வியாழன், 9 அக்டோபர், 2014

கொலைக் கருவி-இமையம்
      இன்று மனிதகுலம் பெற்றிருக்கும் எல்லா வசதிகளும் மேன்மைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நிகழ்ந்த அற்புதம்.  அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சம்-சக்கரம்தான்.  இரண்டாவது மின்சாரம்.  மருத்துவத் துறையில், போக்குவரத்துத் துறையில், வானவியல், உற்பத்தித் துறையில் என்று அறிவியல் கண்டுபிடிப்பின் உதவியின்றி மனிதனால் இன்று ஒரு மணிநேரம்கூட வாழ முடியாது.  கடந்த நூற்றாண்டு அறிவியலின் அனைத்து எல்லைகளையும் தொட்டது.  கற்பனைகளையெல்லாம் சாத்தியமாக்கியது, சாதாரணமாக்கியது.  புதிய புதிய கற்பனை எல்லைகளை உருவாக்கியது.  உருவாக்கிக்கொண்டிருக்கிறது.  குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில் எட்டியிருக்கும் சாதனை கற்பனைக்கு அப்பாற்பட்டது.
      செல்போன் கண்டுபிடிப்பு-தூரத்தை, காலத்தை, நாடுகளை, மொழி, இனங்களை, பிரதேச அடையாளங்களை இல்லாமலாக்கிவிட்டது.  செல்போன் உள்ளங்கையில் உலகம்-என்று மாற்றிவிட்டது.  நெட் இணைப்பு இருந்தால் போதும் சாத்தியமில்லை என்பது உலகில் ஒன்றும் இல்லை. உலகின் எல்லா துறை சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.  நூலகம் சென்று தேட வேண்டியதில்லை.  படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.  மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.  பிரதி எடுக்க வேண்டியதில்லை.  எல்லா தகவல்களையும் செல்போன் மூலமாகவே எளிதில் பெற முடியும்.  தகவலை அனுப்ப முடியும்.  உடனுக்குடன் தகவலை பெறவும், அனுப்பவும், பலருக்கும் பரப்பவும் முடியும்.  தூரதேசத்திலுள்ள உறவுகளிடம், நண்பர்களிடம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச முடியும். அதுவும் நினைத்த நேரத்தில்-தகவல்களை பெறவும், வழங்கவும் சாத்தியப்படுத்திய-செல்போன்-மிகப்பெரிய வரமா, சாபமா?
      நம்மால் இன்று உணவில்லாமல்கூட ஒரு நாள் இருக்க முடியும்.  ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க முடியுமா?  சாப்பிட சோறு கிடைக்காதபோது, குடிநீர் கிடைக்காதபோது நமக்கு ஏற்படுகிற கோபத்தைவிட, வருத்தத்தைவிட, பன்மடங்கு கோபம், ஆத்திரம் செல்போனில் சார்ஜ் இல்லாத போதும், டவர் கிடைக்காதபோதும் ஏற்படுகிறது.  கண்மண் தெரியாத அளவுக்கு பதற்றம் ஏற்படுகிறது.  அலுவலகத்திற்கு பேனா இல்லாமல், பைல்கள் இல்லாமல், ஏன் மதிய உணவுகூட எடுத்து செல்லாமல் செல்வோம்.  ஆனால் செல்போன் இல்லாமல் செல்லமாட்டோம்.  சார்ஜர் இல்லாமல் செல்லமாட்டோம்.  ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாடக்குறிப்பு நோட்டு இல்லாமல் கையெழுத்து போட பேனாகூட இல்லாமல் செல்வார்கள்.  ஆனால் உயிர் ஆயுதமான செல்போன் இல்லாமல் செல்லமாட்டார்கள்.  சராசரியாக ஒரு குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு உணவுக்காக செலவிடப்படும் தொகையைவிட பன்மடங்கு தொகையை செல்போனுக்காக செலவிடுகிறது.  மனிதர்களுக்கு உணவைவிட செல்போன் பேசுவது முக்கியமானது.
      பழைய காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட, இனவழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட, எல்லைப் பிரச்சனை, மதப்பிரச்சனை, சாதி பிரச்சனை, காதல் பிரச்சனை, வரதட்சணை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட இன்று செல்போனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம்.  அலுவலக ஊழியர்களின் அழைப்பால், தவறான அழைப்புகளால், விளம்பர அழைப்புகளால், எத்தனையாயிரம் பெண்கள் சந்தேக்க் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள்.  நடத்தப்படுகிறார்கள்.  முன்பு வீட்டில் சண்டை என்றால் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டும்தான் நடக்கும்.    இப்போது அலுவலக நேரத்திலும் போன் வழியாக நடந்துகொண்டேயிருக்கிறது.  கோபத்தை குறைப்பதற்கான காலத்தை செல்போன் இல்லாமல் மாற்றிவிட்டது.  ஆடுமாடு மேய்க்கிற சிறுவர்களிடமும், சித்தாள் வேலை செய்கிற பெண்களிடமும் செல்போன் இருக்கிறது.  இந்தியா அந்த அளவுக்கு தொலை தொடர்புதுறையில் முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்று பெருமைப்பட முடியுமா?  இந்திய மக்கள் தொகையில் அறுபது சதவிகித்தினர் நாள்தோறும் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.  அதனால் நாடு வளர்ச்சி பெற்றுவிட்டது என்று சொல்ல முடியுமா?
      வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே செல்போனில் மாணவ-மாணவிகள் ஆபாச படம் பார்க்கிறார்கள்.  தவறு, வகுப்பறையைவிட்டு வெளியே போ என்று சொன்னால் இது உங்களுக்கு தேவையில்லாத விசயம்.  நான் நன்றாக படிக்கவில்லையா, மதிப்பெண் எடுக்கவில்லையா?  தனிப்பட்ட விசயத்தில் தலையிடாதீர்கள் என்று +2 படிக்கும் மாணவ-மாணவிகளே ஆசிரியர்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.  மீறி கண்டித்தால் விபரீத செயல்களில் ஈடுபட்டுவிடுவார்களோ என்ற அச்ச உணர்வில் நமக்கு எதற்கு ஊர் வம்பு என்று ஆசிரியர்கள் விலகிப்போய் விடுகிறார்கள்.  கர்நாடகா சட்டசபையில் அமைச்சர்களே செல்போனில் ஆபாசப்படம் பார்த்தார்களே என்று மாணவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.  இது மேல் நிலைப்பள்ளியின் நிலைமை என்றால் கல்லூரி, பொறியியல், மருத்துவக் கல்லூரி, உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் நிலை என்ன?  ஆசிரியர் கேட்க முடியுமா?  செல்போனால் ஏற்படும் சீரழிவு நகரத்து மாணவ-மாணவிகளிடம் மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது.  பஸ் போக்குவரத்து இல்லாத கிராமத்து மாணவ-மாணவிகளிடமும்-இந்த நிலை இருக்கிறது.  உலகத்தரமான கல்வியைத் தருகிறோம் என்று சொல்கிற தனியார் மெட்ரிக் பள்ளிகளில்தான் இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.  அங்குதான் பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். விலை உயர்ந்த, அதிநவீன அனைத்து வசதிகளும் கொண்ட செல்போன்களும் அங்குதான் இருக்கின்றன.  தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் தெரிந்த பிள்ளைகளும் அங்குதன் இருக்கின்றனர். பெண்களின் வாழ்க்கையிலும், குழந்தைகளின்  வாழ்க்கையிலும் செல்போன் ஏற்படுத்தும் ஆபத்து-நியூட்ரான் குண்டுகளால், எலக்ட்ரான் குண்டுகளால் ஏற்படும் ஆபத்தைவிட பெரியதாக இருக்கிது.
      நம்முடைய குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தை பெரும்பாலும் செல்போனில் கேம் விளையாடுவதில் செலவிடுகின்றன.  அக்கம்பக்கம் பார்க்காமல், தெருவில் நடப்பதைப் பார்க்காமல், விளையாடாமல் உட்கார்ந்தபடியே போனை நோண்டிகொண்டிருப்பது நமக்கு அப்போதைக்கு பக்கத்து வீட்டு குழந்தைகளோடு சேராமல் சௌகரியமாக இருக்கலாம்.  செல்போனிலிருந்து குழந்தைகளை காப்பது-எய்ட்ஸ் நோயிலிருந்து காப்பதைவிட பெரியது.  மிகப்பெரிய ஆபத்தை, விஷத்தை அதிக விலை கொடுத்து வாங்குவோமா என்றால்-நிச்சயம் வாங்குவோம்-வாங்குகிறோம்.  அப்படி வாங்குகிற ஒன்றுதான் செல்போன்.  உலகிலேயே பொய் சொல்வதற்கு ஏமாற்றுவதற்கு, பாவனை செய்வதற்கு, நடிப்பதற்கு ஏற்ற கருவியாக இருக்கிறது செல்போன்.  வீட்டில் இருந்துகொண்டே வெளியில் இருக்கிறேன் என்று சொல்ல முடியும்.  வெளியில் இருந்துகொண்டே வீட்டில் இருக்கிறேன் என்று சொல்ல முடியும்.  இப்படி அடுக்கடுக்கான பொய் சொல்ல உதவும் ஒரே கருவி செல்போன்.  லேண்ட் லைன் போனால் இவ்வளவு ஆபத்து இல்லை.  வீட்டில் எல்லோரும் இருப்பார்கள்.  நீண்ட நேரம் பேச முடியாது.  ரகசியமாக பேச முடியாது.  திருட்டு செயல்களை பேச முடியாது.  அவற்றுக்கெல்லாம் முழு வாய்ப்பை அளிக்கிறது செல்போன்.  சமூகத்தில் நடக்கும் அநேக்க் குற்றச் செயல்களுக்கு பெரிய உதவியாக இருப்பது-செல்போன்தான்.  தற்காலத்தில் அறுபது சதவிகிதம் குற்றச்செயல்கள், குடும்பச் சீரழிவுகள் செல்போனால் மட்டுமே நடக்கிறது.  சாலை விபத்துகள் பெரும்பாலும் செல்போனால் மட்டுமே நிகழ்கிறது.  ஒரே ஆள் எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை, ஒவ்வொரு மனிதனையும் மனித வெடிகுண்டாக மாற்றக்கூடிய ஆபத்தைப்போன்றது.  பஸ்ஸில், ரயிலில், நடைபாதையில் தங்களுடைய அந்தரங்க, குடும்ப, காதல் விசயங்களை பகிரங்கமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  இடம், பொருள், அந்தரங்கம், ஒளிவுமறைவு என்பதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.
      மிஸ்டு கால் வந்து, தவறான அழைப்பு வந்து, அதை யாரென்று கேட்கப் போய் ஏற்பட்ட உறவுகள் எவ்வளவு?  திருமணமாகி குழந்தைகள் உள்ள ஆண்கள் தவறான அழைப்புகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து பேசி, தொல்லை கொடுத்து, செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணிய வைத்து, தெருவில் விடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?  மிஸ்டுகால்-யாரென்று கேட்கப்போய் மாட்டிக்கொண்டு குடும்பத்தை, குழந்தைகளை இழந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?  செல்போன் பெரிய கொலைக் கருவியாகிவிட்டது என்பதை சொல்வதெல்லாம் உண்மை, நடந்தது என்ன, நிஜம்-போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது தெரியும்.  நம்முடைய சமூகம் எங்கே, எதை நோக்கி, எந்தப் பாதையில் செல்கிறது?  அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதகுல மேம்பாட்டுக்கே அன்றி அழிவுக்கு அல்லவே?
      தவறான அழைப்புகளால், மிஸ்டுகால்களால், எத்தனை குடும்பங்களில் சந்தேகம் ஏற்பட்டு அடிதடி நடக்கின்றன, கணவன் மனைவி பிரிதல், குடும்பம் சிதைந்துபோதல், எத்தனை துர்மரணங்கள் நிகழ்கின்றன?  ஒரு பெண்ணின் மரணம் என்பது-தனிப்பட்ட ஒரு பெண்ணின் மரணமாக இல்லாமல், ஒரு குடும்பத்தின் மரணமாக, குழந்தைகளின் மரணமாகவும் அமைகின்றன-என்பதை நாம் உணரவில்லை.  சந்தேகத்தால் எத்தனை பெண்கள் தீக்குளிக்கிறார்கள்? எத்தனை குழந்தைகள் நாள்தோறும் அனாதைகளாகிக்கொண்டிருக்கிறார்கள்?
      பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் பெண்களின் படங்கள், ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்திருக்கும் பெண்களின் படங்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களின் படங்கள், காய்கறி வாங்கும், சாலையில் நடந்து செல்லும் பெண்களின் படங்கள் எல்லாம் செல்போனால் படம் எடுக்கப்பட்டு வலைதளங்களில் ஏற்றப்பட்டு விற்பனைப் பொருளாக மாற்றப்படுகிறது.  ஒவ்வொரு கணமும் செல்போன் கேமரா பெண்களை பதிவு செய்துகொண்டே இருக்கிறது.  இது எவ்வளவு பெரிய ஆபத்து.  இந்த ஆபத்திலிருந்து நமது பெண் பிள்ளைகளை, பெண்களை எப்படி காப்பாற்றப்போகிறோம்?    சமூக விரோதிகளுக்கு வசதியாக, எந்த சுரணையுமின்றி நாமே நம்முடைய குடும்பப் பெண்களின் படங்களை முகநூலில் ஏற்றி வைத்திருக்கிறோம்.  விதவிதமாக முகநூலில் பெண்களின் படங்கள் எதற்காக பதிவேற்றம் செய்கிறோம்?  நாமே நமது பெண்களை ஆபாசப் பொருளாக, காமப்பொருளாக மாற்றுகிறோம்? கணவன்-மனைவியே தங்களுடைய அந்தரங்க செயல்களை எதற்காக படம் எடுக்கிறார்கள்?  விளையாட்டாக செய்கிற காரியங்கள் பொதுப்பார்வைக்கு வந்து பெரும் தீவினையாக மாறி எத்தனை குடும்பங்கள், எத்தனை பெண்கள் அழிந்திருக்கிறார்கள்?   
      கொலைக்கருவியாக இருக்கக்கூடிய, குழந்தைகளை தவறான பாதைக்கு இட்டு செல்லக்கூடிய செல்போனை தவிர்க்க முடியுமா என்றால் முடியாது.  ஆனால் அதன் பயன்பாட்டு அளவைக்குறைக்க முடியும்.  அதிலுள்ள தேவைக்கு அதிகமான வசதிகளை குறைக்க முடியும்.  செல்போனில் மகள், மனைவி படங்களை எடுத்து வைப்பதைத்தவிர்க்க முடியும்.  அதிநவீன, அதிக தொழிற்நுட்ப, அதிக விலையுள்ள போன்களை வாங்காமல் இருக்க முடியும்.  மிஸ்டுகால் வந்தால்,  தவறான அழைப்புகள் வந்தால், விளம்பர அழைப்புகள் வந்தால், பொருட்படுத்தாமல் இருக்க முடியும். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு SMS அனுப்பாமல் இருக்க, செல்போன் எண்களை பழக்கமில்லாதவர்களுக்கு கொடுக்காமல் இருக்க, குழந்தைகள் போனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.  கேமரா உள்ள, நெட் இணைப்பு வசதியில்லாத சாதாரண போன்களை வாங்குவதன் மூலம்- பெரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.  சாதாரண போன் வைத்திருந்தால் கௌரவம் போய்விடும் என்று நம்புவது மூடத்தனம்.  ஒரு குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் செல்போன் அவசியமா?  செல்போன் என்பது-தகவல்களை தரவும், தகவல்களை பெறவும்தான்.  நாமும் நாசமாகி, நம்மோடு சம்பந்தப்பட்டவர்களையும் நாசமாக்கவா செல்போன்?  அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்முடைய நலனுக்கானது.  அதை நாமே நமக்கான கெடுதலாக, நரகமாக மாற்றிக்கொள்ளக்கூடாது.  ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மின்சாரத்தை மட்டுமே மையமாகக்கொண்ட வாழ்க்கை முறை இருக்கவில்லை.  செல்போனும் அப்படித்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக