செவ்வாய், 15 ஜனவரி, 2019

என்னுடைய எல்லா எழுத்துகளையும் சமூகம்தான் எழுதியது!- இமையம் பேட்டி -

தி இந்து தமிழ் - ஜனவரி 09 2019 

தமிழ் நாவல் வரலாற்றில் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ ஒரு முக்கியமான திருப்புமுனை. வெளிவந்து 25 ஆண்டுகளாகும் நிலையிலும் தொடர்ந்து விவாதிக்கப்படுவது இமையத்தின் எழுத்து வலிமைக்கான சான்று. ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்களிலும் அறுபத்துச் சொச்சம் சிறுகதைகளிலும், சமூகத்தில் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் எளியவர்களை ரத்தமும் சதையுமாகப் படைப்பாக்கியவர். கனடா வாழ் தமிழர்கள் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல் விருது’ இந்த ஆண்டு இமையத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உங்களது வாசிப்பு முறை என்ன?
பேனா இல்லாமல் வாசிப்பதில்லை. வாசிக்கிற புத்தகத்தில் புதிய சொல்லோ, மனதுக்குப் பிடித்த வாக்கியமோ இருந்தால் உடனே அடிக்கோடிடுவது என்னுடைய இயல்பு. மீண்டும் அந்தப் புத்தகத்தை வாசிக்க விரும்பும்போது அடிக்கோடிட்ட சொற்களையும் வாக்கியங்களையும்தான் வாசிப்பேன். பேனா இல்லாமல் வாசிப்பது என்பது எனக்குக் குழம்பு இல்லாமல் வெறும் சோற்றைத் தின்பதுபோல இருக்கும். புதிய புதிய சொற்களைத் தேடி, வாக்கியங்களைத் தேடித்தான் வாசிக்கிறேன். சொற்களின் வழியாக  விரியும் நிலவியலையும், நிலவியல் பண்பாட்டையும் அறிவதற்காகவும்.
வாசிப்பு உங்களை எப்படி மேம்படுத்தியிருக்கிறது?
நான் இதுவரை வாசித்த புத்தகங்கள் வழியாகப் பெற்றது என்பது “நீ ஒண்ணுமில்ல”, “நீ வெறும் சும்மா” என்பதுதான். கூட்டத்திலிருந்து விலக்கி, ‘நான், நான்’ என்று அலட்டிக்கொள்வதிலிருந்து விலக்கியிருக்கிறது.  கோபத்தைத் தணித்திருக்கிறது. தானாக அழவும் சிரிக்கவும் வைத்திருக்கிறது. அன்பாக இரு, அன்பாக இருக்கப் பழகு என்று கற்றுத்தந்திருக்கிறது.
என்னென்ன மாதிரியான புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?
இந்திய மொழிகளில் தமிழுக்கு அடுத்ததாக அதிகம் வாசித்தது மலையாள இலக்கியம்தான். ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்களை மொழிபெயர்ப்பின் வழியாகப் படித்திருக்கிறேன். நாவல், சிறுகதைகளை விரும்பிப் படிப்பேன். கவிதைகளை ரசித்துப் படிப்பேன். கட்டுரைகளைத் தேவைப்பட்டால் மட்டும்தான் படிப்பேன். பிரெஞ்சு மொழி இலக்கியங்கள் மீது எனக்குக் கூடுதல் விருப்பம் உண்டு. அது அதிகம் மௌனத்தைப் பற்றி பேசுவதால்.
நீங்கள் மண் சார்ந்த கதைகளை எழுதுகிறீர்கள். நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகின்றன?
நான் 50 வருடங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதாலேயே எனக்குத் தமிழ் மொழி தெரியும் என்று அர்த்தமில்லை. மொழியின் வழியாக அனுபவத்தைச் சொல்வது என்று தீர்மானித்துவிட்டால் அதற்குரிய வழி மொழியைக் கற்பதுதான். நீங்கள் எந்த அளவுக்குத் தரமான நூல்களை வாசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு மொழி சார்ந்த அறிவு துலங்கும். வாசிக்காமல் எழுத முடியாது. வாசிக்க வாசிக்க மொழியின் வாசல்கள் திறந்துகொண்டே இருக்கும். மொழியில் நீங்கள் எவ்வளவு பயணப்படுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய மொழி கூர்மைபெறும். மழுங்கிப்போன சொற்களால் எழுதப்படுவது இலக்கியமல்ல.
உங்கள் வாசகர்கள் யார்? உங்கள் வாசகரோடு உங்களுக்கு ஏற்பட்ட தனித்துவமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்...
ஆண், பெண், வயதானவர்கள், இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பு வாசகர்கள் இருக்கிறார்கள்.  வயதானவர்கள் கண்ணீரோடு என்னுடன் உரையாடுகிறார்கள். அந்தக் கண்ணீர் மீண்டும் மீண்டும் என்னை எழுதத் தூண்டுகிறது. புதுமனைப் புகுவிழா தாம்பூலமாக, ‘பெத்தவன்’ புத்தகத்தின் 500 பிரதிகளைக் கருப்பு கருணா வாங்கிக்கொடுத்தது, சினிமா துறையில் துணை இயக்குநர் - திருவாரூரைச் சேர்ந்த தம்பி ஒருவர் தன்னுடைய திருமண நிகழ்வில் தாம்பூலப்பையில் ‘பெத்தவன்’ புத்தகத்தை வைத்துக்கொடுத்தது, சென்னையைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் 2019 புத்தாண்டு தினத்தன்று தன் நண்பர்களுக்கு ‘எங் கதெ’ 50 பிரதிகளை வாங்கிக்கொடுத்தது என்று நூறு நூறு விஷயங்களைச் சொல்ல முடியும்.
இன்றைக்குத் தமிழ் இலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது?
எல்லா காலத்திலும் நல்ல இலக்கியங்களும் இருந்திருக்கின்றன. போலி இலக்கியங்களும் இருந்திருக்கின்றன. இப்போது நல்ல இலக்கியங்களும் இருக்கின்றன. போலி இலக்கியங்களும் இருக்கின்றன. ஆனால், போலி இலக்கியங்களின் எண்ணிக்கை முன்பு குறைவு. இப்போது அதிகம்.
‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ‘செல்லாத பணம்’ வரை எல்லாமே சோகமாகவும் கண்ணீராகவும் இருக்கிறது. உங்களுடைய எழுத்துகளில் கொண்டாட்டத்தைக் காண முடிவதில்லையே?
துயரமாகவும் கண்ணீராகவும் எழுத வேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆரோக்கியத்தின், தனபாக்கியத்தின், செடலின், கமலாவின், ரேவதியின் வாழ்க்கை அப்படி இருக்கிறது. இந்தக் கதாபாத்திரங்களின் கதையைப் படிக்கும்போதே கண்ணீராகவும் துயரமாகவும் இருக்கிறது என்று நினைக்கிறோம். இந்தக் கதாபாத்திரங்களின் நிஜ வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வாழ்க்கை என்பது பலருக்கும் கண்ணீராகவும் பெரும் துயரமாகவும்தான் இருக்கிறது. அந்தத் துயரத்தில், கண்ணீரில் நான் ஒரு கைப்பிடி அளவுதான் அள்ளியிருக்கிறேன்.
உங்களுடைய மற்ற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது ‘எங் கதெ’. எதனால் இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
பழைய இலக்கிய வடிவங்கள்தான் இதற்கு அடிப்படையாக இருந்தது. சின்னச் சின்ன வாக்கியங்களின் வழியே வேறுபட்ட நிலக்காட்சிகளை, வேறுபட்ட வாழ்க்கை முறையை, வேறுபட்ட மனஓட்டங்களைச் சொன்னது நம்முடைய மரபு. அந்த மரபையும் நவீனத்துவத்தையும் இணைத்துப்பார்க்க விரும்பினேன். மரபையும் நவீனத்துவத்தையும் இணைத்து எழுதுவதுதான் நவீன இலக்கியமாக இருக்க முடியும். முயற்சியில் வெற்றிபெற்றேனா, தோல்வி அடைந்தேனா தெரியாது. முயன்றுபார்த்தேன். அதுதான் முக்கியம்.
உங்களது நாவல்கள், சிறுகதைகளில் உரையாடல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
அப்படிச் சொல்ல முடியாது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் உரையாடலைப் புதுவிதமாக அமைத்திருந்தேன். அதற்கு முன் தமிழில் அவ்விதமான உரையாடல் முறையை யாருமே கையாண்டதில்லை. ‘எங் கதெ’ நாவல் முழுவதும் பேச்சுவழக்கிலேயே அமைந்திருப்பதால் அப்படித் தோன்றலாம். சில பாத்திரங்கள் அதிகமாகப் பேசும் இயல்பில் இருக்கும். சில பாத்திரங்கள் அதிகம் பேசாது. நான் என்னுடைய எழுத்தில் கதாபாத்திரங்களின் இயல்புக்கு மீறிச் செயல்படுவதில்லை. என்னுடைய விருப்பத்துக்காகக் கூடுதலாக ஒரு வார்த்தையைகூடச் சேர்ப்பதில்லை.
எது, ‘பெத்தவன்’ கதையை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது?
பெத்தவன் கதையை மட்டுமல்ல. என்னுடைய ஐந்து நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும் சமூகம்தான் எழுதியது. நான் எழுதிய எல்லா எழுத்துகளுமே சமூகம் எழுதிய எழுத்துகள்தான்.
தமிழில் எழுதப்படும் முன்னுரைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
தாகூரின் கவிதை குறித்து கு.ப.ரா. எழுதிய முன்னுரையும், பாரதியின் கண்ணன் பாட்டுக்கு வ.வே.சு ஐயர் எழுதிய முன்னுரையும், புதுமைப்பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதிய முன்னுரையும் முக்கியமானவை. சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரைகள் ஒரு வாசகனின் மன நிலையிலிருந்தும், ஒரு எழுத்தாளனின், ஒரு விமர்சகனின் மனநிலையிலிருந்தும் எழுதப்பட்டிருக்கும். ஜெயகாந்தனின் முன்னுரைகள் ஒரு பீடாதிபதி கூறிய அருள் வாக்குகளாக மட்டுமே இருக்கும். ஆனால், தற்காலத்தில் தமிழ் நூல்களுக்கு எழுதப்படும் முன்னுரைகள் ‘கொஞ்சம் தூக்கிவிடுவோம்’, ‘ஏதோ நம்மால முடிஞ்சதச் செய்வோம்’ என்று சொல்லித்தான் எழுதுகிறார்கள். பிற்பாடு பயன்படுவார்கள் என்பதற்காகவும், குஷிப்படுத்துவதற்காகவும் எழுதப்படும் முன்னுரைகளில் எனக்கு மதிப்பில்லை. தமிழ் எழுத்தாளர்கள் விரும்புவதும், வேண்டுவதும் விமர்சனங்களை அல்ல. வாழ்த்துரைகளை மட்டுமே.
திராவிட இயக்க அடையாளத்தோடு இலக்கியவுலகில் வலம்வருகிறீர்கள். இந்த அடையாளம் உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எத்தகைய வளம்சேர்த்திருக்கிறது?
இந்த அடையாளம் வளம்சேர்ப்பது சார்ந்தது அல்ல. நன்றி உணர்ச்சி சார்ந்தது. இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூக வாழ்க்கையில் நான் படிக்க வேண்டும், சிந்திக்க, சுயமரியாதையோடு வாழ வேண்டும், காலில் செருப்பு போட, தோளில் துண்டு போட, மீசை கிருதா வைத்துக்கொள்ள வேண்டும், பொதுப் பாதையில் நடக்க, கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட, அதற்காகப் போராடிய இயக்கங்கள் திராவிட இயக்கங்களே. அதனால்தான் அந்த அடையாளத்தைப் பேணுகிறேன். என்னை அவமானப்படுத்த, இழிவுபடுத்த புராணங்களை, இதிகாசங்களை, கோவில்களை, கடவுள்களை, மரபுகளை, நம்பிக்கைகளைக் காரணம் காட்டுகிறவர்களின் அடையாளத்துடன் நான் இருக்க முடியுமா? திராவிட இயக்கங்களுக்கும், மார்க்சிய இயக்கங்களுக்கும் நான் நன்றி உடையவனாக இருக்க விரும்புகிறேன். நன்றியைச் சொல்வதற்கு மறைப்பு அவசியமில்லை.
இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
யாரும் எழுதாததை எழுதுங்கள். பிறர் சாயலின்றி எழுதுங்கள். எழுதியதைத் திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுங்கள். எழுதியதை அவசரப்பட்டு அச்சிடாதீர்கள். விளக்கின் ஒளியை இருட்டு தின்றதாக வரலாறு இல்லை. திறமைகள் ஒருபோதும் அழியாது. மறையாது!
- த.ராஜன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக