யாருக்கும்
இல்லை அந்தரங்க வாழ்க்கை - இமையம்
இன்றைய
நம்முடைய வாழ்க்கை என்பது – தொழிற்நுட்ப
வாழ்க்கை. ஊடக வாழ்க்கை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்கிற, கொஞ்சிக்கொள்கிற வாழ்க்கை. நாம் வாழ்கிற காலம் நிச்சயமாக மகத்தானதுதான்.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது சாத்தியப்பட்டது. அதே நேரத்தில் அது மனிதர்களிடம்
இருந்த வெட்கத்தையும், கூச்சத்தையும் போக்கிவிட்டது. முகநூல்,
யூ டியூப், ப்ளாக், வெப்சைட்,
ட்விட்டர் போன்றவற்றின் மூலம் யாரைப் பற்றிய தகவலையும் யார்
வேண்டுமானாலும் சேகரிக்கலாம். சேகரித்த தகவலை யாருடன் வேண்டுமானாலும்
பகிர்ந்துகொள்ளலாம் என்ற நிலை வாழ்க்கையின் போக்கை மாற்றிவிட்டது. சிந்தனை
தளத்தின் போக்கை மாற்றி விட்டது. சமூக வலைத்தளங்கள் தகவல் அறிவு சிலருக்கு மட்டுமே
என்ற நிலையை மாற்றிவிட்டன. அறிவு தேடலை எளிதாக்கிவிட்டது. தகவல் அறிவை
அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டது. இருநூறு முந்நூறு ஆண்டு காலத்தில் அடைய வேண்டிய
வளர்ச்சியை இருபது முப்பது ஆண்டுகளிலேயே அடைந்துவிட்டோம். தகவல் தொழிற்நுட்பத்தின்
அரிய சாதனைதான். அதே நேரத்தில் உலகில் எந்த மூலையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவனை
அமெரிக்காவின் ‘எக்லியான்‘ என்ற
சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கமுடியும் – கண்காணிக்கப்படுகிறோம்
என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
இன்று
நாம் வாழ்கிற வீடும், புழங்குகிற
வெளியும் எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்ன மாதிரியான
சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தொழில்நுட்பமும்
பணமும் நம்மை எங்கு கொண்டுபோய்க்கொண்டிருக்கிறது? நாம் பேசுகிற பாரம்பரியம், பெருமை, சமூக ஒழுக்கம், சமூக அறம் என்பது வெறும் மேடைப்
பேச்சுகளாக, பட்டிமன்ற நகைச்சுவை துணுக்குகளாக அப்போதைக்கு
சிரிக்க வைக்கிற விசயங்கள்தானா? மதிப்பீடற்ற
வாழ்க்கைக்குள் எவை நம்மை தள்ளுகின்றன? எதை நாம்
மதிப்பீடாகக் கொண்டிருக்கிறோம்? எது நாகரீகம்?
எது சமூக வளர்ச்சி? கேமராவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட
சமூகம்-அறிவார்ந்த படித்த சமூகம்தானா? படிப்பு-கல்வி
என்பது என்ன? நம்முடைய கல்வி எதைக் கற்றுத் தருகிறது? சமூகத்தை பாழக்கும் நாசக்கார
கிருமிகள் எவைஎவை? தமிழ் சமூகம் தனக்கான அறத்தை, ஒழுக்கத்தை எப்போது கைவிட்டது? இன்னும்
பத்தாண்டுகளுக்குள் தமிழர்களுடைய எல்லா முகங்களுமே காட்சி ஊடகங்களில் பதிவு
செய்யப்பட்டுவிடும். மற்றப்போட்டிகளைவிட கேமராவில் முகத்தைப் பதிவு செய்வதற்கான
போட்டிதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதில் கிராமம் நகரம் என்ற வேறுபாடு
இல்லை. ஊடகங்களின் சக்தி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவிடும்.
தமிழ்நாட்டில்
இருக்கிற எல்லா அரசியல் கட்சிகளுமே சேனல்களை வைத்திருக்கின்றன. இருபத்துநான்கு மணி
நேரமும் செய்திகளை அவை தந்துகொண்டிருக்கின்றன. “பரபரப்பு ஏற்பட்டது‘, ‘பதட்டமான சூழல் நிலவுகிறது‘
என்று செய்திகளை தரவில்லை. மாறாக உருவாக்குகிறார்கள்.
இருபத்திநான்கு மணிநேரமும் ‘பதட்டம், அச்சம்,
பரபரப்பு‘ என்ற சொற்கள் ஓயாமல் நம்முடைய
காதுகளில் விழுந்துகொண்டேயிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தை பரபரப்பும், அச்சமும் பதட்டமுமான நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்களா? ஒரே செய்தியை ஒவ்வொரு சேனலும் ஏன் ஒவ்வொரு விதமாக சொல்கின்றன? யார் சொல்வது உண்மை? பொய் உண்மையாக்கப்
பட்டுக்கொண்டிருக்கின்றன. நடுநிலை – உண்மை என்பதை அறியும்
மனநிலையும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. பரபரப்பு,
பதட்டம், அச்சத்தில் உறைந்துபோன சமூகம். சூடான
செய்திகளை மட்டுமே அறியும் சமூகம். செய்திகள் இப்படி இருக்கிறது என்றால்
பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி இருக்கின்றன?
நடந்தது
என்ன, சொல்வதெல்லாம் உண்மை, வாய்மையே
வெல்லும்- நீயா – நானா, மனம் விட்டு
பேசலாம், ‘பேசத் தயங்கியதை பேசலாம்‘, குற்றம்,
நித்யதர்மம், கோப்பியம் போன்ற நிகழ்ச்சிகளை
தமிழக தொலைக்காட்சிகள்தான் ஒளிபரப்புகின்றன. எதை,
யாரிடம், எப்போது பேசுவது என்ற கூச்சத்தை
தமிழ்ச்சமூகம் கைவிட்டுவிட்டது. நம்முடைய குடும்பப்
பெண்கள்தான் தங்களுடைய அந்தரங்கத்தை, அந்தரங்க உறவுகளை
காட்சிக்கு வைக்கிறார்கள். குடும்பப் பிரச்சனையை
தீர்க்கிறோம் என்ற பெயரில் ஊடகங்கள் தனிமனித அந்தரங்க, ரகசிய
உறவுகளுக்குள் நுழைவதோடு-அவற்றை பணமாகவும் மாற்றுகின்றன. நம்முடைய வாழ்வை, வாழ்வின் ரகசியத்தை-நமது மனதை
மட்டுமல்ல உடலையும் திறந்தே வைத்திருக்கிறோம். நம்முடைய
ரகசியங்களை, நம்முடைய அந்தரங்கத்தை, நம்முடைய
காம விளையாட்டுக்களை நம்முடைய வாயாலேயே சொல்ல வைக்கிறார்கள், நடித்து காட்ட வைக்கிறார்கள். கேமராவுக்கு
முன் நாம் நிர்வாணமானவர்களே. கேமரா – புனிதங்கள்,
சமூக ஒழுக்கம் என்று நம்பப்பட்ட அனைத்தையும் அடித்து
நொறுக்கிவிட்டது. மாதத்திற்கு ஒருமுறை பாலியல் சர்வே
வெளியிடுகிறது. முக்கியமான தமிழ்ப்பத்திரிக்கை. திருமணத்திற்கு முன் உறவு
கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்? திருமணத்திற்கு பிறகு
கணவன் அல்லாதவருடன் உறவு கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்? கன்னித்திரையை புதுப்பித்துக்கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லா கேள்விகளுக்கும் தமிழ் சமூகமும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. எது அதிகம் விற்பனை ஆகிறதோ அதற்குத்தான் மதிப்பு அதிகம். அந்தரங்க
விஷயங்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன என்பதை அறிந்த விளம்பரதாரர் என்ற கடவுள்
அந்த நிகழ்ச்சிகளுக்கே ஸ்பான்ஸர் செய்கிறார். ஒரு தொலைக்காட்சி எதைக்
காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்று தீர்மானிக்கிற
அதிகாரம் விளம்பரம் தருகிற கடவுளிடம்தான் இருக்கிறது. முற்றிலும் வணிக நோக்கம்
கொண்ட அந்தக் கடவுள் உண்மையை பேசவிடுவாரா? சமூகத்தின்
அனைத்து செயல்பாடுகளையும் கேமரா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
ஒவ்வொரு மனிதனும், உணர்விலும் - உடலிலும் கூச்சமில்லாமல்
அந்தரங்கத்தை படையலிடுகிறார்கள்.
தந்தையே
மகளை கர்ப்பிணியாக்கிய நிஜம். ஒரே ஆணுடன் தாயும் மகளும் காதல் செய்யும் உண்மை. ஆறு
மாதத்திற்குள் காதலனின் மூன்று நண்பர்களுடன் பழகி,
கர்ப்பமாகி, கர்ப்பத்திற்கு நான்கு பேரில்
யார் காரணம் என்று அறிவதற்கு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்த இளம்பெண், இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்காதலனுடன் ஓடிப்போன மனைவி, முகநூல் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஆணுடன் வாழ்ந்தே தீருவேன்
என்று அடம்பிடிக்கும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி, மிஸ்டு கால் மூலம் உருவான காதல் கதையின் துயர சம்பவம், கல்யாணம் செய்து கொண்ட பெண்ணுக்கு கணவன் உரிமையா, காதலித்த
பெண்ணுக்கு அந்த ஆள் உரிமையா? என்று பலரும் நீதிகேட்டு
நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. மாறாக தொலைக்காட்சி நிலையத்திற்கு
வந்திருக்கிறார்கள். கற்கும் வயதில் கருவை சுமக்கும் கன்னிகள், பருவத்தை தொலைத்த பரிதாப ஜீவன்கள், உள்ளத்தை
உலுக்கும் முக்கோணக் காதல் கதைக்காரர்கள் காதலைத் தேடி, கணவனைத்
தேடி, குழந்தைகளை மீட்பதற்காக காவல் நிலையம் செல்லாமல்
தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும்
ஒவ்வொரு நீதிபதி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் உருவாக்கி வைத்திருக்கும்
நீதிபதிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும்
தோற்கடித்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு நீதிபதி நித்யானந்தா. தனக்கு
ஆண்மையே இல்லை என்று அறிவித்துக் கொண்ட அவர் கணவன் மனைவி பிரச்சனையை, குடும்ப சிக்கல்களை தீர்த்து வைக்கிறார். நித்ய தர்மத்தின் வழியாக.
சாமியார்கள் தன்னை ஆண்மை அற்றவன் என்றும், ‘அம்மா‘ என்றும் அறிவித்துக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கிற அதிசயம்.
நம்முடைய தொலைக்காட்சிகள் குடும்பத்தின் துயரங்களை மட்டுமே தீர்த்து
வைக்கவில்லை. காதலன், காதலி, கணவன்,
மனைவிக்கிடையேயான அன்பையும் கூட்டுகின்றன. எப்படி? முதலில் காதலை சொன்னது யார்? உங்களுடைய முதலிரவை
எந்த ஊரில் கொண்டாடினீர்கள்? ஜோடியாக சென்று பார்த்த
சினிமா எது? ஜோடியாக முதலில் சென்ற இடம் எது? காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்டத் திருமணமா?
முதன்முதலில் பார்த்தபோது எப்படி இருந்தது? குடும்ப
வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் எது? உங்களுக்கு
உங்களுடைய மனைவியிடம் பிடித்தது எது? அடுத்த பிறவியிலும்
இவரே உங்களுடைய கணவனாக வரவேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்? உங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்? கருப்பா,
சிகப்பா, மாநிரமா? எவ்வளவு
சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுடைய
காதலர் உங்களுக்கு வாங்கி கொடுத்தப் பரிசுப் பொருள் எது? இப்படியான
கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த ஆண் யார்? பெண் யார்?
உங்களுடைய மனைவியோடு ஒரு நிமிசம் சேர்ந்து ஆடிக்காட்ட முடியுமா?
என்று கேட்ட கேள்விக்கு மறுத்த தமிழ்மகன், தமிழ்மகள்
யார்? இந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக
இருப்பவர்கள் சமூகப் போராளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்‘ என்று கேட்டு கேமரா நம்முடைய வீட்டுக்கு வந்தபோது முகத்தை
மூடிக்கொண்டவர்கள் குழந்தைகளா, பெண்களா, ஆண்களா என்று கேட்டால் பதில் எவரும் இல்லை என்பதுதான். தொலைக்காட்சியில்
குழந்தைகளை நடிக்க வைக்க எப்படிப்பட்ட அலங்காரங்கள் செய்து அனுப்புகிறோம்? தொலைக்காட்சியில் பேசும்போது மட்டும் ஏன் எல்லாரும் அழுகிறார்கள்? சிரிக்கிறார்கள்?
திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை
போட்டோக்காரனும், வீடியோக்காரனும் படம் எடுக்கிற விதம்
எப்படி இருக்கிறது? ‘இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க.‘ ‘தோள் மேல கைய வையிங்க.‘ ‘தோள்மேல சாஞ்சமாரி
நில்லுங்க.‘ ‘துணிய மாத்திக்கிட்டு வாங்க.‘ ‘நல்லா சிரிங்க.‘ ‘இப்படி நின்னுக்கிட்டு போஸ்
கொடுங்க.‘ என்று சொல்கிற போட்டோக்காரனின் ஆணைக்கு, வீடியோக்காரனின் கட்டளைக்கு ‘முடியாது‘ என்று சொன்ன மணமக்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா? பந்தியில்
ஒவ்வொருவரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை வீடியோ எடுத்து பாதுகாப்பவர்கள்
தமிழர்களாகவே இருப்பார்கள். அதே மாதிரி கல்யாண செலவில் பாதித் தொகையை
போட்டோவுக்கும் வீடியோவுக்குமே செலவிடுகிறவர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள்.
திருமண நிகழ்வில் எடுக்கப்படும் போட்டோவும், வீடியோவும்,
இலவசமாக வெப்சைட்டில் வெளியிடுகிறார்கள், ஸ்டுடியோக்காரர்கள். நம்முடைய குடும்பப் பெண்களின் படங்கள்-நம்முடைய வீட்டில் மட்டும்தான்
இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது இந்திய
அழகிகள்-என்ற தலைப்பின்கீழ் தமிழ் குடும்பப் பெண்கள் என்ற தலைப்பின் கீழ் எந்த
நிமிடமும் வலைத் தளங்களில் ஏற்றப்படலாம். தெருவில்,
சாலையில், கடைவீதியில் நடந்து போகிற பெண்களின்
பின்புறம் கூகுளில் ஏற்றப்படுகின்றன. பொதுவெளியில் நடக்கிற பெண்களின்
படம்-காட்சியாக்கப்படுகிறது. விற்பனைப் பொருளாக,
காம விளையாட்டுக்கான பண்டமாக மாற்றப்படுகிறது. செல்போன் வழியாக மட்டுமல்ல கேமராக்களின் வழியாகவும் இருபத்தி நான்கு
மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம், நம் உடல் காட்சிகளாக
மாற்றப்பட்டு வணிகப் பொருளாக மாறுகிறது. எந்த நிமிடமும், எந்த
நேரமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில், அந்தரங்கங்களில்
கேமராக்கள்-ஊடகங்கள் நுழையலாம். அதை ஒரு போதும் நாம்
எதிர்க்கப்போவதில்லை. மேளம் கொட்டி வரவேற்கவே
செய்வோம். எவ்வளவு பெரிய ஆபத்து என்று தெரியாமல்
நம்முடைய முகத்தை கேமராவுக்குள் பதிய வைக்க முயற்சிக்கிறோம்.
முகநூல்
எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார்
வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்
எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை அக்கப்போர்களை எழுதலாம். யாரை
வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை
கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது,
குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது,
குடும்ப சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற் படங்கள், வாழ்த்துக்கள்
எல்லாம் பார்க்கக்கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
பார்க்கலாம். பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப்
பருவத்து செயல்கள் என்று இவற்றை சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும்
கட்டுக்கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பை தருகின்றன. வலைத்தளங்கள்
எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
அரசியல்வாதிகளை
மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதம்விதமாக
போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக்கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட
முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப்சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களை
பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல. அரசியல்வாதிகள் தோற்றுப்போவார்கள் என்ற
எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. சினிமா நடிகர்-நடிகைகளைவிட விதம்விதமாக
நடித்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதமாக நடித்த நிழற்படங்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு
அரசியல் தலைவருடைய படம் இருக்கும். சாமி படங்கள் இருக்கும். இன்று அந்நிலை இல்லை.
கல்யாண போட்டோக்கள், குழந்தைகளின் போட்டோக்கள் இருக்கின்றன.
ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்று குறைப்பட்டுக்கொள்வது மாதிரி ‘ஏன் முகநூலில் இல்லை?‘ என்று கேட்டு
வருத்தப்படுகிறார்கள். முகநூலில் இல்லாதவர்கள் மனிதப் பிறவியே இல்லை என்பது மாதிரி
பார்க்கிறார்கள். முகநூலில்தான் மனிதர்கள் அதிகபட்ச நேரத்தை செலவிடுகிறார்கள்.
முகநூலில் கணக்கு இல்லாதவர் இன்று பிணம்தான். முகநூலில் ஆயிரக்கணக்கில் நண்பர்கள்
இல்லாதவர்கள் ‘தத்திகள்.‘ ஆறாவது
படிக்கிற பையனுக்கு ஆயரத்து முந்நூறு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒளிவுமறைவு,
ரகசியம், அந்தரங்கம் அனைத்தும்
பகிரப்படுகின்றன. தயக்கமின்றி, வெட்கமின்றி. வயது
வித்தியாசமின்றி.
நட்புப்பாராட்ட, தகவல் பரப்ப உதவும் சமூக வலைத்தளங்களின் வழியாக
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமா? எவற்றை பகிர்ந்து
கொள்ளக்கூடாது? என்ற எல்லைக்கோடு நீக்கப்பட்டுவிட்டது.
ஹைடெக் தொழிற்நுட்பம் – ஹைடெக் ஆபத்து. ஒவ்வெருவரும்
தங்களைப் பற்றிய தகவல்களை, கதைகளை ஓயாமல் சொல்லத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வசதியற்றவர்கள் தொலைக்காட்சிக்கு ஓடுகிறார்கள். வசதியானவர்கள் பிளாக், முகநூல், ட்விட்டருக்கு ஓடுகிறார்கள். என் பிளாக்கை
இத்தனை ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றும், முகநூலில்
இத்தனை ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் பெருமை கொள்கிறார்கள். ஷகிலா
நடித்த குளியல் காட்சிகளை ஒரு காலத்தில் ஊருக்குத் தெரியாமல், தெரிந்தவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சென்று பார்த்தோம். இன்று கூடத்தில்
உட்கார்ந்து கொண்டு ஷகிலா நடித்த தமிழ்ப் படங்களையும், நகைச்சுவைக்
காட்சிகளையும் பார்த்து சிரிக்கிறோம். ரசிக்கிறோம். அப்படி பார்க்கும்போது இதே
ஷகிலா நடித்த படங்களை ரகசியமாக சென்று பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் வந்து,
கூச்சத்தில் நெளிந்திருக்கிறோமா?
சட்டசபையில்
ஆபாசப் படம் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் நம்முடைய மந்திரிகள். ஆசிரியர் பாடம்
நடத்தும்போது செல்போனில் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் நம்முடைய குழந்தைகள். ஆபாசப்
பட போஸ்டர் ஒட்டாத தமிழ்நாடு பஸ்ஸடாண்டு இல்லை. நம்முடைய வருங்காலம், தமிழகத்தின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படுகிற
நடிகர்கள் எல்லாம் ஆபாசப் பட நடிகைகளுடன் ஷகிலாவுடன் மகிழ்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நம்முடைய எதிர்காலத்துக்கு, தமிழகத்தின்
வருங்காலத்துக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறோம்.
இன்று குடும்ப வாழ்க்கையிலும் சரி, சமூக
வாழ்க்கையிலும் சரி ரகசியம், அந்தரங்கம் இல்லை
என்றாகிவிட்டது. இன்று உடை என்பது உடலை மறைப்பதற்கானது அல்ல. கேமராவும், வீடியோவும், இணையமும் மனிதர்களை
நிர்வாணமாக்கிவிட்டது. “ஒரு நிமிசம் இருங்க. இங்க பாருங்க“
என்று முதலமைச்சர், கவர்னர் என்பதோடு
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள எவரையும் ஒரு புகைப்படக்காரரால் நிறுத்திவைக்க
முடியும். அதற்கான அதிகாரத்தை கேமரா அவருக்கு வழங்கி இருக்கிறது. சமூகத்தின் மொத்த
செயல்பாடுகளையும் தன்கட்டுப்பாட்டுக்குள் கேமரா கொண்டு வந்துவிட்டது. “ஒரு நிமிசம் இங்க பாருங்க. கொஞ்சம் சிரிங்க“ என்ற
புகைப்படக்காரரின் கட்டளையை எப்படிப்பட்டவராலும் மீற முடியவில்லை. அப்போது
யாருக்கும் எந்த அந்தஸ்தும இருப்பதில்லை. போட்டோ சரியாக வரவில்லை, வீடியோ சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது முறையும் தாலி கட்டப்படுகிறது.
நம்முடைய திருமணங்கள் போட்டோ திருமணங்கள், வீடியோ
திருமணங்கள். கேமராவைப் பார்த்தாலே நம்மை அறியாமலேயே நாம் நடிக்க
ஆரம்பித்துவிடுகிறோம். முன்பெல்லாம் பெண் பிள்ளைகளை “தெருவில்
நின்றுகொண்டு பேசாதே. தெருவில் நின்றுகொண்டு எதற்காகப் பேசுகிறாய்?“ என்று கேட்போம். இன்று அப்படி கேட்க முடியாது. யார் யாரிடம் பேசுகிறார்.
தெரியாது. குடும்பத்தில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை செல்போன்கள். ஒரு
மாதத்தில் உணவிற்காக செலவிடப்படும் தெகையைவிட செல்போனுக்கு அதிகம்
செலவிடப்படுகிறது. எல்லாருடைய கையிலும் கேமரா உள்ள செல்போன்தான் இருக்கிறது.
எல்லையைக் கடந்து செல்வதே நம் காலத்தின் செயல்பாடு.
இருபத்திநான்கு
மணிநேரமும் தொலைக்காட்சிகள் தருகிற செய்திகளும்,
பொழுதுபோக்கு அம்சங்களும் தமிழ் சமூகத்தை சுரணையுள்ள சமூகமாக,
அறிவார்ந்த சமூகமாக மாற்றக்கூடியவைதானா? வன்முறையையும்
ஆபாசத்தையும் இருபத்திநான்கு மணிநேரமும் தொலைக்காட்சிகள் நம்முடைய மூளைக்குள்
கொட்டிக்கொண்டேயிருக்கின்றன என்பதோடு நமக்குநாமே வன்முறையையும் ஆபாசத்தையும்
உருவாக்கி நம்மைநாமே இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இது வளர்ச்சி அல்ல. சமுக
மேம்பாடு அல்ல. ஆடையற்ற, அந்தரங்கமற்ற மனிதர்களாக இருப்பது
ஏற்றதல்ல. ஆடையின்றி இருப்பதுகூட அவமானமில்லை. கூச்சமும், வெட்கமும்,
அந்தரங்கமும் இல்லாமல் இருப்பதுதான் உண்மையான நிர்வாணம்.
உயிர்மை பிப்-2014
...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக