திருடன் மணியன் பிள்ளை : (தன் வரலாறு) ஜி.ஆர்.இந்துகோபன்
விமர்சனம் : இமையம்
கேரளாவின்
வாழத்துங்கல் என்ற கிராமத்தில் 1950-ல் கொடித்தறவாடு என்ற குடும்ப பெயர்கொண்ட
சேரூர் வடக்கேதில் இல்லத்து மணியன் பிள்ளை பிறந்தார். பதினோராவது வயதில் தந்தை
இறப்பு, வறுமை, பசி, ஏழ்மை ஏற்படுகிறது. பதினாறாவது வயதில் எதிர்வீட்டு பெண் சொன்னதற்காக
உறவினர் வீட்டுகுழந்தையினுடைய இடுப்புச் செயினை அவிழ்த்து வந்து கொடுக்கிறார்.
முதல் திருட்டு. பிறகு நண்பர்களுடன் உள்ளூர் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி.
முப்பது காசு சட்டைப் பையில் இருந்ததால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். பதினேழு
வயது. பதினெட்டு என்று போலீஸ் சொல்லச் சொல்கிறது. அப்படியே சொல்கிறார். ஆறுமாத
சிறைத்தண்டணை. கேரளாவின் புகழ்பெற்ற திருடன் மணியன் பிள்ளை உருவான கதை. 1967-68-ல்
ஆரம்பித்த திருடன் வாழ்க்கை 1995 வரை நடக்கிறது. திருடன் வாழ்க்கை எப்படியிருந்தது
என்று திருடன் மணியன் பிள்ளை சொல்ல ஜி.ஆர்.இந்துகோபன் எழுதியிருக்கிறார். வாசகனின் மனதை கரைக்கும் விதத்தில்..
திருடன் மணியன்
பிள்ளையின் கதை ‘ஐயோ பாவம்’ என்று
சொல்ல வைக்கிறது. பலருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட திருடனின் மீது இரக்கம்
கொள்ள வைக்கிறது. ஓரளவு சுமாரான வாழ்வு வாழ்வதற்கு, திருந்தி
வாழ்வதற்கு எடுக்கப்பட்ட அத்துணை முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டதே என்று வருத்தம்
ஏற்படுகிறது. மணியன்பிள்ளை – ஈவு இரக்கமற்ற பெரும்
திருடன்தான். பெண்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தைத் திருடுவதற்காக
சமையலறையிலுள்ள டப்பாக்களை அலசுகிறவன்தான். திருடிய பணத்தில் பெண்களோடு சேர்ந்து
லாட்ஜ்களில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து பணத்தை ஆவியாக்குகிறவன்தான். தன்னுடைய ஈனச்
செயலால் ஒரு பாவமும் செய்யாத, தாயை, சகோதரிகளை,
உறவினர்களை, நம்பிவந்த பெண்ணை அவமானத் தீயில்
பொசுக்கியவன்தான். காவல் நிலையம், நீதிமன்றம் என்று
அலையவிட்டவன்தான். வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடியவன்தான்.
அப்படிப்பட்டத் திருடன் மணியன்பிள்ளையின் கதையைப் படிக்கும் போது ஏன்கண்ணீர்
வருகிறது?
வயிற்றுக்கு
இல்லாதவர்களிடம் திருடவில்லை. கடைசிவரை யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை.
பட்டினியோடு படுத்துக் கிடக்கும் மனிதர்களின் வீட்டின் முன் பலமுறை சீனிக்கிழங்கை
வைத்து விட்டுப்போகிறான். காதல் செய்து மணந்து கொண்ட கணவன். உயிருக்கு
போராடுகிறான். மருந்து வாங்க பணத்திற்காக லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்,
யாரென்றே தெரியாத பந்தளத்தில் பிறந்த பெண்ணுக்காகத்
திருடப்போகிறான். போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். திருடப்பட்ட பணம், யாருடைய உயிரைக்காப்பாற்ற திருடினானோ – அந்த உயிரைக்
காப்பாற்ற முடியவில்லை. பணம் வருவதற்குள் – உயிர்போய்விடுகிறது,
மணியன்பிள்ளை ஒரே ஒரு முறை பிறருக்காகத் திருடினான். முகமறியாத
மனிதனுக்காக – பெண்ணுக்காக – தங்களுக்காக
ஒருவன் திருடி பணம் கொண்டு வந்திருக்கிறான் – என்பது கூட
அந்தப் பெண்ணுக்கும் – செத்துப்போன அந்த மனிதனுக்கும்
தெரியாது. மணவறைத் திருடன் சொல்கிற கதையைக் கேட்டு அழுகிற திருடன், கள்ளநோட்டு அடிக்கிற குட்டப்பன் கொடுக்கிற பணத்தை வாங்காமல் திருடியே
பிழைத்துக்கொள்வதாக கூறுகிற திருடன். யாராலுமே திருட முடியாது என்று நம்பியிருந்த
வீட்டில் திருடி-வீட்டுக்காரர்களாலேயே பாராட்டப் பெற்ற திருடன். இது போன்ற பல சம்பவங்கள் திருடன் மணியன்பிள்ளைமீது அன்புகொள்ள வைக்கிறது.
உலகில் முற்றிலும் மோசமானவன் என்று எவருமில்லை. முதல் நாள் கோடீஸ்வர வாழ்க்கை.
மறுநாள் பிச்சைக்காரன் வாழ்க்கை. இதுதான் திருடர்களுக்கு விதிக்கப்பட்டது.
திருடன்
மணியன்பிள்ளையின் கதை – உண்மையில் சமூகத்தில் யார் நிஜமான
திருடன் என்ற கேள்வியை ஓயாமல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. திருட்டுப்பொருளை
நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டுக்கு எடுத்து செல்கிற
போலீஸ்காரர்களா? போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கணவனை
பார்க்கவரும் திருடனின் மனைவிகளை பயன்படுத்திக்கொள்ளும் போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்துவந்து மாறிமாறி பயன்படுத்திவிட்டு,
இறுதியில் தங்களுக்கு சுகம் கொடுத்த இடத்திலேயே எட்டிஉதைத்து
சித்ரவதைசெய்யும் போலீஸ்காரர்கள், திருடனின் வீட்டுக்குச்
சென்று, திருடனின் மனைவியைப் பயன்படுத்திக்கொள்ளும்
போலீஸ்காரர்கள், ஜெயிலில் சட்டவிதிகளை பயன்படுத்தாத, கைதிகளுக்கான உணவுப் பொருட்களை திருடும் போலீஸ்காரர்கள் – யார் திருடன்? திருடனிடமிருந்து – திருட்டுப்பொருட்களை வாங்கி கோடீஸ்வரரானவர்கள், திருடனின்
பணத்திலிருந்து சாமி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தும் ஊர்ப்பெரியவர்கள், அறிவைப் பயன்படுத்தி கோடிகோடியாக திருடும் பெரும் திருடர்கள் – சமூகத்தில் இதுதான் திருட்டுக்கான இடம் என்று அடையாளப்படுத்த முடியாத
அவலம். கோடிகோடியாக வரிஏய்ப்பு செய்யும் முதலாளிகள் – சமூக
அந்தஸ்தில் உள்ளவர்கள். வயிற்றுக்காக திருடுகிறவன் உள்ளே – ஆடம்பரத்திற்காக,
கோடிகோடியாக திருடுகிறவன் வெளியே – சமூகத்தில்
யார் திருடன்? – யார் குற்றவாளி? – திருடன்
மணியன் பிள்ளை – இக்கேள்விகளை கேட்பதற்காகவே தன்னுடைய கதையை
சொன்னதுமாதிரி இருக்கிறது. எது திருடர்களுடைய வாழ்க்கை? எது
மானஸ்தர்களுடைய வாழ்க்கை? மானஸ்தர்கள் மட்டுமே வாழும் பூமியா
இது?
தொடக்கத்தில்
எந்த வழியும் இல்லை. எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்ற நிலையில் திருடவும்,
விபச்சாரத்தில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். பிறகு அதுவே
வாழ்க்கையாகிவிடுகிறது. மீறி ஒரு கௌரவமான வாழ்வை வாழலாம் என்று திருடர்களும்,
விபச்சாரிகளும் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எப்படியோ
தோற்றுப்போய்விடுகிறது. சமூகக் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் – ‘திருடன்’, ‘விபச்சாரி’ என்ற பட்டத்திலிருந்து ஒருநொடிகூட விலகியிருக்க, விலகிவாழ
முடிவதில்லை. காவல் நிலையம், நீதிமன்றம், ஜெயில் – ஒரு மனிதனை எளிதில் குற்றவாளியாக மட்டுமல்ல
நிரந்தர குற்றவாளியாக்கிவிடும். வறுமை, ஏழ்மை, பசி, சந்தர்ப்பம், சூழ்நிலை
திருடனாக, விபச்சாரியாக மாற்றுகிறது. நீதிமன்றத்திற்கு தேவை
சாட்சி, உண்மை அல்ல. காவல்நிலையத்திற்கு, நீதிமன்றத்திற்கு தேவை – வழக்கு. ஜெயிலுக்குத் தேவை
குற்றவாளி, வயிற்றுக்காக திருடுவதும், வசதிக்காக
திருடுவதும் – ஒன்றுதான் சட்டத்தின்முன். ஜெயில் ஒரு
மனிதனுடைய மன இயல்பை மாற்றிவிடாது. ஜெயில் பெரும் திருடர்களின் கூடாரமாக
இருக்கிறது. ஜெயிலின் சட்டவிதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படாததாக இருக்கிறது.
சட்டம் ஒரு மனிதனுடைய உடலைத்தான் ஜெயிலுக்குள் அனுப்புகிறது. மனதை அல்ல. தவறான
வாழ்க்கைக்குள் மனிதர்களை தள்ளிக்கொண்டேயிருப்பது எது? இதுதான்
திருடன் மணியனின் கேள்வி. ஆடம்பரத்திற்காகவும்,
உல்லாசத்திற்காகவும் ஒருவன் பணத்தைத் தேடுகிறான். பசிக்காக ஒருவன்
பணத்தைத் தேடுகிறான். பணத்திற்குத் தெரியுமா? பசியைப்போக்க
பயன்படப்போகிறோம், உல்லாசத்திற்காக, ஆடம்பரத்திற்காக
பயன்படப்போகிறோம் என்று. பணத்தின் மதிப்பு பயன்படுத்துகிற தன்மையைப் பொறுத்து
அமைகிறது.
திருடர்கள்
பற்றிய விபரங்களை சொல்கிறார் மணியன்பிள்ளை. பால்பொடி மட்டுமே திருடும் திருடன்.
மழைக்காலங்களில் மட்டுமே திருடும் திருடன். ஐ.ஆர்.எஸ். வேலையை விட்டுவிட்டு
திருடுவதிலுள்ள தில்லுக்காக திருடவந்த திருடன். ஜெயிலிலிருந்து தப்பித்துச்
செல்வதற்காகவே அற்பத்திருட்டுகளில் ஈடுபடும் திருடன். எவ்வளவுதான் கை
தீய்ந்துபோயிருந்தாலும் பாவப்பட்டவர்களின் வீட்டில் திருடாத திருடன்.
வசதியானவர்களின் வீட்டில், குறிப்பாக மருத்துவர்களின்
வீடுகளில் விரும்பித்திருடும் திருடன், திருடும் போது
வீட்டிலுள்ள பெண்களை தொந்தரவு செய்யாத திருடன், முதல் இரவில்
மட்டுமே திருடும் (மணவறை) திருடன், முதலிரவில் கணவன்
தூங்கும்போது, புதுப்பெண்ணுடன் படுக்கும் திருடன், வங்கியில் திருடும் திருடன். பிடிப்பட்டதுமே உண்மையைச் சொல்லிவிடுகிற
திருடன் என்று எல்லாவகையான திருடர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். அதோடு
பழையகாலத் திருடர்கள் கொலை செய்வதில்லை, கூட்டாக
திருடப்போவதில்லை, பெண்களை தொந்தரவு செய்வதில்லை, கோவிலில் திருடுவதில்லை, சாமி சிலைகளைத்
திருடுவதில்லை என்று சொல்கிறார். நவீனகால திருடர்கள் கூட்டாக திருடுகிறார்கள்.
நவீன ஆயுதங்கள், கருவிகளோடு திருடுகிறார்கள். எளிதில் கொலை
செய்கிறார்கள். கோடிக்கணக்கில் திருடுகிறார்கள் என்றும் சொல்கிறார். அதேநேரத்தில்
திருடர்கள் திருடுவதின் மூலம் கிடைக்கும் பணம் எப்படி ஆவியாகப்போகிறது என்பதையும்
சொல்கிறார். ஆடம்பர வாழ்க்கை, பெண்கள் தொடர்பு, குடி, இப்படித்தான் சீரழிகிறது.
திருடர்களுக்கான
உகந்த நேரமும், சுபவேளையும் இருட்டுத்தான். இருட்டில்தான்
திருடர்கள் உயிர்பெறுகிறார்கள். பாலியல் தொழிலாளிகள் உயிர்பெறும் நேரமும்
இருட்டுத்தான். திருடர்களும் பாலியல் தொழிலாளிகளும் புதியபுதிய மேய்ச்சல் நிலங்களை
நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார்கள் என்று சொல்கிற மணியன்பிள்ளை – எந்தெந்த வீட்டில் எப்படியெல்லாம் திருடினார் என்ற ரகசியத்தையும், ஜன்னல் கம்பிகளை வளைக்கும் நுட்பங்களையும் அழகாகச் சொல்கிறார். அதோடு
உலகில் பாதுகாப்பான வீடு, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று
யாரும் சொல்லமுடியாது. இதுவரை உங்களுடைய வீட்டில் திருடன் நுழையவில்லை என்றால் –
உங்களுடைய வீடு அவ்வளவு பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை.
உங்களுடைய வீடு இன்னும் திருடனின் கண்ணில் படவில்லை அவ்வளவுதான் என்ற
ரகசியத்தையும், சொல்லி எல்லாரையும் கலங்கஅடிக்கிறார். திருடர்களுக்கென்றே வளைந்து கொடுக்கும் சன்னல் கம்பிகள், திருடர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே வீட்டைச் சுற்றி
விட்டுக்காரர்கள் வைத்திருக்கும் பொருட்கள், திருட முடியாத
வீடு என்று ஒன்று இன்றுவரை உலகில் கட்டப்படவே இல்லை என்று வீட்டுக்காரர்களை தூங்கவிடாமல் செய்கிற பல உண்மை கதைகளையும் சொல்கிறார்.
திருடர்களின் வாழ்க்கை சாகசங்களால் நிறைந்தது, ஒவ்வொரு
திருட்டும் ஒரு சாகசம், ஒவ்வொருமுறை போலீசிடமிருந்து,
கோர்ட்டிலிருந்து தப்பிப்பதும் சாகசம்தான். மற்றவர்களை கலங்க
வைக்கும் சாகசம். திருடர்கள் ஒருபோதும் சாக விரும்புவதில்லை. தற்கொலை செய்துகொள்ள
நினைப்பதுகூட இல்லை. யாசகம் கேட்பதில்லை. எவ்வளவு திருடினாலும் நிறைவானது என்று
சொல்வதில்லை. திருடர்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை என்று திருடர்களின்
குணங்களையும் மன இயல்புகளையும் சொல்கிறார். அதே நேரத்தில் காட்டிக்கொடுத்தலும்,
வஞ்சகமும், துரோகமும் மிகவும் இயல்பாக நடக்கும்
– நிஜ அதிசய உலகம். திருடர்களின்
மன உலகும், போலீஸ்காரர்களின் மன உலகும் எப்படி ஒன்றுபோலவே
இருக்கின்றன? அதிசயம்தான்.
திருடன் மணியன்
பிள்ளை கலகக்காரர். ஊரில், போலீசில், நீதிமன்றத்தில்,
ஜெயிலில், கள்ளுக்கடையில், லாட்ஜில் என்று எல்லா இடத்திலும் நீதிபேசுகிற, சட்டம்,
தர்மம், நியாயம், சமூக
ஒழுங்கு, புரட்சி, சமத்துவம் பேசுகிற
கலகக்காரன் – சமூக விமர்சகன். தன் கதையை சொல்வதின்வழியே
சமூகத்தை விமர்சிக்கிறார். தான் யோக்கியன், தவறுதலாக
திருடிவிட்டேன், தெரியாமல் பல குற்றக்காரியங்களை செய்தேன்
என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. தன்னை நிரபராதி என்றோ, கழிவிரக்கத்திற்காகவோ
தன் கதையை சொல்லவில்லை. தன் கதையின் வழியே சமூகத்தின் மீது, நீதியமைப்பின்
மீது, மற்ற சமூக அமைப்பு, நிறுவனங்களின்
மீது கேள்விகளை எழுப்புகிறார். கேள்வி எழுப்புகிறவன் குற்றவாளி. கேள்வி குற்றமானது
அல்ல. குறையானது அல்ல. சமூகத்தில் யார் கௌரவமான மனிதன்? எது
கௌரவமான வாழ்க்கை? ஏழ்மையை சமூகம் ஏன் குற்றமாகப்
பார்க்கிறது. ஏழ்மையை பழக ஏன் சமூகம் கற்றுக்கொள்கிறது. சமூகத்தில் யார் திருடன்,
யார் சமூகவிரோதி, இப்படி ஆயிரமாயிரம்
கேள்விகள். இந்த கேள்விகளால்தான் திருடன் மணியன் பிள்ளையின் தன் வரலாறு
உயிர்பெறுகிறது. ஜி.ஆர்.இந்துகோபனின் மொழி அதற்கு துணை
நிற்கிறது.
திருடனுக்கென்று
குடும்ப வாழ்க்கை இருக்கமுடியுமா? அப்படியான வாழ்க்கை மீது
ஆசைப்பட முடியுமா? திருடர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுமா –
என்றால் ஏற்படும் என்றுதான் மணியன் பிள்ளை சொல்கிறார். கள்ளநோட்டு
அச்சடிக்கும் குட்டன், திருடப் போன இடத்தில் மணப்பெண்ணின்
மீது ஆசை ஏற்பட்டு, அவளைத் தொட்டதும் தன் மகளின் நினைவு
வந்ததால், மணப்பெண்ணைத் தட்டி தூங்க வைத்த – மணவறைத் திருடன், சலீம்பாயாக வாழும் காலத்தில்
மணியன்பிள்ளை நடந்துகொள்ளும் விதம் – இது ஒரு திருடனின் கதை
என்று மட்டுமே படித்து விட்டு நகர்ந்துவிட முடியாது. எவ்வளவு கொடூரம்
நிறைந்தவர்களாக இருந்தாலும் போலீஸ்காரர்களும் மனிதர்கள்தானே. சுகு, செல்லப்பன் பிள்ளை, நந்தகுமாரன் – போன்ற போலீஸ்காரர்களின் – கருணை என்பது – பெரும் கருணைதான். முடிந்தவரை நீதிமன்றம் மிகுந்த கருணையோடுதான்
நடந்துள்ளது. திருடனுக்கும் சட்டம் நல்லது செய்யும். கருணை காட்டும் என்பதற்கு பல
கதைகளைச் சொல்கிறார். வியப்பாக இருக்கிறது. தங்கப்பன், கிருஷ்ணன்
குட்டி, சிவன் பிள்ளை, தேங்காய் பாபு,
இடிவெட்டு மைதின், அப்துல் ரகீம், மணவறைத் திருடன் போன்ற பல திருடர்களின் சாகசங்கள் நம்மனதில் நிலைத்து
நிற்கின்றன.
தன்னுடைய
கதையில் மணியன்பிள்ளை திரும்பத்திரும்ப பயன்படுத்திய ஒரு சொல் – விதி தீர்மானித்தது என்பது, திருடன் தண்டனை
அனுபவிக்கிறான் சரி. லட்சம் லட்சமாக பணம், பொருள் இருந்தும் – அவை திருடியதால் வந்தது
என்பதற்காக – ஒரு பைசாகூட, ஒரு நூல்
சீலைகூட வாங்காத ஒரு பாவமும் செய்யாத மணியன்பிள்ளையின் தாய் – சகோதரிகள் – அதே நேரத்தில் – திருட்டு
வழக்கிலிருந்து மகனை மீட்பதற்காக – நிலத்தைவிற்று, காவல் நிலையத்திலும், நீதிமன்ற வாசலிலும் நிற்கும்
தாய் – திருடனுடன் சகவாசம் வைத்ததற்காக எந்தத் தப்பும்
செய்யாமலேயே – தண்டனையை, அவமானத்தை
அனுபவித்த – திருடனுடைய உறவினர்கள், திருடனிடமிருந்து
ஒரு காசு வாங்காத, ஒரு வேளை சோற்றுக்குக்கூட ஒரு பொருளையும்
வாங்காத, திருடிவிட்டு மாட்டிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும்
எதையாவது விற்றுவந்து ஜாமீன் எடுக்கக் காத்திருக்கும், தாய்,
சகோதரி, மனைவி, தன்கணவனை
அடிப்பதில் கொஞ்சம் குறைக்கட்டும் என்று போலீசுக்காரர்களுடன் படுக்கும், படுப்பதற்கு செல்லும் மனைவிகளின் நிலையையும் விதிதான் தீர்மானித்ததா?
திருடனின் தாய், திருடனின் சகோதரி, திருடனின் மனைவி என்ற பட்டம் – அவமானத் தீயில் பொசுங்கி சாகிறார்களே சாகும்வரை – இதுவும்
விதி தீர்மானித்ததா? படிப்புக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட
பெண்ணுக்காக, கணவனைக் காப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட
பெண்ணுக்காக அழுத கண்கள் – மணியன்பிள்ளையினுடையது – இந்த முரண் – மனித மனத்தின் விசித்திரம்.
பதிமூன்று வயது சிறுமியை சினிமா தியேட்டருக்கு அழைத்துச்சென்று
பயன்படுத்திக்கொள்கிற, பதினாறாவது வயதிலேயே எதிர்வீட்டு
ஆசிரியையால் பயன்படுத்திக்கொள்ளப்படுகிற, மடத்துப் பெண்களால்
பயன்படுத்திக் கொள்ளப்படுகிற, ரதியை இழுத்துக்கொண்டு ஓடுகிற,
பணம் தந்து பயன்படுத்திக்கொள்கிற ‘அக்கா’ என்கிற பெண், சினிமா தியேட்டரில் பயன்படுத்திக்
கொள்ளும் பெண், ஜானகி, சந்திரிகா,
தாட்சாயினி, பொன்னம்மா என்று திருடன் மணியன்
பிள்ளையின் வாழ்க்கையில் நூறுக்கும் அதிகமான பெண்கள் வருகிறார்கள். ஈடுபாட்டுடன் வருகிறார்கள் என்பதுதான் அதிசயம். பெண்களைத் தவறாக பயன்படுத்துகிற, பெண்களால் தவறாகப்
பயன்படுத்திக்கொள்ளப்படுகிற மணியன் பிள்ளை ஓயாமல் பெண்களுக்காகப் பேசுகிறார்.
தொடர்ந்து பாலியல் தொழிலாளிகள் குறித்து, அவர்களுடைய
பாவப்பட்ட நிலை குறித்து அக்கறையோடு பேசுகிறார். அதோடு
திருடப்போகும் வீடுகளில் அடிவாங்கி, உதை வாங்கி இரவு
முழுவதும் அழுதுகொண்டிருக்கும் பெண்கள் குறித்தும் கவலைப்படுகிறார். வீடு அமைதியாக தூங்குவதற்கு, வாழ்வதற்கான இடமாக
பெண்களுக்கு இருப்பதில்லை என்று சொல்கிற திருடன், பெண்கள்
கழற்றி வைத்திருக்கும் நகைகளை மட்டுமே திருடுவார். அணிந்திருக்கும்
நகைகளை திருடுவதில்லை. பிரமாதமான கொள்கை.
இப்படி பல முரண்கள். முதலாளி
வர்க்கத்தின் மீது, பணக்கார வர்க்கத்தினர் மீது ஓயாமல் காறி
துப்பிக்கொண்டேயிக்கிறார். மணியன் பிள்ளை சந்தித்த
பெண்களில் குற்றவுணர்ச்சியுள்ள ஓரே ஒரு பெண் நாடக-நடிகை மேபு மட்டும்தான்.
திருடன் மணியன்
பிள்ளையின் கதை, வேதனையில், வலியில்,
அவமானத்தில், பற்றியெறியும் பசியில், காயத்தில், சீழில், கண்ணீரில்
உருவானது. இது மணியன் பிள்ளையின் கதை அல்ல. கேரள சமூகத்தின் கதை.
ஜீ.ஆர்.இந்துகோபன் எந்த சொற்கள் கல்லையும் பொடியாக்குமோ, எந்த
சொற்கள் கண்ணீரைப் பொங்கி பீரிடச் செய்யுமோ, அந்த சொற்களால்
எழுதியிருக்கிறார். திருடன் பிள்ளையின் கதை நன்றாக
இருக்கிறது என்று சொல்லமாட்டேன். வலியில், வேதனையில் துடிக்கிறவனின்-வலி நன்றாக இருக்கிறது, ரசிக்கும்படியாக
இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?
திருடன் மணியன் பிள்ளை (தன்வரலாறு),
ஜி.ஆர்.இந்துகோபன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
டிசம்பர் 2013
விலை ரூ.590/-
அம்ருதா – மார்ச் 2015
அருமை
பதிலளிநீக்கு