வியாழன், 28 மே, 2015

வீட்டை எரிக்கும் விளக்கு சிறுகதைக் குறித்து பேரா.ந.ரமணி

                                                      வீட்டை எரிக்கும் விளக்கு – இமையம்.
                                                                                                                            பேரா.ந.ரமணி,
                                                                                       பார்வையற்றோர் நலச்சங்கம், மதுரை.
இமையத்தின் ‘வீட்டை எரிக்கும் விளக்கு’ சிறுகதை நமது உயர்கல்வியில் ஆய்வேடு சமர்ப்பிக்கும் மாணவர்கள்பால் தொடர்ந்து நிகழ்ந்துவரும் போக்கின் விமர்சனத்தை கலைவடிவில் சொல்கிறது. கல்விப்புலம் சார்ந்தவர்களிடமும் அதன்பால் அக்கறை கொண்டவர்களிடமும் இக்கதை சென்று சேரவேண்டும். அது நிச்சயமாக சிறு அசைவையாவது ஏற்படுத்தும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளைக்கூட கதை பூடகமாக மறுக்கவே செய்கிறது.
இரண்டு தோழிகளுக்கிடையே நிகழும் இரண்டு மணிநேர அளவில் நிகழும் உரையாடல் வழி இக்கதை நமக்குக் கிடைத்திருக்கிறது. கதையில் வரும் முதிய தனது ஆய்வு மாணவி பொம்பியை சதா குழப்பத்தில் வதைபட வைக்கும் பேராசிரியர் தமிழ்மணி முதுமை குறித்துச் சொல்வதில் அனுபவம் கவிதையாக முற்றி வெளிப்பட்டுள்ளது.
அவ்வரிகள்:
“ஒரு மரம் இருக்கு வயசான மரம்” வயசான மரமாச்சேன்னு அதுலயிருந்து வருசா வருசம் காய், பழம் பறிக்காம இருக்கமா? வயசான மரத்திலிருந்து காயயும், பழத்தையும் பறிக்க மாட்டம்னு ஒலகத்தில சொல்றவுங்க யாரு இருக்காங்க? அதே மாதிரி ஒரு பூச்செடி இருக்கு. தெனம் தெனம் நட்டா பூப்பறிக்கிறம்? பழைய செடியாச்சேன்னு பூ பறிக்காம இருக்கமா? பழைய பசுமாடுதான்னு அதுல இருந்து பால் கறக்காம இருக்கமா? பழைய வீடு அதுல குடியிருக்க மாட்டம்னு சொல்றமா?”
கதை நம் நவீனகால தளத்தில் நாம் கையாளும் கருவிகளுடன் (செல்போன், ஐபோன், சாட்லிங்...) முற்றாக இயங்குகிறது. அதே சமயம் முந்தைய வரலாற்றுப் பதிவையும் கொண்டிருக்கிறது.
அந்த அந்தரங்கத் தோழிகளின்-பொம்மி, பூங்குழலி என்ற சென்னைக்குப் படிக்க வந்த கிராமத்துக் குமரிகளின் உரையாடலைக் கேளுங்கள். அதற்கான அழைப்புத்தான் உங்களுக்கு அருகில் வேப்பமரத்தின் மீதுள்ள காகம் கரைவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக