வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

தீண்டப்படாதவர்களுக்குள் தீண்டாமை புதிரை வண்ணார்களின் வாழ்வும் இருப்பும்

தீண்டப்படாதவர்களுக்குள் தீண்டாமை
புதிரை வண்ணார்களின் வாழ்வும் இருப்பும்
-எழுத்தாளர் இமையம்.
தீண்டப்படாதவர்களுக்குள் தீண்டாமை புதிரை வண்ணார்கள் வாழ்வும் இருப்பும் என்ற இந்த ஆய்வு நூல் தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்துகொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ளது. இனவரைவியல் சார்ந்த நூல் இது. ஆய்வு இது. உயர் இனமோ, தாழ்த்தப்பட்ட இனமோ எல்லாருக்குமே சாதி உணவைப் போன்றது, தண்ணீரைப் போன்றது. இந்தியர்கள் கோமணத் துணிக்கூட இல்லாமல் இருப்பார்கள். ஆனால் சாதி இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்று இந்த ஆய்வு நூல் நிரூபிக்கிறது. இன்று கிராமத்தில்தான் சாதி இருக்கிறது, நகரத்தில் இல்லை என்று சொல்வது பொய், நடிப்பு. தினசரிகளில் வரக்கூடிய மணமகன், மணமகள் தேவை போன்ற விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும் படித்த, உயர் பதவிகளில் உள்ள, நாகரீகமிக்கவர்களிடம், நகரத்தில் உள்ளவர்களிடம் சாதி மூச்சுக்காற்றையும்விட எப்படி முக்கியமானதாக இருக்கிறது என்பது தெளிவாகும். தமிழகத்தில், இந்தியாவில் சாதியற்ற ஒரு ஆளை, சாதி அடையாளமற்ற ஒரு ஆளைக் காட்டுவது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு மனிதனும் தனக்கான சாதி அடையாளத்தைப் பெரிய சமூக கௌரவமாக காட்டவும், போற்றவும் தவறுவதில்லை என்பதை இந்த ஆய்வுநூல் பல ஆதாரங்களின் வழியே நிரூபிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள்கூட, பிறப்பின் அடிப்படையிலான நிரந்தரமான அவமானத்தைச் சந்திக்கிறவர்கள்கூட, மற்றவர்களை பிறப்பின் அடிப்படையில் அவமானப்படுத்துவதில், இழிவு செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. மனித மனத்தின் விசித்திரம் இது. இழிவு இது. இந்த விசித்திரமும் இழிவும் நம் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை சமூகத்தின் கடைசி நிலையில் இருக்கக்கூடிய புதிரை வண்ணார்களின் வாழ்வு குறித்து ஆய்வாளர்கள் சி.லட்சுமணனும், கோ.ரகுபதியும் தங்களுடைய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.
இந்தியாவில் எத்தனை சாதிகள் இருக்கின்றன? அத்தனை சாதிகளுக்கும் அந்தந்த சாதிகளுக்குரிய அதிகார எல்லை எது? மரபான, சமூக அற ஒழுக்கங்களை சாதிய அமைப்பின் வழியே தொடர்ந்து கட்டி காத்து வரும் சமூகம்தான் நம்முடையது. நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. யாரும் எனக்குத் தாழ்ந்தவர் அல்ல என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த முடியுமா? சாதி சார்ந்த அதிகார எல்லை என்பது எப்படி வெல்லமுடியாத ஒன்றாக இருக்கிறது. எப்படி பரம்பரை சொத்தாக, பரம்பரை கௌரவமாக இருக்கிறது? அதே நேரத்தில் பரம்பரை இழிவாகவும் இருக்கிறது. ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழ் அடுக்கிலுள்ள சாதிகள்மீது அதிகாரத்தை எப்படி செலுத்துகிறது. உழைப்பு சுரண்டலை எப்படிச் செய்கிறது, பிறப்பின் அடிப்படையில் எப்படி அவமானப்படுத்துகிறது என்பதை நிரூபிப்பதுதான் இந்த நூலின் அடிப்படையாக இருக்கிறது. பிற சமூகத்தினரால் ஒடுக்கப்படுகிற பள்ளர், பறையர், அருந்ததியர் சமூகம் தான் பட்ட அவமானத்தையும், இழிவையும், ஒடுக்குதலையும் தனக்குக் கீழ் நிலையில் உள்ள புதிரை வண்ணார் சமூகத்தின் மீது எப்படி செலுத்துகிறது என்பதை உரிய ஆவணங்கள், ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நடைமுறை உண்மைகள், நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் ஆகியவற்றின் மூலம் இந்நூல் நிரூபிக்கிறது.
தமிழ் சமூகத்தில் பறையர், பள்ளர், அருந்ததியர்கள்தான் கடைசி படிநிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்களுக்கும் கீழே புதிரை வண்ணார் சமூகம் என்று ஒன்று இருக்கிறது. இவர்கள் பிராமணர், செட்டியார், பிள்ளைமார், முதலியார், தேவர், வன்னியர் இன்னும் இதுபோன்ற மேல் மற்றும் இடைநிலை சாதியினரால் ஏற்படும் ஒடுக்குதலையும், அதோடு சேர்த்து பறையர், பள்ளர், அருந்ததியர் ஆகியோரின் ஒடுக்குதலையும் சேர்த்து அனுபவிக்கிறார்கள். இவர்கள் இரட்டைத் தீண்டாமைக்கு உள்ளாவது நிதர்சனமான உண்மை என்பதை இந்த ஆய்வு நூல். நிரூபிக்கிறது. அதிகாரம் செலுத்துகிறவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும், அடிமை சேவகம் செய்கிறவர்கள் பாவப்பட்டவர்களாகவும் இருப்பது எப்படி? இதுதான் இந்திய சாதிய சமூகத்தின் உளவியல். இந்த உளவியலை புரிந்துகொள்வது எளிதல்ல.
‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் அதெல்லாம் ஒரு காலத்தில்தான் இருந்தது’ என்று ஒருவர் சொன்னால் அவர் நடிக்கிறார் என்று பொருள். பள்ளர், பறையர், அருந்ததியர் எங்கே குடியிருக்க வேண்டும், எந்த பாதையில் நடக்க வேண்டும், எந்தப் பாதையின் வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும், எந்த தெருவில் தேரை ஓட்ட வேண்டும், எங்கே நின்று சாமி கும்பிட வேண்டும், எங்கே பிணத்தைப் புதைக்க வேண்டும், எங்கே தண்ணீர் எடுக்க வேண்டும்,  எந்த பள்ளியில் படிக்க வேண்டும், எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்க வேண்டும், என்பதெல்லாம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையின் படிதான் சமூகம் இன்றுவரை இயங்கிகொண்டிருக்கிறது. உயர்வகுப்பினரும் இடைநிலை வகுப்பினரும் பறையர், பள்ளர், அருந்ததியர்களுக்கு என்னென்ன விதமான சமூகக் கட்டுப்பாடுகளை, ஒழுக்க விதிகளை, வரையறைகளை வகுத்துள்ளனரோ, எவற்றையெல்லாம் பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் அப்படியே புதிரை வண்ணார் சமூகத்தினர் பின்பற்ற வேண்டும் என்று பறையர், பள்ளர், அருந்ததியர் சமூகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். பிராமணிய இந்து மதத்தின் நடைமுறைகள் பள்ளர், பறையர், அருந்ததியர்களுக்குள் எப்படி ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதைத்தான் பண்பாடு, கலாச்சார பெருமை என்கிறோம். பிறப்பின் அடிப்படையில் இழிவு செய்வதை, தீண்டாமைக்குட்படுத்துவதைத்தான் இந்திய கலாச்சாரத்தின் பெருமை என்று கூறுகிறார்கள். மனித உரிமை மீறல்கள்பற்றி பேசுகிற நிலையில் சாதிய ஒடுக்குதல்கள் மனித உரிமைகள் மீறலில் இடம் பெறாதா? பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினர் மீதான ஆதிக்கத்தை ஒடுக்குதலை எப்போது நிறுத்தும்?
தீண்டாமைக்குள் தீண்டாமை என்ற இந்த நூலில் பல அதிர்ச்சிகரமான, அதே நேரத்தில் பல  உண்மையான தகவல்கள், புள்ளிவிவரங்கள், வாக்குமூலங்கள் இருக்கின்றன. புதிரை வண்ணார் என்பவர் யார், அவர் எந்த இடத்தில் வாழ்ந்தார், வாழ்கிறார், அவர் செய்த வேலைகள் என்னென்ன? செய்த வேலைக்காக ஊதியமாக பெற்றது என்ன? தெருவில் எப்படி நடந்தார்கள், தண்ணீர் எங்கே எடுத்தார்கள், பள்ளர், பறையர், அருந்ததி சமூகத்தினரிடம் பட்ட அவமானங்கள், அடி, உதை எவ்வளவு என்பதை இந்த நூல் விரிவாக பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவுகள்தான் நம் சமூகத்தின் யதார்த்தம். இது கற்பனையில் சிருஷ்டிக்கப்பட்ட யதார்த்தமல்ல.
புதிரை வண்ணார்கள் இல்லாத கிராமங்களில் புதிரை வண்ணார் குடும்பங்களை கொண்டுவந்து எப்படி குடியமர்த்தினார்கள், எந்த இடத்தில் குடியமர்த்தினார்கள், என்னென்ன வேலைகளைச் செய்ய வைத்தார்கள், எந்தவிதமாக அவர்களை நடத்தினார்கள், சமூகத்தின் குறிப்பாக பள்ளர், பறையர், அருந்ததியர் மக்களிடையே புதிரை வண்ணார்கள் குறித்த சமூக தகுதி நிலை என்னவாக இருந்தது என்பதை தெளிவான விளக்கங்களுடன்  இந்த நூல் தொகுத்து தந்துள்ளது. அடிமை சேவக தொழிலிலிருந்து விடுபடுவதற்காக புதிரை வண்ணார் சமூகத்தினர் செய்த முயற்சிகள் என்னென்ன? அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்ற தகவல்களும் புள்ளிவிவரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளது. பெரிய விடுதலையைத் தரும் என்று நம்பி மதம் மாறினார்கள். மதம் மாற்றத்திற்குப் பிறகு புதிரை வண்ணார்களுடைய வாழ்க்கைத் தரம் என்னவாக இருக்கிறது? புதிய மதம் அவர்களை எப்படி நடத்துகிறது? அடிமைச் சேவகம் செய்வதை நிறுத்திவிட்டவர்களுடைய, வெளிநாடு சென்றவர்களுடைய, படித்து, பதவியில் பொருளாதார மேம்பாட்டில் சற்று மேம்பட்டவர்களுடைய நிலை, மாற்றுத் தொழில் செய்ய முயன்றவர்களுடைய நிலை, அண்டை மாநிலங்களுக்குப் பிழைக்க சென்றவர்களுடைய நிலை, வாழ்க்தைத்தரம், மேம்பாடு, என்னவாக இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவருடைய வாக்குமூலங்கள் வழியாக உண்மை நிலையினை ஆய்வாளர்கள் நேர்மையான முறையில் பதிவு செய்துள்ளனர். இந்த வாக்குமூலங்களில் ஆய்வாளர்கள் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ஆய்வு நேர்மையானதாகவும் ஆய்வு நெறிமுறைகளை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த ஆய்வின் மூலம் வாசகர்களுக்கு கிடைத்த தெளிவைவிட சாதியமைப்பின் கொடூரங்கள், நடைமுறைகள் குறித்த  கேள்விகளே அதிகம்.
சமூகம் மாறிவிட்டது, கல்வி, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, நாகரிகம் வந்து விட்டது சிந்தனையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிற இந்தக் காலத்தில் புதிரை வண்ணார்கள் சாதி சான்று பெறுவதற்காக படுகிற அவலங்கள், பண இழப்புகள், அலைச்சல்கள் நம் கற்பனைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. புதிரை வண்ணார்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க தொழில் கருவிகளை கேட்கிறார்கள் அதிகாரிகள். கழுதைகள், சலவைப் பெட்டி, தொறப்பாடு ஆகியவைதான் புதிரை வண்ணார்களின் தொழில் கருவிகள். இவை இல்லாத காரணத்தினாலும், தற்போது துணி வெளுப்பு, ஊர்சோறு எடுத்தல், பிணம் புதைக்கிற காரியங்கள் செய்யாத காரணத்தினாலும் சாதிச் சான்று தர மறுக்கிறார்கள். அதாவது சாதிக்குரிய தொழிலைச் செய்யாத காரணத்தினால் சான்று தர மறுக்கிறார்கள். சாதி சான்று கேட்டு அலைந்தவர்களுடைய கதைகள், போராடியவர்களின் கதைகள், நீதிமன்றம் சென்றவர்களுடைய கதைகள் இந்நூலில் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஐம்பது வருடங்களாக குடியிருந்தாலும் குடியிருந்த இடம் சொந்தமில்லை என்ற அவலம். ஊருக்கு ஒரு குடி என்பதால் எதிர்த்துப் பேசமுடியாத நிலை. அவமானம்.
இந்திய சாதிய அமைப்பு பிறப்பின் அடிப்படையில் பலரை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் மாற்றியிருக்கிற அதே நேரத்தில் பலரை இன்றுவரை கேவலமானவர்களாக மாற்றியிருக்கிறது. இது எப்படி காலம்காலமாக நிகழ்கிறது என்பதுதான் இந்த ஆய்வு நூலின் அடிப்படை அலகாக இருக்கிறது. ஒடுக்குவது, சுரண்டுவது, இழிவு செய்வது இதுதான் சாதிக்குறிய பெருமைகளாக, அடையாளங்களாக இருக்கிறது. இழித்தனங்கள் எப்படி பெருமையாக இருக்க முடியும்? இருக்க முடியும் என்றுதான் இந்திய சாதியமைப்புகள் நடவடிக்கைகள் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கின்றன.
புதிரை வண்ணார்கள் சமூகத்தின் கடைநிலையில் இருப்பதால் அவர்களால் ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை. மீறி ஈடுபட முயன்றாலும் அங்கேயும் தீண்டாமையும், தீண்டாமைக்குள் தீண்டாமையும் உக்கிரமாக செயல்படுவதை அறிய முடியும். சாதி கூடாது, மதம் கூடாது, மூடநம்பிக்கைகள் கூடாது, அனைவரும் சமம், சமத்துவம் என்று முழங்குகிற திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் சாதிய மனப்பான்மை எவ்வளவு மேலோங்கி இருக்கிறது என்று பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கிறது. சமூக உணர்வையும், அரசியல் உணர்வையும் எளிய மக்கள் பெற முடியாத நிலைதான் இன்றும் நிலவுகிறது. அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட சாதி எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை அறிய முடியும்.
புதிரை வண்ணார்ளை சமூகம் எப்படி நடத்துகிறது, குறிப்பாக தாழ்த்தப்பட்ட இனங்களான பறையர், பள்ளர், அருந்ததியர் சமூக மக்கள் எப்படி நடத்துகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கையும் வாழும் இடமும் என்னவாக இருக்கிறது என்பதோடு தமிழ்நாட்டில் இன்று சாதிய மனோபாவம் எப்படி இருக்கிறது. தீண்டாமைக்குள் தீண்டாமை எப்படி பெருமையாக கௌரவமாக எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பதை உண்மையின் வெளிச்சத்தில் இந்த ஆய்வு நூலை சி.லட்சுமணனும், கோ.ரகுபதியும் எழுதியிருக்கிறார்கள். புதிரை வண்ணார்களுடைய வாழ்வும் இருப்பும் குறித்து அறிவதற்கு இந்த நூல் மிகச் சிறந்த ஆவணமாக இருக்கிறது. ஆய்வாளர்கள் அனுமானமாக, யூகமாக எதையும் எழுதவில்லை என்பது இந்த நூலின் சிறப்புகளில் ஒன்று. இதுமாதிரியான இன வரைவியல் குறித்த ஆய்வுகள் நம் சமூகத்தின் உண்மையான முகத்தை அறிவதற்கு பெரிதும் உதவும். அதற்கு இந்நூல் முன்னோடியாக இருக்கும். ஒரு இனத்தின் சுதந்திரத்திற்கான வெளிச்சத்தைப் பேசும் நூல் இது. நிகழ்காலத்தில் செய்கிற தொழிலின் அடிப்படையிலான இழிவு குறைந்திருக்கலாம். ஆனால் பிறப்பின் அடிப்படையிலான இழிவு ஒரு நூல்கூட குறையாதபோது ‘இந்தியா ஒளிர்கிறது’, ‘மேக் இன் இந்தியா’ என்பது எல்லாம் மோசடியான வார்த்தைகளே. விளம்பரம். இழந்த உரிமைகளைப் போராடாமல் பெற முடியாது என்பதைத்தான் இந்நூல் புதிரை வண்ணார்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்தியாவில் சாதி என்பது பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விதையாக ஊன்றப்பட்டு, பிறகு அது மரமாக வளர்ந்துவிடுகிறது. சாதிய மனோபாவம் இயற்கையாகவோ, இயற்கையினாலோ ஏற்பட்டதல்ல. இயற்கை சீற்றத்தை மட்டும்தான் மனிதனால் தடுக்க முடியாது. சாதி – இயற்கை சீற்றத்தைப் போன்றதல்ல. இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டதல்ல.


Malaigal.com 01.08.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக