செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நிஜமான கலைஞனின் எழுத்து-திலகவதி

நிஜமான கலைஞனின் எழுத்து-திலகவதி
தமிழகத்தில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பேரழிவுக்கு மறுநாள் இரவு இமையத்தினுடைய மண்பாரம் என்கின்ற சிறுகதைத் தொகுப்பை படித்தேன்.  அன்று இரவு அத்தொகுப்பு என்னுடைய தூக்கத்தை விழுங்கிவிட்டது.  நான் 1994 முதல் இமையத்தினுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.  அவருடைய கோவேறு கழுதைகள் தமிழில் இதற்கு இணையான நாவல் இல்லைஎன்று திரு.சுந்தரராமசாமி எழுதியபோது மற்ற வாசகர்களைப்போல நானும் அதிர்ந்து போனேன்.  அது மிகையான கூற்றென்று தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கூச்சலிட்டபோது அக்கூச்சலை தவிர்ப்பதற்காக நான் நாவலை வாசித்தேன்.  அந்நாவலை வாசித்தபோது சுந்தரராமசாமியின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை அறிந்தேன்.  அந்நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் தமிழில் வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை.  1994லிலிருந்து இன்று வரை அந்த தாக்கம் எனக்குள் இருந்துகொண்டு இருக்கிறது.  அதில் சிறுமாற்றம் ஏற்படவில்லை என்பது ஒரு நாவலுக்கான வெற்றி என்று நான் கருதுகிறேன். 
     இமையத்தினுடைய இரண்டாவது நாவலான ஆறுமுகம் தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய வாழ்வை, புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்தியது.  அந்நாவலின் விமர்சனக்கூட்டத்தில் 1999ல் விருத்தாசலத்தில் நான் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.  அப்பொழுது நாவல் குறித்து நான் பேசியதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.  கோவேறு கழுதைகள் சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரிவினரை சமூகத்தின் பொதுப்பார்வைக்கு கொண்டு வந்ததென்றால் அதே அளவுக்கு சமூகத்தின் இருண்ட பகுதியில் இருந்த ஒரு வாழ்வை பொது சமூகத்தின் பார்வையில் வைத்தது.  இந்த இரண்டு நாவல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதொரு தமிழ் சமூகம் அறிந்த மறந்த ஒரு வாழ்வை மீண்டும் பொது சமூகத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்.  செடல் நாவல் மூலமாக நாம் ஏற்கெனவே அறிந்திருந்த வரலாறு என்று நம்பியிருந்த பொய்மையை பொய்யென்று காட்டியது இந்நாவல்.  தமிழ், இந்திய சமூகம் காலங்காலமாக தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் தனி மனித-சமூக அறம், நீதிநெறிகளுக்கெதிரான அதே நேரத்தில் நிஜமான ஒரு சமூகத்திற்கான அர்த்தபூர்வமான ஒரு அறத்தையும், நீதிநெறிகளையும் இந்நாவலின் மூலமாக வெளிப்படுத்தியிருப்பதை ஒரு வாசகனால் உணர முடியும்.  இவருடைய நாவல்களுக்கு அடுத்த நிலையில் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளின் வழியே தன்னுடைய வாழ் அனுபவங்களை கலை இலக்கியப் படைப்புகளாக தந்திருக்கிறார்.  ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நம்மை துன்புறுத்துகின்றன.  நாம் பார்க்கத் தவறிய ஒரு வாழ்வை அவர் தன்னுடைய கதைகளின் வழியாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.  இந்த காட்சிப்படுத்துதல் என்பது மற்ற எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தாத ஒன்று அல்லது காட்சிப்படுத்த தவறிய ஒன்று ஒரு கதையை படிப்பது என்பது நமக்குள் நாமே நம்மை பயணம் செய்வது.  ஒரு கலைப்படைப்பின் வெற்றி என்பது அது வாசகனுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.  ஒரு கடமைக்காக அன்றி முழு மன ஈடுபாட்டுன் நான் ஒரு கதையைப் படிக்கிறேன் என்றால் நிச்சயமாக அது இமையத்தினுடைய சிறுகதைகளாக இருக்கிறது.  இதற்கான காரணம் இமையத்தினுடைய சிறுகதைகள் காட்டுகின்ற உலகம் எனக்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது.  கதைகளில் வருகின்ற மனிதர்கள் கற்பனைகளில் உருவானவர்களாக இல்லாமல் நமக்குத் தெரிந்தவர்களாகவும் அறிந்தவர்களாகவும் ஒரு விதத்தில் நாமே அந்தப் பாத்திரங்களாக இருப்பது என்பதும் ஒரு கலைஞன் நமக்குத் தரக்கூடிய பெரிய உபசரிப்பாக இருக்கிறது.  இமையத்தினுடைய கதைகள் பலநேரங்களில் என்னைக் கண்ணீர் விட வைத்திருக்கிறது.  கூச்சப்பட வைத்திருக்கிறது.  இப்படியான ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று வெட்கப்பட வைக்கின்றது.  இமையத்தின் கதைகளில் பெரும்பாலும் பெண்களே அதிகளவில் இடம் பெறுகிறார்கள்.  அப்பெண்கள் தங்களுடைய துயரத்தை வலியை வேதனையை கண்ணீராக சொற்களாக ஓயாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.  இந்த சொற்கள் தேய்ந்துபோன சொற்கள் அல்ல, அர்த்தமிழந்த சொற்கள் அல்ல.  நம்மை அலைக்கழிக்கக்கூடிய சொற்கள்.  முகம் என்ற கதையில் வரக்கூடிய பெண்ணாக இருக்கட்டும், ஆசை கதையில் வரக்கூடிய பெண்ணாக இருக்கட்டும், வீம்பு, சொந்தவீடு ஆகிய கதைகளில் வரக்கூடிய பெண்கள் யாரோ அல்ல.  என்னுடைய உறவினர்கள்போல இருக்கிறார்கள்.  இந்த நெருக்கம்தான் ஒரு கதையினுடைய வலிமை என்று கூறலாம்.  இந்த கதைகள் தரக்கூடிய அனுபவம் என்பது வார்த்தைகளின் வழியாக விவரிக்க முடியும் என்று தோணவில்லை.  வலியை உணர முடியும்.  அன்பை உணர முடியும்.  ஆனால் அதை பருப்பொருளைப் போல வெளிக்காட்ட முடியாது.  அதேபோன்றுதான் ஒரு இலக்கியப்படைப்பு தரும் அனுபவம் என்பது நாம் உணரக்கூடியது.  நம்முடைய உணர்வுகளில் ஏற்படும் மாற்றம்தான் நிஜமான கலைஞன் ஏற்படுத்தும் மாற்றம்.     

     தமிழில் இன்று நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த குவியலிலிருந்து ஒரு வாசகனாக ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது அயர்ச்சித் தரக்கூடியதாக இருக்கின்றது.  ஆனால் இமையத்தினுடைய சிறுகதைகள் நம்மை புதுஉலகத்திற்குள் இட்டு செல்கிறது.  அந்த உலகம் நம்மை கலைப்படைய செய்வதில்லை.  மாறாக நாம் வாழ்கிற காலத்தையும் சமூகத்தையும் உற்றுநோக்கக்கோறுகிறது.  இந்த உற்றுநோக்குதல் வழியாக சமூகம் குறித்த நாம் வாழும் காலம் குறித்த புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை இமையத்தினுடைய கதைகள் காட்டுகின்றன.  இந்த வேறுபாடுதான் பிற எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து இமையத்தினுடைய எழுத்துக்கள் வேறுபடுகின்றன.  இமையத்தினுடைய எழுத்துக்கள் பல்வேறு அரசியல் காரணங்களினால், சமூக சூழல் காரணமாக போதிய வெளிச்சம் பெறாமல் இருக்கலாம்.  அவர் வெளிச்சத்தை நோக்கி நகராதவராக இருக்கலாம்.  ஆனால் அவருடைய எழுத்துக்கள் என்றும் வாசகனுடைய மனதை உலுக்கி எடுப்பவையாக இருக்கின்றன.  விமர்சனம் என்பது கதை சொல்வதல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக