சனி, 16 ஜூலை, 2022

தீர்ப்பு எழுதுவது இலக்கியமல்ல - இமையம்

பொருட்களை உருவாக்குவதுபோல் ஒரே மாதிரியான படைப்புகளை எழுத்தாளனால் உருவாக்க முடியாது. ஒரு எழுத்தாளின் ஒவ்வொரு படைப்புகளும் புதியதாக இருக்க வேண்டும். ஒரு சிறுகதையைப் போல் மற்றொரு சிறுகதையை எழுத முடியாது. ஒரு நாவலைப் போல மற்றொரு நாவலை எழுத முடியாது. ஒவ்வொரு சிறுகதையும், ஒவ்வொரு நாவலும் புதியதாக இருக்க வேண்டும், அதிசயமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறுகதையும், ஒவ்வொரு நாவலும் எழுத்தாளனுக்கு சவால்தான். தனக்குத் தானே சவால்களை ஏற்படுத்திக்கொள்கிறவனே எழுத்தாளன். எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சவால்களில் ஆறு நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நெடுங்கதை என்று எழுதியவற்றில் சாரமான எழுத்தை எழுதியிருக்கிறேனா, சாரமற்ற எழுத்தை எழுதியிருக்கிறேனா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

என்னுடைய சிறுகதைகளும், நாவல்களும் சமூகத்தின் ஒழுங்குகளைக் குலைப்பவை எவை எவை, சமூகத்தின் அபாயங்கள் எவை எவை, அர்த்தமற்ற வாழ்க்கைக்கு மனிதர்களை நகர்த்துபவை எவை எவை, வாழ்க்கை பாரத்தைச் சுமக்க முடியாமல் தத்தளிக்கும் மனிதர்களின் வலியைக் குறைப்பதற்குப் பதிலாக வலியை மறக்க செய்கிற அரசுகளின் நடவடிக்கைகள் எவை எவை என அடையாளம் காட்டுவதற்கு மட்டுமே முயன்றிருக்கிறது.

என்னுடைய சிறுகதைகளும் நாவல்களும் தனிமனித பரவசத்திற்காக, சமூகத்தின் பரவசத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. சமூக நடைமுறை வாழ்க்கைதான் என்னுடைய சிறுகதைகளும், நாவல்களும். என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் படிக்கிறவர்கள் அவரவர்களுடைய திறனுக்கேற்ப, குணநலன்களுக்கேற்ப புரிந்துகொண்டு சரி, தவறு என்று தீர்மானிக்கலாம். வாசகர்களுடைய சரி, தவறுகள் என்னுடைய சரி, தவறுகள் அல்ல.

தனிமனிதன், குடும்பம், சமூகம் அதன் செயல்பாடுகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் பற்றி படம்பிடித்து காட்டுவது மட்டுமே என்னுடைய சிறுகதைகளின், நாவல்களின் வேலை. தீர்ப்பு எழுதுவது அல்ல. இலக்கியப் படைப்பாளிகளின் வேலை தீர்ப்பு எழுதுவது அல்ல. Literary Ambiquity என்பது என்னவென்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக