சொல் எனும் தானியம் (கவிதை தொகுப்பு)
-
சக்தி ஜோதி.
விமர்சனம் – இமையம்.
சொல் எனும் தானியம் என்ற சக்தி ஜோதியின் கவிதை
தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் படிக்க முடிகிறது. ரசிக்க முடிகிறது. கவிதைகளை
படிக்கவும் ரசிக்கவும் முடிவதற்குக் காரணம் சக்தி ஜோதியின் கவிதைகள் அடைமொழிகளை, அடையாளங்களை
தவிர்த்திருக்கிறது. அல்லது எதிர்த்திருக்கிறது. இதற்கான துணிச்சலை கவிதையும்,
கவிதைக்கான மொழியும், அவருக்கு தந்திருக்கிறது.
நல்ல
எழுத்து எதையும் கோராது. எதையும் முன்மொழியாது. நடப்பு சமூகம் எப்படி இருக்கிறது,
நடப்பு வாழ்க்கை, உறவு முறைகள் எப்படி இருக்கிறது என்று சொல்வதோடு தன் கவிதையை
சக்தி ஜோதி நிறுத்திக்கொள்கிறார். இதுதான் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் பலம். எந்த
ஒரு கவிதையிலும் கோரிக்கை இல்லை.
நிராகரித்தல் இல்லை. தர்க்கம், எதிர்வாதம், உரிமை கோரல் இல்லை. யார் மீதும்
வெறுப்பு இல்லை. கசப்பு இல்லை. முக்கியமாக போதனைகள் இல்லை. யார் மீதும், எதன்
மீதும் புகார் இல்லை. இழந்துவிட்டோம் ,
ஏமாற்றப்பட்டோம் என்ற ஆதங்கம், ஏக்கக் குரல் எந்தக் கவிதையிலும் வெளிப்படவில்லை.
மாறாக தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் அல்லது மொத்தக் கவிதையும் வாசகனுக்குக் கொடுக்கிற
செய்தி – பெறுவதில் இல்லை மகிழ்ச்சி, கொடுப்பதில் இருக்கிறது. வீழ்த்துவதில் இல்லை
வீரம், வீழ்த்தாமல் இருப்பதில், விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது என்று சொல்கிறது.
இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதற்கும் படிக்கப்படுவதற்கும் காரணம் – எது
மகிழ்ச்சி, எது வீரம், எது விட்டுக் கொடுத்தல், எது வாழ்க்கை, எது அன்பு, எது
உறவு, எதை பெறுவது, எதை இழப்பது என்று சொல்லித்தரத்தான். எதார்த்தத்திற்கும்
கற்பனைக்குமிடையிலான உறவை, சிந்தனைக்கும் தர்க்கத்திற்குமுள்ள உறவை இலக்கியத்தின்
வழியேகத்தானே அறிய முடியும்?
பூமி
இன்று மனிதனுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. பாம்புக்கு, பல்லிக்கு, பன்றிக்கு,
பறவைக்கு, யானைக்கு பூமியில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமைதான் மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால் மனித
செயல்பாடுகள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்று நிரூபிக்கிறது. பூமி மனிதனுக்கு
மட்டுமே சொந்தமில்லை. மனிதன் வாழ்வதற்கு பிற உயிரினங்களும், தாவர இனங்களும்
அவசியம் என்று ஒரு கவிதை சொல்கிறது. அது அதிகார தொனியில் இல்லை. நாய்களின் இயல்பு
என்ன? ஓடிக்கொண்டேயிருப்பது. ஆனால் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நாய்களை கட்டி
வைத்து நடைப்பயிற்சி தொடர்பான நெறிமுறைகளை கற்றுத் தருகிறார்கள்.
மனைவியை
மோசமாகவும் இழிவாகவும் நடத்துகிறான். அடிக்கிறான் ஒரு ஆண். அதே நேரத்தில் மகளை
‘அம்மா‘ என்று அழைக்கிறான். ‘தங்கம்‘
என்று கொஞ்சுகிறான். ‘மகாலட்சுமி‘ என்று கொண்டாடுகிறான். இது எப்படி
நிகழ்கிறது? எது ஆணின் உண்மையான முகம்? மனைவி மூதேவியாக தெரிகிறாள். மகள்
லட்சுமியாக இருக்கிறாள். ஆணின் உலகை, மனதை எப்படி புரிந்துகொள்வது? சக்தி ஜோதி மகளாகவும் இருந்திருக்கிறார். மனைவியாகவும் இருக்கிறார். இரு உலகங்களையும்
காண்கிறார். குழந்தையாக ஒரு பெண். தாயாக ஒரு பெண். கொண்டாடுகிறவன் ஆண்.
இழிவுப்படுத்துகிறவன் ஆண். எது சரி? எது தவறு? இரண்டு நிலைகளையும் பாரபட்சமின்றி
பேசுகிறது ஒரு கவிதை. சக்தி ஜோதியின் சமநிலையான பார்வையும் மனமும்தான் பாரபட்சமற்ற
தன்மையை தருகிறது. இந்த சமநிலை விருப்பு வெறுப்பின்றி வாழ்வை உற்று நோக்குவதால்
ஏற்படுவது. நிஜமான எழுத்து. நிஜமான இலக்கியப்படைப்பு பாரபட்சத்திற்கு
அப்பாற்ப்பட்டதுதானே. தொகுப்பிலுள்ள எல்லா கவிதைகளுமே மௌனத்தை பேசுகிறது. கூச்சலை,
ஆரவாரத்தை, ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்த முடியும். மௌனத்தை உண்டாக்க முடியுமா? நல்ல
கவிதையால் மட்டுமே அது சாத்தியம். சக்தி ஜோதியின் எந்த ஒரு சொல்லும் கத்தியோ,
உரக்கவோ பேசுவதில்லை. ஆண் பெண் உறவு குறித்து புதிய பார்வையில் புதிய மொழியில்
பேசுகிறது. இன்று இல்லை என்றால் நாளை மனதை குளிர்விப்பான் என்று நம்புகிறார்
கவிஞர். இந்த நம்பிக்கைதான் மனித உறவின் பாலம்.
ஒரு
பெண்ணுக்கான இடம் குடும்பத்தில், சமூகத்தில் என்ன என்பதை ஒரு கவிதை சொல்கிறது.
‘ஒனக்குப் புரியாது‘ ‘ஒனக்குக் தெரியாது‘ என்று ஒரு பையன் அல்லது ஒரு சிறுமி தாயைப்பார்த்து சொல்வதற்கு அவர்கள் காரணம் அல்ல. பெண்ணுக்கு நம் சமூகம் குடும்பத்தில்,
சமூகத்தில் என்ன இடம் கொடுத்திருக்கிறது, என்பதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
சமூக நிறுவனங்கள், பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள், சமூக ஒழுக்கம், நீதி என்று
வரையறுத்து வைத்துள்ளவற்றை அவர்கள் நினைவூட்டுகிறார்கள். அவர்களை அப்படித்தான்
சமூகம் பழக்கியிருக்கிறது. வளர்த்திருக்கிறது. அந்த சிறுவனை அல்லது சிறுமியை
அப்படி பேச பழக்கியதே அவளுடைய தாய்தான். இதுதான் நம் சமூகத்தின் வினோதம். இந்த விநோதத்தை இயல்பாக எப்படி ஒரு
பெண் செய்கிறாள்? அவளையும் இச்சமூகம்தானே பழக்கியிருக்கிறது. வளர்த்து இருக்கிறது.
அவள் மட்டும் எப்படி மாறி இருப்பாள்? என்று கேட்கிறது ஒரு கவிதை. கனமான சொற்களால்,
ஆர்ப்பாட்டமான, அலங்காரமான சொற்களால் எழுதப்பட்டதல்ல இக்கவிதை. எளிய சொற்களால்
எழுதப்பட்டிருக்கிறது. எளிய சொற்கள் எந்த பூச்சும் இல்லாமல் ஒரு சமூகத்தை, அதன் உளவியலை
காட்சியாக விவரித்திருக்கிறது. சக்தி ஜோதியின் கவிதைகள் வாசகனுக்கு கற்பனை
உலகைக் காட்டவில்லை. நிஜ உலகை காட்டுகின்றன. வாழ்வும் அதன் நெருக்கடிகளும்
கவிதைக்கான சொற்களை தந்திருக்கின்றன. தன்னைப்பற்றி, தான் வாழும் சூழலைப்பற்றி,
காலத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்.
சக்தி
ஜோதியின் கவிதைகளின் மையம் மனிதர்களும், அவர்களுடைய இயல்புகளும்தான். மனிதர்கள்
வாழ்கவதற்காக உருவாக்கி வைத்திருக்கிற, பின்பற்றி வருகிற நம்பிக்கைகள்,
நடைமுறைகள், வாழ்கிற விதம், வாழ்கிற இடம், சாமிகள், திருவிழாக்கள், சடங்குகள்
இதுதான் கவிதைகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கவிதையை எடுத்துக்காட்ட முடியும். கவிஞரின்
கவிதையை திரும்ப எழுதிக்காட்டுவது வாசகனின், விமர்சகனின் வேலை அல்ல. வேண்டுமானால்
கைக்காட்டியாக இருக்கலாம். எழுத்தாளனும் ஒரு நிலையில் கைகாட்டி மரம்தான். அன்பை, காதலை,
உறவை சொல்ல முடியுமா? காட்ட முடியுமா? உணரத்தான் முடியும். கவிதையும்
அப்படித்தான். விமர்சகன் கைகாட்டி மரம் என்பதால் சில கவிதைகளின் பெயர்களை
சொல்லலாம். ‘என் உலகம். யுகாந்திர உறக்கம். மாசற்ற நிர்வாணம். அப்பாக்கள் அறியாத
புதிர், அம்மன், ஊற்றுக்கண், முந்தானைச் சோளம்.‘ இப்படி
இன்னும் பல.
ஒரு
பெண்ணின் ஒரு நாள் இயக்கத்தை விவரிக்கவில்லை மாறாக காட்சிப்படுத்துகிறது முந்தாணை
சோளம் கவிதை. ஒரு பெண் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை என்னென்ன
செய்கிறாள் என்பது ஒவ்வொரு காட்சியாக வருகிறது. ஒவ்வொரு காட்சியும் கண்களிலும்
மனதிலும் கற்சித்திரமாக படிகிறது. கவிதையில் காட்சிதான் முதன்மை பெறுகிறது.
காட்சிக்கு முன்னால் சொற்கள் வலுவிழந்து பின்னால் நகர்ந்துவிடுகிறது. காட்சியை
விவரிப்பதற்கான கருவிதான் சொற்கள் – மொழி. வாசகனுக்கு சொற்கள் முக்கியமல்ல. அது
சுட்டும் பொருள், அது உருவாக்கிக்காட்டும் காட்சிதான் முக்கியம். சங்ககால கவிதைகளில் காலம் இருக்கும். இடம்
இருக்கும். நேரம் இருக்கும். குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த
மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சிரித்தது, அழுதது, வாழ்ந்தது இருக்கும். எப்படி
வாழ்ந்தார்கள் என்பதும் இருக்கும். எல்லா செய்தியும் நான்கு வரிகளுக்குள்
இருக்கும். இந்த சொல்முறையை எப்படி தொலைத்தோம் என்பதை கேள்வி கேட்க வைத்தது முந்தானை சோளம் கவிதை. சீக்குப் பிடித்த மனங்களுக்கு வாழ்க்கையும் இல்லை. கவிதையும்
இல்லை. சொல் எனும் தானியம் தொகுப்பு கவிதைகள் அலங்காரங்களை தவிர்த்தவையாக
இருக்கின்றன. முகப்பூச்சு எப்போதும் முகத்துடனேயே
இருப்பதில்லைதானே. பல நேரங்களில் அது முகத்தை கோரமாகவே காட்டுகிறது.
கவிதை
என்பது கவர்ச்சியான, ஆடம்பரமான சொற்களால் உருவாக்கப்படுவது அல்ல. காட்சிகளால் நிரப்பப்டுவது
கவிதை. இதை அறிக்கை தயாரிக்கும் மொழியால், கோசங்கள் எழுதும் மொழியால் எழுத
முடியாது. மனதின் மொழியால் அனுபவத்தின் மொழியால், எழுதப்படுவது கவிதை. கவிதைபோன்ற
தோற்றம் கொண்ட உரைநடை அல்ல கவிதை. வாசகனின் மனதில் வலியை உண்டாக்க, எழுதப்படுவது கவிதை. முந்தானை சோளம் அதை சரியாக செய்திருக்கிறது.
இழப்பதின்
வழியே பெற முடியும். கொடுப்பதின் வழியே ஈட்டமுடியும். அன்பு கொடுப்பதும் பெறுவதும்.
ஒரு நிலையில் கொடுப்பதும் அல்ல பெறுவதும் அல்ல. அறிவது, உணர்வது, வாழ்வது. சக்தி
ஜோதியின் எல்லாக் கவிதைகளுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். இந்த
ரகசியத்தைக் காட்டவே ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு
கவிதையும் முயல்கின்றன.
சொற்கள்
என்பது தானியம் மட்டுமல்ல. விதைகளும்தான். பதரான, பதராகப்
போகும் சொற்களை சக்தி ஜோதி உருவாக்கவில்லை. அதற்கான காரணம் நிகழ்கால
கூச்சல்களிலிருந்து அவர் விலகி இருப்பதுதான்.
சொல் எனும் தானியம்
(கவிதை தொகுப்பு)
சக்தி ஜோதி.
சந்தியா பதிப்பகம்,
புதிய எண் 77, 53வது தெரு,
9வது அவன்யு,
அசோக்நகர் – சென்னை – 83.
விலை – ரூ.100
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக