செவ்வாய், 8 ஜனவரி, 2019

பிரபஞ்சன் என்ற எழுத்தாளுமை - இமையம்



1985ல் ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் வழியே பிரபஞ்சன் என்ற எழுத்தாளரை நான் அறிந்தேன். 1985லிருந்து 2013 ஜனவரி தீராநதியில் வெளிவந்திருக்கிற ‘உயிர் எழுத்தும் உடல் எழுத்தும்’ என்ற கட்டுரைவரை நான் படித்திருக்கிறேன். ‘விட்டு விடுதலையாகி’ என்ற தொகுப்போடு மொத்தம் பனிரெண்டு சிறுகதை தொகுப்புகள், பத்து தொடர்கதைகள், நான்கு நாவல்கள், நாடகம் ஒன்று, கட்டுரை தொகுப்பு ஒன்று என்று பிரபஞ்சனின் எழுத்து இயக்கம் தொடர்கிறது. ‘தீயிலே வளர்சோதி’ என்ற குறுநாவல், ‘சந்தியா’, ‘காகித மனிதர்கள்’, ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய நாவல்களை நான் விரும்பி படித்திருக்கிறேன். 1985 முதல் 2013 வரை நான் பிரபஞ்சனுடைய வாசகனாக இருந்திருக்கிறேன். இருபத்தியெட்டு ஆண்டுகள் ஒரு வாசகனை தன் எழுத்துக்களை பின்தொடர்ந்து வரச் செய்வது தேர்ந்த எழுத்தாளனுக்கு மட்டுமே சாத்தியம்.

என் வாசிப்பின் வழியாக நான் பிரபஞ்சனின் எழுத்து இயக்கத்தை சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், பேச்சு என்று ஐந்து வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்து வழியாகவும் பிரபஞ்சன் தன்னை ஓயாமல் வெளிப்படுத்திகொண்டே இருக்கிறார் என்பதைவிட நிலை நிறுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபஞ்சனின் எழுத்து இயக்கத்தில் இடைவெளி, தேய்வு என்பது இதுவரை நிகழவில்லை. இன்றும் அவரும் சரி, அவருடைய எழுத்தும் சரி செயலூக்கம் மிக்கதாகவே இருக்கின்றன. ஒரு கலை ஆளுமையின் ஆகச் சிறந்த பலம் – ஆற்றல் இதுதான். எழுதுவதில் சலிப்புற்றார் என்பதற்கான தடயம் எதுவுமில்லை. “வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன்” என்று பிரபஞ்சன் சொல்கிறார். நாற்பதாண்டுகளாக எழுத்தின் வழியே பேசிய பேச்சுகள்தான்- அவருடைய எழுத்துக்கள். என்ன பேசியிருக்கிறார், எப்படி பேசியிருக்கிறார், யாருக்காக பேசியிருக்கிறார் என்பதை வைத்துதான் பிரபஞ்சனின் எழுத்தின் தரம் நிர்ணயமாகிறது.
பிரபஞ்சன் எந்த வடிவத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலும் அல்லது எந்த வடிவத்தின் வழியாக உலகை காணவும், பதிவு செய்ய விரும்பினாலும் அவருடைய குரல் ஒடுக்கப்பட்டோருக்கானதாக, விளிம்பு நிலை மக்களுக்கானதாக, பெண்களுக்கானதாகவே இருக்கிறது. இதில் எந்த காலக்கட்டத்திலும் அவர் சமரசம் செய்துகொண்டார் என்பதற்கான சாட்சியம் எழுத்தின் வழியே இல்லை. யதார்த்த வாழ்க்கை சமரசங்களால் நிறைந்ததுதான். ஒரு நிஜமான கலைஞன் படைப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுப்பதில்லை என்பதைத்தான் பிரபஞ்சனுடைய எழுத்துக்கள் காட்டுகின்றன. கலைஞனும் சரி, கலைப்படைப்பும் சரி சமரசம் செய்துகொள்ளாத பட்சத்தில்தான் உண்மையான மதிப்பை பெறுகிறது. சமரசம் செய்துகொள்ளாதது மட்டுமல்ல, படைப்பு, விமர்சனம், பேச்சு எதிலுமே பிறருடைய சாயல் தன்மேல் படராமல் இதுவரை இயங்கியிருப்பதுதான் இன்றும் பிரபஞ்சன் மீதான மதிப்பை தகர்த்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
பிரபஞ்சனுடைய எழுத்துக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது-மனிதர்கள் மீதான சமூகத்தின் மீதான அன்புதான்-பெரும் கருணைதான். இதை அவரே கருணையினால்தான் – என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார். கேசவன் என்ற இளைஞன் தன் காதலி சுமதி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவனை கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறான். கேசவன் ஒரு கொலைதான் செய்கிறான். ஆனால் காவல்துறை பல கொலைகளையும், சமூக விரோத செயல்களையும், தீவிரவாத இயக்கங்கள் செய்த அத்தனை குற்றங்களையும் அவன் மீது சுமத்துகிறது. நக்சலைட்- என்ற முத்திரையும் குத்தப்படுகிறது. காவல்துறை ஓயாமல் தேடுகிறது. தலைமறைவு வாழ்க்கை யதார்த்தத்தை மட்டுமல்ல பல உண்மைகளையும், வாழ்வின் கொடூரத்தையும் கேசவனுக்கு உணரச் செய்கிறது. மனம் தரும் துன்பத்திலிருந்து விடுபட வேறு வழியின்றி காவல்துறையில் சரணடைய விரும்புகிறான். காவல்துறை கேசவனை கைது செய்கிறது. தலைமறைவான ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான குற்றங்கள் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குற்றத்திற்காகவும் விசாரணை. எவ்வளவு காலத்திற்கு நடக்கும்? எதுவும் தெரியாது. விசாரணை என்ற பெயரில் நடக்கவிருக்கும் கொடூரமான கேள்விகள், சித்ரவதைகள், அதிலிருந்து அந்த இளைஞனால் மீள முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. அந்த இளைஞனுக்கு உதவ வேண்டும் என்று தேவா-என்ற ஆய்வாளர் நினைக்கிறார். எப்படி உதவுவது? பல மாதங்கள், பல ஆண்டுகள் அனுபவித்தும் தீராத வாதையிலிருந்து விடுவித்துவிடுகிறார். சரணடைய வந்தவனை தப்பிக்க முயன்றதாக சுட்டுக் கொன்றுவிடுகிறார். கேசவன் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைந்துவிடுகிறான். சுட்டுக் கொன்ற தேவாவுக்கத்தான் துயரம். தேவா-என்ற ஆய்வாளர் வேறு யாருமல்ல-பிரபஞ்சன்தான்.
மனித மனம், மனித உடல் படுகிற அவஸ்தையை, துன்பத்தை தாங்க முடியாமல் தத்தளிக்கிற மனம் கொண்டவனே கலைஞனாக, படைப்பாளியாக இருக்க முடியும். பிரபஞ்சனிடம் இருக்கும் பெரும் கருணைதான் கேசவனை சுட்டுக் கொல்ல வைக்கிறது. இந்த அன்புதான், இந்த கருணைதான் பிரபஞ்சனின் எழுத்து, எழுத்துக்கான ஊற்றுக்கண். கற்பனையும் வாழ்க்கையும், படைப்பும் யதார்த்தமும் வேறுவேறாக பிரபஞ்சனின் எழுத்துக்களில் இருப்பதில்லை. படைப்பாளி தனக்கு மட்டுமல்ல, தனது படைப்புக்கு மட்டுமல்ல, தான் வாழ்கிற சமூகத்திற்கும் நேர்மையானவனாக இருக்கிறான். நிஜமான கலைஞன் தான் வாழ்கிற சமூகத்தோடு குறுக்கீடு செய்கிறான். ஒவ்வாமை குறித்து கேள்வி எழுப்புகிறான். குறுக்கீடு செய்வதும், கேள்வி எழுப்புவதும், விமர்சனம் செய்வதும்-சுய லாபத்திற்காக அல்ல. சமூக மேம்பாட்டிற்காக, மனித குல மேம்பாட்டிற்காக. எழுத்தாளன்தான் இதை செய்ய முடியும். பிரபஞ்சனும் அதைத்தான் செய்திருக்கிறார்.
பிரபஞ்சனின் எழுத்தின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக ‘ஒரு மனிதனைப் பற்றிய வெள்ளை அறிக்கை’ என்ற கதையில் நாம் அறிய முடியும். அக்கதையில் வரும் ஒரு உரையாடல்:
“எதன் மீது யாரை எதிர்த்து உங்கள் யுத்த சன்னம்” என்று கேட்டேன்.
“உங்களையும், உங்கள் அறங்கள், சட்டங்கள், நீதிகள், விழுமியங்கள் அனைத்தையும் எதிர்த்து.” இதுதான் பிரபஞ்சனுடைய எழுத்தாக, எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. இப்படி ‘ஒரு மனுஷி’ ‘அப்பாவின் வேஷ்டி’, ‘பாதுகை’, ‘பிரம்மம்’ ஆகிய சிறுகதைகளிலும் சமூகம் குறித்த விமர்சனம், எள்ளல் இயற்கையாக அமைந்திருப்பதைக் காண முடியும். மரி என்கிற ஆட்டுக்குட்டி என்கின்ற சிறுகதையில் அற்புதமரி என்கிற சிறுமி பள்ளியைவிட்டு நீக்கப்படுகிற விஷயத்தை காட்சிப்பூர்வமாக நிகழ்த்திக்காட்டியிருப்பதை பார்க்க முடியும். அற்புத மரி ஏழை மட்டுமல்ல, எளிய குடும்பத்தைச் சார்ந்தவள். இதையே காரணமாக வைத்து அவள் பள்ளியைவிட்டு நீக்கப்படுகிறாள். அவள் நீக்கப்பட்டது ஜாதியோடு பொருளாதாரத்தோடு தொடர்புடையதாக மட்டுமல்ல, இன்றைய நிலையிலும்கூட அனைவரும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதை மரி என்கிற ஆட்டுக்குட்டி-கதையின் வழியே ஜாதிய வேர்கள், மத துவேஷங்கள் நம்முடைய சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறார். இதுதான் பிரபஞ்சனுடைய எழுத்தின் நோக்கம்-அதிகாரம் என்பது பிறரை வஞ்சிப்பதற்காக, மேலாதிக்கம் செய்வதற்காக என்பதை சமூக நியதியாக ஏற்க முடியாது என்பதை இக்கதையின் வழியே சொல்கிறார்.
நமக்கு முன் ஒரு சமூகம் இருந்தது. அந்த சமூகத்திற்கென்று அறநெறிகளும் இருந்தன. முந்தைய சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு சிந்தித்தார்கள், எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் வாழ்க்கை அறமாகக்கொண்ட பண்புகள் என்ன, அவர்களுடைய வாழ்வியக்கம் என்பது எதை நோக்கியதாக இருந்தது என்பதை வாழ்வினூடாக அறிவதும் வரலாறுதான். வெறும் புள்ளி விபரங்கள் மட்டுமே வரலாறு அல்ல. ஒரு கலைஞனுக்கும், ஒரு வரலாற்று ஆசிரியனுக்குமான வேறுபாடு இதுதான். எல்லாவற்றையும் வாழ்க்கையாக பார்ப்பவன் கலைஞன். வெறும் தகவலாக, புள்ளி விபரமாக பார்ப்பவன் வரலாற்று ஆசிரியன். பிரபஞ்சன் கலைஞன் என்பதை ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’-ஆகிய நாவல்கள் நிரூபித்து காட்டுகின்றன. இந்த இரண்டு நாவல்களிலும் வீர சாகசங்கள் இல்லை. அந்தப்புர லீலைகள் இல்லை. ஏழு கடல், ஏழு கோட்டை தாண்டி இருக்கும் இளவரசியை தூக்கிகொண்டு வரவில்லை. கற்பனையான சம்பவங்கள் என்று எதுவுமில்லை. நடக்காத ஒன்றை, நடக்க முடியாத ஒன்றை நடந்ததாக இட்டு கட்டவில்லை. பொய்மைகள் ஏதுமில்லை. புனைவு இருக்கிறது. இட்டு கட்டிய கற்பனை இல்லை. நமக்கு ஒரு தலைமுறைக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் நாவலாகி இருக்கிறது. அந்த வாழ்க்கையின் சகலவிதமான நிறைகுறைகளோடும், அச்சமூகம் பின்பற்றிய பண்பாடு, கலாச்சாரம், மரபு, அந்நியர்கலப்பு, ஆதிக்கம் போன்ற சமூக இயக்கத்தை ஆடம்பரமில்லாத நடையில் எழுதியிருக்கிறார். மானுடம் வெல்லும், வானம் வசப்படும்-ஆகிய இரண்டு நாவல்களிலுமே பெண் பாத்திரங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. “கோகிலா… நம்ம வாழ்க்கையே இருட்டு வாழ்க்கைதான். இருட்டியதுக்குப் பின்னால்தான் ஆம்பளைகளுக்கு நம் ஞாபகம் வரும். இருட்டு வானத்திலேதான் நட்சத்திரங்களுக்கு மரியாதை. சூரியன் வந்த பிறகு நட்சத்திரம் வெளுத்துத்தானே போகும்” என்று கோகிலாவின் தாய் கூறுகிறாள். கோகிலா, குருசு, சின்னாள்-வழியாக தேவதாசி முறை குறித்தும், தேவதாசிகளின் மனநிலை குறித்தும்-தெளிவாக எழுதுகிறார். இதே மாதிரி வானம் வசப்படும்-நாவலிலும் ‘அல்லிப்பூ வயிற்றில் அவரைக்காய் காய்ச்சதுபோல நீ எங்கிருந்தடி எனக்கு மகளாக வந்து வாய்த்தாய்? தாசி வீட்டுப் பெண்களுக்கு நிறம் மட்டமாய் இருக்கலாம். திறம் மட்டாய் இருக்கலாமோ? மற்ற ஜாதிப் பெண்களுக்கெல்லாம் கண்கள் என்பது காண மட்டும்தான். நமக்கு அவை அம்புகள் அல்லவா?” என்று சம்பூர்ணா தன் மகளுக்கு தாசி குலத்து பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறாள். இரண்டு நாவல்களிலுமே தாசிகளுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. சமூகத்தின் இழிவுகளை எழுதுவதில் பிரபஞ்சன் முன்வரிசையில் நிற்பவர். வானம் வசப்படும், மானுடம் வெல்லும் ஆகிய இரண்டும் நாவல்களிலும் மொழியில், வெளிப்பாட்டில் சோதனைகளை செய்திருக்கிறார். அவருடைய எழுத்தில் அரியகுணமாக இருப்பது எள்ளல், எளிமை. கடினமாக எழுதுவதைவிட எளிமையாக எழுதுவதுதான் சிரமமானது. மதிப்பு வாய்ந்தது.
ஒரு எழுத்தாளனாக பிரபஞ்சனுக்கு சமூகத்தின் பெரிய நிகழ்வுகளிலிருந்து சிறிய நிகழ்வுகள் வரை எல்லாவற்றின் மீதும் கேள்விகள் இருக்கின்றன. முரண்பாடுகள் இருக்கின்றன. முரண்பாடுகளை ஆராய்வதுதான் அவருடைய கதைகள். பொதுவாக அவருடைய அக்கறைகள் பெண்கள் மீதும் குழந்தைகள்மீதும் கூடுதலாக இருக்கிறது. அதற்கு நல்ல உதாரணமாக இருப்பது ‘பானு உன்னுடைய புத்தக பை அண்ணனிடம் இருக்கிறது’ என்ற கதை. கதையில் கதை சொல்லி, பானு, மூர்த்தி ஆகியோர் வருகிறார்கள். வீட்டில் குழந்தைகள் விளையாடுகின்றன. குழந்தைகள்-குழந்தைகளுக்குரிய தன்மையோடு விளையாடுகிறார்கள். குழந்தைகள் இயந்திரங்களோடும், இயந்திரங்களின் வழியாகவும் விளையாடாத காலத்தில் நடக்கிறது கதை. கதையின் மையம் இன்று குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள், எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான். வன்முறையை விரும்புகிற, வன்முறையை பிரயோகப்படுத்துகிற குழந்தைகளாக எது மாற்றியது? நம்முடைய இன்றைய குழந்தைகளின் மனதிலும் மூளையிலும் காட்சி ஊடகங்களின் விளம்ரபங்களும், நகைச்சுவை துணுக்குகளுமே நிறைந்திருக்கின்றன. நம்முடைய குழந்தைகள் தொலைக்காட்சியையும், கணினியை மட்டுமே பார்த்து வளர்கிறார்கள். ஆரோக்கியமான சமூகத்திற்கு இது ஏற்ற செயல் அல்ல என்பது பிரபஞ்சனுடைய கவலை. மோசமாக வளர்கிற குழந்தைகளுக்கிடையிலும் எப்படி பாலீன வேறுபாடும், உயர்வு தாழ்வும் உண்டாகிறது என்பது வியக்க வைக்கிறது. அந்த வியப்பால் எழுதுகிறார். “அப்பாவுக்கும் பெண் இல்லை. எனக்கும் பெண் இல்லை. என்னுடைய மருமகள்களே என் பெண்கள். இரண்டுக்கும் வித்தியாசமென்ன?” இதற்கு சமூகம்தான் பதில் சொல்ல வேண்டும். வேறுபாடுகள் வித்தியாசங்கள் இருப்பதால்தான் கேள்விகள் எழுகின்றன.
எழுத்தாளன் என்பவன் காலத்தில் வாழ்கிறவன். அவன் வாழ்கிற காலத்தில் நிகழ்கிற நிகழ்வுகளுக்கு எதிரக குரலெழுப்புகிறவன். சோரம்போன எழுத்தாளர்கள் மட்டுமே நிர்வாகத்திற்கு, அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு பிரச்சனைகளை சந்திக்காமல் நழுவிப்போவார்கள். ஆனால் நிஜமான எழுத்தாளன், அதிகாரத்திற்கு எதிரானவன். அடக்கு முறைகளுக்கு எதிரானவன் என்பதை பிரபஞ்சனுடைய ‘நீரதன் புதல்வர்’ என்கிற கதை நிரூபிக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் மிசா காலத்தில் நடந்த நிகழ்வுகளை படம் பிடிக்கிறது கதை. அதிகார மையங்கள் எப்போதுமே சகிப்புத்தன்மையற்றதாகவே இருக்கிறது. முக்கல், முணகல், வேகமாக மூச்சு விடுவதைக்கூட அது அனுமதிப்பதில்லை. அதனால்தான் மிசா காலத்தில் எளிய மனிதர்கள்கூட தண்டனை பெறுகிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம், கொடூரமான காலத்தில் உயிருடன் இருந்ததுதான். இதைத்தான் ‘நீரதன் புதல்வர்’- கதையின் வழியாக, பாலு, மூர்த்தி, நாராயணசாமி காவலர் ஆகிய பாத்திரங்களின் வழியே பிரபஞ்சன் நிகழ்த்திக்காட்ட விரும்புகிறார். வாழ்தலுக்கான நெருக்கடிகள் கூடும்போது சராசரி மனிதனாக சமூகத்தில் நடக்கிற அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கிற ஒரு மனிதனாக, வேடிக்கைப் பார்த்ததை உடனே மறந்துவிட்டு தன்னுடையக் காரியத்தில் மூழ்கிப்போகிற மனிதனாக எழுத்தாளன் இருப்பதில்லை என்பதைத்தான் ‘நீரதன் புதல்வன்’ கதை வாசகனுக்கு சொல்கிற செய்தி. எழுத்து என்பது எழுதுதல் என்கிற செயல்பாடு அடிப்படையில் அதிகாரத்திற்கு எதிரானதுதான்.
பிரபஞ்சனுடைய நாவல்களில், சிறுகதைகளில் வரக்கூடிய மனிதர்கள் வாழ துடிப்பவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் மீது சிறுசிறு புகார்கள் உண்டு. குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் வாழ்வின் மீது ஆழ்ந்த வெறுப்போ கசப்போ கிடையாது. வாழ்வினூடாக, வாழ்வை எதிர்கொள்வதினூடாகத்தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறவர்கள். இந்த இடத்தில்தான் பிரபஞ்சன் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து சற்று வேறுபட்டவராக, மாறுபட்டவராக இருக்கிறார். எழுத்தாளன் வாழ்வின் மீது நம்பிக்கைக் கொள்வதற்கான காரணீகளை தேடி தருபவனாக இருக்க வேண்டும். அவநம்பிக்கைகளை அல்ல.
தமிழ்ச் சூழலில் சிறு பத்திரிகை, பதிப்பகம் என்பது அறிவு சார்ந்த, மொழி, கலாச்சார பண்பாடு சார்ந்த செயல்பாடு என்கிற நிலைமாறி அதிகாரத்தை நோக்கிய பயணமாக, அதிகார பீடமாவதற்கான செயல்பாடுகளாக, கார்பரேட் நிறுவனங்களாக மாறுவதற்கான காரியங்களாக இருக்கின்றன. ஜனநாயகம் வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், சிறிதும் ஜனநாயகத்தன்மையை மதிக்காதவர்களாக, அதிகார பீடங்களுக்கு எதிராக, கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக எழுத வந்தவர்கள், ஓங்கி குரல் கொடுத்தவர்களில் பலர் இன்று அதிகார பீடமாகவும், கார்பரேட் நிறுவனமாகவும் மாறிவிட்டார்கள். அதாவது புனிதர்களும் புழுகுக்குட்டையும். பிரபஞ்சன் இதுவரை சிறு பத்திரிகை எதையும் தொடங்கவில்லை. பதிப்பகம் எதையும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு செயல்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. ஆனால் தான் ஒரு எழுத்தாளன். எழுதுவது மட்டுமே தன்னுடைய வேலை என்று இன்றுவரை செயல்பட்டிருப்பது வியப்பானதுதான். தமிழ் சூழலில் ஒரு எழுத்தாளனாக மட்டுமே இயங்குவது என்பது எளியக் காரியமல்ல. கடந்த நாற்பதாண்டுகாலமாக தமிழ் இலக்கிய வரலாற்றோடு இணைந்தே வளர்ந்தவர், வாழ்ந்தவர் பிரபஞ்சன். எவ்வளவு புறக்கணிப்புகள், எவ்வளவு உதாசீனங்கள் நிகழ்ந்திருக்கும்? எல்லாவிதமான புறக்கணிப்புகளையும் மீறி இலக்கியம், பண்பாடு, அரசியல் பேச்சுகள் என்று பல துறைகளிலும் இன்றுவரை செயலூக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணம்-அவருடைய மூளை எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் செயல்படாதது மட்டுமல்ல, அவருடைய மூளை கோட்பாடுகளால் நிறைந்ததல்ல என்பதால்தான். பொய்மைகளையும், கீழ்மைகளையும், ஜோடனைகளையும் தவிர்த்த எழுத்து, வாழ்வை முன்னிறுத்திய எழுத்து பிரபஞ்சனுடையது. “அரசாங்க அலுவல் எனப்பட்ட பொய், வஞ்சம், துரோகம் முதலான சகல கீழ்மைகளையும் கழுவிக் களைபவர் போல்’ என்று மானுடம் வெல்லும் நாவலில் வருகிறது. பொய், வஞ்சகம், கீழ்மை குணங்களுக்கு எதிரானவனே-எழுத்தாளன்-கலைஞன் என்பவன். பிரபஞ்சன் ஒரு கலைஞன் என்பதற்கு அவருடைய எழுத்துக்களே சாட்சி.
பிரபஞ்சனுடைய எழுத்துக்களை ஒரு சேர படிக்கும்போது தெரிவது-ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கை நெறி. பிரபஞ்சனுக்கு எழுதுவதும் படிப்பதும்தான் வாழ்க்கை நெறி. அவர் சமூகத்தில் சில விதைகளை தூவ முயல்கிறார். சொற்கள் என்ற விதைகளை. இந்த விதைகள்தான் பிரபஞ்சனுடைய எழுத்துக்கள். கட்டாந்தரையிலும் முளைக்கும் ஆற்றலுள்ள வீரிய விதைகள்.
உயிர்மை ஜனவரி 2019

போலிகளை அடையாளம் காட்டும் கதைகள் - இமையம்


போலிகளை அடையாளம் காட்டும் கதைகள் - இமையம்
       மா.சண்முகசிவா சிறுகதைகள் என்ற நூலில் எட்டுக்கதைகள் இருக்கின்றன. மலேசியா குறித்த நம்முடைய கற்பனைகளை, யூகங்களை பொய்யாக்கி, மலேசியாவில் இருக்கும் இரட்டை கோபுரத்தின் ஒளிரும் மின்விளக்குகளுக்குப் பின்னால் இருக்கும் இருட்டையும், இருட்டில் வாழ்கிற மனிதர்களின் வாழ்வையும் ஜோடனைகள் இல்லாமல் சித்தரித்துக்காட்டுகின்றன எட்டுக்கதைகளும்.
       மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் அதிகம் இடம் பிடிப்பவர்கள் குழந்தைகள். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள், கர்ப்பம் என்றால் என்னவென்றே தெரியாத வயதிலேயே கர்ப்பமாகும் குழந்தைகள், தவறான உறவில் பிறக்கும் குழந்தைகள், குடும்ப, சமூக வன்முறையால் மனப்பிறழ்வுக்கு ஆளாகும் குழந்தைகள். தனக்கும், தன்னைச்சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் நோயால் வதங்கிப்போய் கிடக்கும் குழந்தைகள், கேங் லீடர் ஆகும் குழந்தைகள், இவர்கள் கதை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் அல்ல. நம்முடனும், நம்மைச்சுற்றியும் வாழ்கிற குழந்தைகள்.
       மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் இரண்டாவதாக இடம் பிடிப்பவர்கள் பெண்கள். பெண்ணின் மனம், உடல், சிந்தனை, புழங்குவெளி, குறித்து மதங்கள், இலக்கியங்கள், சமூகநம்பிக்கைகள் கட்டமைத்து வைத்திருக்கும் எல்லாப் புனிதங்களையும் தன்னுடைய கதாபாத்திரங்களின் அன்றாட செயல்பாடுகளின் மூலம் பொய்யென நிரூபித்துவிடுகிறார் கதாசிரியர். கல்யாணமாகாமலேயே லாரி கிளினரோடு ஓடிப்போய் கைக்குழந்தையுடன் திரும்பும்பெண், இரண்டாவது கணவனோடு வாழ்கிற, கஞ்சா விற்ற வழக்கில் சிறைக்குச் செல்கிற பெண், கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறு ஒரு ஆணோடு ஓடிப்போகிற பெண், மகள் பார்த்திருக்கவே தோட்டத்து மேலாளருடன் உறவுகொள்ளும் பெண், வயதானபிறகு பழைய காதலனை தேடிச்செல்லும் பெண் - இவர்கள் குடும்பமும், சமூகமும் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒழுக்க பண்புகளை மீற வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல. அந்தந்த கணங்களில் உயிர் வாழ்வதற்கு எது தேவையோ, அதை மட்டுமே செய்து வாழ்கிறவர்கள். நிஜத்தில் மனிதர்களால் இப்படித்தான் வாழமுடிகிறது. இருத்தல் என்பது வேறு. வாழ்தல் என்பது வேறு. ஆண்கள் எப்படி இருக்கிறார்கள்? மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிப்போகிறவர்களாக, சிறுகுழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்துகிறவர்களாக, கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுகிறவர்களாகவே இருக்கிறார்கள். பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஆண்கள், குழந்தைகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? காரண காரியம் தேட முடியாது. வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது. இருக்கிறது. வாழ்க்கை அமையும்விதமாக வாழ்கிறார்கள். அதை விளக்க முடியாது. கேள்வி, காரணம் கேட்க முடியாது.
       ‘எல்லாம் சரி’ கதையில் வரும் நாகராஜ், மலேசியாவில் பெரிய கேங் லீடர். அரசியல் தலைவர் ஒருவருக்கு பாதுகாப்புப்படை தளபதியாக இருப்பவன். ஒரு விபத்தில் நாகராஜீக்கு ஆண்தன்மை போய்விடுகிறது. விஷயம் தெரிந்தாலும் திருமணம் செய்துகொள்கிறான். பத்தாண்டுகளுக்கு பிறகு அவனுடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை யார் மூலம் பிறந்தது என்று கேட்கவில்லை. மனைவியை கொலை செய்யவில்லை. அடித்து துன்புறுத்தவில்லை. தன்மனைவிக்கு கள்ள உறவின் மூலம் பிறந்த குழந்தையிடமும் அவனுக்கு வெறுப்போ கசப்போ இல்லை. அந்த குழந்தையை காப்பாற்றத்தான் பலர் சூழ்ந்திருக்க மலேசியாவின் பெரிய கேங் லீடர் கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல் மருத்துவரின் காலில் விழுந்து கெஞ்சுகிறான். நாகராஜ் எதற்காக கெஞ்சுகிறான் என்ற புள்ளியை தொடுவதற்குத்தான் எல்லா மதங்களும் பேசுகின்றன. இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற ஒவ்வொரு சொல்லும் கலைகளும் முயல்கின்றன. அது மட்டும் இதுவரை சாத்தியமாகவில்லை என்பதுதான் நிஜம். மா.சண்முகசிவா, அன்பாக இருங்கள் என்று போதிக்கவில்லை. அன்பாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்தவில்லை. அன்பாக இருக்கிற ஒரு ஆளை காட்டித்தருகிறார். அவ்வளவுதான். நாகராஜீன் மனநிலையை பெறுவது எப்படி? மனிதகுலம் அதைத் தேடிக்கொண்டுதான் இன்றுவரை அலைந்துகொண்டிருக்கிறது. தத்துவநோக்குடன், இலக்கிய, அரசியல், சமூகவியல், மத, சாதி, இன நோக்கோடு எழுதப்படுவதல்ல இலக்கியம். எது நிஜமோ அதை எழுதுவது.
       தொகுப்பில் அரசியல் கதையாகவும், ஆகச்சிறந்த கதையாகவும் இருப்பது ‘சாமிகுத்தம்’. கிராமத்தின் சாலையோரமாக இருக்கிற முனியாண்டி சாமியின் மதில்சுவரை குப்பை லாரி ஒன்று இடித்துவிடுகிறது. செய்தி ஒருபையன் மூலம் நிருபருக்கு வருகிறது. விஷயத்தை பணமாக்கவும், அரசியலாக்கவும் நிருபர் விரும்புகிறார். செய்தியாக்குகிறார். அடுத்தடுத்த நிலைகளில் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் விஷயத்தை, நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல, சுனாமி வந்ததுபோல செய்தியாக்கிவிடுகின்றன. ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் பகையை உண்டாக்கி சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. மதில் சுவர் பிரச்சனை மதப்பிரச்சனையாக, இனப் பிரச்சனையாக அரசியல் பிரச்சனையாக, உருவெடுக்கவே, நிலைமையை சமாளிக்க அரசாங்கமே இடிந்த மதில்சுவரை அல்ல. கோவில்கட்டுவதற்கு பல ஏக்கர் நிலத்தையும், அதிகப்படியான பணத்தையும் ஒதுக்குகிறது. மத நிறுவனங்களும், அமைப்புகளும் கோயில்கட்டுவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு பணத்தை தருகின்றன. புதிய கோவில் கட்டப்படுகிறது. முனியாண்டிசாமி, முனிஸ்வரசாமியாகி, பிறகு ஈசுவரசாமியாக்கப்படுகிறது. புதிய சிலை வைக்கப்படுகிறது. முன்பு மூலசாமியாக இருந்த முனியாண்டி இப்போது காவல் தெய்வமாக வெளியே நிறுத்தப்படுகிறது. முன்பு முனியாண்டிசாமியின் பூசாரியாக இருந்தவர் இப்போது துப்புரவு தொழிலாளியாக்கப்படுகிறார். கோவிலில் பூஜை நடத்த சிவாச்சாரியார்கள் நியமிக்கப்படுகிறார்கள். முன்பு சுருட்டு, பீடி, கள், சாராயம் என்று குடித்துக்கொண்டிருந்த சாமி, கோழி, ஆடு, பன்றி என்று பலிகேட்டுக் கொண்டிருந்தசாமி, இப்போது வெண்பொங்கலும் நெய்யும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான் கதை. எப்போதோ நடந்த கதை அல்ல. இப்போது நடந்துகொண்டிருக்கும் கதை. வளர்ந்த நாடான மலேசியாவில்.
       தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறு தெய்வங்கள் பெரும் தெய்வங்களாக மாற்றப்பட்டது, சிறுதெய்வ வழிபாடு முறை ஒழிக்கப்பட்டு, பெருந்தெய்வ வழிபாட்டுமுறை புகுத்தப்பட்டது. அசைவ சாமிகள் சைவ சாமிகளாக மாற்றப்பட்டது, பூசாரிகளுக்குப் பதிலாக, குருக்கள் நிமியமிக்கப்பட்டது, அந்தந்த நிலப்பரப்பிற்கான கலாச்சார செயல்பாடுகள் அழிக்கப்பட்டு பிறருடைய கலாச்சார செயல்பாடுகள் எவ்வாறு நிலை நிறுத்தப்பட்டது. முன்பு அல்ல. இன்றும் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகிறது என்பதுதான் கதை
கலாச்சார மேலாதிக்கம் எதையெல்லாம் அழிக்கும், எதையெல்லாம் புகுத்தும் என்பதை பிரச்சாரமில்லாமல் இலக்கிய அழகியலோடு எழுதப்பட்டிருக்கிறது சாமிகுத்தம் கதை.
       சிறுகதையை எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுதிருக்கிறார். கதையில் எதை எழுதவேண்டுமோ அதை மட்டுமே எழுதியிருக்கிறார். அதனால் மா.சண்முகசிவாவை நல்ல சிறுகதையாசிரியர் என்று சொல்லலாம். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் வழியாக மலேசிய சமூக வாழ்வையும், அரசியலையும் நிச்சயமாக புரிந்துகொள்ளமுடியும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சிறப்பு நம்மிடம் இருக்கும் உண்மைகளை அல்ல, பொய்களை நமக்கே காட்டி தருவதுதான்.
1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது. சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார். கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை.
மா.சண்முகசிவா சிறுகதைகள்
மா.சண்முகசிவா
வல்லினம் பதிப்பகம்
மலேசியா
9042461472
புதிய தலைமுறை ஜனவரி 03 2019

ஒளிரும் பெண்கள் – மிளிரும் பெண்கள் – இருட்டில் இருக்கும் பெண்கள்? – இமையம்



       நவீன சமூக பொது வெளியில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் புழங்குவதற்கும், செயல்படுவதற்குமான வாய்ப்பை உலகமயமும், தாராளமயமும் ஏற்ப்படுத்திதந்திருக்கிறது. “பொம்பள பிள்ள படிச்சி என்ன செய்யப் போவுது?” என்று கேட்ட காலம், “பொம்பள பிள்ளைக்குச் சமைக்க தெரிஞ்சா போதும்” என்று சொன்ன காலம், “பொட்ட கோழி கூவியா விடியப் போவுது” என்று கிண்டலடித்த காலமும் மலையேறிவிட்டன. இன்றைய நிலையில் எங்கும் பெண்கள், எதிலும் பெண்கள் என்ற நிலைதான். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் கடந்த இருபதாண்டுகளாக பெண் பிள்ளைகள்தான் அதிக தேர்ச்சி சதவிகிதமும்; அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். இன்று பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்கிற ஒரு பெற்றோரை நம்மால் காட்ட முடியாது. “பொம்பள பிள்ளங்கதான் நல்லா படிக்குதுங்க” என்று பெற்றோர்களும், சமூகமும் கொண்டாடுகிற நிலைதான் இருக்கிறது. மாநில, மத்திய அரசுகள் நடத்துகிற தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் பெண்கள்தான் தேர்வாகின்றனர்.

        ”பொம்பள பிள்ள அதிகமாக படிச்சியிருந்தா மதிக்காது” என்று சொன்ன, ”பொம்பள பிள்ள வேலக்கிப் போனா மதிக்காது. நடத்த சரியிருக்காது” என்று சொன்ன பேச்சுகள் இன்று அர்த்தமிழந்துவிட்டன. “சொத்து இருக்கு. வசதி இருக்கு. வேலைக்கு அனுப்ப மாட்டேன்” என்று எந்த ஒரு பெற்றோரும், எந்த கணவரும் சொல்வதில்லை. அப்படி யாராவது இன்று சொன்னால் அவர்கள் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ”ஒரு சம்பளத்த  வச்சிக்கிட்டு குடும்பத்த ஓட்ட முடியாது” என்றும் “ஒருத்தர் சம்பார்த்தனையில வாழ முடியாது” என்றும் சொல்கிற காலம் இது. பழமை வாய்ந்த சமூக மதிப்பீடுகள், பழக்கவழக்கங்கள் இன்று அர்த்தம் இழந்துவிட்டன. பெண்கள் குறித்த புனைவுகள், கற்பனைகள் எல்லாம் மரித்துவிட்டன. இது நவீன அறிவியல் தொழிநுட்ப யுகம். பெண்கள் யுகம்.

        1990-2000ம் வரையிலான காலக்கட்டத்தில்கூட பெண்களை வாசலில் நிற்கக் கூடாது, திண்ணையில் உட்காரக் கூடாது, நாற்காலியில் உட்காரக் கூடாது. பெண்கள் தனியாக வெளியூர் போகக் கூடாது என்ற நிலைதான் இருந்தது. இரவில் பயணம் செய்யக் கூடிய பெண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். விடுதியில் தங்கி படிக்கவைக்கக்கூட தயங்கியக் காலம். ஆனால் இன்று நிலைமை வேறு. பேருந்தில், ரயலில், விமானத்தில் என்று பெண்கள் இரவு, பகல் என்றில்லாமல் பிரயாணம் செய்கிறார்கள். தனியாக வெளி நாடு செல்கிற, வெளிநாடுகளில் பணி செய்கிற பெண்களும் பெருகிவிட்டனர். எல்லாம் இயல்பாகிவிட்டது.

        பெண்கள் இன்று பணியாற்றாத, சாதனை செய்யாத துறை எது? ராணுவத்தில், கப்பல், விமான படையிலும் பணியாற்றுகிறார்கள். அறிவியல் துறையில், பொருளாதார, கலை இலக்கியம், நிர்வாகம், ஊடகம் என்று எல்லா துறைகளிலும் ஒளிர்பவர்களாக, மிளிர்பவர்களாக இருப்பவர்கள் பெண்கள்தான். உலக பணக்காரர்களின் பட்டியலில், சிறந்த தொழில் முனைவோர், பட்டியலில் இடம் பெறுகின்றனர். வங்கி, பெரும் தொழில் நிறுவனங்களில், பன்னாட்டு கம்பெனிகளில் சி.இ.ஒ.வாக, முதன்மை நிர்வாகியாக் இருக்கின்றனர். ஐ.டி. துறையில், வங்கி, பள்ளி, கல்லூரிகளிலும் பெண்கள்தான் அதிகமாக பணியாற்றுகின்றனர். விண்வெளி ஓடத்தில் செல்கிறார்கள். விமானம் ஓட்டுகிறார்கள். மாட்டு வண்டி, ஆட்டோ ஓட்டுகிறார்கள். பாண்டிச்சேரியில் ஒரு பெண் பிணம் எரிக்கிறார். மனைவி கார் ஓட்ட கணவன் உட்கார்ந்து செல்கிற காட்சியை இன்று நாம் சாதாரணமாகக் காண முடியும். இன்று தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள பொருளாதார மேம்பாடு என்பது பெண்களால் ஏற்பட்டதுதான்.

        இந்த பள்ளியில், கல்லூரியில், இன்ன படிப்பில் இன்ன பாடப்பிரிவில்தான் படிப்பேன், இந்த துறைச்சார்ந்த வேலைக்குத்தான் போவேன் என்று தீர்மானிக்கிற ஆற்றல் இன்று பெண்களுக்கு வந்திருக்கிறது. இன்னாரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று முடிவெடுக்கிற அதிகாரமும் இன்று பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆண் குழந்தைக்காக இரண்டாம் திருமணம் செய்துக்கொள்வது குறைந்திருக்கிறது. குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்கிற இடத்தில் இன்று பெண் இருக்கிறாள். இது சமூகம் தன்னியல்பாக ஏற்படுத்திக்கொண்ட மாற்றம்.
பெண்கள் இன்றைய வாழ்வில் பெற்றிருக்கிற சுதந்திரம், சுயமாக சிந்தித்தல், சுயமாக முடிவெடுத்தல், பொருளாதார தற்சார்பு நிலை அனைத்தும் பிரமிக்க தக்க வகையில்தான் இருக்கிறது. ஆனாலும் பெண்கள் நவீன வாழ்வில் இரண்டு விதமான உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் எனபதை மறுக்க முடியாது. வீட்டிலும் உழைக்க வேண்டும். வேலை செய்கிற இடத்திலும் உழைக்க வேண்டும். ஒரு துணிக்கடையில் வேலை செய்கிற அணுக்கும், பெண்ணுக்குமான சம்பளம் ஏற்றத் தாழ்வாகத்தான் இருக்கிறது. ஒரே உழைப்பு, ஆண் – பெண் என்பதற்காக சம்பளம் மட்டும் ஏற்றத்தாழ்வானது. இந்த வித்தியாசம் நகரம், கிராமம் என்று எல்லா இடத்திலும் இருக்கிறது. இது களையப்பட வேண்டும்.

        சமூகத்தின் எல்லா துறைகளிலும் பெண்கள் முதன்மையான இடத்திற்கும், தகுதியான இடத்திற்கும் வந்துவிட்டார்கள். ஆனால் அரசியல் துறையில் பெண்களின் நிலை என்ன? உள்ளாட்சி நிர்வாகத்தில் மட்டும் 33 சதவிகிதம் இடம் பெற்றுள்ளனர். சட்ட மன்றத்தில், மக்களவைவில், மாநிலங்கவையில் 33 சதவிகித இட ஒதுக்கீடுகூட கிடையாது. 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கன மசோதா மாநிலங்கவையில் மட்டும்தான் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறவில்லை. 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கே ஒத்துக்கொள்ளாதவர்கள் 50 இட ஒதுக்கீட்டிற்காக எப்படி ஒத்துக்கொள்வார்கள். “பொம்பளக்கி அரசியல் எதுக்கு?” என்று எல்லாரும் கேட்கிறார்கள். அதே நேரத்தில் ஓட்டுப்போட மட்டும் அழைக்கிறார்கள். ஓட்டுப்போட மட்டும் பெண்கள் வேண்டும். ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கையில் பெண்கள்தான் இன்றும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இந்த முரணை எப்படிப் புரிந்துக்கொள்வது? மாநில, மத்திய அமைச்சரவையில் ஒரு சதவிகித பெண்கள்கூட இல்லை. ஓட்டுப்போட வரவேண்டும். பதவிக்கு, அதிகாரத்திற்கு  வரக் கூடாது என்று எண்ணுகிற சமூக மனோபாவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

        இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள  அடிப்படை உரிமைகளில் தான் விரும்புகிற மதத்தை பின்பற்ற, வழிபட, பிரச்சாரம் செய்ய வழிவகை செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாக படித்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கேரள மாநிலத்தில் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று பெண்கள் வழிப்படக் கூடாது என்று போராட்டமும், ஆர்ப்பட்டமும் நடந்துக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கிறது. பெண் அமைப்புகள் சில இந்த போராட்டத்தில் தீவிரமாக இருப்பதுதான் விந்தையானது.
       
        ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிப்படக் கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் மரபை மீறக் கூடாது, நூற்றாண்டு பழக்கம் என்பது. இது அறிவியல் பூர்வமான காரணங்கள் அல்ல. ஒரு காலத்திய மூடநம்பிக்கைக்காக சமூகத்தின் சரிபாதியினரை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. அமெரிக்காவில் இருக்கிற தமிழக, இந்தியர்கள் தங்களுடைய பெற்றோர்களின் திதியை ஆன்லைனிலிலேயே பதிவு செய்து திதியை முடித்துக்கொள்வது மரபு மீறல் இல்லையா? ஒரு காலத்தில் கடல் தாண்டி செல்லக்கூடாது என்ற மரபு இருந்தது. இன்று அந்த மரபு பின்பற்றப்படுகிறதா?  இந்தியர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? இந்திய சமூகம் படித்த, நாகரீக மிக்க, பண்பாடுமிக்க சமூகம்தான? இந்தியாவில் அதிகப்பட்சமாக இருப்பது பெண் தெய்வங்கள்தான். பெண்களை தெய்வமாக வழிபடுவோம். ஆனால் பெண்களை மட்டும் கோவிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்வது அறிவுப் பூர்வமானதா? இன்று பெண் தெய்வங்களாக கொண்டாடப்படுகின்ற எல்லா தெய்வங்களும் நூற்றாண்டு, நூற்றாண்டாக ஆண்களால், ஆணாதிக்க சமூகத்தால் கொலைச் செய்யப்பட்ட பெண்களே.

        ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் மரபு கெட்டுவிடும் என்று சொல்கிற புனிதர்களுக்கு, ஐயப்ப பக்தர்களுக்கு வீட்டில் அனைத்துவிதமான உதவிகளையும், பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்வது பெண்கள்தானே. எங்களை அனுமதிக்காத கோவிலுக்கு செல்ல, எங்களுடைய கணவர்களுக்கு நோன்பு காலத்தில் உதவி செய்ய மாட்டோம், மனைவியாக இருக்க மாட்டோம் என்று பெண்கள்தான் போராட வேண்டும். ஒவ்வொரு இந்திய ஆணும் எந்த அளவிற்கு ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது ஐயப்பன் கோவில் விவகாரம் தெளிவுப்படுத்திவிட்டது. என்னுடைய மனைவியை, தாயை, சகோதிரியை, மகளை அனுமதிக்காத கோவிலுக்கு நானும் செல்ல மாட்டேன் என்று அறிவித்த ஒரே ஒரு ஆண் உண்டா? இன்றும் இந்தியா ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது.
        சட்டமன்றத்தில், மக்களவையில், மாநிலங்கவையில் 50 சதவிகித இடஒதுக்கீடு பெறுகிற வரையில், ஐயப்பன் கோவில் போன்ற இடங்களில் சென்று வழிப்பட்டே தீர்வோம் என்று போராடி வெற்றி பெறுகிறவரையில் நம்முடைய பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.

புதிய தலைமுறை டிசம்பர் 20 2018