சனி, 22 மார்ச், 2025

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள் - இமையம்.

 

வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன

       போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, அரசியலை, நிலவியலை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராயும். தமிழ்நாட்டிலிருந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் என்று சென்றவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் இலங்கையில் இனவாத அரசு நடத்திய போரினால் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் பன்னாட்டு வாழ்க்கைமுறை எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. பிரன்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், மலாய், சீன மொழிகளில் அந்தந்த நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை ஆங்கிலத்தின் வழியாக, அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து படிக்கும்போது தமிழ் வாசகனுக்கும் படைப்புக்குமிடையே ஏற்படுகிற புரிதலைவிட, இணக்கத்தைவிட, தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஒருவர் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, க்யூபா போன்ற பல நாடுகளைப்பற்றி எழுதுவதை படிக்கும்போது கூடுதலான புரிதலும், இணக்கமும் ஏற்படுகிறது.  அந்த வகையில் புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைகளின் வழியாக தமிழ்மொழியில் பன்னாட்டு வாழ்க்கை எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வதே நோக்கம். ஒவ்வொரு கதைக்கும் கூடுதலான விளக்கங்களையோ, விவரங்களையோ கட்டுரையாசிரியர் என்ற முறையில் தருவது கதைகளை சிறுமைப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

       ஷோபா சக்தி எழுதியுள்ள எழுச்சி’, இலங்கையிலுள்ள சரவண கிழக்கை பிறப்பிடமாகவும் பிரான்சை வாழ்விடமாகவும் கொண்ட ஆழ்வார் தர்மலிங்கம் என்பவருடைய வாழ்க்கையை சொல்கிறது. சரவண கிழக்கில் ஆழ்வார் தர்மலிங்கத்தின் குடும்பம், ஊரினுடைய சூழல், அன்றைய இலங்கையின் அரசியல் சூழல், பிறகு பிரான்ஸ் தேசத்திற்கு பயணம், அங்கு வாழப்படும் வாழ்க்கை என்று விரிகிறது கதை.

       பிரான்ஸில் முந்நூறுபேர் வேலை செய்யக்கூடிய கம்பனியில் ஆழ்வார் தர்மலிங்கம் வேலை செய்கிறார். அந்த கம்பனியில் ஆப்பிரிக்கர்கள், போலந்துக்காரர்கள், அரபுக்காரர்கள், பிரான்சுக்காரர்கள் என்று பல நாட்டவரும் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கம்பனியில் நுழையும்போதும் ஒவ்வொரு பணியாளனையும் முழுமையாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். அதே மாதிரி மாலையில் சோதனை செய்த பிறகே ஊழியர்களை வெளியே அனுப்புகிறார்கள்.  காவலாளி காலையிலும் மாலையிலும் செய்கிற சோதனை ஆழ்வார் தர்மலிங்கத்திற்கு நரக வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என் கொட்டையை தடவ இவன் யார்?’ என்று பொறுமிப்போகிறார். சோதனையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு தந்திரம் செய்கிறார். அந்த தந்திரம் ஜட்டி அணியாமல் செல்வது. வழக்கம்போல சோதனை செய்கிற காவலாளி தவறுதலாக தர்மலிங்கத்தின் விரைத்திருக்கிற குறியை தொட்டு அருவருப்பு அடைகிறார். அதனால் தர்மலிங்கத்திற்கு மகிழ்ச்சி. தினமும் ஜட்டி அணியாமல் போகிறார். வேறு வழியின்றி காவலாளி தினமும் சோதனை செய்யாமல் தர்மலிங்கத்தை கம்பனிக்குள் அனுமதிக்கிறார். இதைப் பார்த்த மற்ற தொழிலாளிகள் வியந்துபோய் ரகசியத்தை அறிந்துகொண்டு ஜட்டி போடாமல் போகிறார்கள். சோதனை செய்த காவலாளி நொந்துபோகிறார். முந்நூறு தொழிலாளியும் ஜட்டி அணியாமல் வருவதால் காவலாளி சோதனை செய்யாமல் அனுமதிக்கிறார். நிர்வாகத்திடம் முறையிடுகிறார். தனிமனித சுதந்திரத்தில் எப்படி தலையிடுவது என நிர்வாகம் தத்தளிக்கிறது. ஜட்டி அணியாமல் வேலைக்கு செல்கிற ரகசியம் நாடு முழுவதும் பரவுகிறது. பிரச்சினையை எப்படி தீர்ப்பது என தெரியாமல் கம்பனியும், நாடாளுமன்றமும் கூடி விவாதிக்கிறது. ஜட்டி அணியாமல் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு உலகெங்குமிருந்தும் ஆதரவு குரல்கள் பெருகுகிறது. 1960ல் அமெரிக்காவில் பெண்கள் முன்னெடுத்த பிரேசியர் அணியாத போராட்டம் திரும்பப் பேசப்படுகிறது. உலகில் உள்ளாடை அணியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவாதம் நடக்கிறது. தொழிலாளர்களின் கண்ணியமற்ற போராட்டம் இது என்று கத்தோலிக்க திருச்சபை அறிக்கை வெளியிடுகிறது. ஏசு கிருஸ்துவின் வஸ்திராபரணங்களில் ஜட்டிஇல்லை என்ற விவாதம் எழுகிறது. ஆழ்வார் தர்மலிங்கத்தின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறுகிறது.

       பிரான்ஸ் விமான நிலையத்திலும், துபாய் விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் சோதனை என்ற பெயரில் ஆழ்வார் தர்மலிங்கத்தின் கொட்டைகள் தடவப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் சோதனை என்ற பெயரில் தனது கொட்டை தடவப்படும்போது அவர் அவமானத்திலும், கூச்ச உணர்விலும் நொந்துபோகிறார்.

       ஆழ்வார் தர்மலிங்கம் சரவண கிழக்கிலும், பிரான்ஸிலும் வாழ்கிறார். அதோடு தனது மனைவி அசோக மலருடன் சென்னையிலும் சில நாட்கள் வாழ்கிறார். தனது குறியின் எழுச்சியை வைத்து கம்பனியில், நாட்டில், நாடாளுமன்றத்தில், சர்வதேசத்தில் பெரிய பிரச்சினையை உருவாக்குகிற ஆழ்வார் தர்மலிங்கத்தினுடைய மனைவி அசோகமலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

      

ஆழ்வார் தர்மலிங்கத்தின் எழுச்சி வீரியமிக்கதா? இது இலங்கை அரசியலை விமர்சிப்பதாகவும் கொள்ள முடியும்.

       ‘எழுச்சி’ – தமிழ் மொழியில் எழுதப்பட்ட பிரான்ஸ் நாட்டு கதை என்றும், இலங்கை கதை என்றும்தமிழ்நாட்டில் சில நாள் வாழ்வதால் தமிழ் நாட்டுக் கதை என்றும் சொல்லலாம். அதோடு பன்னாட்டு தொழிலாளர்களுடைய கதை என்றும் சொல்லலாம். வேலை செய்கிற இடத்தில் ஏற்படுகிற நெருக்கடியை ஷோபா சக்தியின் எழுச்சி’ - கதை சொல்கிறது என்றால் பொ.கருணாகர மூர்த்தியின் வாழ்வு வசப்படும்’ - கதை அகதியாக இருப்பவர்கள் வேலை தேடுவதில் இருக்கிற நெருக்கடிகளைப் பேசுகிறது.

    

1980 கால பகுதியில் ஜெர்மனியில் குறிப்பாக பெர்லினில் அகதிகளாக வாழ்பவர்களைப்பற்றி  பொ.கருணாகரமூர்த்தி எழுதிய வாழ்வு வசப்படும்கதை பேசுகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக ஜெர்மனிக்கு சென்று வாழ்கிற முத்து ராசா, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன் மற்றும் சபீனா ஆகியோரின் வழியே கதை நிகழ்கிறது. கானா நாட்டு  அகதிகள் பற்றியும் கதை பேசுகிறது. ஒவ்வொரு அகதிக்கும் ஜெர்மன் அரசு மாதம் 300 டி.எ.ம். தொகை வழங்குகிறது. குடும்பமாக இருந்தால் மாதம் 1000 டி.எம். வழங்குகிறது. இது நல்ல  தொகைதான். 300 டி.எம்.மிலிருந்து மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்புகிறவர்களும் உண்டு.

       வாழ்வு வசப்படும் கதை அகதிகள் வாழ்வைப்பற்றி, அவர்கள் வேலை தேடி அலைவதை மட்டும் சொல்லவில்லை. பெர்லின் நகர வாழ்வையும் சேர்த்தே சொல்கிறது. பெர்லின் நகரில் மிகபெரியதும், மிக முக்கியமானதுமான Kufursf tendamm சாலை, பொம்சன் சாலை, அந்த சாலையில் இருக்கக்கூடிய டியூலிப் ஹோட்டல், சாதாரண மக்கள் தங்கக்கூடிய நாலாந்தர ஹோட்டலில் இருக்கக்கூடிய பென்ஷியோன்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. பென்ஷியோன்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை தரம்பற்றியும், மனப்போக்குப்பற்றியும் நகைச்சுவையுடன் கதை சொல்கிறது.

       பெர்லின் நகரின் வீதிகளில் ஆண்களும் பெண்களும் செய்யும் காதல் லீலைகள், காதல் விளையாட்டுகள், தழுவல்கள், முத்தங்கள்பற்றியும் விரிவாக சொல்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பொதுவிடங்களில் நடந்துகொள்ளும் முறைப்பற்றியும் பேசுகிறது. அதோடு பெர்லினில் வரக்கூடிய தினசரி நாளேடு எப்படியான செய்திகளை தாங்கி வருகிறது. அதில் வரக்கூடிய விளம்பரங்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது? நாற்பத்தி ஆறு வயது கொண்ட ஏவாள் என்ற பெண் தனக்கான பார்ட்னர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருக்கிறார். பார்ட்னருக்கான தகுதிகள் என்னென்ன என்பதையும் விளம்பரத்தில் பட்டியலிட்டுள்ளார். பட்டியல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அது பெர்லினில் ரொம்ப சாதாரணம். இப்படியான விளம்பரங்களை கொண்ட BZ என்ற Berlines Zeitung தினசரிதான் ஜெர்மனியில் பிரபலமானது. ஹோமோ செக்ஸிற்கு ஆண் தேடும் விளம்பரம் வருவது அந்தப் பத்திரிக்கையில் சர்வ சாதாரணம்.

       அகதிகளின் மனநிலை, வேலை தேடும் போராட்டம் அகதிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள், ஜெர்மனியர்களின் சட்டம் சார்ந்த பயம் என்று பல கதைகளின் தொகுப்பாக வாழ்வு வசப்படும்இருக்கிறது.

       கதையில் சபீனா என்ற பெண் வருகிறாள். இளம் பெண், அவளுடைய தொழில் விநோதமானது. யார் என்று தெரியாத ஆணுடன் இணைந்து கர்ப்பமாகி, குழந்தையை பெற்று, குழந்தையற்ற தம்பதிகளுக்கு தான் பெற்ற குழந்தையை விற்பதுதான். இந்தியாவிற்கு டூரிஸ்டாக வந்து, கோவாவில் ஒரு ஆணுடன் இணைந்து கர்ப்பமாகி, ஜெர்மன் சென்று குழந்தையைப் பெற்று விற்றுவிடுகிறாள். பிரவுன் நிற குழந்தைகளுக்குத்தான் ஜெர்மனியில் அதிக மவுசு. அதனால் சபீனாவின் விருப்பம் என்பது பிரவுன் நிறக் குழந்தைகளை வயிற்றில் சுமப்பது. ஒரு குழந்தைக்கு அவள் பெறுகிற தொகை அதிகமானது. ஜெர்மனியில் பத்து முதல் பனிரெண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் மட்டுமே சாம்பாதிக்கக்கூடிய தொகையை ஒரு குழந்தையை விற்பதின்மூலம் பெறுகிறாள். தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து கூறும்போது அந்தரங்கம்என்று வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறாள். அவள் அணிந்திருந்திருக்கிற டி.சர்ட்டில் Eatable Fruits  என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

       வாழ்வு வசப்படும் கதையில் ஏவாள், சபீனா, BZ பத்திரிக்கை, அகதிகள் வாழும் வாழ்க்கை, தங்குமிடம் ஓரின சேர்க்கைக்கு அழைக்கப்படும் அகதிகள் என்று பல கதைகளுடைய தொகுப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் தங்களோடு ராமர், சீதை, விநாயகர், மயிலேறும் முருகன், ஸ்ரீதுர்கா தேவி, ஐயனார், ஸ்ரீ ரெங்கநாதர் சாமி படங்களையும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதை வைத்து வணங்குகிறார்கள். அகதியாக இருந்தாலும் தமிழர்கள் பக்தியோடுதான் இருக்கிறார்கள். ஆபாசபடம் பார்த்துக்கொண்டே மயிலேறு முருகனையும் கும்பிடுகிறார்கள்.

       பொ.கருணாகர மூர்த்தியின் வாழ்வு வசப்படும் கதை பெர்லின் நகரின் வாழ்வைப் பேசுகிறது. இது தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஜெர்மன் நாட்டுக் கதை. கானா நாட்டு அகதிகளின் கதையும்தான்.

 

கூபாவுக்குப் போன க்யூபா அமெரிக்கர்கள்என்பது காஞ்சனா தாமோதரன் எழுதிய கதை. மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை பேசுகிறது. கற்பனை, யூகம், புனைவு என்பது குறைந்து உண்மை சம்பவங்களும், வரலாற்றுச் சம்பவங்களும், நிறைந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகால அமெரிக்க, க்யூபாவின் அரசியல் நடவடிக்கைகளைப் பேசுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் மனவோட்டம், சிந்தனை, விருப்பம், செயல்பாடு, வாழ்க்கை மாற்றம் எப்படி மாறி இருக்கிறது என்பதை பேசுகிறது.

       க்யூபாவில் பட்டீஸ்டாவின் ஆட்சி முடிந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, இடதுசாரி அரசியல் பிடிக்காமல் திரளாக மக்கள் க்யூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். க்யூபாவைவிட்டு அமெரிக்காவிற்கு வந்த குடும்பங்களில் ஒன்று எம்பரீத்தோ யெலீனா என்பவர்களுடையது. க்யூபாவில் ஓரளவு வசதியானது. கரும்புத் தோட்டமும், புகையிலைத் தோட்டமும் சொந்தமாக இருக்கிறது. சுருட்டு வியாபாரம் செய்கிறவர்கள். க்யூபா சுருட்டுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உண்டு. உலகெங்கும் க்யூபா சிகர்ஸ்க்கு இன்றும் மதிப்புண்டு.

       எம்பரீத்தோ அமெரிக்காவிற்கு வந்து ஐம்பது ஆண்டுகளாகிவிட்டது. அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். 1980ல் க்யூபாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் காஸ்ட்ரோவின் ஒப்புதலுடன் பெரும் திரளான மக்கள் மாரியெல்துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் தேடி வருகிறார்கள். மாரியெல் துறைமுகத்திலிருந்து வந்த க்யூபா மக்களை அமெரிக்கர்களும், அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குடியேறிய க்யூபா மக்களும் மாரியெலீத்தோஎன்றே தரக்குறைவாக அழைக்கின்றனர். மாரியெலீத்தோ என்று அழைக்கப்படுகிற ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார் எம்பரீத்தோவின் மகன். மருமகளை கௌரவக்குறைவாக நடத்துகின்றனர் எம்பரீத்தோவும், அவருடைய மனைவி யெலீனாவும்.

       1960களில் அமெரிக்காவில் அகதியாக குடியேறிய க்யூபாக்காரர்கள் 1980ல் அகதியாக  குடியேறிய க்யூபாகாரர்களை ஏன் மட்டமாக நினைக்கிறார்கள், மட்ட ரகமாக நடத்துகிறார்கள்? ஒரே நாடுதான். ஒரே மொழிதான். ஒரே இனம்தான். இருவருமே புகலிடம் தேடி வந்தவர்கள்தான். முன்னால் வந்தவர்கள், பின்னால் வந்தவர்கள் என்ற வேறுபாடு மட்டும்தான் இருக்கிறது. முன்னால் வந்தவர்கள் என்பது எப்படி ஒரு உயர் தகுதியாக இருக்க முடியும்?

       எம்பரீத்தோவின் மகனுக்கு ரமோசன், அனீதா என்று இரண்டு குழந்தைகள். கல்லூரியில் படிப்பவர்கள். தாத்தா எம்பரீத்தோவின் பேச்சை மீறி பராக் ஒபாமாவுக்கு வாக்களித்தவர்கள். ஓயாமல் தாத்தாவுடன் அரசியல் பேசுகிறவர்கள். அமெரிக்காவின் மல்ட்டி மில்லியனர்ஸ் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கிறவர்கள்.

       எம்பரீத்தோ - யெலீனா ஒரு தலைமுறை. இவர்கள் க்யூபாவில் பிறந்து வளர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இவர்களுக்கு ஸ்பானிஷ் மட்டும்தான் தெரியும். எம்பரித்தோவின் மகன் அமெரிக்காவில் சின்ன ஹவானா என்று அழைக்கப்படுகிற இடத்தில் பிறந்தவர். இவருக்கு ஸ்பானிஷ் தெரியும். ஆங்கிலம் ஓரளவு தெரியும். இவருடைய மனைவி க்யூபாவில் பிறந்தவர். அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். இவருக்கு ஸ்பானிஷ் மட்டும்தான் தெரியும். இவர்கள் இரண்டாம் தலைமுறையினர். இவர்களுடைய குழந்தைகளான ரமோசனும், அனீதாவும் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். இவர்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். எம்பரீத்தோவிற்கு எப்போதும் க்யூபாபற்றிய எண்ணமும், பெருமையும் உண்டு. அவருடைய மகனுக்கு தன்னுடைய நாடு அமெரிக்காவா, க்யூபாவா என்று முடிவு எடுக்க முடியாத நிலை. ஆனால் ரமோசனுக்கும் அனீதாவிற்கும் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களுடைய நாடு அமெரிக்கா. நாங்கள் அமெரிக்கர்கள். எங்கள் மொழி ஆங்கிலம்என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அமெரிக்காவும், க்யூபாவும் வீணாக பகையை வளர்த்துக்கொண்டிருக்கின்றன என்ற எண்ணமும் இவர்களிடம் உண்டு. அதே மாதிரி ஐம்பது ஆண்டுகள் கழித்த பின்னும் காஸ்ட்ரோவுக்கு க்யூபாவில் எப்படி இவ்வளவு பெயரும், புகழும் இருக்கிறது என்பது இருவருக்கும் ஆச்சரியம்.  

1962ல் அமெரிக்காவிலிருந்து க்யூபாவிற்கோ, க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கோ யாரும் எளிதில் சென்றுவர முடியாத நிலை. இந்த கட்டுப்பாட்டை ஓரளவு தளர்த்தியவர் கார்ட்டர். அதன்பிறகு வந்த கிளின்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினார்கள். ஒபாமா ஜனாதிபதியானதும் க்யூபாக்காரர்கள், க்யூபாவிற்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார். ஒபாமா ஏற்படுத்திய சலுகையைப் பயன்படுத்தி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் எம்பரீத்தோ, அவருடைய மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் க்யூபாவிற்கு பயணமாகிறார்கள்.

       பயணத்தின்போது எம்பரீத்தோ தன்னுடைய இளமைக் காலம், ட்ரினிடாட்ப் என்ற இடத்திலிருந்த சொந்தமான கரும்புத் தோட்டம், ‘வின்யாலெஸ்என்ற இடத்திலிருந்த சொந்தமான புகையிலை தோட்டம், க்யூபாவின் செம்மண், கடற்கரை, அப்பா, அம்மா, தங்கை, வீடு, கிடார் இசை, அண்ணன் என்று என்று ஒவ்வொன்றாக சொல்லி விவரிக்கிறார். சொந்த நாட்டுக்கே சுற்றுலாக்காரன் மாதிரி போவதைக் கிண்டலாகவும், வேதனையாகவும் சொல்கிறார்.

       க்யூபாவில் எம்பரீத்தோவின் அண்ணன் நாசியனோலினும், தங்கையும், அவருடைய மகள் மரிஸஸாவும் இருக்கிறார்கள். எம்பரீத்தோவின் குடும்பம் நாசியனோலீன் வீட்டில் தங்குகிறது. நாசியனோலின் இடதுசாரி அரசியலை ஆதரிப்பவர். காஸ்ட்ரோவின் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். கட்சிக்காக திருமணம் செய்துகொள்ளாதவர். க்யூபா புரட்சிக் கழகத்தில் தீவிர உறுப்பினர். இடதுசாரி அரசியலை ஆதரிக்கக்கூடாது என்று கூறிய தந்தையிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவர். நாசியனோலின் தந்தை இடதுசாரி அரசியலை எதிர்த்தவர். பட்டீஸ்டாவின் ஆட்சியை ஆதரித்தவர். நாசியனோலின் தங்கையின் கணவர் பட்டீஸ்டாவின் ஆட்சிகாலத்தில் உயர் பதவியில் இருந்தவர். அண்ணனும் தம்பியும் கடந்தகால அரசியல் செயல்பாடுகளையும், இன்றைய அரசியல் செயல்பாடுகளையும் பேசுகின்றனர். பேச்சில் அமெரிக்காவின் முதலாளிய பண்பாடு பற்றியும், க்யூபாவிற்கும் சோவியத் யூனியனுக்குமான நட்புப்பற்றியும், அந்த நட்பு பின்னாளில் எப்படி கசப்பாக மாறியது என்பதுபற்றியும் பேச்சு வளர்கிறது. கென்னடியின்மேல் இருந்த கோபத்தைவிட க்ருசோவ் மீது காஸ்ட்ரோவுக்கு அதிக கோபம் ஏன் ஏற்பட்டது? வியட்நாம் போர், 1962ல் நடந்த வளைகுடா போர் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். போரில் அமெரிக்கா, க்யூபா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நிலைப்பாடுகள்பற்றியும் பேசுகிறார்கள். 1950களில் அமெரிக்காவில் வாழ்ந்த ப்ராட்டஸ்டாண்டு கிருத்துவர்களுடைய எளிமை, அடக்கம் பற்றியும் பேசுகிறார்கள். ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் க்யூபா எப்படி மாறாமல் அப்படியே இருக்கிறது என்ற பேச்சும் வருகிறது. எம்பரீத்தோவுக்கு அதுதான் ஆச்சரியம். ரமோசனும், அனீதாவும் க்யூபாவின் சட்டதிட்டங்கள் பற்றியும், ஊடக, தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாதது பற்றியும் பேசுகிறார்கள். க்யூபாவின் நடைமுறைகள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ரமோசன் க்யூபாவில் தங்கிக்கொள்வதாக முடிவெடுக்கிறான்.

       1960 காலத்தில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் வழியாக இந்த கதை சொல்லப்படுகிறது. ஐம்பதாண்டு காலத்தில் அமெரிக்காவிலும், க்யூபாவிலும் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள்பற்றியும் பேசப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளின் மனவோட்டமும், வாழ்வியல் முறைகளும் எப்படி மாறிப்போகின்றன என்பதையும் இக்கதை விவரிக்கிறது. 1960களிலும் 1980களிலும் க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களுடைய கதையை மட்டும் இக்கதை பேசவில்லை. மற்றுமொரு முக்கியமான கதையையும் பேசுகிறது. அக்கதைதான் க்யூபாவின் அடிமை சரித்திரம். ஆப்பிரிக்க நைஜீரியாவிலிருந்த யொரூபாஎன்ற இனத்தவர்களை அடிமைகளாக கொண்டுவந்து க்யூபாவின் கரும்புத் தோட்டங்களிலும், புகையிலைத் தோட்டங்களிலும் வேலை செய்ய வைத்த கதை, யொரூபா இனத்தவர்களை கத்தோலிக்க மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்த கதை முக்கியமானது. சர்க்கரை உற்பத்தியில் க்யூபா உலகில் முதலிடம் வகிப்பதற்கு நைஜீரிய அடிமைகளின் உழைப்புதான் காரணம். யொரூபா கலாச்சாரமும், கத்தோலிக்க கலாச்சாரமும் இணைந்து புதிய பண்பாடாக எப்படி சானட்டரியாஎன்ற பெயரில் க்யூபாவில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றையும் இக்கதை பேசுகிறது.

       இக்கதையில் தமிழர்கள் யாருமே இல்லை. தமிழர்களுடைய கதையோதமிழ் வாழ்வை மையப்படுத்திய கதையோ அல்ல இது. க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களுடைய வாழ்க்கையை பேசுகிறது. அதுவும் தமிழ் மொழியில். அமெரிக்கா, க்யூபா, ரஷ்யா போன்ற நாடுகளின் கடந்த 50-60 ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளையும் எழுதிய கதை இது.

 

       தமிழர்கள் எங்கு இருந்தாலும், வாழ்ந்தாலும் சும்மா இருப்பார்களா என்றால் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். வம்பு அவர்களைத் தேடி வரும். இல்லையென்றால் வம்பைத் தேடிப் போவார்கள்.       உதவி செய்யப்போய் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிற ஒரு மனிதனுடைய கதை – ‘பிள்ளை கடத்தல்காரன்’. அ.முத்துலிங்கம் எழுதியது. லோகநாதன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு அகதி. கனடா நாட்டில் அகதியாக வாழ மனு செய்து நிராகரிக்கப்பட்டவன். நிராகரிக்கப்பட்ட மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்து காத்திருப்பவன். கனடா வந்து மூன்றாண்டுகளாக அல்லல் படுகிறவன். ஒரு நாளைக்கு இரண்டு இடத்தில் வேலை செய்பவன். காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை ஒரு கம்பனியிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை ஒரு சூப்பர் மார்க்கெட்டிலும் பணி செய்கிறான். இரண்டு இடத்தில் வேலை செய்தும், மாடாக உழைத்தும் கனடா வருவதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தத்தளிக்கிறான்.

       காலையில் கம்பனி வேலை முடித்து சூப்பர் மார்க்கெட்டுக்கு போகும் கணத்தில்தான் கதை நிகழ ஆரம்பிக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் தன்னந்தனியாக ஒரு தமிழ்க்குழந்தை நிற்பதை பார்த்துவிட்டு குழந்தையிடம் விசாரிக்கிறான். குழந்தையினுடைய பெயர் ஷிவானி. அதனுடைய தாயின் பெயர் லலித குமாரி. பொருள்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்குள் சென்றிருக்கிறாள். குழந்தையோடு பேசிக்கொண்டிருந்த லோகநாதன் நேரமாக நேரமாக பதட்டமடைகிறான். வேலைக்குப் போக நேரமாகிறது. அதே நேரத்தில் குழந்தையை தன்னந்தனியாக விட்டுவிட்டு போகவும் மனமில்லை. வேறு வழியின்றி காவலாளி அப்துல் ஆஹாட்டியுடன் பேசுகிறான். அப்துல் ஆஹாட்டி சோமாலியாவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் சோமாலியாவின் அமைச்சராக இருந்தவர். சோமாலியாவில் இருக்கிறவர்களில் பாதி பேர் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான். காவலாளி குழந்தையின் தாய்க்கு போன் மூலம் அறிவிக்கலாம் என்ற யோசனையைக் கூற லோகநாதன் அப்படியே செய்கிறான். லலித குமாரி இதோ வந்து விடுகிறேன்என்று சொல்கிறாள். ஆனால் ஆள் வந்த பாடில்லை. நேரமாகிறது. லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துப்போகிறான். மீண்டும் குழந்தையின் தாயுடன் தொடர்பு கொள்கிறான். அவள் முன்பு சொன்ன பதிலையேத்தான் சொல்கிறாள். இதோ வந்து விடுகிறேன்ஆனால் ஆள் வந்து சேரவில்லை. லோகநாதனும், அப்துல் ஆஹாட்டியும் பலமுறை தொடர்பு கொண்டும் குழந்தையினுடைய தாய் வராத காரணத்தால் பயந்துபோய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள். காவல்துறை வருகிறது. அவர்கள் வந்து அழைத்த பிறகுதான் லலித குமாரி வருகிறாள். குழந்தையை விட்டுவிட்டு பொருள் வாங்க சென்றதாக கூறுகிறாள். அதை ஏற்காமல் காவல்துறை லலித குமாரியை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது தன்னுடைய குழந்தையை லோகநாதன் கடத்திவிட்டான் என்று குற்றம் சுமத்துகிறாள். ‘I will pin you’ என்று ஓயாமல் கத்துகிறாள். வேலைக்கு செல்ல முடியவில்லை. குற்றவாளி என்ற பட்டம். உன்னை மாட்டிவிடுகிறேன் பார் என்ற மிரட்டல். குழம்பிப்போகிறான் லோகநாதன். அவனுடைய பதட்டமும், தத்தளிப்பும்தான் கதை.

       கதை டொர்னோட்டோ வார்டன் வீதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடக்கிறது. முதல் பார்வைக்கு இது நமது நாட்டில் நடப்பது மாதிரி பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடைய இஷ்டத்திற்கு விட்டுவிட்டு செல்ல முடியாது என்று சொல்வதாக இருக்கிறது. எது நடந்தால் எனக்கு என்ன என்று போகிற மேலை நாட்டு மனோபாவம் முற்றிலுமாக தமிழர்களிடம் வந்துவிடவில்லை என்று சொல்வதாகவும் கொள்ள முடியும். சோமாலியாவில் மந்திரியாக இருந்தவர் கனடாவில் அகதியாக மட்டுமல்ல, காவலராகவும் பணி செய்கிறார் என்ற செய்தி நமக்கு புதிது. ஆச்சரியம்.

       பிள்ளை கடத்தல்காரன் – தமிழ் மொழியில் எழுதப்பட்ட கனடா நாட்டுக்கதைபன்னாட்டுக் கதை.

 

மலேசியாவில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள்? என்று ம.நவீன் எழுதிய ஒலிகதை சொல்கிறது. சின்னி ஒரு சீனப் பெண். தமிழர்கள் வாழும் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்கக்கூடியவள். மலேசியாவில் லூனாஸ் என்ற இடத்தில் சாராயம் காய்ச்சமுடியாது. பட்வெர்த் என்ற இடத்தில்தான் காய்ச்ச முடியும். பட்வெர்த்தில் காய்ச்சப்படும் சாராயத்தை பாக்கெட் செய்துவந்து லூனாஸில் சின்னி விற்கிறாள். தன்னந்தனியாக. சின்னி மனவலிமையோடு உடல் வலிமையும் கொண்டவள். ஆனாலும் அனுசரித்துப்போகும் விட்டு கொடுத்துப்போகும் பண்பு உள்ளவள். எவ்வளவு அனுசரித்து, விட்டுக்கொடுத்து போகிறாளோ அந்த அளவுக்கு அவளுக்கு வியாபாரம் லாபம். அவளுடைய வாழ்க்கையில் சின்னச்சின்ன காரியங்கள்கூட லாப நட்ட கணக்கு சார்ந்ததுதான். வியாபாரத்தினுடைய அடிப்படையே பணம் சம்பாதிப்பதுதான். வியாபாரத்தினுடைய தர்மமும் அதுதான். சின்னி ஒரு வியாபாரி. தன்னுடைய தொழிலுக்கான தர்மத்தை அவள் கடைப்பிடிக்கிறாள்.

       தமிழ் பெண்கள் மாதிரி உடம்பு முழுவதும் துணிகளை சுற்றிக்கொண்டிருக்கிற பெண்ணல்ல சின்னி. சீனர்களுக்கு புழுக்கம் அறவே ஆகாது. ஆகவே அவர்கள் முடிந்த அளவுக்கு துணிகளைக் குறைத்துதான் உடுத்துவார்கள். தமிழ் ஆண்களுக்கு சின்னி விற்கும் பாக்கெட் சாராயம் ஓரளவுதான் போதையை ஏற்றும். மீதியை அவளுடைய உடல் ஏற்றும். அதனால் விறைத்த தங்களுடைய குறிகளை தமிழ் ஆண்கள் வேண்டும் என்றே சின்னியிடம் காட்டுகிறார்கள். அதற்கு அவள் உன்னுடைய மனைவி கொடுத்து வைத்தவள்என்று சொல்வாள். அச்சொல் கூடுதலாக தமிழ் ஆண்களை போதையேற்றும். அதோடு அவளுடைய தொடைகளும், முலைகளும் போதையேற்றும். அந்த போதையில் அவ்வப்போது அவளுடைய புட்டத்தில் தட்டவும் செய்வார்கள். அதுவும் அவர்களுக்குப் போதை ஏற்றும். தமிழ் ஆண்களுக்கு எவ்வளவு போதை ஏறுகிறதோ அந்த அளவுக்கு சின்னிக்கு வியாபாரம் கூடுதல். லாபம் கூடுதல். எல்லை மீறும்போது மட்டும்தான் சின்னிக்கு கோபம் வரும். கை வலிமையைக் காட்டுவாள். அவளுடைய கை வலிமையை தமிழர்கள் அறிவார்கள்.  

       தமிழர்கள் காட்டமான பாக்கெட் சாராயத்தைக் குடிப்பவர்கள். மலாய்க்காரர்களும் காட்டமான சாராயத்தைக் குடிப்பவர்கள்தான். ஆனால் சீனர்கள் காட்டமான சாராயத்தைக் குடிப்பவர்கள் அல்ல. வெறும் பீர் மட்டும்தான் குடிப்பார்கள். அதுவே அவர்களுக்கு போதுமான போதையை தந்துவிடும்.

ஒலி கதையில் மூன்று விதமான சமூக வாழ்க்கை பேசப்படுகிறது. மலேசிய தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள். இது மூன்று இனத்தினுடைய கதை – தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. மலேசியாவை நிகழிடமாக கொண்டு நிகழ்வதால் இது – தமிழ் மொழியில் எழுதப்பட்ட மலேசிய நாட்டுக் கதை என்று சொல்லலாம். குறிப்பாக மூன்று சமூகத்தின் உளவியலை ஒலிகதை பேசுகிறது.  

தமிழர்களும், இந்தியர்களும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், உணவில்லாமல், உடையில்லாமல்கூட இருப்பார்கள். ஆனால் சாதி இல்லாமல் இருக்க மாட்டார்கள். ‘சைகையிற் பொருளுணர்’ – கருப்பி எழுதிய கதை. தனுஜா, விஷ்ணு இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கனடாவில் வசிப்பவர்கள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு டொரனோட்டோ நகரம் முழுவதும் உல்லாசமாக சுற்றியவர்கள். ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் சாதி தெரியவர, படிப்படியாக தனுஜா விஷ்ணுவிடமிருந்து விலக ஆரம்பிக்கிறாள். நல்ல படிப்பு, நல்ல வேலையில் இருக்கிறான் என்று விஷ்ணுவிடம்  மகளை நன்றாக உறவாட விடுகிற தனுஜாவின் பெற்றோர்கள் அவனுடைய சாதி தெரிந்த பிறகு அந்த உறவை எதிர்க்கிறார்கள். விஷ்ணுவின் சாதி தெரிந்த பிறகு அவனை படிப்படியாக தவிர்க்கச்சொல்லி தனுஷாவை நிர்பந்திக்கிறார்கள். தனுஷா நல்ல தமிழச்சி. பெற்றோரின் சொல்படியே நடக்கிறாள். காதல் அவளுக்கு முக்கியமல்ல. சாதிதான் முக்கியம். காரணம் தெரியாது தவிக்கிற விஷ்ணு தனுஜாவின் நினைவிலிருந்து      மெல்ல-மெல்ல விலகி இலங்கையை சேர்ந்த நீரோ என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் தற்போதைக்கு இணைந்து வாழலாம். விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அழைக்கிறாள். நல்ல உடன்பாடு. சரி என்று விஷ்ணு நீரோவுடன் கெட் டூ கெதர் என்ற முறையில் இணைந்து வாழ்கிறான்.

மூன்றாண்டுகள் கழித்து திடீரென்று ஒரு நாள் தனுஜா விஷ்ணுவை போனில் அழைத்து அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டும் விமான நிலையத்தில் இறக்கிவிட முடியுமா என்று கேட்கிறாள். முதலில் தயங்குகிறான். நீரோ கட்டாயப்படுத்தவே சரி என்று ஒப்புக்கொண்டு தனுஜாவை காரில் ஏற்றிக்கொண்டு விமான நிலையத்திற்கு செல்கிறான். பயணத்தின் முடிவில் தனுஜா கேட்கிறாள் என்னிடம் சாதியை மறைத்தது மாதிரியே நீரோவிடமும் மறைத்துவிட்டுதான் வாழ்கிறாயா?” என்று கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டுப் போகிறாள். அப்போதுதான் விஷ்ணுவிற்கு தனுஜா ஏன் தன்னைவிட்டு விலகிப்போனாள் என்கின்ற காரணம் புரிய வருகிறது. நொறுங்கிப்போகிறான்.

       சைகையிற் பொருளுணர் கதையில் விஷ்ணு, தனுஜா, நீரோ மூன்று பேருடைய காதல் கதை வருகிறது. அதே மாதிரி மற்றொரு முரண்பட்ட காதல் கதையும் வருகிறது. ஜேய்சன் என்ற இளைஞனும் யூலியா என்ற இளம்பெண்ணும் காதலிக்கிறார்கள். யூலியாவின் தோழி மரியா. ஒரு கட்டத்தில் ஜேய்சனுக்கும் மரியாவிற்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துகொள்கிறார்கள். ஜேய்சன், யூலியா காதல் முறிந்துபோகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அதற்குப் பெயர் யூலியா. யூலியா தமிழ்நாட்டுப் பெண் மாதிரி கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கவில்லை. நீல் என்ற இளைஞனை காதலிக்கிறாள். மாறிமாறி காதலித்தாலும், கல்யாணம் செய்துகொண்டாலும் ஜேய்சன், மரியா, யூலியா, நீல் ஆகிய நான்கு பேரும் இணைந்து சுற்றுலா செல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ நடக்குமா?

       கதை டொரோனொட்டாவில் நடக்கிறது. கனடா நாட்டு பழக்க வழக்கம் குடித்தல், நடனமாடுதல் என்று இன வேறுபாடின்றி சாதாரணமாக இருப்பது என்று சித்திரிக்கப்படுகிறது. லேக் ஓண்டாரியோசி என்ற புகழ்பெற்ற இடத்தில் நடப்பது, ஃபளுமவுண்ட் ரிசாட் பற்றிய குறிப்புகள் கதையில் இடம் பெற்றுள்ளன.

       கதை நிகழும் இடம், கதையில் வரக்கூடிய மனிதர்களில் பலர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே கருப்பி எழுதிய சைகையிற் பொருளுணர் கதை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கனடா கதை கனடா வாழ்க்கை. காரணம் கதை விவரிக்கும் வாழ்க்கை முற்றிலும் கனடிய சமூக வாழ்க்கை. சாதி ஒன்றுதான் புதிது. தமிழர்கள் எங்கு சென்றாலும் பழக்க வழக்கத்தை மட்டுமல்ல சாதியையும் கூடவே எடுத்து செல்கிறார்கள் என்பதையும் இக்கதை சொல்கிறது. வாழும் இடம் தந்த சுதந்திரத்தினால் எழுதப்பட்டது சைகையிற் பொருளுணர்.

 

உலகில் சிறிய நாடு. ஆனால் அழகிய இடம். அபரிமிதமான வளர்ச்சி. ஒழுங்கு, தூய்மை என்று போற்றப்படுகிற சிங்கப்பூர் வாழ்க்கையும், மனிதர்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஷா நவாஸ் எழுதிய சாட்சிஎன்ற கதை சொல்கிறது. தினசரி நாளிதழ் போடுகிற மனிதனுடைய ஒரு நாள் காலை பொழுதைப்பற்றி பேசுகிறது. சீனர்களுடைய வீடுகளிலும் பங்களா தேஷிகள், தமிழர்களுடைய வீடுகளிலும் செய்தித்தாள்களை போடும்போதும் ஒவ்வொரு வீட்டு மனிதர்களும் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? காலை வணக்கத்தை ஒவ்வொரு மொழியிலும் எப்படி சொல்கிறார்கள்? எப்படி பழகுகிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டு மனிதர்களைப்பற்றியும்,  அவர்களுடைய குண இயல்புகள்பற்றியும், அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், உடை என்று மூன்று இனத்தவருடைய பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

                செய்தித்தாளை போட்டுக்கொண்டே போகும்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரியில் அடிப்பட்டு ஒரு சீனக் கிழவி செத்துப்போக நேரிடுகிறது. லாரி போய்விடுகிறது. பிழைப்பதற்காக சீனாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருத்திதான் லாரியில் அடிப்பட்ட கிழவியை தூக்கிப்பார்க்கிறாள். காவல்துறைக்கு, மருத்துவமனைக்கு தகவல் தருகிறாள். கிழவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. காவல்துறை விபத்துபற்றி விசாரணையை ஆரம்பிக்கிறது. செய்தித்தாள் போடுகிற நபர் விபத்தைப் பார்க்கவில்லை என்று பொய் சாட்சி சொல்கிறான். அப்படி சொல்ல அவனுடைய நண்பன் சங்கர்தான் தூண்டிவிடுகிறான். சங்கர் சொல்லாவிட்டாலும் செய்தித்தாள் போடுகிறவன் அப்படித்தான் சொல்லியிருப்பான். சீன இளம் பெண், செய்தித்தாள் போடுகிறவன் என்று பலரும் சீனக்கிழவி இறந்துவிட்டாளா, உயிரோடு இருக்கிறாளா என்று விவாதிக்கிறார்கள்.

                சீனக்கிழவியின் விபத்துப்பற்றி மட்டுமே கதை விவரிக்கவில்லை. சீனர்கள்பங்களா தேஷிகள், தமிழர்களுக்கிடையிலான உறவுகள் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்கிறது. தீபாவளி, ஹரிராயா போன்ற விசேஷ தினங்களில் சிங்கப்பூரில் செய்யப்படும் சிறப்பு உணவான குவேஎப்படி ஒவ்வொரு வீட்டாருக்கும் பறிமாறப்படுகிறது என்பதையும், மரியம், ஜோசப், அப்துல் சாலா போன்ற மனிதர்களின் வழியே நிகழ்த்திக் காட்டப்படுகிறது.            தமிழர் ஒருவர் இந்த கதையை சொல்கிறார். என்பதால் இது தமிழ் கதையாகிவிடாது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிங்கப்பூர் கதை. சிங்கப்பூர் இலக்கியம்.

 

நானும் ஒகஸ்டீனாவும், ஒரு பந்தயக்குதிரையும்என்பது சக்ரவர்த்தி எழுதிய சிறுகதை. இங்கிலாந்திலுள்ள ஜார்ஜ் டவுனுக்கு அருகில் ஒரு மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் நடக்கிறது கதை. டானியல் இங்கிலாந்துக்காரன். குதிரைப் பண்ணை வைத்திருப்பவன். அவனிடம் வேலை செய்பவன் பாபு. இலங்கையைச் சேர்ந்தவன். அகதி. டானியலுடன் ஒகஸ்டீனா  என்ற இளம்பெண் இருக்கிறாள்.  தென் ஆப்பிரிக்கக்காரி. அகதி. இவர்களை மையமாக வைத்துதான் கதை நிகழ்கிறது.

       ஒகஸ்டீனா ஒரு வெள்ளைக்காரி. அவளுடைய தந்தை ஒரு கருப்பினத்தவருடைய நாயுடன் தன்னுடைய நாய் புணர்ந்ததற்காக நாயின் உரிமையாளரான கருப்பினத்தவரை சுட்டுக்கொன்றவர். ஒரு வெள்ளைக்காரனுடைய நாயுடன் ஒரு கருப்பினத்தவனுடைய நாய் புணர்வதா என்பதுதான் அவருடைய கோபத்திற்கான காரணம். கருப்பினத்தவர்களிடையே இருந்த தீவிரவாத இயக்கத்தினர் ஒகஸ்டீனாவின் தந்தையை கொன்றுவிடுகிறார்கள். அதனால் தன்னையும் கொல்லலாம் என்ற பயத்தில் நாட்டைவிட்டு ஓடிவந்துவிடுகிறாள். அவளோடு அவளுடைய டால்மேஷன் என்ற நாயும் வருகிறது. அது டானியலினுடைய பண்ணையில் புகுந்துவிட நாயை பிடிக்கப்போன இடத்தில் ஒகஸ்டீனா டானியலை சந்திக்க நேர்கிறது. நாட்டைவிட்டு ஓடிவந்த அகதி. என்பதை அறிந்து, பயமுறுத்தி, அவளை அதிகமாகக் குடிக்க வைத்து தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு அடிமையைப்போன்று நடத்துகிறான் டானியல். நாள் தவறாமல் அவளோடு முரட்டுத்தனமாக உறவு கொள்கிறான். அதிலிருந்து தப்பித்து செல்ல முயன்று கொண்டிருக்கும்போது பாபுவுக்கும் ஒகஸ்டீனாவுக்கும் நட்பாகிறது. பாபு, டானியலின் - குதிரை பண்ணையில் வேலைப் பார்ப்பவன். ஒகஸ்டீனாவை ஸ்ரீரங்கத்து மடிசார் மாமி மாதிரி மாற்றி, இலங்கை பெண் மாதிரி சீலைக் கட்டி கல்யாணம் கட்டி, பிள்ளைப்பெற்று வளர்ப்பது மாதிரி கனவு காண்கிறான் பாபு. அவனுடைய கனவை வளர்ப்பது மாதிரிதான் ஒகஸ்டீனாவினுடைய நடவடிக்கையும் இருக்கிறது. பாபுவுக்கு காதலும் இருக்கிறது. டானியல் என்ன செய்வானோ என்ற கவலையும் இருக்கிறது. வெள்ளைக்காரியை ஒரு கருப்பன் காதலிப்பதா என்ற அச்சமும் கூடுதலாக இருக்கிறது.

       டானியல் ஒரு நாள் பந்தயத்திற்கு குதிரையுடன் சென்றுவிட அந்த நேரத்தில் ஒகஸ்டீனா தன்னை இங்கிருந்து அழைத்து சென்றுவிடு என்று பாபுவிடம் கேட்கிறாள். இருவரும் பேசுகிறார்கள். பாபு பிருதிவிராஜன் கதை சொல்கிறான். தமிழ் கவிதை சொல்கிறான்.  அவள் சூலு’ மொழி கவிதை சொல்கிறாள். ஓடிப்போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அன்று மாலை வந்த டானியல் தன்னுடைய குதிரை பந்தயத்தில் ஓடிப்போய் தோற்காமல், ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது என்று கூறி சுட்டு கொன்றுவிடுகிறான். அதே நேரத்தில் பாபுவையும் ஒகஸ்டீனாவையும் ஒன்றாக பார்த்ததில் சந்தேகம் வந்து நீயும் என்னை ஏமாற்றுகிறாயா? பெண் நாயேஎன்று சொல்லி ஒகஸ்டீனாவையும் சுட்டு கொன்றுவிடுகிறான். காத்திரு. உன்னோடு பேசவேண்டும்என்று சொல்லிவிட்டு டானியல் போய்விடுகிறான். குதிரையின் கதை, ஒகஸ்டீனாவின் கதை முடிந்த மாதிரி தன்னுடைய கதையும் முடியப்போகிறது என்ற கவலையில் பாபு காத்திருக்கிறான் என்பதோடு கதை முடிகிறது.

       இந்த கதையில் இலங்கையிலுள்ள படுவான்கரைப்பற்றிய குறிப்பும், தென் ஆப்பிரிக்கா பற்றின குறிப்பும் வருகிறது. ஆனால் கதை மில்டன் சிட்டியிலிருந்து ஜார்ஜ் டவுனுக்குப் போகும் வழியிலுள்ள மலை அடிவாரத்தில் நடக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இங்கிலாந்து நாட்டுக்கதை. உயிருக்கு பயந்து, உயிரை காப்பாற்றிக்கொள்ள நாடுவிட்டு நாடு ஓடிவந்தவர்களின் கதை. ஓடிவந்தவர்கள் சந்திக்கும் புள்ளிதான் நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக் குதிரையும் கதை.  இனவெறி, நிரவெறி பற்றிய கதை இது. வெள்ளை நிறத்தவனுடைய நாய் கருப்பினத்தவனுடைய நாயை புணர்வதா? வெள்ளைக்காரி ஒரு கருப்பினத்தவனை காதலிப்பதற்கான காரணம் அன்பல்ல. சூழல். இக்கதைக்குள் நுட்பமான அரசியல் விவாதிக்கப்படுவதை எளிய வாசகன்கூட அறியமுடியும்.

 

                ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்என்பது நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய கதை. பாண்டிச்சேரியிலும் பிரான்சிலுமாக கதை நடக்கிறது. பாண்டிச்சேரியை சேர்ந்த வீரப்பனுக்கும் திலகத்திற்கும் பிறந்தவன் சின்னதுரை. வீரப்பனுக்கு மீன் பிடிப்பது தொழில். திலகத்திற்கு பெரிய மார்க்கெட்டில் மீன் விற்பது வேலை. மீன் பிடிக்க சென்ற வீரப்பன் புயலில் சிக்கி இறந்துவிட, திலகம் பெரிய மார்க்கெட்டில் இருக்கிற தண்டல்காரனுடன் வேறுவரியின்றி இணைந்து வாழ ஆரம்பிக்கிறாள். நாளடைவில் அந்த உறவு கசப்படைகிறது. சின்னதுரை பல இடங்களில்  வேலை செய்கிறான். எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பிரான்சிற்கு செல்ல வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அதற்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வேண்டும். அதற்காக பிரான்ஸ் குடியுரிமை உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறது. நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவள். வயது நாற்பதுக்கும் மேல். அவளுடைய முக்கியமான தொழில் பிரான்சுக்கு செல்ல விரும்பும் ஆண்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு தொகையைப் பேசி, பணத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்வது, பிறகு விவாகரத்து பெறுவதுதான். அதே முறையை பின்பற்றி சின்னதுரை அந்தப்பெண்ணுக்கு ஐந்தாவது கணவனாக பதிவு திருமணம் செய்து, குடியுரிமை பெற்று பிரான்சுக்கு செல்கிறான்.

       பிரான்சில் பாகிஸ்தானியர் நடத்தும் ஹோட்டலில் சின்னதுரை வேலை செய்கிறான். ஆறு மாதம் முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக போலீஸில் மாட்டிக்கொள்கிறான். போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக போலீஸ் கூறுகிறது. போலீஸ் விசாரணையோடு கதை முடிகிறது. சின்னதுரை திரும்பி பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டானா இல்லையா? தெரியாது. இந்தக் கதையில் பாகிஸ்தான், பிரான்சு, ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, இலங்கை, பங்களாதேஷ், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மனிதர்கள் என்று பலரும் வருகிறார்கள். அதே மாதிரி பிரான்சு தேசத்து உணவு வகைகள் இடம்பெறுகின்றன. பாண்டிச்சேரியில் கதை நடப்பது போல தோற்றம் தந்தாலும், கதை நடப்பது பிரான்சு தேசத்தில்தான். வெளிநாடு செல்ல விரும்புகிறவன் படுகிற அவஸ்தையும், வெளிநாடு சென்ற பிறகு அங்கு படுகிற அவஸ்தையும்தான் சன்னலொட்டி அமரும் குருவிகள். ஷோபா சக்தி, பொ.கருணாகரமூர்த்தி போன்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்ற காரணம் வேறு. நாகரத்தினம் கிருஷ்ணா கதையில் வரும் சின்னதுரை பிரான்சுக்கு சென்றதற்கான காரணம் வேறு. வழிமுறையும் புதிது. அதே மாதிரி சிங்கப்பூர், மலேசியா சென்றவர்கள் எழுதிய கதைகளில் வரும் மனிதர்களும், இலங்கை எழுத்தாளர்களுடைய கதைகளில் வரும் மனிதர்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் வேறுவேறானவை.

                        

குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட இடத்தில், ஒன்றிரண்டு பாத்திரங்களோடு நிகழ்வதுதான் சிறுகதை என்ற வரையறுக்கப்பட்ட இலக்கணத்தை மெலிஞ்சி சித்தனுடைய வேருலகு’ சிறுகதை உடைத்தெறிந்துவிட்டது. பாரிஸ், ஸ்பெயின், மெக்சிகோ என்று மூன்று நாடுகளில் கதை நிகழ்கிறது. ஒரு சிறுகதை மூன்று நாடுகளில் நிகழமுடியுமா என்றால் முடியும் என்று இக்கதை சொல்கிறது.

       சூசை த/பெ.மரியதாசன், கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற உண்மையான முகவரிகொண்ட இளைஞன் அகதியான பிறகு, பட்ட அல்லலும், அலைக்கழிக்கப்பட்டதும்தான் கதை. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சமயங்களில் கதை நடக்கிறது. தாய் நாட்டில் சிறைச்சாலை மட்டுமல்ல, வீடு மட்டுமல்ல, திறந்த வெளியும் சிறைச்சாலையாகிவிட்ட நாட்டிலிருந்து தப்பி உயிர் பிழைப்பதற்கு செல்கிறான் சூசை. பாரிஸில் ஒரு உணவு விடுதியில் வேலை பார்க்கிறான். அது பவானி என்ற பெண் மூலம் கிடைக்கிறது. அகதியாக அங்கீகரிக்கவும், அகதிக்குரிய உதவித் தொகை வழங்கவும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு முதல் முறையல்ல இரண்டாவது முறையும் தோற்றுப்போகிறது. வேறு வழியில்லாமல் பாரிஸைவிட்டு வெளியேற வேண்டும். வெளியேறுகிறான். பாரிஸிலிருந்து ஸ்பெயின் வழியாக மெக்சிகோ செல்ல திட்டமிட்டுப் பயணிக்கும்போது மூன்று நாட்டு போலிசும் சோதனையிடுகிறது. விசாரணை செய்கிறது. போலி பாஸ்போர்ட் என தெரியவர மெக்சிகோ போலிஸ் ஸ்பெயின் போலிசிடம் ஒப்படைக்கிறது. ஸ்பானிஷ் சிறையில் ஒரு மாதம் கழிக்கிறான் சூசை. ஸ்பெயின் மெற்றிட் நகரத்தில் அலைகிறான். கடைசியில் ஆனந்த மார்க்கா என்ற தியான மடத்தில் சேர்கிறான். அங்கு முந்தின நாள் கண்ட கனவை சொல்லச் சொல்கிறார்கள். சூசை சொல்கிறான். கதை முடிந்து விடுகிறது.

       வேருலகு கதையில் ஸ்பெயினின் அழகிய மலைத் தொடர்கள், பாரிஸின் மார்ன் சிற்றோடைப்பற்றிய விவரிப்பும் வருகிறது. பங்களாதேஷ் பெண் காசு எதுவும் தர வேண்டாம் ஆப்பிளை சாப்பிடு என்று சொல்கிறாள். மரியா என்ற பாரிஸ் பெண் யாரென்றே தெரியாத சூசைக்கு மெட்ரோ ட்ரெயின் டிக்கெட் எடுத்துகொடுத்து உதவுகிறாள். பாரிஸ், ஸ்பெயின், மெக்சிகோ விமான நிலையத்தில் போலிஸ்காரர்கள் சோதனை என்ற பெயரில் எப்படி க்ரிமினலாக நடத்துகிறார்கள், ரேகைகளை பதிக்கிறார்கள், ஆடைகளை களைக்கிறார்கள், உடலிலுள்ள ஒவ்வொரு ஓட்டையின் வழியாகவும் சோதனையிடுகிறார்கள் என்பதையும் கதை விரிவாக சொல்கிறது.

       எளிய வாசகன்கூட வேருலகு கதை படித்து முடித்ததும் இது தமிழ் கதை அல்ல. இது ஒரு பன்னாட்டு கதை என்று சொல்லிவிடுவான்.

 

       லதா எழுதிய அரச மரம்சிங்கப்பூரிலுள்ள சிராங்கூன் சாலையில் இருக்கிற ஒரு அறையில் நடக்கிறது. மலர், பேராசிரியர், துப்புரவு செய்ய வந்த பர்மாவை சேர்ந்த தமிழ்ப்பெண் ஆகியோரின் உரையாடலின் வழியே கதை நிகழ்கிறது. கதையில் சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவில், தாய்லாந்திலுள்ள பிள்ளைவரம் கொடுத்த நான்குதலை புத்தர், இலங்கை வடமாகாணம், அநுராதபுரத்தில் அசோக மன்னரின் மகள் சங்கமித்திரை வைத்ததாக நம்பப்படும் ஆயிரங்காலத்து அரசமரம், நீர் கொழும்பில் இருந்த அரச மரம் ஆகியவற்றின் கதைகள் சொல்லப்படுகின்றன. 1980, 1990 காலத்தில் இலங்கையில் நடந்த இன அழித்தொழிப்பு போர்ப்பற்றியும், கடைசியாக நடந்த முள்ளி வாய்க்கால் முடிவுப்பற்றியும் கதை பேசுகிறது. கடைசியாக போர் முடிந்த பிறகு இலங்கை அரசு அரச மரம்எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளை அமைப்பதைப்பற்றியும் பேசுகிறது. புதிதாக இலங்கை அரசால் நிறுவப்படும் புத்தர் சிலைகள் எப்படி இருக்கின்றன? “புத்தரின்ர புன்சிரிப்பு பயமாத்தான் கெடக்குஎன்றும், “இந்த புத்தர் சிரிக்கவே இல்லைஎன்றும் பேராசிரியர் சொல்கிறார். பயமுறுத்துகிற, சிரிக்காத புத்தர் சிலைகளை ஏன் இலங்கை அரசு ஓயாமல் நிறுவிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் லதாவின் கேள்வி. கதையின் கேள்வி. இலங்கையிலுள்ள ஆயிரங்காலத்து அரச மரத்தைப் பார்க்கப்போகிற மலர், அரச மரங்களை பார்க்காமலேயே ஏன் திரும்புகிறார் என்பது மற்றொரு முக்கியமான கேள்வி.

       இலங்கையில் மட்டும்தான் இனவாதம் இருக்கிறதா? பர்மாவில் இல்லையா என்றால் அங்கும் இருக்கிறது என்பதை பர்மாவிலேயே பிறந்து வளர்ந்த தமிழ்பெண் நாங்க நல்லா தமிழ் பேசுவோம். படிப்போம். தமிழ்காரங்கதான் நல்லாப் படிப்பாங்க. கஷ்டப்பட்டு உழைப்பாங்க. ஆனா எங்கள மதிக்க மாட்டான். அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தோலு பார்ப்பான்என்று கூறுகிறாள். இலங்கையில் நடந்த அதே வன்முறைகள், ஒடுக்குதல்கள், நிறம் சார்ந்த, இனம் சார்ந்த நசுக்குதல்கள் பர்மாவிலும் நடக்கின்றன என்பதை அரச மரம் கதை சொல்கிறது. அரச மரம் கதை தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. கதை நடப்பது சிங்கப்பூரில். ஆனால் கதை சிங்கப்பூரைப்பற்றி, இலங்கையைப்பற்றி, பர்மாவைப்பற்றி, தாய்லாந்தைப்பற்றிப் பேசுகிறது. இக்கதையில் ஆசையை துறஎன்று சொன்ன புத்தர்தான், பிள்ளை வரம் கொடுப்பவராகவும் இருக்கிறார் நான்கு தலை புத்தர்.

     

மீண்டும் ஓர் ஆதாம்நடேசன் எழுதிய கதை. மெல்பர்னிலும், தாய்லாந்திலும் நடக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நிரஞ்சனுடைய குடும்பமும், மலேசியாவிலிருந்து குடிபெயர்ந்த சீன இனத்தவரான பாட்ரிக் வொங் குடும்பமும் நட்பாகிறது. இந்த நட்பு குழந்தைகளின் மூலமாக நடக்கிறது. பாட்ரிக் வொங்கின் மனைவி சூசன். நல்ல அழகி. பாட்ரிக் வொங் பண ஆசை கொண்டவன். ஆனால் வேலை இல்லாதவன். நிரஞ்சனும் வேலை இல்லாதவர்தான். ஆனால் இரண்டு பேரினுடைய மனைவிகளும் வேலை செய்கின்றனர்.

       பாட்ரிக் வொங் தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறிவிட்டு தாய்லாந்துக்குப் போய்விடுகிறான். தாய்லாந்துக்கு வரும்படி நிரஞ்சனை நட்பு ரீதியாக பாட்ரிக் வொங் அழைக்கிறான். நிரஞ்சன் தாய்லாந்து சென்ற பிறகுதான் தெரிகிறது பாட்ரிக் வொங், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிற வேலையில் இருக்கிறான் என்பது. குறிப்பாக தாய்லாந்திலிருந்து படிப்பதற்காக என்று பெண்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவது பிறகு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது. அதே மாதிரி சீனாவிலிருந்தும் படிப்பதற்கு என்று இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறான். ஜென்டில் மேன் க்ளப்என்ற பெயரில்தான் பாலியல் தொழில் நடக்கிறது.

       தாய்லாந்துக்கு செல்கிற நிரஞ்சன் அங்குள்ள புத்த கோவில், அரச அரண்மனை, மிதக்கும் மார்க்கெட் என்று பார்க்கிறார். கடைசியில் ஜென்டில் மேன் க்ளப்ற்கு பேட்ரிக் அழைத்துச்சென்று லின்என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்துகிறன். அவள் ஷாங்காயிலிருந்து படிப்பதற்காக வந்தவள். ஆனால் ஆஸ்திரேலியாவில் பாட்ரிக் வொங்கால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவள். நாள் ஒன்றுக்கு பதினைந்து வாடிக்கையாளர்களுடன் படுக்க வேண்டும். மூன்று மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. தன்னால் பதினைந்து வாடிக்கையாளர்களுடன் படுக்க முடியவில்லை. அதனால் தப்பித்துப்போக விரும்புகிறேன். உதவுங்கள் என்று கேட்கிறாள். நிரஞ்சனும் லின்னின் நிலையை அறிந்து உதவுகிறார். விசயத்தை அறிந்த பாட்ரிக் நிரஞ்சனை கத்தியால் குத்தி விடுகிறார். உயிருக்குப் போராட்டமான நிலையில் நிரஞ்சன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்த கதை புலம்பெயர்ந்து வாழ்கிற நிலையை ஒரு பக்கம் விவரிக்கிறது. மறுப்பக்கம் புலம்பெயர்ந்தவர்கள் என்னென்ன விதமான வேலைகளை  எல்லாம் செய்ய நேரிடுகிறது என்பதை சொல்கிறது. மூன்றாவதாக படிப்பதற்காக வருகிற இளம்பெண்களை பாலியல் தொழிலில் எப்படி ஈடுபடுத்துகிறார்கள் என்பதையும் சொல்கிறது. தன்னுடைய வேலை மார்கெட்டிங் ஏஜென்ட் அவ்வளவுதான்என்று பாட்ரிக் வொங் கூறுகிறான். ஆனால் தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அவனால் பாலியல் தொழிலை நடத்துகிறான். பாலியல் தொழில் பன்னாட்டு அளவில் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கிறது என்பதை இக்கதை விவரிக்கிறது.

     

கலாமோகனுடைய மூன்று நகரங்களின் கதைஅகதி வாழ்வை பிண வாழ்க்கை என்று சொல்கிறது. இலங்கையில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்கிற இளைஞன் கொழும்புவில் சில காலமும், யாழ்ப்பாணத்தில் சில காலமும் வாழ்கிறான். போர்ச்சூழல் காரணமாக பிரான்சுக்கு வந்து வேலையின்றி அகதியாக வாழ்கிறான். அகதி வாழ்க்கையை வாழ்கிற ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கிறான். அதோடு கூடுதலாக சில புது சிக்கல்களையும் சந்திக்கிறான். அந்த புது சிக்கல்கள்தான் இக்கதைக்கு மதிப்பைக் கூட்டுகிறது. போர்ச்சூழல் காரணமாக, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் வெளிநாடு போ வெளிநாடு போஎன்றும் நீ எங்களுக்கு ஒழச்சி தரவேணாம்என்று சொல்லியும் கட்டாயப்படுத்தியும் பாரிசுக்கு அனுப்புகிற குடும்பத்தார்கள் பிறகு என்ன செய்கிறார்கள்? “பணம் அனுப்பு, பணம் அனுப்புஎன்று நச்சரிக்கிறார்கள். அதோடு தங்கையையும் தம்பியையும் அழைத்துக்கொள்என்ற ஓயாத பிடுங்கல்வேறு. பிரான்சில் அகதியாக வாழ்கிறவனுடைய நிலை என்னவென்று அறியாமல் பெற்றோர்களும், உறவினர்களும் கொடுக்கிற நெருக்கடிதான் கதை. இலங்கையில் அப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. எப்படி இறந்தார், எங்கே இறந்தார் என்று விசாரிப்பதற்குக்கூட போனில் காசில்லாத நிலை. மரணங்களைப்பற்றி பேசுவதற்கும், ஒரு சொட்டு கண்ணீர் விடுவதற்கும்கூட அகதி வாழ்க்கையில் இடமில்லை. உயிரோடு இருப்பது மட்டும்தான் முக்கியம். அதற்குத்தான் எல்லாப் போராட்டமும். தந்தையின் மரணச் செய்தி, அதைப்பற்றி விரிவாக அறிய முடியாத நிலையில் சாப்பிடவும், குடிக்கவும் விரும்புகிறான். அதற்கு வழியில்லை. தனக்குத்தெரிந்த போர்ச்சுகல் நண்பனைத் தேடிப்போகிறான்.

       போர்ச்சுகல்காரன் ஒரு அகதி. ஆனால் அவனுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால் நான்காண்டுகள் ஒரு பிரான்சுக்காரியுடன் இணைந்து வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகிறான். ஒரு நிலையில் உதவாக்கரை என்று போர்ச்சுகல்காரனை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிடுகிறாள் பிரான்சுக்காரி. பிரான்சில் அகதிவாழ்க்கை. பிரான்சுக்காரியுடன் நான்காண்டு குடும்ப வாழ்க்கை. ஆனாலும் ஒன்றிரண்டு பிரஞ்சு சொற்கள் மட்டும்தான் அவனுக்குத் தெரியும். அவன் பிரன்ஞ் மொழியை அறியவும், கற்கவும், பேசவும் திட்டவட்டமாக மறுக்கிறான். ஏன்? எதனால் அவனுக்கு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது? பிரஞ்சு மொழி தெரியாதவன் பிரஞ்சுக்காரியுடன் எப்படி நான்காண்டுகள் குடும்பம் நடத்தி மூன்று பிள்ளைகளைப் பெற்றான்? ‘அந்த விசயத்திற்கு மொழி அவசியமில்லைதானேஎன்று கதாசிரியர் எழுதுகிறார். அது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

       போர்ச்சுகல்காரன் ஓயாமல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறான். ஒரு கடிதத்திற்குக்கூட பதில் வந்ததில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்ற தகவலும் தெரியாது. ஆனாலும் விடாமல் கடிதங்களைப் பித்துப்பிடித்த நிலையில் எழுதிக்கொண்டே இருக்கிறான் போர்ச்சுகல்காரன்.

       இக்கதையில் கதை சொல்லிக்கு மட்டுமல்ல, அவனுடைய நண்பன் போர்ச்சுகல்காரனுக்கும் பெயரில்லை. அவனுடைய காதலியான பிரஞ்சுக்காரிக்கும் பெயரில்லை. கதை சொல்லியின் ஊர் பெயர் இல்லை. அப்பா, அம்மா, தம்பி, தங்கைக்கும் பெயரில்லை. அத்தை, மாமாக்களுக்கும் பெயரில்லை. ஒரே ஒரு பெயர் மாமா ராமசுந்தரம் என்று மட்டும்தான் வருகிறது. உறவினர்கள் எல்லாம் இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெயர் எதற்கு? பிரான்சு தேசத்தில் வாழ்கிற அகதிகளுக்கும் பெயர் எதற்கு? வீடு, தெரு, ஊர், நாடுமொழி என்று எதுவுமில்லாதவர்களுக்கு பெயர் மட்டும் எதற்கு என்று கலாமோகன் விட்டிருக்க்கலாம். அதனால்தான் எனக்கு வீடில்லை. நான் தூங்குமிடங்களும் எனது வீடில்லைஎன்று எழுதியிருக்கிறார்.

       இந்த கதையில் இரண்டு முக்கியமான விசயங்கள் பேசப்படுகின்றன. அகதியாக வாழ்கிறவனிடம் பணம் அனுப்பு, பணம் அனுப்புஎன்றும் தங்கை, தம்பியை அழைத்துக்கொள்என்றும் வீட்டார் கொடுக்கிற நெருக்கடி. மற்றொன்று போர்ச்சுகலை சேர்ந்த அகதி பிரான்சுக்காரியுடன் இணைந்து மூன்று குழந்தைகளைப் பெறுவது. அகதி வாழ்க்கையில் இதுதான் என்றில்லை. எல்லாமும் சாத்தியமே என்று சொல்கிறது மூன்று நகரங்களின் கதை. ஒவ்வொரு சிறுகதையும் அகதி வாழ்வின் ஒவ்வொரு முகத்தைக் காட்டுகிறது. எல்லா முகமும் சேர்ந்ததுதான் அகதி வாழ்வின் மொத்த முகம். மற்றவர்கள் அறியாத, அறிய முடியாத துயர முகம்.

       உழைத்து வாழ்வதற்கு சொந்தமாக ஒரு தொழிலோ உழுது வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமோ, படுத்து தூங்குவதற்கு ஒரு கூரையோ, தன்னுடைய பிள்ளைகள் ஓடி விளையாட ஒரு மர நிழலோ இல்லாத மனிதன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவன் அகதிதான் என்பதை இக்கதைகள் ஆடம்பரமில்லாமல்  யதார்த்தத்தின் வழியாக மட்டுமல்ல உண்மையின் வழியாக நிரூபிக்கின்றன.

       இந்த சிறுகதைகளின் வழியே பிரான்ஸ், ஆஸ்திரேலியா, க்யூபா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், மொராக்கோ, ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், சோமாளியா, அல்ஜீரியா, மொரீஷியஸ், பாகிஸ்தான், தாய்லாந்து என்று பல தேசத்து நிலவியல் நமக்கு காட்சியாக தரப்பட்டிருக்கிறது. அதே மாதிரி பிரன்ச், சிங்களம், சீனம், மலாய், ஸ்பானிஷ், ஜெர்மன், ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், சோமாளியா, அல்ஜீரியா, மொரீஷியஸ், பாகிஸ்தான், தாய்லாந்து என்று பல தேசத்து மொழிகளையும் ஒன்றிரண்டு வாக்கியங்களின் வழியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தென்ஆப்பிரிக்காவின் சூலு’ மொழியின் நாட்டுப்புற பாடல்கூட நமக்கு அறிமுகமாகிறது. இதுதான் ஒரு எழுத்தாளன் – மொழிக்கு செய்கிற பெருமை.

 

இதுவரை சொல்லப்பட்ட கதைகள் – ‘தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்என்பதற்கு சில மாதிரிகள் மட்டும்தான். இக்கதைகளில் தமிழ்நாட்டுக்காரர்கள், பாண்டிச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மாவை சேர்ந்த தமிழர்களைப்பற்றி, புலம்பெயர்ந்து வாழ்கிற இடத்தில் நடந்த விசயங்கள்பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்கள் என்று மட்டுமே சொல்ல முடியாது. தமிழர்கள் எழுதிய சிறுகதைகளில் போலந்துக்காரர்கள், ஜெர்மன், சோமாலியா, சீனா, இங்கிலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, கானா, பிரான்ஸ், பாகிஸ்தான், மெக்சிகோ, ஆஸ்திரேலியே, ஸ்பெயின், அல்ஜீரியா, மொரீஷியஸ், அரபு, க்யூபாக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள், பங்களாதேஷிகள் என்று பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். தமிழ் சிறுகதைகளில் நிகழ்ந்த அதிசயம் இது. அதே மாதிரி சீனம், மலாய், ஜெர்மன், பிரன்ஞ்ச், ஸ்பானிஷ், சிங்களம் என்று பல தேசத்து மொழியும், நிலவியலும் கதைகளில் வருகிறது. எதுவும் உறுத்தலாக இல்லை. இக்கதைகளை படிக்கும்போது புலம்பெயர்ந்ததோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் அல்ல. அது பன்னாட்டு இலக்கியமாக இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. கடந்த இருபது முப்பதாண்டுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும்போது உள்ளடக்க ரீதியாக, வடிவ ரீதியாக, செறிவான மொழி என்ற அளவில், பன்முக வாசிப்புக்கு இடமளிக்கக்கூடிய சிறுகதைகளாக இருப்பது புலம்பெயர்ந்தோர் எழுதிய கதைகளே. இவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா? நெருக்கடியும், துயரமும், வலியும் ஏற்படும்போது திறமை தானாக வளரும்.

 

அந்தந்த நாட்டு சாப்பாட்டில் அந்தந்த சூரியன் இருக்கிறது.

 பின்குறிப்பு : 

1.  எழுச்சி                                  -      கண்டி வீரன் (சிறுகதைத் தொகுப்பு - 2014),

ஷோபா சக்தி,

கருப்புப் பிரதிகள்,

B.55, பப்பு மஸ்தான் சாலை,

லாயிட்ஸ் சாலை,

சென்னை – 05.

 

2.   கூபாவுக்குப்போன க்யூபாக்காரர்கள்  -      மரகதத்தீவு, (சிறுகதைத் தொகுப்பு – 2009),

காஞ்சனா தாமோதரன்,

உயிர்மை பதிப்பகம்,

11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம்,

சென்னை.

 

3.   வாழ்வு வசப்படும்                  -                  ஒரு அகதி உருவாகும் நேரம்,

(சிறுகதைத் தொகுப்பு) – 1996

பொ.கருணாகரமூர்த்தி,

ஸ்நேகா பதிப்பகம்,

348, டி.டி.கே. சாலை,

சென்னை – 14.

 

4.   பிள்ளைக் கடத்தல்காரன்           -                          அ.முத்துலிங்கம்,

ஆனந்த விகடன்,

மே 24, 2015.

 

5.   ஒலி                              -                                        மண்டை ஓடி (சிறுகதைத் தொகுப்பு – 2015),

ம.நவீன்,

வல்லினம் பதிப்பகம்,

மலேசியா.

 

6.   அரசமரம்                          -                                    லதா,

மணற்கேணி காலாண்டிதழ்,

ஜுலை ஆகஸ்ட் 2014

 

7.   மீண்டும் ஓர் ஆதாம்               -                               நடேசன்,

அம்ருதா மாத இதழ்,

செப்டம்பர் – 2015.

 

 

8.   நானும் ஒகஸ்       டீனாவும்            -      யுத்தத்தின் இரண்டாம் பாகம்,  

ஒரு பந்தைய குதிரையும்                 (சிறுகதைத்தொகுப்பு – 2000),

சக்ரவர்த்தி,

எக்சில் – BP – 204,

92604 Asnieres Cedey,

France.

 

9.   சைகையிற் பொருளுணற்           -                          கருப்பி,

காலம் மார்ச் 2015.

 

10.  வேருலகு                                      -                       வேருலகு (சிறுகதைத் தொகுப்பு – 2009),

மெலிஞ்சி சித்தன்,

உயிர்மை பதிப்பகம்,

11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம்,

சென்னை.

 

11.  சாட்சி                                             -      மூன்றாவது கை (சிறுகதைத் தொகுப்பு – 2014),

ஷா நவாஸ்,

F – 4, சாகஸ் அடுக்ககம்,

83 – திருமங்கலம் சாலை,

வில்லிவாக்கம்,

சென்னை- 49.

 

12.  சன்னலொட்டி அமரும் குருவிகள்   -      நாகரத்தினம் கிருஷ்ணா,

அம்ருதா மாத இதழ்.

 

13.  மூன்று நகரங்களின் கதை                         -      கலாமோகன்,

பாரிஸ் முரசு (29.04.1992)