வியாழன், 28 மே, 2015

வீட்டை எரிக்கும் விளக்கு சிறுகதை குறித்து பேரா.திருமலை நெடுஞ்செழியன்

இமையம் எழுதிய வீட்டை எரிக்கும் விளக்கு சிறுகதை (உயிர்மை மே 2015) தமிழுக்கு முற்றிலும் புதிய நவீன சிறுகதை. சமகாலப் பிரச்சனைகளைத் தமிழ் படைப்புலகம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கற்பிதங்களை இமையம் அடித்து நொறுங்கித் தூளாக்கியுள்ளார். தமிழ் படைப்புலகம் என்றால் ஒரு சூத்திரத்துக்குள் இயங்கும் காதல், காமம், ஆதிக்கம், ஒடுக்குதல் என்ற வட்டத்துக்குள் செயல்பட்டு வருகின்றது என்பது நாம் அறிந்தவை. இமையத்தின் வீட்டை எரிக்கும் விளக்கு சிறுகதை யாராலும் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ள கல்விப்புலத்தில் ஆய்வுத் துறைகளில் (எம்.பில். மற்றும் பிஎச்.டி.) நெறியாளர்களின் (ஆண்,பெண் பேராசிரியர் இருதரப்பினர்) கட்டுமீறிப்போன அதிகார மையத்தைத் தன் எழுத்தின் வன்மையால் சுக்கு நூறாக்கி அம்பலப்படுத்தி என்பதைவிட அடித்துத் துவைத்துக் கோடையின் கொளுத்தும் வெயிலில் தோரணம் கட்டி தொங்கப்போட்டுக் காயவைத்துள்ளார் என்று சொல்வதுதான் பொருத்தமுடையதாக இருக்கும். ஆண்,பெண் ஆய்வாளர்களையும் இமையம் விட்டு வைக்கவில்லை……. நெளிவு, சுழிவுகளோடு செயல்படும் தன்மைகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார். இது புனைவுதான் என்றாலும் இச் சிறுகதையில் ஒரு இடத்தில்கூடக் கற்பனை என்பது இல்லை. இமையம் என்னும் படைப்பாளி இப் படைப்பில் எங்கும் தன் மூக்கை நுழைக்காமல் பொம்மி, பூங்குழலி என்னும் பாத்திரங்களின் உரையாடல் வழியாகக் கதை நகர்த்திச் செல்கிறார். கதையின் தொடக்கத்தில் தொலைபேசி அழைப்பு பொம்மியின் முகம் சுருங்கியது என்ற வகையில் அமைந்து……. பொம்மி ஒரு முனைவர் பட்ட ஆய்வாளர் என்பதை வாசகன் அறிந்துகொள்ளப் படைப்பினூடே பயணம் செய்து அறிந்து கொள்கிறபோதுதான் இது ஒரு சரசாரி கதை என்ற தளத்தைவிட்டு ஒரு புதிய தளத்தில் செயல்படுகின்றது என்பதை உணருகிறபோதுதான் பூங்குழலியின் உரையாடலில் குறிப்பிட்ட தாத்தா நெறியாளராக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டுதான் கதையை வாசிக்க முடிகின்றது.
முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு முடித்து ஊர் திரும்பும் சூழ்நிலையில் பொம்மியை நெறியாளர் அலைபேசி வழியாக அழைக்கிறார்…….. பொம்மிக்கு விருப்பம் இல்லை….. ஆனால் பிஎச்.டி.பட்டம் கையில் கிடைக்கும்வரை தலையெழுத்து நெறியாளர் கையில்தானே உள்ளது…… என்ற மனக்குமுறல்…… பூங்குழலியோடு பொம்மியின் உரையாடல் தொடர்கிறது….. இடைஇடையே பின்னோக்கு உத்தியாகப் பெண் நெறியாளர்கள் பெண் ஆய்வாளர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் (மினுக்கிட்டு, நாங்கள் எல்லாம் அந்தக் காலத்துல எப்படிப் படிச்சோம்) கொஞ்சமும் கற்பனை இல்லை. அப்படியே எதார்த்தமாகத் தன் எழுத்தில் இமையம் படம்பிடித்துக் காட்டியுள்ளார். ஆண் நெறியாளர்களின் இயல்பையும் கற்பனை கலக்காது படம்பிடித்துக் காட்டியுள்ளார். படிக்கச் சொன்னார்….. எழுதச் சொன்னார்….. நான் எழுதியவைகளைக் கிழித்துப் போடவில்லை……..ஆறுமாதம் வரை ஆய்வு நல்லாத்தான் போய்கொண்டிருந்தது… என்ற பொம்மியின் உரையாடல் வழி ஆண் நெறியாளர்களின் காலம் கருதிக் காத்திருத்தல், பதுங்குவது பாய்வதற்குக், காலம் கனியட்டும் என்ற மனநிலையை உண்மையாகவே வெளிப்படுத்தி இருந்தது. நெறியாளர் போர்வையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்மணியின் உளப்பாங்கும் கற்பனை இல்லை. தமிழ்மணியின் செயல்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் ஆசிரியர்….. தமிழ்மணியின் மனைவி அவரைவிட மூத்தவர் என்பது அதிர்ச்சியாய் இருந்தது.தமிழ்மணியின் மனைவியை இமையம் சித்தரிக்கும் முறை அப்படியே திரைத்துறையில் காட்சிப்படுதலுக்கு உரியதாகும்.
நெறியாளர் தமிழ்மணி பொம்மியிடம் ஜொள்விடும்போதெல்லாம் உங்க அமெரிக்கப் பையன், பெண் எப்படி இருக்குறாங்க…. பேரன்,பேத்திகள் எப்படி இருக்குறாங்க என்ற பொம்மி விசாரிப்பதும்….. இப்படிப் பேசுவது என்னை வயதானவன் என்று குத்திக் காட்டுகிறாய் என்று கோபம் கொள்வது என்பதை எந்தக் கல்லூரி அறைகளில் ஒட்டுக்கேட்டு இமையம் எழுதினார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இப்படியாக ஆய்வூலகச் சூழலில் அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பெண்கள் மீதான வன்முறைகளை ஆண் மற்றும் பெண் நெறியாளர்கள் எப்படியெல்லாம் கட்டவிழத்துவிட்டிருக்கிறார்கள் என்பதைக் கற்பனை கலக்காது இமையம் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் என்றால் மிகையில்லை…….
கதையின் இறுதியில் நெறியாளர் தமிழ்மணியைச் சந்திக்கத் தன் தோழியை ஆங்கிலத்துறை வாசலில் விட்டுவிட்டுப் பொம்மி தன் தமிழ்த்துறைக்குச் செல்லுகிறாள்.
பொம்மி தமிழ்த்துறைத் தலைவரின் அறைக்குள் நுழைவதைப் பார்த்த மறுநொடியே பூங்குழலி தன்னுடைய செல்போனில் நேரத்தைப் பார்த்தாள். அடுத்த பத்தாவது நிமிசம் எப்போது வரும்? இன்னும் பத்து நிமிசம் எப்போது முடியும்? காத்திருந்தாள். வேப்ப மரத்தின் மீத இருந்த காகம் கரைந்தது” என்று கதை முடிக்கப்பட்டிருக்கும். இப்படி முடித்திருப்பதான் இந்தக் கதையின் சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். தமிழ்மணி பொம்மியின் உரையாடலை நினைத்திருந்தால் இமையம் மீண்டு தன் தோழியோடு உரையாடுவதாகக்கூட அமைத்திருக்கலாம். ஒரு தேர்ந்த படத் தொகுப்பாளர் போன்று இமையம் அந்த உரையாடலைத் தவிர்த்துக் கதையை முடித்திருப்பதன் மூலம் ஒரு முடிவைச் சொல்லாமல் படிக்கும் வாசகர் பரப்பிற்கு முடிவைத் தந்திருப்பது தமிழ் சூழலுக்கு முற்றிலும் ஒரு புதிய உத்தியாகும். வீட்டை எரிக்கும் விளக்கு என்னும் இச்சிறுகதை சமகாலப் பிரச்சனையை முன்வைக்கும் தமிழின் நவீன சிறுகதைகளின் தொடக்கப் பள்ளி என்றால் மிகையில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக