ஞாயிறு, 6 நவம்பர், 2016

‘வாழ்வதின் பொருட்டு’

வாழ்வதின் பொருட்டு
                (உலகமயமாக்கலும் புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்களும்)
                               எழுத்தாளர் - இமையம்

‘                                                        ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி
                                                        வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
                                                        பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’            
                        நற்றிணை – 153. தனிமகனார்.
                                               
“புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர் வயது முப்பதிருக்கும். இலங்கையிலும் பாங்காக்கிலும் சிறையில் இருந்தவர். ரஷ்யாவின் பனிப்புதைவில் சிக்கி உயிர் பிழைத்தவர். விசாகாலம் முடிந்து ஒரு நாள் கூடுதலாக தங்கியதற்காக கழுத்திலே மரப்பூட்டு போடப்பட்ட நிலையில் ஒன்பது பிரம்படிகளை சிங்கப்பூரில் வாங்கியவர். கள்ளப் பாஸ்போர்ட் மூலம் அமெரிக்கா வந்ததற்காக கழுத்திலும், கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எட்டு ராத்தல் இரும்புக் குண்டை தூக்கிக்கொண்டு சிறைச்சாலைக்கு நடந்தே சென்றவர். மூன்றாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு கனடா வந்தவர். கனடாவில் பதினேழு முறை வேலைக்காக நேர்காணலுக்கு சென்றவர். பதினெட்டாவது முறை நேர்காணலுக்குச் சென்ற போது  அவர்  அளித்த பதில் இது “ என்னிடம் நிறைய திறமை உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இதுவரைக்கும் நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அது என் திறமையால் தான்”. 1*

பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம் பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய, ஐக்கிய அமெரிக்கா, மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியும், உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கமும், மனித உழைப்பு மலிவாகக்கிடைக்கிற நாடுகளிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்வது என்ற முதலாளித்துவத்தின் நோக்கமும்தான் உலகமயமாக்கலை சாத்தியப்படுத்திற்று. முதலாளித்துவத்தின் தேவையைப் பூர்த்தி செய்வது என்ற நோக்கம் மட்டுமல்ல, முதலாளித்துவம் ஏற்படுத்தி தந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்ற நோக்கமும் உலகமயமாக்கலை எளிதாக்கியது. புலம்பெயர்தலை ஊக்குவித்தது.     
இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா டென்மார்க், நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவிடன், மலேசியா, சிங்கப்பூர் என்று புலம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றவர்களுக்குச்  சென்ற இடத்தில் அடுத்தவேளை உணவுக்கு வழியில்லை, தங்குவதற்கு தற்காலிகமான இடம்கூட இல்லை. அகதியாக ஏற்கக்கோரி விண்ணப்பித்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் பத்திரிக்கை தொடங்கி இருக்கிறார்கள், கதை, கவிதை, கட்டுரை, நாவல் எழுதியிருக்கிறார்கள், மண்ணை இழந்த மனிதர்களையும், மனிதர்களை இழந்த மண்ணையும் எழுதியிருக்கிறார்கள். அகதி வாழ்க்கை வாழும் நாட்டைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். புலம் பெயர்ந்தவர்கள் மொழி அறியா தேசத்தில் வாழ நேர்ந்ததின் அவலத்தை, பிறந்த இடத்தைவிட்டு வெளியேற நேர்ந்த அவலத்தை, பட்ட துயரங்களை, படும் துயரங்களை, உறவின் இழப்புகளை, வலிகளை, காயங்களை, கண்ணீரை, கடந்த காலத்தின் துயரங்களை, கடந்த காலத்தின் நினைவுகளை மட்டுமே பேசவில்லை. தனிப்பட்ட இழப்புகளை, துன்பங்களை மட்டுமே பதிவு செய்யவில்லை தன்வரலாற்றுக் கதை எழுதுவது மாதிரி வாக்கு மூலம் அளித்தல், சாட்சியம் அளித்தல் என்பதாக இல்லை. புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நடத்தும் போராட்டங்களை, கண்காணிப்புக்குள்ளான, சுதந்திரமற்ற வாழ்வை வாழ நேர்ந்த அவலத்தை மட்டுமே பேசவில்லை. புலம்பெயர்ந்தோர் நாவல்கள் என்றாலே புலம்பல், சோகம், பிறந்த மண் பற்றிய ஏக்கம், அகதி வாழ்வின் அவலம் மட்டுமே இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தை பொய்யென நிரூபிக்கிறது புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்கள்.

அண்மைக்காலமாக தமிழ் மொழியில் எழுதப்படும் நாவல்கள் பழைய காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் மாதிரி தனிமனிதனுடைய கதையை, வாழ்க்கையை, ஒரு குடும்பத்தினுடைய, ஒரு வட்டாரத்தினுடைய கதையை, வாழ்க்கையை எழுதவில்லை. மாறாக பல தேசத்து மனிதர்களுடைய கதையை, வாழ்க்கையை, பல தேசத்து சமுகவியலை, அரசியலை, நிலவியலை, பண்பாட்டுவியலை எழுதியிருக்கிறது. இது புலம்பெயர்ந்தவர்களால் ஏற்பட்ட மாற்றம். இந்த மாற்றத்தை அற்புதமாக நிகழ்த்திக்காட்டிய நாவல்கள் என்று சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’, பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘அனந்தியின் டயறி’, தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை, ஷோபா சக்தி எழுதிய BOX கதைப்புத்தகம் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’, பொ.கருணாகரமூர்த்தியின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’, அ.முத்துலிங்கத்தின் ’உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ எம்.குமாரன் எழுதிய ‘செம்மண்ணும் நீலமலர்களும்’, சி.முத்துசாமி எழுதிய ‘மண் புழுக்கள்’ போன்ற நாவல்களை சொல்லலாம். இந்த நாவல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டதால், இவற்றை தமிழ் நாவல்கள் என்று சொல்ல முடியாது. உலக வாழ்க்கையை, உலகமயமாக்கல் வாழ்க்கையை எழுதியதால் இந்த நாவல்களை உலக நாவல்கள், உலகமயமாக்கல் நாவல்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவை உலகமயமாக்கலின் விளைப் பொருள்கள். ஒவ்வொரு நாவலும் தனித்துவமான முறையில் உலகமயமாக்கல் வாழ்க்கைச் சூழலை எவ்விதமாக சித்தரித்திருக்கிறது?
சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’(2005) இது ஒரு விசரனைப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய நாவல்என்று முடிகிறது. இது ஒரு விசரனைப் பற்றி மற்றொரு விசரன் எழுதிய நாவல் அல்ல. உலகமயமாக்கல் சூழலை, உலகமயமாக்கல் சூழலில் வாழும் மனிதர்களை, அவர்கள் வாழும் வாழ்க்கையை முழுமையாக வெளிப்படுத்திய நாவல் லண்டன்காரர். இந்த நாவலின் கதை இலங்கையிலோ, தமிழ் நாட்டிலோ நடக்கவில்லை. லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டன் காப்பர் வீதியில் நடக்கிறது. நாவலில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரோன், அமைச்சர் தெரசாமே, மேயர்  ஜோர்ஜ் ஜோன்சன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். அதோடு இங்கிலாந்தின் தொழிலாளர் நலக்கட்சியின் தலைவர் டேவிட்லாமி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற பத்திரிக்கையான இன்டிபெண்டண்ட், அதோடு காட்சி ஊடகங்கள் பலவும் நாவலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கரீபீயன் தீவை பூர்வீகமாகக் கொண்ட சாந்தெலா, போர்த்துக்கீசிய நாட்டை சேர்ந்த டியாகோ, தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த ரமேசு, இலங்கையை சேர்ந்த சரவணபவனாரின் மகன் சுகன், பாஸ்கர், ஐயர் என்று பலரும் வருகிறார்கள். அதோடு பலநாட்டு மனிதர்கள், அகதிகளும் நாவலில் வருகின்றனர். நாவல் விவரிக்கிற வாழ்க்கை முறையும், சூழலும், மனிதர்களின் செயல்பாடுகளும் மனோபாவங்களும் உலகமயமாக்கல் வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்கிறது.
        பாஸ்கரனின் சிக்கன் கடையில் வேலை செய்யும் ஐயருக்கும், சிக்கன் கடையில் வேலைக்கு சேரும் சாந்தெலாவுக்கும் உருவாகும் நட்பு, காதல் ஒருபுறம், தன்னுடைய முதல் மனைவியின் வீட்டில் திருடப்போய் மாட்டிக்கொண்டு போலீஸ், வழக்கு, கோர்ட் என்று அலையும் ஐயர், அகதி கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அலையும் ரமேசு, டியாகோ, இவர்கள் இருவருக்குமான நட்பு. சிக்கன் கடையிலிருந்து தந்திரமாக வெளியேற்றப்படும் டியாகோ, ஏற்படுத்தும் கலவரம் நிறவெறிக் கலவரமாக, நாட்டையே உலுக்குகிற கலவரமாக எப்படி மாறியது என்பதையும் நாவல் பேசுகிறது. கலவரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன, மிகையாகக் காட்சிப்படுத்துகின்றன என்பதையும், பொதுசனம் அடுத்தடுத்த பரபரப்பு செய்திகளுக்காக எப்படி காத்திருக்கிறார்கள் என்பதையும் நாவல் சொல்கிறது. இன்றைய வாழ்க்கை என்பது ஊடகங்கள் உருவாக்குகிற வாழ்க்கைதான். ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வது, பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, அதற்கான சட்ட அங்கீகாரத்தை கோருவது- எப்படி நாட்டையே உலுக்கும் செய்தியாக மாறுகிறது. இந்த விசயத்தில் பிரதமர், அமைச்சர், மேயர், ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் நாவல் பேசுகிறது. அகதிகளாக இருப்பவர்கள் குடியுரிமை பெறுவதற்காக செய்யும் நாடகங்கள், திருமணங்கள் பற்றியும் நாவல் பேசுகிறது. ஐயர் சாந்தெலாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவது, அது முடியாத பட்சத்தில் ரமேசுடன் இணைந்து இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்று அரசிடம் அறிவித்து அதன் மூலம் குடியுரிமை பெறுவது என்ற செயல்திட்டம் - என்பதெல்லாம் நாவலில் இடம்பெற்றுள்ள முக்கியமான விசயங்கள். பலநாட்டு அகதிகள், அவர்களுடைய அவல நிலையையும் நாவல் பேசுகிறது. நிறவெறி சார்ந்த மனோபாவம் எப்படி இருக்கிறது, கறுப்பர்களை ஒடுக்குவதில் அரசும், ஊடகங்களும் எப்படி தீவிரம் காட்டுகின்றன என்பதை நாவலாசிரியர் நாசூக்காக சொல்கிறார். அதே மாதிரி ஓரினச் சேர்க்கையாளர்களின் கோரிக்கையால் நாடு ஏன் கொந்தளித்துப் போகிறது என்பதும் முக்கியமானது.
        லண்டன்காரர் - இன்றைய உலகமயமாக்கல் சூழலை, இங்கிலாந்து நாட்டு அரசியல் சூழலை, சமூகச்சூழலை, வாழ்க்கைச் சூழலை மட்டும் பேசவில்லை. அகதிகளின் வாழ்வைச் சொல்வதின் மூலம் உலக அரசியல் சூழலையும் பேசுகிறது. சாந்தெலா சோசலிஸ்ட் கட்சியில் சேர்வதுகூட உலகமயமாக்கலின் ஒரு முகம்தான்.
        சேனன் எழுதிய ‘லண்டன்காரர்நாவல் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் சமூகத்தின் வாழ்க்கையை எழுதவில்லை. இங்கிலாந்து சமூக வாழ்க்கையை எழுதுவதின் வழியே உலக சமூக வாழ்க்கையை, உலகமயமாக்கல் வாழ்க்கையை பண்பாட்டை, கலாச்சாரத்தை எழுதியிருக்கிறது. நாவலில் ஏக்கம், தன்னிரக்கம், கவலை, கண்ணீர் எதுவுமே இல்லை. கிண்டல் இருக்கிறது. விமர்சனம் இருக்கிறது. இதுதான் நாவலின் பலம்.
லண்டன்காரர் நாவலை போலவே உலகமயமாக்கல் சூழலை முழுமையாக வெளிப்படுத்திய நாவல் பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘அனந்தியின் டயறி’(2014). ஒரு இளம்பெண்ணின் ஓராண்டு கால வாழ்வை நாட்குறிப்பு வடிவில் பேசுகிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் உணவகத்தில் வேலை செய்யக்கூடிய காளிதாசின் மகள் அனந்தி. அவளுடைய ஒரு வருட வாழ்க்கையில் என்ன நடக்கிறது, ஜெர்மனியில் வாழக்கூடிய, கல்லூரியில் படிக்கக்கூடிய இளம்பெண்ணின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் நாவலின் மையம்.
        அனந்தி புத்திசாலி பெண். தமிழ், ஆங்கில, ரஷியா, பிரன்ஞ் என்று உலக நாடுகளின் இலக்கியங்களை எல்லாம் படிக்கக்கூடியவள். தன்னுடைய தந்தையுடன் இலக்கியம் குறித்து விவாதிப்பவள். வீட்டில் இருக்கிற தமிழ்பண்பாட்டையும், பள்ளியில், பொது வெளியில் இருக்கிற ஜெர்மன், பன்னாட்டு கலாச்சாரம் குறித்தும் யோசிப்பவள். விமர்சனம் செய்பவள். எந்த கலாச்சாரத்தின் மீதும் காழ்ப்புணர்வும் கொள்ளாதவள். நல்ல தரமான சினிமா பார்ப்பவள். அது குறித்து யோசிப்பவள். தமிழ் சினிமா, ஊடகங்கள் எப்படி இருக்கின்றன. அதுகாட்டுகிற உலகம் என்ன, ஜெர்மனியில் வாழ்கிற தமிழ் பெண்கள் ஏன் எப்போதும் சீரியல்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள், விதவிதமாக புடவைகட்டுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று தனக்குள்ளாகவே கேள்வி கேட்டு கிண்டலடிப்பவள். அதே நேரத்தில் தெருவில் சிறு குப்பையையும் போட விரும்பாத ஜெர்மானியர்கள் குழந்தைகளை எப்படி துணிந்து தெருவில் விட்டுவிட்டுப் போகிறார்கள் என்று சிந்திப்பவள். அனந்தியினுடைய சிந்தனைகள், யோசனைகள், கேள்விகள், குழப்பங்கள் என்ன என்பதுதான் ‘அனந்தியின் டயறி’.
        ஒவ்வொரு நாளும் வீட்டில், தெருவில், பள்ளியில், பொது இடங்களில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை துல்லியமாகவும், கச்சிதமாகவும் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதுகிறாள் அனந்தி. தன்னுடைய நண்பர்களைப் பற்றி, ஆசிரியர்களைப் பற்றி, வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் பற்றி எழுதுகிறாள். முகநூல் பதிவுகள், ஈமெயில்கள், வெப்சைட்டுகளில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதையெல்லாம் பார்க்கிறாள், படிக்கிறாள். அகதிகள் குடியுரிமை பெறுவதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள். ஜெர்மன்காரர்களுடைய குடும்ப அமைப்புகள், மனமுறிவுகள், 17 வயதிலேயே ஆசிரியருடன் வாழப்போகும் மாணவி, 16 வயதிலேயே கர்ப்பமாகும் பள்ளி மாணவி, கால்பந்தாட்ட மைதானத்தில் மேற்சட்டையை கழற்றிவீசியெறியும் இளம்பெண்கள், ‘இது என் வாழ்க்கை, நான்தான் முடிவு எடுப்பேன்என்று முடிவெடுக்கும் குழந்தைகளும், அதை ஆமோதிக்கும் பெற்றோர்களும், பள்ளிக்கூடத்திலேயே பாலியல் கல்வியை கற்றுத்தரும் பாடத்திட்டமுறை என்று ஜெர்மன் கலாச்சார வாழ்வை தன் நாட்குறிப்பின் வழியே முழுமையாகக்கிக்காட்டுகிறாள் அனந்தி.
        ஜெர்மனியில் வாழக்கூடிய பலநாட்டவர்கள், அகதிகள், தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள், எந்த நாட்டுக்குச் சென்றாலும் சீட்டு நடத்தி ஏமாற்றுவதில் தமிழர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பதையும் அனந்தி சொல்கிறாள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தொழில் நுட்பத்தோடு எவ்வளவு அணுக்கமாக இருக்கிறார்கள், எவ்வளவு விரிவாக சிந்திக்கிறார்கள் என்பதோடு, தன்னளவில் தான் சார்ந்த முடிவுகளை எப்படி எடுக்கிறார்கள், அவர்களுடைய மனப்போக்கு, சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ‘அனந்தியின் டயறிநாவல் உதாரணமாக இருக்கிறது.
        ‘அனந்தியின் டயறிஇன்றைய உலகமயமாக்கல் சூழலில் வாழக்கூடிய வளரக்கூடிய குழந்தைகளின் மனநிலை என்ன, அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும், பன்னாட்டுக் கலாச்சார சூழலில் வாழ நேரிடும்போது ஏற்படும் அகபுற நெருக்கடிகள் என்ன என்பதையும், பன்னாட்டு பெரும் சமூகச் சூழலில் வாழநேரும்போது அவரவர்களுக்கான அடையாளத்தை பேண முடியுமா, அது எந்த அளவுக்கு சாத்தியம்? உலகமயமாக்கலை முழுமையாக வெளிப்படுத்திய தமிழ் நாவல் அனந்தியின் டயறி. தமிழில் நவீன நாவலாசிரியர்கள் என்று சொல்கிறவர்கள், நாங்கள்தான் நவீன நாவல்களை எழுதினோம் என்று சொல்கிறவர்களும் படிக்கவேண்டிய நாவல்.
        நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’(2015) நாவல் நான்காண்டுகால (2009-2013) வாழ்வை பேசுகிறது. பாரிஸின் ஸ்ட்ராஸ்பூர், கொல்மார், செக்குடியரசின் பிராஹா, புதுச்சேரி, ரிஷிகேஷ், இலங்கையின் கொழும்பு, திரிகோணமலை, பம்பைமடு என்று பல நாடுகளில் கதை நடக்கிறது. கதை பல நாடுகளில் நடப்பது மாதிரியே நாவலிலும் பல தேசத்து மனிதர்கள் பாத்திரங்களாக இருக்கிறார்கள். புதுச்சேரி பாலன், செக்குடியரசின் அத்ரியானா, பிரான்சின் எலிசபெத் முல்லர், இலங்கையை சேர்ந்த நித்திலா, வாகீசன், மாத்யூஸ், பாரதி, தமிழ்நாட்டை சேர்ந்த சாமி, ரிஷிகேஷில் ஆசிரமம் அமைத்த ஐரோப்பியர் போன்றவர்கள் முக்கியமான பாத்திரங்களாக இருப்பது மாதிரியே நாவலில் பல தேசத்து மொழியும் இடம் பெற்றுள்ளது. பிரன்ஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, தமிழ், சீனம்.
        பல தேசங்கள், பல தேசங்களின் மனிதர்கள், பல தேசங்களின் மொழிகள் கலந்த ஒரு நாவலை எழுத முடியுமா? முடியும் என்றுதான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டிநாவல் சொல்கிறது. உலகமயமாக்கல் ஏற்படுத்திய வாய்ப்பு இது. இன்றைய நவீனமயமான உலகமயமாக்கல் வாழ்க்கை முறையில் இதுபோன்ற நாவல்கள் தான் உருவாக முடியும். கதை நடக்கும் இடம், நாடு, நாள், ஆண்டு, மாதம் எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் சூழலை சரியாக வெளிப்படுத்திய நாவல்களில் ஒன்று ‘காஃப்காவின் நாய்க்குட்டி. ஒரே காலத்தில், மூன்றுவிதமான வாழ்க்கைமுறையைக் கொண்ட மூன்றுவிதமான மனிதர்களின் கதையை, நாவலுக்குள் மூன்று விதமாக அமைத்திருப்பது புதுமை.
        விடுதலைப்புலிகளின் இயக்கத்திலிருந்த, முள்ளிவாய்க்கால் சண்டை முடிந்த பிறகு ராணுவத்திடம் சரணடைந்து பம்பை மடு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நித்திலா பிரான்சிலிருக்கும் தன்னுடைய அக்காவிடம் இந்தியா, நேபாளம், துருக்கி, பிரஸ்ஸல்ஸ் வழியாக கள்ளத்தனமாக வந்துசேர்வது, தன்னுடைய மனைவிக்கு பத்தாண்டுகளாக குழந்தை இல்லை என்று தன்னுடைய மைத்துனி நித்திலாவை இரண்டாம் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் மத்யூஸின் துன்புறுத்தலால் வாகீசனிடம் ஓடும் நித்திலா, கள்ள பாஸ்போர்ட்டில் பிரான்சுக்கு வந்ததாக அவளை கைது செய்து சிறையிலடைக்கும் போலீஸ், வழக்கு, கோர்ட் என்று அலைந்து விடுதலையாகும் நித்திலாவின் கதை- நாவலில் ஒருபகுதியாக இருக்கிறது.
        புதுச்சேரியை சேர்ந்த பாலன் என்ற தமிழ் எழுத்தாளன், செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த அத்ரியானாவை காதலித்து, குடியுரிமைக்காக கல்யாணம் செய்துகொள்வது, கணவன் மனைவிக்குமான சண்டை, சந்தேகம், அத்ரியானா நாயாக உருவம் மாறி பாலனையும் மற்றவர்களையும் துன்புறுத்துவது, ஒரு ஆணுடன் மனைவியாக இருப்பதைவிட நாயாக இருப்பதுமேல் என்று வாதிடும் அத்ரியானா, கடைசியில் பாலனையும் நாயாக உருமாற்றம் செய்வது - நாவலில் மற்றொரு கதை.
        தற்கொலை செய்துகொள்ள துணிவின்றி துறவறம் பூண்ட சாமி, இந்திய தத்துவத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு, இந்தியாவெங்கும் அலைந்து திரியும் ஐரோப்பியர், சாமிக்கும் ஐரோப்பியருக்குமான நட்பு, ஐரோப்பியர் ரிஷிகேஷில் தொடங்கி நடத்தும் ஆசிரமம், அதனுடைய நடைமுறைகள், ‘தேடுவதும் நான், தேடப்படுவதும் நான்என்றும், ‘தன்னை தானறிந்தால் தனக்கொரு கேடில்லைஎன்றும், ‘உலகின் காட்சியெல்லாம் உணர்வின் வெளிப்பாடேஎன்று சொல்லும் சாமி, ஐரோப்பியர் கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பின்னர் என்னவானார் என்பதை சொல்லும் - மூன்றாவது கதை. மூன்று கதைகளையும் எவ்விதமான குழப்பமுமில்லாமல் எழுதியிருக்கிறார்.
        ஷோபா சக்தி எழுதிய BOX கதைப்புத்தகம் (2015) நாவலின் கதை இலங்கை, பிரான்ஸ், கிழக்கு ஜெர்மன், ஜெர்மனி, லண்டன் என்று பல நாடுகளில் நடக்கிறது. அதே மாதிரி பலதேசத்து மனிதர்களும் கதாபாத்திரங்களாக நாவலுக்குள் வருகிறார்கள். BOX கதைப்புத்தகம் - நாவல் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்று பிரான்ஸில் வாழும் ஒருவர் மூலம் சொல்லப்படுகிறது.
        BOX கதைப்புத்தகம் நாவல் பல அடுக்குகளாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு அடுக்கில் இருப்பது - இலங்கையில் நடந்த இனக்கலவரம், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள், சிங்கள அரசு, ராணுவத்தின் செயல்பாடுகள், போர் முடிவுக்கு வந்தபிறகு இலங்கையில் நடந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், விடுதலைப் புலிகளாக இருந்தவர்களின் இன்றைய நிலை, குறிப்பாக பெண் புலிகளின் நிலை, பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படும் பெண்புலிகள், பெண் புலிதான் வேண்டும் என்று விரும்பி கேட்கும் வாடிக்கையாளர்கள், சரணடைந்த புலிகளின் வாக்கு மூலங்கள், சரணடைந்த புலிகள் சுமக்கும் கோழை என்ற பட்டம் - அது தரும் வலி என்று நாவல் ஒரு பக்கம் பேசுகிறது. அதோடு பெரிய பள்ளன் குளத்தின் வரலாறும், சந்த ஸ்வஸ்திக தேரரின் வார்த்தைகள் புதைக்கப்பட்ட இடத்தின் கதையும் பேசப்படுகிறது.
        BOX கதைப்புத்தகத்தில் கிளைக்கிளையாக, கதைக்குள் கதையாக பல உபகதைகள், உட்கதைகள் இருக்கின்றது. அதில் ஒன்று – ‘அடங்காப்பற்று’ என்று அழைக்கப்பட்ட குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் கதையும், அமையான் கிராமம் அழிந்துபோன கதையும் நாவலுக்குள் இருக்கிறது. 1777 – காலப்பகுதியில் வன்னிப்பகுதி முழுவதும் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான பஞ்சமும், போரும் பற்றிய கதையும், 1813ல் அமையான் கிராமத்தை முற்றுகையிட்டு அழித்த வெள்ளைக்காரன் கேப்டன் டென்னிஸ் ஸ்டீவின் கதையும், ‘கற்சிலைமடு’ என்று அழைக்கப்படும் இடத்தின் கதையும், பிறர் அறியாமல் அமையான் கிராமத்தில் மாண்டுபோன பண்டார வன்னியனின் கதையும், வரலாறும் நாவலுக்குள் இருக்கிறது.
        1875ல் ஆரம்பிக்கப்பட்டு 48 ஆண்டுகளாக வேலை செய்து முடிக்கப்பட்ட பிரான்ஸின் புகழ்பெற்ற ‘வைட் சர்ச்’, 1871ல் பாரிஸில் தொழிலாளர்கள் நடத்திய ‘பாரிஸ் கம்யூன்’ புரட்சி, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், உலகப்போரின் போது பிரான்ஸ் சார்பாக சண்டையிடுவதற்காக மார்ஸெய் துறைமுகத்தில் கப்பல் கப்பலாக கொண்டுவந்து இறக்கப்பட்ட அரேபிய, ஆப்பிரிக்க, துனிஷிய, அல்ஜிரிய, மொரக்கோ, செனகல், மாலி, பாண்டிச்சேரி, வியாட்நாமியக் கூலிகள் பற்றிய கதையையும் நாவல் பேசுகிறது.
        ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கிய, பெருமளவில் இளைஞர்களை கவர்ந்திழுத்த ‘பெல்வில் டுகோபோர்ஸ்’ என்ற நிர்வாண சங்கத்தின் செயல்பாடுகள், அதனுடைய வளர்ச்சி, அதனுடைய நோக்கம், நிர்வாண சங்கத்தினரை நாடுகடத்திய அரசு, அதனால் ஏற்பட்ட விளைவு பற்றியும் நாவல் பேசுகிறது. அதோடு பாரிஸ் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரத்துறையைச் சேர்ந்த மாணவனும், நிர்வாண சங்கத்தின் தீவிர உறுப்பினருமான டைடஸ் லெமுவேல் முதல் உலகப்போரின் போது பிரான்ஸ் மக்களின் மனநிலையிலிருந்து எப்படி வேறுபட்டிருந்தான், போர்க்கப்பலில் திருட்டுத்தனமாக பயணித்து எப்படி அமெரிக்கா வந்து சேர்ந்தான், என்பதோடு நிர்வாண சங்கத்தின் தீவிரப் பற்றாளனாக இருந்த டைடஸ் லெமுவேல் - கப்பல் பயணத்திலேயே மெதடிஸ்ட் திருச்சபையின் கொள்கையால் எப்படி ஈர்க்கப்பட்டான், 1828ல் பம்பாய் வந்து, அங்கிருந்து இலங்கை முல்லைத்தீவிற்கு வந்து 18 மெதடிஸ்ட் திருச்சபைகளையும், சில ஆரம்பப்  பாடசாலைகளையும் எப்படி நிறுவினான் என்பதையும், இலங்கையில் அவனுடைய வாழ்க்கை எப்படி கழிந்தது, முடிந்தது என்பதையும் நாவல் சொல்கிறது.
        மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் பிரெஞ்சு காலனியான செனகல் தேசத்தின் கும்பன் டூம் என்ற பகுதியிலிருந்து மம்முடு பூபா என்ற இளைஞன், வட ஆப்பிரிக்காவிலிருந்து படகு வழியாக, ஸ்பெயின் வந்து அங்கிருந்து பிரான்ஸ் வருவது, 2011ல் மம்முடு பூபாவை பிரான்ஸ் போலீஸ் சுட்டுக்கொல்வது, அதனால் பாரிஸில் ஏற்பட்ட பெரும்கலவரத்தையும் நாவல் சொல்கிறது. அதோடு ஈபிள் டவருக்கு அருகில் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் ஆப்பிரிக்க, பாகிஸ்தானிய, வங்காளதேசத்து, கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த வியாபாரிகளை பாரிஸ் போலீஸ் எப்படி நடத்துகிறது என்ற கதையும் நாவலில் ஒரு பகுதியாக இருக்கிறது.
        சைபீரியாவிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் ஓங்கார் ஸிஸ்கோ-2010ல் எழுதிய Island Butterflies என்ற புத்தம் தரும் அதிர்ச்சி தகவல்கள், பாலியல் வணிகத்திற்காக உலகமெங்குமிருந்தும் கடத்தப்படும் சிறுமிகளின், பெண்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? சிறுமிகளை விரும்பித்தேடி வரும் வாடிக்கையாளர்களின் விசித்திரமான விருப்பங்கள் என்ன? பாலியல் வணிகத்திற்காக தாய்லாந்து, கம்போடியா, வியாட்நாம், பிலிப்பைன்ஸ், கியூபா, துருக்கி, மொராக்கோவை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல, இலங்கைத் தீவை சேர்ந்த சிறுமிகளும், பெண்களும் எப்படி ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதும், இதற்கான உலகளாவிய ஒருங்கிணைவு எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதும் நாவலில் சொல்லப்படுகிறது.
        BOX கதைப்புத்தகம் ஒரு நாட்டுகதையா? கதையில் ஒரு நாட்டு மனிதர்கள் மட்டுமா வருகிறார்கள். ஒரு நாட்டு அகதிகள் பற்றி மட்டுமா நாவல் பேசுகிறது? ஒரு நாட்டு அரசியலை மட்டுமா பேசுகிறது. கதையை படிக்க ஆரம்பித்தவுடனேயே தெரிந்துவிடும் இது உலகநாவல், உலகமயமாக்கல் நாவல் என்பது.
உலகமயமாக்கலை முழுமையாக வெளிப்படுத்திய மற்றுமொரு நாவல். தேவகாந்தனுடைய கனவுச்சிறை (2014), இலங்கையிலுள்ள நயினாத்தீவு, சென்னை அண்ணாநகர், அயனாவரம், போரூர், ஸ்பெனின் பார்சிலோனா, லண்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என்று பல நாடுகளில் நடக்கிறது. இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரி, ராஜலட்சுமி, ராஜேந்திரன், சுகன், ஆனந்தன், மாணிக்கவாசகம், பிரபு, ஸ்பெயினை சேர்ந்த ஆனந்தனின் மனைவி, ஆப்பிரிக்க இளைஞர்கள், ஸ்பானிய குடும்பங்கள், ஸ்பானிய கறுப்பின அரேபிய விலைமாதுகள், உணவகம் வைத்திருக்கும் சீனர்கள், பம்பாய் ஏஜெண்டுகள் என்று பலதேசத்து மனிதர்கள் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ‘உலகத் தமிழர் பேரவைகனடா, பிரான்சு, ஐரோப்பா என்று விரிவடைகிறது. பேரவையின் வளர்ச்சிக்காக நாடுநாடாக பல தமிழர்கள் பயணிக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து கனவுச்சிறையை உலகமயமாக்கல் நாவலாக்குகிறது.
        இலங்கையிலுள்ள நயினாத் தீவு என்பது வெறும் மூன்று கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது. இந்தச் சிறிய தீவில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வில் என்ன நடந்தது, குடும்பம் குடும்பமாய் ஏன் தீவைவிட்டு வெளியேறினார்கள்? அதற்கான அரசியல், பொருளாதார காரணங்கள் என்ன, நயினாத் தீவைவிட்டு வெளியேறியவர்கள் உலகின் எந்த திசைகளுக்கெல்லாம் சென்றார்கள், அங்கு அவர்கள் பட்டது என்ன, சந்தித்த கொடூரங்கள் என்ன, இந்த கொடூரங்களுக்கு பின்னனியாக இருந்தது என்ன என்று ஆராய்வதுதான் கனவுச்சிறை நாவல். யாருமே இல்லாத தீவுக்கு, சுகனை காண்பதற்காக கடலை நீந்தியே சென்னை வந்த தியாகு திரும்பி ஏன் அனாதைக் குழந்தையுடன் நயினாத் தீவுக்கு செல்கிறான்? ஆட்களே இல்லாத பூமியில் ஒரு அரைப் பைத்தியமான தியாகுவும், ஒரு அனாதைக் குழந்தையும் எப்படி வாழும்?
        கனவுச்சிறை நாவல் உள்ளுர் அரசியலை, உலக அரசியலை பேசவில்லை. உள்ளுர், உலக அரசியல் செயல்பாடுகளால் அப்பாவி மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர், வாழ்வைப் பறிகொடுக்கின்றனர் என்பதைப் பேசுகிறது. அதே மாதிரி இலங்கையில் நடந்தபோர், போராளிகள், ராணுவ நடவடிக்கைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் போராளிகளால், ராணுவத்தினால், போரினால் ஏற்பட்ட இழப்பைப் பேசுகிறது. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உலகத்தொடர்பற்று கிடந்த மனிதர்களை போர் ஏன் அகதிகளாக்குகிறது, ஊரைவிட்டு ஏன் துரத்துகிறது, துரத்தப்பட்ட மனிதர்களுடைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது - என்பதை நுணுக்கமாக விவரிக்கிறது கனவுச்சிறை.
        நயினாத் தீவைவிட்டு இளைஞர்களும், மற்றவர்களும் வெளியேறுவதற்கு போர்மட்டுமா காரணமாக இருந்தது? ஊரைவிட்டு வெளியேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் அழுத்தமான ஒவ்வொரு காரணம் இருந்தது. "வெளிநாடு, வெளிநாடு என்று பெட்டைகளும் பெடியன்களும் ஓடின ஓட்டம்" *2(ப.730) என்று நாவலில் ஒரு இடத்தில் வருகிறது. இந்த ஓட்டம்தான் நயினாத் தீவை வெற்றிடமாக்கியது. ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு இலங்கைத் தமிழர்களிடம் இருந்தது. அந்தக் கனவு நயினாத் தீவை ஆள்அரவமற்ற பிரதேசமாக்கியது. ஊரைவிட்டு செல்வதற்கு ஒரு வழியாகத்தான் வெளிநாடுகள் இருந்தன. "தரைவழி ஐரோப்பா என்கிற வலுத்த கனவொன்று இலங்கைத்தமிழ் இளைஞர்களிடையே இருந்தது. கப்பலில் வேலை பெறுவதற்கான பணமில்லாதவர்களின் ஒரே வழியாகவும் இருந்தது" *3 (ப.671) என்று நாவலாசிரியர் எழுதுகிறார். வெளிநாடு செல்வதற்கு பம்பாய் ஏஜெண்டுகளிடம் பணம் கட்டி காத்திருந்தவர்கள், ஏமாந்தவர்கள் ஏராளம். தப்பி சென்றவர்களும் ஏராளம். அப்படித்தான் பிரபு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக ஸ்பெயின் செல்கிறான். இந்த சாகசப்பயணம் எதன் பொருட்டு ஏற்பட்டது என்பதுதான் நாவலின் மையம்.
        உலகமயமாக்கல் தானாக நடந்துவிடவில்லை. முதல் உலக நாடுகளின் வியாபார நோக்கத்தினால் மட்டுமே நிகழ்ந்துவிடவில்லை என்பதை கனவுச்சிறை சொல்கிறது. தமிழர்களுடைய திருமண சீதனத்தில் மாப்பிள்ளையை வெளிநாடு அனுப்பவேண்டும் என்ற நிபந்தனை எப்படி ஏற்பட்டது? மாப்பிள்ளையை வெளிநாட்டிற்கு அனுப்புவது என்பது ஒரு சீதனமா? 1980- 1990 காலப்பகுதியில் இலங்கையில் மாப்பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்புவது என்பது பெண்வீட்டார் செய்யவேண்டிய பெரிய சீதனமாக இருந்தது.
        "திருமணப் பேச்சுவார்த்தையின்போது சீதனத்துக்கான உடன்பாடு அந்த இரண்டு குடும்பத்துக்குமிடையே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அதுதான் அப்போது நடப்பிலிருந்த வகையும். கல்யாணம் நடந்து ஒரு வருஷத்துக்குள் சிவாவை பிரான்ஸ அனுப்பிவைக்க வேண்டும். கல்யாணச் செலவை பெண்வீட்டாரே ஏற்றுக்கொள்ள வேண்டும்என்பது அந்த உடன்படிக்கையின் விவரம்" *4 (ப.715) இந்த உடன்படிக்கை சொல்கிற செய்தி என்ன? போர் மட்டுமே அகதிகளை உருவாக்கிவிடவில்லை. போரால் மட்டுமே நயினாத் தீவு ஆளற்ற பகுதியாக மாறிவிடவில்லை. புலம் பெயர்தலும், உலகமயமாக்கலும் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. முதல் உலகநாடுகள் மட்டுமே உலகமயமாக்கலை வளர்த்துவிடவில்லை, மூன்றாம் உலகநாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உலகமயமாக்கலை வளர்த்தெடுத்தன என்பதை தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை நாவல் சொல்கிறது.
        இலங்கையிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பத்துபேர்கொண்ட குடும்பத்தில் பிறந்த அ.முத்துலிங்கத்தின் தன் வரலாற்றுக் கதைதான் - உண்மை கலந்த நாட்குறிப்புகள். இந்த நூலை நாவல் என்பதைவிட தன் வரலாற்றுக் கதை நாவல் என்று சொல்வதுதான் சரியானது.
        அ.முத்துலிங்கத்தின் ’உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ (2008) தன் வரலாற்றுக் கதை நாவலில், அவருடைய இளமைக்காலம், பணிக்காலம், பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற காலம் குறித்த கதைகள் சொல்லப்படுகின்றன. தான் படித்தது, தன்னோடு படித்தவர்கள், தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள், தான் படித்தப் பள்ளிக்கூடம். தான் பள்ளிக்கூட பாடல் குழுவில் சேர்க்கப்பட்டது, பேச்சுப் போட்டிக்குப்போனது, தனக்கிருந்த ஆவிகள் தொடர்பான விளையாட்டு என்று ஒவ்வொன்றையும் ரசனையாக சொல்கிறார்.
        அ.முத்துலிங்கத்தின் குடும்பத்தினர் குறித்த சித்திரம் நாவலில் தரப்பட்டுள்ளது. கையில் பணம் கிடைத்தால் அதை உடனே உணவு பண்டமாக மாற்றும் வித்தைக்காரர் அவருடைய தம்பி, தன்னுடைய பிறந்த வீட்டில் தனி கிணறு வைத்து ஆட்சி செய்தது போலவே புருசன் வீட்டிலும் தனி கிணறு வைத்து ஆட்சி செய்ய முடியாமல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட்டவர். அதற்காக இரண்டாயிரம் ரூபாய்வரை ரகசியமாக சேர்த்துவைத்திருந்தவர். ஒரு வெண்கலப் பானையை எப்படி வாங்க வேண்டும் என்பதில் மதி நுட்பம் கொண்டவர். திருவிழாவில் காணாமல் போனவர். ஒரே வார்த்தையில் மகிழ்ச்சியையும், மட்டம் தட்டுவதையும் செய்யக்கூடியவர். இல்லைஇல்லை என்று சொல்லிவிட்டு தன்னுடைய கணவருக்கு கடனாக பணம் கொடுப்பவர்தான் முத்துலிங்கத்தின் அம்மா.
        பர்வதராஜகுமாரி முத்துலிங்கத்தின் அக்கா. வயதுக்கு வந்ததும் இனி பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று ‘ஐயா’ சொன்னதும் பெரும் மகிழ்ச்சி கொண்டவர். இனி பள்ளிக்கூடம் போக வேண்டாம். வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். கதை புத்தகம் படிக்கலாம் என்ற பர்வதராஜகுமாரியின் ஆசையில் ஐயா தீயை வைக்கிறார். பாட்டு வகுப்பு ஆரம்பமாகிறது. பாட்டு வாத்தியார் பாலகிருஷ்ணன். பர்வதராஜகுமாரிக்கு இயற்கையிலேயே இசையில் ஆர்வமில்லை. குரலும் சிறப்பானதாக இல்லை. அவருடைய குரலைப்பற்றி அவருடைய தாயார் ‘கருக்கு மட்டைக் குரல்’ என்று வர்ணித்திருக்கிறார். ஐயாவின் ஏற்பாட்டின்படி பாட்டு கற்கிறார் பர்வதராஜகுமாரி. ‘யாரோ, அவர் யாரோ’ என்ற பாட்டைபாடி பழகுவதற்குள் அந்த பாட்டிற்கு ‘ஐயா’ தடை விதிக்கிறார். அடுத்து, ‘எப்ப வருவாரோ எந்தன் கலீ தீர, செப்பவில்லை சிதம்பரநாதன்’ என்ற பாட்டுக்கும் தடை விதிக்கப்படுகிறது. ‘கனகசபாபதி, தரிசனம், ஒருநாள் கண்டால், கலி தீரும்’ என்ற பாட்டுக்கும் தடை. ‘காரணம் கேட்டு வாடி சகியே, காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத, காரணம் கேட்டுவாடி’ இந்த பாட்டுக்கும் ஐயா தடைபோடுகிறார். ஒவ்வொரு பாட்டுக்கும் ஏன் தடைவிதிக்கிறார் என்று தெரியாமலேயே குழம்பிப்போகிறார் பாலகிருஷ்ணன். பாட்டுவாத்தியாரின் குழப்பத்தைத் தீர்க்காமல் ஊரில் சிதம்பரநாதன், கனகசபாபதி என்ற பெயரில் பையன்கள் இருக்கிறார்களா என்ற ஆராய்ச்சியில் இருக்கிறார் ஐயா. பர்வதராஜகுமாரி பாட்டு கற்றுக்கொண்டாரோ இல்லையோ. ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு கற்றுக்கொண்டார். 68 வயதிலும் தன்னுடைய தம்பி கேட்கும்போதும் ரகசியத்தை சொல்லாமல் சின்னவயதில் சொன்னதுபோலவே, ‘சீ, போடா’ என்றே சொல்கிறார்.
        ஒரே காணியில் இரண்டு கிணறு எதற்கு என்பது முத்துலிங்கத்தின் தந்தையின் வாதம். சாகிறவரை அந்த வாதத்தை அவர்விடவே இல்லை. பொங்கலன்று படிக்காசாக கொடுத்த முழு ஒரு ரூபாயை, ஒரு வாரத்தில் முத்துலிங்கத்திடமிருந்து திரும்ப வாங்கிக்கொள்கிறார். அந்த ஒரு ரூபாயை  அவர் சாகும்வரை திரும்பத்தரவே இல்லை. தனக்கு கிடைத்த முழு ஒரு ரூபாயை செலவழிக்க தெரியாதவராக இருக்கிறார் முத்துலிங்கம்.
        உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலில் 1947-ல் இலங்கையில் நடந்த முதல் தேர்தலில் முத்துலிங்கத்தினுடைய இரண்டு தாய்மாமன்களும் தீவிரமாக ‘வன்னியசிங்கம்’ என்ற வேட்பாளருக்கு வேலை செய்கிறார்கள். ‘எங்கள் சிங்கம் வன்னிய சிங்கம்’, ‘வன்னிய சிங்கத்தை வென்றார் உண்டோ’ போன்ற முழக்கங்கள் முழங்கி முத்துலிங்கமும் தேர்தல் வேலை செய்கிறார். வாக்குப்பதிவு அன்று இரவல் நகையை போட்டுக்கொண்டு வாக்களிக்க வந்த பெண்கள் பற்றிய கதையை - வரலாற்றை சொல்கிறார்.
        யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கன் மிசன் பாடசாலையில் படித்தது, படிப்பை முடித்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தது, பிறகு ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சியாரா லியோனுக்கு வேலைக்கு போனது. அங்கு வேலை பார்த்தது, கம்பனியின் நடைமுறைகள், திருட்டுகள், திருட்டுகள் பெரிய விசயமாக இல்லாதது, வெட்டவெட்ட அழியாத காடுகள் நிறைந்த சியாரா லியோன் தேசத்து மக்கள், விவசாயத்தை விட்டுவிட்டு நாள்தோறும் ‘வைரம்’ தேடும் வேலைக்கு போவது, அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் நாவல் பேசுகிறது.
        நைரோபி நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் சர்வசாதாரணமாக கொள்ளை அடிப்பது எப்படி நடக்கிறது, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக காவல்காரர்களை குறிப்பாக ராணுவத்தில் சேவை செய்து ஓய்வுபெற்ற கிகீயு இனத்தை சேர்ந்தவர்களையே காவலர்களாக நியமிப்பது ஏன் என்பதோடு ஆளற்ற, பொருள்கள் எதுவுமற்ற வீட்டை எவ்வளவு கவனத்துடன் நோயகே என்பவர் காவல் காத்தார் என்பதையும் நாவல் பேசுகிறது.
        நமிபியாவில் 17000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சிறுத்தைகள் காப்பகம், காப்பகத்தை பார்ப்பதற்காக வரும் பார்வையாளர்கள், சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, நபிபியா நாட்டிலுள்ள மக்கள் தொகையைவிட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சோமாலியா நாட்டில் திருட்டு சர்வசாதாரணமாக இருப்பது, அப்துலாட்டி என்ற பொறியியலார் பல தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை திருட்டுத்தனமாக விற்று சுகபோக வாழ்க்கை வாழ்வது, இத்தாலி, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இயல்புகள் எப்படியிருக்கிறது, இந்த நாடுகள் பிரதேசத்தவர்களை எப்படி நடத்துகிறது என்பதை அப்துலாட்டி அருமையாக விளக்குகிறார். அப்துலாட்டிக்கு அமெரிக்காவை பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அவர் உலகில் வாழவிரும்புகிற நாடு அமெரிக்காதான். ‘என்னுடைய சண்டை அமெரக்காவுடன்தான். அமெரிக்க டாலருடன் இல்லை’ என்பது அப்துலாட்டியின் வாதம்.
        கனடாவில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் இத்தாலியை சேர்ந்த ‘ரோனி’யின் தொழில் தர்மம். விளையாட்டின் மீதான அவருடைய பற்றை சொல்கிற அ.முத்துலிங்கம் அந்தக் கடையில் வேலை செய்யும் ஈராக்கை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பற்றிய கதையையும் சொல்கிறார். சதாம் உசேன் ஆட்சிக்காலத்தில் ஈராக்கில் SYRIAN ORTHODOX CHURCH பிரிவை சேர்ந்தவர்கள் பட்ட துன்பங்கள், நாடுநாடாக ஓடிப்போனது, தங்களுடைய இனத்தின் மொழி அழிந்துபோனது பற்றிய கதையோடு பொறியியல் பட்டதாரி முடித்திறுத்தும் வேலையில் எப்படி மன திருப்திக்கொள்கிறார் என்ற கதையும் சொல்லப்படுகிறது.
        எல்லாத்திறமையும், தகுதியும், மதிநுட்பமும் இருக்கிற பாகிஸ்தானை சேர்ந்த ஸைராவுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. மதரீதியான நம்பிக்கைகளை ஒரு நூல் அளவு மாறினாலும் பாகிஸ்தானிய பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள் அதிகம். சுதந்திரமாக செயல்படுவதல்ல, சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவது, சிந்திப்பதுகூட பெரிய குற்றம் என்பதற்கு ஸைரா ஒரு உதாரணமாக இருக்கிறாள். அமைதியான, கடமையை பொறுப்பாக செய்கிற, அண்ணன் குடும்பத்திற்காக உழைக்கிற ‘அபுபக்கர்’ எப்படி தாலிபான்களுடன் சேர்கிறார்? எதற்கும் தகுதியற்றவர் என்று நம்பப்பட்ட அபுபக்கரின் அண்ணன் எவ்வளவு பொறுப்பான ஆளாக வேலை செய்கிறார் என்பதை சொல்கிற நாவலாசிரியர், பாகிஸ்தானின் சமூக மன ஓட்டத்தையும் கோடிட்டு காட்டுகிறார்.
        உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலில் நாசா விஞ்ஞானி ஒலிவியா, மொர்சியஸ் பையன் குபேரன், வீட்டுத்தரகரான சீனாவை சேர்ந்த ஐரிஸ் சுங், பாகிஸ்தானின் ஆயிஷா, அன்சாரி, பக்ரி, ஆப்கானிஸ்தானிய, ரஷ்ய பெண்கள், சூடான், ஸ்பெயின், ஜெர்மன்காரர் என்று பலதேசத்தவர்கள் வருகிறார்கள். ரொன்றொவிலுள்ள புத்தகக் கடை, கனடாவிலுள்ள பொஸ்டன்ஸாட் பெரிநகரம், சார்லஸ் நதி என்று நூற்றுக்கணக்கான இடங்கள் வருகின்றன. வெனிசுலாவில் வசதியாக வாழ்வதற்காக மணம்முடிக்கும் பெண்கள் அதிகமாக இருப்பது, கனடாவில் குதிரைக்கு உணவு தந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, சாகப்போகும் தாயை ஒரு மந்திரவாதி கிடைத்தால் காப்பாற்றிவிடுவேன் என்று நம்பும் சியாரா லியோன் தேசத்து இளைஞன், வாழ்ந்தால் மாளிகையில், இல்லையென்றால் ஜெயிலில் என்ற லட்சியத்துடன் வைரத்தைத் தேடும் தாயும் மகளும், கனிவோடு பேசியதற்காகவே பூங்கொத்து அனுப்பும் ஸைரா, கல்யாணம் செய்து கொள்ளாமலேயே கல்யாணம் செய்துகொண்டதாகக் கூறி கூடுதலாக ஊதியம் பெறும் ஜெரோனிமா - இப்படி மனதில் நிற்கும் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இந்த நாவலில் இருக்கிறார்கள்.
        உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல், ஒரு தனிமனிதன், ஒரு குடும்பத்தின், ஒரு தேசத்தின், ஒரு மொழியின் கதை அல்ல, உலக வாழ்க்கை. உலகக் கதை. உலகமயமாக்கல் கதை. எதை சொன்னாலும் ரசனையாக, ரசிக்கும்படி, சிரிக்கும்படி சொல்வது முத்துலிங்கத்தின் இயல்பு. அது இந்த நாவலில் கூடுதலாக வெளிப்பட்டுள்ளது. அதிலும் அவருடைய மனைவி சம்பந்தமான விசயங்களில்.
பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ (1996) என்ற குறுநாவல் அந்நிய மண்ணில் அகதிகள் எதிர்கொண்ட இடர்கள், துயரங்கள் பற்றி பேசவில்லை. அகதியாக செல்வதற்கு ஏஜெண்டுகளிடம் பயணிகள் பட்ட துன்பம்? பயணிகளிடம் ஏஜெண்டுகள் பட்ட துன்பம் பற்றி பேசுகிறது. ஒரு அகதி உருவாகும்போதே அவனுக்கான துயரமும் ஆரம்பமாகிவிடுகிறது. கதை சிங்கப்பூரில் நடக்கிறது. இலங்கையிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து பல நாடுகளுக்கு கள்ளப்பாஸ்போர்ட் மூலம் சென்றவர்கள் பட்டது, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்களுடைய கதை இது. வெளிநாடு செல்வதற்கு வந்து ஏஜெண்டுகளிடம் மாட்டிக்கொண்டவர்களின் கதையும், பயணிகளிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் ஏஜெண்டுகள் பற்றியும் நகைச்சுவை உணர்வுமேலிட கதையை சொல்கிறார் பொ.கருணாகரமூர்த்தி.
        இலங்கையிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து பிராங்க்பர்ட், டூய்செல், வார்ஷோ, ஆம்ஸ்டர்டாம், நைரேபி, சுவிஷ், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பா என்று பல நகரங்களுக்கும், பலநாடுகளுக்கும் ஆட்களை அனுப்புவது அவ்வளவு எளியக்காரியமல்ல. உண்மையான பாஸ்போர்ட் உள்ளவர்களிடம் பணம்கொடுத்து வாங்கி அதில் பெயர்மாற்றி, தலையை மாற்றி, சில அட்ஜஸ்ட்மண்டுகள் செய்து, பெரிய ‘ரிஸ்க்எடுத்துத்தான் ஆட்களை அனுப்ப முடியும். அதனால் ட்ராவல்ஸிற்கு, ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள், பணவிரயங்கள், தலைவலிகள் கொஞ்சமல்ல. குறிப்பாக பயணிகள் செய்யும் புத்திக்கெட்ட தனங்கள், பாதி பணத்தை மட்டும் தருவது, வெளிநாடுபோய் சேர்ந்ததும் உறவினர்களிடம் பெற்று அனுப்புகிறேன் என்று சொல்லி ஏமாற்றுவது, வெளிநாடுகளுக்கு சென்று எதிர்பாராத விதமாக திரும்பிவந்தால், கட்டிய பணத்தை திரும்பக் கேட்டு நச்சரிப்பது, வெளிநாடு அனுப்ப தாமதமானால் முற்றம்தேய வீட்டிற்கு நடப்பது என்று பயணிகள் தருகிற தொல்லை கொஞ்சமல்ல. "என்ற மருமோன் சுவிசுக்கு என்ன, சுக்கிரனுக்குக்கூட ஆட்களை அனுப்பிவைப்பான்" என்று விரட்டுகிறவர்களும் உண்டு. எல்லாத் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு ஏஜெண்டு வேலை செய்பவர்கள் மீது சமூகத்தில் என்ன மதிப்பு இருக்கிறது?
        ஏஜெண்டுகள் என்றாலே பம்மாத்துக்காரர்கள், ‘ஹம்பக்பேர்வழிகள் என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஏஜெண்டுகளில் ‘பக்கா ஜென்டில்மேன்என்று சொல்ல உலகில் ஆளில்லை. கனடாவுக்கு, ஜெர்மனிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி பெண்களைக்கூட சிங்கப்பூர், பாங்காக்கில் இறக்கிவிடுகிற ஏஜெண்டுகளும் உண்டு. உயிர்பிழைக்க, குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாடு செல்ல கடன்வாங்கிக்கொண்டு வந்தவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மாதக்கணக்கில் இழுத்தடிக்கிற, பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றுகிறவர்களும் உண்டு. எல்லாத்துயரங்களையும் தாங்கிக்கொண்டு அகதியாக உயிரைப் பணயம் வைத்து போக விரும்புகிறவர்களிடம் ‘பசிபிக் லங்காஎன்றோ, ‘அண்டார்டிக் லங்கா டிராவல்ஸ்என்று ஏமாற்றுகிற மாதனை மகேந்திரனைப் போன்றவர்களும் உண்டு. ஏஜெண்டுகளில் ஓரளவு நாணயமுள்ளவர்களும் உண்டு. சிங்கப்பூரில் இயங்கும் தியாகராஜன் மெலீரஸின் டிராவல்ஸ்சும், ராதாவும் அவருடைய நண்பரும் நடத்தும் மற்றொரு ட்ராவல்ஸ்ம்தான்.
        ராதாவும், அவருடைய நண்பரும் கள்ளத்தனமாக வெளிநாட்டிற்கு அகதியாக சென்றவர்கள்தான். ராதா இலங்கையிலிருந்து ஈரான், ஈராக் வழியாக இத்தாலி சென்றவர். இத்தாலியில் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலைப்பார்த்தவர். அதே சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்த மற்றொரு நண்பருடன் சேர்ந்து சிங்கப்பூரிலிருந்து ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகளாக மாறுகின்றனர். அவர்களுடைய குறையே அவர்கள் நல்லவர்களாக இருப்பதுதான். அப்படியும் இப்படியுமாக தொழில் போய்க்கொண்டிருக்கையில் அவர்களுடைய கிரகக்கோளாறாக சட்டநாதன் என்பவர் ஜெர்மனிக்குப் போக வேண்டும் என்று வருகிறார். நான்கு முறை ஜெர்மனிக்கு அனுப்பியும், நான்கு முறையும் திரும்பத்திரும்ப சிங்கப்பூருக்கே வந்து சேர்கிறார் சட்டநாதன். ஒவ்வொரு முறையும் ஒரு பிழையை செய்கிறார். சட்டநாதன் ஜெர்மனிக்கு போனால் இரண்டு லட்சம் மட்டும்தான் தருவார். ஆனால் அவரை ஜெர்மனிக்கு அனுப்புவதற்கு எடுத்தமுயற்சியில் ராதா செலவிட்ட தொகை ஆறுலட்சம். ஆறுலட்சம் செலவாகியும் சட்டநாதன் ஜெர்மனிக்குப் போய் சேரவில்லை.
        முன்பின் தெரியாத நாட்டில் அகதியாக வாழ்வதைவிடவும் பெரியக்காரியமாக, துயரம்மிக்கதாக இருப்பது சொந்த நாட்டிலிருந்து அந்நிய நாட்டில் இறங்கி போலீசால் கைது செய்யப்படுவதுவரை ஒரு அகதி படுகிற அவஸ்தையை விவரிக்கிற வல்லமை எந்த மொழிக்கும் இல்லை. ஊரைவிட்டு, உறவைவிட்டு, கடன்பெற்று உயிரோடு இருந்தால்போதும் என்ற எண்ணத்தில் ஏஜெண்டுகளிடம் மாட்டி அல்லல்பட்டு திருட்டுத்தனங்கள், தந்திரங்கள், சித்து வேலையெல்லாம் செய்து அந்நிய நாட்டில் போய் இறங்கினால் அங்கு என்ன நடக்கும் என்பதையும் நாவல் ஒரே பாராவில் சொல்கிறது.
        கறுப்பாக இருக்கிற இலங்கைத் தமிழ் அகதிகளை - வெள்ளையர்கள் எப்படி நடத்துகிறார்கள்? ஜெர்மனியில், கிழக்கு ஜெர்மனியில் அதுவும் கிராமங்களில் ரஷிய ராணுவத்தினர் தங்கி சென்ற பழைய கட்டிடங்களில் செர்பிய, அல்பேனிய, குர்திஷ் அகதிகளோடு தங்கவைக்கப்படும் அகதிகளின் நிலை என்ன? அந்த நிலையை அடைவதற்குத்தான் நம்முடைய தமிழர்கள் ஏஜெண்டுகளிடம். சந்திக்கிற துரயங்கள் என்ன என்பதையும் ஒரு அகதி உருவாகும் நேரம் - குறுநாவல் சொல்கிறது. அகதி உருவாகும் நேரத்தை மட்டுமல்ல, உலகமயமாக்கல் உருவாகிற சூழலையும் சேர்த்துதான் சொல்கிறது.
        ’செம்மண்ணும் நீலமலர்களும்’ (1971) நாவல் மலேசிய ரப்பர் தோட்டத்தொழிலாளர்களுடைய ஒரு காலகட்டத்தின் வாழ்வை பேசுகிறது. கன்னியப்பனுக்கும் நீலவேணிக்குமிடையே இருந்த காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் அழிந்தது என்பதைவிட சாதியால் அவர்களுடைய உறவு எப்படி சீரழிந்து போகிறது? இருவரும் அவரவர் சாதியில் திருமணம் செய்து கொண்டபிறகு இருவருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்ட துன்ப துயரங்கள் என்ன என்பதை எம்.குமாரன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். நாவலில் துயரம் அடுக்கடுக்காக வருகிறது. இது ஒரு குடும்பத்தின் கதையா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு காலத்தின் கதை. ஒரு சமூகத்தின் கதை. நாவலில் தமிழர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், மலாய்க்காரர்கள், வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அதனால் இது உலக நாவலாக, உலகமயமாக்கல் நாவலாக இருக்கிறது.
புக்கிட் தானா மேரா தோட்டம், ரிங்சிங் எஸ்டேட் மட்டுமல்ல, மலேசியா முழுவதும் 1940- காலப்பகுதியில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுடைய வாழ்க்கையைப் பேசுகிறது. செம்மண்ணும் நீலமலர்களும். ரப்பர் மரம் வெட்ட காலையிலும் அந்தி வெட்டுக்கும் சென்ற தொழிலாளர்கள், அவர்கள் வாழ்ந்த லையன் வீடுகள், நிர்வாகம், கங்காணிகளின் நெருக்கடிகள் என்னென்ன என்பதை விவரிக்கிறது நாவல். அதேநேரத்தில் நிர்வாகம் தொடர்பாக நிகழ்ந்த மாற்றங்கள். வெள்ளையர்களின் ஆட்சி முடிந்து ஜப்பானியர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு, சமூக வாழ்வில், தோட்ட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, வெள்ளையர்களிடமிருந்த தோட்டங்களை, எஸ்டேட்டுகளை சீனர்களும், மலாய்க்காரர்களும், உள்ளுர் முதலாளிகளும் எப்படி துண்டு போட்டு வாங்கினார்கள், தோட்டங்கள் கைமாறியதால் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலை, ஆட்குறைப்பு செய்ததால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் நாவல் பேசுகிறது. 50-60 ஆண்டுகள் தங்களுடைய தோட்டம், வீடு, காடு, இடம் என்று வாழ்ந்த மக்களை தோட்டத்திற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அகதிகளாக ஒரே நாளில் வெளியேற்றியபோது எப்படி திகைத்துப்போய் தமிழர்கள் நின்றார்கள் என்பதை வலியோடு பேசுகிறது செம்மண்ணும் நீலமலர்களும்.
        அரசு மாறி, அதிகாரம் மாறி, தோட்ட நிர்வாகம் மாறிய பிறகு தமிழர்கள் சந்தித்த கொடூரங்கள் என்ன, நிலக்குடியேற்றத்தை ஏன் தமிழர்கள் ஆதரிக்கவில்லை, நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே நடந்த சிறுசிறு அளவிலான போராட்டங்கள் எப்படி ஒடுக்கப்பட்டது, ஈத்தாம் குடியேற்றப்பகுதி எப்படி இருந்தது, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டிக்கொண்ட அமைப்புகள், கங்காணிகள் எப்படி அரசுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் கைக்கூலிகளாக மாறி செயல்பட்டார்கள் என்பதையும் நாவல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
        வெள்ளைக்காரர்களின் ஆட்சி மாறுகிறது, ஜப்பானியர்களின் ஆட்சி வருகிறது. வெள்ளைக்காரர்களைவிட ஜப்பானியர்களும், அவர்களுடைய அரசும் மோசமாக நடத்துகிறது, பசி, வறுமை நிறைந்த காலமாக இருக்கிறது. தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட, வெளியேற்றப்படும் நிலையில் இருந்தாலும் தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்கிறார்கள், நேதாஜியை விரும்புகிறார்கள், இந்திய சுதந்திரம் பெறவேண்டும் என்று நினைப்பது மட்டுமல்ல தங்களால் இயன்றதை செய்ய நினைக்கிறார்கள். இந்த மனோநிலையை நாவலாசிரியரின் மனோநிலை என்று சொல்ல முடியாது. மலேயாவில் வாழ்ந்த அன்றைய தமிழர்களுடைய மனோநிலை இப்படித்தான் இருந்திருக்கிறது.
        செம்மண்ணும் நீலமலர்களும் நாவல் மலேசிய சமூக வாழ்வில் ஒருகாலக்கட்டத்தை மட்டுமல்ல வரலாற்றில் முக்கியமான காலக்கட்டத்தை மதிப்புமிக்க ஆவணமாக்கியிருக்கிறது. கலையாக்கியிருக்கிறது. எம்.குமாரன் தேர்ந்த எழுத்தாளர் என்பதை இந்நாவல் காட்டுகிறது.
எம். குமாரன் எழுதிய செம்மண்ணும் நீலமலர்களும் நாவல் மலேசியத் தமிழர்களின் வாழ்வை ஒரு கோணத்தில் காட்டியது என்றால் அ.ரெங்கசாமி எழுதிய நினைவுச்சின்னம் நாவல் மலேசிய தமிழர்கள் சார்ந்த புதிய வாழ்வொன்றைக் காட்டுகின்றது. கிழக்காசியாவில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ விரும்புகிறது ஜப்பானிய அரசு. அதற்காக டோக்யோவிற்கும் பர்மாவிற்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த விரும்புகிறது. ஜப்பானிலிருந்து கடல் வழியாக பர்மாவிற்குச் செல்ல அதிகமான நாட்களும், பொருட்செலவும் அதிகமாகிறது. காலத்தையும், பொருட்செலவையும் குறைக்க நினைக்கிற ஜப்பானிய அரசு சயாமிலிருந்து பர்மாவுக்கு 262 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடுகிறது. ரயில்பாதை அமைத்தால் டோக்யோவிலிருந்து சைக்கோன், சைக்கோனிலிருந்து பாங்காக், பாங்காக்கிலிருந்து ரங்கூன் என்பது நேர்ப்பாதை. ஆகவே ஜப்பானிய அரசு ரயில்பாதை அமைக்கவும், அதை ஓராண்டிலேயே (1943-1944) முடிக்கவும் விரும்புகிறது.
        மலேசியாவில் வெள்ளையர்களின் மேலாதிக்கம் குறைந்து ஜப்பானியர்களின் மேலாதிக்கம் நடந்தகாலம். மலேசிய ரப்பர் தோட்டங்களிலுள்ள தமிழர்களை சயாம் பர்மாவுக்கான ரயில்பாதை அமைப்பதற்காக திரட்டுகிறது. ஜப்பானியர்களின் கைக்கூலிகளாக கங்காணிகள் செயல்படுகிறார்கள். அதிக சம்பளம் என்ற வார்ததையை திரும்பத்திரும்ப சொல்லி ஆட்களை திரட்டுகிறார்கள். அதிக சம்பளம் என்ற ஆசையில் தமிழர்களும் சயாமிற்கு செல்கிறார்கள். பல இடங்களில் ஜப்பானிய நிர்வாகம் கட்டாயப்படுத்தியும் ஆட்களை ரயிலில் ஏற்றுகிறார்கள். வெள்ளைக்கார அரசின் ஆசை வார்த்தைகளை நம்பித்தான் நாகப்பட்டினத் துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மலேயா ரப்பர் தோட்டங்களுக்கு தமிழர்கள் சென்றார்கள். மலேயா ரப்பர் தோட்டங்களிலிருந்து ஜப்பானியர்களின், கங்காணிகளின் ஆசைப்பேச்சை, மோசடி வார்த்தையை நம்பி சயாமிற்கு ரயிலேறுகிறார்கள்.
        சயாமியக் காட்டை நோக்கி சென்ற மொட்டை ரயிலில் ஏறிய தமிழர்கள், ரயிலில், பயணத்தில் என்ன பாடுபட்டார்கள், எவ்விதமான துன்பத்திற்கு ஆளானார்கள், ரயிலைவிட்டு இறங்கி ஏழு நாள் பயணமாக நடந்து சென்றபோது பட்ட துன்பங்கள், ஜப்பானிய காவல்துறையினர் செய்த அட்டூழியங்கள் என்ன என்பதை சொல்வதுதான் நினைவுச்சின்னம் நாவல். கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கணத்திலிருந்து ஒவ்வொரு கணமும் தமிழர்கள் பட்ட துயரத்தினை அ.ரெங்கசாமி மிக அழகாக சொல்கிறார். குளிர், மழை, மலஜலம் கழிக்க வசதியின்மை, பயணத்திலேயே காய்ச்சல் கண்டு செத்தவர்கள், தப்பிக்க நினைத்து ரயிலிலிருந்து குதித்து செத்தவர்கள், மோசமான இடத்தில் தங்க வைக்கப்பட்டது. பிணங்களுக்கிடையே படுக்கவைக்கப்பட்டது, கொசுக்கள், குளிர், மூட்டைப்பூச்சிகடி, சீலைப்பேன்கடி, வண்டுகடி, ரத்தம் உறிஞ்சும் அட்டை, தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாநிலை, குளிக்கமுடியா நிலை, பச்சை தண்ணீரை குடித்ததால் காலரா கண்டு இறந்துபோதல், கடுமையான வேலை நெருக்கடி, ஜப்பானியர்களின் கொடுமைகளுக்கிடையே தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி செத்தார்கள், எல்லா கொடூரங்களுக்கும் பிறகு தப்பி பிழைத்தவர்களின் நிலை என்ன என்று ஒவ்வொன்றாக அ.ரெங்கசாமி எழுதியிருக்கிறார். நெஞ்சை உருக்கும் விதமாக.
        சயாமிற்கும் பர்மாவுக்குமான ரயில்பாதை இரண்டுவிதமாகப் போடப்படுகிறது. வடக்கே தன்பியூ ஜயாட்டிலிருந்து தெற்கு நோக்கி ஒரு குழுவும், தெற்கே பொட்போங்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு குழுவும் வேலை செய்கிறது. இரண்டு பிரிவிலும் தமிழர்களும், ஜப்பானியர்களிடம் அடிமைப்பட்ட வெள்ளைக்காரர்களும் வேலை செய்கிறார்கள். இரவும் பகலுமாக வேலை நடக்கிறது. வேலை பளு வால், ஜப்பானியர்களின் கொடுமையால் நாள்தோறும் மனிதர்கள் இறக்கிறார்கள். அதைவிடவும் காலரா கண்டுதான் ஆயிரக்கணக்கில் சாகிறார்கள். மனிதர்கள் சாவதைப்பற்றி ஜப்பானிய நிர்வாகம் கவலைப்படவில்லை. ஆசை காட்டியும், கட்டாயப்படுத்தியும் அடுத்தடுத்த ரயில்களில் ஆட்களை கொண்டுவந்த வண்ணமே இருக்கிறார்கள். சாவோரின் எண்ணிக்கையும், புதிதாக வருவோரின் எண்ணிக்கையும் சமஅளவில் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் ஜப்பானிய அரசின் எண்ணம். செத்தவர்களை பார்க்கவோ, பராமரிக்கவோ, மருத்துவம் செய்யவோ ஜப்பானிய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செத்த கணவனை, குழந்தைகளை அனாதைப் பிணமாக அப்படியே போட்டுவிட்டு போக வேண்டிய, வேலை செய்ய வேண்டிய கொடூரம். செத்தவர்களுக்காக கண்ணீர்விடக்கூட அவகாசமில்லை. காரணம் வேலை கெட்டுவிடும். அசிமோத்தோ, நாகமுரா, முனிச்சி, தனக்கா என்று ஜப்பானிய ராணுவதளபதிகள் மாறிமாறி வந்தாலும் யாரிடத்திலும் இரக்கமில்லை. கனிவு இல்லை. ஒருவருக்கொருவர் போட்டி மாதிரி கொடூரமாகவே நடந்துகொள்கிறார்கள்.
        மரம் வெட்டுதல், காட்டை அழித்தல், பாறைகளை உடைத்தல், தண்டவாளங்களை ஏற்றுதல், இறக்குதல், மண்கொட்டுதல், பாலம் கட்டுதல், மழையில், வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் ரயில் ரோட்டை மீண்டும் போடுதல், இடிந்து விழும் பாலங்களை மீண்டும் கட்டுதல் என்று வேலை நடக்கிறது. வேலை முடிந்துவிடும், தப்பித்து போய்விடலாம் என்ற நிலையில் இரண்டாம் உலகப் போர் நடக்கிறது. ஜப்பானியர்களுக்கெதிராக இங்கிலாந்து ராணுவம் குண்டுபோடுகிறது. குண்டுபட்டு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் சாகிறார்கள். போடப்பட்ட ரயில் ரோடும், கட்டப்பட்ட பாலமும் குண்டுவீச்சில் காணாமல் போகிறது. குண்டுபட்டு சாகாதவர்களை வைத்துக்கொண்டு மீண்டும் ரயில்பாதை, பாலம் என்று கட்டுகிறது ஜப்பானிய அரசு. ஒரு ஆண்டில் முடிய வேண்டிய வேலை மூன்றாண்டுகள் நீடிக்கிறது. காலராவில் செத்தவர்கள், இங்கிலாந்து ராணுவ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக எஞ்சியிருந்தவர்களில், அடங்க மறுத்தவர்களை, தப்பித்துப்போக நினைத்தவர்களை, எதிர்த்துப் பேசியவர்களை எல்லாம் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் கொல்கிறார்கள். அத்துனை கொடூரங்களும் நாவலில் பதிவாகியிருக்கிறது.
        ஜப்பான்காரர்களுக்கும் இங்கிலாந்துகாரர்களுக்குமான சண்டையில் தமிழர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? உலகில் எங்கு போர் நடந்தாலும் அப்பாவிகள்தான் கொல்லப்படுகிறார்கள். போர் எந்த நன்மையையும் செய்துவிடாது. மனிதர்களைக் கொல்லும், ஊனமாக்கும், அகதிகளாக்கும், விதவைகளாக்கும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை உருவாக்கும், அனாதைகளை உருவாக்கும். பலரை காணாமல் போகச் செய்யும், பசியை, வறுமையை உருவாக்கும். பெண்களை ராணுவம் வன்புணர்ச்சி செய்யும். போர் மனிதர்களுக்கு வேறு எந்த நன்மையையும் செய்துவிடாது. அதுதான் சயாமிலும் நடந்தது.
        மலேயா ரப்பர் தோட்டங்களில் இருக்கும்போது வெள்ளைக்காரர்களுக்கு எதிரான மனோபாவத்தை கொண்டிருந்த தமிழர்கள், சயாமில் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஜப்பானியர்களுக்கு எதிராகவும் எப்படி மாறினார்கள் என்பது ஒரு முரண். காலரா கொடுமை, ஜப்பானியர் கொடுமை, வேலைபளு, உறவுகள் இறந்துபோவது, திரும்பி மலேயாவிற்கு போவோமா, மாட்டோமா என்று தெரியாத நிலை, இங்கிலாந்து ராணுவ குண்டுவீச்சு, மழை, குளிர் என்று எத்தனையோ கொடுமைகளுக்கிடையிலும் தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்கிறார்கள். சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள், நேதாஜியை காணத் துடிக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு ‘காந்திஎன்று பெயர் வைக்கிறார்கள், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சண்டைபோடப் போக வேண்டும் என்று லட்சியம் கொள்கிறார்கள். தீபாவளி கொண்டாடுகிறார்கள், சயாமிய பெண்களுடன் காதல் கொள்கிறார்கள். இதுதான் வாழ்க்கைத்தரும் ரகசியம். உயிர் வாழ்தலுக்கான வித்து.
        சயாம் பர்மா ரயில்பாதை என்பது மரண ரயில்பாதையாக எப்படி மாறியது என்ற வரலாற்றை மட்டுமல்ல, மலேயா ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட பாடுகள் பற்றிய வரலாற்றை அறிவதற்கும் நினைவுச்சின்னம் நாவல் மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. தமிழர்கள், ஜப்பானியர்கள், வெள்ளைக்காரர்கள், சயாமியர்கள், பர்மாக்காரர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பல தேசத்தவர்கள் நாவலில் வருகிறார்கள். அதே மாதிரி பல தேசத்து மொழிகளும் பேசப்படுகிறது. அதனால் இது உலக நாவலாக, உலகமயமாக்கல் நாவலாக இருக்கிறது.
சி.முத்துசாமி எழுதிய ‘மண்புழுக்கள்’ (2006) நாவல் வேறொரு கோணத்தில் மலேயாத் தோட்ட வாழ்வை பேசுகிறது. “இந்த கித்தா காட்டுல.... அந்த மலக்காட்டுல.... காத்தோட காத்தா கலந்து... அலஞ்சி திரிவோம்" இதுதான் மண்புழுக்கள் நாவலின் கடைசி வரி. இந்த வரிதான் இந்த நாவலின் மையம், உயிர்நாடி. பகலிலும் இருட்டாக இருக்கும் மலேயாக் காடுகளில், ரப்பர் தோட்டங்களில் உழைத்து காற்றோடு காற்றாக கலந்த மனிதர்களுடைய கதைதான் மண்புழுக்கள். நாவலின் தலைப்பு மக்களுடைய வாழ்க்கையைச் சொல்கிறது. காலையில் ‘பெரட்டு’ மணி சத்தம் கேட்டதும் ரப்பர் மரத்தை சீவுகிற தாசா கத்தியுடன், ஒட்டுப்பால் பிடிக்கிற வாளியுடன் ஓடிய, அந்தி வெட்டுக்கு ஓடிய மனிதர்களின், தமிழர்களின் கதை. கித்தா காடு,  லாலாங்காடு, பச்சக்காடு, தீம்பாரு காடு, ரெட்ட மல, அபுபாக்கர் மல பகுதியில் உழைத்த, வாழ்ந்த ஆட்டுக்காரன் சின்ன கருப்பன், அஞ்சல, ரமக்கா, வேடியப்பன், மலயப்பன் மகன் காத்தாடி, ராயப்பன், காத்தம்மா, முத்துவேலு, கசியடி முனியப்பன், ஆட்டுக்காரன் மவ பழனியம்மா, தொங்க லயத்து முனியமா, சியாம்கார நொண்டி தாத்தா, வெத்தலபாட்டி, திக்குவாயர் போன்ற ஆயிரக்கணக்கான மக்களின் கதை இது. இந்த பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. இந்த பெயர்களுக்குரியவர்கள் வாழ்ந்தது சாதாரண வாழ்க்கை அல்ல. வரலாறு. அது மலேசியக் காட்டின் வரலாறு, மலேசிய சமூகத்தின் வரலாறு.
        மண்புழுக்கள் நாவல் ஆட்டுக்காரன் சின்னகருப்பனின் வழியாக, அவனுடைய வாழ்க்கையின் வழியாக, அவன் வாழ்ந்த இடத்தின் வழியாக மலேயாத் தோட்டங்களில் வாழ்ந்த மொத்தத் தமிழர்களுடைய வாழ்க்கையைச் சொல்கிறது. இது வெறும் மனிதர்களுடைய கதை அல்ல, ரப்பர் மரங்களின் கதை. அங்கு பெய்த மழையின், அங்கு அடித்த வெயிலின், நடுங்க வைத்த குளிரின் கதை. பினாங் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் ரப்பர் பால் ஏற்றிச்சென்று பொன்னாக மாற்றப்பட்டதின் கதை. தன்னுடைய ஷூவில் முகம் மங்கலாக தெரிந்ததற்காக ஷூவைத் துடைத்த தமிழனை இங்கிலிஷில் திட்டி, ஷூவால் உதைத்த டன்லப் போன்ற துரைகளின் கதை. வெள்ளைக்காரத் துரைகள் கப்பல்களில் கொண்டுவந்து இறக்கிய சீமை சரக்குகளின், சீமை நாய்களின் கதை. துரைகளுக்கு சஞ்சிக்கூலிகளை காட்டிக் கொடுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட கிராணி பொன்னுசாமி, மேட்டுக்குச்சி தண்டல் மொட்டையன், தாண்டவராயன், மூக்குறிஞ்சான் போன்றவர்களின் கதை. நிறையில் நின்ற பெண்களிடம் கிராணிகளும், தண்டல்களும் செய்த அத்துமீறல்கள், அட்டுழீயங்கள் பற்றிய கதை. உழைப்பையும் கொடுத்து வெள்ளைக்காரர்களிடமும், அவர்களுடைய மிலிட்டரியிடமும் சஞ்சிக்கூலிகள் பட்டதுயரத்தின் கதை. ஜப்பானியர்களால் கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு, சயாமிய ரயில்பாதை போடும் பணியில் ஈடுபட்டு செத்துபோனவர்களைப் பற்றிய, மரண ரயில்பாதையிலிருந்து உயிரோடு திரும்பிவந்த சயாம்நொண்டி தாத்தாக்களின் கதை. மலேசியக் காடுகளில் தமிழர்களைக் கடித்துக்கடித்து கொழுத்த கொசு, மூட்டைப்பூச்சி, வண்டுகள், அட்டைப் பூச்சிகள் பற்றிய கதை. மண்புழுக்கள் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தின் கதை அல்ல. ஒரு காலத்தின் கதை. ஒரு சமூகத்தின் கதை. இதுபோன்ற கதைகளிலிருந்துதான் மலேயாவின் ரப்பர் தோட்டங்கள் பற்றிய வரலாறும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் வரலாறும் உருவாகும். மலேசியாவின் வரலாறும்.
        மலேயா ரப்பர் தோட்டக்காடுகளில் தமிழர்கள் உழைத்தது மட்டும் வரலாறு அல்ல. ஆடுவளர்த்தார்கள். மாடுவளர்த்தார்கள். அதோடு மாரியம்மன் கோவில்களையும், முனியாண்டி கோவில்களையும் உண்டாக்கினார்கள். கள் குடித்தார்கள். கூத்து நடத்தினார்கள். மலேயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள் என்பதெல்லாம் வெறும் கதை அல்ல.
        சீ.முத்துசாமி மண்புழுக்கள் நாவலில் தமிழர்களுடைய வாழ்க்கையை மட்டும் எழுதவில்லை. தமிழர்களோடு சேர்ந்து மலேசியக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சீனன் ‘லிம் ஜிம்பொக்’ பற்றிய கதையையும் எழுதியிருக்கிறார். சீனாவின் மீது ஆக்கிரமிப்பு செய்ய ஜப்பான் முயன்றபோது ஜப்பானிய ராணுவத்தினரால் லிம்ஜிம்பொக்-கின் தங்கை வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள். அதன் விளைவாக ‘லிம்ஜிம்பொக்’-ன் தங்கை கர்ப்பமாகிறாள். இன்னொரு வாய்க்கு சோறுதேட வேண்டுமே என்ற கவலையில் ‘லிம்’ இருக்கும்போது ஜப்பானிய வீரர்களை வேட்டையாட வந்த சீன ராணுவம் ‘லிம்’னின் தங்கையை கூட்டுவன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொல்கிறது. துயரத்தை தாங்க முடியாமலும், உயிர் பிழைத்திருக்கவும் சீனாவைவிட்டு மலேயாவிற்கு வரும் ‘லிம்’ மலேயாவில் இருக்கும் ஜப்பானிய அரசுக்கு எதிராக கலகம் செய்யத் திட்டமிடுகிறார். அவருடைய கடவுளாக இருப்பவர் மா சே துங். மண்புழுக்கள் நாவல் மலேசியாவில் கம்யூனிச இயக்கம் வேர் ஊன்றி வளர்ந்த பின்னணியையும் எழுதியிருக்கிறது.
        சீ.முத்துசாமி நாவலாசிரியர் என்ற வகையில் கதைக்குள் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. பேச்சு மொழியிலேயே மொத்த நாவலையும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். 1940-50 காலப்பகுதியில் மலேயா ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்த மனிதர்களுடைய கதையையே நாவலாக, சிறந்த ஆவணமாக எழுதியிருக்கிறார். தமிழர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், வெள்ளைக்காரர்கள் என பல தேசத்தவர்கள் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். பல தேசத்து மொழிகளும் நாவலுக்குள் பேசப்படுகிறது. அதனால் இது உலக நாவலாக, உலகமயமாக்கல் நாவலாக இருக்கிறது.

உலகமயமாக்கலும் சாதியும்.
        பிறந்து வளர்ந்த வீடு, ஊர், உறவு, நண்பர்கள், பெற்றோர்கள், நாடு எதுவுமே வேண்டாம். உயிரோடு வாழ்ந்தால் போதும் என்ற பெரும் கனவோடும் வெறும் கையோடும் அகதிகளாக கண்காணாத தேசங்களுக்கு சென்ற தமிழர்களோடு கூடவே சென்றது மொழி. இன, தேச அடையாளம் மட்டுமல்ல. சாதிய அடையாளமும்தான். புதிய தேசம், புதிய மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவு, உடை, தொழில், சீதோஷணம், எல்லாவற்றிற்கும் ஏற்ற வகையில் தங்களை மாற்றிக்கொண்டு வாழநேர்ந்த தமிழர்களுக்கு சாதியை விட்டுவிட்டோ, மறந்துவிட்டோ மறைத்துக்கொண்டோ வாழ முடியவில்லை. உலகின் எந்த மூலைக்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம் சென்றதோ இல்லையோ சாதி சென்றிருக்கிறது. தேச அடையாளங்களை, மொழி, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை எல்லாம் ஓரளவு மாற்றிவிட்ட உலகமயமாக்கல். தமிழர்கள் - பின்பற்றும் சாதிய அடையாளத்தில் தோற்றுப்போய்விட்டது. வாழ்க்கை மாறிவிட்டது, உலகம் மாறிவிட்டது, அதுவும் வெளிநாடுகளில் எல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேட்க முடியுமா? இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சாதி பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, இலங்கையில் அல்ல, பெர்லினில். 2014ல் பொ.கருணாகரமூர்த்தியால் எழுதப்பட்ட ‘அனந்தியின் டயறிஎன்ற நாவல். காளிதாசின் மகள் அனந்தியைப் பார்க்க வருகிற மாணவி தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போது "நான் பிரியந்தி ஞானப்பிரகாசம்" என்று சொல்கிறாள். அடுத்து "நான் கத்தோலிக்" என்று கூறுகிறாள். பிறகு தானாகவே "கத்தோலிக் என்றவுடன் வேறு மாதிரி நினைத்து விடாதீர்கள். நாங்க ரொம்ப ஆசாரமான வேளாளர்"*5 (ப.96) என்று சொல்கிறாள். பிரியந்தி தானாகத்தான் தன்னைப் பற்றின தகவல்களைச் சொல்கிறாள். பிரியந்தியின் பெற்றோர்கள்தான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். பிரியந்தி ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு சாதியைப் பற்றி சொல்லித்தந்தது யார்? பிரியந்தியின் வார்த்தைகளில் வெளிப்படுவது சாதிசார்ந்த பாகுபாடல்ல. பெருமிதம்.
        புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவது, பழகுவது, நட்புகொள்வது, அறிந்துகொள்வது, ஒரே நாடு, ஒரு ஊர், ஒரே மொழி, ஒரே இனம் என்ற அடிப்படையில் அல்ல, ஒரே சாதி என்ற அடிப்படையில்தான். "உங்கள் பெற்றோரின் நண்பர்களின் வட்டம் அநேகமாக ஒரே உறவுக்குள்ளாகவோ, இனத்துக்குள்ளாகவோ அல்லது ஊரார்களுக்குள்ளாகவோதான் இருக்கும்"*6 (ப.186) என்று நாவலில் வருகிறது. புலம்பெயர்ந்து வேறு நாட்டில் வாழ்ந்தாலும், புதிய மொழியில் பேசினாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் உங்களுடைய சாதிபோய்விடாது. பெற்றோர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் தங்களுடைய சாதிசார்ந்த வட்டத்திற்குள்ளேதான் புழங்க வேண்டும் என்று ஜெர்மனியிலும் தமிழர்கள் தங்களுடைய குழந்தைகளை பழக்குகிறார்கள். வெளிநாட்டில், புதிய சூழலில் வாழ்கிறோம். ஆகவே நம்முடைய பழைய சாதிய அடையாளத்தைவிட்டுவிட்டு வாழலாம். வாழ முடியும் என்றால் அது நடக்காது. காரணம் எந்த மண்ணில் வாழ்ந்தாலும் தமிழன் அடுத்த தமிழனை சாதிய அடையாளத்துடனேயே பார்க்கிறான் என்பதை அனந்தியின் டயறி நாவலில் வரும் "நகரில் 1000ம் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தாலும் அனைவர் சாதியும் கோத்திரமும் அனைவருக்கும் தெரியும்" *7 (ப.183) என்ற வரி சொல்லிவிடுகிறது. தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், குடியுரிமை இல்லாமல், திருட்டுத்தனமாக வாழ்ந்தாலும், எவ்வளவு இழிவான வேலை செய்தாலும் - சாதியுடன்தான் இருக்கிறார்கள்.
        பதினேழு வயதிலேயே ‘இது என் வாழ்க்கை நான்தான் தீர்மானிப்பேன்என்று சொல்லிக்கொண்டு ஆசிரியருடன் வாழப்போகும் மாணவிகள் நிறைந்த ஜெர்மன் நாட்டில், பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வியை சொல்லித்தருகிற நாட்டில், இஷ்டத்திற்கு மணமுறிவு செய்துகொள்கிற கலாச்சாரமுள்ள நாட்டில், இஷ்டத்திற்கு குழந்தைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு இஷ்டப்பட்ட ஆட்களோடு வாழப்போகிற நாட்டில், தலித் இளைஞனை காதலிப்பதாக பொய்கூட சொல்ல முடியாத சூழலில்தான் தமிழ்க்குடும்பங்கள் பெர்லினில் வாழ்கின்றன.
        "நான் ஒரு தமிழரை விரும்பத் தொடங்கியிருக்கிறேன். அவர் ஒரு தலித்"*8 (ப.250) என்று அனந்தி சொன்னதுமே அவளுடைய தந்தை காளிதாசின் முகமும், தாயின் முகமும் வறண்டுபோகிறது. காளிதாசு வழக்கமாக பியர், ஒயின்தான் குடிப்பார். ஆனால் அன்று ராவாக விஸ்கி குடிக்கிறார். சாப்பிடும்போது, எப்போதும் கலகலப்பாகப் பேசுவார். அன்று ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தலை குனிந்தவாறே இருக்கிறார். அனந்தியின் அம்மா மற்றவருக்காக சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகிறாள். அவளுடைய கண்கள் நிறைந்துவிட்டன. அப்பா அம்மாவின் நிலையைப் பார்த்து அனந்தி "நான் சும்மா ஒரு டூப் விட்டன். உங்களின் ரியாக்க்ஷனைப் பார்க்க" *9 (ப.251) என்று உண்மையை சொன்னபோது, அவளுடைய அப்பா அம்மாவின் முகம் எப்படியிருந்தது?
"இருவர் முகமும் சூரியபிரகாசம்" *10 (ப.251) என்று நாவலாசிரியர் எழுதி இருக்கிறார். தங்களுடைய மகள் ஒரு தமிழனைத்தான் காதலிக்க வேண்டும், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிற பெற்றோர் ‘தலித்என்றதும் ஏன் அவர்களுடைய முகம் வாடுகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது? அனந்தி ஒரு தலித் இளைஞனை காதலிப்பதாக பொய்தான் சொன்னாள். அது உண்மை அல்ல. பொய் சொன்னதற்கே காளிதாசு மகளிடம், "தலித் ஒருவர் மறு நாளும் தலித்தாகத் தொடர்வதிலுள்ள வேதனையை நான் மறுக்கவில்லை. மகள், அறம், தார்மீகம், நியாயம் என்று எல்லாமேகூட இருந்தாலும் தலித் அல்லாத ஒருவர் திடீரென தலித்தாக மாறுவதிலும் மனதுக்குக் கஷ்டம், அசௌகரியங்கள் இல்லையென முடியாது. எங்கே தன் உறவுகளால் ஒதுக்கப்பட்டு விடுவேனோ, ஓரங்கப்பட்டப்பட்டுவிடுவேனோ என்கிற பயங்கள் எல்லாம் கூடவந்து பயமுறுத்தும்"*11 (ப.251) என்று சொல்கிறார். ஒரு தந்தையின் அன்பான இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு ஒரு இளம்பெண் தலித் இளைஞனை மட்டுமல்ல யாரையுமே காதலிக்கமாட்டாள்.
        தமிழர்களுக்கு மொழிக் கலப்பு, பண்பாட்டு, கலாச்சாரக் கலப்பு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதிக் கலப்பு மட்டும் ஆகாது. ஆண் வழியாக சாதிக் கலப்பு நடந்தாலும் ஓரளவு ஏற்றுக்கொள்வார்கள். பெண்வழியாக மட்டும் சாதிகலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. தமிழர்கள் எதை வேண்டுமானாலும் இழப்பார்கள். ஆனால் பெண்வழியாக ஏற்படும் சாதிக் கலப்பை மட்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைத்தான் அனந்தியின் டயறி நாவல் சொல்கிறது.
        இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம் மட்டும்தான் சாதி வேறுபாடு இருக்கிறது என்று சொல்லமுடியாது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு சென்ற தமிழர்களிடமும் சாதிய மேலாதிக்கக்குணம் இருக்கிறது என்பதை எம்.குமாரன் எழுதிய செம்மண்ணும் நீலமலர்களும் என்ற நாவல் சொல்கிறது. நாவலில் வரும் மையபாத்திரமான கன்னியப்பனுக்கும் நீலவேணிக்கும் காதல். இந்த காதலை கன்னியப்பனின் தாய் அங்கம்மாள் பலமாக எதிர்க்கிறாள். அதற்கு காரணம் சாதி. கன்னியப்பன் உயர்ந்த சாதி. நீலவேணி தாழ்ந்த சாதி. பொருளாதார ரீதியாக இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு குடும்பமும் தோட்ட வேலைதான் செய்கிறது. லயன் வீடுகளில்தான் தங்கியிருக்கிறது. "அவ என்ன சாதி? நம்ம என்ன சாதி? அவுங்க தாழ்ந்த சனங்க. நம்ப ஒசந்த கொலமடா. சாதியில ஒசத்தி" *12 (ப.23) என்று சொல்லி, சண்டை செய்து, பிடிவாதம் பிடித்து இருவரையும் பிரித்து விடுகிறாள் அங்கம்மாள். ‘புக்கிட்தானா மேராஎன்ற ரப்பர் தோட்டத்தில் வெள்ளைக்காரனுக்கு அடிமைகளாக வேலைசெய்யும் கன்னியப்பனையும் நீலவேணியையும் இணையவிடாமல் தடுப்பது எது?
        ஏழுகடல்தாண்டி, ஏழுமலைதாண்டி, ஏழாயிரம் கிலோமீட்டர் தாண்டி நாடற்ற பரதேசிகளாக தமிழர்கள் சென்றாலும் அவர்களுடன் சேர்ந்துசெல்வது சாதியாகத்தான் இருக்கிறது என்பதை பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘அனந்தியின் டயறிநாவலும், எம்.குமாரன் எழுதிய ‘செம்மண்ணும் நீலமலர்களும்நாவலும் சொல்கிறது.


உலகமயமாக்கலும் ஏழரை நாட்டு சனியும்.
தமிழர்கள் கடல்கடந்தும், கண்டங்கள் கடந்தும் சென்றுவிட்டார்கள். நாகரீகமடைந்த நாடுகளில் வாழ்கிறார்கள். அறிவியல் உச்சப்பட்சமாக பயன்பாட்டிலுள்ள நாடுகளில் வாழ்கிறார்கள். அதனால் தமிழர்களுடைய சிந்தனையும், செயலும் சிந்தனைப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக இருக்கும் என்று நம்ப முடியுமா? உலகமயமாக்கல் சூழலில் உலகின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழர்களை மட்டும் எப்படி ஏழரை நாட்டுசனி பிடித்தாட்டுகிறது என்பது ஆச்சரியம். தமிழர்கள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் ஏரைநாட்டு சனியும் போகிறது. கடல்கடந்து, கண்டங்கள் கடந்து ஏழரை நாட்டு சனிபோகுமா என்றால் போகும் என்றுதான் இங்கிலாந்தில் வாழ்கிற சேனன் எழுதிய ‘லண்டன்காரர்நாவல் (2015) சொல்கிறது.
        இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கிழக்கு லண்டன் காப்பர் வீதியில் இருக்கிற ஐயரை ஏழரை நாட்டுச்சனியன் எப்படி பிடித்தாட்டுகிறது ?
"தம்பி ஏழரைச்சனி முடியுறதுக்குள்ளார கடனை திருப்பித் தந்துபோடுவன்" *13 (ப.10)
"ஐயருக்கு ஏழரைச்சனிக்குள்ளும் ஒரு லக் அடித்தது" *14 (ப.11)
"தெய்வம் என்ற பெயரில் ஏழரைச்சனி வந்து பிடித்தது." *15 (ப.13)
"சிக்கன் காலை ஒருமுழு வீச்சில் விழுங்கிய ஐயர், அன்றிலிருந்து தன்னை ஆண்ட ஏழரைச் சனியனை ஒரு காலால் எட்டி உதைத்தார்" *16 (ப.11) லண்டன்காரர் நாவலில் சனிபகவானுடைய மகத்துவம் குறித்து பல இடங்களில் நாவலாசிரியர் சேனன் விபரமாக எழுதியிருக்கிறார். இங்கிலாந்திலுள்ள தமிழர்களை மட்டும்தான் ஏழரை நாட்டு சனியன் பிடித்துள்ளது, பிறநாடுகளுக்கெல்லாம் செல்லாது என்று சொல்ல முடியாது. தமிழர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்றாலும் கூடவே சனியும் செல்லும் என்று பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ (1996) குறுநாவல் சொல்கிறது. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புகிற நிறுவனத்தை சிங்கப்பூரிலிருந்து நடத்துகிற இரண்டு நண்பர்களுக்கு சட்டநாதன் என்ற பயணி மூலமாக ஏழரைநாட்டு சனி வந்து எப்படி பிடித்து ஆட்டுகிறது என்பதுதான் குறுநாவலின் மையம்.
"எங்களுக்குத்தான் கெட்டகாலம். ஏழரை நாட்டான் நிக்குது" *17 (ப.17)
"உமக்கு அட்டமத்துச் சனியன் நடக்குபோல கிடக்கு, பயணம் வெளிக்கிட முதல் சாதகம் ஒன்றும் பார்க்கேல்லியோ"*18 (ப.19)
"மனுஷன் யமகண்டத்தில் வந்து சேர்ந்ததோ, மரணயோகத்தில் வந்து சேர்ந்ததோ" *19 (ப.18)
"எனக்கு இப்ப புதன் உச்சம் பெற்று இருக்கு. இவனுக்கு வெள்ளி உச்சம். இந்தத்திசைகளிலே தொட்டதெல்லாம் துலங்கும்." *20 (ப.14)
        இங்கிலாந்தில், சிங்கப்பூரில் வாழ்கிற தமிழர்களை மட்டும் தான் ஏழரை நாட்டுச்சனி பிடித்து ஆட்டும் என்றில்லை. மலேசியாவில் வாழ்கிற தமிழர்களையும் சனி பிடிக்கும் என்பதை அ.ரெங்கசாமி எழுதிய ‘நினைவுச்சின்னம்நாவல்  (2005) சொல்கிறது.
"சனி பகவான் பார்ப்பதுபோன்று அவனையே பார்த்துகொண்டிருந்தான்." *21 (ப.275)
"நாம என்ன ராகுகாலத்திலியா வீட்டைவிட்டு புறப்பட்டோம்? கிளம்புனதிலிருந்து சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்கலியே" *22 (ப.119)
        ஏழுரை நாட்டு சனி மட்டுமல்ல, ராகுகாலம், எமகண்டம் மட்டும்தான் தமிழர்களை பிடித்தாட்டும் என்று சொல்ல முடியாது. எண்கணிதமும் பிடித்தாட்டும் என்று பொ.கருணாகரமூர்த்தி எழுதிய ‘அனந்தியின் டயறிநாவல் (2014) சொல்கிறது.
"ஒரு பிள்ளைக்கு கிரிஜா என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்துப்பிறக்கும் குழந்தைகளின் பெயரும் சாருஜா, நீரஜா, தனுஜா, பானுஜா என்றே இருக்கும். ஒவ்வொரு குழந்தைப் பிறக்கும்போதும் என்ன எழுத்தில், எத்தனை எழுத்தில், என்ன பெயர் வைக்கலாமென்று கோவில் ஐயரையோ, நீயுமெராலிஸ்டையோதான் ஆலோசிப்பார்கள்" *23 (ப.183) இதுவே போதும் தமிழர்கள் எண்கணிதத்தில் எப்படி மூழ்கிப் போய்க்கிடக்கிறார்கள் என்பதற்கு.
        தமிழர்கள் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அறிவியலின் உச்சத்தில் வாழ்ந்தாலும், ஏழரை நாட்டுச்சனி, ராகுகாலம், யமகண்டம், என்கணிதத்தை விடமாட்டார்கள். இவர்கள் விட்டாலும் ஏழரை நாட்டுச்சனியும், யமகண்டமும் தமிழர்களை எத்தனை உலகமயமாக்கல் வந்தாலும் விடாது என்பதை நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (2015) நாவலும் சொல்கிறது.
"கைரேகை, எண் ஆருடம், தோஷங்கள், பிள்ளைபேறில்லா குறைகள் ஆகியவற்றிற்கு பிரபல இந்திய ஜோதிடரைச் சந்தியுங்கள்" (ப.195)*24 என்று பிரான்சில் விளம்பரம் செய்கிறார்கள். அதோடு நாவலில் "கிரகங்களிடம் தங்கள் தலையெழுத்தை ஒப்படைத்திருக்கிற தமிழர்களுக்கு..." *25 (ப.223) என்று வருகிற வரியும் தமிழர்களுடைய சிந்தனையின் வீச்சையே காட்டுகிறது.
"இதென்ன சனியன்? நம்மை விடமாட்டேன் என்று துரத்துது" *26 (ப.51)
"மாதப் பலனைப் பார்த்ததில்:  உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் ஆறில் செவ்வாயும் ஏழில் வக்கிர சனியும் உலவுவது சிறப்பாகும்*27 (ப.25)
"ராசிப் பலனைப் படித்தேன். ஏழில் வக்கிர சனி உலவுவது சரி, ஆறில் செவ்வாயையும் கண்டுப்பிடித்தால் எழுத உட்கார்ந்துவிடுவேன்" *28 (ப.25)
"முதல் நாளே சனியனைத்தொலைத்து தலைமுழுகியிருக்க வேண்டும்" *29 (ப.304) என்று காஃப்காவின் நாய்க்குட்டி நாவலில் சனியனின் மகத்துவத்தை நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியிருக்கிறார்.
பெரும்பாலான நாவலாசிரியர்கள் சனிபகவானுடைய மகத்துவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அ.முத்துலிங்கம் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ - நாவலில் புதனுடைய மகத்துவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.
"நான் உன்னுடைய ஜாதகத்தைப் பார்த்தன். உனக்கு புதன் ஏழாம் எடத்தில் இருக்கிறது. நல்லாப் படிப்பு வரும். பிரசங்கமும் செய்வாய். கிரேக்கப் புராணத்தில் புதன்தான் பேச்சுக்கு அதிபதி. திருடர்களுடைய கடவுளும் அவன்தான். திருடுவது என்றால் தந்திரம் செய்வது. நான் உனக்கு அதைத்தான் சொல்லித் தரப்போகிறேன்" *30(ப.39.) என்று சொல்லி அ.முத்துலிங்கத்தைப் பேச்சுப் போட்டிக்கு தயார் செய்கிறார் அவருடைய ஆசிரியர்.
"புதன் அனுக்கிரகம் இருப்பதால் மாஸ்ரர் என்னை ‘புத்திநாதன்’ என்று விளித்ததை நினைத்துக்கொண்டேன்" *31(ப.41.) அ.முத்துலிங்கம் நன்றாகப் பேச்சுப்போட்டிக்கு தயார் செய்திருந்தார், நன்றாக பேசினார் என்பதற்காக அவரை ‘புத்திநாதன்’ என்று அவருடைய ஆசிரியர் விளிக்கவில்லை. புதனுடைய அனுக்கிரகம் அவருக்கு இருந்ததால்தான் அப்படி அழைத்தார். புதனுடைய முழு அனுக்கிரகம் இருந்தும் அ.முத்துலிங்கம் பேச்சுபோட்டியில் தோற்றுப்போகிறார். இரட்டை சடைக்காரி பேச்சுப்போட்டிக்கான கோப்பையை வெல்கிறாள். "ஏழாம் வீட்டுக்கு அதிபதியான புதன் அன்று என்னை மறந்து இன்னும் பெரிய தந்திரக்காரனுக்கு உதவப்போயிருக்கலாம்" *32(ப.42.) என்று புதனுடைய கீர்த்தியைப் பற்றி அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். "சகுனம் சரியில்லை என்று விட்டுவிட்டேன்" (ப.149) சகுனத்தடங்கலின் ஆற்றலை உண்மை கலந்த நாட்குறிப்பு - நாவலில் பார்க்கலாம்.

                                உலகமயமாக்கலும் பிராமணமயமும்
இன்றைய நவீனமயமான உலகமயமாக்கல் வாழ்க்கை முறையில் பிரதேசரீதியான அடையாளங்களை, இனக்குழு சார்ந்த அடையாளத்தை பேணுவது சாத்தியமல்ல என்று நம்பப்படுகிற சூழலில் பொ.கருணாகரமூர்த்தி எழுதிய அனந்தியின் டயறி(2014) நாவல் நமக்கு புதிய செய்தி ஒன்றை தருகிறது. ஜெர்மனியில் வாழ்கிற தமிழ்க்குடும்பங்களின் பேச்சு மொழி, எழுத்துமொழி என்னவாக இருக்கிறது என்ற கேள்விதான் அந்த செய்தி. "குறைந்த பக்ஷம், நாமகரணம், வாஸ்த்துக்கள், தட்ஷனை, பூஷ்கர், எழுபத்தி ஐந்து லக்ஷம் என்பதாக இருக்கிறது. தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை நாவலிலும் இதேபோன்ற சொற்கள் நிறைய இடம்பெறுவது ஆச்சரியம். ஜெர்மன் சென்றும், கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து சென்றும் அரைநூற்றாண்டிற்குமேல் வழக்கொழிந்துபோனதாக நம்பப்பட்ட சொற்களையா பயன்படுத்துவார்கள்? ஆம் என்றுதான் இரண்டு நாவல்களும் சொல்கின்றன.
        "ஏகாதசி, கந்தசஷ்டி, பிரதோசம், சதுர்த்தி, சித்ராபௌர்ணமி, ஆடி அமாவாசை, வரலஷ்மி நோன்பு, சுமங்கலிபூஜை" *33 (ப.132) என்று நடப்பதெல்லாம் தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ அல்ல. ஜெர்மனியில். அதுமட்டுமல்ல "மயூரபதி முருகன் கோவில் ஐயர் போன்பண்ணி அம்மாவிடம் இன்று ‘சங்கடஹர சதுர்த்திஅம்மா வந்து பூஜையில கலந்துக்கணும்" *34 என்று ஐயர் அழைத்ததாக அனந்தி தன்னுடைய டயறியில் எழுதியிருக்கிறாள். தமிழர்கள் இருக்கும் இடத்திலெல்லாம் ஐயர்கள் இருப்பது ஆச்சரியம். சங்கடஹர சதுர்த்தி நடப்பது பெரிய ஆச்சரியமல்ல. தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றார்கள். ஐயர்கள் எப்படி சென்றார்கள்? ஐயர்கள் அகதிகளாக சென்றதாக வரலாறு இல்லை.
        "வாழ்வது ஒங்லோவியாவிலிருந்தாலும் எப்போதும் நல்லூர் முருகனின் கொடியேற்றம், செல்வசந்நிதித் தீர்த்தம், வன்னி விளாங்குளம் முத்துமாரியம்மன் தீமிதிப்பு என்ற தகவல்களெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்" *35 (ப.185) என்று அனந்தியின் டயறி நாவல் சொல்கிறது. இதிலிருந்து தெரிவது உலகமயமாக்கல் என்பது உலக பிராமணமயம் என்பதுதான். உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்தாலும் தமிழ்ச்சமூகம் சிந்தனையில் சிறந்து விளங்குகிறது என்று சொல்ல முடியாது.
இன்றைய வாழ்க்கையில் தூரங்கள் இல்லை, காலம் இல்லை, மொழி, பண்பாடு, உணவு, உடை, கலாச்சாரம் எதுவும் தடையில்லை. எங்கும் வாழலாம், எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்றாகிவிட்ட நிலையில் தனித்த பண்பாடு, கலாச்சாரம் என்று இருக்க முடியாது. இன்றைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையை நீக்கிவிட்டு இன்று நாவல் எழுத முடியாது. வாழ முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான அடிப்படைகளும், அடையாளங்களும் இருந்தன. அது இன்று குலைந்துப்போய் இருக்கிறது.
காலனிமயமாதல், மேற்குமயமாதல் உலகமயமாதல் என்ற விவாதத்திற்கெல்லாம் இன்றைய வாழ்க்கையில் இடமுண்டா? உலகமயமாதல் பண்பாட்டுக்கலப்பா பண்பாட்டு சீரழிவா, பண்பாட்டு அழிவா என்றெல்லாம் விவாதிக்க முடியுமா? உலகமயமாதல் தான் இன்றைய வாழ்க்கையாக, கலாச்சாரமாக இருக்கிறது என்று பத்து நாவல்களும் சொல்கின்றன. அதுதான் உண்மையும்கூட.

"நாடா கொன்றோ  காடா கொன்றோ
அவலா கொன்றோ  மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை  வாழிய நிலனே"
ஔவையார்  

பின்குறிப்புகள்

1.   தாயகம் கடந்த தமிழ் – (2014)
தொகுப்பு – மாலன்
தமிழ்ப்பன்பாட்டு மையம்
கோயம்புத்தூர்.
2.   லண்டன்காரர் – சேனன் – (2005)
கட்டுமரம் பதிப்பகம்
05 Itamilton avenue
Ilford Essry IG6, IAE, U.K
3.   அனந்தியின் டயறி – (2014)
பொ.கருணாகரமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி ரோடு, நாகர்கோவில்.
4.   கனவுச்சிறை – (2014)
தேவகாந்தன்
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி ரோடு, நாகர்கோவில்.
5.   காஃப்காவின் நாய்க்குட்டி – (2015)
நாகரத்தினம் கிருஷ்ணா
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி ரோடு, நாகர்கோவில்.
6.   ஒரு அகதி உருவாகும் நேரம் – (1996)
பொ.கருணாகரமூர்த்தி
ஸ்நேகா பதிப்பகம்
348 டி.டி,கே சாலை - சென்னை
7.   நினைவுச்சின்னம் – (2005)
அ.ரெங்கசாமி
21 ஜாலன், 6 தாமான் தெலுக்
42500 தெலுக் பங்ளிமா காராங்
சிலாங்கூர் டாருல் ரசான் – மலேசியா
8.   செம்மண்ணும் நீல மலர்களும் (1971)
எம்.குமாரன்
தமிழ் புத்தகாலயம்
பைகிராப்ட்ஸ் ரோடு - சென்னை
9.   மண்புழுக்கள் – (2006)
சி.முத்துசாமி
தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை
ராயப்பேட்டை – சென்னை
10.  Box கதைப்புத்தகம் – (2015)
ஷோபா சக்தி,
கருப்பு பிரதிகள்,
பி.55 பப்புமஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 5
11.  உண்மை கலந்த நாட்குறிப்புகள் – (2008)
அ.முத்துலிங்கம்
உயிர்மை
A/29 சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம் – சென்னை.

உயிர்மை – நவம்பர் 2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக