ஞாயிறு, 1 மார்ச், 2015

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி (மலேசியா) விமர்சனம் – இமையம்.

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி (மலேசியா)
                                                       விமர்சனம் – இமையம்.

       உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் தொகுப்பில் இரவுப்பற்றிய கவிதைகள், குழந்தைகள், தனிமை, காத்திருப்பு, தொலைந்துபோவது, அன்பை, விருப்பத்தை சொல்வதற்கான வார்த்தைகளுக்காக அலைவது, காத்திருப்பது போன்றவை குறித்துத்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. கவிதைகளில் மனிதர்களைக்காட்டிலும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் அதிகம் இடம் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையின் பெரும் போராட்டம் என்பது அன்பை கொடுப்பதற்கும், பெறுவதற்குமானதாக இருக்கிறது. அதற்காகத்தான் அனைத்து வகையான துரோகங்களும், விழைவுகளும், விட்டுகொடுத்தல்களும், சகிப்புத்தன்மைகளும், சமரசங்களும், சோரம்போதலும். எழுதித் தீராதப் போராட்டம். பெரும் கதை. மனிதகுலம் ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிற, போராடி, பேசிக்கொண்டிருக்கிற பெரும் கதையைப்பற்றி, தனக்கு வசப்பட்ட சொற்களின், சொற்களின் கூட்டுக் சேர்க்கைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார் பூங்குழலி.
       அன்பு கொடுக்கப்படுவதுமல்ல, பெறப்படுவதுமல்ல. உணரப்படுவது, அறிவது. இதுதான் பூங்குழலியின் கவிதைகள் தரும் செய்தி. ஒளியைப்போல, ஒலியை, வாசனையை, நாற்றத்தைப்போல, காற்றைப்போல அறிய, உணரப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த முடிவை நோக்கி அதிரடியாக இல்லாமல், வெறும் அறிவிப்பாக இல்லாமல் மிக இயல்பாக நகர்ந்த விதம் பிரமிப்பு. அதனால் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைகளாக இருக்கின்றன. எது கவிதை, யார் கவிஞன், கவிதை எப்படி உருவாகிறது, அதற்கான மொழி எது என்பதற்கு நல்ல உதாரணங்கள் இத்தொகுப்பில் இருக்கின்றன. நல்லக் கவிதைகளும், நல்லக் கவிதைத் தொகுப்புகளும் இல்லாமையே தற்காலத்தில் தமிழ்ச் சமூகம் கவிதை குறித்த பேச்சைக் குறைத்திருப்பதற்குக் காரணம்.
       தமிழ்க் கவிதைகள் அதிகம் பார்க்காத, பேசாத, அக்கறைப்படாத, பதிவு செய்யாத, உலகம், குழந்தைகளின் உலகம். வளர்ந்த மனிதர்களுடைய அழுகையும், கண்ணீரும், புலம்பலும், பரிதவிப்புகளும்தான் இலக்கியப் படைப்புகளுக்கான கச்சாப் பொருள் என்று நினைக்கிறோம். அழகிய, புதிர்கள் நிறைந்த, இழப்பையும், வலியையும், வஞ்சகத்தையும் உடனே மறந்துவிடுகிற குழந்தைகளின் உலகத்தை தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால் பூங்குழலியின் கவிதை உலகம் – குழந்தைகளுக்கானதாக இருக்கிறது. “எங்கள் பால்யம், வீட்டு சுவர் எங்கும், வரையப்பட்டிருந்தன”. எளிய சொற்கள். இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்குமானது, எல்லா மனிதர்களும் வாழ்ந்த வாழ்க்கை. ‘எங்களுக்கென்று ஒரு வீடு இருந்தது’ – கவிதை நம்முடைய பால்ய காலத்திற்குள் பயணம் செய்ய வைக்கிறது. நாம் பெற்றது, இழந்தது, சேமித்து வைக்கத் தவறியது, எது பாதுகாக்கப்பட வேண்டியது, எது அரிய பொக்கீஷம்? பழைய நினைவுகள் அழுவதற்கும், சிரிப்பதற்கும் மட்டுமல்ல, மீள் வாழ்க்கைக்குரியது. எல்லாரும் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாரும் எழுத வேண்டிய கவிதை. பூங்குழலி எழதியிருக்கிறார். நம்மை  அடையாளம் காண வைப்பது, உணரவைப்பது, படிக்கிற ஒவ்வொருவருடைய அனுபவமாக, உலகமாக மாற்றுகிற, அந்த அரிய ரசவாதத்தை செய்கிற படைப்புகளை கலை என்கிறோம். அவற்றை உருவாக்கியர்களை கலைஞன் என்கிறோம். பூங்குழலிக்கு நன்றாக எழுத வருகிறது என்பதற்கு ‘எங்களுக்கென்று ஒரு வீடு இருந்தது’ என்ற கவிதை மட்டுமல்ல, தொகுப்பில் பல கவிதைகள் சாட்சிகளாக இருக்கின்றன.
       குழந்தைகளுடைய உலகம்பற்றி எழுதிய அளவிற்கு மனிதர்கள் தொலைந்துபோவதுப் பற்றியும் பூங்குழலி நிறைய எழுதியிருக்கிறார். மனிதர்கள் ஓயாமல் தொலைத்துக்கொண்டும், தொலைந்துப்போய்க்கொண்டும் இருக்கிறார்கள். ஏன்? அதுதான் வாழ்க்கை. பொது வெளியில் மட்டுமல்ல, தங்களுக்குள்ளேயே மட்டுமல்ல, காலத்தில், இடத்தில், நினைவுகளில், தனிமையில், காத்திருப்பில், இரவில் தொலைந்துபோகிறார்கள். தொலைந்து போவது ஒரு சுகம். தொலைந்துபோவதை தேடுவது ஒரு சுகம். எது பெரியது? இரண்டும்தான் என்கிறார் கவிஞர். தன்னைத் தொலைப்பதில்தான் அதிக ஆர்வம் கவிஞருக்கு. தொலைந்துபோவதில் வருத்தம் இல்லை. துக்கம் இல்லை. அச்சம்கூட இல்லை. மகிழ்ச்சியா என்றால் அதுவும் இல்லை. தொலைந்துபோவதும், அதற்காக புதியபுதிய சூழலை, சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் – அதற்கான ஏற்பாடுகளை செய்வதும் மகிழ்ச்சி, வாழ்வு. ஓயாமல் தன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறார். தொலைப்பதே தேடுவதற்காகத்தான். சலிக்காத சாகச விளையாட்டு. தொலைந்து போவதும், தேடுவதும்தான் வாழ்வின் நிமித்தமா? “எனக்கான சொற்களை, எனக்குள் மட்டுமே, பேசிக்கொண்டிருக்கிறேன்.” என்பதுகூட ஒரு நிலையில் இல்லாமல் ஆகிவிடுகிறது. தன்னை மட்டுமல்ல தனக்கான சொற்களையும் தொலைத்துவிடுகிறார். மொழி இழப்பு சாத்தியமா? ஆமாம் என்கிறது பூங்குழலியின் கவிதைகள். ஒவ்வொரு கணமும் அறிந்தும், அறியாமலும் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம். தொலைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். விநோதம்தான். தொலைந்து போவது எப்படி? அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன? வாழ்க்கையை இலக்கியம்தான் கற்றுத்தர முடியும் என்பதற்கு நல்ல உதாரணங்கள் இத்தொகுப்பின் கவிதைகளுக்குள் இருக்கின்றன.
       தொலைந்து போவதை மட்டுமல்ல இரவையும் கொண்டாடுகிறார் பூங்குழலி. இரவு அவருக்கு தூங்குவதற்கானது அல்ல. செயல் ஊக்கம் பெறுவதற்கானது. இரவில்தான் கவிஞரின் உலகம் செயல்படவும், வாழவும், ஆரம்பிக்கிறது. இருட்டிலா, வெளிச்சத்திலா வாழ்க்கை? இருளும், ஒளியும் நம் மன உருவங்கள்தானே. இரவை நாம் தூங்குவதற்காக மட்டுமே   ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாளின் ஒரு பகுதியை செயல்படாமைக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறோம். இருள், இருட்டு, இரவு – எப்படி அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம்?  மூதேவி. ஸ்ரீதேவி மட்டும் மனிதர்களுக்கு போதுமா? மூதேவியோடு ஒரு நாள் இல்லாவிட்டால் மனிதர்கள் என்னாகிறார்கள்? இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசமில்லை. எல்லாம் நம்முடைய மன உருவங்கள். கவிஞர் இரவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார். அதோடு நம்மையும் இரவின் ஒலிகளுக்குள், புதிர்களுக்குள் இட்டுச் செல்கிறார். இதுதான் பூங்குழலி கவிதைகள்.

       மனிதர்களுடன் சேர்ந்திருப்பதைவிடவும் தனிமையிலும், அதன் வெறுமையிலும் இருப்பதுதான் கவிஞருக்கு பெரு விருப்பமாக இருக்கிறது. பூங்குழலி தனிமையை எதிர்கொள்ளும் விதம் புதிது. மனிதர்கள் எப்போதும் பெரும் கூட்டத்திற்குள் இருக்கவும், புழங்கவுமே விரும்புகிறார்கள். ஆனால் கவிஞரின் மனம் பொது மனோபாவத்திற்கு எதிர்திசையில் பயணிக்கிறது. இந்த முரண்தான் கவிதைக்கான கச்சாப்பொருள். தொகுப்பிலுள்ள அநேகக் கவிதைகள் வெறுமையை நோக்கி பயணம் கொண்டதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வது அவரவருக்குரிய பிரத்தியோகமான தனிமையிலும் வெறுமையிலும்தான். கவிதைகளில் வெறுமை, தனிமை குறித்த புகார் இல்லை. புகழ்ச்சி இல்லை. பொக்கீஷம் என்று நாம் சேமித்து வைத்திருக்கும் எல்லா நினைவுகளுமே – வெறுமையைக் காட்டக்கூடிய, பேசக்கூடியதாகவே இருக்கிறது. தனிமையை, வெறுமையைப்பற்றி மேலோட்டமாக அல்ல ஆழமாக உணர்ந்து பேசினாலும் எந்த இடத்திலும் தவிப்பு, ஏக்கம், இழந்ததின் வலி, தப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. ஆனால் வெறுமையை நோக்கி பயணிப்பதில் கவிஞரின் மனம் கொள்ளும் விழைவு வியப்பளிக்கிறது. பூங்குழலியின் வெறுமையைப்பற்றி பேசும் கவிதைகள் பல நம்முடைய மரபில் பெரும் செயலாக பின்பற்றப்பட்டு வந்த வனவாசம், முதுமக்கள் தாழி போன்ற பண்பாட்டுக் கூறுகளை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதுதான் மரபையும் நவீனத்துவத்தையும் இணைப்பது. இணைப்புப்புள்ளியை கவிஞர் சரியாகவே செய்திருக்கிறார்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பில் ஆண், பெண், மன உலகின் விசித்திரங்கள் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில் பெண்கள் ஓயாமல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை வேகவேகமாகவும் கேட்கிறார்கள். ஆனால் ஆண்கள் எப்போதும்போல எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறார்கள். “சரி”, “பார்க்கலாம்”, “செய்”, “தொந்தரவு பண்ணாத”, “உன்னிஷ்டம்”. இதை பூங்குழலி “உன்னைச் சுற்றி இறந்து கிடக்கும் சொற்களை பொறுக்கி எடுக்கிறேன்” என்று எழுதுகிறார். அன்பை பகிர்வதில், ஏற்பதில் எவ்வளவு சிக்கல்கள்? சிக்கலைப்பற்றி, அதற்கான சூழலைப்பற்றிப் பேசாமல் – அதன் வலியைப்பற்றி கவிதை பேசுகிறது. எதையும் கோராத, எதையும் முன்மொழியாத கவிதைகள். “நம்பிக்கையுடன், சிரித்துசிரித்து, வளர்த்த காதல், காயமாய், சீழ்ப்பிடித்து நாறுகிறது.” மனித உறவுகள், மனங்கள் எல்லாமே காயமாகவும் சீழ்ப்பிடித்தும்தான் இருக்கிறது. சிரிப்பு எப்படி காயமானது? சீழானது என்பதுப்பற்றி பல கவிதைகள் தொகுப்பிற்குள் இருக்கின்றன. வாசகரின் மனதை காயமாக்கும் விதத்தில், காயத்தை உணரும் விதத்தில் ஒரு படைப்பு எழுதப்படுமானால் அதுதான் படைப்பு. கலை.
       பூங்குழலி பெண். அவருடைய கவிதைகளில் எங்குமே கண்ணீர் இல்லை. புகார், புலம்பல், பரிதவிப்பு, குறை கூறல், ஆண் மீதான பகை, வெறுப்பு துளியும் இல்லை. ஆச்சரியம். அதே மாதிரி முலை, யோனி, மாதவிடாய், வலி, பெண் உடல், உடல்மொழி, உடல் அரசியல், ஆண் அறியா ரகசியம் போன்ற சொற்கள் ஒரு இடத்திலும் இல்லை. இதுதான் அவருடைய சொற்களை கவிதையாக்கி இருக்கிறது. தன்னை உணர்தல், தான் வாழும் காலத்தை, வாழும் வாழ்க்கையை எழுதுவது – கவிதை என்பதை உணர்ந்தது மட்டுமல்ல அதை உயிருள்ள சொற்களால் எழுதியிருக்கிறார்.
       பூங்குழலி மலேசியாவில் பிறந்தவர். அங்கேயே வாழ்கிறவர். அந்த நாட்டின் மலைகள், மேடு பள்ளங்கள், ஆறுகள், செடிகொடிகள், காற்று, மரம், வாசனை எங்குமே பதிவாகவில்லை என்பதும், மலேசியா என்றால் ரப்பர் தோட்டம் என்பது மாறி இப்போது செம்பனை மரங்கள் அறுபது சதவிகித காடுகளில் வளர்கின்றன? ரப்பர் தோட்ட தொழிலாளிகள் என்னவானார்கள்?  எந்தக் குறிப்பும் இல்லை. பூங்குழலி எழுத வேண்டியது மலேசிய மண்ணுக்கான கவிதையை, அதன் அடையாளத்தை. கவிதையின் ஜீவன் அந்த அடையாளத்திற்குள் இருக்கிறது. கவிஞர் அறிய வேண்டியது இதைத்தான். சமூகத்தின் மீதான ஈடுபாடு, அக்கறைதான் இலக்கியப் படைப்பின் அடிப்படை. உயிர்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படிக்க முடியும். அவ்வாறு படிக்க முடிவதற்கு ஒவ்வொரு கவிதையும் பல ஈர்ப்புகளை தனக்குள் கொண்டிருப்பதுதான்.

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் (கவிதைத்தொகுப்பு)
-    பூங்குழலி (மலேசியா)

வெளியீடு – வல்லினம்,
  28, C Jalan SG 3/2.
      Taman Sri Gombak,
      Batu Caves,
      Selangor,
      Malaysia.

உயிர்மை – மார்ச் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக