புதன், 28 மே, 2014

கடல் கிணறு - விமர்சனம்

கடல் கிணறு : ரவிக்குமார். (சிறுகதை தொகுப்பு)
                                                விமர்சனம் : இமையம்.
       கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ் கதைகள் அல்ல. குடும்பக் கதை, சோக, காதல், புரட்சி, முற்போக்கு, வட்டார உண்மை, கதைகள் அல்ல. போர்ஹே போன்ற எழுத்தாளர்களை முன்மாதிரியாகக் கொண்டோ, ஆங்கில படிப்பால் நகல் செய்யப்பட்ட கதைகளோ அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அடுக்கடுக்கான புரியாத வாக்கியங்களால் கட்டியமைக்கப்பட்ட, வார்த்தைகளால் மட்டுமே வார்த்தைகளின் சேர்க்கைகளாக மட்டுமே எஞ்சி நிற்கிற கதைகள் அல்ல. ஒரு வசதிக்காக இக்கதைகளை அரசியல் கதைகள் என்றும், மன எழுச்சி கதைகள் என்றும் பிரிக்கலாம். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள், போன்ற கதைகளில் அரசியல் முக்கியமான பாத்திரம் அல்ல. மரணம்தான் முக்கியமான பாத்திரம். அ-காலம், கடல் கிணறு – கதைகளிலும் மரணம்தான் முக்கிய பாத்திரம். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம்.
       ரவிக்குமாரினுடைய பாத்திரங்கள் அழுதார்கள், சிரித்தார்கள், சண்டையிட்டார்கள், ஏங்கினார்கள் ஏன் அதிர்ந்து பேசினார்கள் என்று கூட சொல்ல முடியாது. பிறராலும் தனக்குத்தானே நெய்யப்பட்ட மௌனத்திற்குள் உரைந்துகிடப்பவர்கள். தொகுப்பின் அநேக கதைகளில் மரணம் நிகழ்கிறது. ஆனால் புலம்பலோ, கண்ணீரோ வெளிப்படுவதில்லை. ரவிக்குமாரின் மனிதர்கள் கண்ணீரிலிருந்து, புலம்பலிலிருந்து விலகியே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போகிற கணவன் குறித்து மனைவி புலம்புவதில்லை. அழுவதில்லை. வீட்டை காலி செய்துவிட்டு தேசாந்திரியாக போய்விடுகிற அம்மா குறித்து மகன் அழுவதில்லை. புலம்புவதில்லை. தாயின் மரணத்திற்கு வர முடியாமல் எட்டாம் துக்கத்திற்கு வருகிற மகன் அழுவதில்லை. புலம்புவதில்லை. மாறாக அரசியல் பேசுகிறான். தன்னுடனும், தன் மகளுடனும் ஒரே நேரத்தில் உறவு வைத்துக்கொண்டு, மகளை கர்ப்பமாக்கிய இரண்டாவது கணவன் மீது குற்றம் சொல்லி அழுவாத, புலம்பாத பெண். உண்மை அறிதல் கதையில் பெரிய கலவரத்தில் ஒரே நேரத்தில் பலர் இறந்து போகிறார்கள். அந்த இடத்திலும் கதறல், கண்ணீர், புலம்பல் இல்லை. மாறாக மௌனம் நிலவுகிறது. கதைகளில் கண்ணீர், புலம்பல் இல்லாதது மட்டுமல்ல, பேச்சும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்கள். அநேக கதைகளில் பாத்திரங்களுக்கு பெயர்களே இல்லை. பெயர்கள் என்பது வார்த்தைகள்தானே. அடையாளம் மட்டும்தானே. அரசியல் கதைகளில் பிரச்சாரம் இல்லை. நிலையாமைப்பற்றிய கதைகளில் போதனைகள் இல்லை. உளவியல் கதைகள்தான். ஆனால் கோட்பாட்டு விளக்கங்கள் இல்லை.
       ரவிக்குமாரினுடைய மனிதர்கள் அழுவதில்லை, சிரிப்பதில்லை, புலம்புவதில்லை, பேசுவதில்லை என்பது மட்டுமல்ல, வாழ்வதற்காக ஆசைப்படாதவர்கள், அதற்காக போராடாதவர்கள், வாதாடாதவர்கள். மாறாக வீட்டிலிருந்து, ஊரிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பவர்கள். வெளியேறுகிற மனிதர்கள் எங்கே போகிறார்கள்? நமக்கு மட்டுமல்ல, வெளியேறிக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியாது. தெரியாதது மட்டுமல்ல எங்கே போகிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும் விரும்பாதவர்கள். வீடு, ஊர், சொந்தம் மட்டுமல்ல தங்களுடைய உடலே தங்களுக்கு சொந்தமில்லை என்று நம்புகிற மனிதர்கள். இப்படி இருக்கிறவர்கள் புனிதர்கள் என்று நம்ப வேண்டியதில்லை. தூங்குகிற மனிதனிடம் திருடுகிறவர்கள், தாயுடனும், மகளுடனும் ஒரே நேரத்தில் படுக்கிறவர்கள், மனைவியை விட்டு ஓடுகிறவர்கள்தான். மகனைவிட்டு ஓடிப்போகிற தாய்.
       எது மனிதர்களை ஓயாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது? தெரியாது. கதையிலும் அதற்கான தடயம் இல்லை.  காரணம் சொல்லப்படுவதில்லை. ஆனால் காரியம் நடக்கிறது. “அவன் எந்தக் கிராமத்துக்கும் போகவில்லை. இன்னும் சரியாக சொன்னால் அவன் எந்த ஊருக்கும் போகவில்லை“ என்று தம்பி கதையில் வருகிறது. அதே மாதிரி அ-காலம் கதையில் “இந்த வாழ்க்கை எதை நோக்கிப் போகும்?“ என்றும் “அந்த வீடு அவனுக்கு சொந்தமில்லை“ என்றும் வருகிறது. “வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு கிளம்பிவிடும்,“ என்றும் “அப்பா சும்மா ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கிறார்“, “அம்மா வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டார்“ என்றும் கடல் கிணறு கதையில் வருகிறது. ஏன் எல்லாரும் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்? தம்பி கதையில் வரும் தம்பி போய்க்கொண்டேயிருக்கிறான், எங்கே என்று தெரியாமல். கடல் கிணறு கதையில் வரும் அப்பா ஓயாமல் ஊர்ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறார். அம்மாவும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். மனிதர்கள் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். எங்கே? இதுதான் ரவிக்குமார் உருவாக்கும் புதிர். கனமான விசயங்களை எளிய சொற்களில் எழுதுவதற்கு மிகுந்த படிப்பும், பயிற்சியும் வேண்டும். அது ரவிக்குமாருக்கு இருக்கிறது. எழுதுகிற பழக்கம் கை வந்ததின் விளைவாக எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை.
       கடல் கிணறு தொகுப்பிலுள்ள அநேகக் கதைகள் நிலையாமைப்பற்றியும் மரணத்தைப்பற்றியும் புதிய உரையாடலை நிகழ்த்துகின்றன. மரணம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடும் – நாம் வாழ்வதே சாவதற்காகத்தான் என்று அறிக்கையாக, போதனையாக எந்த கதையும் பேசவில்லை. மாறாக அதற்கான சூழலை உருவாக்கிக்காட்டுகின்றன. கலவரத்தில் இறந்து போனவர்கள் பற்றிய அறிக்கைகள், ஆவணங்கள், தகவல்கள், செய்திகளால், கமிஷன்களால் இறந்துபோனவர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? இறந்தவர்கள் – இறந்தவர்கள்தானே என்று உண்மை அறிதல் கதை பேசுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில்கூட கூடுதலாக கதையில் ஒரு சொல் இல்லை.
        ரவிக்குமாருக்கு அதிசயமாக இருப்பது கடல் அல்ல, மலைகள் அல்ல. மனிதர்களும், அவர்களுடைய நடவடிக்கைகளும்தான் பெரும் அதிசயமாக இருக்கிறது. ஆண் பெண் உறவு, குடும்ப உறவு என்பது புனிதமல்ல.  உண்மை அல்ல. அப்படி நினைப்பது நம்முடைய கற்பனை மட்டுமே. சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடு, சமூக அறம், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவை உருவாக்கிக்காட்டுகிற உலகமும், எதார்த்த உலகமும் வேறுவேறாக இருப்பது ஏன்? தாயுடனும், மகளுடனும் ஒரே நேரத்தில் உறவு கொள்கிற ஆண்கள் எப்படி இருக்கிறார்கள்? ஆண் பெண் என்பவர்கள் புதிர். அதைவிடவும் ஆண் பெண் உறவு என்பது பெரும்புதிராக இருக்கிறது என்பதை குல்ஃபி கதை நிகழ்த்திக்காட்டுகிறது. அதே மாதிரி மற்றொரு புதிர் நமது ஜனநாயகம். நாம் போற்றுகிற ஜனநாயகம் யார் உருவாக்கியது, எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டது? ஜனநாயகத்தின் தன்மைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? இதுதான் ‘ழ‘ கதை. ஜனநாயக அமைப்புகள் குழந்தைகளை எப்படி கட்டுப்படுத்துகிறது? அப்படி கட்டுப்படுத்துகிற அமைப்புக்குப் பெயர் ஜனநாயகமா? இதுதான் கதையின் கேள்வி, கதை ஆசிரியரின் கேள்வி, இந்த கேள்வி நிறுவப்பட்டிருக்கும் விதம் முக்கியமானது. ஜனநாயகம் செழித்திருக்கிற ஒரு நாட்டில் ஒரு பிரிவு மக்கள் அதிர்ந்து பேசுவதுகூட குற்றமாக சாதிக்குரிய பெருமையை இழிவுப்படுத்துவதாக, தெருவில் நடப்பது, நல்ல துணிக்கட்டுவது, காரில், பைக்கில் போவதுகூட குற்றமாக எப்படி மாற்றப்படுகிறது, சாதிக்கு, சாதியின் பெருமைக்கு விடப்படுகிற சவாலாகவும் எதிரானதாகவும் எப்படி பார்க்கப்படுகிறது, குற்றச்செயலாக உருமாற்றம் பெறுகிறது – இதுதான் நமது ஜனநாயக செயல்பாடு. சாதிய செயல்பாடுகள் மேலோங்கி இருக்கிற நாட்டில் ஜனநாயகம் எப்படி மேலோங்கியிருக்க முடியும்? இதுதான் ‘ழ‘ கதை, எட்டாம் துக்கம் கதை. சமூகத்தையும் அதனுடைய இயக்கத்தையும் படித்துக்கொள்வதற்கு இக்கதைகள் உதவுகின்றன.
       கடல் கிணறு தொகுப்பில் ‘வார்த்தைகள்‘ என்ற கதை புதுவிதமாக சொல்லப்பட்ட முக்கியமான கதை. ஒரு இடத்திற்கான, பொருளுக்கான அடையாளத்தை, மதிப்பை எது ஏற்படுத்தி தருகிறது? வார்த்தைகள். கடவுள் என்பதை உருவாக்கியதே வார்த்தைகள்தான். உலகமே சொற்களால் ஆனதுதான். வரலாறுகள், புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், கட்டுக்கதைகள், தத்துவங்கள், கொள்கைகள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் வார்த்தைகளால் கட்டமைக்கப்படுவதுதான். வார்த்தைகளால் உயிர்கொடுக்கப்படுபவைதான். சுவாரசியமாக சொல்லப்பட்ட கதை இது. திருட்டுப் பற்றி ஒரு தியரி கதை, நம்முடைய சிறு பத்திரிக்கை உலகம் பற்றி நகைச்சுவையோடு சொல்லப்பட்டக் கதை. சிறு பத்திரிக்கைகளும், அதனுடைய ஆசிரியர்களும், பதிப்பகங்களும், அவற்றில் வெளியிடப்படுகிற படைப்புகளுக்கும் பின்னால் இருக்கிற காரண காரியங்கள், நாடகங்கள் அரசியல், சமரசங்கள், விட்டுகொடுத்தல்கள் அனைத்தும் அங்கதத்துடன் விவரிக்கப்படுகிறது. அரசியலுக்கு எதிராக, அதிகாரத்திற்கு எதிராக பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள் எப்படி அதிகாரத்தை அடைவதற்காக அலகிறார்கள், போராடுகிறார்கள் என்பதுதான் கதை சொல்லும் செய்தி. செறிவும், கச்சிதத் தன்மையும், கதைகளுக்கு வலு சேர்க்கின்றன. மங்கி தேய்ந்து போகாத புது சொற்களால் கதைகள் எழுதப்பட்டிருக்கிறது.
       கடல் கிணறு தொகுப்பு கதைகள் புற உலகைப்பற்றி பேசுவதாக தோற்றம் தந்தாலும் அக உலகப் பயணத்தையே அதிகம் பேசுகிறது. அதிராத வார்த்தைகளால். மனிதவாழ்க்கையின் நிஜத்தை பேசுகிறது. வாழ்க்கையைப்பற்றி பேசுவதற்கு ரவிக்குமார் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கவர்ச்சிகரமானதோ, பகட்டானதோ அல்ல. மாறாக ஈர்ப்புடையது. வார்த்தைகளுக்கான மதிப்பு – அது சுட்டும் பொருள் சார்ந்து, அர்த்தம் சார்ந்து மட்டுமே ஏற்படுகிறது. எளிதில நிறமிழந்து, வலிமையிழந்து செத்துப்போகாத சொற்களால் எழுதப்பட்டுள்ளது. கடல் கிணறு - தொகுப்பு கதைகள்.

தி இந்து தமிழ் 28.05.2014


கடல் கிணறு (சிறுகதைகள் தொகுப்பு)
ரவிக்குமார்,
மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம் – எண் – 10,
நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை – 5,

 விலை – ரூ.60

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக