள் சார்ந்த, கனவுகள், சம்பவங்கள் சித்தரிப்புகள் அதிகம் வருகின்றன. ஆனால் சாதி சார்ந்த, சாதி இழிவுகள் சார்ந்த பேச்சு எங்குமே வரவில்லை. நம்முடைய சமூகத்தில் பொதுவெளியிலும் கல்வி நிலையங்களிலும் மனிதர்களை இழிவு செய்கிற பெரிய ஆயுதம் சாதி. அது குறித்து நாவலில் ஒரு சொல்கூட இல்லை. தமிழர்கள் சாதி சார்ந்த அடையாளங்களுடன் தானே எப்போதும் வாழ்கிறார்கள்?
ஈஸ்வரியை ‘ஈஷ், ஈஷ்’ என்று அழைப்பதும் சங்கவையைச்  ‘சங்கு’,  ‘சங்கி’ என்று அழைப்பதும், செண்பகத்தைச் ‘செண்பா’ என்று அழைப்பதும் எரிச்சலூட்டுகின்றன. தமிழர்கள் ஏற்கனவே தங்களுக்கான பல அடையாளங்களை இழந்து விட்டார்கள். பெயரையும் இழப்பது நியாயமில்லை.
தமிழ் நாவல் இலக்கியப் பரப்பில் சங்கவை நாவலுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. அந்த இடம் நாவலின் மையத்திற்கு, நாவல் எழுதிய மொழிக்கு, கட்டமைப்புக்கு, கிளை கிளையாகக் கதைகளை உருவாக்கியதற்கு, நாவலின் சமூக அக்கறைக்கு மதிப்பு வாய்ந்த இடமுண்டு.

சங்கவை (நாவல்),                                         உயிர்மை – ஏப்ரல் 2015.
இ.ஜோ.ஜெயசாந்தி,
வெளியீடு – விருட்சம்,
சீத்தாலட்சுமி அப்பார்ட்மண்ட்ஸ்,
16 – ராகவன் காலணி,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 33,
விலை – 820.


செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நேர்காணல் – எழுத்தாளர் இமையம் 12.04.15 – கல்கி வார இதழ்.

நேர்காணல் – எழுத்தாளர் இமையம். 12.04.15 – கல்கி வார இதழ்.

1.   நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? வாசக காதலிகள் என்று யாரும் உங்களுக்கு உண்டா?
எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், வாசிப்பின் ஈர்ப்பினால்
காதலிகள் ஏற்படுகிறார்கள், ஏற்படுவார்கள், ஏற்பட்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனது முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை காதல் ஏற்படவில்லை. இனிமேலும் ஏற்படாது. மீறி ஏற்பட்டாலும் என்னால் காதலிக்க முடியாது. காரணம் உலகிலேயே பெரிய வேலை, கடினமான வேலை காதலிப்பது. காத்திருத்தலைவிட பெரும் துயரம் வேறு என்ன இருக்கிறது? சிரித்துசிரித்து வளர்க்கிற காதல் பிறகு காயமாகி, சீழ்பிடித்து நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும். எனக்கு அப்படியான காதல் வேண்டாம். எழுதுவது என்பது சமூகத்திற்கு எதிர்விணையற்றவே. வாசக காதலிகள் ஏற்படுவார்கள் என்பதற்காக அல்ல.
       இருநூறு பக்கம், முந்நூறு பக்கம் என்று நாவல் எழுதுகிறவனை, சிறுகதை என்றால் பத்து முதல் இருபது பக்கம் எழுதுகிறவனுடைய எழுத்தை இப்போது யார் படிக்கிறார்கள்? அவ்வளவு பக்கங்களை படிப்பதற்கு இன்று யாருக்கு நேரம் இருக்கிறது? இப்படி பக்கம்பக்கமாக எழுதுவதை யார் விரும்புகிறார்கள்? முகநூலிலும், பிளாக்கிலும், வெப்சைட்டிலும், விக்கிப்பீடியாவிலும் உண்மையான பிறந்தநாளை போடுகிற என்னைப் போன்றவர்களை ‘அங்கிள்’, ‘தாத்தா’ என்றுதான் இளம்பெண்கள் அழைக்கிறார்கள். முகநூலில் ‘லைக்’ போடுகிறவர்களுக்கும், இரண்டு வரி நான்கு வரி கவிதை என்று துணுக்கு செய்திகளை எழுதுகிறவர்களுக்கும்தான் இன்று செல்வாக்கு.
       எனக்கு வாசகக் காதலிகள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் இருக்கலாம். என்னைவிட அதிகம் பெண்களை நேசித்த தமிழ் எழுத்தாளர் யாருமில்லை என்பது என் கருத்து. என் மூன்று நாவல்களில் வருபவர்கள் அநேகம்பேர் பெண்கள்தான். செடல், தனபாக்கியம், ஆரோக்கியம் என்று. நான் இதுவரை எழுதியிருக்கிற ஐம்பது சிறுகதைகளிலும் பெண்கள்தான் முதன்மைப்பாத்திரம். சின்னம்மாள், மலர், செல்வராணி, பொன்னம்மா, திருட்டுப்போன பொண்ணு, திருட்டுப்போன பொண்ணு, சந்திரவதனம், பொம்மி, பூங்குழலி என்று மொத்தத்தில் நூறு பெண்களாவது இருப்பார்கள். இவர்களைத்தான் நான் விரும்பினேன். அதனால்தான் எழுதினேன். என் எழுத்தில் வரும் பெண்களையே காதலிக்கிறேன். அவர்களுக்காகவே காத்திருக்கிறேன். அவர்களுக்காகவே சிரிக்கிறேன். அழுகிறேன். இதுதான் என்னுடைய காதல் என்பது.

2.   கட்சியில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் வரை ‘மஞ்சள்’ நிறத் துண்டு அணிய வேண்டும் என்று கட்டளை வந்தால் என்ன செய்வீர்கள்?
அப்படி ஒரு அறிவிப்பு, கட்டளை கட்சியிடமிருந்தோ, தலைவரிடமிருந்தோ நிச்சயம் வராது. மீறி வந்தால் அதை ஏற்கமாட்டேன். எதிர்க்கவே செய்வேன். தலைவரிடம் கடிதம் கொடுத்து அறிவிப்பை திரும்பப் பெறச் செய்வேன். சாதாரண தொண்டனின் கருத்தை கேட்கிற கட்சித் தலைமை தி.மு.க.தான்.

3.   உங்களுக்கு யாராவது பட்டப் பெயர் அளித்துள்ளனரா? நீங்களாக சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ஏதாவது உண்டா?
எனக்கு யாரும் பட்டப்பெயர் தரவில்லை, நானாகவும் சூட்டிக்கொள்ளவில்லை. பட்டப்பெயர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறுகதைச் செம்மல், பதிப்புச் செம்மல், காலத்தின் கலைஞன், நாவல், சிறுகதையின் முன்னோடி, மகா கலைஞன், உன்னதக் கலைஞன், மாமணி, வித்தகக் கவிஞன், உரைநடை மேதை, இலக்கிய வழிகாட்டி, கவிக்கோ, கவியரசு, கவிப்பேரரசு, காவிய எழுத்தாளன், காவியக் கவிஞன், மகாகவி – என்பது போன்ற பெயர்கள் எல்லாம் ஐம்பது, அறுபதுகளுக்கு பிறகுதான் உருவாகிற்று. இப்படியான பட்டப்பெயர்களில் எனக்கு துளி அளவும் மரியாதை இல்லை. இதுபோன்ற பட்டப்பெயர்கள் என்னை அருவருப்பு அடையச் செய்கின்றன.

4.   ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி நீங்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதவில்லை. வாய்ப்பு தரவில்லையா, கதை வசனம் எழுத விரும்பவில்லையா?
இதுவரை மட்டுமல்ல இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதமாட்டேன். காரணம் தமிழ் சினிமா மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது. தமிழ் சினிமாவின் பெரிய கதாநாயகர்கள் என்று கொண்டாடப்படுகிற விக்ரம், விஜய் மட்டுமல்ல, புரட்சியும், சீர்த்திருத்தக் கருத்தும் பேசுகிற விவேக், சந்தானம் போன்றவர்கள் ஷகிலாவோடு போட்டிப்போட்டு நடிக்கிறார்கள். இப்போது ஷகிலாதான் நகைச்சுவை காட்சிகளில் அதிகம் வருகிறார். ஷகிலா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, குற்றச்சாட்டும் இல்லை. நம்முடைய கதாநாயகர்கள் மீதுதான் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஷகிலாவோடு நடித்தவர்களைத்தான் தமிழகத்தின் எதிர்காலம் என்று கொண்டாடுகின்ற அவலம். இப்படியான அவல, இழிவான சூழல் நிரம்பிய தமிழ் சினிமாவிற்கு நான் என் வாழ்நாளில் ஒருபோதும் கதை வசனம் எழுத மாட்டேன்.

5.   தமிழ் சினிமாவில் உங்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால், நீங்கள் யாரை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பீர்கள்?
குருடர் பார்க்கிறார். செவிடர் கேட்கிறார். நொண்டி நடக்கிறார் என்று யேசுசபை பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசங்கம் செய்வது மாதிரி என்றுமே நடக்காத விஷயத்தை கேட்கிறீர்கள்? எனக்கு நடிக்கத் தெரியாது. நடிக்கவும் வராது. தனி மனித வாழ்க்கையிலும், இலக்கிய, அரசியல் வாழ்க்கையிலும் நான் இதுவரை நடித்ததில்லை. நான் எழுத்தாளன். குறைந்தபட்ச நேர்மையுடனாவது வாழவேண்டும். நடிப்பிற்கு, போலித்தனத்திற்கு எதிரானது எழுத்து. மீறி நடிக்க வந்தால் – குறைந்தபட்சம் நாற்பது ஐம்பது சதவிகித உடலையாவது பாடல் காட்சிகளில் மறைத்துக்கொண்டு நடிப்பேன் என்று நிர்ப்பந்தம் செய்கிற நடிகையோடு மட்டும்தான் நடிப்பேன். அப்படியான குணம்கொண்ட நடிகையையே கதாநாயகியாக தேர்வு செய்வேன். அப்படி ஒருவர் வருவாரா? ஆடைகளைக் குறைத்து நடிப்பதில்தானே இப்போது நம்முடைய நடிகைகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

6.   அண்மையில் கல்லூரிகளில் முத்தமிடுகிறப் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்தார்கள். முத்தமிடுவதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் யாருக்காவது முத்தமிட்டு இருக்கிறீர்களா?
நான் இதுவரை யாருக்கும் முத்தமிட்டதில்லை. எனக்கும் யாரும்
முத்தமிட்டதில்லை. எச்சில் வழியாகத்தான் அதிகப்படியான நோய்கள் பரவுகின்றன என்பது என் கருத்து. நோயைப் பரப்புகிற காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? தற்காலத்தில் வீட்டில் அந்தரங்கமாக செய்ய வேண்டிய பல காரியங்களை எல்லாம் பொது வெளியில் செய்கிறார்கள். அது சரியான நடவடிக்கை அல்ல. கல்லூரிகளில் முத்தமிடும் போராட்டத்தை மாணவ மாணவிகள் அறிவித்திருந்தார்கள். அது ஏற்கத்தக்கது அல்ல. கல்லூரி என்பது கற்பதற்கான, கற்பிப்பதற்கான இடம். முத்தமிடுவதற்கான இடம் அல்ல. தனிமனித விருப்ப செயல்பாட்டில் சாதியோ, மதமோ அதனுடைய அமைப்புகளோ ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. தனிமனித விருப்பத்தில் மதம் சார்ந்த அமைப்புகள் தலையிட்டதால்தான் முத்தப்போராட்ட அறிவிப்பு வெளியானது.

7.   கருப்பு சிவப்பு நிறத்தைத்தவிர வேறு என்ன நிறம் பிடிக்கும்?
ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அழகுதான். அதனால் நான் நிறங்களில் பேதம் பார்ப்பதில்லை. கட்சி நிறம் கருப்பு சிவப்புதான். இதுவரை நான் கட்சி மாறியதில்லை. நிறத்தையும் மாற்றியதில்லை. நான் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். வேட்டி என்றால் வெள்ளை வேட்டி. பேண்ட் என்றால் கருப்பு.

8.   சர்ச்சை, தடை, போராட்டம் – ஏற்படும் வகையில் நாவல், சிறுகதை எழுத திட்டம் உண்டா?
ஒரு வாழ்வை – அதன் இயல்பில் எழுத வேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். சர்ச்சையை, தடையை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எழுதுவதில்லை. என் நாவலோ, சிறுகதையோ சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் நான் ஒருபோதும் எழுதியதில்லை. அப்படி சிந்தித்ததும் இல்லை. மலினமான வகையில் புகழ் பெறுவது எழுத்தாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அப்படி எழுதுகிறவன் எழுத்தாளன் அல்ல. சர்ச்சையை, தடையை, பரபரப்பை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எழுதப்படுவது இலக்கியப் படைப்பே அல்ல.

9.   தாமரைக்கனி போன்று மோதிரம் அணியவும், அதை கொண்டு குட்டவும் விரும்பியதுண்டா?
நிச்சயமாக இல்லை. தாமரைக்கனி மட்டுமல்ல அவரைப் போன்று மோதிரம் அணிந்திருப்பவர்களை நான் விரும்பியதில்லை. ஒருபோதும் மதித்ததுமில்லை. தாமரைக்கனி போட்டிருந்தது மோதிரம் அல்ல. முறம். அது ஜால்ரா போடுவதற்கான அடையாளமாக, கூழைக் கும்பிடு போடுவதற்கான அடையாளமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. எந்த கட்சியினர் போட்டிருந்தாலும் சரி, அதுபோன்ற மோதிரங்களை நான் இழிவின் சின்னமாகவே பார்க்கிறேன். இப்படியான மோதிரம் அணிந்திருப்பவர்கள் தங்களை தாங்களே பச்சோந்திகள் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்கள். இந்த இழிவான கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

10.  நீங்கள் ஏன் உண்மையான அரசியல்வாதி ஆகவில்லை?
எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரியாக இருப்பவர்களும், கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களும் மட்டும்தான் அரசியல்வாதியா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறான கருத்து. சிறு சிறு செயல்களிலும் அரசியல் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சரியாக சொன்னால் உண்மையான அரசியல்வாதி எழுத்தாளன்தான். எழுத்து செயல்பாடு என்பதே அரசியல் செயல்பாடுதான். விட்டுக்கொடுத்தல் இல்லாத, சமரசம் செய்துகொள்ளாத அரசியல்வாதி – எழுத்தாளன் மட்டுமே.

11.  வெளியில், மேடைகளில் சாமி, கடவுள் இல்லையென்று பேசிவிட்டு, வீட்டில் மட்டும் சாமி, கடவுளை கும்பிடும் நபரா நீங்கள்?
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி’ என்று பேசியவன். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பேய் என்று ஒன்று இல்லை என்று சுடுகாட்டில் ஒரு இரவு முழுவதும் நண்பர்களுடன் இருந்தவன். இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால்தானே கும்பிடமுடியும்? நம்முடைய கடவுள்கள் மனிதால் மண்ணாலும், மரத்தாலும், உலோகத்தாலும் செய்யப்பட்டவைதான். சாமி படங்கள் எல்லாம் ஆர்ட்டிஸ்டுகள் வரைந்த ‘பொம்மை’ சித்திரங்கள்தான். நான் எழுத்தாளன். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, மக்கள் விரோதப் போக்கின் செயல்களுக்கு எதிராக எழுதுகிறவன்தானே எழுத்தாளன். அப்படி எழுதுகிறவன்தானே நிஜமான எழுத்தாளன். அந்த வகையில் என்னுடைய வேலையை மிகச் சரியாக செய்துகொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

12.  யாரையாவது உதைக்க வேண்டும் என்று தோன்றியதுண்டா?
இல்லை. என்னை யாரும் உதைத்துவிடக்கூடாது என்ற கவலையும் பயமும்தான் எனக்குள் எப்போதும் இருக்கிறது. அதனால் அதிக நெரிசல்மிக்க இடங்களுக்கு செல்வதைத்தவிர்த்துவிடுவேன். எழுத்தாளனின் நோக்கமும், எழுத்தின் நோக்கமும் சமூகத்தில் தனிமனித வன்முறை, அரசியல் வன்முறை, குழு, சமூக வன்முறையோ நிகழக்கூடாது என்பதுதானே. அப்படியிருக்கையில் என் மனதில் பிறரை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படப்போகிறது? அது சமூக விரோத செயல். அதை நான் விரோதத்தில், கோபத்தில்கூட செய்யமாட்டேன். இதுவரை செய்ததுமில்லை. செய்ய நினைத்ததுமில்லை.

13.  முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்க்க வாய்ப்பு இருந்தால் – நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள், கட்சி நிர்வாகிகளே அவரைப் பார்க்க முடிவதில்லை. இப்படியான நிலையில் நான் எப்படி அவரைப் பார்க்க முடியும்? உங்கள் ஆசைப்படி அவரைப்பார்க்க நேர்ந்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்,
   சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வை, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை உன் பெயரில் வாங்கு, இங்கிலாந்தில் ப்ளசண்ட் டே ஹோட்டலை வாங்கு, கொடநாடு எஸ்டேட்டையும், பையூர் பங்களாவையும், சிறுதாவூர் பங்களாவையும் வாங்கு என்று கலைஞர் சொன்னாரா? அவருடைய உத்தரவின் பேரிலா இந்த காரியங்களை எல்லாம் செய்தீர்கள்? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக – கவர்னரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டது சுப்பிரமணியன் சுவாமி தானே? நீங்கள் செய்த காரியங்களுக்கெல்லாம், நீங்களும், உங்களுடைய கட்சியினரும்தானே காரணம். ஏன் கலைஞரைத் திட்டுகிறீர்கள்? அதில் ஞாயம் இருக்கிறதா?

12.04.15 – கல்கி வார இதழ்.



விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன் விமர்சனம் – இமையம்.

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன்
விமர்சனம் – இமையம்.

       தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம் என்று கொண்டாடுகிறோம். பொய், புகழ் உரைகளை நாடுகிறவன், வெகுமதி எனக் கருதுகிறவன் இலக்கியப் படைப்பாளி அல்ல. ஒரு படைப்பை படிப்பதற்கும், அது குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அறிவும், பயிற்சியும் வேண்டும். ரசனை உணர்வும் வேண்டும். பிற வறுமைகளை எளிதில் போக்கிவிட முடியும். அறிவு வறுமையை எப்படி போக்க முடியும்? போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டில், வறுமை, பசி நிறைந்த நாட்டில் வாழ முடியும். ஆனால் அறிவு வறுமை நிறைந்த நாட்டில் வாழ்வது எளிதல்ல. தமிழ்ச் சமூகம் அறிவு வறுமைக்கு உட்பட்ட சமூகமாக இருக்கிறது. அறிவு வறுமை நிறைந்த சமூகத்தில் எங்காவது சிறு வெளிச்சம் தென்பட்டால் அதுதான் பெரிய மகிழ்ச்சி. ம.நவீன் எழுதிய – ‘விருந்தாளிகள் விட்டுச் சொல்லும் வாழ்வு’ கட்டுரைத் தொகுப்பில் – கைவிளக்கு வெளிச்சம் இருக்கிறது.
       அண்மைக்காலத்தில் ம.நவீன் படித்த நூல்களைப்பற்றிய விமர்சனங்கள்தான் – பனிரெண்டு கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாவல்களையும், தன் வரலாற்றுக் கதைகளையும் படிக்கும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எவ்விதமான பாசாங்கும் இல்லாமல், என்ன நினைப்பார்களோ என்ற பயமில்லாமல் எழுதியிருக்கிறார். எழுத்தின் பலம் என்பது உண்மைதான். அது இந்தத் கட்டுரை நூலில் இருக்கிறது.
       அ.ரங்கசாமி எழுதிய ‘நினைவுச் சின்னம்’, ‘இமையத் தியாகம்’ நாவல்கள் குறித்து இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இந்த இரண்டு நாவல்களும் எப்படி மலேசிய வாழ்வை, வரலாற்றை, சமூக இயங்கியலை புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறது, வரலாறு எப்படி நாவலானது என்பதை ரசனை உணர்வுடன் சொல்கிறார் ம.நவீன். ஒரு நாவலாசிரியனின் வேலை கதை சொல்வது மட்டுமல்ல. கதையை அல்ல காலத்தை எப்படி ஆவணமாக்குகிறான், அதை எப்படி கலையாக்குகிறான் என்பதையும், அக்காரியத்தை அ.ரங்கசாமி எப்படி நேர்மையான முறையில் செய்திருக்கிறார் என்பதையும் அழகாக சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். அதே நேரத்தில் ‘இமையத் தியாகம்’ நாவலில் என்னென்ன விதமான குறைபாடுகள் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். ஒரு படைப்பில் குறைகளைக் காண்பது என்பது காழ்ப்புணர்வால் ஏற்படுவதல்ல.
       ப.சிங்காரத்தின் – ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் கதைக் களம், கதை நிகழும் காலம், அன்றைய மனிதர்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தும் விளைவுகள், நாவலின் மையப் பாத்திரமான பாண்டியனின் மன உலகு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாவலாசிரியர் எப்படி விவரித்திருக்கிறார் என்பதை ம.நவீன் சொல்கிறார். நாவலை படிக்கத்தூண்டும் விதமாக, நன்றாக கதை சொல்லத் தெரிவது மட்டுமல்ல, ஒரு நாவலை மற்றொரு நாவலுடன் ஒப்பிட்டும் சொல்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த விதத்தில் முக்கியமானது? அதற்கான காரணங்கள் எவை? இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் பல நாவல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. பல நாவல்கள் இருந்தும் – குறிப்பாக இந்த நாவலை மட்டும் ஏன் பேச வேண்டும்? ஒரு நாவல் எப்படி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விக்கு – மொழி, கதையின் மையம், கதையை சொன்னவிதம், சமூகப் பொருத்தம் என்று பலதும் சேர்ந்துதான் நாவலுக்கான மதிப்பை ஏற்படுத்துகிறது ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும், அ.ரங்கசாமியின் ‘இமையத் தியாகமும் எப்படி ஒன்றுக்கொன்று இணைந்தும், முரண்பட்டும் நிற்கின்றன என்பதையும் ம.நவீன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு புதிதாக நாவல்களை படிப்பவர்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடும். படைப்பு குறித்த வெளிச்சத்தைக் கூட்டும். ஒரு விமர்சகன் செய்ய வேண்டிய வேலை இதுதான். அன்பை சொல்வதல்ல விமர்சனம்.
       சா.ஆ.அன்பானந்தனின் – ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் மலேசிய மக்களின் இருண்டகால, வறுமை நிறைந்த வாழ்வை நேர்மையோடும் அழகியல் உணர்வோடும் எப்படி பதிவு செய்தது? அந்நாவல் எப்படி மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பிடித்தது? என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு இலக்கியப் படைப்பு எழுதப்படுவதின் நோக்கம் வாசகர்களை குஷிப்படுத்துவதல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைத் தருகிறவன் எழுத்தாளன் அல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைப் படிக்கிறவன் தேர்ந்த வாசகனும் அல்ல. ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் குறிப்பிட்ட கால வாழ்வை அப்பட்டமாக சொன்னது. இப்படியான நாவல்களின் மூலம்தான் – நாம் நமக்கான வேர்களை அறிய முடியும் என்று சொல்கிற ம.நவீன், ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு எப்படியானதொரு வாழ்வை பதிவு செய்தது என்பதையும் சொல்கிறார். ஒரு இனக்குழு மக்கள் எப்படி ஓயாமல் போராடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்? அதற்கான எத்தனங்கள், போராட்டங்கள், பலிகள், எவைஎவை என்பதை மனச்சாய்வின்றி கலைஞன் எப்படி பதிவு செய்கிறான் என்பதையும் நாவலாசிரியனுக்கான கடமை என்ன என்பதையும் ‘மரவள்ளிக் கிழங்கு’, ‘ஆழி சூழ் உலகு’ நாவல்களின் வழியே விளக்கமாக சொல்கிறார்.
       ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, நாளை மற்றுமொரு நாளே’ – இரண்டு நாவல்களைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டு நாவல்களின் அசலான தன்மை குறித்தும் கட்டுரை ஆசிரியர் பேசுகிறார். ஜி.நாகராஜின் பலம் எது, பலவீனம் எது – அதையும் எழுதிருக்கிறார். அதே நேரத்தில் ஜி.நாகராஜனின் எழுத்துலகம் பற்றி தமிழ் அறிவுலகம் புனைந்து வைத்திருக்கும் கற்பனை என்பது மோசடி என்கிறார். ஒருவர் ஒரு படைப்பை பிரமாதம் என்று சொல்லிவிட்டால் ஏன் எல்லாருமே ‘பிரமாதம்’ என்று சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தை முன்வைத்தால் தான் ரசனையற்றவன், இலக்கிய அறிவு அற்றவன் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயமா என்று ம.நவீன் கேட்கிறார். தங்கமான கேள்வி. ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நல்ல விளக்கங்களைத் தந்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். திறம் மிக்க செயல்.
       ‘நாடு விட்டு நாடு’  (முத்தம்மாள் பழனிச்சாமி), ‘கருக்கு’ (பாமா), ‘நான் வித்யா’ (ஸ்மைல் லிவிங் வித்யா), ‘முள்’ (முத்து மீனாள்) ஆகிய நான்கு தன் வரலாற்றுக் கதைகளைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. நான்கு நூல்களையும் ஆழமாகவும், விமர்சனப்பூர்வமாகவும் படித்திருக்கிறார். அதே நேரத்தில் நான்கு நூல்களையும் ஒப்பிட்டும் பார்த்திருக்கிறார். மற்ற தன் வரலாற்றுக் கதைகளைவிட நாடு விட்டு நாடு – மட்டும் எப்படி மேலோங்கி நிற்கிறது. அதற்கான காரணத்தை விரிவாக சொல்கிறார். ஒரு படைப்பு தனக்கான தரத்தை, மதிப்பை தானே உருவாக்கிக்கொள்ளும். எந்த ஒரு படைப்பையும் புறக் காரணிகளால் தூக்கி நிறுத்த முடியாது- அப்படி நிறுத்தினாலும் கொஞ்ச காலம்தான். சொல்லிக் கொடுத்த பேச்சும், கட்டிக்கொடுத்த சோறும் கொஞ்ச நாளைக்குத்தான் நிற்கும். ‘கருக்கு’, ‘முள்’, ‘நான் வித்யா’ ஆகிய நூல்களைவிட ‘நாடு விட்டு நாடு’ – முதன்மையான இடத்தை எப்படி பெறுகிறது என்றால் – எழுத்திலுள்ள நேர்மை. உண்மை. அதுதான் மற்ற படைப்புகளை பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு நல்லப் படைப்பின் வழியேதான் மோசமான படைப்புகளை அடையாளம் காணமுடியும். இதுதான் கலைப்படைப்பிற்கான அளவுகோல். நல்ல தரமான படைப்பு பல தரமற்ற படைப்புகளுக்கு சாவுக் குழியை வெட்டும் என்று ம.நவீன் சொல்கிறார். நல்ல விமர்சனம். நல்ல பார்வை.
       தரம் கெட்ட படைப்புகளை தரமான படைப்புகளின் வழியேதான் அறிய முடியும் என்பதற்கு ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ (எம்.குமாரன்) என்ற நாவலை அடையாளப்படுத்துகிறார் ஒரு கட்டுரையில். மலேசிய நாவல் பற்றி பேசும்போது ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலை தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்று நாவல் குறித்தும், நாவலாசிரியர் குறித்தும் கட்டுரை ஆசிரியர் தருகிற தகவல்கள் மனதிற்கு இசைவாக நம்பும்படியாக இருக்கிறது. மலேசியாவில் நல்ல இலக்கியம் உருவாவதற்கு தன் எழுத்தின் வழியே புதிய சத்தான விதைகளைத் தூவியவர்களில் எம்.குமாரனும் ஒருவர். ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலின் உண்மைத் தன்மை, புனையப்பட்ட விதம், சொல்முறை என்று நாவலைப்பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். ம.நவீனுடைய எழுத்து – விமர்சனம் என்பது – படைப்பு சார்ந்தது, அதன் தரம் சார்ந்தது. எழுத்தாளன் சார்ந்தது அல்ல.
       ‘இராமனின் நிறங்கள்’ (கோ.முனியாண்டி) என்ற நாவலும், ’சூதாட்டம் ஆடும் காலம்’ (ரெ.கார்த்திக்கேசு) என்ற நாவலும் என்ன தரத்திலானவை? மையக் கதையில், கதையை சொன்ன முறையில், கதையை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், சோதனை, புதுப்போக்கு, வடிவ முயற்சி என்று எதுவுமே இல்லாத படைப்புகள் எப்படி கவனம் பெறுகின்றன? சமூகத்தில் அங்கீகாரம் பெறுகின்றன? என்ற முக்கியமான கேள்வியை ம.நவீன் எழுப்புகிறார். அதற்கு ‘இராமனின் நிறங்கள்’, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற இரண்டு நாவல்களையும் எடுத்துக்கொள்கிறார். அரசியல்வாதிகளை, பிரமுகர்களை வைத்து நாவல்களை வெளியிடுவதால் ஏற்படுகிற விளம்பர வெளிச்சம்தான். நாவல் கலையின் வெற்றியா? மேடை நாகரீகம் கருதி புகழப்படும் பொய்யான புகழுரைகளும், அலங்கார வார்த்தை ஜோடனைகளும்தான் இலக்கிய விமர்சனமா? இப்படியான சொற்களில் மயங்கி திரிபவன் நிஜமான கலைஞனா? மலேசிய இலக்கிய உலகம் அரசியல்வாதிகளின் வாழ்த்துகளையே பெரும் வெகுமதியாக கருதுகிறது. (இது தமிழ்நாட்டிற்கும் அப்படியே பொருந்தும்) இப்படியான இழி செயல்களுக்கு, மலிவான புகழ் வெளிச்சத்திற்கு எதிரானவனே கலைஞன். புகழ் தேடி அதிகாரத்திற்குப் பின்னால், பணத்திற்குப் பின்னால் போவதற்கு நேர் எதிரான மனம் கொண்டவனே நிஜமான எழுத்தாளன் என்று சொல்கிற கட்டுரை ஆசிரியர் அதற்கான காரண காரியங்களையும் எழுதுகிறார். போலிகளை அறிந்துகொள்வதற்கு இது மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் உதவவே செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதை பயப்படாமல் சொல்கிறார். கட்டுரை ஆசிரியரின் கோபம் தனி மனிதக் காழ்ப்பு அல்ல. படைப்பின் பலவீனம் சார்ந்த கோபம். போலிகள் கொண்டாடப்படுவதால் ஏற்படுவது. தார்மீகக் கோபம்.
       இசங்கள் பல எழுத்தாளர்களுடைய எழுத்தின் வலிமையைக் குன்ற செய்திருக்கிறது. புதிய பாணி, புதிய மொழி, புதிய எழுத்து என்ற போக்கில் பல எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்தின் வலிமையை இழந்திருக்கிறார்கள். அப்படி தன் எழுத்தின் வலிமையை இழந்த எழுத்தாளர்களில் ஒருவர் கே.பாலமுருகன். அவருடைய நாவல் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். நல்ல எழுத்தாளர் வளமான அனுபவத்திற்குச் சொந்தக்காரர். கதை சொல்லவும், அதை தெளிவாக சொல்லவும் தெரியும். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார். அண்மைக்காலமாக மொழியின் கவர்ச்சியில் சிக்கி – கதையை உருவாக்குவதற்குப் பதிலாக – மொழியை, உயிரற்ற, சாரமற்ற மொழியை மட்டுமே உருவாக்குகிறார். அதற்கு நல்ல உதாரணம் – நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – என்று சுட்டிக் காட்டுகிறார் ம.நவீன். மொழி ஒருபோதும் வாழ்கையை உருவாக்காது. வாழ்க்கைதான் ஒரு மொழியை உருவாக்கும் என்று சொல்லும் கட்டுரை ஆசிரியரின் வாதம் மெய். வரலாற்று நாவல்கள் என்று தமிழ் எழுத்தாளர்கள் தண்டிதண்டியாக, குப்பைகளாக எழுதி குவித்துக்கொண்டிருக்கும்போது அண்மைக் காலத்தில் நடந்த ‘வீரப்பன்’ தேடுதல் வேட்டையில் நடந்து கொடூரங்களைப்பற்றி ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ எப்படி நாவலாகி இருக்கிறது, கலையாகி இருக்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
       விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – நூலின் வழியே ம.நவீனுக்கு ஆழ்ந்தப் படிப்பு இருக்கிறது.  படித்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் திறன் இருக்கிறது. அதை நல்ல மொழியில் சொல்லவும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சி. கட்டுரை ஆசிரியரின் விமர்சனம் படைப்பு, அதன் தரம், முக்கியத்துவம் சார்ந்ததாக மட்டுமே இருப்பது ஆரோக்கியமானது. தனி மனித வெறுப்பு, குழு சார்ந்த வெறுப்பு  எங்குமே இல்லை. பன்னிரெண்டு கட்டுரைகளின் வழியே இருபது நூல்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
       ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ – கட்டுரைத் தொகுப்பு பெரிய வீட்டில் சிறிய அகல் விளக்கை ஏற்றியதைப் போன்றது. விளக்கு சிறியதுதான். ஆனால் நல்ல வெளிச்சம். இது விட்டுக்கொடுத்தல்கள், சமரசங்கள், உள்நோக்கங்கள் இல்லாததால் ஏற்பட்ட வெளிச்சம்.

‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’
(கட்டுரைத் தொகுப்பு)
ம.நவீன்,
வெளியீடு – வல்லினம் (2013),
28, C Jalan SG 3/2,
Taman Sri Gombak,
Batu Caves,
Selangor,
Malaysia.

கணையாழி – ஏப்ரல் 2015