திங்கள், 13 அக்டோபர், 2014

சாம்பன் கதை - இமையம்

“சாம்பன் வேற யாருமில்லை.  ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்.  பகவான் கிருஷ்ணரின் மகன்தான்.  இந்தக் கதையில் வருகிற சாம்பன்.  விசுவாமித்திர முனிவரின் சூழ்ச்சியில் அரிச்சந்திரன் வெகு துன்பப்பட்டான்.  சகுனியின் சூழ்ச்சியால் துரியோதனாதிகள் துன்பப்பட்டு  மாண்டார்கள்.  நாரதரின் சூழ்ச்சியால் சாம்பன் பட்ட துன்பம்தான் இது.
•••••••••
“உலகை வலம்வந்து சஞ்சாரம் செய்துகொண்டிருந்த நாரத முனிவருக்குத் திடீரென்று கிருஷ்ணரைச் சந்திக்க வேண்டும் என்று தோன்றிய மறுகணமே துவாரகைக்குப் புறப்பட்டார். யது குல வம்சத்தில் மேலான பண்புகொண்ட வாசுதேவரை முதலில் சந்திக்கச் சென்றார்.  மகா முனிவரின் வருகையைக் கண்டு உளம் மகிழ்ந்து, முனிவருக்குரிய மரியாதைகளைச் செய்து வரவேற்றார் வாசுதேவர்.  வாசுதேவரைச் சந்தித்த பிறகு ரைவதக மலையின் உச்சியில் வசித்துவந்த கிருஷ்ணரிடம் சென்றார் நாரதர்.  தன் மாளிகைக்கு வந்த நாரதரை ஓடிவந்து வரவேற்றதோடு வேண்டிய உபசரணைகள் செய்தார் கிருஷ்ணர்.  அதோடு விருஷ்ணி இனத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோரும் வந்து வணங்கினர்.  கிருஷ்ணரின் மனைவிகள், மகன் பிரத்தியுமனன் உட்பட யாவரும் முனிவரின் முன் தாழ் பணிந்து நின்றனர்.  கிருஷ்ணரின் வரவேற்பில் மகிழ்ந்துபோன நாரதரின் பார்வை தோட்டத்துப் பக்கம் திரும்பியது.  ஆயிரம் கோடி சூரியன் ஒன்றாக இணைந்ததுபோன்ற ஒளியுடன் சாம்பன் பெண்களுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.  அவன் யாரென்று நாரதர் கேட்டார்.  எனக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பன்” என்று கிருஷ்ணர் கூறினார்.  கிருஷ்ணரின் மாளிகையில் நாரதர் வெகுநேரம் இருந்தார். ஆனால் சாம்பன் வந்து வணங்கவில்லை.  இளைஞர்களுடனும் பெண்களுடனும் விளையாடுவதிலேயே அவனுடைய கவனம் இருந்தது.  தோட்டத்திலிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சாம்பனுடன் பேசவும், அவனோடு சம்போகம் செய்யவும் துடித்ததையும் நாரதர் கண்டார்.
 கிருஷ்ணரின் மகன்களிலேயே பேரழகனாக சாம்பன் இருந்தான்.  எல்லையில்லாத சௌந்தரியனாகவும், தேவாம்சம் பொருந்தியவனாகவும், அக்னி குண்டத்தில் வார்க்கப்பட்ட ஒளிப்பிழம்பாகவும் இருந்தான்.  அவன் மேனி பொன்னை உருவாக்கி வார்த்ததுபோல இருந்தது.  அவனைக் காணப் பெண்கள் போட்டியிட்டு ஓடுடினார்கள். யாதவ குலப் பெண்களுக்குச் சாம்பன் என்றால் உயிர் என்பதை அறிந்த நாரதர், தான் வந்து இவ்வளவு நேரமாகியும் தன்னை வந்து வணங்கி மதியாமல் இருக்கிறானே என்று சாம்பன் மீது கோபம் உண்டாயிற்று.  சாம்பனைப்பற்றி விசாரித்தார். அவனைப்பற்றி எல்லாருமே நல்லவிதமாகவே சொன்னார்கள்.  குறை என்று ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை.  அதனால் முனிவரின் கோபம் கூடுதலாயிற்று.  எந்த மேனியழகைக்கொண்டு பெண்களைக் கவர்ந்து- அந்தக் கவர்ச்சியிலேயே மயங்கிக்கிடக்கிறானோ-அந்த மேனியழகைக் குலைத்து நாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.    என்ன செய்தால் சாம்பனைப் பழிதீர்க்க முடியும் என்று யோசித்தார்.  அவனைப்பற்றிக் குற்றம் சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள்.  சிறந்த பண்பாளன், கருணையுள்ளவன், தூஷணையாக யாரையும் பேச மாட்டான் என்று அறிந்த நாரதர் மனித மனத்தில் எது அதிக பொறாமையை உண்டாக்கும் என்று யோசித்தார்.  உலகிலேயே பொறாமைத் தீயை வளர்ப்பது பெண்ணாசைதான்.  பெண்களும் சாம்பனை நோக்கித்தான் ஓடுகிறார்கள்.  அதனால் அதை வைத்தே ஒரு சூழ்ச்சி நாடகம் செய்யலாம், சாம்பனைத் தண்டனிட்டு தன் காலடியில் விழ வைக்கலாம் என்று நினைத்து தனது சூழ்ச்சியை தந்தைக்கும் மகனுக்குமிடையே உருவாக்கினார்.  கிருஷ்ணரிடம் “உன் குலத்தில் ஒரு இழிவின் நிழல் படிந்திருக்கிறது.  அதுவும் ஜாம்பவதியின் மகன் சாம்பனின் மூலமாக என்று கூறினார் நாரதர். 
கிருஷ்ணர் சாம்பனின் நற்பண்புகளையும், பெரியவர்களிடத்தில் அவன் நடந்துகொள்ளும் பாங்கையும் சொன்னார்.  அது நாரதருக்கு மேலும் சினத்தை உண்டாக்கிற்று.  “உன்னுடைய பதினாறாயிரம் மனைவியரும் சாம்பனின் அழகில் மயங்கிக் கிடக்கிறார்கள்.  அவனுடைய உறவுக்காகத் தவம் கிடக்கிறார்கள் என்று நாரதர் சொன்னதும்-நாரதரை முதன் முறையாக கிருஷ்ணர் எதிர்த்துப் பேசி வாதம் செய்தார்.  “ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி, காந்தாரி, பிரஸ்வாசினி, விரதினி போன்ற எட்டுப் பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் சிறைமீட்டுக் கொண்டுவரப்பட்டு, எனக்கு மனைவியாக்கப்பட்டவர்கள். அவர்களும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள்.  அவர்கள் மீது குற்றம் சொல்வதை நம்புவதற்கில்லை”
“ருசு வேண்டுமா?
 “கொடுங்கள்
“நேரம் வரும்போது தருகிறேன்”“ என்று கோபமாகக் கூறிவிட்டு கிருஷ்ணரின் மாளிகையைவிட்டு வெளியேறினார்.  கிருஷ்ணர் பலவிதமாகச் சிந்தனை செய்தார்.  எந்த வகையிலும் சாம்பனின் மீது அவரால் குறை காண முடியவில்லை.  அந்த விசயத்தை அதோடு மறந்துவிட்டார்.  ஆனால் சூதும், வாதும், நயவஞ்சகமும், கெடுபுத்தியும் கொண்ட நாரதர் மறக்கவில்லை.  சாம்பன் மீதான கோபம் தணல்போல அவருடைய நெஞ்சுக்குள் எரிந்துகொண்டிருந்தது.  தக்க நேரம் வரட்டும் என்று காத்திருந்தார்.  அதற்கான நேரம் வந்ததும் துவாரகைக்குப் புறப்பட்டார்.
       பூங்காவனத்தில் பெண்களோடு உல்லாசமாக இருந்த சாம்பனைச் சந்தித்து “உன் தந்தை உடனே உன்னை ரைவதக மலைப் பூங்காவிற்கு வரச்சொன்னார் என்று கூறினார்.  அது கிருஷ்ணர் தன் பதினாறாயிரம் மனைவியருடன் உல்லாசமாக இருக்கிற நேரமாகையால் அப்போது யாரும் அந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள்.  அதனால் சாம்பன் தயங்கினான்.  “என்னைச் சந்தேகப்படுகிறாயா? என்று நாரதர் கேட்டதும் “அப்படியில்லை.  முனிவருக்கெல்லாம் முனிவர் தாங்கள்.  தங்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய சொல் எப்படிப் பொய்யாக இருக்க முடியும்?  தங்கள் உத்தரவுப்படியே நான் சென்று என் தந்தையைச் சந்திக்கிறேன்“ என்று கூறி, நாரதரை வணங்கிவிட்டு கிருஷ்ணரின் அந்தப்புர பூங்காவிற்குச் சென்றான். 
வழியில் பூனை குறுக்காச்சு, புதுப்பானை எதிராச்சு.  வாணியனும் சாணானும் எதிரில் வரலாச்சு.  தாலியறுத்த முண்டையும், வழுக்கை மொட்டையடித்த பிராமணத்தியும் வாராளாம் நேரெதிரில்.  தீய சகுனங்களை கண்டு மனம் கலங்கினாலும் பெரிதுமதைப் பாராமல் நடக்கலானான் சாம்பன். 
பூங்காவில் கிருஷ்ணர் தம் மனைவியரோடு நிர்வாணக் கோலத்தில் உல்லாசமாக இருந்ததைக் கண்டான்.  அவமான உணர்வால் குன்றி வெட்கி திரும்ப நினைத்தான்.  அப்போது கிருஷ்ணர் சிறைமீட்டு வந்த பல பெண்களில் பலர் சாம்பனின் அழகில் மயங்கி மோகம் கொண்டனர். தங்களுடைய மேனியழகை அவனுக்குக் காட்ட தந்திரபோயாயங்கள் செய்தனர்.  சாம்பன் மீது மோகம்கொண்ட பெண்களைப் பார்த்து கிருஷ்ணர் “நீங்கள் அத்துணை பேரும் என்னுடைய பத்தினிகளாகயிருந்தும், அந்த ஒழுக்கத்திலிருந்து தவறியபடியால் வரும் பிறவிகளில் வேட்டை நாயாகப் பிறவியெடுத்து காடு மலைகளில் அலைந்து திரிய வேண்டும்.  கொள்ளைக்காரர்களிடம் சிக்கித் தவிக்க வேண்டும்.  அடுத்தடுத்த பிறவிகளில் பேயாகப் பிறப்பீர்கள் என்று சாபமிட்டார்.  அதே கோபத்தோடு சாம்பன் பக்கம் திரும்பி “வரக்கூடாத இடத்திற்கு வந்தாய்.  செய்யத் தகாத நீசச் செயலைச் செய்தாய்.  பெற்ற தாய்களையும் மோகம் கொள்ள வைக்கும் உன் மேனியழகு இந்தக் கணமே அழிவதாக.  உன் முன்னால் இத்தனை ஆயிரம் பேரும் நாணித் தலை குனிந்து நிற்பதுபோல உன்னைக்கண்டு உலகம் நாணி ஒதுங்கட்டும்.  எந்த மேனியைப் பார்த்து பெண்கள் மோகம் கொண்டார்களோ அந்த அழகிய மேனி அழியட்டும்.  உலகமே உன்னைக் கண்டு அசிங்கப்பட்டு விலகிப்போகும்படியான குஷ்டரோகம் உன்னைப் பிடிக்கட்டும்.  உன்னைக் கண்டார் நகைக்கவும், நாணவும் வேண்டும்.  உலகமெல்லாம் பழிப்பதற்கு ஆளாவாய். பூமியில் விதைக்கப்படும் தானியம்போல் உன் மேனியெங்கும் இக்கணத்திலிருந்து நோய்க்கூறுகள் முளைக்கட்டும் என்று சாபமிட்டார்.  மின்னல் வெட்டுகிற நேரம்தான். எல்லாம் முடிந்துவிட்டது.
       “நானாக வரவில்லை.  நாரத முனிவர் சொல்லித்தான் வந்தேன்.  என் மீது எந்தத் தவறும் இல்லை.  எனக்கு ஏன் கொடிய சாபத்தைத் தந்தீர்கள் என்று அழுதபடியும் தொழுதபடியும் கேட்டான் சாம்பன்.  அவனுடைய தேகம் பதறிற்று.  ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி மூவரும் தாரைதாரையாகக் கண்ணீர்விட்டு அழுதனர்.  கோபம் தணிந்த பிறகுதான் கிருஷ்ணருக்குச் சகல உண்மைகளும் புரிந்தது.  புத்திரசோகம் அவரைக் கவ்வி மனம் மாறுகிற நேரமாகப் பார்த்து அந்த இடத்தில் பிரசன்னமானார் நாரதர்.
 “கிருஷ்ணா எல்லாமறிந்தவன் நீ. புத்திரன் என்றுகூடப் பார்க்காமல் அவசரப்பட்டுவிட்டாயே.  இது பொறாமைக் குணம்.  அதிலிருந்து நீயும் தப்பவில்லை என்பது ருசுவாகிவிட்டது.  பெண் மனதைப் புரிந்துகொள்ள உனக்கு ஒரு வாய்ப்பு.  உண்மை புரிந்ததா?  உன் கண்ணெதிரிலேயே உன் மனைவியர் பிற ஆடவன் மீது, அதுவும் மகன் மீதே மோகம் கொண்ட காட்சியைப் பார்த்தாய்.  சாபமும் கொடுத்தாய்.  முன்பொரு காலத்தில் என்னிடம் ருசு கேட்டாய்.  ருசுவைக் கொடுத்துவிட்டேன்.  இப்போது என்ன செய்யப்போகிறாய்?  சாம்பன் குற்றமற்றவன் என்பது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்.  தெரிந்தும் சாபமிட்டாய்.  சாபத்திலிருந்து எப்படி அவனை விடுவிக்கப்போகிறாய்?  அதேநேரத்தில் சாம்பனுக்குச் சாபம் கிடைக்க வேண்டும், அதை அவன் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் என் விருப்பம் என்று நாரதர் சொன்னார்.
       கிருஷ்ணர் சஞ்சலத்தில் ஆழ்ந்து பேச முடியாமல் நின்றார்.  அவருடைய சஞ்சலத்தைப் போக்கும் விதமாக “நான் குற்றமற்றவன்.  ஒரு பாவமும் அறியாதவன்.  ஒரு தீங்கும் செய்யாதவன்.  எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?  என்னை ஏன் சபித்தீர்கள்? என்று சாம்பன் கேட்டான்.  அவன் உள்ளம் எரியும் தீக்கோளமாக இருந்தது.  ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி மூவரும் கிருஷ்ணரின் காலில் விழுந்து வணங்கியதோடு, நாரதரின் காலிலும் விழுந்து துதித்துப் போற்றி சாம்பனைச் சாபத்திலிருந்து விடுவிக்கக் கோரினர்.  அப்போது நாரதர் கிருஷ்ணரைப் பார்த்து கள்ளத்தனமாகச் சிரித்து “உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது.  தாயாக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், புத்திரர்களாக இருந்தாலும் ஆசாபாசங்களை நீக்கி உண்மையைப் பேசுவதுதானே கிருஷ்ணா தர்மம்.  புத்திர பாசம் வாயை அடைக்கிறதா? என்று நாரதர் கேட்டதும் புத்தி தெளிந்த மாதிரி கிருஷ்ணர் சொன்னார்.  “சாம்பா.  நீ ஜனித்த நேரத்திலேயே உனக்குக் குஷ்டரோகம் விதிக்கப்பட்டிருந்தது.  இதை நீ அனுபவித்துத்தான் தீர வேண்டும்.  நோய் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது.  கோபத்தில் அதை நான் என் வாயால் சொன்னேன்.  அவ்வளவுதான்.  நாரதர் இந்த நாடகத்தை நடத்தாவிட்டால் உன் மீது இருந்த பாசத்தால் மறந்திருப்பேன்.  விதிப்பயனிலிருந்து யாரும் தப்ப முடியாது.  நாரதருக்கு ஏதோ ஒரு வகையில் கோபமூட்டியிருக்கிறாய்.  நீ அவருக்கு உரிய மரியாதை செய்யவில்லை.  நீ அவரிடம் சரணாகதியடைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது.  நீ அவரிடமே சரணடை.
“எனக்கு வர இருக்கிற நோய் எப்போது என்னை விட்டு அகலும்?  சாபத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்.  நான் எப்போது புறப்பட வேண்டும்?  பாவினானென்கிற பேராச்சு.  அதனால் நெஞ்சமும் ரணமாச்சு என்று வருந்தி வினவினான் சாம்பன்.
“இப்போதே உன் உடலில் நோய்க்கான அறிகுறி தெரிகிறது.  நீ இன்றே இப்போதே புறப்பட வேண்டும்”“ என்று சொல்லிவிட்டுக் கிருஷ்ணர் மனம் கலங்கி தன் புத்திரனை பார்க்க முடியாமல் தத்தளித்தார்.  “சாம்பா உடனே நீ புறப்படு.  நாளும் கோளும் இன்று நன்றாக இருக்கிறது.  புறப்படு.  செய்தாருக்குச் செய்த பலன் கிடைக்கும்.  நதிக் கரையோரம் யாரும் அறியாவண்ணம் தங்கியிரு.  நோய் முழுவதும் உன்னை ஆக்கிரமித்த பிறகு என்னைத் தியானி.  மற்றதை அப்போது சொல்கிறேன்.  வல்லமை உள்ளவன் வானத்தை வில்லாக வளைப்பான். புத்திசாலி துரும்பைத் தூணாக்குவான்.  இது உனக்குச் சோதனைக்காலம் என்று சொல்லிவிட்டு நாரதர் மாயமாக மறைந்துவிட்டார்
       சாம்பன் திகைத்துப்போய்ப் பேசுவது அறியாது நின்றான்.  மனக்கவலை ரம்பம் மாதிரி அவன் உள்ளத்தை அறுத்தது.  நெருப்பில் விழுந்த புழுப்போலவும் தூண்டிலில் சிக்கிய மீன்போலவும் அவன் உள்ளம் துடித்தது.  துக்கம் அவன் உள்ளத்தில் சமுத்திரப் பேரலையாய் எழுந்தது.  கடல் பொங்குவது மாதிரி அவனுடைய உள்ளம் பொங்கிற்று.  அவனுடைய உள்ளத்திலிருந் நெருப்பு துவாரகை நகரை மட்டுமல்ல யது குலத்தையே அழிக்க வல்லது.  ஆனாலும் தந்தையை எதிர்த்து அவன் பேசவில்லை.  மனதை கல் போன்று மாற்றிக்கொண்டான்.  ஜாம்பவதியும் ஒரு சொல் பேசவில்லை.  “தந்தையின் வாக்குப்படியே நட என்றே சொன்னாள்.  சாபத்தை அவன் வெறுப்போடு ஏற்கவில்லை.  தன் முற்பிறப்பின் தீவினை என்றே நம்பினான்.  மாடமாளிகை, பொன், பொருள், ஆடை ஆபரணங்கள், கையாள், ஏவலாள், படைகள், சேனைகள், மனதை மயக்கிய யது குல அழகிகள், பொன் என ஒளிரும் மனைவி லட்சுமணா எல்லாவற்றையும் ஒரு நாழிகையில் மறந்தான்.  தான் பெற்ற சாபம் மட்டுமே அவன் சிந்தையில் இருந்தது.  சற்று முன்புவரை ஆடல், பாடல், பெண்களுடன் உல்லாசம், காமக்களியாட்டம் என்றிருந்த சாம்பனின் நிலை ஒரு நொடியிலேயே பூகம்பத்தில் சிக்கிய மாளிகை மாதிரி சிதறிப்போயிற்று.  இடி விழுந்த மரம் எரிந்து கருகிப்போவதுபோல அவன் உள்ளம் கருகிப்போயிற்று.  சொத்து, சுகம், பொன், பொருள், மாளிகை, வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழக்க வேண்டிவந்துவிட்டதே என்று மனம் நொந்தான்.  எரிமலைக் குழம்புபோல, அக்கினிக் குண்டம்போல அவன் நெஞ்சமிருந்தது. அதுவும் ஒரு கணம்தான்.  பிறகு மனம் தெளிந்தவனாக “உத்தரவு தந்தையே.  உங்கள் வார்த்தைகள்தான் எனக்கு மந்திரம்.  உங்கள் கோபம் எனக்குச் சாபம்.  உங்கள் அன்பும் எனக்குச் சாபம்தான்.  உங்களுக்கு மகனாக பிறந்ததும் சாபம்தான்.  சாபத்தை வரமாகப் பெற்றிருக்கிறேன் என்று கூறினான்.
 “உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துச் செல் என்று கிருஷ்ணர் கூறினார்.  “பொன், பொருள், யானை, குதிரை, சேவையாள் எதுவும் வேண்டாம்.  தாங்கள் கொடுத்த சாபத்தை மட்டும் நான் சுமந்து செல்கிறேன் என்று கூறி வணஙகி நின்றான்.  கிருஷ்ணர் ஆசி கூறியதும் தன் தாய்மார்களை ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி, மூவரையும் வணங்கினான்.  மூன்று பெண்களும் அழுதார்கள்.  மகனைக் கட்டித்தழுவினார்கள்.  யது குலப் பெண்கள் கணவனின் ஆணையை மீற முடியாது.  கறந்த பால் முலை புகா.  கடைந்தெடுத்த வெண்ணெய் மோருக்குள் புகா.  மலர்ந்த பூவும், உதிர்ந்த காயும் மரம் புகா.  செய்தவினை இல்லையென்று ஆகா.  அதனால் சாபத்திலிருந்து விடுபட மகனுக்கு நல்லாசி கூறினார்கள். 
       சாம்பன் தன் மாளிகைக்கு வந்தான்.  வேலையாள், பணியாள், யது குல கன்னியர் என்று யாரையும் அவன் சந்திக்கவில்லை.  தன் மனைவி லட்சுமணாவை மட்டும் சந்தித்து நடந்தவற்றை விளக்கிக் கூறினான்.  லட்சுமணாவின் அழுகையும், கூக்குரலும் மாளிகையை நடுங்கவைத்தது.  “தந்தையின் சாபத்திலிருந்து தப்பிக்க முடியாது.  இது விதி.    விதியின் பயன்.  இதை யாராலும் மாற்ற முடியாது.  விடைகொடு என்று கேட்டான்.  உடன் வருவதாக லட்சுமணா கூறினாள்.  அவன் அவள் கோரிக்கையை ஏற்கவில்லை.  “நீயும் நானும் கணவன் மனைவி என்றாலும் இருவரும் ஒன்றல்ல.  சந்தர்ப்பத்தால் இணைந்திருக்கிறோம்.  எனக்கான சாபம் உன்னைச் சேராது.  இரண்டு உடல்கள்.  இரண்டு உயிர்கள்.  இரண்டு மனங்கள்.  இரண்டு உலகங்கள்.  கணவன் மனைவி என்ற பந்தத்தால் மட்டுமே நாம் இணைந்திருக்கிறோம் என்று சாம்பன் லட்சுமணாவுக்கு வேண்டிய புத்திமதிகளை கூறினான்.  “சாரையும் சர்ப்பமும்போல நாம் சரசமுடன் இணைந்திருந்த காலத்தை மறந்தீரா?  இது என் கடைசி ஆசை.  இன்றிரவு என்னோடு இணையுங்கள் என்று லட்சுமணா கூறியதைச் சாம்பனால் தட்ட முடியவில்லை.  அதனால் அன்றிரவு சாம்பன் சம்போகம் செய்தாலும் அது உடல் மட்டுமே ஈடுபட்ட ஒன்றாக இருந்தது.  விடிகாலையில் இருள் விலகுவதற்கு முன்பாகவே “யது குலத்தில் பிறந்தவர்கள் தந்தையரை விமர்சிப்பதில்லை.  எனக்கு என் தந்தை சாபத்தை மட்டுமே தரவில்லை.  அதிலிருந்து விமோசனம் பெறுவதற்கான உபாயத்தையும் சொல்லியிருக்கிறார்.  சாபத்திலிருந்து விடுதலை பெற்று திரும்பி வருவேன்.  காத்திரு.  சித்தம் கலங்காதேஎன்று கூறி லட்சுமணாவிடம் விடைபெற்று யார் கண்ணிலும் படாமல் நகரத்தை விட்டு வெளியேறினான்.
       நகரத்தைவிட்டு வந்து யாரும் அறியாவண்ணம் கடற்கரையோரம் சிறு குடிசையில் தங்கினான் சாம்பன்.  பகலில் அவன் வெளியே வருவதே இல்லை.  நகரத்தில் நடக்கும் கேளிக்கைகள், விளையாட்டுகள், இளைஞர்கள் கூச்சலிடுவது அவ்வப்போது அவனுக்குக் கேட்கும்.  மது மயக்கத்தில் யதுகுல பெண்களும், ஆண்களும் கடற்கரையில் விளையாடுவதை எப்போதாவது பார்ப்பான்.  “மனம் ஆசைப்படுவது மட்டும் வாழ்க்கை இல்லை என்று அவன் தனியாகத் தங்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தெரிந்துகொண்டான்.  பழைய நினைவுகள் அலைகளாய் எழுப்பிக்கொண்டிருந்தன.  ராஜ வம்சம் என்பதையும், ராஜகுல வாழ்க்கையையும் எண்ணிக் கலங்கினான் இல்லை.  ஆனாலும் அவன் மனம் சமுத்திரத்தில் ஆடும் படகு மாதிரி தடுமாறிக்கொண்டிருந்தது. 
ஓராண்டு முடிவதற்குள்ளாகவே குஷ்டரோகம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்டது.  முற்றிலும் குரூபியாகிவிட்டான்.  நோயால் உடலின் பாகங்கள் தேய ஆரம்பித்தன.  அங்கத்தில் ஆங்காங்கே குழிப்புண்கள் உருவாகி முழுத் தோற்றத்தையும் மாற்றிவிட்ட பிறகு ஒரு நாள் கிருஷ்ணரைப் பார்க்கப் புறப்பட்டான்.  துவாரகையில் இருந்தவர்கள் யாருக்குமே அவன் சாம்பன்தான் என்று தெரியவில்லை.  முன்பு அவன் அழகில், உடலின் ஒளியில் மயங்கி விளக்கொளியில் வந்து விழும் பூச்சிகள்போல வந்து குவிந்த பெண்கள் எல்லாம் ஒதுங்கிச் சென்றனர்.  நகரத்தின் வீதிகளில் மட்டுமில்லை, மாளிகையில்கூட ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.  அவனுடைய மனைவி லட்சுமணாவுக்குக்கூட அவனை அடையாளம் தெரியவில்லை.  கிருஷ்ணரும் ஜாம்பவதி மட்டுமே அவனை அடையாளம் கண்டனர்.  மகனின் தோற்றத்தைக் கண்டு ஜாம்பவதி கண்ணீர்விட்டு அழுதாள்.  ஆற்றில் போகும் அளவுக்கு அவளுடைய கண்ணீர் பெருகிற்று.  சாம்பனின் நிலையைக் கண்டு நிலை தடுமாறிய கிருஷ்ணருக்குக் காந்தாரி மகா பாரதப்போர் முடிந்து பாண்டவர் பட்டாபிஷேகம் செய்தபோது கொடுத்த சாபம் நினைவுக்கு வந்தது.  “கிருஷ்ணா!, சூதகா, என் ராஜ்ஜியத்தை அழித்தாய், கௌரவர்கள் நூறு பேரையும் சூது செய்தும் நயவஞ்சகம் செய்தும் அழித்தாய்.  நான் வானப்பிரஸ்தம் போகிறேன்.  இன்று நான் எப்படி என் புத்திரர்களை இழந்து தவித்து அழுகிறேனோ, அதேமாதிரி நீயும் அழ வேண்டும்.  மகனை இழந்து நீயும் வாடுவாய்.  நான் பத்தினியாக இருந்தால் என் சாபம் பலிக்கட்டும் என்று சொன்னாள்.  “காந்தாரி கொடுத்த சாபத்தால்தான் சாம்பா உனக்கு இந்தத் தீங்கு நேர்ந்தது.
 தந்தையே உங்களைத் துன்புறுத்த வரவில்லை.  அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று அறியவே வந்தேன்.
“நாரத முனிவரை மனதில் தியானி.  அவர்தான் இதற்கான உபாயத்தை உனக்குச் சொல்ல முடியும்.  நாரதர் சூழ்ச்சி செய்தார் என்று சிந்தை கலங்க வேண்டாம்.  நல்லது நடக்கவும், அறத்தை நிலைநாட்டவும்தான் இந்தச் சூழ்ச்சியைச் செய்தார்
 சாம்பன் நாரத முனிவரை வணங்கித் தியானம் செய்தான்.  அவன் தியானித்த மறுகணமே நாரதர் அவ்விடத்தில் பிரசன்னமானார்.  அவரை பூஜை செய்து வணங்கி “மகா முனிவரே என்னுடைய சபலபுத்தியால் தங்களுக்குரிய மரியாதையைச் செய்யத் தவறிவிட்டேன்.  அதற்கான தண்டனை எனக்கு கிடைத்துவிட்டது.  என் தந்தையின் சாபத்தின்படி குஷ்டரோகம் என் உடல் முழுவதும் பரவிவிட்டது.  இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்”“ என்று கேட்டான்.
       சாம்பனின் பணிவு நாரத மகாமுனிவரின் மனதைக் குளிர்வித்தது.  “விருஷ்ணி குல ரத்தினமே.  உன் நடத்தை, பேச்சு, உன் பெருந்தன்மை, சொல் மீறாமை அனைத்தும் என் மனதைக் குளிர்வித்தது.  சூரியன் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்த ஒரே கடவுள், ஒளிரூபன்.  அவனுடைய சொரூபம் நெருப்பேயாகும்.  நீ அவரை நோக்கித்தான் வணங்க வேண்டும், அவரை நோக்கித்தான் பயணப்பட வேண்டும்.  உடனே நீ சூரிய உலகத்திற்குச் செல்.  ஒளிக்கடவுளையே வணங்கு.  பயணத்தில் நீ மிகுந்த துன்பத்தை அடைவாய்.  ஆனாலும் உன் துன்பம் வீண் போகாது.  அப்பன் செய்த பாவம் பிள்ளைமேலே என்பதுபோல காந்தாரி கிருஷ்ணருக்கு இட்ட சாபத்தை நீ அனுபவித்துத்தான் தீரவேண்டும். பாரதப் போரில் கிருஷ்ணன் செய்த தவறுகளுக்கான தண்டனையையும் கிருஷ்ணனுடைய வாரிசான நீதான் அனுபவிக்க வேண்டும். பத்தினி இட்ட சாபம்.  பாரதப்போரில் ஒரு பாவமும் செய்யாதவள் காந்தாரி மட்டும்தான். அவள் செய்த ஒரே தவறு தன் கண்களைக் கட்டிக் கொண்டதுபோல தன் வாயையும்  கட்டிக்கொண்டதுதான்.  அவள் இட்ட சாபமாயிற்றே.
“தங்களுடைய கருணைக்கு பணிகிறேன்.  சூரிய உலகம் எங்கே இருக்கிறது.  அங்கு நான் எப்படிச் செல்லவேண்டும்?
       “நீ இங்கிருந்து வடக்குக் கடற்கரை நோக்கிப் போகவேண்டும். அங்கிருந்து வடகிழக்குத் திசையில் திரும்பி செல்.  ஒரு பருவகாலம் கழித்து சந்திரபாகா நதிக்கரையை அடைவாய்.  அங்கு பேரொளிமிக்க சூரிய தேவன் ஆணுருவம்கொண்டு வீற்றிருக்கிறார்.  அவரைப்போய் வணங்கு.  உன் சாபம் விலகும்.  உன் பயணத்தில் இடர் ஏதாவது ஏற்பட்டால் என்னை தியானம் செய்.  உனக்கு வேண்டிய உபாயங்களைச் செய்து தருகிறேன்.“  
 மகா முனிவரே தங்கள் கருணையே கருணை என்று கூறிவிட்டு நாரதரையும், கிருஷ்ணரையும் வணங்கிவிட்டு சூரியத்தலம் நோக்கி புறப்படத் தயாரானான்.  அப்போது “உன் பயணத்திற்குத் தேவையான பொன், பொருள், செல்வம், பணியாள், ஏவலாள் என்று எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துச் செல் என்று கிருஷ்ணர் கூறினார்.
       “தந்தையே! என்னை மன்னியுங்கள்.  நேற்றைய வாழ்க்கை என்பதை நான் மறந்துவிட்டேன்.  தாங்கள் சொல்கிற பொருள்களையெல்லாம் எடுத்துச் சென்றால் நேற்றைய வாழ்க்கையிலிருந்து என்னால் விடுபட முடியாது.  நான் விருந்துக்குச் செல்லவில்லை.  குஷ்டரோகத்தைவிட எனக்கு நேற்றைய வாழ்வைப் பற்றிய எண்ணம்தான் அதிக துன்பம் அளிக்கிறது.  எனக்கு அது வேண்டாம்.  என் பயணம் உல்லாசத்துக்கானது அல்ல.  எனக்குப் புகழ் வந்தாலும் இழிவு வந்தாலும் இரண்டும் தங்களையே சாரும்.  என் பயணம் சாபத்திலிருந்து, நோயிலிருந்து விடுபடுவதற்கானது.  ஆகவே என் பயணத்திற்கு நல்லாசி கூறுங்கள்.  அதை மட்டும் எடுத்துச் செல்கிறேன் என்று கூறி கிருஷ்ணரை மண்டியிட்டு வணங்கினான். 
“உன் மனம் விரும்பும்படி நடக்கட்டும்.  உனக்குச் சகல மங்கலமும் உண்டாகட்டும் என்று கிருஷ்ணர் ஆசி கூறினார்.  சாம்பன் நாரத முனிவரையும் வணங்கினான்.
       சாம்பன் துவாரகையைவிட்டு வெளியேறினான்.  கல், முள், கட்டாந்தரை, ஓடை, ஆறு, நதி, மலை, குகை, பாலைவனம் என்று நடக்க ஆரம்பித்தான்.  இரவு பகல் பாராது,  காற்று, மழை, வெயில் பாராது நடந்தான்.  பசி, தாகம் ஏற்பட்டபோது வழியில் கிடைத்த காய்கனி, கிழங்குகளை உண்டான்.  காட்டாற்றுத் தண்ணீரைக் குடித்தான்.  சிறிது காலத்திலேயே அவன் காட்டுவாசியைப்போல மாறி ஆறு, மலைகள், நதிகள், பறவைகள், மரம், செடி, கொடிகளுடன் பேசக் கற்றுக்கொண்டான். மனதிலுள்ளதை அப்படியே பேசினான். பயணத்தில் உலகில் தான் தனியன்.  தனக்கென்று யாருமில்லை.  நோய் மட்டுமே சொந்தம்.  வேறில்லை என்பது தெரிந்ததும் பொன், பொருள், செல்வம், மாளிகை, பெண்கள்பற்றிய ஆசைகள் எல்லாம் தீயில் விழுந்த பூச்சிகள்போல மடிந்துபோயின.  அவனுடைய உள்ளம் அப்பழுக்கற்ற பளிங்கு மாதிரி இருந்தது.  ஜனனத்திற்கும் மரணத்திற்குமிடையே மனித மனம் கட்டும் கோட்டைகள் என்ன?  உலகிலுள்ள ஜீவராசிகளிலேயே கீழ்த்தரமான புத்தியும், சூதுவாதும், நயவஞ்சகமும், பேராசையும், பொருளாசையும் கொண்டு அதற்காக எத்தகைய தீய செயல்களிலும் ஈடுபட்டுத் துரோகம், வஞ்சகம் செய்வதோடு மாங்கல்ய தோசம் செய்வதுமான குணம் இழிபிறவியான மனிதனுக்கே உண்டு என்று தெளிந்த காரணத்தினால் சாம்பன் தன் பழைய வாழ்க்கையை மறக்க முயன்றான்.  பழையவற்றை நினைத்தால் இன்று வாழ முடியாது.  படிப்படியாக நாரதர், கிருஷ்ணர் மீது இருந்த கோபம் தணிந்தது.  அவர்கள் மீது கூடுதலான பற்று ஏற்பட்டது.  இது என் விதி.  இதை நான் அனுபவித்தே தீரவேண்டும் என்று நினைத்த காரணத்தினால் அவன் சாபத்திலிருந்து விடுபடுவதைப்பற்றியே சிந்தித்தான்.  தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவனை வழிநடத்தியது.  வழியில் காண முடியாததையெல்லாம் கண்டான்.  அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. மனம் எப்போதும் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பது என்பது.  தண்ணீரைப் பிடித்து வைப்பது முடிகிற காரியமா?  முடிந்தாலும் எவ்வளவு நேரத்துக்கு?
                ஒரு நாள் அந்திப்பொழுதில் அவன் ஒரு வனாந்தரத்தை அடைந்தான்.  களைப்பால் ஒரு ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறினான்.  அப்போது எறும்பு முதல், யானை வரையிலான எண்பத்தியெண்ணாயிரம் ஜீவராசிகளும் அவனைச் சுற்றியிருந்தன.  ஒன்றுகூட தானாக வந்து அவனை இம்சிக்கவில்லை.  அப்போது இத்தனை ஜீவராசிகள் இருந்தும் ஒன்றுகூட என்னைத் துன்புறுத்தவில்லை.  இருந்தும் என் மனம் ஏன் சஞ்சலம் கொள்கிறது?  அப்படியானால் என் மனம்தான் என்னை இம்சிக்கிறது.  அதிலிருந்து விடுபட்டால் துன்பம் இருக்காது, பேதங்கள் இருக்காது.  மனம்தான் நோயை உண்டாக்குகிறது, நேற்றைய வாழ்வுக்காக ஏங்குகிறது.  முதலில் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். நோயிலிருந்து, சாபத்திலிருந்து விடுபடுகிறேனோ இல்லையோ மனதிலிருந்து-அதன் ஆசைகளிலிருந்து விடுபட வேண்டும்.  ஈசன் அதற்காகத்தான் எனக்கு இந்தச் சாபத்தைத் தந்திருக்க வேண்டும், யாரையும் நிந்திப்பதில் பயனில்லை என்று நினைத்தான்.  மனதிலிருந்து விடுதலை.
       சாம்பனின் வழியில் எதிர்ப்பட்ட ஆறு, குளம், காடு, மலை, குகை,நதி,மிருக இனங்கள், மனித சஞ்சாரமற்ற தனிமை ஆகியவை அவனுக்கு இருந்தது.  “சாம்பா, நீ நோயிலிருந்து, சாபத்திலிருந்து விடுதலைபெறப் போகவில்லை.  உன்னிடமிருந்து- உன் மனதிடமிருந்து, அதன் ஆசைகளிலிருந்து விடுதலை பெறப் போகிறாய் என்பதை உணர்வாயாக“” என்று ஒவ்வொன்றும் சொல்லிற்று.  அந்த வார்த்தைகள் காய்ந்த  பயிருக்குத் தண்ணீர் ஊற்றியதுபோல், கடலில் தத்தளித்தவனுக்குத் துடுப்பு கிடைத்ததுபோல் இருந்தது.  மதியப் பொழுதில் ஒரு ஆற்றை அடைந்தான்.  குஷ்டரோகி என்பதால் யாரும் அவனைப் படகில் ஏற்றிக்கொள்ளவில்லை.  வணங்கிக் கேட்ட பிறகுதான் ஏற்றிக்கொண்டார்கள்.  ஆனாலும் படகிலிருந்த ஒருவரும் அவனிடம் பேசவில்லை.  மற்றவர்களுக்குச் சங்கடம் தராத வகையில் படகின் ஒரு மூலையில் சாம்பன் உட்கார்ந்திருந்தான்.  படகுப் பயணம் முடிந்ததும், கடல் வந்தது.  கடற்கரையோரமாக வடதிசையில் நடந்தான்.  எந்த இடத்திலிருந்து வடக்கில் பிரயாணிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.  நேர்வடக்காகச் சென்றால் குவலயாஸ்வனின் வழிவந்தவர்களின் ஆட்சியிலுள்ள சிந்து நாடு.  அங்கு உறங்க முனிவரது ஆசிரமம் இருக்கும் என்று நாரத முனிவர் கூறியது நினைவுக்கு வந்ததும் நம்பிக்கை பெற்றவனாக நடந்தான்.  இரவாகிவிட்டது.  பிறைச் சந்திரன் தோன்றினான்.     கடற்கரையோரமுள்ள மீனவக் குடிசைகளுக்குச் சென்று “துவாரகையிலிருந்து வருகிறேன்.  வடகிழக்கில் சந்திரபாகா நதிக்கரையோரமுள்ள சூரிய தலத்துக்கு செல்ல வேண்டும்.  வழி தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டான்.  “அதுபற்றி எங்களுக்குத் தெரியாது.  ஆனால் உன்னைப் போன்ற நோயாளிகள் ஆற்றைக் கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம் என்று கூறினார்கள்.  அன்றிரவு மீனவக் குடிசைகளின் ஓரமாக ஆற்றுமணலில் சந்திரனைப் பார்த்தவாறே கண்ணயர்ந்தான். 
விடியற்காலையிலேயே மீனவர்களின் உதவியோடு ஆற்றைக் கடந்தான்.  அங்கே ஒரு தவசியைக் கண்டான்.  அவரை வணங்கி சூரியத்தலைம் பற்றிக் கேட்டான்.  “பஞ்ச நதிப்பிரதேசத்தில் சூரியத்தலம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே உன்னைப்போன்ற சருமநோயாளிகள் செல்வதையும், நோய் நீங்கித் திரும்பி வருவதையும் கண்டிருக்கிறேன்.  ஆனால் நோய் எப்படி நீங்குகிறது என்பது எனக்குத் தெரியாது.  நீ அங்கு போக வேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து வந்திருக்கக் கூடாது.  திரும்பிச் செல் என்று கூறினார்.  அவரை வணங்கிவிட்டு ஆற்றைக் கடந்து வந்து கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  ஏழு பருவங்கள் நடந்தான்.  எட்டாவது பருவம் ஆரம்பித்த முதல் நாள் அந்தி நேரத்தில் சந்திரபாகா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.  அங்கிருந்தவர்களிடம் “சிந்து நதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்திரபாகா நதி இதுதானா? என்று கேட்டான்.  பலர் அவன் தோற்றத்தைக் கண்டு பதில் பேசவில்லை.  வயதான ஒரு படகோட்டி மட்டும் “நீ சொல்கிற இடம் அக்கரையில்தான் இருக்கிறது. அக்கரையிலிருந்து ஏழு நாள் நடக்க வேண்டும்.  ஏழாம் நாள் ஒரு ஆறு குறுக்கிடும்.  ஆற்றைக் கடந்தால் நீ சொல்கிற இடம் வந்துவிடும் என்று கூறினான்.  கிழவரைச் சாம்பன் வணங்கினான்.  திரும்பி படகோட்டியின் உதவியால் மறுகரைக்கு வந்து படகோட்டி கூறியபடி நடக்க ஆரம்பித்தான். 
அவனுடைய சிந்தையில் சூரியத்தலம் மட்டுமே இருந்தது.  இதுநாள்வரையில் அவன் எந்த நோக்கமும் இல்லாமல் இருந்தான். பெண்களுடன்கூடி மகிழ்வதே வாழ்க்கை என்று எண்ணியிருந்தான்.  உடம்பு என்பது ஒரு புழுக்கூடு என்று இப்போது தெரிந்திருந்தது. அந்தக் கூட்டை வைத்துக்கொண்டா இத்தனை ஆட்டம் ஆடினோம் என்று மனம் நொந்தான்.  எல்லாம் போன பிறகும் அவன் உள்ளத்தில் சிறு நெருப்புத் துண்டு மாதிரி ஒரு ஒளியிருந்தது.  அதன் வெளிச்சத்தில் அவன் நடந்துகொண்டிருந்தான்.  அந்த ஒளி சூரியத்தலம் என்ற ஒளிதான்.  இரவுப்பொழுது வந்தது.  வனாந்திரத்தில் படுத்திருந்தான்.  கொடிய விலங்குகள் குறித்த பயமெல்லாம் அவனிடமிருந்து போய்விட்டிருந்தது.  விதிப்பயன் எதுவோ அதுதான் நடக்கும்.  மாறி எதுவும் நடக்காது.  உடலில் பூட்டியிருந்த ஆபரணங்களையெல்லாம் ஒன்வொன்றாகக் கழட்டி வைப்பது மாதிரி மனதிலிருந்த ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாக அவனைவிட்டு போய்விட்டன.  தந்தையின் பெயரைக்கூட அவன் எங்கும் பயன்படுத்தவில்லை.  உடம்பு காற்றடைத்த பை என்பதை உணர்ந்துவிட்டதால் இரவு பகல் பேதம் அவனிடமில்லை.  பேதம் ஆசை கொண்ட மனதிற்குத்தான்.  அதனால் நன்றாகத் தூங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டான்.  அன்றைய பொழுதின் அந்தி நேரத்தில் ஒரு ஆறு வந்தது. ஆற்றைக் கடந்ததும் குடிசைகள் கண்ணில்பட்டன.  குடிசைகளை நோக்கி நடந்தான்.  எதிர்ப்பட்டவர்களிடம் “இதுதான் சூரிய தலமா? என்று கேட்டான்.  “அப்படித்தான் சொன்னார்கள் என்று ஒரு குஷ்டரோகி சொன்னான்.  அவனைச் சூழ்ந்து நின்ற எல்லாருமே குஷ்டரோகிகளாக இருந்தனர்.  அந்த இடத்திலிருந்த குழந்தைகளுக்கும் குஷ்டரோகம் இருந்தது.
       “கிரக ராஜன் சூரியதேவன் வீற்றிருக்கும் இடம் எங்கே இருக்கிறது? என்று சாம்பன் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.  கூட்டத்திலிருந்த கிழவன் “உன்ன மாதிரிக் கேள்விப்பட்டுத்தான் நாங்களும் வந்தோம்.  ஆனா நீ சொல்ற இடம் எதுன்னு எங்களுக்குத் தெரியாது,  வனத்துக்குள்ளார ஒரு கோவில் இருக்கு.  அத சூரிய சேத்திரம்ன்னு சொல்றாங்க என்று கூறினான். 
“அங்க கிரக ராஜனின் உருவம் பொறித்த சிலை இருக்கிறதா? என்று சாம்பன் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் சிரித்தனர்.
“அங்க ஒரு சிலை இருக்கு.  அதுக்கு நாங்க தினமும் கும்பிடு போடுவோம்.  அங்க ஒரு ரிஷி இருக்காரு.  போனா புடிச்சிவச்சிக்கிட்டு உபதேசம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.  அதனால நாங்க அவர்கிட்ட அதிகமா போறதில்ல.  அவர் சொன்னபடி சூரிய ஒளி படும்படியா உட்கார்ந்திருப்போம்.  அப்பறம் பிச்சை எடுக்கப்போய்விடுவோம் என்று கிழவன் சொன்னான்.
      
“பிச்சையா? என்று சாம்பன் கேட்டான்.  கூட்டத்திலிருந்த எல்லோரும் சிரித்தனர்.  கூட்டத்திலிருந்த நீலாட்சி என்ற இளவயது பெண் சிரித்துக்கொண்டே “ராசா மகனா இருந்தாலும் இந்த இடத்துக்கு வந்துட்டா பிச்சைதான் எடுக்கணும்.  நீ ராசா மகனா?  நீ பேசுவது எல்லாம் வனத்து ரிஷி பேசுற மாதிரியே இருக்கு என்று சொல்லிவிட்டு உரசுவது மாதிரி சாம்பனிடம் வந்து நின்றாள்.  அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது.  குஷ்டரோகத்தால் பார்ப்பதற்கு அசூசைபடும்படியாக இருந்தாள்.  கூட்டத்திலிருந்த கிழவன் “நேற்று நீலாட்சியின் புருசன் செத்துவிட்டான்.  இன்றிலிருந்து நீ அவளோடு சேர்ந்துகொள்.   அவளுக்குப் புருசனாகவும், பிள்ளைக்குத் தகப்பனாகவும் இரு“” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.  அங்கிருந்த குஷ்டரோகிகளின் பேச்சு சாம்பனுக்கு விநோதமாக இருந்தது.  “நான் இந்தப் பெண்ணோடு சேரவோ தங்கவோ முடியாது.  நேற்றுதான் அவளுடைய புருசன் இறந்தான் என்று சொன்னீர்கள்.  அதற்குள் எப்படி இப்படிப் பேசுகிறீர்கள்?”“ என்று கேட்டான்.  “வாழ ஆசைப்படுகிறவர்களுக்கத்தான் சட்டம் திட்டம் எல்லாம்.  சாக ஆசைப்படுகிறவர்களுக்கு எதுவுமில்லை.  தினம் இங்கு ஒரு ஆள் செத்துப்போகிறான்.  அதேமாதிரி தினமும் உன்னை மாதிரி ஒரு ஆள் வந்து சேருகிறான்.  அதனால் இருக்கிறவரை மகிழ்ச்சியாக இரு என்பதும், தனித்து இருக்காதே-அது உன்னை சீக்கிரத்தில் சாகடித்துவிடும் என்பதால் ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் இருப்போம்.  ஒரு இரவுகூட நாங்கள் தனியாக இருப்பதில்லை.  இந்த வனத்தில் மழை பெய்யாமல் இருந்தாலும் இருக்கும்.  ஆனால் பெண்களுக்குப் பிள்ளை பிறப்பது மட்டும் நிற்காது.  வேப்பஞ்சாற்றில் தேன் கலந்து குடித்தாலும் அதன் கசப்பு மாறாது.  நொய்யரிசி கொதி தாங்காது என்று ஒரு ஆள் சொன்னான்.
       “நீங்கள் செய்வது தவறு.  நோய் வந்தால் மருந்தைத்தான் தேடிப்போக வேண்டும்.  அதற்குப் பதிலாக பல நோய்களை வாங்கக் கூடாது என்று சாம்பன் சொன்னதும் “நீ வனத்து ரிஷி மாதிரி பேசுற.  அவரை மாதிரியே உபதேசம் பண்ணுற. இப்போது இங்க நான் மட்டும்தான் தனியாள்.  அதனால் நீ என்னோடுதான் இருக்க வேண்டும்.  பிள்ளையைப் பிடி என்று சாம்பனிடம் பிள்ளையைக் கொடுத்தாள் நீலாட்சி.  கூட்டத்திலிருந்த கிழவன் “நீலாட்சி சொல்வதுதான் சரி.  ஆண்களுக்குப் பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் சரியாக இருக்கிறோம்.  நீலாட்சி மட்டும்தான் தனி.  நீயும் தனி,  விடிவதற்குள் செத்துப்போகலாம்.  அதுவரை ஏன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது?  அவளுக்கு மட்டும் மகிழ்ச்சியில்லை.  உனக்கும் இல்லை. அவளைக் கட்டியணைத்துக் கனிவாய் முத்தமிடு என்று சொன்னான்.  “துன்மார்க்கமாக மதியீன செயலைச் செய்ய மாட்டேன்.  வேசியராசையை எப்போதோ விட்டுவிட்டேன்.  ஒருபோதும் அநாச்சரமான காரியம் செய்ய மாட்டேன்.  செத்துவிடுவோம் என்று எப்படிச் சொல்ல முடியும்?  சாவதற்காக நாம் இங்கே வரவில்லையே.  நோய் சரியாகி திரும்பிப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே இங்கே வந்தீர்கள்.  அந்த எண்ணம்தான் நமக்கு நம்பிக்கை-உயிர்.  அதை இழந்தால் நாம் பிணம் போன்றவர்கள்தான் என்று சாம்பன் சொன்னதும் “எங்களுக்குப் புத்திமதி சொல்ல நீ யார் என்று கேட்டு சண்டைக்கு வந்தனர்.  அப்போது குறுக்கிட்ட நீலாட்சி தன் கூட்டத்து ஆட்களிடம் சாம்பன் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொல்லிச் சத்தம் போட்டாள். கூட்டம் அமைதியடைந்தது. 
“நீங்கள் வந்த நோக்கத்தை மறக்காதீர்.  நம்பிக்கையை இழக்காதீர்.  நோயிலிருந்து விடுபட ஆசைப்படுங்கள்.  திரும்பி ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.  உங்கள் நோக்கம், ஆசை பிறரைத் துன்புறுத்தாது.  பிறருக்குக் கேடு விளைவிக்காது.  நம்முடைய நம்பிக்கையில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது.  உலோக குணத்தை கைவிடுங்கள்.  ஈனத்துவம் படைத்த ஜென்மமாக இருக்க வேண்டாம் என்று சொன்னான் சாம்பன். 
“வனத்து ரிஷிமாதிரி, ராஜா மகன் மாதிரி பேசுற“ என்று கூறிவிட்டு அவரவர் குடிசைக்குக் திரும்பினர்.
       நீலாட்சியும் சாம்பனும் மட்டுமே இருந்தனர்.  உரசி, உறவாடி, அணைத்து, முத்தமிட்டுப் பார்த்தாள்.  குடிசைக்குள் இழுத்துப் பார்த்தாள்.  எதற்குமே சாம்பன் இசையவில்லை.  பிச்சையெடுத்து வந்த சோற்றில் ஒரு பகுதியைக் கொடுத்தாள்.  அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு “விந்தையான வார்த்தைகளைப் பேசுகிறாய்.  நான் உன்னை போகிக்க மாட்டேன்.  நான் என்றும் உனக்குத் துணையாக, விளக்கின் திரியாக, ஒரு சகோதரனாக இருப்பேன் என்று கூறிவிட்டு நீலாட்சியின் குடிசைக்கு வெளியே அன்றைய இரவுப் பொழுதை கழித்தான்.  இருள் பிரியும்முன்னே எழுந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்டான்.  பல ஆயிரம் மலர்கள் பூத்திருந்ததைக் கண்டதும் தன் ஆயுள் காலம் முழுவதும் இங்கேயே தங்கி கழித்துவிடலாம் என்று நினைத்தான்.  மகிழம்பூ வாசனை அடித்தது. ஆதித்தியரைக் கண்டதும் இவரை எப்படி நான் வணங்குவேன், எப்படி நான் பூஜை செய்வேன், சாபத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவேன் என்று சிந்திக்கலானான்.  மனமுருகி வணங்கினான்.  மும்முறை வலம் வந்துவிட்டு ஆற்றங்கரைக்கு நடந்தான்.  அப்போது கீழ்வானத்தில் குங்குமப் பந்தாக, அக்னிக் கோளமாக சூரியதேவர் தோன்ற-அவரைக் கைகூப்பி வணங்கி நின்றான் சாம்பன்.
       ஒரு முனிவர் ஆதிசக்தீஸ்வரரை வணங்கி நிற்பதைக் கண்டான்.  அவரிடத்திலே சென்று தொழுது “முனிவரே சாபத்தின் விளைவாய் குஷ்டரோகியாகி இங்கு வந்துள்ளேன் என்று சாம்பன் கூறியதைக் கேட்டுப் பின்னால் வருமாறு கூறிவிட்டுத் தன் ஆசிரமத்திற்குச் சென்றார் முனிவர். “தென்கிழக்குத் திசையில் வெயிலைப் பார்த்து உட்கார்.  பூஜை முடிந்ததும் உன்னிடம் பேசுகிறேன்”“ என்று சொல்லிவிட்டுப் பூஜை செய்யப் போனார்.  முனிவர் கூறியபடியே சாம்பன் வெயிலில் உட்கார்ந்தான்.  மறுகணமே சூரியதேவனை மனதில் நினைத்து தியானம் செய்தான்.  அவன் கண்கள் மூடியிருந்தன.  உடல் அசைவற்றிருந்தது.  ஆனால் மனம் பேசியபடியே இருந்தது.  “சூரியதேவரே! எனக்கு விதிக்கப்பட்ட சாபத்திலிருந்து விடுதலை கொடு.  பொன், பொருள், செல்வம், பெண் மோகம் எல்லாவற்றிலிருந்தும் விலகிவந்துவிட்டேன்.  என் மனதிலிருந்தும் விடுதலை கொடு. அவன் எவ்வளவு நேரம் தியானத்திலிருந்தான் என்பது தெரியாது.  முனிவரின் குரல் கேட்டுக் கண்விழித்தான்.  “கிரக ராஜனை வணங்கிவிட்டுக் கனிகளைச் சாப்பிடு என்று கொடுத்தார்.  அவரை வணங்கிக் கனிகளைப் பெற்றுக்கொண்டான்.  அவன் எதிரில் உட்கார்ந்து “உன் கதையைக் கூறு என்று கேட்டார்.  “மண் பாண்டம், ஓடு ஸ்வாமி.  அதற்கு என்ன கதை இருக்க முடியும்?  ஒரு கைப்பிடி சாம்பலாகும் உடல், ஆசைகளால் நிறைந்த பை என்று சாம்பன் சொன்னதும் முனிவர் அவனை வினோதமாகப் பார்த்தார்.  விவரமானவன்.  மற்ற நோயாளிகளைப் போன்றவன் அல்லன் என்றும் எட்டு கர்மங்களையும் அறிந்தவன் இவன் என்றும் தெரிந்தது. 
“இங்கு வந்ததன் நோக்கம்?”
“விடுதலை.  சாபத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக.
“சாபமா?
“ஆம் ஸ்வாமி.
“இந்த இடத்தைப்பற்றி யார் கூறியது?
“நாரதர்.
“நாரதரா?  அவரை நீ பார்த்திருக்கிறாயா?  எல்லா வர்ஷங்களிலும், எல்லா அந்தரிட்சத்திலும் நடமாடும் நாரதரைப் பார்த்தாயா?  நம்ப முடியவில்லையே,.  அப்படியென்றால் நீ பாக்கியவான்தான்.  நீ யார்? என்று முனிவர் கேட்டார்.
‘‘ஸ்வாமி.  என் மீது கருணை கொள்ளுங்கள்.  கோபம் கொள்ளாதீர்கள்.  தக்க தருணம் வரும்போது கூறுகிறேன்.
“உன் விருப்பப்படியே ஆகட்டும்.
“ஸ்வாமி காலையில் சூரியதேவனை வணங்கினீர்கள்.  ஆனால் பூஜை செய்யவில்லை,  ஏன்?
“எனக்கு வேதம் படிக்க உரிமை உண்டு.  ஆனால் பூஜை செய்ய உரிமையில்லை.  நான் தேவலோக இனத்தைச் சேர்ந்த பிராமணன்.  சிவப்பு மையால் சூரியனைத் தரையில் வரைந்து வணங்குகிறேன்.  இந்த சூரியதலத்தை யார் நிறுவினார்கள் என்று எனக்குத் தெரியாது.  நான் வரும்போது இப்படித்தான் இருந்தது.  கிரகராஜனின் மூலத்தானமும், அத்தமனத்தலமும் இதுதான்.  பூகோளத்தின் ஒரு பக்கம் அவர் ஒளிரும்போது அவரது கடைசி கிரணங்களுக்குச் சிறப்பான சக்தி உண்டு.  அது பல சரும நோய்களைத் தீர்க்க வல்லது.  அதனால்தான் நான் இங்கு வந்தேன்.  வந்ததிலிருந்து அத்தமன சூரியனை வணங்கி வருகிறேன்.  என் உடலிலிருந்த நோய்க்குறிகள் படிப்படியாக மறைந்துவிட்டன.
“இது ஒரு இடம்மட்டும்தானா?
“இந்த நாட்டின் உதயாசலத்தில் சூரியன் முதலில் தோன்றுகிறார்.  வட கிழக்கு மூலையில் உதிப்பதால் ‘கோணாத்தியர்  அல்லது ‘மூலை அகத்தியார் என்று அழைக்கப்படுகிறார்.  இந்த மூலத்தானத்தில்தான் தென்மேற்குத் திசையில் அவர் மறைகிறார்.  யமுனைக்குத் தெற்கே, துவாரகைக்கு அருகில் நண்பகலில் அவர் வீற்றிருக்கிறார்.  அந்நிலையில் அவர் பெயர் ‘கலாப்பிரியர்’.  பெருநோயிலிருந்து விடுபட இந்த மூன்று காலங்களில் சூரிய கிரணங்கள் பட வேண்டும்.
“ஒரே நாளில் மூன்று இடங்களுக்கும் எப்படிச் செல்ல முடியும்?
“ஒரு ஆண்டை மூன்று காலங்களாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த இடங்களில் வழிபடவேண்டும்.  நானும் அவ்வாறுதான் வழிபட்டுவந்தேன்.  கிரகராஜனுக்கு ஆதித்தியன், சவிதா, சூரியன், மிக்ரன், சர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, ரவி என்ற பனிரெண்டு பெயர்களில், பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு இடங்களில் வீற்றியிருக்கிறார்.  நீ அந்தந்த மாதங்களில், அந்தந்த இடங்களுக்குச் சென்று புனித நீராடி வழிபட்டால்தான் உன் நோய் நீங்கும்.
“பனிரெண்டு புனித தலங்கள் எது, பனிரெண்டு புனித நதிகளின் பெயர்கள் என்ன?”
“சந்திரபாகா, புஷ்கரம், நைமிஷம், குருட்சேத்திரம், பிருதுநஞ்சம், கங்கை, சரஸ்வதி, சிந்து, பயஸ்வினி, யமுனை, தாமிரா, சிப்ரா.  எல்லா இடங்களுக்கும் சென்றுவர ஆறு பருவங்கள் ஆகும்.  உன்னால் முடியுமா?
“தங்களின் கருணையும் ஆசியும் இருந்தால் முடியும் ஸ்வாமி.
“ஒவ்வொரு மாதத்திலும் வளர் பிறையில் ஏழாம் நாளில் சூரிய கிரணங்களுக்குச் சிறப்பான சக்தி உண்டு.  அன்று நீ விரதமிருந்து சூரியதேவரை வணங்க வேண்டும்.
“அடுத்தது என்ன செய்ய வேண்டும்? பணிவுடன் சாம்பன் கேட்டான்.
“பனிரெண்டு தலங்களுக்கும் சென்று வா.  அப்போது சொல்கிறேன்.
“மற்ற நோயாளிகளையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
“அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. மதிப்பதில்லை. அவர்கள் நீசர்கள். உடைந்த பானைகளை ஒட்டவைக்க முடியுமா?
“தங்களின் ஆசீர்வாதம் இருந்தால் முடியும் ஸ்வாமி.
மனம் பூரித்த முனிவர் “என் பரிபூரண ஆசி உனக்கு எப்போதும் உண்டு,  போய் வா என்று கூறியதும் அவரை வணங்கிவிட்டு குஷ்டரோகிகளின் குடிசைகளுக்கு வந்தான்.  அவனைச் சூழ்ந்துகொண்டு “அந்த ரிஷி உனக்கு உபதேசம் செய்திருப்பாரே என்று சொல்லிக் கேலி செய்தனர். அதைக் கேட்டு மிகுந்த மனவாட்டமுற்றான்.  “ரிஷியை மரியாதை குறைவாகப் பேசாதீர்கள்.  அவர் நம் எல்லாரையும்விட மேலானவர்.  அவரை வணங்கி பூஜிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  மகா புருஷர் அவர்.“ சாம்பன் சொன்னதை யாருமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  ரிஷியோடு சாம்பனையும் சேர்த்துக் கிண்டல் செய்தனர்.  பிச்சையெடுத்துக் கொண்டு அப்போது நீலாட்சி வந்தாள்.  “என்ன உன் பாத்திரம் நிறைந்ததா? என்று சாம்பன் கேட்டான்.
“இல்லை.
“அது எப்போதும் நிறையாது.  அதுதான் பிச்சைப் பாத்திரத்தின் சாபம்.
“நீ எப்போது பார்த்தாலும், சாபம்-சாபம் என்றே பேசுகிறாய்.  கிடைத்திருப்பது போதும்.  அதில் உனக்கும் தருகிறேன்.  சாப்பிடு.
“கொடு.  சாப்பிடுகிறேன்.  சாப்பிட்டு இரவு தங்கிவிட்டு விடிந்ததும் பிரயாணம் போகிறேன்.  நீயும் வா.
“என்ன பிரயாணம். என்னை ஏன் கூப்புடுகிறாய்? உயிரோடு இருக்கும்வரை இந்த இடத்திலேயே இருந்து சாகாமல் ஏன் அலையப் போகிறாய்? என்று கேட்டபடியே வந்து சாம்பனை உரசினாள். நீலாட்சி.
“குடல் அனலைத் தணிப்பது மட்டும் முக்கியமல்ல.  மனதின் அனலையும் தணிக்க வேண்டும். மானுட களங்கம் நான்.  உனக்கு மனக்காயம் உண்டாக்க மாட்டேன்.  சண்டாள காரியம் செய்ய மாட்டேன்.  படுபாதகச் செயலைச் செய்ய என்னைத் தூண்டாதே.   பஞ்சமா பாதக செயல் செய்யும் குலத்தில் நான் பிறக்கவில்லை.  அபகீர்த்தி வந்துவிடும். நீச குலத்தில் பிறந்தவன் அல்ல நான்.  கைகேயின் சொல் கேட்டு தசரதன் மாண்டான்.  ஜானகியின் சொல் கேட்டு மான் பின்னோடி ஸ்ரீராமன் வெகு துன்பப்பட்டான்.  சூர்ப்பனகையின் சொல் கேட்டு ராவணன் தம் சுற்றத்தாரோடு மாண்டான்.  ஆதலால் ஸ்திரிகள் சொல் கேட்பது தர்மம் அல்ல.  பேயைக் கொண்டாலும் பெண்ணைக் கொள்ள மாட்டேன்.  எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தூங்கு.  அதுதான் உனக்கு மருந்து.  உடம்பு என்பது புழுக்கூடு என்று அறியும்போது உனக்குத் தெரியும் மோகம் என்பது ஒன்றுமில்லை என்று.  நீ எதற்காக இங்கு வந்தாய்?’‘
“குஷ்டத்தைப் போக்க.
“குஷ்டம் போய்விட்டதா?
“இல்லை.
“குஷ்டத்தைப் போக்க என்ன பிரயத்தனம் செய்தாய்?
“ஒன்றுமில்லை.
“அவ்வாறு செய்யாததுதான் தவறு.  ஒன்றும் செய்யாமல் எப்படிப் போகும்?  நோயைப் போக்கத்தான் நான் யாத்திரை செல்கிறேன்.  நான் உங்களைப் போன்றவன்தான்.  குஷ்டரோகி.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  அதனால் பனிரெண்டு புனித தலங்களுக்கும், பனிரெண்டு புனித நதிகளுக்கும் சென்று புனித நீராடி சூரியனை வழிபடப் போகிறேன்.
“நாங்கள் யாரும் வரவில்லை.  இவன் பொய்யன்.  மை வேலை, சித்து வேலை தெரிந்தவன்.  வசியம், மாந்திரீகம் செய்து கெடுக்கப் பார்க்கிறான் என்று சொல்லிக் கூட்டம் கத்தியது.  நீலாட்சிதான் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினாள்.  “நீ சொல்வதை உபதேசம் பண்ணாமல் சொல்.  என்ன புனித தலம் என்று நீலாட்சி கேட்டாள்.
“நம் வாழ்க்கையில் எஞ்சியிருப்பதென்ன?
“சாவு.
“நீ ஏன் ஊரிலேயே சாகாமல் இங்கு வந்தாய்?
“வரும்போது நம்பிக்கை இருந்தது.  இப்போது இல்லை.
“அதுதான் பிரச்சனை.  நம்பிக்கையை விட்டதுதான் சிக்கல்.  நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே விசயம் நம்பிக்கை.  அதை இழந்ததுதான் நீங்கள் இப்படியானதற்குக் காரணம்.  குளிக்கப்போய் யாராவது சேற்றைப் பூசிக்கொள்வார்களா?  நாம் மீண்டும் சரியாவோம்.  நம்பு என்று சொல்லி சத்தியம் செய்தான்.  குஷ்டரோகம்பற்றி, அது தீருவதுபற்றி, சூரியத்தலம் உள்ள இடங்கள், புனித தலங்கள், புனித ஆறுகள் ஓடுகிற விசயம்பற்றியெல்லாம் கூறினான்.
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீலாட்சி கேட்டாள்.
“வனத்து ரிஷி மட்டுமல்ல நாரத முனிவரும் சொன்னார்.
“நாரதரா? என்று கூட்டம் கேட்டது.  “ஆம் என்று கூறி, தான் யார் என்பதை மட்டும் மறைத்துவிட்டு நாரதர் கூறிய வரலாற்றையெல்லாம் கூறிவிட்டுக் கடைசியாக “காலையில் என்னோடு வருவது யார்?  நாம் போவது சித்தர் வழி, ரிஷி வழி, முனி வழி, சிவன் வழி.  அதனால் நமக்குத் தெய்வத்தின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும் என்று சொன்னான்.
“நான் வர்றேன் என்று நீலாட்சி சொன்னாள்.  மற்றவர்களிடம் அவள்தான் பேசினாள்.  அவளுடைய பேச்சுதான் எடுபட்டது.  இரவாகிவிட்டது.  நிலவின் வெளிச்சத்தில் அனைவரும் உட்கார்ந்து-சாம்பனிடம் புனித தலங்கள் புனித நதிகள் குறித்து விபரம் கேட்டனர்.  அன்றிரவு முழுவதும் பேசினார்கள்.  இருள் விலகுவதற்கு முன்பாகவே எழுந்து ஆற்றில் குளித்துவிட்டுக் கூட்டமாகச் சென்று ரிஷியை வணங்கினர்.  ரிஷி ஆச்சரியப்பட்டார்.  “மங்களமாக சென்று வா. உன் செயலுக்கு அழிவில்லை.  நீ நினைத்த காரியம் செயமாகும்.  காரியத்தில் வெற்றியடைந்தால் ஒளிஞானம் பெறுவாய்.  பூவுலகைவிட்டுச் சுவர்க்கத்திற்குப் போவாய்.  கல்லார் நெஞ்சில் நில்லார் ஈசன். ஏழு சப்தமிகளில் நீதி, நியமப்படி விரதமிருந்தால் தோசத்திலிருந்து விடுபடலாம் என்று சாம்பனையும் மற்றவர்களையும் அனுப்பினார்.
சாம்பனுக்குப் பின்னால் எழுபது பேர் இருந்தனர்.
 அவர்கள் அனைவரும் பனிரெண்டு தலங்களுக்கும் சென்று வணங்கி, பனிரெண்டு புனித நதிகளில் நீராடி, பனிரெண்டு பருவங்கள் முடிந்து சந்திரபாகா நதியின் அத்தமனதலத்துக்கு வந்தபோது சாம்பனையும் சேர்த்து மொத்தம் பதினைந்து பேர்களே எஞ்சியிருந்தனர்.  யாத்தரையின்போது உடல் நலமில்லாமல் பலர் இறந்தனர். நடக்க முடியாமல் ஒரு சிலர் அங்கங்கே தங்கிவிட்டனர்.  பிள்ளைகளையும், புருசனையும் இழந்த பெண்கள் சாம்பனைக் கொடூரமான வார்த்தைகளால் திட்டினார்கள்.  அவர்களையெல்லாம் நீலாட்சிதான் சமாதானப்படுத்தினாள். 
பனிரெண்டு பருவங்கள் முடிவதற்குள்ளாகவே அவர்களுடைய உடம்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  உடலில் உணர்ச்சிகள் உண்டாக ஆரம்பித்திருந்தன.  புருவ முடியும், தலை முடியும் உதிர்வது நின்று போயிருந்தது.  ஆண்களுக்குத் தாடி, மீசை மீண்டும் வளர ஆரம்பித்திருந்தன.  உடலில் தேய்மானம் நின்றுபோயிருந்தது.  சிந்து நதியைக் கடந்து செல்லும்போது சாம்பனுக்கு ஒரு மரப் பதுமை கிடைத்தது.  அது சூரிய தேவனின் சிலையை ஒத்திருந்தது.  அந்தப் பதுமையோடு சென்று வனத்து ரிஷியை மெய்யொழுகி வணங்கினான் சாம்பன்.  உளம் மகிழ்ந்த ரிஷி சாம்பனையும் மற்றவர்களையும் வாழ்த்தினார்.  “சாம்பா, இந்த மரப் பதுமையை இங்கே பிரத்ஷ்டை செய்.  இது கற்பகத்தருவால் ஆனது.  அடுத்து நீ இன்னொரு மகத்தான காரியத்திற்குத் தயாராக வேண்டும்.  முன்பு ஒருமுறை பூஜை செய்ய எனக்கு உரிமையில்லை என்று சொன்னேன் அல்லவா.  அதனால் பூஜை செய்ய உரிமையுள்ள பிராமணர்கள் சாகத் தீவில் இருக்கிறார்கள்.  அவர்களைப் பாரதவர்ஷத்துக்கு அழைத்து வரவேண்டும்.  இந்த இந்த காலங்களில் இன்னஇன்ன பூஜை செய்தால் குஷ்டரோகம் குணமாகும் என்பதை அவர்கள்தான் கணித்திருந்தார்கள்.  அதோடு அவர்களுக்கு மருத்துவமுறையும் தெரியும்.  முன்பு அவர்களில் சிலர் இங்கு இருந்தனர்.  அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையென்று திரும்பிப் போய்விட்டார்கள்.  அங்கு போவது மலையைக் குடைந்து எலி போவது போன்றது.  வழி கடுமையானது.  நீ முதலில் அந்தரிட்சத்துக்குப் போ.  அதைக் கடந்தால் தேவருலகம், இலாவிருத வர்ஷம். அதை தாண்டினால் சாகத் தீவு.  நீ அங்கு சென்று உரிய பிராமணர்களைக் கொண்டு வரவேண்டும்.  அதற்கு முன் இந்தப் பதுமையை நிறுவு.
“உங்களின் ஆசிப்படியே நடக்கும்”“ என்று சாம்பன் கூறினான்.
“இந்தச் சிலைக்குக் கோவில் எழுப்புவதற்கு விசுவகர்ம இனத்தவர்களை கொண்டு வரவேண்டும்.  இங்கிருந்து தென்மேற்குத் திசையிலுள்ள பிரதேசத்தில் இருக்கிறார்கள்.  அவர்களைக் கொண்டு வரவும், பராமரிக்கவும் நிறைய பொருள் வேண்டும்.  நான் ஆண்டி.  நீ குஷ்டரோகி.  என்ன செய்வது? என்று ரிஷி பெரும் கவலையுடன் சொன்னதைக் கேட்டு “ஸ்வாமி நான் பொருளுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சாம்பன் சொன்னதும், ஆச்சரியத்துடன் “எப்படி? என்று ரிஷி கேட்டார்.  சாம்பன் தன் வரலாற்றைச் சொன்னான்.
“மகாபாரதப் போரையே ஒற்றையாளாக நடத்திய கிருஷ்ணரின் மகனுக்கா இந்த நோய்? பூதலம் போற்றும் கிருஷ்ணரின் மகனா நீ? என்று கேட்டார் ரிஷி.
“ஸ்வாமி.  பழைய வாழ்க்கை என்னை ஈர்க்கவில்லை.  பாம்பு தன் தோலை உரிப்பதுபோல அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவிட்டேன்.  இது புகழ் உடல் அல்ல.  புழு உடல்.  வாளால் நோயை வீழ்த்த முடியாது.  நோய், சாபம் எனக்கு முக்கியமல்ல.  பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புவது, சாகத் தீவிலிருந்து பிராமணர்களைக் கொண்டு வருவதுதான் என் லட்சியம்.  என் ஆசை நிறைவேற ஆசி கூறுங்கள்.  நான் உடனே துவாரகைக்குப் புறப்பட வேண்டும்.
“சாம்பா.  உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  மேன்மையான பண்புகள் இருக்கின்றன.  இன்னும் சில நாட்களில் வளர்பிறையின் ஏழாம் நாள் வருகிறது.  அன்று சூரிய தேவனின் பதுமையைப் பிரதிர்ஷ்டை செய்.  மறுநாள் புறப்படு.  உன் காரியம் வெற்றியடையும்.  நீயும் சிரஞ்சீவியாக இருப்பாய்.  ஈரேழு பதினாறு லோகங்களிலும் உனக்குக் கீர்த்தி உண்டாகும். இந்த இடத்தைப் புண்ணிய பூமியாக்கு என்று கூறினார்.  அவரை வணங்கிவிட்டுத் திரும்பும்போது அவனோடு இருந்தவர்கள் எல்லாம் அவனுடைய கதையைக் கேட்டு மலைத்துப்போயினர்.  கிருஷ்ணரின் மகன் என்பதை யாருமே நம்பவில்லை.  அவனுடைய காலில் விழுந்து வணங்க வந்தபோது தடுத்து நிறுத்தி “நான் இப்போது கிருஷ்ணரின் மகனல்ல.  குஷ்டரோகி.  உங்களில் ஒருவன்.  உங்களோடு இருப்பவன்.  உங்களோடுதான் என் ஆயுட்காலம் முடியும்.  நீங்களே என் பந்தம் என்று சொல்லி ஒவ்வொருவரையும் கட்டித் தழுவினான்.  நோயாளிகள் கண்ணீர்விட்டு அழுதனர்.
“நாம் உடனே பதுமையைப் பிரதிர்ஷ்டை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  அடுத்து நான் துவாரகைக்குப் புறப்பட வேண்டும்.  அதற்கு உங்களுடைய துணை இருந்தால்தான் முடியும் என்று கூறினான்.  ஒரே குரலில் அனைவரும் “நீ சொல்வதை அடிமாறாமல் செய்கிறோம் என்று வாக்களித்தனர்.  படுக்கப்போகும் முன் புதிதாக வந்திருந்த நோயாளிகளைச் சந்தித்தான் சாம்பன்.  நிழல்போல அவனோடு இருந்தாள் நீலாட்சி.
       பதுமையை நிறுவிய மறுநாள் “சாம்பா நாம் சூரியதேவனுக்குக் கோவில் எழுப்ப வேண்டும்.  நீ துவாரகைக்குப் புறப்படு என்று நீலாட்சி சொன்னாள்.  ஆனால் அவளுடைய கண்கள் கண்ணீரைச் சிந்தின.  அவனுடைய வரலாற்றை அறிந்தபிறகு அவள் ஒரு நூல் சாம்பனிடமிருந்து விலகியே இருந்தாள்.  அதை அறிந்த சாம்பன் “நீலாட்சி நீதான் என் ஆற்றலின் ஊற்று.  நீ இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது.  நீ எனக்கு விளக்கு போன்றவள்.  உன்னுடைய வெளிச்சத்தில்தான் நான் பனிரெண்டு புண்ணிய தலங்களில் சென்று வழிபடவும், நீராடவும் முடிந்தது.  சூரிய தேவருக்கு அடுத்தபடியாக உன்னைத்தான் என் மனம் வணங்குகிறது என்று சாம்பன் சொன்னதும் நீலாட்சி கதறியழுதாள்.
  “உன்னிடம் தகாத முறையில் நான் மோகம் கொண்டேன்.  மோகிக்க ஆசைப்பட்டேன்.  அது என் உடல் செய்த தவறு.  நான் இன்று உயிரோடிருக்க நீதான் காரணம்.  எனக்குக் கண்களைத் தந்தவன் நீ.  உன் வழியாகத்தான் நான் இப்போது இப்பூவுலகைக் காண்கிறேன்.  நான் பாக்கியம் செய்தவள்.  உடம்புக்கும் மனசுக்குமான வேறுபாட்டை நீதான் காட்டித்தந்தாய்.  உடம்பு என்பது ஓட்டைத் துருத்தி.  மண்பாண்டம்.  நான் பூமியில் நிற்பதற்கு நீதான் ஆணிவேர்.   நான் நடக்கிற பாதை நீதான்.  உன்னை என் குலகுருவாக எண்ணித் தினமும் மனதிற்குள் பூஜை செய்கிறேன் என்று நீலாட்சி சொன்னதைக் கேட்டு “நீ கானகத்தில் மலர்ந்த அதிசயப்பூ நீலாட்சி.  நீயே என் குரு.  வழிகாட்டி.  உன்னுடைய அன்பும், கருணையும், பெருந்தன்மையுமே என்னை வழிநடத்துகிறது.  தாயைப்போல கருணையுள்ள பாங்கியாகிய நீலாட்சியேநீயும் மற்றவர்களும் ஆசீர்வாதம் தந்து, என்னை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி அவளிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று, ஒரு குதிரையை ஏற்பாடு செய்துகொண்டு துவாரகைக்கு வாயு வேகத்தில் புறப்பட்டான் சாம்பன்.
       பிறைகாலத்தில் சாம்பன் துவாரகையை அடைந்தான்.  அவனைக் கண்டு கிருஷ்ணர் அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்.  ஜாம்பவதியும் மற்ற தாய்மாரும் கண்ணீரோடு அவனை வரவேற்று உபசரித்து கட்டித்தழுவினர்.  கிருஷ்ணரின் மாளிகையில் மகிழ்ச்சி வெள்ளம் ஓட ஆரம்பித்து ஒரு கணம்தான் இருக்கும்.  ஒருநாள்தான் தங்கப் போகிறேன் என்று சாம்பன் சொன்னது எல்லாருடைய காதிலும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்தது.  அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர்.  அவனுடைய மனதை மாற்ற முயன்றனர்.  சாம்பன் தன் முடிவில் உறுதியாக நின்றான்.  தான் செய்ய இருக்கிற காரியம் குறித்துப் பேசி அனைவரையும் சமாதானம் செய்தான்.  லட்சுமணாவைத் தேற்றுவதுதான்  சமுத்திரத்தைக் கடப்பதுபோலிருந்தது.  அன்றிரவு தங்கி மறுநாள் காலையிலேயே அளவிலா பெரும் செல்வத்துடன் துவாரகையைவிட்டுக் கிளம்பினான்.
       சாம்பனின் தேர் புயலைப்போல சீறிப் பாய்ந்தோடியது.  விசுவகர்ம இனத்தவர்களைச் சந்தித்தான்.  தான் செய்ய இருக்கும் காரியம் குறித்துப் பேசி, வேண்டிய பொன், பொருள், செல்வம் கொடுத்து-அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பிறைகாலம் கழித்து சூரிய தலத்துக்கு வந்து சேர்ந்தான்.  சூரியதேவனுக்குக் கோவில் எழுப்புவுதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்தான்.  ஏழு பிறைக்காலம் நீலாட்ச்சியின் உதவியோடு கோவில் பணிகளைச் செய்தான்.  எட்டாம் பிறை முதல் நாள் தன் பயணத்தை ஆரம்பித்தான்.  மற்ற நோயாளிகள அவனை வழியனுப்பி வைத்தனர்.
       பஞ்சநதி நிலப்பரப்பைக் கடந்து இமாலயத்தின் அடிவாரத்திற்குச் சென்று சேர சாம்பனுக்கு ஒரு பிறைக்கு மேலாயிற்று.  அங்கிருந்து அந்தரிட்சத்தை நோக்கிப் பயணமானான்.  அந்தரிட்சத்தை நெருங்கநெருங்க கந்தருவர் கண்ணில் பட ஆரம்பித்தனர்.  ஆண்களும் பெண்களும் மிகவும் சௌந்தரியழகு பெற்றவர்களாக இருந்தனர்.  குதிரைகள், மலையாடுகளின் மீதே பயணம் செய்தனர்.  மலைக் குன்றுகளுக்கு நடுவே அமைந்திருந்தது அந்தரிட்சம்.  படகின் மூலம் சாவரி செய்து ஆற்றைக் கடந்தான்.  இலாதவர்ஷத்துக்குச் செல்வதற்கான பாதையைக் கேட்டறிந்தான்.  வடமேற்குத் திசையில் பயணம் செய்து சாகத் தீவை அடைவதற்குள் பத்து பிறைக்காலம் முடிந்துவிட்டது.  சாகத் தீவுவாசிகள் தேவர்களைப்போல இருந்தனர்.  மகர் இனத்துப்  பெரியவர்களைப் பழம், புஷ்பம், தர்ப்பை, திருமஞ்சனம் முதலானவை கொடுத்து வந்தனம் செய்து தான் வந்திருக்கும் நோக்கம் பற்றி சாம்பன் எடுத்துரைத்தான். தன் குல வரலாற்றையும் தக்க விதத்தில் சொன்னான்.  மகர் இனத்துப் பெரியவர் ஒருவர் “உன் பேச்சும் செய்கையும் நம்பும்படியாக இருக்கிறது.  கிருஷ்ணரைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.  எங்கள் இனத்து ஆட்கள் அங்கு வருவார்கள்.  அவர்களுக்குரிய மரியாதை கிடைக்குமா? என்ற கேட்டார்.
“வேதமோதுகிற அந்தணர்களே! திவ்விய வஸ்திராபரணங்கள் தருவேன்.  கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்கள் தருவேன்.  வேண்டிய தானங்களும் தட்சணைகளும் தருவேன்.  நல்ல பயிர் நிலங்களும், காராம் பசுக்களும் கொடுப்பேன். கோதானம் செய்வேன். பொன், பொருள், தங்க ஆபரணங்களும் தருவேன்.  உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.  என்னோடு பதினெட்டுக் குடும்பங்கள் வரட்டும்.  நான் எழுப்பிக்கொண்டிருக்கும் சூரிய தேவர் கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.  அதோடு எங்கள் நாட்டில் குஷ்டரோகத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது.  அதையும் நீங்கள் ஒழிக்க வேண்டும்.  இதுவே என் விருப்பம் என்று சாம்பன் கூறியதை கேட்டு மகர் இனத்தவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டனர்.  அவனோடு பாரத வர்ஷத்துக்கு வருவதற்குப் பதினெட்டுக் குடும்பங்கள் தயாராயின்.  மலைக்கழுதைகள், குதிரைகள், பெரிய மலையாடுகள் பூட்டிய தேர்களில் சாம்பனும் பதினெட்டு மகர் இனத்துக் குடும்பங்களும் பிரயாணத்தை ஆரம்பித்தன.
                சாம்பன் மகர் இனத்தவர்களோடு சூரியதலத்துக்கு வந்து சேர்ந்தபோது சூரியதேவரின் கோவில் தேர் போன்ற வடிவில் பாதிக்குமேல் முடிந்திருந்தது.  அதைக் கண்டு சாம்பன் மகிழ்ச்சியுற்றான்.  மகர் இனத்தவர்கள் சாம்பன் பொய் கூறவில்லை என்பதையறிந்து அவனை வாழ்த்தினர்.  ஓமச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  வழியில் சாம்பனுக்கு மகர் இனத்தவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக அவனுடைய தோற்றத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  அதை கண்டு மற்றவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர்.  அவனுடைய உடல் தோற்றத்தில் தெரிந்த இயற்கை காட்சிகளையும், மனித உருவங்களையும் கண்டு அதிசயத்தனர்.  மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மகர் இனத்தவர்களிடம் வேண்டிக்கொண்டான்.  வனத்து ரிஷியைச் சந்தித்து தக்க ஆலோசனைகளைப் பெற்று ஆறு மகர் இனத்தவர்களை மட்டும் அங்கே தங்கச் செய்துவிட்டு மற்ற மகர் இனத்தவர்களையும், விஸ்வகர்ம இனத்தைச் சேர்ந்த கொஞ்சம் பேரையும் அழைத்துகொண்டு யமுனையின் தென்கரையில் வடமதுரைக்கு அருகில் ஒரு ஓமச்சாலையை நிறுவினான்.  அங்கு சூரிய தேவருக்கு ஒரு கோவில் எழுப்பும்படி விசுவகர்ம இனத்தவர்களைக் கேட்டுக்கொண்டான்.  ஆறு மகர் இனத்தவர்களை அங்கே தங்கச் செய்தான்.  மீதமுள்ள மகர் இனத்தவர்களையும், விசுவகர்ம இனத்தை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டு உட்ர நாட்டில் பிராசி நதியின் கிளையொன்று சந்திரபாகா என்ற பெயருடன் ஓடிச்சென்று கடலில் கலக்கிற இடத்திற்கு வந்தான்.  அங்கு ஒரு ஓமச்சாலையை நிறுவினான்.  சூரிய தேவருக்கு கோவில் எழுப்ப விசுவகர்மர்களைக் கேட்டுக்கொண்டான்.  எஞ்சியிருந்த ஆறு மகர் இனத்தவர்களையும் தங்க வைத்தான்.  சாம்பனின் செயல் கண்டு மகர் இனத்தவர்களும், விசுவகர்ம இனத்தவர்களும் வாழ்த்தினர்.  சூரிய தேவருக்குக் கோவில் எழுப்பும் பணியில் முழு மனதுடன் ஈடுபட்டனர்.  அனைவரிடமும் விடைபெற்று சூரிய தலத்துக்குப் போவதற்கு தயாரானான்.
       சூரிய தலத்துக்குச் சாம்பன் வந்து சேர ஒரு ஆண்டாகிவிட்டது.  அவன் வரும்போது அங்கு சிறு நகரம் உண்டாகியிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டான்.  நகரவாசிகள் அந்த இடத்திற்கு “சாம்ப பூர்” என்று பெயரிட்டிருந்தனர்.  மகர் இனத்து பிராமணர்களின் சிகிச்சையால் குஷ்டரோகிகள் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தனர்.  புதிய நோயாளிகளும் வந்திருந்தனர்.  சூரியதேவனின் கோவிலில் முக்கால பூஜையும் முறையாக நடந்துகொண்டிருந்தது.  எல்லாவற்றையும் கண்டு மனம் பூரித்த சாம்பன், “வேத நெறிமுறைகள் காப்பாற்றப்பட வேண்டும்.  அறநெறி, ஒழுக்க நெறிகள் தவறாது இருந்தால்தான் தர்மம் தழைக்கும் என்று மகர் இனத்தவர்களிடம் கூறினான்.  வனத்து ரிஷியை சந்திக்கச் சென்றான்.
       ரிஷியின் ஆணைப்படி காலப்ரிய, காலநாத்தலம், கிழக்குக் கடற்கரையின் கோணவல்லபத்தலம் ஆகிய மூன்று தலங்களிலும் நான்கு மாதம் என்று தங்கி ஓராண்டைக் கழித்தான்.  அவனுடைய பழைய கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று கோவில்களின் பணிகளையும் பார்த்தான்.  கோவிலை நெருங்கநெருங்க தேவலோகம் போன்றிருந்தது.  கோவிலுக்கு வெளியே தேவர், யட்சர், கந்தருவர், அப்சரசுகளின் உருவம் பதித்த சிலைகள் இருந்தன. கோவில் பெரிய தேர் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது.  நான்கு வாயில்கள் இருந்தன.  வாயில் காப்போராக பிங்களா, தண்டநாயகன், ரஜனா, ஸ்தோசா, கால்மாஸ், பட்சி, வியோமன், நக்னதிண்டி ஆதித்தியர், வசுக்கள், அசுவினிகள், மாருதர் யாவரும் அவரவர் இடத்தில் வீற்றிருந்தனர்.  பனிரெண்டு ஆண்டு காலத்தில் மூன்று கோவில்களும் முழுமையாகப் பூர்த்தியடைந்தன.
       ஒருநாள் “நான் கிழக்குக் கடற்கரையில் கோணர்க்கத்தலத்தில் தங்கி கோணாத்தியரின் வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன்என்று கூறினான் சாம்பன்.  அதைக்கேட்ட நீலாட்ச்சி நான் கற்பதுமையல்ல.  மானிடப் பிறப்பு.  நீதான் என் மகா மைத்திரன்.  உயிர் போன்றவன்.  அதனால் நீ ஆண்டுக்கொரு முறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும்.  இதுவே என் இறுதி விருப்பம் என்று நீலாட்சி சொன்னாள்.
“நீலாட்சி நான் உன்னைச் சந்தித்த அந்தப் பொழுதையும், இரவையும் நான் மறக்கவில்லை.  அன்று நீ ஒரு கை அன்னமிட்டாயே.  அதை நான் மறக்க மாட்டேன். நீ ஒருத்தி மட்டுமில்லாமல் போயிருந்தால் எந்தக் காரியமும் நடந்திருக்காது.  அன்று நீதான் எனக்கு நம்பிக்கையளித்தாய்.  நீதான் என் ஆதி மூல சக்தி. நீ நீச குலத்தில் பிறந்தவளாக இருந்தும் புத்தியால் உயர்ந்து விளங்கினாய். உன் பேச்சுக்குத்தான் நோயாளிகள் கட்டுப்பட்டனர். உங்களுடைய உழைப்பால்தான் மூன்று கோவில்களும் எழுந்தன. நீங்கள் உழைப்பால் உயிர் வாழ்கிறவர்கள். அதனாலேயே நீ என் சகோதிரி ஆனாய். நீலாட்ச்சி. என்று சொன்ன சாம்பனின் காலில் விழுந்து கண்ணீர் சொரிந்து சொன்னாள் நீலாட்சி. 
“நீ வராமலிருந்தால் நான் எப்போதோ மண்ணாகிவிட்டிருப்பேன்.  சூரியதேவரின் ஆலயங்களையும், பனிரெண்டு புனித தலங்களையும் பார்த்திருக்க முடியாது, பனிரெண்டு புனித நதிகளிலும் நீராடியிருக்க முடியாது.  பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.  அது முக்கியமல்ல.  நீதான் முக்கியம்.  நீதான் எனக்குச் சூரியதேவனைக் காட்டித்தந்தாய்.  நீயே என் ஆவி.  இன்றிலிருந்து இந்த வனம் மைத்திரேய வனம் என்று அழைக்கப்படும்.
       உணர்ச்சிவசப்பட்டான் சாம்பன்.  கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.  நீலாட்சியை மார்போடு அணைத்து “மைத்திரேயியே வனத்தை சேர்ந்த ஒரு மைத்திரேயன் தன் மைத்திரேயியிடம் வாக்குத் தவற மாட்டான். சகோதரன் தன் சகோதிரிக்கு அளித்த இடம். மித்திரவனம். ஆண்டுதோறும் உன்னைச் சந்திப்பேன் என்று வாக்குக் கொடுத்தான்.  “எனக்கு இந்த வரம் போதும்.  இதுவே என் ஆபரணம்.  பொக்கிஷம் என்று நீலாட்சி சொன்னாள்.  மற்றவர்களிடமும் சாம்பன் விடைபெற்றான்.  அப்போது அங்கே நாரத முனிவர் பிரசன்னமானார்.  முனிவருக்கு வேண்டிய சகலவிதமான மரியாதைகளையும் செய்து வணங்கினான்.
“சாம்பா நீ பழைய ரூபத்தை அடைந்துவிட்டாய்.  உன் சாபமும் தீர்ந்தது.  நீ உடனே துவாரைகைக்குப் புறப்படு. உன்னைப் பிடித்தப் பீடை நீங்கிவிட்டது என்று நாரதர் கூறினார்.
“நான் இனி துவாரகைக்குத் திரும்பப் போவதில்லை.  மகா முனிவரே என்று தாழ்பணிந்து கூறினான் சாம்பன்.
“ஏன்?  உன் பந்துக்கள் எல்லாம் உன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
“வாழ்க்கை என்பது என்ன, மனம் என்ன என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன்.  நான் இப்போது விரும்பும் வாழ்க்கை துவாரகையில் இல்லை.  இந்த மித்திரவனத்தில்தான் இருக்கிறது.  மலையளவுக்குக் குவியல் குவியலாக ஒன்பது வகை ரத்தினங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் போக மாட்டேன்.  சூரியதேவனை வழிபட்டு இங்கேயே என் காலத்தைக் கழிக்க திட்டமிட்டுள்ளேன்.  மயானத்தை ஆள எனக்கு விருப்பமில்லை.  பொன்னுக்கும் மண்ணுக்கும் நான் ஆசைப்படவில்லை.  அந்த ஆசையெல்லாம் எப்போதோ செத்துவிட்டது.  பழைய நினைவுகளை அறுத்துவிட்டேன்.  எனக்கு ஆசி கூறுங்கள் மகா முனிவரே. சூரிய தலத்துக்கு வரும் வழியில் பூதக்கூட்டங்களும் பேய்களும், துஷ்ட விஷ ஜந்துக்களும் விளையாடும் மயானக்கரையிலும் தங்க நேரிட்டது.  அடர்ந்த வனத்திலும், அத்துவானக்காட்டிலும்  உறங்கியிருக்கிறேன்.  பல இரவுகள் நட்சத்திரங்களையும் சந்திரனையும் பார்த்தவாறு இருந்திருக்கிறேன்.  அந்த இரவுகளில்தான் சூறைக்காற்றில் இருக்கும் தீபம் போன்றது மானிட வாழ்வு என்பதை அறிந்துகொண்டேன்.  மானிடப் பிறப்பு அற்பமானது.  தந்தை இருந்தார்.  தாய், யானை, சேனை, படை, பரிவாரங்கள், மாளிகை, அளவிலா செல்வம் எல்லாம் இருந்தது.  ஆனால் இங்கு வந்தபோது நான் தனியாகத்தான் வந்தேன்.  என் நோய் மட்டுமே என்னோடு இருந்தது.  சுடுகாட்டிற்கும் நான் தனியனாகத்தான் செல்வேன் என்பதைச் சொல்லி தந்தது சுடுகாட்டில் நான் கழித்த இரவுகள்தான்.  அந்த இரவுகளை நான் பொக்கிஷமாக மனதில் வைத்திருக்கிறேன். வேறு பொக்கிஷங்கள் வேண்டாம் முனிவரே. ஆண் பெண் என்பது சதை பிண்டம் மாமிசம் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். என்று நாரதரைத் தொழுது நின்றான் சாம்பன்.
தேவாமிர்தம் உண்டதுபோல மனம் பூரித்த நாரதர் “சாம்பா நீ சூரியதேவனுக்கு மூன்று கோவில்களை எழுப்பி இருக்கிறாய்.  உலகில் யாரும் செய்யாதது.  அதனால் எல்லா உலகத்திலும், எல்லா காலத்திலும் உன் பெயர் நிலைத்திருக்கும்.  ஈரேழு புவனங்களிலும் உன் புகழ் பரவும்.  தேவாதி தேவர்களும் உன்னை வாழ்த்துவார்கள்.  வா சூரியதேவனை வழிபடலாம் என்று கூறி சாம்பனை அழைத்துகொண்டு கோவிலுக்குள் போனார் நாரதர்.
“எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவர்களும், எல்லா வேதங்களும் வணங்குவதற்குரிய கிரகராஜனே! என் பூஜையை ஏற்றுக்கொள் என்று கூறி சூரிய தேவனை வழிபட்டார் நாரதர்.  “இன்று முதல் கிரகராஜனின் பெயர் சாம்பாதித்தியன்.  இனிமேல் இந்தப் பெயரில்தான் சூரியதேவன் வழிபடப்படுவார் என்று நாரதர் கூறினார்.  சாபம் பெற்றபோதுகூட அழாத சாம்பன் முதன் முதலாகக் கண்ணீர்விட்டு அழுதான்.  அவனை ஆரத்தழுவிய நாரதர் “அடுத்து உன் திட்டம் என்ன?” என்று கேட்டார். 
“ஆற்றங்கரைக்குச் செல்கிறேன்.  புதுக் குஷ்டரேகிகள் யாராவது  வந்திருந்தால் அவர்களை அழைத்து வந்து சூரியதேவனை வழிபடச் செய்வேன் என்று கூறி நாரதரை வணங்கிவிட்டு ஆற்றங்கரைக்கு நடக்க ஆரம்பித்தான் சாம்பன்.
------------

உயிர்மை, ஜனவரி 2014

6 கருத்துகள்:

  1. அருமை உங்கள்சேவையை தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. மகர் இனத்தவர்கள் முதன்மைப் படுத்தப் படுகிறார்களே! யார் இவர்கள்? ஆனால், இந்த பாரதவர்ஷத்தில் மகர் இனத்தவர்கள் , சூத்திரர்களாகவும், அதனினும் கீழாகவுமே நடத்தப் படுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? எங்கு நடந்த தவறு? ஏதோ ஒரு சூழலில் அவர்களை திட்டமிட்டே தோல்வியடையச் செய்து மேலாதிக்கம் செய்வதாக தெரிகிறது. இடையர் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ண பரமாத்மாவின் காலத்திலேயே உயர்ந்த பிராமணனாக, மகர் இனம் இருந்துள்ளது. இனத்தின் உயர்வானவனை இழிவு படுத்தும் துஷ்ட புத்தி எப்படி மிகுந்தது. அதுவும் நிச்சயம் புராணத்தில் இருக்கும். யுகத்தின் விதி என்றாலும், உண்மைக்கு அழிவில்லையே. இந்த சதியை , கலியுகமாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  3. மேலும், சாம்பனும், கிருஷ்ணரும் ஏற்றுக்கொண்ட, மகர் ஒரு உயர் பிராமணன் என்றால், இன்றைய பிராமணன் எங்கிருந்து வந்தவர்கள்? மகர் ஏன் எல்லோரையும் விட இழிவாக கருதப்பட வேண்டும்? ஆட்சியாளர்கள் வரலாற்றை திருத்த கோவில் கட்ட முனையும் போது, கிருஷ்ணரின் யாதவ சமூகத்தை விட உயர்ந்த, மகர் இனத்தை உயர் ஸ்தானத்தில் வைக்க ஏன் முயற்சி செய்யவில்லை? ஆசிரியர் இமையம் ஆய்ந்து எழுதினால் நன்று. நான் வேறு புத்தகம் படிக்கும்பொழுது, இந்த சாம்பன் (சாம்பான்) பற்றி அறிய நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பிராமணன் எங்கிருந்து வந்தவர்கள்? - இன்றைய பிராமணர்கள் யூதர்கள்

      நீக்கு
  4. பகவான் கிருஷ்ணர் காலத்திலேயே, தன் இடையர் இனத்தைச் விடவும் மேலான பிராமண இனமாக மகர் இருந்துள்ளார்கள் இப்போது ஏன் இழிவு படுத்தப் படுகிறார்கள். மகர் என்ற பிராமணனுக்கும் இன்றைய பிராமணனுக்கும் என்ன வித்தியாசம்? பல இடங்களில் இன்றைய பிராமணர்கள் 'வேடதாரி பிராமணர்கள்' என்று கூறுவது உண்மையா? கிருஷ்ணர் கால உண்மையை மறுக்க முடியாது. வரலாற்றை நிலை நாட்ட, கோவில் கட்டும் நாம், மகர் இனத்தை உயர்த்திப் பிடித்தால் என்ன? எங்கு தவறு நடந்தது? புராண காரணம் அல்லது இன்றைய மானிட சதியா ஆதார விளக்கம் நீங்கள் கூறுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஏதோ படிக்கும்பொழுது சாம்பன் பற்றி அறிய முனைந்தேன். அவிழ்க்க முடியாத புதிர் பல மனதில் எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளிகளை பாருங்கள், உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்
      சுருக்கமாக சொல்வதென்றால்,
      யூதர்கள், மௌரியர்கள், குஷானர் இவர்களின் வம்சாவளிகள் தான் இந்தியாவை கட்டுப்படுத்துகின்றனர்
      யூதர்கள் பிராமணர், பணியா யூதர் என்ற பெயரிலும்
      மௌரியர்கள் ஜாட் , தாகூர், மராத்தா, நாயர், நாயுடு, நாயக்கர், ரெட்டி , சிங்கள நாயக்கே என்ற பெயரிலும்
      குஷானர்கள் குஜ்ஜார் , ராஜ்புத் என்ற பெயரிலும்
      பிராமண, சத்திரிய, வைஸ்ய உயர்சாதி பிரிவுகளில் இருந்துகொண்டு, பூர்வகுடிகளை சாதிய மேல்கீழ் படிநிலையில் பிரித்துப்போட்டு ,
      இன , மொழிவரலாறு அழித்து , இந்த தமிழர் தொல்நிலத்தை 2300 ஆண்டுகளாக வதைத்துக்கொண்டு உள்ளனர்
      இதில் மௌரியர், குஷான வம்சாவளிகள் பூர்வகுடிகள் போலவே உள்ளதால், பூர்வகுடிகளுக்கு இவர்களை அடையாளம் பார்க்க தெரியாது, மேலும் கல்வி அறிவும் முழுக்க மறுக்கப்பட்டது
      தமிழர்கள் மட்டுமே இன்றும் மொழியும் வரலாறும் உள்ள பூர்வகுடிகள்
      இருந்தும் என்ன பயன், மௌரிய கூட்டம் தீராவிட பெயரில் ஆண்டுகொண்டு உள்ளது
      போரில் இந்த வந்தேறிகளை எதிர்த்து மண்ணை காத்தவர்கள் தாழ்த்தப்பட்டனர், வந்தேறிகளுக்கு அடிபணிந்தவர்கள் நடுநிலை சாதியாக்கப்பட்டனர்
      புத்தரின் சாக்கிய குடியே தாழ்த்தப்பட்டு தான் உள்ளது.

      நீக்கு