செவ்வாய், 8 ஜனவரி, 2019

பிரபஞ்சன் என்ற எழுத்தாளுமை - இமையம்



1985ல் ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்என்ற சிறுகதை தொகுப்பின் வழியே பிரபஞ்சன் என்ற எழுத்தாளரை நான் அறிந்தேன். 1985லிருந்து 2013 ஜனவரி தீராநதியில் வெளிவந்திருக்கிற உயிர் எழுத்தும் உடல் எழுத்தும்என்ற கட்டுரைவரை நான் படித்திருக்கிறேன். விட்டு விடுதலையாகிஎன்ற தொகுப்போடு மொத்தம் பனிரெண்டு சிறுகதை தொகுப்புகள், பத்து தொடர்கதைகள், நான்கு நாவல்கள், நாடகம் ஒன்று, கட்டுரை தொகுப்பு ஒன்று என்று பிரபஞ்சனின் எழுத்து இயக்கம் தொடர்கிறது. தீயிலே வளர்சோதிஎன்ற குறுநாவல், ‘சந்தியா’, ‘காகித மனிதர்கள்’, ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்ஆகிய நாவல்களை நான் விரும்பி படித்திருக்கிறேன். 1985 முதல் 2013 வரை நான் பிரபஞ்சனுடைய வாசகனாக இருந்திருக்கிறேன். இருபத்தியெட்டு ஆண்டுகள் ஒரு வாசகனை தன் எழுத்துக்களை பின்தொடர்ந்து வரச் செய்வது தேர்ந்த எழுத்தாளனுக்கு மட்டுமே சாத்தியம்.

என் வாசிப்பின் வழியாக நான் பிரபஞ்சனின் எழுத்து இயக்கத்தை சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், பேச்சு என்று ஐந்து வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்து வழியாகவும் பிரபஞ்சன் தன்னை ஓயாமல் வெளிப்படுத்திகொண்டே இருக்கிறார் என்பதைவிட நிலை நிறுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபஞ்சனின் எழுத்து இயக்கத்தில் இடைவெளி, தேய்வு என்பது இதுவரை நிகழவில்லை. இன்றும் அவரும் சரி, அவருடைய எழுத்தும் சரி செயலூக்கம் மிக்கதாகவே இருக்கின்றன. ஒரு கலை ஆளுமையின் ஆகச் சிறந்த பலம் ஆற்றல் இதுதான். எழுதுவதில் சலிப்புற்றார் என்பதற்கான தடயம் எதுவுமில்லை. வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன்என்று பிரபஞ்சன் சொல்கிறார். நாற்பதாண்டுகளாக எழுத்தின் வழியே பேசிய பேச்சுகள்தான்- அவருடைய எழுத்துக்கள். என்ன பேசியிருக்கிறார், எப்படி பேசியிருக்கிறார், யாருக்காக பேசியிருக்கிறார் என்பதை வைத்துதான் பிரபஞ்சனின் எழுத்தின் தரம் நிர்ணயமாகிறது.
பிரபஞ்சன் எந்த வடிவத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலும் அல்லது எந்த வடிவத்தின் வழியாக உலகை காணவும், பதிவு செய்ய விரும்பினாலும் அவருடைய குரல் ஒடுக்கப்பட்டோருக்கானதாக, விளிம்பு நிலை மக்களுக்கானதாக, பெண்களுக்கானதாகவே இருக்கிறது. இதில் எந்த காலக்கட்டத்திலும் அவர் சமரசம் செய்துகொண்டார் என்பதற்கான சாட்சியம் எழுத்தின் வழியே இல்லை. யதார்த்த வாழ்க்கை சமரசங்களால் நிறைந்ததுதான். ஒரு நிஜமான கலைஞன் படைப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுப்பதில்லை என்பதைத்தான் பிரபஞ்சனுடைய எழுத்துக்கள் காட்டுகின்றன. கலைஞனும் சரி, கலைப்படைப்பும் சரி சமரசம் செய்துகொள்ளாத பட்சத்தில்தான் உண்மையான மதிப்பை பெறுகிறது. சமரசம் செய்துகொள்ளாதது மட்டுமல்ல, படைப்பு, விமர்சனம், பேச்சு எதிலுமே பிறருடைய சாயல் தன்மேல் படராமல் இதுவரை இயங்கியிருப்பதுதான் இன்றும் பிரபஞ்சன் மீதான மதிப்பை தகர்த்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
பிரபஞ்சனுடைய எழுத்துக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது-மனிதர்கள் மீதான சமூகத்தின் மீதான அன்புதான்-பெரும் கருணைதான். இதை அவரே கருணையினால்தான் என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார். கேசவன் என்ற இளைஞன் தன் காதலி சுமதி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவனை கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறான். கேசவன் ஒரு கொலைதான் செய்கிறான். ஆனால் காவல்துறை பல கொலைகளையும், சமூக விரோத செயல்களையும், தீவிரவாத இயக்கங்கள் செய்த அத்தனை குற்றங்களையும் அவன் மீது சுமத்துகிறது. நக்சலைட்- என்ற முத்திரையும் குத்தப்படுகிறது. காவல்துறை ஓயாமல் தேடுகிறது. தலைமறைவு வாழ்க்கை யதார்த்தத்தை மட்டுமல்ல பல உண்மைகளையும், வாழ்வின் கொடூரத்தையும் கேசவனுக்கு உணரச் செய்கிறது. மனம் தரும் துன்பத்திலிருந்து விடுபட வேறு வழியின்றி காவல்துறையில் சரணடைய விரும்புகிறான். காவல்துறை கேசவனை கைது செய்கிறது. தலைமறைவான ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான குற்றங்கள் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குற்றத்திற்காகவும் விசாரணை. எவ்வளவு காலத்திற்கு நடக்கும்? எதுவும் தெரியாது. விசாரணை என்ற பெயரில் நடக்கவிருக்கும் கொடூரமான கேள்விகள், சித்ரவதைகள், அதிலிருந்து அந்த இளைஞனால் மீள முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. அந்த இளைஞனுக்கு உதவ வேண்டும் என்று தேவா-என்ற ஆய்வாளர் நினைக்கிறார். எப்படி உதவுவது? பல மாதங்கள், பல ஆண்டுகள் அனுபவித்தும் தீராத வாதையிலிருந்து விடுவித்துவிடுகிறார். சரணடைய வந்தவனை தப்பிக்க முயன்றதாக சுட்டுக் கொன்றுவிடுகிறார். கேசவன் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைந்துவிடுகிறான். சுட்டுக் கொன்ற தேவாவுக்கத்தான் துயரம். தேவா-என்ற ஆய்வாளர் வேறு யாருமல்ல-பிரபஞ்சன்தான்.
மனித மனம், மனித உடல் படுகிற அவஸ்தையை, துன்பத்தை தாங்க முடியாமல் தத்தளிக்கிற மனம் கொண்டவனே கலைஞனாக, படைப்பாளியாக இருக்க முடியும். பிரபஞ்சனிடம் இருக்கும் பெரும் கருணைதான் கேசவனை சுட்டுக் கொல்ல வைக்கிறது. இந்த அன்புதான், இந்த கருணைதான் பிரபஞ்சனின் எழுத்து, எழுத்துக்கான ஊற்றுக்கண். கற்பனையும் வாழ்க்கையும், படைப்பும் யதார்த்தமும் வேறுவேறாக பிரபஞ்சனின் எழுத்துக்களில் இருப்பதில்லை. படைப்பாளி தனக்கு மட்டுமல்ல, தனது படைப்புக்கு மட்டுமல்ல, தான் வாழ்கிற சமூகத்திற்கும் நேர்மையானவனாக இருக்கிறான். நிஜமான கலைஞன் தான் வாழ்கிற சமூகத்தோடு குறுக்கீடு செய்கிறான். ஒவ்வாமை குறித்து கேள்வி எழுப்புகிறான். குறுக்கீடு செய்வதும், கேள்வி எழுப்புவதும், விமர்சனம் செய்வதும்-சுய லாபத்திற்காக அல்ல. சமூக மேம்பாட்டிற்காக, மனித குல மேம்பாட்டிற்காக. எழுத்தாளன்தான் இதை செய்ய முடியும். பிரபஞ்சனும் அதைத்தான் செய்திருக்கிறார்.
பிரபஞ்சனின் எழுத்தின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக ஒரு மனிதனைப் பற்றிய வெள்ளை அறிக்கைஎன்ற கதையில் நாம் அறிய முடியும். அக்கதையில் வரும் ஒரு உரையாடல்:
எதன் மீது யாரை எதிர்த்து உங்கள் யுத்த சன்னம்என்று கேட்டேன்.
உங்களையும், உங்கள் அறங்கள், சட்டங்கள், நீதிகள், விழுமியங்கள் அனைத்தையும் எதிர்த்து.இதுதான் பிரபஞ்சனுடைய எழுத்தாக, எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. இப்படி ஒரு மனுஷி’ ‘அப்பாவின் வேஷ்டி’, ‘பாதுகை’, ‘பிரம்மம்ஆகிய சிறுகதைகளிலும் சமூகம் குறித்த விமர்சனம், எள்ளல் இயற்கையாக அமைந்திருப்பதைக் காண முடியும். மரி என்கிற ஆட்டுக்குட்டி என்கின்ற சிறுகதையில் அற்புதமரி என்கிற சிறுமி பள்ளியைவிட்டு நீக்கப்படுகிற விஷயத்தை காட்சிப்பூர்வமாக நிகழ்த்திக்காட்டியிருப்பதை பார்க்க முடியும். அற்புத மரி ஏழை மட்டுமல்ல, எளிய குடும்பத்தைச் சார்ந்தவள். இதையே காரணமாக வைத்து அவள் பள்ளியைவிட்டு நீக்கப்படுகிறாள். அவள் நீக்கப்பட்டது ஜாதியோடு பொருளாதாரத்தோடு தொடர்புடையதாக மட்டுமல்ல, இன்றைய நிலையிலும்கூட அனைவரும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதை மரி என்கிற ஆட்டுக்குட்டி-கதையின் வழியே ஜாதிய வேர்கள், மத துவேஷங்கள் நம்முடைய சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறார். இதுதான் பிரபஞ்சனுடைய எழுத்தின் நோக்கம்-அதிகாரம் என்பது பிறரை வஞ்சிப்பதற்காக, மேலாதிக்கம் செய்வதற்காக என்பதை சமூக நியதியாக ஏற்க முடியாது என்பதை இக்கதையின் வழியே சொல்கிறார்.
நமக்கு முன் ஒரு சமூகம் இருந்தது. அந்த சமூகத்திற்கென்று அறநெறிகளும் இருந்தன. முந்தைய சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு சிந்தித்தார்கள், எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் வாழ்க்கை அறமாகக்கொண்ட பண்புகள் என்ன, அவர்களுடைய வாழ்வியக்கம் என்பது எதை நோக்கியதாக இருந்தது என்பதை வாழ்வினூடாக அறிவதும் வரலாறுதான். வெறும் புள்ளி விபரங்கள் மட்டுமே வரலாறு அல்ல. ஒரு கலைஞனுக்கும், ஒரு வரலாற்று ஆசிரியனுக்குமான வேறுபாடு இதுதான். எல்லாவற்றையும் வாழ்க்கையாக பார்ப்பவன் கலைஞன். வெறும் தகவலாக, புள்ளி விபரமாக பார்ப்பவன் வரலாற்று ஆசிரியன். பிரபஞ்சன் கலைஞன் என்பதை மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’-ஆகிய நாவல்கள் நிரூபித்து காட்டுகின்றன. இந்த இரண்டு நாவல்களிலும் வீர சாகசங்கள் இல்லை. அந்தப்புர லீலைகள் இல்லை. ஏழு கடல், ஏழு கோட்டை தாண்டி இருக்கும் இளவரசியை தூக்கிகொண்டு வரவில்லை. கற்பனையான சம்பவங்கள் என்று எதுவுமில்லை. நடக்காத ஒன்றை, நடக்க முடியாத ஒன்றை நடந்ததாக இட்டு கட்டவில்லை. பொய்மைகள் ஏதுமில்லை. புனைவு இருக்கிறது. இட்டு கட்டிய கற்பனை இல்லை. நமக்கு ஒரு தலைமுறைக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் நாவலாகி இருக்கிறது. அந்த வாழ்க்கையின் சகலவிதமான நிறைகுறைகளோடும், அச்சமூகம் பின்பற்றிய பண்பாடு, கலாச்சாரம், மரபு, அந்நியர்கலப்பு, ஆதிக்கம் போன்ற சமூக இயக்கத்தை ஆடம்பரமில்லாத நடையில் எழுதியிருக்கிறார். மானுடம் வெல்லும், வானம் வசப்படும்-ஆகிய இரண்டு நாவல்களிலுமே பெண் பாத்திரங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. கோகிலாநம்ம வாழ்க்கையே இருட்டு வாழ்க்கைதான். இருட்டியதுக்குப் பின்னால்தான் ஆம்பளைகளுக்கு நம் ஞாபகம் வரும். இருட்டு வானத்திலேதான் நட்சத்திரங்களுக்கு மரியாதை. சூரியன் வந்த பிறகு நட்சத்திரம் வெளுத்துத்தானே போகும்என்று கோகிலாவின் தாய் கூறுகிறாள். கோகிலா, குருசு, சின்னாள்-வழியாக தேவதாசி முறை குறித்தும், தேவதாசிகளின் மனநிலை குறித்தும்-தெளிவாக எழுதுகிறார். இதே மாதிரி வானம் வசப்படும்-நாவலிலும் அல்லிப்பூ வயிற்றில் அவரைக்காய் காய்ச்சதுபோல நீ எங்கிருந்தடி எனக்கு மகளாக வந்து வாய்த்தாய்? தாசி வீட்டுப் பெண்களுக்கு நிறம் மட்டமாய் இருக்கலாம். திறம் மட்டாய் இருக்கலாமோ? மற்ற ஜாதிப் பெண்களுக்கெல்லாம் கண்கள் என்பது காண மட்டும்தான். நமக்கு அவை அம்புகள் அல்லவா?” என்று சம்பூர்ணா தன் மகளுக்கு தாசி குலத்து பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறாள். இரண்டு நாவல்களிலுமே தாசிகளுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. சமூகத்தின் இழிவுகளை எழுதுவதில் பிரபஞ்சன் முன்வரிசையில் நிற்பவர். வானம் வசப்படும், மானுடம் வெல்லும் ஆகிய இரண்டும் நாவல்களிலும் மொழியில், வெளிப்பாட்டில் சோதனைகளை செய்திருக்கிறார். அவருடைய எழுத்தில் அரியகுணமாக இருப்பது எள்ளல், எளிமை. கடினமாக எழுதுவதைவிட எளிமையாக எழுதுவதுதான் சிரமமானது. மதிப்பு வாய்ந்தது.
ஒரு எழுத்தாளனாக பிரபஞ்சனுக்கு சமூகத்தின் பெரிய நிகழ்வுகளிலிருந்து சிறிய நிகழ்வுகள் வரை எல்லாவற்றின் மீதும் கேள்விகள் இருக்கின்றன. முரண்பாடுகள் இருக்கின்றன. முரண்பாடுகளை ஆராய்வதுதான் அவருடைய கதைகள். பொதுவாக அவருடைய அக்கறைகள் பெண்கள் மீதும் குழந்தைகள்மீதும் கூடுதலாக இருக்கிறது. அதற்கு நல்ல உதாரணமாக இருப்பது பானு உன்னுடைய புத்தக பை அண்ணனிடம் இருக்கிறதுஎன்ற கதை. கதையில் கதை சொல்லி, பானு, மூர்த்தி ஆகியோர் வருகிறார்கள். வீட்டில் குழந்தைகள் விளையாடுகின்றன. குழந்தைகள்-குழந்தைகளுக்குரிய தன்மையோடு விளையாடுகிறார்கள். குழந்தைகள் இயந்திரங்களோடும், இயந்திரங்களின் வழியாகவும் விளையாடாத காலத்தில் நடக்கிறது கதை. கதையின் மையம் இன்று குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள், எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான். வன்முறையை விரும்புகிற, வன்முறையை பிரயோகப்படுத்துகிற குழந்தைகளாக எது மாற்றியது? நம்முடைய இன்றைய குழந்தைகளின் மனதிலும் மூளையிலும் காட்சி ஊடகங்களின் விளம்ரபங்களும், நகைச்சுவை துணுக்குகளுமே நிறைந்திருக்கின்றன. நம்முடைய குழந்தைகள் தொலைக்காட்சியையும், கணினியை மட்டுமே பார்த்து வளர்கிறார்கள். ஆரோக்கியமான சமூகத்திற்கு இது ஏற்ற செயல் அல்ல என்பது பிரபஞ்சனுடைய கவலை. மோசமாக வளர்கிற குழந்தைகளுக்கிடையிலும் எப்படி பாலீன வேறுபாடும், உயர்வு தாழ்வும் உண்டாகிறது என்பது வியக்க வைக்கிறது. அந்த வியப்பால் எழுதுகிறார். அப்பாவுக்கும் பெண் இல்லை. எனக்கும் பெண் இல்லை. என்னுடைய மருமகள்களே என் பெண்கள். இரண்டுக்கும் வித்தியாசமென்ன?” இதற்கு சமூகம்தான் பதில் சொல்ல வேண்டும். வேறுபாடுகள் வித்தியாசங்கள் இருப்பதால்தான் கேள்விகள் எழுகின்றன.
எழுத்தாளன் என்பவன் காலத்தில் வாழ்கிறவன். அவன் வாழ்கிற காலத்தில் நிகழ்கிற நிகழ்வுகளுக்கு எதிரக குரலெழுப்புகிறவன். சோரம்போன எழுத்தாளர்கள் மட்டுமே நிர்வாகத்திற்கு, அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு பிரச்சனைகளை சந்திக்காமல் நழுவிப்போவார்கள். ஆனால் நிஜமான எழுத்தாளன், அதிகாரத்திற்கு எதிரானவன். அடக்கு முறைகளுக்கு எதிரானவன் என்பதை பிரபஞ்சனுடைய நீரதன் புதல்வர்என்கிற கதை நிரூபிக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் மிசா காலத்தில் நடந்த நிகழ்வுகளை படம் பிடிக்கிறது கதை. அதிகார மையங்கள் எப்போதுமே சகிப்புத்தன்மையற்றதாகவே இருக்கிறது. முக்கல், முணகல், வேகமாக மூச்சு விடுவதைக்கூட அது அனுமதிப்பதில்லை. அதனால்தான் மிசா காலத்தில் எளிய மனிதர்கள்கூட தண்டனை பெறுகிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம், கொடூரமான காலத்தில் உயிருடன் இருந்ததுதான். இதைத்தான் நீரதன் புதல்வர்’- கதையின் வழியாக, பாலு, மூர்த்தி, நாராயணசாமி காவலர் ஆகிய பாத்திரங்களின் வழியே பிரபஞ்சன் நிகழ்த்திக்காட்ட விரும்புகிறார். வாழ்தலுக்கான நெருக்கடிகள் கூடும்போது சராசரி மனிதனாக சமூகத்தில் நடக்கிற அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கிற ஒரு மனிதனாக, வேடிக்கைப் பார்த்ததை உடனே மறந்துவிட்டு தன்னுடையக் காரியத்தில் மூழ்கிப்போகிற மனிதனாக எழுத்தாளன் இருப்பதில்லை என்பதைத்தான் நீரதன் புதல்வன்கதை வாசகனுக்கு சொல்கிற செய்தி. எழுத்து என்பது எழுதுதல் என்கிற செயல்பாடு அடிப்படையில் அதிகாரத்திற்கு எதிரானதுதான்.
பிரபஞ்சனுடைய நாவல்களில், சிறுகதைகளில் வரக்கூடிய மனிதர்கள் வாழ துடிப்பவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் மீது சிறுசிறு புகார்கள் உண்டு. குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் வாழ்வின் மீது ஆழ்ந்த வெறுப்போ கசப்போ கிடையாது. வாழ்வினூடாக, வாழ்வை எதிர்கொள்வதினூடாகத்தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறவர்கள். இந்த இடத்தில்தான் பிரபஞ்சன் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து சற்று வேறுபட்டவராக, மாறுபட்டவராக இருக்கிறார். எழுத்தாளன் வாழ்வின் மீது நம்பிக்கைக் கொள்வதற்கான காரணீகளை தேடி தருபவனாக இருக்க வேண்டும். அவநம்பிக்கைகளை அல்ல.
தமிழ்ச் சூழலில் சிறு பத்திரிகை, பதிப்பகம் என்பது அறிவு சார்ந்த, மொழி, கலாச்சார பண்பாடு சார்ந்த செயல்பாடு என்கிற நிலைமாறி அதிகாரத்தை நோக்கிய பயணமாக, அதிகார பீடமாவதற்கான செயல்பாடுகளாக, கார்பரேட் நிறுவனங்களாக மாறுவதற்கான காரியங்களாக இருக்கின்றன. ஜனநாயகம் வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், சிறிதும் ஜனநாயகத்தன்மையை மதிக்காதவர்களாக, அதிகார பீடங்களுக்கு எதிராக, கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக எழுத வந்தவர்கள், ஓங்கி குரல் கொடுத்தவர்களில் பலர் இன்று அதிகார பீடமாகவும், கார்பரேட் நிறுவனமாகவும் மாறிவிட்டார்கள். அதாவது புனிதர்களும் புழுகுக்குட்டையும். பிரபஞ்சன் இதுவரை சிறு பத்திரிகை எதையும் தொடங்கவில்லை. பதிப்பகம் எதையும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு செயல்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. ஆனால் தான் ஒரு எழுத்தாளன். எழுதுவது மட்டுமே தன்னுடைய வேலை என்று இன்றுவரை செயல்பட்டிருப்பது வியப்பானதுதான். தமிழ் சூழலில் ஒரு எழுத்தாளனாக மட்டுமே இயங்குவது என்பது எளியக் காரியமல்ல. கடந்த நாற்பதாண்டுகாலமாக தமிழ் இலக்கிய வரலாற்றோடு இணைந்தே வளர்ந்தவர், வாழ்ந்தவர் பிரபஞ்சன். எவ்வளவு புறக்கணிப்புகள், எவ்வளவு உதாசீனங்கள் நிகழ்ந்திருக்கும்? எல்லாவிதமான புறக்கணிப்புகளையும் மீறி இலக்கியம், பண்பாடு, அரசியல் பேச்சுகள் என்று பல துறைகளிலும் இன்றுவரை செயலூக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணம்-அவருடைய மூளை எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் செயல்படாதது மட்டுமல்ல, அவருடைய மூளை கோட்பாடுகளால் நிறைந்ததல்ல என்பதால்தான். பொய்மைகளையும், கீழ்மைகளையும், ஜோடனைகளையும் தவிர்த்த எழுத்து, வாழ்வை முன்னிறுத்திய எழுத்து பிரபஞ்சனுடையது. அரசாங்க அலுவல் எனப்பட்ட பொய், வஞ்சம், துரோகம் முதலான சகல கீழ்மைகளையும் கழுவிக் களைபவர் போல்என்று மானுடம் வெல்லும் நாவலில் வருகிறது. பொய், வஞ்சகம், கீழ்மை குணங்களுக்கு எதிரானவனே-எழுத்தாளன்-கலைஞன் என்பவன். பிரபஞ்சன் ஒரு கலைஞன் என்பதற்கு அவருடைய எழுத்துக்களே சாட்சி.
பிரபஞ்சனுடைய எழுத்துக்களை ஒரு சேர படிக்கும்போது தெரிவது-ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கை நெறி. பிரபஞ்சனுக்கு எழுதுவதும் படிப்பதும்தான் வாழ்க்கை நெறி. அவர் சமூகத்தில் சில விதைகளை தூவ முயல்கிறார். சொற்கள் என்ற விதைகளை. இந்த விதைகள்தான் பிரபஞ்சனுடைய எழுத்துக்கள். கட்டாந்தரையிலும் முளைக்கும் ஆற்றலுள்ள வீரிய விதைகள்.
உயிர்மை ஜனவரி 2019

1 கருத்து: