செவ்வாய், 29 ஏப்ரல், 2014

இமையத்தின் படைப்புலகம்.

இமையத்தின் படைப்புலகம்.
மூன்று பேர் – மூன்று பார்வைகள்.

இமையம்: என் காலத்து எழுத்தாளன்
-அ.ராமசாமி.
தொடர்ச்சியாகத் தனது அடையாளத்தை தன் எழுத்தின் வழியே தக்க வைத்து வருபவர் இமையம். கடந்த 20 ஆண்டுகளாக எழுதி வரும் இமையம் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல் என மூன்று நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் என மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் தனது புனைகதை எழுத்தாகத் தந்துள்ளார். இந்த ஆறு நூல்களையும் தமிழின் மிக முக்கியமான பதிப்பகம் க்ரியா வெளியிட்டுள்ளது. க்ரியாவின் எழுத்தாளர் என்ற அடையாளமே தமிழின் முக்கியமான அடையாளம்தான்.    
இமையத்தின் மூன்று நாவல்களில் கோவேறு கழுதைகளும் செடலும் தமிழ்நாட்டின் வடபகுதிப் பேச்சு மொழியை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டவை என்றும், அந்த வட்டாரத்து மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரம் என்றும் தோன்றலாம். ஆனால் அவற்றின் மையப் பாத்திரங்களான ஆரோக்கியமும் செடலும் மனித வாழ்வின் - குறிப்பாகத் துயரார்ந்த இந்தியப் பெண்களின் வகைமாதிரிகள், சடங்கியல் சார்ந்த நம்பிக்கைகளாலும், விதிக்கப்பெற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டாத இந்தியப் பெண்களின் துயரத்தையும் தமிழில் எழுதியதில் அண்மைக்காலச் சாதனையாளராக இமையமே முன் நிற்கின்றார். அதிலும் செடல் நாவலின் கட்டமைப்பும் பாத்திர வார்ப்புகளும் தமிழின் ஒப்பற்ற பேரிலக்கியமான சிலப்பதிகாரம் தரும் உணர்வையும் ஈர்ப்பையும் அளிக்கவல்ல மாபெரும் படைப்பு.
உலக இலக்கியத்தின் பொதுமைக்கூறுகளை உள்வாங்கித் தன் நிலத்தின் பரப்பின் மீதும் மொழியின் மீதும் ஆழமான பிடிமானத்துடன் செயல்படும் இமையத்தின் சிறுகதைகள் கடந்து வந்துள்ள கட்டங்கள் முக்கியமானவை. ஒற்றைக் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி விட்டு அது இயங்கும் வெளியை விவரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்திய தொடக்ககாலக் கதைகளிலிருந்து அண்மைக்காலக் கதைகள் நவீனத் தமிழ்ச் சமூகத்தின் சிடுக்குகளையும் சிக்கல்களையும் பேசுபவனவாக மாறி இருக்கின்றன. அவர் எழுத வந்த காலத்தின் போக்கோடு இணைந்து பயணம் செய்யும் எழுத்தாளராக இந்தக் கதைகள் அவரை அடையாளப் படுத்துகின்றன. தன் பார்வைக்குள் படும் வட தமிழ் நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கையின் பகுதியாகவே தன் கதை வெளிகளையும் பாத்திரங்களையும் தெரிவு செய்யும் இமையம் ,அந்தக் கதைகள் எழுப்பும் பிரச்சினைகளை அந்தப் பகுதிகளுக்கு உரியதாக மட்டும் வைத்திருப்பதில்லை என்பது மிக முக்கியமான ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே இமையத்தின் கதைகள் வட்டார மொழியில் எழுதப்பட்ட போதும் வட்டார எழுத்து என்ற அடையாளத்தைத் தகர்த்து இந்திய எழுத்தாகவும் உலக எழுத்தாகவும் கவனம் பெற வேண்டியனவாக இருக்கின்றன. சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள் சார்ந்து ஒடுக்கப் படுகிறவர்களின் துயரத்தை எழுதும் படைப்பாளிகள் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் இது. இமையத்தின் கதைகள் சமகாலத்தின் மீதான விமரிசனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நம் காலத்தின் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை அவரது அண்மைக் காலக் கதைகளில் வாசித்திருக்கிறேன். உலகமயப் பொருளாதாரத்தின் வரவுக்குப் பின்னால் நமது கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று  நிலமிழப்பு. ஒன்றிரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் தங்கள் நிலங்களை விவசாயமல்லாத வேறு காரியங்களுக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் எனது நேரடி அனுபவம் இது. ஆனால் வேதனையையும் வலியையும் மறைத்துக் கொண்டு விடாப்பிடியாக நிலத்தை விற்க மறுக்கும் இரண்டு மனிதர்களை தனது இரண்டு கதைகளில் எழுதிக் காட்டியிருக்கிறார் இமையம்.
அந்த இருவருமே வயதானவர்கள். தங்களின் தேவை அன்றாட உணவு மட்டுமே என நினைக்கும் பழைய மதிப்பீட்டு மனிதர்கள். பணம் முக்கியமில்லை; எனக்குத் தேவையான வரகுச் சோறைத் தரும் இந்த நிலம் தான் எனக்கு முக்கியம் என நினைக்கும் தங்கம்மாளைத் தனது சோறுபணம் கதையில் சந்திக்க வைத்தார். அவளை ஒத்து இன்னொரு வயதானவரைஉயிர்நாடி கதையில் எழுதிக் காட்டியிருந்தார். உலக மயத்தின் வரவால் ஊதிப் பருத்துக்  கொண்டிருக்கும் ரியல் எஸ்டே தொழிலைப் போலவே நகரங்களில் மானாங்கண்ணியாக வலைய வரும் ஒரு வர்க்கமாக இருப்பவர்கள் தகவல் தொழில் நுட்பக் கூலிகள் (ஐ.டி). முகமறியாத மனிதர்களால் முகம் பார்க்காமலேயே தேர்வு செய்யப்படும் கூலிகளாக மாறும் இளையவர்கள் எதைப் பெறுகிறார்கள்; எதை இழக்கிறார்கள் என்பதைச் சொல்லும் வேலை, ஃபேமிலி  கதைகளை எழுதி வாசகர்களுக்குத் தந்துள்ள இமையம் என் காலத்தின் எழுத்தாளராக இருக்கிறார். 2012 இல் அச்சில் வந்த தமிழ் புனைகதை எழுத்துகளில் அதிகம் வாசிக்கப் பெற்ற கதையாக மட்டுமல்ல; விவாதிக்கப்பெற்ற கதையாகவும் அமைந்தது இமையத்தின்   பெத்தவன்    நெடுங்கதை. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக இருக்கிறார் இமையம். காலம் தந்த பரிசு அவருடைய கதைகள்.


தமிழ் இந்திய சமூகத்தின் வாழ்வு இமையத்தின் எழுத்து
                                                                        - திலகவதி
             இமையம் என்ற எழுத்தாளரை 1994 இல் வெளிவந்த கோவேறு கழுதைகள் நாவல் மூலம் அறிந்தேன். அந்நாவல் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆனால் சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கக்கூடிய வண்ணார் இனத்தைச் சார்ந்த எளிய மக்களின் வாழ்வை எந்த ஆடம்பரமும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கிலேயே மிகவும் நேர்மையாக மட்டுமல்ல நேர்த்தியாகவும் பதிவு செய்திருந்தார்.  அந்நாவல் குறித்து தமிழில் இதற்கு இணையான மற்றொரு நாவல் இல்லை என்று எழுத்தாளர்  சுந்தரராமசாமி எழுதியிருந்தார்.  அது மிகையான கூற்று அல்ல என்பதை கோவேறுகழுதைகள் நாவலை படித்தவர்கள் உணருவார்கள்.  அந்நாவல் வந்து பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டது.  ஆனாலும் அந்நாவல் குறித்த பேச்சு, சர்ச்சை விவாதம் இன்றும் தொடர்கிறது.  விற்பனையும் அதிகரித்துவருகிறது.  இலக்கிய உலகில் குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில் இது அபூர்வமாக நிகழ்ந்த ஒன்று.  ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கலைஞனுக்கு இதைவிட அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்?
                இமையத்தின் இரண்டாவது நாவல் ஆறுமுகம். கோவேறுகழுதைகள் நாவலில் கிராமம், அதனுடைய உண்மையான வாழ்க்கை முறையை எவ்விதமான குறுக்கீடுமின்றி அசலான இலக்கிய படைப்பாக எழுதிய இமையம்.  ஆறுமுகம் நாவலில் நகரம் அதன் இயங்குமுறை தீமைகள் குடும்பச் சிதைவுகள், ஆங்கில கல்வி, நாகரீகம்  என்று வருகிற அதே நேரத்தில் நகரங்களில் சேரிப் பகுதிகள் உருவாகவும் செய்கின்றன.  இமையத்தின் கண்கள் சேரிப்பகுதிகளில் மையம் கொள்கிறது.  பாண்டிச்சேரி, அதையொட்டி அமைந்துள்ள ஆரோவில், அதைச்சுற்றியுள்ள கிராம வாழ்க்கை முறை, தொழிற்சாலைகளின் பெருக்கம், அங்கு குறைந்த ஊழியத்தில் இளம்பெண்கள் பணிபுரிவது, உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல பாலியல் வன்முறைகள் என்று இளம்பெண்கள் அனுபவிக்கும் இடர்கள் என்று நாவல்விரிகிறது.  குறிப்பாக பாலியல் தொழிலாளர்கள் அவர்கள் வாழும்விதம், அவர்களுக்கிடையிலான தொழிற்போட்டிகள், ஆண்களின் வக்கிரச் செயல்கள், பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களை அழைத்துவரும் சிறுவர்கள்-சிறுமிகள்.  எதுவும் மிகை அல்ல.  வாழ்வை அதன் நிஜத்தன்மைக்கு பங்கம் ஏற்படாமல் இலக்கிய அழகியல் குறையாமல் இமையம் எழுதியிருப்பார்.  ஒரு தேர்ந்த எழுத்தாளன் தோற்றுப்போகக்கூடிய தருணங்களில் இமையம் அதுமாதிரியான சந்தர்ப்பங்களை மிக இயல்பாக, மிக லகுவாக தாண்டிச்செல்வார்.  நல்ல கலைஞர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.  இமையம் கலைஞன்தான், சந்தேகமில்லை.
                ஒரு எழுத்தாளனாக, கலைஞனாக, உச்ச நிலையை இமையம் தொட்டது அவருடைய மூன்றாவது நாவலான செடலில்தான்.  இந்திய தமிழ்ச்சமூகத்தின் அசலான முகம் எது, நாம் நமக்கான பெரும் செல்வமாக கருதுகிற நம்முடைய மரபுகள், புராண, இதிகாச, ஐதீக கதைகளின் முகத்தை செடல் நாவல் மூலம் காட்டித்தருகிறார்.  ஒரு வரலாற்றை பொய்யென காட்டிய நாவல் இது.  இந்நாவலில் வரக்கூடிய தாழ்த்தப்பட்ட இனத்து மக்களிலேயே தாழ்த்தப்பட்ட இனமாக இருக்கக்கூடிய கூத்தாடி இனத்தைச் சார்ந்த செடல் - என்ற சிறுமி கிராம சிறுதெய்வத்திற்கு பொட்டுக்கட்டிவிடப்படுகிறாள்.
                செடல் என்ற சிறுமியின் வாழ்க்கையின் வழியாக- நாவல் அவளுடைய வாழ்க்கையை மட்டும் விவரிக்கவில்லை.  அவள் வாழ்ந்த சமூகத்தின் வாழ்வை அக்காலத்தின் வாழ்வை, அச்சமுகத்தின் வாழ்வை ஒளிவு மறைவின்றி, விருப்புவெறுப்பின்றி எழுதியிருப்பார்.  நாவல் மேலும் ஒரு விரிவான தளத்திற்கு  செல்கிறது.  பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண்களின் வாழ்க்கை, தெருக்கூத்துக்காரர்களின் வாழ்க்கை, தெருக்கூத்தின் அழகியல் கூறுகள், பசி, வறுமை, சாதிய ஒடுக்குதல்கள் என்று நாவல் விரிகிறது.
                செடல் நாவல் காட்டும் உலகம்தான்.  இந்திய தமிழ்ச் சமூகத்தின் உலகம் வாழ்க்கை.  ஒரு எழுத்தாளனாக இமையம் வாழ்க்கையை அணுகியிருக்கும் விதம் பிரமிப்பு ஊட்டுவதாக இருக்கிறது.  உலகத்தரமான நாவல் இது.  மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளை இமையம் இதுவரை எழுதியிருக்கிறார்.  கடந்த இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகசிறந்த தொகுப்புகள் இவை என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.  2012-ல் வெளிவந்த இமையத்தின் பெத்தவன் என்ற நெடுங்கதை இதுவரை முப்பதாயிரம் பிரதிகள் விற்றுள்ளது.  இது தமிழ் இலக்கிய உலகில் அபூர்வநிகழ்வு.  பெத்தவன் மட்டுமல்ல இமையத்தின் ஒவ்வொரு சிறுகதையுமே வாசகர் மனதை உலுக்கி எடுக்க வல்லவைதான்.  உயிர்நாடி, வேலை, திருட்டுப்போன பொண்ணு, பேராசை போன்று எல்லாக் கதைகளுமே சிறுகதைக்கான இலக்கணத்தோடு, அழகியலோடு, சமூகத்தின் நிஜமான முகத்தை காட்டுவதாகவே இருக்கிறது.  மூன்று தொகுப்பிலும் மொத்தம் நாற்பது கதைகளே இருக்கின்றன.  ஒவ்வொரு சிறுகதையும் எவ்வளவு முக்கியமானது சாலப்பொருத்தமானது என்பதைவிட வாசகர்களின் அனுபவமாக ஒவ்வொரு கதையும் எப்படி மாறியிருக்கிறது என்பதை படித்தவர்கள் உணருவார்கள்.  இட்டுக்கட்டியது, கற்பனையானது என்று எதையும் இமையத்தின் எழுத்துக்களில் காட்டமுடியாது.
                இமையம் என்ற எழுத்தாளனை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகிறேன்.  இருபது ஆண்டுகளாக ஒரு வாசகனை ஒரு எழுத்தாளன் பின் தொடர்ந்து வரச்செய்யமுடியுமா என்றால் முடியும் என்றுதான் இமையத்தின் எழுத்துக்கள் நிரூபித்து இருக்கின்றன.  இமையத்தின் எழுத்துக்களில் அலங்காரம் இருக்காது, மொழிக்கவர்ச்சி இருக்காது, மாயஜால வித்தைகள் இருக்காது, மாறாக வாழ்க்கை அசலான வாழ்க்கை இருக்கும்.  ஒரு சமூகத்தில் எழுத்தாளனின் கடமை என்ன, வேலை என்ன என்பதை இமையத்தின் எழுத்துக்கள் காட்டுகின்றன.  எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத எழுத்து.  தொலைக்காட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிற இன்றைய காலக்கட்டத்திலும் இலக்கிய ஆக்கங்கள் தொடர்ந்து படிக்கப்படுகிறது என்றால் அதற்கு இமையம்  போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள்தான் காரணம் சாட்சி.                                                                                                                                                                                                                                                               

அபூர்வமான படைப்பாளி – இமையம்.
                                                                 நா. ரமணி.
     இமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள். இதில் வரும் முக்கியமான பெண், வண்ணாத்தி ஆரோக்கியம். கால மாற்றத்தால் ஏற்பட்ட அவளது துயரங்களும் அல்லற்பாட்டு ஆற்றாது புலம்பி அழுத கண்ணீரும்தான் கோவேறு கழுதைகள். எத்தனை வகை மாதிரியான பேச்சுகள் – ஆறுதல் தரும் பேச்சு ஆணவப்பேச்சு, ஆதங்கமான பேச்சு, சண்டை கண்டணப் பேச்சுகள், சுய புலம்பல் பேச்சு நெகிழ்ந்து பாட்டாகி விடுதல், வன்புணர்ச்சிக்கு ஆளாகும் கையறு நிலையில் ஓரிரு சொற்றொடர்களில் மட்டுமே வரும் மேரியின் மனதைப் பிழியும் கெஞ்சல். பேச்சு மொழிக்குள்ளிருக்கும் ஆகக்கூடிய வல்லமை இமையத்தால் இந்நாவலில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
      கோவேறு கழுதைகள் இடம்சார்ந்து ஒரு சிறிய கிராமம். இரண்டாவது நாவலான ஆறுமுகத்தில் இடம் விரிவடைகிறது. இதில் வரும் தனபாக்கியம் அழகானவள். தன் காதல் கணவனை இழந்துவிட்ட நிலையில், அவனைப் போன்றேயிருக்கும் தன் மகன் ஆறுமுத்தை வளர்த்து ஆளாக்க வேலைக்குச் செல்கிறாள். பாலியல் உறவு பிரச்சனையாக முளைக்கிறது. இதனால் அவளுக்காகவே வாழும் தந்தை முத்துக்கிழவன் தற்கொலை செய்துகொள்கிறார். மகன் ஆறுமுகம் வீட்டைவிட்டு ஓடிப்போகிறான். இநத் ஓடிப்போதலின் பயணம் நாவலை இட, மக்கள், வாழ்வு சார்ந்த விரிந்த தளத்தில் செல்லவைக்கிறது. இறுதியில் வரும் தனபாக்கியத்தின் தற்கொலை, பிற மரணங்கள் சார்ந்து இந்நாவலில் இமையம் வாழ்வு, போராட்டம், மரணம் பற்றிய ஆய்வை படைப்பாக முன்வைத்துள்ளார்.
      மூன்றாவது நாவலான ‘செடல்‘ உயர்வகுப்பு மக்களுக்கான கோயில்களுக்கு குறிப்பிட்ட இனப்பெண்கள் பொட்டுக்கட்டி விடப்பட்டதைப் போல் கிராமத்து சிறு கோயில்களில் தாழ்த்தப்பட்ட இனச் சிறுமிகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு ‘சாமி பிள்ளை‘யாக பொட்டுக்கட்டி விடப்படும் சிறுமிதான் செடல். சாமிபிள்ளையான அவள் அவளது ஊரிலேயே வயதுக்குவந்த அந்தப் பொழுதில், கொட்டும் மழையில் ஆதரவின்றிப் புறக்கணிக்கப்படுகிறாள். அதனால் ஊரைவிட்டு வெளியேறும் அவள் நாவலின் போக்கில் கூத்துக்கலைஞர்களால் ஆதரிக்கப்படுகிறாள். கூத்துக்கலையில் திறமைசாலியாகி விடுகிறாள். ஒரு பெண்ணின் தனிமையான வாழ்வு – குறித்த பார்வை நாவல் முழுவதும் விரவிச் செல்கிறது. கிராம விழாக்களில் புராண மாந்தர்களின் வேஷம் கட்டியும், இறப்புகளில் வேஷம் கட்டாமலும் கூத்தை ஆட்டமும் பாட்டுமாக கோலோச்ச வைத்திருக்கிறார் இமையம். இறுதியில் ‘செடல்‘ கூத்துக்கலைக்கான அர்ப்பணிப்பாக நிறைவு கொள்கிறழது. (செடல் நாவலின் வழி பொட்டுக்கட்டுதல் குறித்து தமிழகச் சட்டப் பேரவையில் பேசப்பட்டது)
      இமையத்தின் சிறுகதைத்தொகுதிகள் – மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், நெடுங்கதை, பெத்தவன். எளிய வேளாண்மையில் சூல்கொண்டவை இவரது மண்பாரம் போன்ற ஆரம்பகாலச் சிறுகதைகள். நிலவொளியின் வனப்புகளும் எளிய கிராம மக்களின் உழைப்பும் இயற்கையுடனான போராட்டமும் கொண்டவை. கிராமச் சிறுவர்களின் விளையாட்டும் மனோபாவங்களும், அனுபவங்களும் இவரது பல சிறுகதைகளில் தனித்துவம் கொண்டிருக்கிறது.
      நகர் வாழ்வின் நகர்வு கிராமங்களில் புகுந்து இடைவினை புரிவது வீடியோ மாரியம்மன், உர்நாடி (நிலமும், வீட்டடி மனைக்குமான முரண்) போன்ற பல கதைகளில் ஊடுறுவி நிற்கிறது.
      ‘பெத்தவன்‘ நெடுங்கதை சமகால எரியும் ஜாதி- காதல் பிரச்சனையை முன்வைக்கிறது. இக்கதையின் வீச்சு சமூகத்துக்குள் பாய்ந்திருப்பதால் இன்றும் கூட இமையம் போன்றோரின் பேனா வலிமையானதுதான்.
      இமையத்தின் மொத்தப்படைப்புகளையும் உள்வாங்கும்போது இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நவீனப் பாங்கையும் சமூக அறம் நோக்கி அது மேலும் விரிவடைவதையும் அறியலாம். மேலும்மேலும் எதிர்பார்ப்பதற்குரிய அபூர்வமான படைப்பாளியாக அவரை நம்பலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக