திங்கள், 13 அக்டோபர், 2014

பரிசு
வீட்டுக்குப் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்தார் ராமசாமி. அப்போது திண்ணையில் உட்கார்ந்திருந்த வள்ளுவன் எழுந்து வந்து மூன்றாவது வீட்டைப் பார்த்தான். தவமணி கண்ணில் படவில்லை. நாளக்கி ரெண்டாவது புள்ளெ மோனிசாவுக்குப் பொறந்த நாளுஎன்று யாருக்கோ சொல்வது மாதிரி மெதுவாகச் சொன்னான். அவன் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தார் ராமசாமி.
துணி எடுக்கணும். கேக்குக்கு ஆர்டர் கொடுக்கணும்என்று முன்பை விடக் கொஞ்சம் வேகமாக வள்ளுவன் சொன்னான். சைக்கிள் தள்ளுவதை நிறுத்திவிட்டுத் தவமணி வீட்டுப் பக்கம் ராமசாமி பார்த்தார். தவமணி இருப்பதற்கான அடையாளம் இல்லை. நிற்பதா போவதா என்று தெரியாமல் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார். வள்ளுவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவே ராமசாமி மீண்டும் சைக்கிளை இரண்டு தப்படி தள்ளினார்.
ஒண்ணும் சொல்லாமப் போனா என்னா அர்த்தம்?”
என்னா சொல்லணும்?” வள்ளுவன் மாதிரியே ராமசாமியும் எங்கோ பார்த்தபடி கேட்டார்.
புள்ளைக்கித் துணி எடுக்கணும். கேக்குக்கு ஆர்டர் கொடுக்கணும்.
செய்யி.
பணம்?”
எங்கிட்டெ இல்லெ.
பணமில்லன்னா துணியும், கேக்கும் எப்பிடி வரும்?”
“-----”
பேசாம இருந்தா என்னா அர்த்தம்? புள்ளையோட பொறந்த நாளுன்னு தெரியாதா?”
புள்ளையப் பெத்தவன் நீ. செய்யி. எங்கிட்டெ எதுக்கு சொல்ற?”
புரிஞ்சிதான் பேசுறியா?”
பன்னண்டு மணி கரண்டு. நான் காட்டுக்குப் போயி மோட்டாரு போட்டுத் தண்ணி எறைக்கணும்என்று சொல்லிவிட்டு ராமசாமி சைக்கிளை நகர்த்தினார். அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தான் வள்ளுவன்.
வள்ளுவனும் ராமசாமியும் நேருக்கு நேர் பேசி ஆறு வருடமாகிறது.  வனஜாவைத்தான் கட்டுவேன் என்று அவன் அடம்பிடித்ததிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்றுவிட்டது. அதற்குப் பிறகு இருவரும் இன்றுதான் பேசியிருக்கின்றனர். அதுவும் நிறைய வார்த்தைகளை.
ஒங்கையில காசு இருக்குன்னுதான போற? போ. நேத்து ஒனக்கு பென்சன் வந்திருக்குமின்னு எனக்குத் தெரியாதா?”
சைக்கிளை நிறுத்தினார் ராமசாமி. வீட்டுப் பக்கம் பார்த்து சொன்னார் வந்தா ஒங்கிட்டெ கொடுத்திடணுமா?”
பின்னெ? யாருக்குக் கொடுக்கப்போற?”
யாருக்கோ.
பணத்த யாருக்கோ கொடுக்கிறதுக்கு என்னெ எதுக்குப் பெத்த?” என்று சொல்லும்போதே வள்ளுவனுக்குக் குரல் உடைந்துபோயிற்று.
பெரிய தப்புத்தான். தெரியாம செஞ்சிப்புட்டன்என்று நிதானமாகச் சொன்னார் ராமசாமி. அப்போது வீட்டிற்குள்ளிருந்த வனஜா கத்துவது தெளிவாகக் கேட்டது.
சந்தோசமா இருக்கத் தெரியாத மனுசன்கிட்டெ என்னா பேச்சு? பணத்த வச்சிக்கிட்டு சாவட்டும். அந்தப் பீத்த பணத்த நம்பியா நான் புள்ளை பெத்தன்? நல்ல சோறு திங்காம, நல்ல துணி கட்டாம கல்யாண நாளு, பொறந்த நாளுன்னு கொண்டாடாம கோயில், திருவிழான்னு போவாம காடுகாடுன்னு அலயுற நாயிவுளுக்கு என்னா தெரியும்? உலகம் எப்பிடி இருக்குன்னு தெரியுமா? பணமிருந்தா மட்டும் போதுமா, சந்தோசமா இருக்கத் தெரிய வாணாம்? பெத்தப் புள்ளைக்கி, பேரப் புள்ளைக்கி இல்லாத பணம் எதுக்கு? சுடுகாட்டுக்குப் போகவா? பேங்குல இருக்கிற பணம் சோறு போடுமா? புத்தி இருக்க வாணாம்? மனுசனா இருந்தா எல்லாம் தெரியும். புருசன் பொண்டாட்டி சிரிச்சி பேசுனாலே புடிக்காது. அப்பறம் எங்க பேரப் புள்ளை சிரிக்கிறது புடிக்கும்?” ராமசாமியினுடைய கண்களின் நிறமும், முகத்தின் நிறமும் மாறிவிட்டன. தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக்கொண்டு நிற்பது மாதிரி நின்றுகொண்டிருந்தார். அதைப் பார்த்த வள்ளுவன் வேகமாக வீட்டிற்குள் சென்று ஏதோ வனஜாவிடம் சொன்னான். சீ போ. எட்டெஎன்று வனஜா சொன்னது வாசல்வரை கேட்டது. முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு வெளியே வந்தான் வள்ளுவன்.
ராமசாமி இயல்பாக சைக்கிளை நகர்த்தினார். பணம் கொடுக்காமப் போறல்ல. போ. ஒம் பணம் இல்லன்னா செத்திடுவன்னு மட்டும் எண்ணாதஎன்று வீம்பாகச் சொன்னாலும் அழுதுவிடுவது மாதிரி இருந்தான். அவனுடைய தோற்றத்தைப் பார்த்ததும் ராமசாமிக்கு மனசு மாறிவிட்டது. சைக்கிளை நிறுத்தி ஸ்டேண்டு போட்டார்.
நீ கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த நாளயிலிருந்து ஒம் பொண்டாட்டி பொறந்த நாளுக்கு, கல்யாண நாளுக்கு நான் பணம் தரல? புள்ளைங்க பொறந்த நாளக்கி நான் செலவு பண்ணல?”
எல்லாம் நீதான் செய்யுற? அப்பறம் ஏன் இன்னிக்கி இல்லங்கிற?”
நேத்து மாசி மகத்தில ஒங்கம்மாவுக்கு அரிசி கொடுக்க வான்னு கூப்புட்டன். நீ வல்லெ. பெத்த தாயிக்கு வருசத்தில ஒரு நாளு ஒன்னால மெனக்கிட முடியல. இதெவிட ஒலகத்தில வேற என்னா வேல ஒனக்கு? நீதான் வல்லெ. ஒம் பொண்டாட்டியாச்சும் வரணுமில்ல. புதுப்பட சி.டி. வாங்கப் போயிட்ட.
ஓகோ. அதனாலதான் பணம் இல்லங்கிறியா?”
பெத்த தாயிக்கு ஒரு நாளு மெனக்கிட முடியல ஒனக்கு. அப்பறம் நான் ஏன் ஒனக்குப் பணம் தரணும்? ஒனக்குச் சினிமாதான் முக்கியம்.
செத்துப்போன ஒம் பொண்டாட்டிதான் ஒனக்கு முக்கியம். எம் புள்ளை முக்கியமில்ல.
எம் பொண்டாட்டியா?” முனகலாக ராமசாமி கோட்டார். வள்ளுவனையே வெறித்துப் பார்த்தார். லேசாக அவருடைய உடம்பு நடுங்கியது.  உடம்பிலிருந்த சத்தெல்லாம் ஆவியாகிவிட்டது மாதிரி இருந்தது. அடுத்த வார்த்தை பேசக்கூட அவருக்கு உடம்பில் தெம்பில்லை. அப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துகொண்டு வந்த தவமணி ராமசாமியையும் வள்ளுவனையும் பார்த்தாள். பார்த்த மாத்திரத்திலேயே ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தாள். வேகமாகப் போய்க் குடத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு வந்தாள்.
செத்துப்போன ஒம் பொண்டாட்டிக்கி மகத்தில அரிசி கொடுக்க நேத்து வல்லன்னுதான இன்னிக்கி எம் புள்ளை பொறந்த நாளுக்குப் பணம் தர மாட்டங்கிற?” என்று வள்ளுவன் வேகத்தோடு சொன்னான். அப்போது வீட்டிற்குள்ளிருந்த வனஜா வாழத் தெரியாத ஜென்மம் எல்லாம் எதுக்குத்தான் உசுரோட இருக்குதுவுளோ?” என்று சொன்னாள். 
எனக்கும் எம் புள்ளைங்களுக்கும் இல்லாத பணம் எதுக்கு? நான் ஒனக்குத்தான் பொறந்தனான்னு தெரியலஎன்று சொன்னதும் வள்ளுவனை வெறித்துப் பார்த்தார். ஒரு பேச்சு இல்லை. பெருமூச்சு இல்லை.  நாக்கு இல்லாதது மாதிரி மட்டுமல்ல, தன்னுணர்வும் இல்லாத மாதிரி நின்றுகொண்டிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. இருட்டாகிவிட்டது மாதிரி இருந்தது.
என்னடா தம்பி பேசுற?” என்று கேட்டாள் தவமணி.
அக்கான்னு பாக்க மாட்டான். அசிங்கப்பட்டு போயிடுவ. போ எட்டெ.
அதிர்ந்துபோன தவமணியால் தம்பிஎன்ற வார்த்தையைத் தவிர்த்து அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
தம்பியும்ல்லெ. கொம்பியுமில்லெ. போ எட்டெ.வள்ளுவன் கத்தினான்.
முப்பது வருசத்தில் அக்கா’  என்ற வார்த்தை தவிர்த்து வேறு வார்த்தை பேசியவனில்லை. முகத்தை முறித்துப் பேசியவனில்லை. எதனால் இன்று தூக்கியெறிந்து பேசுகிறான்? தவமணிக்கு ஒன்றும் பேச முடியவில்லை.  கூனிக்குறுகிப்போய் நின்றுகொண்டிருந்த ராமசாமியைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அப்பாவப் பாத்து என்னா வாத்தடா கேட்ட?” என்று கேட்டாள். அதற்கு வள்ளுவன் பதில் சொல்லவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
வீணாப்போன அந்தப் பணமும் சரி, எஞ்செருப்பும் சரி. எதுக்குத் தெருவுல நின்னு ஊராங்ககிட்டெ பேசிக்கிட்டு நிக்குற? வா, வீட்டுக்குள்ளாரஎன்று வனஜா வள்ளுவனைக் கூப்பிட்டாள். 
நாங்க ஊராங்களா வனஜா?” வீட்டிற்குள்ளிருந்த வனஜாவிடம் கேட்டாள் தவமணி.
ஊருக்குப் பெரிய பஞ்சாயத்து வந்துட்டீங்கல்ல. அப்பறம் என்னா கொறச்சலு?” என்று வனஜா சொன்னது தெளிவாகக் கேட்டது. தவமணியினுடைய முகம் தொங்கிப்போயிற்று. ராமசாமியைப் பார்த்தாள். அவருடைய முகம் ஏற்கெனவே செத்துப்போயிருந்தது. சட்டென்று கோபம் வந்துவிட்டது. ஆளாளுக்கு தூக்கியெறிஞ்சி பேசுறீங்களே. இது நல்ல துக்கா?” என்று வள்ளுவனிடம் கேட்டாள்.
போ. எட்டெ. மரியாத கெட்டுடும்.
தவமணி அப்படியே விக்கித்துப்போனாள். பேசுவது வள்ளுவன்தானா என்று சந்தேகம் வந்தது. தொடர்ந்து பேசினால் சண்டைதான் வரும் என்று நினைத்த தவமணி பணம் வேணுமின்னா எங்கிட்ட சொல்லக் கூடாதா? நான் வாங்கித்தர மாட்டனா?” என்று கேட்டாள். வள்ளுவன் வாயைத் திறக்கவில்லை. அப்போது வாசலுக்கு வந்த வனஜா ஊருக்குப் பெரிய பஞ்சாயத்து வந்தாச்சி. அப்பறம் என்ன கொறச்சலு. ஒனக்குச் சோறு மட்டுமில்ல.  பாயும் போடுவாங்க. பக்கத்திலயும் படுப்பாங்க?” என்று சொன்னதுதான். தவமணியும் ராமசாமியும் ஒரே நேரத்தில்  வனஜாவைப் பார்த்தனர். தவமணியின் கண்கள் கலங்கின.
உள்ளாரப் போஎன்று வள்ளுவன் கத்தினான்.
இதெத் தவுத்து வேற ஒனக்கு என்னா தெரியும்?” என்று வனஜா கேட்டதுதான். ஓங்கி வனஜாவின் கன்னத்தில் அறைந்தான். கத்திக்கொண்டே வீட்டிற்குள் போனாள் வனஜா. வாய்தவறி சொல்லியிருப்பா. அதுக்காக அவள நீ கை நீட்டி அடிப்பியா?” என்று தவமணி கேட்டாள்.
நீ இப்பப் போறியா இல்லியா?” என்று காட்டுக்கத்தலாகக் கத்தினான் வள்ளுவன்.
தவமணியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தாலும், சமாளித்துக்கொண்டு, “நீ இப்ப கோபமா இருக்க. ஊட்டுக்குள்ளார போடா தம்பி. அப்பாகிட்டபணத்த நான் வாங்கித் தர்றன். இல்லன்னா எம்மான்னு சொல்லு. நான் தர்றன்என்று கேட்டாள்.
ஊராங்க பணம் எங்களுக்கு எதுக்கு?” என்று வீட்டிற்குள்ளிருந்த வனஜா கேட்டாள்.
அழுதுகொண்டே நான் ஊராங்களாடி வனஜா?” என்று தவமணி கேட்டாள்.  வனஜா பதில் பேசவில்லை. ஆனால் மயிரு பணம்என்று சொல்லியது மட்டும் கேட்டது.
திகைத்துப்போன தவமணி வள்ளுவனையும், ராமசாமியையும் பார்த்தாள். இரண்டு பேரும் வேறுவேறு பக்கம் பார்த்துகொண்டு நின்றிருந்தனர்.வாங்கப்பா, ஊட்டுக்குப் போவலாம்என்று தவமணி கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டதை அவர் கவனிக்கவில்லை. மரக்கட்டை மாதிரி நின்றுகொண்டிருந்தார். மீண்டும் கூப்பிட்டாள். அப்போதும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. கையைப் பிடித்துக் கூப்பிட்ட பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார்.
என்னம்மா?”
ஊட்டுக்குப் போவலாம்ப்பா.
இரு வர்றன்என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். கால் மணி நேரம் கழித்து மூன்று நான்கு கைப் பைகளில் ஏதோஏதோ எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
ஊட்டுக்கு வாப்பா.
ஒரு எடத்துக்குப் போயிட்டு வந்துடுறம்மா.
தண்ணி குடிச்சிட்டுப் போப்பா.
வந்துடுறன்என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ராமசாமி கிளம்பினார்.
வங்கியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தார். எல்லாக் கணக்குகளையும் முடிக்கச் சொல்லிவிட்டார். மேலாளர் சொன்னது, கிளார்க் சொன்னது என்று யார் சொன்னதையும் ராமசாமி கேட்கவில்லை. அவசரமாப் பணம் வேணும்என்று மட்டும்தான் சொன்னார். மூணே முக்கால் லட்சம் பணத்துடனும், லாக்கரில் வைத்திருந்த நகைகளுடனும் நேரே தவமணி வீட்டிற்கு வந்தார். பணப் பையைத் தவமணியிடம் கொடுத்து இதெ ஒந் தம்பிகிட்டெ கொடுத்திடுஎன்று சொல்லிப் பையைக் கொடுத்தார்.
என்னப்பா?”
பணம்.
சரி கொடுத்திடுறன். காலயில சாப்புடலியா?”
முருகேசன் எங்கம்மா?” பேச்சை மாற்றினார்.
காட்டுக்குப் போயிருக்குது.
முத்தமிழ்ச் செல்வி எங்க?”
பள்ளிக்கூடம் போயிருக்கிறா. இன்னிக்கி வெள்ளிக்கிழம, மறந்துப் போச்சா? தண்ணி குடிப்பாஎன்று சொல்லித் தவமணி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
வனஜா கொணந்தான் தெரியுமே. தம்பிக்கித்தான் என்னாச்சின்னு தெரியல. என்னெப் பேசிப்புட்டான். அது பரவாயில்ல. அக்காதானன்னு பேசிப்புட்டான். ஒங்களப் பேச அவனுக்கு வாய் எப்பிடி வந்துச்சி? அதான் தெரியல. அதெ நெனைக்காதீங்க. சாப்புடுங்க. வெறும் வயித்தோட இருந்தா கோவம் கொறயாது.
பசிக்கல. அப்புறமா சாப்புடுறன்.
எம் பேச்சக் கேக்கணும்என்று சொல்லிக்கொண்டே போய் சோறு, குழம்பு, புளிச்சக்கீரை என்று எடுத்து வந்து வைத்தாள்.
அவ ஒன்னெப் பேசுன பேச்ச மறந்திட்டு சோறு போடுற, பெத்த தாயிதான்என்று முணுமுணுத்த ராமசாமி சாப்பிட உட்கார்ந்தார். அரையும்குறையுமாகச் சாப்பிட்டு முடித்ததும் நடந்த எல்லாத்தயும் இந்த அப்பனுக்காக நீ பொறுத்துக்கணும்என்று ராமசாமி சொன்னார்.
தவமணி சிரிக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. எந் தம்பிதான என்னெத் திட்டுனான். ஊராங்களா திட்டுனாங்க? முப்பது வருசத்தில அக்காங்கிற வாத்தய இன்னிக்கித்தான சொல்ல மறந்துட்டான்.”   தவமணியின் கண்கள் கலங்கின.
மடியில் வைத்திருந்த கனமாக இருந்த மணிபர்சை எடுத்து தவமணியிடம் கொடுத்தார்.
என்னாப்பா?”
ஒங்கம்மாவோட தாலிக் கொடி. மூக்குத்தி, தோடு, கை வளய. அப்பறம் பாட்டியோட கை காப்பு.
தம்பிகிட்டெ கொடுத்திடணுமா?”
தவமணியை விநோதமாகப் பார்த்தார் ராமசாமி.
எல்லாத்தயும் அழிச்சி புது நக செஞ்சி எம் பேத்தி முத்தமிழ்ச் செல்விக்கிப் போடு.
இன்னமுட்டும் இதெல்லாம் எங்க இருந்துச்சி?”
பேங்குல வச்சிருந்தன்.
இருங்க. தம்பிகிட்டெ கொண்டுபோயி கொடுத்திட்டு வந்துடுறன்என்று சொல்லிவிட்டு நகை இருந்த மணி பர்சையும், பணப் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் தவமணி.
எங்க போற? இங்க வா. நகய உள்ளார வச்சிட்டு அப்பறமா போம்மா.
என்னப்பா புதுசா சொல்றீங்க?”
புதுசுமில்லெ. பழசுமில்லெ. நகய உள்ளார வையி. பணத்த மட்டும் எடுத்துக்கிட்டு போயி கொடுத்திடு.
ரெண்டயும் தம்பிகிட்டியே கொடுத்திடுறன்.மீண்டும் வெளியே போக முயன்றவளிடம் நீயும் எம் பேச்ச மீறுறியா?” பரிதாபமாகக் கேட்டார்.
தம்பிக்குத் தெரிஞ்சா வனஜாவுக்குத் தெரிஞ்சா என்னெப் பத்தி என்னா நெனப்பாங்க?”
நான் ஒனக்கா கொடுத்தன்? எம் பேத்திக்குத்தான கொடுத்தன்? அவ பெரிய மனுஷியானதும் செயினு செஞ்சிபோடு. கல்லு வச்ச அட்டிக செஞ்சி போடு.
இப்பத்தான் ஆறாவது படிக்கிறா. அவளுக்கு எதுக்கு நக? அதுவும் இன்னிக்கென்ன அவசரம்?”
அவசரம்தான். ஒங்கம்மா இத்தினி வாத்த எங்கிட்டெ பேசுனதில்லெ தெரியுமா?”  லேசாகச் சிரிக்க முயன்றார். ஆனால் சிரிப்பு வரவில்லை.
நான் எங்கப்பாகிட்டெதான பேசுறன்தவமணி பெயருக்குச் சிரித்தாள். ராமசாமிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு தப்பான பேச்சு வந்துடும்ப்பா. வனஜாகிட்டெ கொடுத்திடுறன். இந்தப் பொருளுக்கு ஒடயவ அவதான்.
இது ஒங்கப்பன் ராமசாமிமேல சத்தியம். நான் வேணுமின்னா நகய உள்ளாரக் கொண்டுபோயி வையி. வேணாமின்னா யாருகிட்ட வேணுமின்னாலும் கொடுகொஞ்சம் வேகமாகச் சொன்னார். தவமணியினுடைய முகம் மாறிபோயிற்று. அப்பாஎன்று கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டதைக் காதில் வாங்காத ராமசாமி எம் பேத்திக்கி முத்தமிழ்ச் செல்வின்னு நாந்தான பேரு வைச்சன்?” எனறு கேட்டார்.
நீங்க வைக்காம அப்பறம் யாருப்பா வைப்பாங்க?”
பேரு வச்சதுக்காகக் கொடுக்கிறன். புரியுதா?”
தவமணி பேசவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டாள். ரகசியம் மாதிரி பேரு கெட்டுடும்ப்பாஎன்று சொன்னாள். சிறிது நேரம் தவமணியையே கூர்ந்து பார்த்துவிட்டு லேசாகக் குரலை உயர்த்தி ஒங்கப்பன் பேரு கெட்டுப்போனா பரவாயில்லியா? பாவத்தோட என்னெ சாவச் சொல்லுறியா? ஜென்மக்கடன்ல ஆயிரத்தில லட்சத்தில ஒண்ணக்கூட நான் அடைக்கக் கூடாதா? என்னெ எதுக்கு பாவியாக்கப் பாக்குற? அதுக்குத்தான் ஒன்னெ வளத்தனா? அப்பன் பேச்ச மீறிப் பேச எப்பக் கத்துகிட்டெசாவுறமுட்டும் எம் மின்னால நின்னு ஒங்கம்மா ஒரு வாத்த பேசுனதில்ல தெரியுமா?” என்று கேட்கும்போதே ராமசாமியினுடைய கண்கள் கலங்கின. அதைப் பார்த்ததும் தவமணி பதறிப்போனாள். அவளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. முதன்முதலாக ராமசாமியினுடைய கண்கள் கலங்கி இப்போதுதான் பார்க்கிறாள். அதிசயம்தான் என்று நினைத்தாள்.
சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசாமியியைப் பார்க்கப் பிடிக்காமல் தண்ணி கொண்டாரட்டாப்பா?” என்று கேட்டாள்.
ஒங்கம்மா யாருன்னு ஒனக்குத் தெரியுமா? ஒனக்கு மட்டும்தான் தாயின்னு நெனைக்காத. அந்தப் பொம்பளைக்காக நான் செய்யுறன்.மீண்டும் ராமசாமியினுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தன.  லேசாகக் கோபம் வந்த மாதிரி குண்டான் குண்டானா ஆக்கிப்போட்ட பொம்பளைக்கி நான் ஒரு கைப்புடி மண்ணு அள்ளிப் போடக் கூடாதுங்கிற? பெத்த தாயின்னு உரிமை கொண்டாடுற? அந்த ஒரு பொம்பள உசுரோட இருந்திருந்தா என்னெப் பாத்து ஏன்?’ன்னு யாராச்சும் கேக்க முடியுமாதம்பிக்காரன்னு ஒண்ணும் கேக்காம வர்ற? எம் பொண்ணப் பாத்து என்னா கேள்வி கேட்டுப்புட்டா? என் கொல சாமி செத்துப்போச்சிஅவருடைய கண்களிலிருந்து ஊற்று மாதிரி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.  தவமணியினுடைய கண்களிலிருந்தும் அதே அளவுக்கு நீர் இறங்கிற்று. அதே நேரத்தில் அவளுக்கு எல்லாமே புதுசாக இருந்தது. ராமசாமி அதிர்ந்து பேசுவது, அதிகம் பேசுவது, கண்கலங்குவது எல்லாமே புதிது. விரோதிகளிடம், சண்டைக்காரர்களிடம்கூட அவர் சத்தம் போட்டுப் பேசியது கிடையாது.  தெருவில், ஊரில் யாராவது தானாக வந்து பேசினால்தான் பேசுவார்.  மொத்தம் எட்டு ஊரில் வேலை பார்த்திருக்கிறார். எந்த ஊரிலும் கெட்ட பெயர் இல்லை. தலைவலி, காய்ச்சல் என்று அடிக்கடி லீவ் போட மாட்டார். சர்வீஸில் ஒரு நாள்கூட மெடிக்கல் லீவ் போட்டதே கிடையாது. பள்ளிக்கூட நாட்களில் சொந்தக்காரர்களுடைய கல்யாணம், சாவு, நல்லது கெட்டது என்றால்கூடப் போக மாட்டார். மற்றவர்களைக் காரியத்திற்குப் போகச் சொல்லிவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குத்தான் போவார். மீறிக் கேட்டால், ‘சோறு போடுற எடத்துக்குப் போவாம இருந்தா, சோறு எப்பிடி வரும்? நான் வருவன்னு பத்து புள்ளெ குந்தியிருக்கும்ல?’ என்று கேட்பார். சனி, ஞாயிறு மட்டும்தான் காட்டுக்குப் போவார். ஓய்வு பெற்ற இந்த இரண்டு வருசமாகத்தான் தினமும் காட்டுக்குப் போகிறார்.
தவமணிக்குச் சொந்த சித்தப்பாதான் ராமசாமி. தவமணி பிறந்த எட்டாவது மாதத்தில் அவளுடைய அப்பா பெரியசாமி மழைக்காகப் புளியமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபோது இடி விழுந்து இறந்துவிட்டார்.  நினைவு தெரிந்த நாளிலிருந்து ராமசாமியைத்தான் அப்பாஎன்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள்கூட, ஒரு முறைகூட, வாய் தவறிக்கூட சித்தப்பாஎன்று கூப்பிட்டதில்லை. அப்படிக் கூப்பிட அவளுக்கு வாயும் வராது. ராமசாமி எப்போதும் தவமணியை அம்மாஎன்றுதான் கூப்பிடுவார். எங்கு போய் எங்கு வந்தாலும் வீட்டிற்குள் நுழையும்போது அம்மாஎன்று கூப்பிட்டுக்கொண்டேதான் வருவார். இத்தனை வருசத்தில் ஒருநாள்கூட, ஒருமுறைகூட, வாய்த்தவறிக்கூட தவமணிஎன்று கூப்பிட்டதில்லை. அப்படிக் கூப்பிட அவருக்கு வாயும் வந்ததுமில்லை. இது எங்க அண்ணன் மவஎன்று யாரிடத்திலும் இதுவரை அவர் சொன்னதில்லை. கல்யாணப் பத்திரிகையில் மட்டும்தான் பெரியசாமி மகள் என்று போட்டார்.
தவமணி வயதுக்கு வந்த பிறகு பத்தாவது படிக்கும்போதே வெளியூரிலிருந்து சொந்தக்காரர்கள் பெண் கேட்டு வந்தார்கள். வெளியூர்ல எம் பொண்ணக் கொடுத்திட்டா, தெனம் அதெ எப்பிடி நான் பாக்க முடியும்அது கையால நான் எப்பிடித் தண்ணி வாங்கி தெனம் குடிக்க முடியும்அதனால வெளியூர்க்காரனுவுளுக்கு எம் பொண்ணக் கொடுக்க மாட்டன்என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.  படித்துகொண்டிருந்த பிள்ளையைப் பெண் கேட்டு வந்து தொல்லை கொடுத்ததால் தன்னுடைய அக்கா மகன் முருகேசனுக்கே கட்டிவைத்தார். அதில் தவமணிக்கும், அவளுடைய அம்மா முருவம்மாளுக்கும் வருத்தம்தான். முருகேசன் உதடு பிளந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பான். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றாவது வீடு வேறு என்று ஆயிரம் வருத்தம் இருந்தாலும், ஊர்ப் பெண்கள் கிண்டல் கேலி செய்தாலும், எதையும் தாயும் மகளும் வெளியே சொல்லவில்லை. தவமணியைக் கேட்டதற்கு அப்பா சொன்னா சரிதான்என்று  சொல்லிவிட்டாள். முருவம்மாள் வாத்தியாரு போட்டா கணக்கு சரியாத்தான் இருக்கும். பெத்தவனுக்குத் தெரியாதா புள்ளைய எங்க கொடுக்கணுமின்னுஎன்று சொல்லிவிட்டாள். தவமணிக்குக் கல்யாணமாகிப் பதினைந்து வருசமாகிவிட்டது. அவளுடைய அம்மா முருவம்மாள் இறந்து ஆறு வருசமாகிவிட்டது. முருவம்மாளின் கரும காரியம் முடிந்த எட்டாம் நாள்தான் தன்னுடைய அண்ணன் பெரியசாமிக்குச் சேர வேண்டிய பாகத்தில் தனியாக முருகேசனைப் பயிர் வைத்துகொள்ளச் சொன்னார். வனஜா கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த பிறகுதான் தவமணியைத் தனியாகச் சோறு ஆக்கச் சொன்னார். 
ராமசாமிக்கு ஆசிரியர் வேலை கிடைத்த ஐந்தாவது வருசத்தில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் கட்டிக்கொண்டு வந்தாலும் தனம், முருவம்மாள் சொல்வதைத்தான் கேட்டாள். அக்காஎன்ற வார்த்தை மாறாது. முருவம்மாள் இறந்த இரண்டாவது வருசத்தில் தனம் இறந்தாள். வனஜா வீட்டிற்குள் வருவதற்கு முன் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. வள்ளுவன்கூட முருவம்மாளிடமும் சரி, தவமணியிடமும் சரி, ஒரு சொல் எதிர்த்துப் பேசியவனில்லை. முருவம்மாளை பெரியம்மாஎன்று ஒருநாளும் அவன் கூப்பிட்டதில்லை. அப்படிப்பட்டவன்தான் இன்று யாரும்
சொல்லாத வார்த்தையைச் சொல்லிவிட்டான். வனஜா அதிகம் பேசக் கூடியவள்தான். எது பேசினாலும் ஆள் இருக்கும்போது பேச மாட்டாள். அவளும் இன்று எல்லை மீறிதான் பேசினாள். எதனால்? பொதுவாக ராமசாமியிடம் எது கேட்டாலும் வள்ளுவன் தவமணி வழியாகத்தான் கேட் பான். அதுவும் கல்யாணமான பிறகு வள்ளுவனுக்கும் ராமசாமிக்குமிடையே பேச்சு வார்த்தை சுத்தமாக நின்றுவிட்டது. இரண்டு பேருக்கு மிடையில் தவமணிதான் அல்லாடுவாள். இன்று தண்ணீர் எடுக்க போகாமல் இருந்திருந்தால், வழியில் கோமளாவிடம் பேசிக்கொண்டு நின்றிருக்காவிட்டால், வள்ளுவன் நிச்சயம் அவளிடம்தான் பணம் கேட்கச் சொல்லி யிருப்பான். எது சொன்னாலும் சொல்லிவிட்டு ராமசாமி தவமணியிடம் பணத்தைக் கொடுத்திருப்பார். அந்த நேரத்தில் இல்லாதது தன்னுடைய தவறுதான் என்று நினைத்தாள். தலையைக் கவிழ்த்துக்கொண்டு குறுகிப் போய் உட்கார்ந்திருக்கும் ராமசாமியைப் பார்க்கப்பார்க்க அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
அப்பாஎன்று கூப்பிட்டாள்.  ராமசாமியிடம் எந்த அசைவுமில்லை.  ராமசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி வேணுமா?” என்று கேட்டாள்.  வேண்டாம் என்பது மாதிரி தலையை ஆட்டிவிட்டு அவள் வாயைத் திறப்பதற்காகவே காத்திருந்த மாதிரி சொன்னார் ஒங்கப்பன், அதாம், எங்கண்ணன் சாவுறப்ப நான் பதினொண்ணாவது படிச்சிக்கிட்டிருந்தன்.  திடீர்னு செத்ததால ஆடுமாடு மேய்க்க, காடு கரயப் பாக்க ஆளில்லன்னு என்னெப் பள்ளிக்கூடத்திலிருந்து ஒங்க பாட்டி நிறுத்திப்புடிச்சி. அம்மா சொன்னா சரின்னு நானும் பள்ளிக்கூடத்துக்குப் போவல. எங்கப்பா வாயத் தொறக்கல. ஒரு நாளு நானு காட்டுல ஏரு ஓட்டிக்கிட்டிருந்தன். அதெப் பாத்த ஒங்கம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியல. பக்கத்தில கள வெட்டிக்கிட்டிருந்த எங்கம்மாகிட்டெ போயி நான் இந்தக் காடு கரயப் பாக்க மாட்டனா, ஆயிரம் ஐநூறு காணியா சம்பாரிச்சி வச்சியிருக்கிற? அதெப் பாக்க ஆளில்லன்னு பள்ளிக்கூடத்தில குந்தியிருந்தவன இயித்தாந்து வெயில்ல வதங்க வுட்டுயிருக்க. நாளக்கிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு.  இல்லன்னா நான் மருந்தக் குடிச்சிட்டு செத்திடுவன்னு சொல்லிச் சண்ட புடிச்சுது. மறுநாளு காட்டுக்குப் போன என்னெ மறிச்சு இயித்துக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போச்சி.  மூணு மாசமாச்சி.  இனிமே சேக்க முடியாது.  இந்த வருசம் கவருமண்டு பரிட்ச வேறன்னு சொல்லி ஹெட்மாஸ்டரு கத்துறாரு. என்னெ இயித்துக்கிட்டு ஒவ்வொரு வாத்தியாருகிட்டயும் போச்சி. ஒவ்வொருத்தங்க காலுலயும் வியிந்து கும்புட்டுச்சி. கருத்தான பையன் சாரு. கெட்டியாப் படிச்சிக்குவான். அப்பிடி பாசாவலன்னா என் மசுரு அறுத்துகிறன்னு சொல்லி சத்தியம் செஞ்சிச்சி. வெளிய போ. வெளிய போன்னு கத்துனதப் பாக்கல. ஹெட்மாஸ்டரு ரூமுகிட்டயே பகல் முழுக்க நின்னுச்சி. இந்தப் பயலுக்குக் கண்ண கொடுங்க சாமி, பொழச்சிக்குவான்னு சொல்லி, பத்து இருபது முற கால்ல வியிந்து கும்புட்டப்பறம், அதுவும் சாயங்காலம் மணியடிச்சப்பதான் சேத்துக்கிறன்னு சொல்லி அந்த ஹெட்மாஸ்டரு சொன்னாருஎன்று சொல்லும்போதே அவருடைய குரல் உடைந்துபோயிற்று. கண்களில் கண்ணீர் திரை கட்டி நின்றது. வாயிலிருந்து வார்த்தை வெளியே வரவில்லை. அடுத்துப் பேசுவதற்குள் அவருக்குத் தத்தளிப்பாகிவிட்டது. அவரை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவமணியும் தத்தளித்துப்போனாள். சிறிது நேரம் பேசாமலிருந்த ராமசாமி சொன்னார் பதனொண்ணு பாசானன்.
மூணு நாலு ஊருக்கு நான் மட்டும்தான் பாசு. அடுத்து என்னா செய்யுறதுன்னு தெரியல. எங்க மனு போடுறதுன்னு தெரியல. பேசாம வுட்டுட்டன்.  ஒரு மாசம் ஓடிப்போச்சி. படிச்சது போதும். மேக்கொண்டு படிக்க வைக்க என்னால முடியாதுன்னு ஒங்க பாட்டி சொல்லிடிச்சி. அப்பவும் ஒங்க தாத்தா வாயத் தொறக்கல. அப்பத்தான் ஒங்கம்மா வாத்தியாருக்குப் படியன்னு சொல்லிச்சி. சரின்னு விண்ணப்பம் போட வடலூருக்குப் போனன். சாயங்காலம் வந்தா ஒங்க பாட்டி ஊட்ட யாரு பாக்குறது, காட்ட யாரு பாக்குறது? வெள்ளச் சட்ட போட்டா காட்டுல குனிஞ்சி நிமுந்து வேல செய்ய மாட்டான்னு சொல்லிக் கத்துது. ஒங்கம்மாவுக்கும் ஒங்க பாட்டிக்கும் சண்ட நடக்குது. நான் ஒண்ணும் சொல்லாம காட்டுக்குப் போயிட்டன். சண்டயில ஒங்கம்மாதான் ஜெயிச்சிச்சி. ட்ரெயினிங் ஸ்கூலுக்கு மனு போட்டன். எடம் கெடச்சிச்சி. படிச்சன். படிப்பு முடிஞ்சி, பதிஞ்சிவச்ச எட்டாம் மாசமே வேல கெடச்சிது.கரண்ட் நின்றது மாதிரி சட்டென்று பேச்சை நிறுத்தினார். வீட்டின் வாசல் பக்கம் பார்த்தார். தவமணியைப் பார்த்தார். துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
முதன்முதலா நிராமணியிலதான் எனக்கு வேல கெடச்சது. முத அன்னிக்கி வேலக்கிப் போயிட்டுத் திரும்பி சாயங்காலம் வந்துகிட்டிருக்கன்.  ஏயி எட்டு வீடு தள்ளி வரும்போதே வாசலக் கூட்டிக்கிட்டிருந்த ஒங்கம்மா என்னப் பாத்திட்டு தெருவுன்னுகூடப் பாக்காம ஓடியாருது. வேர்த்துப் போயி, கருத்துப்போயி, முழங்காலு முட்டும் புழுதி படிஞ்சிப்போயி வந்த என்னெப் பாத்திட்டு ஒங்கம்மா கண்ணுல தண்ணி வுடுது. அயிதுகிட்டே பொடி சுட்டுதா, தடத்தில முள்ளு கெடந்து குத்திச்சா, தடத்தில கல்லு இருந்து குத்திச்சா? சக்கிலிகிட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கிப்போடுன்னு சொல்ல எம் புத்தியில ஒரைக்கலியேன்னு சொல்லிக்கிட்டெ குனிஞ்சி முந்தாணியால என் முழங்காலுமுட்டும் படிஞ்சிருந்த புழுதியத் தொடைக்குது. என்னெ செய்யுற? கால வுடுன்னு சொல்றன். கேக்கல.  எங்காலத் தூக்கிப் பாத்திட்டு நாளக்கி நீ போற தடத்தில போயி கூட்டி வைக்கிறன். முள்ளு குத்தாம, கல்லு குத்தாம போயிட்டு வான்னு சொல்லிக் கண்ணு கலங்குது. நான் வௌயாட்டுக்கு நடக்கிற தடத்தப் போயி யாராவது கூட்டுவாங்களா? பேசாம வீட்டுக்கு வான்னு சொன்னன்.  அதுக்கு ஒங்கம்மா கேக்குது :
கூட்டுனா என்னா தப்பு?”
தெனம் போயி எப்பிடிக் கூட்டுவ?”
நிராமணி ஒரு தப்பிடி தூரம்தான? ஒரே ஓட்டமா ஓடிப் போயி கூட்டிப்புடுவன்.
ஏயி மையிலு தெரியுமா?’
ஏயி மையிலா இருந்தா என்ன? எச்சி துப்பி அது காயுறதுக்குள்ளார கூட்டிப்புட்டு வந்துடுவன். அதெவிட எனக்கு வேற வேல என்னா இருக்கு ஒலகத்திலெ?”
இத்தினி வருசமா காலுல செருப்பு போடாமத்தான இருந்தன்?”
செருப்புப் போடணுமின்னு தெரிஞ்சாத்தான? நான் கூட்டி வச்சிடுறன். நீ முள்ளுக் குத்தாம போயிட்டு வா.
அப்பறம் நான் ஒண்ணும் பேசல. சாமின்னு ஒண்ணு ஒலகத்தில இருந் தாக்கூட அது வாயிலிருந்து அப்பிடியொரு வாத்த வராது.
ராமசாமி உடல் குலுங்க அழுதார். அழுதுகொண்டே சொன்னார். செருப்பு தச்சிப் போடணுமின்னு தோணல. பணமில்லாம இல்லெ. ஆனா சைக்கிளு வாங்கணுமின்னு தோணல. அப்பலாம் மத்தியான சோறுன்னு ஒண்ணு இல்லெ. ரெண்டு வருசம் கழிச்சித்தான் ஒங்கம்மா ஒரு தூக்கு வாளியில சோறு கொடுத்துது.
எதுக்குப்பா இப்ப அழுவுறீங்க?”
எங் காலு புழுதிய ஒங்கம்மா தொடச்சிது. எஞ் செருப்பும் சரி, அந் தாளு பணமும் சரின்னு ஒன் தம்பிப் பொண்டாட்டி சொல்றா. நான் ஒனக்குத்தான் பொறந்தனான்னு தெரியலங்கிறான் ஒன் தம்பி. சாமின்னு ஒண்ணும் ஒலகத்தில இல்லெ. மனுசங்கதான் சாமியும், பூதமும், பேயும்.
என்னிக்கும் இல்லாம இன்னிக்கி எதுக்கு மாஞ்சிமாஞ்சி அழுவுறீங்க? நீங்க அழுவுறதப் பாத்திட்டு நான் உசுரோட இருக்கணுமா?” என்று கேட்ட தவமணி அழுதாள். அழுதுகொண்டே பாட்டி செத்த அன்னிக்கி நீங்க அழுவுல. எங்கம்மா செத்தன்னிக்கும் அழுவல. சின்னம்மா செத்தன்னிக்கும் அழுவல. புத்திகெட்டதுங்க பேசுச்சிங்கிறதுக்காக நீங்க அழுவலாமாப்பா? என்னிக்கும் இல்லாம இன்னிக்கி ஏன் ரெண்டு பேரும் அதிசயமா பேசுனாங்கன்னு தெரியலஎன்று சொல்லிவிட்டுப் பக்கத்திலிருந்த தண்ணீர்ச் சொம்பை எடுத்து நீட்டி தண்ணி குடிங்கப்பா. மனசு ஆறிடும்என்றாள்.
ஒங்கம்மாவ நெனச்சன். மத்தவங்க பேசுனத நான் நெனக்கல. மத்த வங்க யாரும் எம் மனசுல இல்லெ.
தவமணி கொடுத்த தண்ணீரை வாங்கி ராமசாமி குடிக்கவில்லை. வேண்டாம் என்றுகூடச் சொல்லவில்லை. அவள் தண்ணீர் கொடுத்ததுகூட அவருடைய கண்களில் படவில்லை.
சாப்புட்டு நான் தெருமுட்டும் போயிட்டு வந்தாக்கூட போதும். வவுறு உள்ளாரப்போயி கெடக்குதே. இரு ஒரு சொம்பு கூழு கரச்சித் தரன்னு
சொல்லி ஓட்டமா ஓடிப் போயி ஒரு சொம்பு கூழோட வந்து நிக்கும். அப்பலாம் நெல்லு சோறு ஏது? எம்மாம் சொன்னாலும் கேக்காது. குடிச்சாத்தான் ஆள வுடும். ஒரு நாளக்கி ஆறு ஏழு சொம்பு குடிக்காம வுடாது. ஆம்பள வெறும் வவுத்தோட கெடக்கக் கூடாது. ஒண்ணுக்குட்டா கரஞ்சிப் போயிடும்ன்னு சொல்லும். ஆனா ஒங்க பாட்டிக்கிட்ட கூழு வாணாமின்னு நான் சொன்னாபோதும் குடிச்சா குடி, குடிக்காட்டி போ. ஒன்னோட வவுறுதான் காயப்போவுதுன்னு சொல்லிப்புட்டு ஆடு மேய்க்க, மாடு மேய்க்கன்னு போயிடும்என்று சொன்ன ராமசாமி பேச்சை நிறுத்தினார்.
ராமசாமியையே பார்த்துக்கொண்டிருந்த தவமணிக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. ராமசாமி இவ்வளவு பேசுவாரா, அவரால் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. எப்போதோ நடந்து முடிந்ததையெல்லாம் எதற்காக இப்போது சொல்கிறார். அதுவும் முருவம்மாள் பற்றிக் கதைகதையாகச் சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டுப்போனாள். பொதுவாக, ஊருக்குள் முருவம்மாளைப் பற்றிச் சொல்லும்போது எல்லாருமே பேக்குஎன்றுதான் சொல்வார்கள். தவமணியும் அப்படித்தான் நினைத்துக்கொண் டிருந்தாள். எந்தத் தூண்டுதலும் இல்லாமல், தவமணியிடம் சொல்கிறோம் என்ற உணர்வுகூட ராமசாமியிடம் இருந்த மாதிரி தெரியவில்லை. மிகவும் அடங்கின குரலில் சொன்னார்.
ஒங்கம்மாவுக்கு ருசிபசியா சோறு ஆக்கத் தெரியாது. அதுக்கு நேரமும் இருக்காது. ஒரு சோறு, ஒரு குழம்பு, இதத்தான் தெனம் ஆக்கும். மிஞ்சினா புளிச்சக் கீர வைக்கும். குழம்புல உப்ப அள்ளிப் போட்டுடும். இல்லன்னா உப்பு போடவே மறந்திடும். சோறு திங்கிற ஏனத்த சரியா கழுவியிருக்காது. கல்லு இல்லாம, உமி இல்லாம சோறு ஆக்காது. என்னிக்கி ஆக்கினாலும் சோத்தில புளிப்பு ஒறப்புக்குப் பஞ்சமிருக்காது. சோறு ஆக்க தெரியாதது மட்டுமில்ல, சோத்தக் கொஞ்சமாப் போடவும் தெரியாது. எப்ப வச்சாலும் குத்துகுத்தாத்தான் அள்ளி வைக்கும், வட்டி நெறஞ்சிபோவும். கேட்டா சோத்தத்தானத் திங்க முடியும்? காசு பணத்தயா திங்க முடியும்? சோத்தத் தின்னுன்னு சொல்லும். நான் ஒண்ணும் சொல்ல மாட்டன். ஒங்க தாத்தாவும் ஒண்ணும் சொல்ல மாட்டாரு. ஆனா ஒங்க பாட்டிதான் சண்டபுடிச்சிடும். திருத்தமா சோறு குழம்பு ஆக்கத் தெரியுதா பாரு? சுத்தம் கெட்ட நாயி. செம்பறி ஆடு மேய்ச்சவளுக்கு எப்பிடி ருசிபசியா சோறு ஆக்கத் தெரியும்?’ன்னு கத்தும். அதுக்கு ஒங்கம்மா பெருமயா சிரிச்சிக்கிட்டே வாத்தியாரே ஒண்ணும் சொல்லலியாம். ஒனக்கென்ன? நான் வாத்தியாருக்குத்தான சோறு ஆக்குனன்? ஒனக்கா ஆக்குனன்? நாக்குக்கு ருசியா வேணுமின்னா நீயே ஆக்கித் தின்னு. வவுத்துப் பசிக்கி சோறு திங்கிறமா, நாக்கு ருசிக்கி திங்கிறமா? சோறு ஆக்குறது மட்டும்தான் எனக்கு வேலயா?’ன்னு திருப்பி சண்டபோடும். சாவுற முட்டும் அந்தச் சண்ட நிக்கல.
மொத மாச சம்பளத்தில ஒங்கம்மாவுக்கு வெலகொண்ட சீல ஒண்ணு எடுத்தாந்து கொடுத்தன். ஒரு தூக்குத் தங்கத்தத் தூக்கிக் கொடுத்திட்ட மாரி அந்த சீலயத் தூக்கிக்கிட்டு ஊடு ஊடாப் போயி, தெருத்தெருவாப் போயி சீலயக் காட்டிஎங்க வாத்தியாரு எடுத்தாந்ததுன்னு காட்டுச்சி. ஊருல ஒரு ஆளயும் வுடல. எல்லாருக்கிட்டயும் காட்டுச்சி. ஒங்கம்மா சிரிச்சி அன்னிக்கித்தான் பாத்தன். காட்டுக்குப் போவாம வீட்டுல அன்னிக்கித்தான் ஒங் கம்மா எனக்குத் தெரிஞ்சி குந்தியிருந்துச்சி.சட்டென்று துண்டை எடுத்து முகத்தை மூடிக்கொண்டார். லேசாக அவருடைய உடம்பு அதிர்ந்தது.
சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டுத் தானாகவே சொன்னார். அந்தச் சீலயக் கடசி முட்டும் ஒங்கம்மா கட்டவே இல்லெ. தீவாளி, பொங்க அன்னிக்கி எடுத்துப் பாத்திட்டு வச்சிடும். உசுரோட இருந்தப்ப அது வேணும், இது வேணுமின்னு கேட்டதில்ல. சாவுறப்பக்கூட எம் மவ தவமணியப் பாத்துக்க. கை வுட்டுடாதன்னு ஒரு வாத்த சொல்லல. எம் மேல அம்மாம் நம்பிக்க. கல்லோ மண்ணோ வட்டி நிறய அள்ளிவச்சி தின்னுன்னு சொல்ல எனக்கு இன்னிக்கி ஆளில்ல. ஒங்க தாத்தா செத்தது, ஒங்க பாட்டி செத்தது, ஒங்கப்பன், ஒங்க சின்னம்மா செத்தது எதுவும் எந் நெஞ்சில இல்ல. ஒங்கம்மா செத்தது மட்டும்தான் இந்த நெஞ்சுகூட்டுல இருக்குஎன்று சொல்லும்போதே ராமசாமியினுடைய கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது.
ஒவ்வொரு மாசி மகத்திலயும் ஒங்கம்மாவுக்கு மட்டும்தான் நான் அரிசி கொடுக்கிறன். ஒவ்வொரு மாசமும் அம்மாசி விரதம் ஒங்கம்மாவுக்காக மட்டும்தான் இருக்கறன். நான் பொண்டாட்டி புள்ளைன்னு ஆன பின்னாலயும் என் வவுத்தத் தடவிப் பாத்து சோறு போட்ட பொம்பளம்மா.
ராமசாமிக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முதன்முதலாக வாய்விட்டு அழுதார். உட்கார முடியாமல் தரையில் படுத்துக்கொண்டு கைக்குழந்தை மாதிரி விம்மி அழ ஆரம்பித்தார். அதிகம் பேசாதவர், அதிகமாகச் சிரிக்காதவர், அழாதவர் என்று பெயர் எடுத்திருந்த ராமசாமி இப்போது கதறி அழுதுகொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மாவுக்காக இவ்வளவு அழுகிறாரே என்று நினைத்ததும் அவளுடைய கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. ராமசாமியை இப்படி அழ வைத்துவிட்டார்களே என்று வள்ளுவன்மீதும், வனஜாமீதும் கோபம் உண்டாயிற்று. இன்று மட்டுமா அழுகிறார்? வனஜாவுக்கும் வள்ளுவனுக்கும் என்று கல்யாணம் நடந்ததோ அன்றிலிருந்துதான் அழுகிறார்.
வள்ளுவன் கடலூரில் காலேஜில் படிப்பதற்கு, போவதற்கு முன்புவரை ராமசாமி மாதிரியே அடுத்தவரிடம் பேசாத, அடுத்த வீட்டுக்குப் போகாத, டீக்கடை பக்கம் போகாத, சொன்ன வேலையை தட்டாமல் செய்கிற பையனாகத்தான் இருந்தான். ராமசாமி வாத்தியாரு பையனில்லியா. எப்பிடி மாறி இருப்பான்?’ என்றுதான் ஊரில் சொல்வார்கள். அப்படிப்பட்ட பையன்தான் பிஎஸ்.ஸி மூன்றாவது வருசம் படிக்கும்போது திடீரென்று ஒரு நாள் வந்து வனஜா பற்றிய விசயத்தை தவமணியிடம் சொன்னான்.
அதிர்ச்சியடைந்துபோன தவமணி கடைக்கிப் போயி உப்பு வாங்கியாடான்னா வெக்கப்பட்டுக்கிட்டு கடைக்கிக்கூட போவாத நீயா காதல் பண்ற?” என்று கேட்டுச் சிரித்தாள்.
அப்பாகிட்ட நீதான் சொல்லணும் அந்தப் புள்ளெ ஓடிப் போவலா மின்னு சொல்லுதுஎன்று வள்ளுவன் சொன்னதைக் கேட்டதும் தவமணிக்கு வாய் அடைத்துப்போயிற்று.
வெளிய சொல்லாதடா. மானம் போயிடும்.
அப்பாகிட்ட நீ பேசு.
ஓடிப்போவலாமின்னு சொல்றவ யாருடா?”
எங்கூடப் படிக்குது. அவுங்கப்பா டீக் கட வச்சிருக்காரு.
டீக் கடதான் பெரிய சொத்தா? நிலம்கிலம்ன்னு ஒண்ணும் இல்லியா? வயக்காடு, மோட்டாரு கொட்டான்னு ஒண்ணும் இல்லியா?”
“------”
பத்து டீ கிளாசி எம்மாம் வெலடா இருக்கும்? நல்ல பொண்ணத்தான் புடிச்சிருக்க. இன்னும் மூணு மாசம்தான படிப்பு இருக்கு. அதெ முடி. படிப்பு முடிஞ்சதும் அப்பாகிட்ட சொல்றன். இப்ப சொன்னா ஒன்னாலதான் அந்தப் பய கெட்டுப்போயிட்டான்னு கத்துவாருஎன்று சொன்னதை அவன் கேட்கவில்லை. வேறுவழியின்றி வள்ளுவனுடைய அம்மாவிடம் மட்டும் ரகசியமாக விசயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட தனம் ஊட்டுல நெருப்ப வச்சிட்டானேஎன்று சொல்லி அழுதாள். அவள் அழுததைப் பார்த்த தவமணி எதுக்கு இப்ப அழுது ஊரக் கூட்டுற. நான் போயி அந்தப் புள்ளைக்கிட்ட படிப்ப முடி. அப்பறம் பேசிக்கலாமின்னு சொல்லிட்டு வர்றன்என்று சொல்லி தனத்தைச் சமாதானப்படுத்தி
விட்டு ராமசாமிக்குத் தெரியாமல் கடலூருக்குப் போனாள். வனஜாவிடம் பேசினாள். சரி என்று தலையை ஆட்டிய வனஜா சாமி கோவிலில் சத்தியம் செய்த மாதிரி, மூன்றாவது ஆண்டு கடைசி பரீட்சை எழுதின கையோடு வீட்டிற்கு வந்துவிட்டாள். அன்றுதான் ராமசாமிக்கு விசயம் தெரிந்தது. கோபப்படவில்லை. திட்டவில்லை அமைதியாக சொன்னார்.
ரிசல்ட்டு வரட்டும். பி.எட் படிங்க. ஒரு வருசம்தான். படிப்பு செலவ நானே செய்யுறன். பி.எட் முடிஞ்சதும் கல்யாணத்த முடிக்கிறன். வேல எப்ப வந்தாலும் வரட்டும்.
ராமசாமியினுடைய வார்த்தையை வனஜா காது கொடுத்துக் கேட்க வில்லை. ஒரே பிடிவாதமாக நின்றாள். சாகப்போவதாக மிரட்டினாள். வள்ளுவனிடம் கேட்டால் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. வேறு வழியின்றி மான வெட்கத்திற்கு அஞ்சி கடலூருக்குப் போனார். வனஜாவினுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கல்யாணத்திற்கு நாள் குறித்தார். கல்யாணத்திற்கு என்று வனஜாவினுடைய அப்பா அம்மா ஒரு காசு செலவு செய்யவில்லை. அவர்களுடைய குடும்ப மொத்த சொத்து ஒரு பாய்லர், பத்து கண்ணாடி டீ கிளாஸ் மட்டுந்தான்.
கல்யாணமாகி ஐந்து வருசம்தான் ஆகிறது என்றாலும் வனஜாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டன. முதல் குழந்தை பிறந்தபோது குலசாமி பெயரை வைக்கச் சொன்னார் ராமசாமி. ரேஷ்மா என்று பெயர் வைத்தாள் வனஜா. இரண்டாவது குழந்தை பிறந்தபோது தன்னுடைய அம்மா பெயரை வைக்க சொன்னார். க்ருஷி என்று வனஜா பெயர் வைத்தாள். மூன்றாவது குழந்தை பிறந்தபோது தவமணியினுடைய அம்மா பெயரை வைக்கச் சொன்னார். மூன்றாவது குழந்தையின் பெயர் மோனிகா. மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒவ்வொரு மருத்துவமனையாகப் போகிறார்கள். அதற்கும் ராமசாமிதான் முகம் சுளிக்காமல் பணம் கொடுக்கிறார். தவமணிதான் பணத்தை வாங்கிக் கொடுக்கிறாள்.
காடு எங்கு இருக்கிறது என்பது வனஜாவுக்குத் தெரியாது. காட்டில் என்ன வேலை நடக்கிறது என்பது தெரியாது. நாள் முழுவதும் டி.வி. பார்ப்பாள். புதுப் படம் வந்தால் உடனே சி.டி. வாங்கி வந்து படத்தைப் பார்த்தால்தான் அவளுக்குத் தூக்கம் வரும். கரண்ட் இல்லையென்றால் அவளுக்குத் தலையே வெடித்துவிடும். குப்பக்காட்டுக்கு வந்து மாட்டிக்கிட்டனேஎன்று கத்த ஆரம்பிப்பாள். வாரப் பத்திரிகை ஒன்றை விட மாட்டாள். எல்லாவற்றையும் அவளுக்குப் படிக்க வேண்டும். இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும். டவுனு புள்ள அப்பிடித்தான் இருக்கும். பின்
னால மாறிடும்என்று நினைத்தார்கள். வனஜா ஒரு நூல்கூட மாற வில்லை. ஏன் மாறவேண்டும் என்பது அவளுடைய கேள்வி. தனம் செத்த மறு மாதமே வீட்டிலிருந்த பசுமாட்டை யார் குப்பையை அள்ளுறது. யார் தீனிபோடுறது?” என்று விற்க வைத்தாள். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை டீ குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. கடையில்தான் இப் போது பால் வாங்குகிறாள். ராமசாமி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து வயலை ஒட்டி நான்கு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும் நினைத்தார். முருகேசன் விவசாயம் செய்துகொண்டிருந்த நிலத்தில் கிணறு வெட்ட வேண்டும் என்று விரும்பினார். மாடுகள் கட்டுவதற்காகப் போட்டிருந்த கூரைக் கொட்டகையை மாற்றிக் கல்சுவர், ஓடு போட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வனஜா நினைத்ததுதான் நடந்தது. ஹீரோ ஹோண்டா வண்டி வந்தது. ஹோம் தியேட்டர் வந்தது. ஏ.சி. வந்தது. விலை உயர்ந்த கேமரா உள்ள இரண்டு செல்போன் வந்தது. ஏற்கெனவே மூன்று பீரோ நிறைய துணி இருந்தது. அது பத்தாது என்று புதிதாக, கண்ணாடி வைத்த, லாக்கர் உள்ள இரண்டு பீரோ வந்தது.
ராமசாமி அதிகமாக மட்டுமல்ல, தேவையில்லாமல் ஒரு காசுகூடச் செலவு செய்ய மாட்டார். வள்ளுவனும் அப்பிடித்தான் இருந்தான். வனஜா வீட்டிற்குள் வந்தாள்: பீரோ, கட்டில், மெத்தை, மாவு அரைக்க, துணிகள் துவைக்க இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வந்தது.
வீட்டிலிருந்த வடக்கயிறு, பூட்டாங்கயிறு, ஏர், கலப்பை, முறம், புட்டி, மரக்கால், பல்லம், மாகாணி என்று ஒவ்வொன்றாக மாட்டுக் கொட்டகைக்கு மாறியது. முன்பு ராமசாமி வீட்டில் சோறும் ஒரு குழம்பும் மட்டும்தான் இருக்கும். வனஜா வந்தபிறகு ரசம் வந்தது. மோர், தயிர் வந்தது. தினமும் இட்லியும் தோசையும் வந்தது. மத்தியானம் சுடுசோறும் வந்தது. பொரியலும் வந்தது. காலையிலும் சாயங்காலமும் டீ வந்தது. முட்டைப் பொரியல், ஆம்லெட் வந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கறிக் குழம்பும் வந்தது.
ராமசாமி சொன்னால்தான் வள்ளுவன் காட்டுக்குப் போவான். வேலை
செய்வான். வீட்டுச் செலவு, காட்டுச் செலவு எல்லாம் ராமசாமிதான் செய்ய வேண்டும். மூன்று பிள்ளைகளுக்கும் வள்ளுவனுக்கும், வனஜாவுக்கும் தேவையான எல்லாவற்றுக்கும் ராமசாமிதான் செலவு செய்ய வேண்டும். இது வேணும், அது வேணும்என்று கேட்க மட்டும்தான் பிள்ளைகளை ராமசாமியிடம் அனுப்புவாள். மற்ற நேரங்களில் ராமசாமியிடம் சேர விட மாட்டாள். சேர்ந்தால் அந்தாளுக்கு இருக்கிற பிச்சக்காரப் புத்தி எம் பொண்ணுவுளுக்கும் வந்துடும்என்று சொல்லி வனஜா தடுத்துவிடுவாள். நடக்கத் தெம்பு இல்லாத புள்ளைய பள்ளிக்கூடத்தில சேக்க வாண்டாம். மூணு வயசிலியே பள்ளிக்கூடத்துக்குப் புள்ளை போவ ணுமா?” என்று கேட்டார். அவருடைய பேச்சை மீறி கள்ளக்குறிச்சியில் கொண்டுபோய் பிரி.கே.ஜியில் சேர்த்தாள். இருபது கிலோமீட்டர் தூரம் பிரி.கே.ஜி படிப்பதற்காகப் பிள்ளை தினமும் போய் வருகிறது.
கல்யாணமான புதிதில் விட்டுப்போன பாடத்த எழுதி முடிங்கஎன்று ராமசாமி சொன்னார். அதைக் கேட்காமல் வள்ளுவனை சிங்கப்பூருக்குப் போஎன்று தூண்டிவிட்டாள் வனஜா. யார் சொல்லியும் கேட்காமல் சிங்கப்பூர் போயே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். ஒண்ணே கால் லட்சம் செலவு செய்து அனுப்பிவைத்தார். போன இருபதாம் நாள் என்னால வேல செய்ய முடியல. முப்பது மாடி, நாப்பது மாடி, ஒசரத்தில நின்னுகிட்டு வேல செய்ய சொல்லுறாங்க. நான் இங்கியே இருந்தா ஒரு மாசத்தில செத்திடுவன்என்று சொன்னான். ஆள் உயிரோட இருந்தால் போதும் என்று பணம் கட்டி அவனை வரவழைத்தார் ராமசாமி.
காரணமின்றி முருங்கய ஒடிச்சி வளக்கணும். ஆம்பளப் புள்ளைய அடிச்சி வளக்கணும்என்று ஊரார்கள் சொல்வது தவமணியின் நினைவுக்கு வந்தது.
அப்பாஎன்று கூப்பிட்டாள்.
பையக் கொண்டுபோயி கொடுத்திடும்மா.
நீங்க எழுந்திருங்க. நான் போறன்.
ராமசாமி எழுந்து உட்கார்ந்தார். துண்டால் முகத்தை அழுத்தித் துடைத் துக்கொண்டார். பணப் பையை எடுத்துகொண்ட தவமணி நீங்களும் வாங்கஎன்று கூப்பிட்டாள்.
நான் எதுக்கு அங்க?” என்று ராமசாமி எவ்வளவோ மறுத்துப்பார்த்தார். தவமணி கேட்கவில்லை. வேறு வழியின்றி எழுந்த ராமசாமி தன்னுடைய வீட்டு வாசல்வரை வந்தார். என்ன நினைத்தாரோ உள்ளே போகாமல் வாசலிலேயே நின்றுகொண்டார்.
வீட்டிற்குள் சென்ற தவமணி பணப் பையை வனஜாவிடம் கொடுத்தாள். பையை வாங்கிப் பார்த்த வனஜாவின் முகம் மாறிவிட்டது.
இதெ எதுக்கு எங்கிட்ட கொடுக்குறீங்க? ஊதாரி ஒதறிட்டான்னு சொல்லவா? அந்தாள நம்பியா நான் புள்ளைய பெத்தன்? அந்தாளு பணம் எங்களுக்கு வாணாம். எம் புள்ளை பொறந்த நாளக்கி புதுத்துணி எடுத்துத் தர மாட்டன்னுதான் காலயில அம்மாம் தகராறு. பேச்சு. நேத்து அந்தாளுப் பொண்டாட்டிக்கி மாசி மகத்தில அரிசி கொடுக்கப் போவலன்னுதான் அம்மாம் சண்ட. புதுசா ஒரு படம் வந்திருக்கு. அந்த சி.டிய வாங்கியாந்து கொடுத்திட்டுப் போன்னன். அதான் லேட்டாயிப்போச்சி. அதுக்காக எம் புள்ளைக்கித் துணி எடுக்க மாட்டன்னு சொல்றதா? ஒங்கப்பனுக்குச் செத் துப்போனவங்கதான் முக்கியம். உசுரோட இருக்கிறவங்க முக்கியமில்ல. வயித்துக்குத் திங்காம சேத்துவச்சி என்னாப் பண்ணப்போறம்? காலயில இல்லாத பணம் இப்ப எப்பிடி வந்துச்சி. தூக்கிட்டுப் போயி அந்தாளு மூஞ்சியிலே கெடாசு. அந்தாளுப் பணமும் சரி, ந்தா வாசல்ல கெடக்குல்ல செருப்பு, அந்தச் செருப்பும் சரிஎன்று சொல்லிக் கத்த ஆரம்பித்தாள். என்ன பேசுற வனஜா? வாய அடக்கிப் பேசுஎன்று சொன்ன தவமணியின் வார்த்தை வனஜாவின் காதில் விழவில்லை.
தம்பி எங்க?” என்று கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. வனஜா தூக் கிப்போட்ட பணப் பையை எடுத்து அவளுடைய மடியில் போட்டுவிட்டு தம்பி வந்தா கொடுத்திடுஎன்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.
வாசலில் நின்றுகொண்டிருந்த ராமசாமியின் முகத்தைத் தவமணியால் பார்க்க முடியவில்லை. வாங்கப்பா போவலாம்என்று மட்டும் சொன்னாள். வனஜா சொன்ன வார்த்தைகள் அத்தனையும் அவருடைய காதிலும் விழுந்திருக்கும் என்று நினைக்கும்போதே அவளுக்குக் கண்கள் கலங்கின. வர மாட்டேன் என்று சொன்னவரை அழைத்துவந்தது தன்னுடைய தவறுதான் என்று நினைத்தாள். சட்டென்று கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் ராமசாமி ஒரு வார்த்தை பேசவில்லை. கோபத்தில், அவமானத்தில் வெடித்து கிளம்புவதற்குப் பதிலாக அவருடைய மனம் குளிர்ந்துபோயிற்று. ஒன்றும் சொல்லாமல் சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்பா, அப்பாஎன்று கூப்பிட்ட தவமணியினுடைய வார்த்தைகள் அவருடைய காதில் விழவில்லை.
ராதா செட்டியாருடைய துணிக்கடையில் வந்து நின்றது ராமசாமி யினுடைய சைக்கிள். வேட்டி, துண்டு, சீலை என்று வாங்கிக்கொண்டு சைக் கிளை எடுத்தார். நேரே கதிர்வேல் வீட்டிற்கு வந்தார். கதிர்வேல் இல்லை. அவனுடைய பொண்டாட்டி அஞ்சலைதான் இருந்தாள். அவளிடம் துணிப் பையைக் கொடுத்தார். மடியில் வைத்திருந்த அரைப் பவுன் தாலியையும் எடுத்துக் கொடுத்தார்.
கல்யாணத்துக்கு இன்னம் ஒரு மாசம் இருக்கயில இதுக்கெல்லாம் இப்ப என்னங்க அவசரம்? அதுவும் வெயில்ல வந்திருக்கீங்க? எடுத்துக்கிட்டுப் போயி ஊட்டுல வைங்க. நாங்க குடும்பத்தோட வந்து வாங்கிக்கிறம்என்று சொல்லித் துணிப் பையையும், தாலி இருந்த காகிதப் பொட்டலத்தையும் திருப்பிக்கொடுக்க முயன்றாள் அஞ்சலை.
இன்னிக்கி நல்ல நாளு. அதான் நானே கொண்டாந்தன். முதமுத கொடுக்கிறன். மாங்கல்யத்தத்  திருப்பித் தரியே இது நல்லதா? போ. போயி ஊட்டுல வையி.
ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தாள் அஞ்சலை. அப்போது குச்சியை ஊன்றிக்கொண்டு கதிர்வேலுவினுடைய அம்மா பூங்காவனம் வந்தாள். ராமசாமியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.
என்னா சாமி, இம்மாம் தொலவு வந்திருக்கீங்க?”
ஒன்னெப் பாக்கத்தான் வந்தன்.
ஆள வுட்டா நானே வந்திருக்க மாட்டனா சாமி?”
வயசான காலத்தில நீ எதுக்கு அலயுற? அலஞ்சதெல்லாம் போதாதா? பேசாம ஊட்டுலியே இரு. அங்க இங்க அலயாதஎன்று சொன்ன ராமசாமிக்கு என்ன தோன்றியதோ விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றிப் பூங்காவனத்திடம் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிப் பார்த்த பூங்காவனம் வெலகொண்ட சாமான் வாண்டாம் சாமிஎன்று சொல்லித் திருப்பிக் கொடுத்தாள்.
வாண்டாம் வச்சிக்க. என் நெனவா ஒன் வெரல்ல மாட்டிக்க.
சாவப்போற கெழவிக்கி எதுக்குச் சாமி நக? சாமி வெரல்ல கெடந் தாத்தான் அழவுஎன்று சொல்லி மோதிரத்தைத் தரையில் வைத்தாள் பூங்காவனம்.
எம் பேச்சக் கேக்கணும். மோதரத்த எடுத்து அழிச்சி ஒம் பேரப் புள்ளிவுளக்குத் தோடு மூக்குத்தின்னு செஞ்சி போடு.
பண்டத்த எடுத்துக்கங்க சாமி. நான் சாவுற அன்னிக்கி ஒரு முழக் கோடித் துணி எடுத்தாந்து ஊரு மெச்ச எம் பொணத்துமேல போடுங்கஎன்று
சொல்லிப் பூங்காவனம் கும்பிட்டாள். குனிந்து மோதிரத்தை எடுத்த ராமசாமி அஞ்சலையிடம் கொடுத்தார். மடியை விரித்துப் பிடித்து மோதிரத்தை வாங்கிக்கொண்டாள்.
பத்தரமா இருஎன்று சொல்லிவிட்டு ராமசாமி சைக்கிளை எடுத்தார். பூங்காவனம் ராமசாமி சென்ற திசையில் கையெடுத்துக் கும்பிட்டாள்.  அதை அவர் பார்க்கவில்லை.
பூங்காவனத்தையும், வண்ணான் ஊட்டயும் கை வுட்டுடாத. இந்த ஊட்டுக்காக ஒம் பாட்டன் காலத்திலிருந்து ஒழச்சவங்க. ஊட்டுக்கு வந்தா வெறும் வவுத்தோட அனுப்பிடாத. ஒரு கை சோறு போட மறந்திடாத. யாரு வந்து இந்த ஊட்டு வாசப்படியில நின்னாலும் மனசு குளுந்துபோறாப்ல நாலு நல்ல வாத்த பேசு. வவுறு குளுந்துபோறாப்ல ஒரு கை அன்னம் போடு. நான் செத்தா மாசாமாசம் அம்மாவாச விரதம் இருக்க வாணாம். மகத்துக்கு மகம் அரிசி கொடுக்க வாணாம். தெவசம் கொடுக்க வாணாம். நம்ப ஊட்டு வாசல்ல அன்னம் கேட்டு ஏனத்த நீட்டுனவங்களுக்கு இல்லன்னு மட்டும் சொல்லிடாத. இப்பிடியாப்பட்ட புள்ளயவா நீ பெத்தன்னு எமன் என்னெ செக்குல போட்டு ஆட்டிச் சித்ரவத செய்வான். சாட்டயால அடிப்பான். பல்லிக் குழியில, அரணக் குழியில தள்ளிடுவான்என்று சாவதற்கு முன்பு தன்னுடைய அம்மா உண்ணாமலை சொன்னது நினைவுக்கு வந்ததும் ஹேண்டில்பாரை அவருடைய கைகள் அழுத்திப் பிடித்தன. சைக்கிள் வேகமாக ஓடியது.
முதல் மாதச் சம்பளத்தில ஒரு சீலை எடுத்துவந்து கொடுத்தார். சீலை யைப் பார்த்ததுமே உண்ணாமலையினுடைய முகம் மாறிவிட்டது. இந்தச்
சீலய எதுக்குடா எடுத்தாந்த? இடுப்புல நிக்காத சீல? பொட்டச்சி ஒடம்ப மறைக்கிறதுக்குத்தான் சீல? எடுத்துக்காட்டுறதுக்கா? இப்பிடியான சீல எடுக்கவா ஒன்னெ வாத்தியாருக்குப் படிக்க வைச்சன்? எந்த நாயி ஒனக்கு வாத்தி வேல போட்டுக் கொடுத்தான்? இந்தச் சீலயக் கட்டிக்கிட்டு நான் தெருவுல நடக்கவா? ‘வாத்தியாரு அம்மா கட்டியிருக்கிற சீலயப் பாருடான்னு ஊருக்கார பயலுவோ சிரிக்கணுமா? ஒரு வாத்தியாரோட அம்மா என்னா சீல கட்டணுமின்னு ஒனக்குத் தெரிய வாணாம்? ஒனக்கு எந்த வாத்திப் பயடா படிச்சிக் கொடுத்தான்? எந்தக் கடயில எடுத்தியோ அங்கியே கொண்டுபோயி திருப்பிக் கொடுத்திடுஎன்று சொல்லிக் கொடுத்து விட்டாள். ஆனால் கொடுத்த வேட்டித் துண்டை ஒன்றும் சொல்லாமல் அவருடைய அப்பா வாங்கிக்கொண்டார். ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு கோவணத் துணி இதுதான் அவருடைய சொத்து. வேட்டியை இடுப்பில் கட்ட மாட்டார். அழுக்காகிவிடும் என்று தலைப்பாகையாகக் கட்டி யிருப்பார். எப்போதும் கோவணத்தோடுதான் இருப்பார். எங்காவது ஊருக்குப் போகும்போது மட்டும்தான் துண்டைத் தேடுவார்.
சைக்கிளைக் கொண்டுவந்து வண்ணான் வீட்டின் முன் நிறுத்தினார். வீட்டில் யாருமில்லை. பக்கத்து வீட்டிலிருந்த கிழவனைக் கூப்பிட்டு சட்டைப் பையிலிருந்த மூவாயிரத்தைக் கொடுத்து குஞ்ஞம்மாகிட்ட கொடுத்திடுஎன்று சொல்லிக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
நீதான் என்னெ பெத்தியான்னு தெரியலஎன்று வள்ளுவன் சொன் னது நினைவுக்கு வந்த மறு நொடியே தனத்தைப் பற்றி மனம் நினைக்க ஆரம்பித்தது.
நீங்க பெத்த புள்ளைதான? அவன் மேல குத்தமில்ல. நாம்பப் பெத்த புள்ளைமேல நாம்பளே கொற சொன்னா ஊரு நம்புமா? ஒங்கள அப்பா ஆக்குனது அவந்தான். ஒங்கள தாத்தா ஆக்குனதும் அவந்தான். அதுக்காக எல்லாத்தயும் பொறுத்துக்கிட்டுத்தான் ஆவணும். தூண்டிவுடுறா. அவன் ஆடுறான். நெருப்ப வைக்காட்டி அடுப்பு ஏன் எரியப்போவுது?” என்று எப்போதும் வள்ளுவனுக்காகப் பரிந்து பேசுவாளே என்று நினைத்ததுமே அவ சீக்கிரம் செத்ததும் நல்லதுதான். உசுரோட இருந்தாத்தான் எல்லாத் துன்பமும்என்று சொல்லி முனகிய ராமசாமி முன்னைவிட வேகமாக சைக்கிளை மிதித்தார்.
சைக்கிளைக் கொண்டுவந்து மோட்டார் கொட்டகைக்கு முன் நிறுத்தினார். ஒரு முறை வயலைச் சுற்றிவந்து பார்த்தார். நெல் வயல் காய்ந்து போயிருந்தது தெரிந்தது. மோட்டார் கொட்டகையைத் திறந்து மோட்டாரைப் போட்டார். வெளியே வந்து வயலுக்குள் தண்ணீர் பாய்வதைப் பார்த்தார். வரப்பில் உட்கார்ந்து ஒரு கை தண்ணீர் அள்ளி குடித்தார்.  வரப்பிலேயே சிறிது நேரம் நடந்தார். ஒரு இடத்தில் இரண்டு மூன்று குத்துப் பயிர் சாய்ந்திருந்தது, அதை நேராக்கிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.  முதல் வயல் முடிந்து இரண்டாவது வயல் தண்ணீர் பாய்ந்து முடியும்வரை வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தார்.  தண்ணீர் பாய்ந்து முடிந்ததும் வந்து மோட்டாரை நிறுத்திவிட்டு வெளியே வந்து மேற்கில் பார்த்தார். சூரியன் சற்றைக்கெல்லாம் மறைந்துவிடும் போலிருந்தது. என்ன தோன்றியதோ மோட்டார் கொட்டகைக்குப் பின்புறமிருந்த தென்னை மரத்திடம் வந்து சிறிது நேரம் சாய்ந்து நின்றுகொண்டு வயலைப் பார்த்தார்.  பக்கத்திலிருந்த வாழை மரத்தைத் தடவிகொடுத்தார். எதிரிலிருந்த எலுமிச்சைச் செடியில் ஒரு இலையைப் பறித்து முகர்ந்துபார்த்தார்.  பிறகு வாயில் போட்டு மென்று தின்றார். அப்போதுதான் மோட்டார் கொட்டகைக்கு வடக்கில் இருந்த மாமரத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மாட்டினுடைய கயிறு கண்ணில் பட்டது. சுற்றுமுற்றும் பார்த்தார். ஆள் அரவமில்லை. மாமரத்திலிருந்த கயிற்றை எடுத்துக்கொண்டு வந்தார். மோட்டார் கொட்டகைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

* * * * *

 உயிர்மை - அக்டோபர் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக