ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஐயா – இமையம்.

ஐயா – இமையம்


       அலுவலகத்திலிருந்து வந்த வேகத்திலேயே கதவைத் தட்டினான் கந்தசாமி. கதவு திறக்கப் படாததால் விடாமல் கதவைத் தட்டினான். “ந்தா வந்துட்டன்” சொல்லிக்கொண்டே வந்த காமாட்சி கதவைத் திறந்தாள். “எதுக்கு இம்மாம் நேரம்?”

       கந்தசாமி பதில் சொல்லவில்லை. ஆனால் எரித்துவிடுவது மாதிரி காமாட்சியைப் பார்த்தான். விர்ரென்று வீட்டிற்குள் போனான். கயல்விழியும், வேல்விழியும் தொலைக்காட்சியின் முன் படுத்து சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் “ராவும் பகலும். டி.வி.பாக்குற வேலதான். இருங்க ஒரு நாளக்கி டி.விய ஒடச்சிப் போடுறன்.” கத்தினான். பிள்ளைகள் இரண்டும் எழுந்து நின்றன. காமாட்சி தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைத்தாள். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் வேகமாகப் போனான்.

       அலுவலகத்திலிருந்து தாமதமாக என்று வர நேர்கிறதோ, அதிகாரி அவனை என்று அதிகமாக திட்டுகிறாரோ அன்று வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம்வரை கத்துவான் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் காமாட்சி  வாயைத் திறக்காதது மட்டுமல்ல, அறைக்குள் போன கந்தசாமியிடமும் போகவில்லை.

       “எழுந்திருங்க. சாப்புட்டுட்டு சீக்கிரம் படுங்க” பிள்ளைகளிடம் சொன்னாள். வேல்விழியும், கயல்விழியும் காமாட்சி சொன்னதைக் காதில் வாங்காமல் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.

       முகம், கை, கால் என்று கழுவிக்கொண்டு, கைலியைக் கட்டிக்கொண்டுவந்த கந்தசாமி பிள்ளைகள் இரண்டும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். “இருவத்திநாலு மணிநேரமும் டி.வி.யே பாத்துக்கிட்டு இருங்க. உருப்பட்டுடலாம். நோட்டுப் புத்தகத்த தொடுற பழக்கமே இல்ல. நாளக்கே டி.வி. கனக்ஷன நிறுத்துறன்.” கத்தினான்.

       கந்தசாமி கத்திய வேகத்தில் இரண்டு பிள்ளைகளுடைய கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. அழுதுகொண்டே எழுந்து நின்றன. பிள்ளைகளுடைய கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவனுக்கு மனம் மாறிவிட்ட மாதிரி இருந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்துகிற மாதிரி “ஒரு நேரம் டி.விய பாத்தமா, ஒரு நேரம் படிச்சமான்னு இருக்க வாணாமா? மணி ராத்திரி பதினொன்னு. இன்ன முட்டுமா பொம்பள புள்ளைங்க டி.வி. பாப்பாங்க? ஒங்கம்மா அதிர்ஷ்டம் செஞ்சவ. நாள் பூராவும் வீட்டுல குந்திக்கிட்டு டி.வி. பாக்குறா. சீரியல் பாக்குறா. நல்ல அதிர்ஷ்டமான நேரத்தில அவ அப்பன் அவளப் பெத்திருக்கான். நீங்க அப்பிடியா பொறந்து இருக்கிங்க?” என்று கேட்டான்.

“நீ பெத்த தருதலைங்க டி.வி. பாக்குறதுக்கும் எங்கப்பன் என்னெப் பெத்ததுக்கும் என்னா சம்பந்தம்?” காமாட்சி கேட்டதும் கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீ டி.வி. பாக்குறதாலதாண்டி எம் புள்ளைங்களும் டி.வி. பாக்குது?”

“நீ பெத்த குட்டிவுளுக்கு ஒண்ணுமே தெரியாது பாரு? அப்பன வித்துத் தின்னுடுவாளுங்க. பேரு வச்சிருக்கிறத பாரு. வேல்விழி, கயல்விழின்னு. திரிஷா, நயன்தாரான்னு வைக்காம. பேரு வைக்கிறதால தமிழ் வளந்திடுமா?” காமாட்சி லேசாக சிரித்தாள்.

“வாய மூடுறியா?” வேகமாகக் கேட்டான் கந்தசாமி.

“எதுக்கு இம்மாம் நேரம்? ஆபிசரு திட்டிட்டாரா?”

       காமாட்சி வாயைத் திறப்பதற்காகவே காத்திருந்த மாதிரி “ஆபிசரு உங்கப்பனா? நேரத்திலியே வீட்டுக்குப் போடான்னு சொல்ல?” எரிந்து விழுந்தான்.

       கந்தசாமி கோபப்பட்டதை பொருட்படுத்தாமல் “என்னிக்கும் உள்ளதுதான? இன்னிக்கென்ன புதுசா? வேலக்கின்னு போன நாளிலருந்து சனி, ஞாயிறுலயும் தினம் ராத்திரி பத்து மணி கச்சேரிதான”. அவள் சொன்னதை அவன் காதில் வாங்கவில்லை. தரையில் கிடந்த பாயைப்பார்த்து “இது ஏன் இங்க கெடக்கு?” என்று கேட்டான். காமாட்சியும்-சரி வேல்விழியும், கயல்விழியும் சரி வாயைத் திறக்கவில்லை கந்தசாமி கோபத்தில் பானையைத் திறந்து யானையைத் தேடுவான்’ என்பது அவர்களுக்குத் தெரியும்.

       “இது ஏன் இங்க கெடக்கு? அது ஏன் இங்க கெடக்கு?” என்று கண்ணில்பட்ட பொருள்களையெல்லாம் தூக்கிதூக்கி இடம்மாற்றிப் போட்டான். காமாட்சி, கயல்விழி, வேல்விழி என்று மூன்று பேரையும் திட்டினான். “மூணு பொட்டச்சிங்க இருக்கிற வீடு மாதிரி தெரியல. குப்பக் காடா கெடக்கு.” கோபத்திலேயே படுக்கிற அறைக்குள் போய் உட்கார்ந்துகொண்டான். யாராவது வந்து என்ன வேண்டும், சாப்பிடுகிறாயா என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஒருவரும் அந்த அறைக்குள் வரவில்லை. ஒரு வார்த்தையும் பேசவில்லை. வேறுவழியின்றி தானாகவே “ஏய் இங்க வா” என்று கூப்பிட்டான்.

காமாட்சி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அவளை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்துவிட்டு வீம்புடன் "ஒரு சொம்பு தண்ணி கொண்டா" அதிகாரமாகச் சொன்னான்.

காமாட்சி ஒரு வார்த்தையும் பேசவில்லை. தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"ஒரு கிளாஸ் கொண்டா."

காமாட்சி இயந்திரம் மாதிரி ஒரு தம்ளரைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

"முட்டக்கிட்ட இருக்கா."

"இல்லெ."

"நீ இருக்கிற வீட்டுல எப்பிடி இருக்கும்? ஒண்ணும் இருக்காது. நீ மட்டும்தான் இருப்ப. அதுவும் சாப்புடுறதுக்கு."

                        காமாட்சி வாயைத்திறக்கவில்லை. அவளுக்கு நின்றுகொண்டிருப்பதா, அந்த இடத்தைவிட்டு போவதா என்றும் தெரியவில்லை. நின்றுகொண்டிருந்தாலும் திட்டுவான், போனாலும் திட்டுவான் என்பதால் குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்தாள்.

"எதுக்கு நிக்குற?"

காமாட்சி வாயைத்திறக்கவில்லை.

"முறுக்குகிறுக்கு ஏதாச்சும் இருக்கா?"

"இல்லெ."

"ஊருகா?"

காமாட்சி வாயைத் திறக்கவில்லை.

"வேற என்னா இருக்கு?"

"சோறு. குழம்பு. ரசம் சூடா இருக்கு."

"அந்த மண்ணயெல்லாம் நீயே தின்னு. முன்னால நிக்காத. போ. எட்டெ." கத்தினான்.

"ஆபிசரு திட்டிட்டாரா?"

"எட்டப் போறியா இல்லியா?"

"என்னாச்சி?"

"எட்டப் போவணும்." வேகமாக சொல்லிவிட்டு எழுந்து ஆணியில் மாட்டியிருந்த பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பிராந்தி பாட்டிலை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். பாட்டிலைத் திறந்து கொஞ்சம் பிராந்தியை தம்ளரில் ஊற்றினான். சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து தம்ளரிலிருந்த பிராந்தியில் ஊற்றினான். தம்ளரை எடுத்து ஒரே மூச்சாக பிராந்தியைக் குடித்தான்.

"பிராந்திய குடிக்கத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?" சீண்டுகிற மாதிரி காமாட்சி கேட்டாள். கந்தசாமி பதில் பேசவில்லை. அவளைப் பார்க்கவுமில்லை.

"என்னா புதுசா இருக்கு?"

"புதுசுமில்ல. பழசுமில்ல. போ எட்ட." கத்தினான்.

"நடு வீட்டுல குந்திகிட்டுத்தான் பிராந்தி குடிப்பியா? வயசுக்குவர மாதிரி ரெண்டு பொட்டப் புள்ளை இருக்கிற வீட்டுல."

"சனியன் மாதிரி பேசிக்கிட்டு இருக்கக் கூடாது. எட்டப் போவணும்?"

"ஆபிசரு கண்டபடி திட்டிப்புட்டாரா?"

"கல்லா மண்ணா பொறந்திருக்கணும். மனுசனா பொறந்திருக்கக் கூடாது. பொறந்திட்ட பின்னால எந்த வேலைக்கி வேணுமின்னாலும் போவலாம். பியூன் வேலைக்கி மட்டும் போவக் கூடாது" கந்தசாமியின் குரல் உடைந்துவிட்டது. கண்களும் லேசாக கலங்கிவிட்டன. அதைப் பார்த்து காமாட்சி பதறிப்போனாள்.

        சாதாரணமாக அதிகாரி திட்டிவிட்டாலோ, கோபமாக பேசிவிட்டாலோ அன்று அரைமணிநேரம், ஒரு மணிநேரம் அதையே சொல்லிப் புலம்புவான். மந்திரித்துவிட்ட கோழிபோல ஆடுவான். எவ்வளவு கோபமாக இருந்தாலும், கண் கலங்க மாட்டான். ஆனால் இன்று அவனுடைய குரலும் மாறிவிட்டது. கண்களும் கலங்கிவிட்டன. மாதத்திற்கு ஒரு முறை, இரண்டுமுறை என்று எப்போதாவது குடித்துவிட்டு வருவான். புதுப்பழக்கமாக இன்று வாங்கிக்கொண்டுவந்து வீட்டில் குடிக்கிறான். அதிகாரி அதிகமாகத் திட்டியிருக்க வேண்டும். கோபப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த காமாட்சி "அதிகாரியா இருக்கவங்க முன்னபின்னதான் பேசுவாங்க. இன்னிக்கா பாக்குற. எங்கியோ இருக்கிற கோவத்த எங்கியோதான் காட்டுவாங்க. அவுங்களுக்கு எம்மாம் பிரச்சனயோ" சமாதானப்படுத்துவது மாதிரி சொன்னாள். கந்தசாமிக்கு சற்று தள்ளி உட்கார்ந்தாள். அவள் சொன்னதை, உட்கார்ந்ததைப் பொருட்படுத்தாமல் யாருக்கோ சொல்வது மாதிரி "அதிகாரியா இருக்கவங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியல. அதிகாரியான மறுநாளே செத்திடும்போல இருக்கு. அதிகாரத்துக்கு மனசு இல்ல. உசுரு இல்ல. கல்லு. அடுத்தவன் மண்டய ஒடைக்கிற கல்லு" அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். பிறகு பிராந்தி பாட்டிலை எடுத்து கொஞ்சம்போல தம்ளரில் ஊற்றி. அடுத்து தண்ணீரை எடுத்து ஊற்றினான். தம்ளரை எடுத்து ஒரே மடக்காக பிராந்தியைக் குடித்தான்.

"இன்னிக்கு என்னா ஆச்சி ஆபிசுல?"

"ஒண்ணும் ஆவல. எட்டப் போ" கந்தசாமி ஓங்கி தரையில் அடித்தான். பிறகு உடைந்துபோன குரலில் சொன்னான்: "ஐயா, மணி ஆயிடிச்சின்னு சொன்னதுதான். அதுவும் எனக்காக சொல்லல. அப்ப அவன் என்னெ பாத்த பார்வ இருக்கே. பீயகூடய யாரும் அப்பிடி பாக்க மாட்டாங்க. செத்திடலாம்போல இருந்துச்சி."

"அதிகாரியா இருக்கவங்க முன்னபின்னதான் இருப்பாங்க. அதெல்லாம் பாத்தா சோறு திங்க முடியுமா?" காமாட்சி சொன்னதுதான். சட்டென்று கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது. "ஒனக்கென்ன சொல்லிப்புட்டு டி.வி.பாத்துக்கிட்டு வீட்டுல குந்தியிருப்ப. கதவுக்கு முன்னால நாள் பூராவும் எப்ப மணி அடிப்பான்னு காவ காத்துக்கிட்டு நாய்க்குட்டி மாதிரி நிக்குறவனுக்கில்ல தெரியும்."

"எந்திரிச்சி வந்து சோத்தத்தின்னு. ஆறிடப்போவுது. புள்ளைங்களும் இன்னும் சாப்புடல."

காமாட்சி சொன்னதைக் காதில் வாங்காத கந்தசாமி "சில நேரத்தில பஸ்ஸில, லாரியில, அடிப்பட்டு செத்திடலாம்ன்னு இருக்கு. யாண்டா உசுரோட இருக்கம்ன்னு இருக்கு" நொந்துபோன குரலில் சொன்னான்.

"என்னா பேசுற நீ? நீ செத்துப்புட்டா ரெண்டு பொட்டக் குட்டிவுள வச்சிக்கிட்டு நான் எங்கப்போறது?"

கந்தசாமி ஒன்றும் பேசாமல் பிராந்தி பாட்டிலையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

"அப்பா வந்ததும் சாப்புடுறன்னு ரெண்டு குட்டிவுளும் சாப்புடாம குந்தியிருக்காளுவ. வா. வந்து சோத்தத் தின்னு. மணி பதினொன்னுக்குமேல ஆயிப்போச்சி."

"புள்ளைங்கள சாப்புட வைக்காம புடுங்கிக்கிட்டு இருந்தியா?" கோபமாகக் கேட்டான். பட்டென்று எழுந்து வேல்விழி, கயல்விழி இருந்த இடத்திற்கு வந்தான். "சாப்புடாம எதுக்கு குந்தியிருக்கிங்க? சாப்புடுங்க. இப்பத்தான் அப்பன்மேல பாசத்த காட்டுறிங்களா?" வேகமாகக் கேட்டான். காமாட்சியைக் கூப்பிட்டு சாப்பாடு போடச் சொன்னான்.

"நீயும் சாப்புடு" என்று சொன்ன காமாட்சியை முறைத்துப்பார்த்தான். அவள் எதிர்த்துப் பேசாமல் பிள்ளைகளுக்கு மட்டும் சாப்பாடு போட்டு வைத்தாள். "சாப்புட்டு சீக்கிரம் படுங்க" வேகமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்குவந்து உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் காமாட்சி வந்தாள்.

கந்தசாமி தம்ளரில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றினான். பிறகு தண்ணீரை ஊற்றி, தம்ளரை எடுத்து ஒரே மூச்சாக பிராந்தியைக் குடித்தான்.

"எதுக்கு ஒரே முட்டா குடிக்கிற? இதோட போதும். மிச்சத்த வை. நாளக்கிக் குடிச்சிக்கலாம்."

கந்தசாமி வாயைத்திறக்கவில்லை.

"இது எம்மாம் ரூவா?"

"எர நூறு."

"யே அப்பா, ரேசன் கடயில திருட்டுத்தனமா விக்கிற அரிசியில ஒரு மூட்ட வாங்கலாமாட்டம் இருக்கு. ஒரு மாசத்து சோத்துக்கு வரும்."

காமாட்சி சொன்னதை கந்தசாமி காதில் வாங்கவில்லை. எதிரிலிருந்த பிராந்தி பாட்டிலை, தண்ணீர் சொம்பை, தம்ளரை மாறிமாறிப் பார்த்தான். திடீரென்று கோபம் வந்த மாதிரி சொன்னான். "எள வயசுதான் முப்பதுக்குள்ளாரதான் இருக்கும். எல்லாரயும் ஆட்டிப்படைக்கிறான். போன் பேசுனா பட்டுன்னு முடிக்க மாட்டான். நான் ஃபைல் உள்ள பேட வச்சிக்கிட்டே நிக்கணும். பேட வச்சிட்டு போன்னு கையால, கண்ணால சாடகூட காட்ட மாட்டான். அவன் சொன்னாதான் நான் பேட வச்சிட்டுப்போவ முடியும். நானா என்னிஷ்டத்துக்கு வச்சிட்டுப் போவ முடியாது. கையெழுத்துப் போட்ட பேட எடுத்துக்கிட்டுப் போவ முடியாது. போன் பேசிக்கிட்டே ஆள பாப்பான். ஆனா, பேட வச்சிட்டுப்போ, எடுத்துக்கிட்டுப்போன்னு மட்டும் சொல்ல மாட்டான். என்னெ பாக்காத மாதிரியே போன்ல பேசிக்கிட்டு இருப்பான். நான் நிமிந்து பாக்கமுடியாது. சத்தம்வர மாதிரி நடக்க முடியாது. அவன் போன்ல பேசி முடிக்கிறவர எந்த வேலயும் செய்யக் கூடாது. சத்தம் வந்திடும். அதனால நின்னது நின்னப்படியேதான் நிக்கணும். அவன் பேசுறத கேக்காத மாதிரி நிக்கணும். அப்பிடி நிக்குறப்ப கோவம் வரும்பாரு. செத்திடலாம்போல இருக்கும்."  அவனுடைய கண்கள் லேசாக கலங்கிவிட்டன. அதைப்பார்த்த காமாட்சி ஒரு அடி தூரம் நெருங்கி கந்தசாமியை ஒட்டி உட்கார்ந்தாள். என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தாள். எதையாவது சொல்லப்போய் அதிலிருந்து சண்டையை ஆரம்பித்துவிடுவானோ என்ற பயமும் இருந்தது. அதேநேரத்தில் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் அவளால் முடியவில்லை.

"பெரிய படிப்பு படிச்சதால மத்தவங்கள ஆட்டிப்படைக்கிறாரு. கலெக்ட்டருக்கு அடுத்தப்படியில இருக்கிறவரு அப்பிடித்தான் இருப்பாரு. நாம்பதான் பெருசா படிக்கல. நாம்ப பெத்த புள்ளைங்களாவது நல்லா படிக்கும்ன்னா, நீ பெத்துதுங்க சாப்புடுறதுக்குத்தான் லாயக்கு." காமாட்சி சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால் கந்தசாமிக்கு முகம் மாறிவிட்டது. கோபம் வந்துவிட்டது.

"நீ பெரியபடிப்பா படிக்க வேண்டியதுதான, ஒங்கப்பன் ஒன்னெ படிக்க வச்சானா?"

காமாட்சிக்கும் கோபம் வந்துவிட்டது.

"எங்கப்பன எதுக்கு இழுக்கிற?"

"ஆறு ஏழு கப்பலு வாங்கித்தான்னு கேக்கத்தான்."

"ஆறு-ஏழு கப்பலு வாங்கித்தந்தா  எங்கப்போயி ஓட்டுவ? கடலு ஒங்கப்பன் வீட்டுதா?" காமாட்சி கேட்டதும் கந்தசாமிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. வேண்டும் என்றே முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான். அப்போது அறைக்குள் வந்த வேல்விழி "காலயில நூறு ரூவா வேணும்ப்பா. நோட்டு வாங்கணும்" என்று சொன்னதும் கந்தசாமிக்கு கோபம் வந்துவிட்டது. "பணமும் இல்ல. கிணமும் இல்ல போ" முகத்திலடிப்பது மாதிரி அவன் சொன்னதுதான் வேல்விழியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அழுதுகொண்டே போனாள். அதைப்பார்த்த காமாட்சிக்கு லேசாக கோபம் வந்துவிட்டது.

"எதுக்கு அவள முறச்ச? புள்ளை அழுதுகிட்டு போறா பாரு."

கந்தசாமி பதில் பேசவில்லை. கொஞ்சம் பிராந்தியைக் குடித்தான்.

"பத்து நாளாவே ஒம்போக்கு சரியில்ல. தெனம் குடிக்கிற. இன்னிக்கி வாங்கியாந்து வச்சிக்கிட்டு வீட்டுலியே குடிக்கிற. கேட்டா அடிப்ப. ஒதப்ப. ஒங்கப்பன் வாங்கி தந்தானான்னு கேப்ப. பிராந்தி வாங்கிதர்ற மாமனாரு எந்த நாட்டுல இருக்கான்? என்று சொல்லும்போதே காமாட்சிக்கு கண்கள் கலங்கிவிட்டன. "தெனம் தெனம் குடிச்சி குடலு வெந்துப்போயி நீ செத்திட்டா, ரெண்டு பொட்டப் புள்ளைய வச்சிக்கிட்டு நான் நடுத்தெருவுல நிக்கணுமா?" கோபமாகக் கேட்டாள்.

 "அப்பகூட நான் சாவுறனேன்னு கவல இல்லெ" கோபமாகக் கேட்டான். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒரு பிரச்சனையைப் பேசினாள்.

"கிரகம் சரியில்லயோ என்னமோ. ஜாதகத்த பாத்திடன். பக்கத்துத் தெருவுல ஒருத்தரு நல்லா பாக்குறாராம். எல்லாரும் சொல்றாங்க" ரொம்ப அக்கறையோடு சொன்னாள்.

"சும்மா இருடி பிச்சக்காரன் மவள. நல்லத சொல்றன்னு சொல்லி புது பிரச்சனய கிளப்பிவுட்டுட்டுப் போயிடுவானுவ. அப்பறம் புதுத் தலவலியா ஆயிடும். அவன் சொன்னத நம்பிகிட்டு இருக்கிற வேலயவுட்டுட்டு அலயணும். நாட்டுல உள்ளவங்களுக்கெல்லாம் நல்லத சொல்றன்னு சொல்ற எல்லாப் பயலுவுளும் ஜோசியம், ஜோசியம்ன்னு சொல்லி கத்திக்கிட்டு தெருவுலதான் அலயுறானுவ." லேசாக சிரித்தான்.

"போதயில எதயாச்சும் உளறாத." முகத்தைக் கோணிக்காட்டினாள்.

"ஜோசியக்காரன் சொல்றதெல்லாம் நடந்தா நாட்டுல அப்பறம் என்னா இருக்கு? ஆபிசரு பயலுவோ மோசமா இருக்கானுவன்னு சொன்னா, இவ ஜோசியக்காரன இயிக்கிறா."

"எல்லா ஆபிசலயும் ஒன்னெ மாதிரி ஆளுங்க இருப்பாங்கதான."

"இருக்காங்க."

"ஒங்க ஆபிசரு மட்டும்தான் மோசமா?"

"நாட்டுல உள்ள எல்லா அதிகாரிவுளும் ஒரே மாதிரிதான் இருப்பானுங்க. நாட்டுல உள்ள எல்லா பியூனுக்கும் ஒரே வேலதான். சாவுற வேல." கந்தசாமியினுடைய குரலில் அவ்வளவு கடுமை ஏறியிருந்தது.

"அவுங்கயெல்லாம் ஒன்னெ மாதிரிதான் புலம்பிகிட்டு, தெனம் பிராந்தி குடிச்சிக்கிட்டு இருக்காங்களா?" கோபமாகக் கேட்டாள் காமாட்சி.

"பலருக்கு கல்லு மனசு. சிலருக்கு கூழு மனசு."

"மனசுதான் எமன். சாவு. குழப்பிக்காத. எயிந்திரிச்சி வந்து சோத்தத் தின்னுட்டு தூங்கு. தூங்கிட்டா எல்லாம் சரியாப்போயிடும். அதிகாரியா இருக்குறவங்களுக்கு எரக்கப்படுற மனசு இல்ல." சொல்லிவிட்டு எழுந்துநின்றாள். கந்தசாமி எழுந்து சாப்பிட வருவான் என்று எதிர்பார்த்தாள். அவன் எழுந்திருப்பது மாதிரி தெரியவில்லை. காமாட்சி கேட்கிறாளா இல்லையா என்றுகூட பார்க்காமல் ரொம்பவும் களைப்படைந்தவன் மாதிரி சொன்னான் "ஒரு கிளார்க்கு எதயோ தப்பா எழுதி வச்சியிருப்பான்போல இருக்கு. அதுக்கு நான் என்னா செய்ய முடியும்? அவனுக்குத் தமிழ் எழுதத் தெரியுமா, தெரியாதான்னு கேட்டு எங்கிட்ட கத்துறான். பேட தூக்கிக் கெடாசுறான். அப்ப எம் மனசே செத்துப்போச்சி. யாண்டா இந்த வேலயில இருக்கம்ன்னு இருக்கு. நிமிசத்துக்கு நிமிசம் தேள் கொட்டுற மாதிரி கொட்டிக்கிட்டேயிருக்கான்."

"எதுக்கு சின்ன விசயத்தயெல்லாம் பெருசு பண்ற? எல்லா ஆபிசலயும் இப்பிடித்தான இருக்கும்? எழுந்திரிச்சி வா."

"வயிறு மட்டும் பசிக்காம இருந்தா எவங்கிட்டயும் கையக்கட்டி நிக்க வேண்டியதில்ல. ஐயா வேலயா இருக்காரு, ஐயா கேம்புக்குப் போயிட்டாரு. இப்பிடி ஒரு நாளக்கி ஐயா - ஐயான்னு எத்தன வாட்டி சொல்றது? ஐயாங்கிற வார்த்தய தவுத்து வேற வாத்த வாயில வர மாட்டங்குது. யாரப்பாத்தாலும் நான் ஐயா, ஐயான்னுதான் சொல்லணும்." போதை ஏறஏற அவனுடைய பேச்சு – குழறுவதற்குப் பதிலாக நிதானமாக இருந்தது.

கந்தசாமியினுடைய பேச்சு புதிதாக இருந்தது. அதேநேரத்தில் பனிரெண்டு வருசமாக செய்கிற வேலைதானே, சொல்கிற வார்த்தைதானே. புதிதாக ஒன்றுமில்லையே. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்ற எண்ணமும் இருந்தது. அதை சொன்னால் இப்போதிருக்கிற மனநிலையில் திட்டுவான். அடிப்பதற்கும் வருவான் என்பதால் காமாட்சி வாயை மூடிக்கொண்டு நின்றாள். தொலைக்காட்சியின் சத்தம் அதிகமாக கேட்கவே சட்டென்று வேல்விழியும், கயல்விழியும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்திற்குப் போனாள். "மணி என்னாடி ஆவுது? ராத்திரி நேரத்தில ஊருக்கே கேக்குற மாதிரி எதுக்கு சத்தமா வைக்கிறிங்க? டி.வி.யும் பாக்க வாணாம். ஒண்ணும் பாக்க வாணாம். படுங்க. இல்லாட்டி அப்பாகிட்ட சொல்லிடுவன்" கோபமாக சொன்னதோடு வேகமாகப்போய் தொலைக்காட்சியை நிறுத்தினாள். அதே வேகத்தில் திரும்பி கந்தசாமியிடம் வந்தாள்.

"நேரமாவறது தெரியலியா? காலயில வேலக்குப் போவ வாணாமா"

"ஒன்னோட சோத்த நீயே தின்னுக்க" வீம்பாக சொல்லிவிட்டு பிராந்தி பாட்டிலை எடுத்து தம்ளரில் கவிழ்த்தான். சொம்பிலிருந்த தண்ணீரை கொஞ்சம்போல ஊற்றி, ஒரே மடக்காக குடித்தான். காரமான சாப்பாட்டை சாப்பிட்ட மாதிரி மூன்று நான்குமுறை வாயை ஊதினான்.

"நாத்தம் குடல புடுங்குது. இந்த சனியன எப்பிடித்தான் குடிக்கிறியோ" காமாட்சி திட்டினாள். அவள் திட்டியதை காதில் வாங்கவில்லை.

"அதிகாரிய பாக்க வர ஒவ்வொருத்தனும். கலக்ட்டர் வர மாதிரிதான் வருவானுவ. வந்த வேகத்திலியே உள்ளாரவுடச் சொல்லி கேப்பானுவ, ‘உட்காருங்க. ஐயாகிட்ட சொல்றன்’னு சொன்னா கேக்க மாட்டானுங்க. ஒதுங்கி நில்லுங்கன்னா நிக்க மாட்டானுவ. ‘நீயென்ன பெரிய ஆபிசரா? உள்ளாரவுட மாட்டியா’ன்னு வாயால கேக்க மாட்டானுவ. அப்பிடி கேக்குற மாதிரி கண்ணாலியே முறச்சிப்பாப்பானுங்க. வரவனுவோ கொடுக்கிற அட்டய, பேரு எழுதி கொடுக்கிற சீட்ட உள்ளாரப்போயி டேபிள்மேல வச்சிட்டு வந்தா, அதிகாரிக்கு எப்ப மனசு இருக்கோ அப்ப, மணி அடிச்சி ஒவ்வொரு ஆளா கூப்புடுவான். உள்ளார போன ஆளு வெளிய வந்தாதான நான் அடுத்த ஆள உள்ளார வுடமுடியும். அதுவும் அடுத்த ஆள அனுப்புன்னு அதிகாரி மணிய அடிச்சா மட்டும்தான் அனுப்ப முடியும். கதவ வேகமாகத் தொறந்தாலும் போச்சி. சத்தமா கதவ சாத்தனாலும் போச்சி. தவறிப்போய் லேசா சத்தம் வந்துட்டா போச்சி. அப்ப ஒரு பார்வ பாப்பான்பாரு. அச்சு அசல் நல்ல பாம்புதான். இது வெளிய நிக்குற நாயிவுளுக்குத் தெரியாது. வந்த வேகத்திலியே உள்ளார வுடு-வுடுன்னு கேப்பானுவ. ‘ஐயா சொன்னாதான் வுடமுடியும். நானா யாரயும் உள்ளார வுடமுடியாதி’ன்னு சொன்னா எவன் கேக்குறான்? தூங்குறப்பவும் மணிஅடிக்கிற சத்தம் காதில கேட்டுக்கிட்டே இருக்கு. அந்த சத்தம் பெரிய சொமயா இருக்கு. ஒருத்தனுக்கும் மனுசனா இருக்கிறது என்னான்னு தெரிய மாட்டேங்குது. எங்கிட்ட பணமுமில்ல. அதிகாரமுமில்ல. அந்த காலத்தில புள்ளைக்கி சோறு போடுறது மட்டும்தான் பெத்தவங்க வேல. இப்ப ஒண்ணாவது ரெண்டாவதுக்கே லட்சம் லட்சமா கொடுக்க வேண்டியிருக்கு. அதனாலதான் இந்த வேலயில இருக்கன். வாங்குற சம்பளம் பள்ளிக்கூடத்துக்கே பத்தலன்னா சோறு எப்பிடி திங்குறது? குடும்பம் எப்பிடி நடத்துறது?" கந்தசாமி தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

கந்தசாமியினுடைய பேச்சையும், செய்கையையும் பார்த்தால் என்றும் இல்லாத அளவுக்கு  இன்று அவனுடைய அதிகாரி மோசமாகத் திட்டியிருக்க வேண்டும். அவனை சமாதானப்படுத்த விரும்பினாள்.

“இந்த அதிகாரி எப்ப மாறுவாரு?”

“இந்த ஐயா போனா, இன்னொரு ஐயா வருவாரு. இல்லாட்டி ‘அம்மா’ வருவாங்க. அதிகாரி மாறுறதால என்னா ஆவப்போவுது? ஒண்ணுமில்ல. அதிகாரிகள மட்டுமா நான் ‘ஐயா’, ‘அம்மா’ன்னு சொல்லணும்? அதிகாரிய பாக்குறதுக்கு வர்றவங்களும் எனக்கு ‘ஐயா’தான். ‘அம்மா’தான். எனக்கு எல்லாருமே ஐயாதான். வேற வார்த்த எங்கிட்ட இல்லெ.”

"என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன ஆச்சி" கேட்டுக்கொண்டே கந்தசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கையைப்பிடித்து "வா. சோத்தத் தின்னு" எழுப்ப முயன்றாள். அவன் கையை உதறிவிட்டான்.

"நீதான் இப்பிடி சொல்ற. குறிஞ்சிப்பூ தெருவுல இருக்கிற சரோஜா புருசனும் ஒ.ஏ.வாதான் தாலூகா ஆபிசில இருக்காரு. தெனம் முந்நூறு நானூறுன்னு வரவங்ககிட்ட புடுங்கியாந்து வண்டி, மெத்த வீடுன்னு இருக்காரு. புள்ளைங்கள கான்வெண்டுல படிக்க வைக்கிறாரு. ஒனக்கு துப்பு இல்லெ. பயந்துகிட்டு ஒருத்தன்கிட்டயும் கைய நீட்டுறதில்ல." காமாட்சி சொல்லி வாயைக்கூட மூடவில்லை. அதற்குள் கந்தசாமிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ. காட்டுக்கத்தலாக கத்தினான்.

"சும்மா இருடி பிச்சக்காரன் மவள. வரவன் போறவனெல்லாம் ஒங்கப்பனா, இந்தா வச்சிக்கன்னு நோட்டு நோட்டா எடுத்து கொடுத்திட்டுப்போறதுக்கு? வர்ற நாயெல்லாம் பிச்சக்கார நாயிவோதான். ‘போறப்ப கவனிச்சிட்டுப் போங்க’ன்னு ரெண்டு மூணுவாட்டி சொல்லணும். அப்பிடி ஒரு ஏழெட்டுபேர்கிட்ட சொன்னா அதுல ஒருத்தன் ‘இந்தா அஞ்சிரூவா’ன்னு கொடுப்பான். அதயே கோடி ரூவாயக் கொடுக்கிற மாதிரி கொடுப்பான். இதுல கட்சிக்காரங்க, எம்மானோ தேவலாம். நகர செயலாளரு, ஒன்றிய செயலாளரு, மாவட்ட செயலாளரு, எம்.எல்.ஏ, எம்.பின்னு வரவங்கதான் அம்பது நூறுன்னு தருவாங்க."

"மத்த ஓ.ஏ. எல்லாம் எப்பிடி சம்பாரிக்கிறாங்க? வீடுகட்டுறாங்க, புள்ளைங்கள படிக்கவைக்கிறாங்க?" கோபமாகக் கேட்டாள் காமாட்சி. முன்பைவிட இப்போதுதான் கந்தசாமிக்கு கோபம் அதிகமாக வந்தது. வெறுப்புடன் அவளைப் பார்த்தான். பல்லைக்கடித்துகொண்டே சொன்னான்.

"போடி இவள. வரவன்கிட்டயெல்லாம் ‘ஒரு டீத்தண்ணிக்கி வழிப்பண்ணிட்டுப்போங்க. காபிதண்ணிக்கி கொடுத்திட்டுப் போங்க’ன்னு சொல்லி பல்ல இளிச்சிக்கிட்டு, தலய சொறிஞ்சிக்கிட்டு மத்தவங்க மாதிரி என்னால நிக்க முடியாது. அப்பிடி செய்யறவன்தான் ஒரு நாளக்கி நானூறு ஐநூறுன்னு சம்பாதிக்கிறான். இந்தா வச்சிக்கன்னு தானா வந்து யாராச்சும் கொடுத்தாதான் வாங்குவன். நானா போயி எவன்கிட்டயும் போயி கையேந்த மாட்டன். கொஞ்சம் காசு பணம் இருந்தா இந்த வேலய எப்பியோ வுட்டுத் தொலச்சிருப்பன்" பிராந்தி பாட்டிலைப் பார்த்தான். வெறும் பாட்டிலாக இருந்ததைப் பார்த்ததும் கோபம் வந்தது. "ஒரே சனியனா இருக்கு" என்று சொன்னான். அவனுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி "கோபப்பட்டு அதிகாரிகிட்ட அப்பிடி இப்பிடி நடந்துபுடாத, வேலய வுட்டு எடுத்துப்புட்டா அப்பறம் நாம்பதான் நடுத்தெருவுல நிக்கணும்" என்று சொன்னாள்.

"அதுக்காக நான் தெனம் தெனம் சாவணுமா? உசுரோட இருக்கிறதாலதான எல்லா அசிங்கமும், அவமானமும்? பேருதான் கவர்மண்டு வேல." அவனுடைய கண்கள் சிவந்து போயிருந்தது. கோபத்தில் உதடுகள் துடித்தன. அவனை சமாதானப்படுத்துவது மாதிரி காமாட்சி சொன்னாள்.

"நீ சொல்றபடி பாத்தா ஒலகத்தில யாராலயும் உசுரோட இருக்க முடியாது. எல்லாரும் மான வெக்கத்த வித்திட்டுத்தான் உசுரோட இருக்காங்க."

"எட்டப் போறியா? இல்லெ ஒத வாங்குறியா?" கோபமாகக் கேட்டான். அவன் கேட்டதைப் பொருட்படுத்தாத காமாட்சி நிதானமாகச் சொன்னாள்.

"ஒன்னெ ஒங்க ஆபிசரு திட்டுறாரு. ஒன்னோட ஆபிசர கலக்ட்டரு திட்டுவாரு. கலக்ட்டர மந்திரி திட்டுவாரு. மந்திரிய, மந்திரிக்கு மேல இருக்கிறவங்க திட்டுவாங்க.  இதுக்கெல்லாம் கவலப்பட்டா, வெக்கப்பட்டா ஆபிசரா, எம்.எல்.ஏ.வா மந்திரியா, இருக்க முடியுமா? நீ என்னெத் திட்டுறதில்லியா அப்பிடித்தான் உலகம் பூராவும். அவமானமில்லாத, அசிங்கமில்லாத வாழ்க்க ஒலகத்தில யாருக்கு இருக்கு?"

காமாட்சியை அதிசயமாகப் பார்த்தான். அவள்பேசியதை அவனால் நம்பவே முடியவில்லை. லேசுப்பட்டவளில்லை என்ற எண்ணம் மட்டும் உண்டானது. “நீயே பெரிய ஆபிசரு மாதிரிதான் பேசுற” என்று சொல்லத் தோன்றியது.  ஆனால் சொல்லவில்லை.

“இப்ப புதுசா வந்திருக்கிற அதிகாரி பழய அதிகாரி மாதிரி ஒன்மூலமா பணம் வாங்குறதில்லியா?”

“வாங்குறதில்ல. படிப்படியா புரமோஷன்ல வர்றவங்கதான் அப்பிடி செய்வாங்க. இவுரு நேரடியா வந்தவரு. புதுசுல வாங்க மாட்டாரு. நாளானா பழகிக்குவாரு. பழக்கி வுட்டுடுவாங்க” வினோதமாக சிரித்தான் கந்தசாமி. காமாட்சிக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி சொன்னான்: “நான் வேலயில சேந்தப்ப இருந்ததவிட இப்ப கவர்மண்டு ஆபிசுலாம் ரொம்ப மோசமாயிடிச்சி. போகப்போக இன்னும் மோசமாயிடும்” ரொம்பவும் அலுத்துக்கொண்டான். அவனுடைய குரலில் அவ்வளவு கசப்பும் வெறுப்பும் நிறைந்திருந்தது.

காமாட்சி ஆர்வமாகக் கேட்டாள் “என்ன ஆளு?”

“தெரியல. பெரிய சாதியா இருந்தா வேலயில சேந்த அன்னிக்கே தெரிஞ்சிடும். தானாகவே சொல்லிடுவாங்க. மட்ட சாதியா இருந்தா வெளிய தெரியிறதுக்கு கொஞ்ச நாளாவும். தானாவும் சொல்லிக்கமாட்டாங்க.”

“நம்ப ஆளா இருந்தா கொஞ்சம் ஒத்தாசயா இருப்பாங்க”

காமாட்சி சொன்னதைக் கேட்டதும் கந்தசாமிக்கு அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது. “போடி லூசு. மத்த எனத்துக்காரனாச்சும் பேசுறதுக்கு முன்னபின்ன யோசிப்பானுவ. நம்பாளுவோதான் மோசம். சொந்த சாதின்னாலே மட்டரகமாதான் நடத்துவானுங்க. பேசுவானுங்க.”

“அப்பிடியுமா செய்வாங்க?” அப்பாவியாகக் கேட்டாள் காமாட்சி.

 "எந்த சாதியா இருந்தாலும் அதிகாரிங்க அதிகாரிங்கதான். பியூன் அப்பிடியா? அதிகாரிக்கி மட்டுமா நான் பயப்படணும். வரவன்போறவன் யாருன்னு தெரியுமா? அதனால் எதுக்கு ஊர்ச்சனியன்னு எல்லாரயும் ஐயான்னு சொல்லணும். ஒரு ஆள மணி அடிச்சி. மணி அடிச்சா ஒருத்தன் கூப்புடுவான்? “கந்தசாமிக்கு கண்கள் கலங்கிவிட்டன. லேசாக அழுதுகொண்டே சொன்னான். "அதிகாரியோட பொண்டாட்டி, புள்ளைக்கு மட்டும் நேரா நேரத்துக்கு எல்லாம் சரியா நடக்கணும். ஆனா பியூனுக்கு மட்டும் பொண்டாட்டி புள்ள வாணாம். சொந்த வேலன்னு ஒண்ணு இருக்கக் கூடாது."

கந்தசாமி அழுததைப் பார்த்ததும் காமாட்சிக்கு மனது மாறிவிட்டது.

"வாங்குற சம்பளமே போதும். நீ யாருகிட்டயும் பல்லக்காட்டிக்கிட்டு அஞ்சி பத்துக்கு நிக்க வாணாம். ஊர்ல நிலம் நீச்சின்னு இருந்தாக்கூட இந்த வேலய வுட்டுட்டுப் போயிடலாம். இருந்த ரெண்டு காணி நெலத்தயும் வித்துதான் இந்த வேலய வாங்குன?"

"எங்கப்பன்தான் அந்தகாரியத்த செஞ்சிப்புட்டான். காட்டுக்குப்போனமா வீட்டுக்கு வந்தமான்னு நான் பாட்டுக்கும் ராசா மாதிரி எவனுக்கும் கையக்கட்டிக்கிட்டு நிக்காம இருந்திருப்பன்."

"போன கதய எதுக்கு பேசுற? கையகட்டி நின்னாலும் அவமானப்பட்டு தல குனிஞ்சி நின்னாலும் கவர்மண்டு வேல வேணும்ன்னுதான எல்லாரும் அலயுறாங்க. லட்சம்லட்சமா லஞ்சம் கொடுத்து கவர்மண்டு வேல வாங்குறாங்க?"

"நான் கவர்மண்டுல வேல செய்யல. நெருப்புலதான் வேல செய்யுறன், வயிறுன்னு ஒண்ணு இல்ல, பசின்னு ஒண்ணு இல்லன்னா மனுசனுக்கு எந்த அசிங்கமும் இருக்காது."

"அந்த ரெண்டும் இல்லன்னா உலகம் ஏது? எந்திரிச்சி வா. சோத்த சாப்புட்டு படு. தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரியாப்போயிடும்” கந்தசாமியின் கையைப்பிடித்துத் தூக்கினாள் காமாட்சி.

 

அம்ருதா – பிப்ரவரி 2016

 

வெள்ளி, 22 ஜனவரி, 2016

நறுமணம் - இமையம்


       கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி ஐந்து. பத்து இருபதடி தூரத்தில் முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே விருத்தாசலத்தைச் சுற்றி செல்லும் புறவழிச்சாலை போடுவதற்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான். பிறகு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு மேற்கில் பார்த்தான். சூரியன் நல்ல வெளிச்சத்தோடு இருந்தது. பக்கத்திலிருந்த நெல் வயலைப்பார்த்தான். புழுக்களை கொத்தித் தின்றுகொண்டிருந்தன கொக்குகள். “இந்த பாயிண்ட்டோட நிறுத்திடலாமா சார்” என்று கேட்டான். ஆனந்தனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தான் சொன்னது சரியாக கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் சொன்னான்.

“மணி ஆயிடிச்சி சார்.”

       கதிரேசன் சொன்னதை காதில் வாங்காத ஆனந்தன் “நீ நிக்கிற எடத்திலிருந்து பின்னால நகந்து மார்க் பண்ணு” என்று சொன்னான். அவன் சொன்னது மாதிரியே பின்னால் நகர்ந்து சென்று ஒரு அடி நீளமுள்ள இரும்பு கம்பி ஊசியை நிலத்தில் ஊன்றி, அதைச்சுற்றி வெள்ளை மாவைத் தூவிவிட்டான். பிறகு ஊன்றிய கம்பிக்கு நேரெதிராக வடக்கில் வந்து, ஒரு கம்பியை ஊன்றி அடையாளமிட்டான். அடுத்து என்ன செய்வது என்பது மாதிரி ஆனந்தனைப் பார்த்தான். அவன் வாயைத் திறக்காததால் “நேரமாயிடிச்சி சார். இங்கிருந்து ரோட்டுக்கு நடக்கணும். அப்பறம் கார வரச்சொல்லணும். வீட்டுக்குப்போறதுக்குள்ளார இருட்டாயிடும் சார்.” கதிரேசன் சொன்னதை காதில் வாங்காமல் “மேற்க வடக்குத் தெற்குல ஒரு ரோடு போவுதே, அது என்னா ரோடு?” என்று கேட்டான்,

“விருத்தாசலம் டு ஆலடிக்கு போற ரோடு சார்.”

“இரண்டு பர்லாங் தூரம் இருக்குமா?”

“இருக்கும் சார்.”

“அதுவரைக்கும் மார்க்ப்பண்ணிடலாம். அடுத்த பாயிண்டுக்கு போ” ஆனந்தன் சொன்னதும் மறு பேச்சு பேசாமல் இரும்பு கம்பி ஊசிகள் இருந்த பையையும், வெள்ளை மாவு இருந்த பையையும் தூக்கிக்கொண்டு மேற்கில் நடக்க ஆரம்பித்தான். இந்த அளவுதான் வரும் என்று நினைத்த மாதிரி ஒரு இடத்தில் நின்றான். காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக அடையாளமிடுவது, கம்பி ஊசியை, வெள்ளை மாவு பைகளைத் தூக்கிக்கொண்டு நெல்வயல், கரும்பு, முந்திரிக்காடு, முள்காடு என்று நடப்பது, கடுமையான வெயில் என்று எல்லாம் சேர்ந்து அவனை களைப்படைய செய்திருந்தது. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் வேலை. அதிலும் தியோட லைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசி ஊன்றி அடையாளமிடுவதோடு அதற்கு நேர் எதிர்புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்திற்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்திற்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளமிட்டுத்தான் தீர வேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கிடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்து பார்க்க வேண்டும். அளவு பொருந்தி வரவில்லையென்றால் அடையாளத்தை மாற்றவேண்டும். ஆனந்தனுக்கு நின்றுகொண்டே செய்கிற வேலை. தியோட லைட்டின் வழியே பார்ப்பது, கையிலுள்ள காகிதத்தில் வரைவது, பிறகு கதிரேசனிடம் அடையாளமிடு என்று சொல்வது. புறவழிச்சாலையில் எந்தெந்த இடத்தில் கல்வெர்ட் பாலம் வருகிறது, மேம்பாலம், ஆற்றுப்பாலம், ரயில்வே மேம்பாலம் வருகிறது என்பதை அடையாளமிடுகிற வேலையை எட்டு நாட்களாக செய்துகொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு  மூன்று நாட்களில் முடித்துவிடுவான். முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டில் கண்களைப் பொருத்திவிட்டால் அவனாகப் பேசினால்தான் உண்டு. பெரும்பாலும் கைசாடைதான் காட்டுவான். முன்னால் பின்னால் நகர்ந்து நிற்பது தவறாக இருந்தால் தான் ஒரு மேலதிகாரி என்பதைக் காட்டத் தவற மாட்டான். அவனுடைய குரல் எப்போது வரும், கை அசைவு எப்போது வரும் என்று கதிரேசன் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஆனந்தனிடமிருந்து கட்டளை வந்தது.

“அங்க தூரத்தில ஏழுஎட்டு மரம் நிக்குதில்ல அங்க போய் நில்லு. நான் பாக்குறன்.”

ஆனந்தன் சொன்னபடியே கதிரேசன் செய்தான்.

“இது சாமி கோவில் சார்” கதிரேசன் கத்தினான்.

“எதாயிருந்தாலும் கிளியர் பண்ணித்தான் ஆவணும். நீ நேரா நில்லு.”

“சாமி குத்தம் வந்துடும் சார்.”

”அதெல்லாம் பாத்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூட போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தயும் ஒரு நிமிசத்தில கிளியர் பண்ணிடும். பொக்லைனை சாமி குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்த பெரிய ஆலமர வேர்ல பாயிண்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க்ப் பண்ணு” கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல். மறுபேச்சு பேசாமல் இரும்பு கம்பி ஊசிகள், வெள்ளை மாவு இருந்த பையை எடுத்துக்கொண்டு போய் ஆனந்தன் சொன்ன இடத்தில் அடையாளமிட்டான். அதற்கு தெற்குப்புறத்திலும் அடையாளமிட்டான். “சரியா இருக்கா சார்” கதிரேசன் கேட்டான்.

“முன்னாடி போட்ட பாயிண்டயும், இப்பப் போட்ட பாயிண்டயும் செக் பண்ணு” என்று சொல்லிவிட்டு ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக்கொண்டான். கதிரேசன் அடையாளமிட்ட இடங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான். பிறகு ஆனந்தனை நோக்கி சொன்னான்  “ஓ.கே. சார்”.



ஆனந்தன் பதில் சொல்லவில்லை.

“முன்னாடி போவட்டுமா சார்?”

“போ” என்பது மாதிரி ஆனந்தன் கையை மட்டும் காட்டினான். பிறகு முக்கோணத் தாங்கியை தூக்கிக்கொண்டு மேற்கு நோக்கி இருபது முப்பதடி தூரம் முன்னோக்கி வந்தான். சந்தேகப்பட்டது மாதிரி ஒரு இடத்தில் முக்கோணத் தாங்கியை நிறுத்தி தியோட லைட்டில் பார்த்தான். உடனே தலையைத் தூக்கி “கொஞ்சம் வடக்க நவுந்து நில்லு” கதிரேசனை நோக்கி கையைக் காட்டினான். கதிரேசன் தவறாக புரிந்துகொண்டு தெற்குப்பக்கமாக நடந்தான்.

“அங்க நிக்குற வேப்ப மரத்துக்கிட்டப்போ. முந்திரி காடு முடியுற எடத்தில” கத்தி சொன்ன பிறகுதான் கதிரேசன் ஆனந்தன் சொன்ன இடத்தில்போய் சரியாக நின்றான். மறுநொடியே ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக்கொண்டான்.

       சிறிதுநேரம் வரைக்கும் ஆனந்தனிடமிருந்து எந்த சத்தமும் வராது என்பது தெரியும். அதனால் கதிரேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நின்றுகொண்டிருந்த இடம் முந்திரிக்காடு. அதை ஒட்டி கரும்புவயல். இரண்டுக்குமிடையேதான் புறவழிச்சாலை அமையப்போகிறது. எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருந்தது. தெற்கில் விருத்தாசலம் நகரத்திலிருந்த செல்போன் டவர்கள் தெரிந்தன. இன்னும் ஒரு இடம்தான். அடுத்து விருத்தாசலத்திலிருந்து ஆலடிபோகிற ரோடு. ரோட்டில் அடையாளமிட்டுவிட்டால். வேலை முடிந்துவிடும் என்று நினைத்தான். அப்போது ஆலடி, பாலகொல்லை போகிற டவுன்பஸ் போயிற்று. விருத்தாசலம் ஆலடி போகிற ரோட்டின் மீது மேம்பாலம் போடுவானோ என்று நினைத்தான். அவன் தானாக எதையும் சொல்லக்கூடிய ஆளில்லை. கேட்கவும் முடியாது. அவன் மேலதிகாரி.

“கதிரேசன் கொஞ்சம் நகந்து நில்லுங்க. முன்னாடி மார்க் செஞ்ச இடத்துக்கும் இப்ப நீங்க நிக்கிற எடத்துக்கும் நேரா இருக்கா? பாருங்க.” ஆனந்தனுடைய குரல் கேட்டதும், குரலுக்கேற்றவாறு கதிரேசன் நகர்ந்து நின்றுகொண்டு சொன்னான் “நேரா இருக்கு சார்”.

“ஓ.கே. பாயிண்ட் பண்ணு” ஆனந்தன் கை சைகை காட்டினான். உடனே கதிரேசன் கம்பி ஆணியை ஊன்றி வெள்ளை மாவைத் தூவினான். அந்த கம்பிக்கு நேராக வடக்கில் வந்து ஒரு ஆணியை ஊன்றி அடையாளமிட்டான். பிறகு தானாகவே அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தை நோக்கி அனுமானமாக நடக்க ஆரம்பித்தான். அப்போது ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்தி அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தை தேட ஆரம்பித்தான்.

       கதிரேசன் விருத்தாசலம் ஆலடிக்குப் போகிற ரோட்டிற்கு அருகில் வந்து நின்றான். அதைப்பார்த்த ஆனந்தன் “இன்னும் கொஞ்சம் முன்னால” என்பது மாதிரி இடது கையால் சைகைக்காட்டினான். உடனே முன்னால் நடந்துவந்து நின்றான். “வடக்கில் நவுரு” என்பது மாதிரி ஆனந்தன் கையைக்காட்டினான். கதிரேசன் நகர்ந்து நின்றான். மறுநொடியே தியோட லைட்டில் கண்களை பொருத்திகொண்டு சாலை நேராக வருகிறதா, அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு “மார்க்” என்று சொல்லி கத்தினான். கதிரேசன் ஊசியை ஊன்றி வெள்ளை மாவைத்தூவி அடையாளமிட்டான். அதேமாதிரி தெற்கிலும் சென்று அடையாளமிட்டான். “பாயிண்ட்ஸ செக் பண்ணு” ஆனந்தன் சொன்னதும் ரோட்டை ஒட்டி அடையாளமிட்ட இடத்திலிருந்து கிழக்கில் நடந்து மூன்று நான்கு இடங்களில் நின்று அடையாளமிட்ட இடங்கள் நேராக இருக்கிறதா என்று பார்த்தான். “ஓ.கே. சார்” என்று சொன்னான்.

“பேக் அப்” ஆனந்தன் சொன்னான்.

       இரும்பு கம்பி ஊசிகள் இருந்த பை, வெள்ளை மாவு இருந்த பையோடும் வந்த கதிரேசன் தியோட லைட்டை கழற்றி அதற்குரிய பையில் போட்டான். முக்கோணத் தாங்கியை கழற்றி, மடக்கி அதற்குரிய பையில் வைத்தான்.

“போவலாமா சார்?”

“டிரைவர வரச்சொல்லு. லேண்ட் மார்க் சொல்லிடு” என்று சொல்லிவிட்டு அடையாளமிட்ட ஒன்றிரண்டு இடங்களில் நின்று பார்த்தான். பிறகு பைகளை தூக்கிக்கொண்டு ரோட்டிற்கு சென்றுகொண்டிருந்த கதிரேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“தண்ணி இருக்கா?”

“இல்ல சார்.”

“கூல் ட்ரிங்க்?”

“தீந்துடுச்சி சார்.”

“நாளைக்கி வரும்போது ரெண்டு மூணு பாட்டில் கூடுதலா வாங்கிக்கிட்டு வா” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரட்டை பற்றவைத்துகொண்டு கேட்டான் “டிரைவர்கிட்ட  சொல்லிட்டியா?”

“சொல்லிட்டன் சார்.”

       ரோட்டில் நின்றுகொண்டு வடக்கிலும் தெற்கிலும் பார்த்த ஆனந்தனுடைய கண்ணில் ரோட்டை ஒட்டி இருபது முப்பதடி தூரத்தில் மேற்குப் பக்கமாக ஒரு கூரை வீடு இருப்பது தெரிந்தது. “இங்க ஒரு வீடு இருக்கே. ஆளு இருப்பாங்களா?”

“இருப்பாங்க சார்.”

“குடிக்கிறதுக்கு தண்ணி இருக்குமா?”

“இருக்கும் சார். அதக் குடிச்சா ஏதாச்சும் இன்ஃபெக்ஷன் ஆயிடும் சார்” அக்கறையோடு சொன்னான் கதிரேசன். அவன் சொன்னதை காதில் வாங்காமல் கூரைவீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆனந்தன்.

       மட்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல் தெற்குப்பக்கம் பார்த்து இருந்தது. வீட்டு வாசலிலிருந்து பத்தடி தள்ளி ஒரு கிழவரும், கிழவியும் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு புளிச்சக்கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டுபேருக்கிடையில் முறம் இருந்தது. கிழவிக்குப்பக்கத்தில் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அடுப்பிலிருந்து ஏழுஎட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து மேற்கில் பத்தடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச்சுற்றி ஒரு கோழியும் ஏழு எட்டுகுஞ்சுகளும் சுற்றிச்சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துகொண்டே வந்த ஆனந்தன் யாரிடம் என்றில்லாமல் “கொஞ்சம் தண்ணி கொடுங்க” என்று கேட்டான்.

கீரை உருவிப்போடுவதை விட்டுவிட்டு எழுந்து வீட்டிற்குள் சென்று ஒரு சொம்பு நிறைய தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தாள் கிழவி. தண்ணீரை வாங்கி குடித்தான் ஆனந்தன்.


“ஏதாச்சும் பிரச்சன வந்துடப்போவுது சார்”

“இன்னம் வேணுமா?” கிழவி கேட்டாள்.

“போதும்மா” என்று சொன்னான் ஆனந்தன். திரும்பி கதிரேசனிடம் “தண்ணி வேணுமா?” என்று கேட்டான்.  “வேணாம் சார்” அவசரமாக சொன்னான் கதிரேசன்.

“சீக்கிரம் டிரைவர வரச்சொல்லு” அதிகாரமாக சொன்னான் ஆனந்தன்.

“மூணு கிலோமீட்டர்தான் சார். அஞ்சி நிமிசத்தில வந்துடுவான்.”

       கிழவி தரையில் உட்கார்ந்து முன்புபோல புளிச்சகீரையை மீண்டும் உருவிப்போட ஆரம்பித்தாள்.

“கார் எப்ப வரும்?” முறைப்பது மாதிரி ஆனந்தன் கேட்டதும் உடனே செல்போனை எடுத்து யாருக்கோ போன்போட்டான் கதிரேசன். போன் பேசுகிற சாக்கில் ரோட்டில் போய் நின்றுகொண்டான்.

“என்ன இங்க சமையல் பண்றிங்க?” யாரிடம் என்றில்லாமல் ஆனந்தன் கேட்டான்.

“அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும்” கிழவர் லேசாக சிரித்தார்.

“எப்பவும் இந்த எடத்திலதான் சமைப்பிங்களா?”

“கல்யாணத்துக்கா ஆக்குறன்? ஒரு சோறு. ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளக்கி ஒருவாட்டி. அத இங்க வச்சே பொங்கிடுவன்” கிழவி இரண்டு முந்திரிக் குச்சிகளை எடுத்து அடுப்பினுள் செருகினாள்.

“மழ காலத்தில என்னா செய்வீங்க?”

“நாள் மூச்சூடுமா மழ பெய்யப்போவுது?” என்று கேட்ட கிழவி பக்கத்தில் படியில் இருந்த அரிசியை ஒரு குண்டானில் கொட்டி அலசிவிட்டு அள்ளி உலையில் போட்டாள். கரண்டியால் கிண்டிவிட்டு உலையை மூடினாள். அடுப்பில் இரண்டு குச்சிகளை வைத்தாள். கிழவி செய்கிற ஒவ்வொரு வேலையையும் பார்த்த ஆனந்தன் “ஊருக்குள்ளார இல்லாம எதுக்கு தனியா காட்டுல இருக்கிங்க?” என்று கேட்டான்.

“ஊருக்குள்ளார குடியிருந்தாலும் தூங்குறது மட்டும்தான? மத்த நேரமெல்லாம் இந்த காட்டுலதான? இந்த எடத்திலியே படுத்து, இந்த எடத்திலியே எந்திரிச்சா கால் நட மிச்சம்தான? வயசான காலத்தில நடக்க முடியுதா?” கிழவி சாதாரணமாக சொன்னாள்.

“திருடன் பயம் இல்லியா?”

கடகடவென்று  சிரித்தார் கிழவர். ஆனந்தனிடம் திருப்பி கேள்வி கேட்பது மாதிரி கேட்டார். “நக பணம் இருக்கா? வெலகொண்ட பொருளு இருக்கா? எங்ககிட்ட கைகாலுதான் இருக்கு. அத திருடுறதுக்கு எந்தத் திருடன் வரப்போறான்?”

       கிழவிக்கு பின்னால் சுற்றிக்கொண்டிருந்த கோழிகுஞ்சுகளில் ஒன்று அவளுடைய மடியில் ஏறியது. அதைத் தூக்கி தரையில் விட்டுவிட்டு “தூரமா போங்க கழுதகளா? என் இடுப்பிலியா தீனி கெடக்கு? என் இடுப்ப சுத்திசுத்தியே வரிங்க?” என்று கேட்டு சிரித்தாள். அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றில் ஒரு கரண்டி அள்ளி வாயால் ஊதி ஆறவைத்து தரையில் ஒரு இடத்தில் கொட்டினாள். கோழி குஞ்சுகள் சோற்றைக் கொத்தித்தின்ன ஆரம்பித்தன.

“யாரு நீங்க? என்னா ஊரு?” கிழவர் கேட்டார்.

“விருத்தாசலம். காரு வரதுக்காக வெயிட்ப் பண்ணிக்கிட்டிருக்கன்.”

“காரு வரமுட்டும் குந்துங்களன்” பக்கத்தில் கிடந்த ஒரு முந்திரி மரக் கட்டையை காட்டினார். கிழவர் காட்டிய முந்திரி மரக் கட்டையில் உட்கார்ந்தான். ரோட்டில் நின்றுகொண்டிருந்த கதிரேசன் ஆனந்தன் மரக்கட்டையில் உட்கார்ந்ததைப் பார்த்துவிட்டு வேகமாக வந்து “நடந்துபோய்க்கிட்டு இருக்கலாம் சார். கார் வந்ததும் அப்படியே ஏறிக்கலாம்” என்று சொன்னான்.

“கார் வருதான்னு ரோட்டுல நின்னுப்பாரு. எடம் தெரியாமப் போயிடப்போறான்”. மறுபேச்சு பேசாமல் ரோட்டிற்குப் போனான் கதிரேசன். செல்போனில் பேச ஆரம்பித்தான்.

       வீட்டைப் பார்த்தான் ஆனந்தன். மூன்று நான்குபேர்தான் படுக்க முடியும். கூரை மட்கிப்போயிருந்தது. வீட்டிற்கு பின்புறம் இரண்டு வாழை மரம் இருந்தது. ஒரு முருங்கை மரமும், ஒரு தென்னை மரமும் இருந்தது. வீட்டை ஒட்டியே வடக்கில் நெல்வயல் இருந்தது. மேற்கில் கரும்புகாடு, தெற்கில் முந்திரிகாடு, மேற்கில் பார்த்தான். சூரியன் சற்றுநேரத்தில் மறைந்துவிடும் போலிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அவ்வப்போது ரோட்டில் செல்கிற வாகனங்களின் சத்தத்தைத்தவிர வேறு சத்தம் இல்லை. பகலிலேயே இவ்வளவு அமைதியாக இருந்தால் இரவில் எப்பிடி இருக்கும்? “எப்பயும் இங்கதான் குடியிருப்பிங்களா?”

“பத்து வருசமா இங்கதான் இருக்கம்.”

“ஊருல இருக்க வேண்டியதுதான?” அக்கறையாகக் கேட்டான்.

“இங்கிருந்து பாத்தா ஊரும் காடு மாதிரிதான் இருக்கும்” கிழவர் சிரித்தார்.

“ராத்திரியில பயமா இருக்காதா? எப்பிடி தூங்குறிங்க?”

“எதுக்கு? எங்ககிட்ட இந்த மண்ணுதான் இருக்கு. இதெ திருடிக்கிட்டு போறதுக்கு எந்த நாட்டுத் திருடன் வரப்போறான்?”

“புள்ளைங்க இல்லியா? தனியா இருக்கிங்க?”

“அதெல்லாம் நெறயா இருக்கு. மூணு மவனுவோ, ரெண்டு மவ. பேரப்புள்ளைங்கன்னு ஒருபயிர் ஆடு அளவுக்கு இருக்கு.” சலிப்புடன் சொன்னார் கிழவர்.

“அப்பிடியா?” சந்தேகப்பட்டது மாதிரி கேட்டான் ஆனந்தன்.

“பத்து வருசத்துக்கு முன்னாடி பங்குபாகத்த பிரிக்கும்போது மூணுபேரும் எங்களுக்கு யாரு சோறு போடுறதின்னு சண்டப் பண்ணிக்கிட்டானுவ. எங்களுக்காக நீங்க சண்டப்பண்ணிக்க வாணாம். காட்டுல இருக்கிற மோட்டாரு கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்தில தங்கிக்கிறம்னு நாங்களே ஒதுங்கி வந்துட்டம்.” கிழவரின் குரலில் கசப்போ வெறுப்போ துளியும் இல்லை. எப்போதும்போல கீரையை உருவி முறத்தில் போட்டுக்கொண்டிருந்தார். கீரை உருவுவது, அடுப்பிலிருக்கும் சோற்றை கிண்டிவிடுவது, சுற்றிவரும் கோழிகுஞ்சுகளை விரட்டிவிடுவது என்று பலவேலைகளை செய்துகொண்டிருந்தாள் கிழவி.

“ஆடு மாடெல்லாம் உங்களுதா?”

“மாடு ரெண்டும் பெரியவனது. ஆடுவோ நடு மவனோடது. முதல்ல மேய்க்கிறதுக்கு ஆளில்லன்னு சொல்லி பெரியவன்தான் மாடுவுள ஓட்டியாந்து எங்கிட்ட வுட்டான். அதப் பாத்திட்டு ‘அவனோட மாடுவுள மட்டும்தான் மேய்ப்பியா? இதெயும் மேயி’ன்னு கொண்டாந்து ஆடுவுள கட்டிப்புட்டுப் போயிட்டான் நடு மவன். முடியாதின்னு சொல்லமுடியுமா?” கிழவர் சிரித்தார். அவருக்கு எல்லா பற்களுமே இருந்தது. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“முடியாதின்னு சொல்ல வேண்டியதுதான?”

“நாங்க சும்மாதான குந்தியிருக்கம். எங்களுக்கு வேல வாணாமா? பொழுதுபோவ வேணாமா? மாட்டு சாணிய, ஆட்டுபுழுக்கய அள்ளட்டுமின்னுதான் கொண்டாந்து வுட்டு இருக்கானுவ.”

“செலவுக்குத் தருவாங்களா?”

“தருவாங்க. போட்டிப்போட்டுக்கிட்டு. கூலி ஆளுவுள கொண்டாந்து வுட்டுட்டு வேல வாங்குன்னு சொல்லிட்டுப்போவாங்க. முந்திரி கொட்டப்பொறுக்கி வையின்னு சொல்லுவாங்க. காட்டுல ஆடுமாடு நுழயாம பாத்துக்க சொல்லுவாங்க. கரண்ட் உள்ள நேரத்துக்கு மோட்டாரு போடும்பாங்க. இப்பிடி நூறுவேல தருவாங்க. அதுபோதாதா?” கிழவர் வாய்விட்டு சிரித்தார்.

“வயசு என்னா இருக்கும்.”

“எழுவத தாண்டிடிடுச்சி.”

“கண்ணுலாம் நல்லாத் தெரியுதா?”

“ஓ, பஸ்ட்டா.”

“நடக்க முடியுதா?”

“இங்க கட்டியிருக்கிற ஆடு, மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? இந்த ஆடுமாடு எல்லாம் எங்கூட நடக்க முடியாது” கிழவர் சொன்னதும் சோற்றைக் கிண்டிவிட்டு வெந்துவிட்டதா என்று பார்த்த கிழவி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா?” சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.

“மெட்ராசில வேலயில இருக்கான். இஞ்ஞினீர், ரோடுபோடுற வேல. கவர்மண்டு உத்தியோகம்.” கிழவர் சிரித்தார்.

“அப்பிடியா?” ஆச்சரியமாகக் கேட்டான்.

“படிச்சி என்னாப் பண்றது? பணம் காசி சம்பாரிச்சி, உத்தியோகத்திலிருந்து என்னாப் பண்றது? மண்ணுல கெடந்து கூடப்பொறந்த அண்ணன் தம்பிவோ, அக்காளுவோ கஷ்டப்படுறாங்களேன்னு அம்பது, நூறுண்ணு தர மாட்டான். பத்துவருசத்துக்கு மின்னாடி அவனாலதான் ஊட்டுல சண்டவந்துச்சி. ஒடனே பங்கு பாகத்த பிரின்னுட்டான். தனக்கு சேந்த காட்ட, ஊட்ட வித்து காசாக்கிக்கிட்டுப் போயிட்டான். எதயும் விக்காத, ‘நாங்க உசுரோட இருக்கமட்டும் ஒன்னோட பாகத்த பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளார பிறத்தியாள கொண்டாந்து வுடாத’ன்னு இந்த கிழவரு எம்மானோ சொல்லிப்பாத்தாரு. கால்ல வியிந்துகூட கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல. ‘இனிமே இந்த பட்டிக்காட்டுக்கு எதுக்கு வரப்போறம்? எல்லாத்தயும் வித்து காசாக்கு. மெட்ராசில ஊடு கட்டி வாடகக்கி வுட்டுறலாம்’ன்னு பொண்டாட்டிக்காரி சொன்னதத்தான் கேட்டான். அதுலயிருந்து தம் பேச்ச கேக்கலியேன்னு இவுரு அவங்கிட்ட பேசறத வுட்டுட்டாரு. இதுவே போதுமின்னு அவனும் போயிட்டான். அதுலயிருந்து ஊருக்கு வரதயும் வுட்டுட்டான். நாங்க சாவுற அன்னிக்காச்சும் வருவானோ மாட்டானோ. எதுக்கு காசி செலவுன்னு ஊட்டுலியே இருந்தாலும் இருப்பான். எங்கள மறந்ததுகூட குத்தமில்ல. பொறந்ததிலிருந்து சோறுபோட்டு வளத்த இந்த செங் காட்ட மறந்திட்டானே” கிழவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்த கிழவர் “போன கதய எல்லாம் எதுக்கு இப்பச் சொல்ற?” வேகமாகக் கேட்டார்.

“காட்டுல வேல செஞ்ச புள்ளய கட்டியிருந்தா காடு வேணும், ஊடு வேணும், ஊரு வேணும், காட்டுல வேல செய்ய நாலு சனம் வேணும்ன்னு அனுசரிச்சிப்போயிருப்பா. படிச்சவ. கவர்மண்டு உத்தியோகத்தில உள்ளவ. அவளுக்கு எதுக்கு காடு, ஊடு? இப்ப எங் காட்டுல யார்யாரோ வராங்க, யார்யாரோ போறாங்க” சொல்லிக்கொண்டே சோறு வெந்துவிட்டதா என்று பார்த்தாள். சோறு வெந்துவிட்டது தெரிந்ததும் இறக்கிவைத்து வடித்தாள். கீரை சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். வடிகஞ்சித்தண்ணீரை கிழவர் நன்றாக ஆற்றினார். எடுத்துகொண்டுபோய் மாடுகளின் முன் வைத்தார். கீரையை உருவிக்கொண்டு போட்டிருந்த புளிச்சதண்டுகளை அள்ளிக்கொண்டுபோய் ஆடுகளுக்கு முன்போட்டார். வீட்டிற்குள் சென்று ஏழுஎட்டு மிளகாய் களை எடுத்துவந்து கிழவியின் முன்வைத்தார்.

“பூண்ட ஒங்கப்பனா எடுத்தாருவான்?” கிழவிகேட்டதும் திரும்பிப்போய் மூன்று பூண்டு கட்டிகளை எடுத்துவந்து கிழவியிடம் கொடுத்தார். கிழவி பூண்டை உரிக்க ஆரம்பித்தாள். கிழவிக்குப்பக்கத்தில் உட்கார்ந்து கிழவர் மிளகாய்களை கிள்ளி கீரைசட்டியில் போட்டார். உடனே கிழவி உரித்திருந்த பூண்டுகளை எடுத்துசட்டியில் போட்டு உருவி வைத்திருந்த கீரையையும் அள்ளிப்போட்டு கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள்.

கிழவரும் கிழவியும் வேலை செய்ததை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தன் கேட்டான் “இப்ப உங்கள யார்தான் பாக்குறாங்க?”

“ஒருத்தருமில்ல” அழுத்தமாக சொன்னாள் கிழவி.

“என்னம்மா சொல்ற?” ஆச்சரியமாகக் கேட்டான்.

“ரேசன் கடயில இருவது கிலோ அரிசிதரான். அதுலதான் காலம் ஓடுது.”

“மத்த செலவுக்கு?”

“காட்டுல கெடக்குற கீரதான். குச்சிதான். நீதான் பாக்குறல்ல” சிரித்தாள் கிழவி.

“உங்க மகனுங்ககிட்ட கேக்கக் கூடாதா?”

“சோறுபோடுன்னா? அப்பிடி கேக்கலாமா நானு?” அலுப்பாகச் சிரித்தார் கிழவர். கீழே கிடந்த இரண்டு மூன்று அரிசிகளை எடுத்து கோழியின் முன் போட்டுவிட்டு சொன்னார்.

“அவனவன் சோத்த அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?”

ஆனந்தனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. சிறிதுநேரம் பேசாமல் இருந்துவிட்டு கேட்டான். “சனங்களே இல்லாத எடத்தில இருக்கிறது கஷ்டமா இல்ல?”

கிழவர் கடகடவென்று சிரித்தார். “காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.”

“பேசுறதுக்குக்கூட ஆளில்லியே.”

கிழவர் கோபப்பட்ட மாதிரி கேட்டார். “எதுக்கு அப்பிடி சொல்றீங்க? இங்க ஆடுவோ நிக்குது, மாடுவோ நிக்குது. அப்பறம் கோழி குஞ்சுவோ நிக்குது. இதுபோதாதா? சுத்தி நிக்குற பயிர் பச்சய பாத்தா போதாதா? கரும்புகாடு, முந்திரிகாடுன்னு எம்மாம் நிக்குது, எல்லாத்துக்கும்மேல ரோட்டே போறவங்க எம்மாம் பேரு வருவாங்க தெரியுமா? சைக்கிளு பஞ்சரு, காரு பஞ்சரு, மோட்டார் பைக்கு பஞ்சருன்னு தெனம் ஒரு ஆளாவது வந்து இங்க கொண்டாந்து வண்டிய நிறுத்தாம இருக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்துக்குப் போற புள்ளைங்க தெனம்தெனம் வந்து தண்ணீ கேக்குங்க. அதுக்குன்னே குடம் வச்சியிருக்கன். ந்தா அங்க இருக்குதில்ல” கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக்குடம் இருந்தது. அதற்குப்பக்கத்தில் சில்வர் சொம்பு ஒன்றும் இருந்தது.

“தனியா நீங்க இருக்கிறதுதான் ஆச்சரியமா இருக்கு?” சிரித்துக்கொண்டே சொன்னான் ஆனந்தன்.

“நாங்க தனியா இல்ல. எங்ககூட கள்ளவீரன் இருக்கான்.”

“அது யாரு?”

“ந்தா கிழக்கால நிக்குறான்பாரு ஒருத்தன்” கிழவர் கிழக்குப் பக்கமாக கையைக்காட்டினார். ஆனந்தன் ரோட்டுப்பக்கம் பார்த்தான். ஆள் யாரும் கண்ணில்படாததால் “நீங்க யார சொல்றிங்க” என்று கேட்டான்.

லேசாக சிரித்த கிழவர் “அங்க வெள்ள குதிரமேல கள்ளவீரன் சாமி குந்தியிருக்கான் பாரு”.

ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டிலிருந்து கிழக்கில் ஒருபர்லாங் தொலைவில் ஏழுஎட்டு மரங்களுக்கிடையே சிமெண்ட்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாக தெரிந்தது. சாமிசிலை இருப்பது தெரியவில்லை. “கதிரேசன்” என்று கூப்பிட்டான்.

“இப்ப கார் வந்துடும் சார். கிளம்பிட்டானாம்” சொல்லிக்கொண்டே கதிரேசன் ஆனந்தனுக்குப் பக்கத்தில் வந்தான்.

“முன்னாடி மார்க் பண்ணும்போது சாமி கோவில் இருக்குன்னு சொன்னியே அந்த எடமா அங்க மரம் நிக்குற எடம்?”

“அந்த எடம்தான் சார்.”

“அந்த எடமா சாமி கோவிலு?” லேசாக சிரித்தான் ஆனந்தன். கிழவருக்கு கோபம் வந்துவிட்டது. “எதுக்கு சிரிக்கிறிங்க? நீ நெனைக்கிற மாதிரி கள்ள வீரன் சாமி சாதாரண ஆளில்ல. அவனுக்கு இருவத்தியொரு சேனாதிபதி இருக்காங்க தெரியுமா? முப்பலி வாங்கக்கூடியவன். எதிரிய வெல்றவன். என்னா ஒண்ணு, சாராயம் வச்சி படைக்கலன்னா மட்டும் கோபப்படுவான்.” பெருமையாக சொன்னார்.

“போவலாம் சார்” கதிரேசன் சொன்னான். அதற்கு ஆனந்தன் பதில் சொல்லாமல் கிழவி கீரை வெந்துவிட்டதா என்று பார்ப்பதையும், கீரையைக் கிண்டிவிட்டதையும் பார்த்தான். அப்போது தானாகவே கிழவர் சொன்னார்.

“கள்ள வீரன் வேட்டையில பெரிய சூரன். இருபத்தியொரு சேனாதிபதியோடதான் ஒவ்வொரு நாளும் வேட்டக்கிப்போவான். அப்ப எதிர்ல யார் வந்தாலும் சாம்பதான். பேய், பிசாசு, துர்தேவாதிங்க ஊருக்குள்ளார அண்டாம அவன்தான் பாத்துக்குவான். அவனோட கண்ணமீறி ஒரு ஈ, எறும்பு, ஊருக்குள்ளார நுழய முடியாது. முப்பூசப் போட்டு மனசுல உள்ளத அவங்கிட்டப்போயி முறையிட்டாபோதும். அப்பிடியே நிறவேத்தி கொடுத்துடுவான். அவனோட நிழலு எப்பவும் ஊருமேல விழுந்துகிட்டேயிருக்கும். எங்க ஊருசனங்களுக்கு அவந்தான் மூச்சுக்காத்து. அந்த பயல நம்பித்தான் நான் இந்த காட்டுல குந்தியிருக்கன்.”

       கிழவருக்கு உற்சாகம் கூடிவிட்டது. கள்ள வீரன் சாமியினுடைய வீரம், பராக்கிரமம், ஊரை காக்கிறவிதம், வேட்டைக்கிச் செல்கிறவிதம், குதிரை, சேனாதிபதிகள், திருவிழா எப்படி நடக்கும், திருவிழாவில் எவ்வளவு ஆடு, கோழி, பன்றி காவு கொடுப்பார்கள், எத்தனை ஊர் சனங்கள் திருவிழாவிற்கு கூடுவார்கள், ஊரில் யார்யாருக்கு என்னென்ன நல்லது செய்திருக்கிறான் என்று பட்டியலிட ஆரம்பித்தார். கிழவருடைய உற்சாகமானப் பேச்சைக் கேட்ட ஆனந்தன் எழுந்து நின்று கோவில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. “ரோட்ட ஒட்டி கிழக்கால மார்க் செஞ்சியே அந்த எடத்துக்கிட்டப் போ” ஆனந்தன் சொன்னதும் லேசாகத் தயங்கிய கதிரேசன் கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் போய் நின்றான். கதிரேசன் நின்ற இடமும் கிழவருடைய வீடும் நேராக இருந்தது. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே ‘வா’ என்பது மாதிரி கை சைகை மட்டும் காட்டினான்.

       கிழவி கீரையை இறக்கிவைத்து கடைய ஆரம்பித்தாள். கிழவி கேட்காமலேயே வீட்டிற்குள் சென்று கிழவர் உப்பை ஒரு பிடி அள்ளிக்கொண்டுவந்து கொடுத்தார். பாதி உப்பை வாங்கி கீரையில் போட்டுவிட்டு எஞ்சியதை திருப்பி கிழவரிடமே கொடுத்தாள். உப்பை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு வந்தார்.

சொல்ல வேண்டிய விசயம் மறந்துபோனது நினைவுக்கு வந்த மாதிரி சிரித்துக்கொண்டே கிழவர் சொன்னார் “கள்ள வீரன் சாமியப் பத்தி சொன்னப்ப சிரிச்சிங்கள்ள? அவன் யாரு தெரியுமா? கருப்புசாமி, தூண்டிக்காரன், குள்ளக்கருப்பு, முனியன் சாமிவுளவிட பெரியாளு. காட்டு தெய்வம். எப்பவும் ஊருக்கு வெளியதான் இருப்பான். வெள்ளிக்கி வெள்ளி பூச கேப்பான். மொட்டப் போட்டு முப்பூச கொடுத்து இன்னத செய்டான்னு சொன்னா ரவ பிசகாம காரியத்த செஞ்சி முடிச்சிடுவான். ஆடு, மாடு காணாமப் போனா, நக நட்டு திருட்டுப்போனா, திருடுனவங்களக் காட்டிக்கொடுத்திடுவான். எப்பவுமே கும்ப மர சாலயில, நீர்நெல தேங்கிய எடத்திலதான் அவனுக்கு இருப்பு. பவரான சாமி” கிழவரின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

       கீரையைக் கடைந்து முடித்த கிழவி கிழவரைப் பார்த்து ‘கோமணத் துணி தளந்துபோய் கெடக்குறதுகூடமா தெரியாம ஒரு ஆளு இருப்பான்? வெக்கம் மானம் வாணாம்?” என்று கேட்டு சிரித்தாள். அடுப்பை தண்ணீர் தெளித்து அணைத்தாள். எழுந்து வீட்டிற்கு பின் புறமாக சென்று  குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து மாடுகளுக்கு முன் வைத்தாள். மீண்டும் வீட்டிற்கு பின்புறம் சென்று ஒரு குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து ஆடுகளுக்கு வைத்தாள். ஒரு சில்வர் தட்டில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி வைத்தாள். கோழி குஞ்சுகள் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன.

       கிழவியினுடைய ஒவ்வொரு செயலையும் பார்த்த ஆனந்தன் கிழக்கில் கள்ள வீரன் சாமி கோவில் பக்கம் பார்த்தான். பிறகு கிழவர் கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்கு காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேண்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரை சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காக தண்ணீர் வைத்திருந்த செப்பு குடத்தைப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும். கருங்கல் ஜல்லி கொட்டப்படும், தார் ஊற்றப்பட்டு சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

பெரு மூச்சுவிட்ட ஆனந்தன் கதிரேசனிடம் கேட்டான் “கார் என்னாச்சி?”

“இப்ப வந்துடும் சார்”

“ரோட்டுல நின்னு பாரு”

       கதிரேசன் ரோட்டிற்குப்போய் நின்ற சில நொடிகளிலேயே கார் வந்து நின்றது. “கார் வந்துடுச்சி சார்”.

“வண்டியில ஏறு” என்று சொன்ன ஆனந்தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து வரைபடத்தை எடுத்துப்பார்த்தான். கடலூர் – சேலம் செல்வதற்கு விருத்தாசலம் நகரத்திற்கு வெளியே செல்லும் புறவழிச்சாலை பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். பனிரெண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அளந்து அடையாளமிடப்பட்டுவிட்டது தெரிந்தது. இன்னும் மூன்று கிலோமீட்டர் தூரம்தான். நாளைக்கு முடிந்துவிடும். நாளைக் காலையில் வந்ததும் அடையாளமிட ஆரம்பிக்கவேண்டிய இடம் கிழவருடைய வீட்டை ஒட்டியுள்ள ரோடுதான். அதை சொல்லலாமா?

“இப்பவே நெருப்ப வைக்க வாணாம்” என்று நினைத்தான். கிழவரையும் கிழவியையும் ஆனந்தனுக்கு ரொம்ப பிடித்திருந்ததால் “ரெண்டு பேரும் அப்படியே இருங்க. ஒரு போட்டோ எடுத்துக்கிறன்” செல்போனை எடுத்தான்.

“படமெல்லாம் எடுக்காதிங்க. நம்ப படத்த எடுத்து நம்பளே பாத்துகிறதா பெருசு?” கிழவர் வெடுக்கென்று கேட்டார். ஆனந்தனுக்கு வெட்கமாகிவிட்டது. ஆனாலும் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தான். அப்போது அருகில் வந்த கதிரேசன் அக்கறையுடன் சொன்னான் “மணி ஆயிடிச்சி சார். டீ, காபிகூட குடிக்கல” .

“இந்த இடம் நல்லா இருக்கு. ஏ.சி.யில வர்ற மாதிரி காத்து ’ஜிலுஜிலு’னு வருது.”

“இருட்டப்போவுது சார்.”

“கார்ல போயி இரு” ஆனந்தன் வேகமாக சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் கதிரேசன் காரிடம்போய் நின்றுகொண்டு “கிறுக்கன்” சொன்னான்.

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான் “இந்த ஊரு பேரு என்ன?”

“நறுமணம்”

“நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.”

“நீங்க வடக்கத்தி ஆளா?”

“இல்லெ. மெட்ராஸ் பக்கம்.”

“என்னா வேலயா இங்க வந்தீங்க?” ஆர்வமாகக் கேட்டார் கிழவர்.

“விருத்தாசலத்த சுத்தி பைபாஸ்  போடுறாங்க. அதுக்கு அளக்க வந்தன்”

“ரோடு போடுறவங்களா?”

“ஆமாங்க. ஹைவேஸ் டிபார்ட்மண்ட்.”

“ரோடு எந்தப் பக்கம் வருது?”

       ஆனந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கிழவருடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அப்போது கிழவி “இருட்டாவ போவுது. ஊட்டுல வௌக்க ஏத்தல?” என்று கேட்டாள். உடனே கிழவர் வீட்டிற்குள் சென்று சிறிய விளக்கு ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு இரண்டு சாப்பாட்டு தட்டுடன் வெளியே வந்தார். தட்டுகளை வாங்கி அதில் சோற்றையும், கீரையையும் போட்டு வைத்தாள் கிழவி.

“ஒரு வா சோறு சாப்புடுங்களன்” கிழவி ஆனந்தனிடம் சொன்னாள்.

“வேண்டாம்மா. வரன்” காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அப்போது கிழவர் கேட்டார்,

“கிளம்பிட்டிங்களா?”

“ஆமாங்க. நேரமாயிடிச்சி.” மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

“ரோடு எந்தப் பக்கமா வருது?”

 ஆனந்தன் வருவதைப் பார்த்துவிட்டு டிரைவர் காரை ஸ்டார்ட் செய்துவிட்டதால் கிழவர் கேட்டது அவனுடைய காதில் விழவில்லை.

“இந்த கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்கு சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல” கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரிலிருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும், கிழவரும், வீடும் தூசு மாதிரி காணாமல் போயிருந்தனர்.

ஆனந்த விகடன் - 29 அக்டோபர் 2015