திங்கள், 17 ஜூன், 2024

படைப்பாளியும் விமர்சகரும் சந்திக்கும் புள்ளி - கவிஞர் சுகுமாரன்


மகால
எழுத்தாளர்களில் நிஜமாகவே சமகாலப் பிரக்ஞை கொண்ட ஒருவராக இமையத்தையே முதன்மைப்படுத்துவேன். சமகாலப் பிரச்சினைகளைச் சமகால மொழியில் எழுதுகிறார். நவீன யுகத்தின் தனி வாழ்க்கை, சமூக வாழ்க்கைச் சிக்கல்களையும் அரசியல் பண்பாட்டுக் களங்களில் உருவாகும் இடர்ப்பாடுகளையும் ஆவண மதிப்பை மீறிய கலைத் திறனோடு படைப்பாக்குகிறார். இன்றைய எழுத்தாளர்களில் கணிசமானவர்கள் நினைவேக்கங்களிலும் கடந்த காலப் பிரதாபங்களிலும் கதைப் பொருளைத் தேடுபவர்களாகவும் அவற்றின் வழியே பழைய மதிப்பீடுகளை வலியுறுத்துபவர்களாகவும் செயல்படும்போது இமையம் தான் வாழும் நிகழ்காலத்தையே தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் தொடர்ந்து இடம்பெறச் செய்கிறார். அவரது நெடுங்கதையானபெத்தவன், நாவல்களானசெல்லாத பணம், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்ஆகியவை இதற்கு உதாரணங்கள். இன்றைய காலத்தின் கலைஞனாகப் புதிய மதிப்பீடுகளை முன்வைத்து விசாரணை செய்கிறார்

இமையத்தின் இதுவரையான படைப்புகளுக்குள் விரிவான பயணத்தை மேற்கொள்கிறது அரவிந்தனின் இந்த நூல். ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாவலையும் அவற்றின் மையத்திலிருந்து நுட்பமாக அணுகி மதிப்பிடுகிறார். தானே நாவலாசிரியராகவும்சிறுகதையாளராகவும் விளங்கும் ஒருவர் தனது படைப்பியல் நோக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு இன்னொரு எழுத்தாளரின் எழுத்துகளை, அதுவும் சமகால எழுத்தாளரின் ஆக்கங்களைத் திறனாய்வது அரிது. இந்த நூலின் முதன்மை இயல்பு இது

எழுதப்பட்டு இறுதி வடிவம் பெற்ற படைப்பையே தான் திறனாய்வு செய்கிறோம் என்ற கவனத்தை அரவிந்தன் கொண்டிருக்கிறார். தானும் படைப்பாளி என்பதால் எடுத்துக்கொண்டிருக்கும் படைப்பு இப்படி இருந்திருக்கலாம், இப்படி இல்லாமலிருந்திருக்கலாம் என்ற ஊகங்களையும் எதிர்பார்ப்புகளையும் வலியப் புகுத்துவதில்லை. இமையத்தின் படைப்பாக்கம் உச்சம் பெறும் இடங்களையும் சரியும் புள்ளிகளையும் கறாராகவே எடுத்துக்காட்டுகிறார். இது இந்த அணுகுமுறையின் இரண்டாவது குணம். ‘எங் கதெநாவல் (இதை நெடுங்கதை என்றே அரவிந்தன் குறிப்பிடுகிறார்.) மையப் பாத்திரமான விநாயகத்தின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் கதை நெடுகிலும் பேசப்படுபவள் கமலா. விநாயகத்தின் விவரிப்புத் தான் கதை. அவனுடைய சித்தரிப்பில் கமலாவின் புற ஆளுமையை வாசகர் அறிந்துகொள்கிறார். ஆனால் விநாயகத்தின் பார்வையில் எழுந்து வரும் கமலா முழுமையானவள் அல்லள். கதை நடத்துபவனின் விருப்பத்துக்கு ஏற்ப முன்னிறுத்தப்படுபவள். கமலாவின் கதையை அவளே சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும். அது இமையத்தின் மூலம் சாத்தியப்படுமா என்ற கேள்வியை அரவிந்தன் எழுப்புகிறார். நாவலை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் இன்னொரு சாத்தியத்தை முன்வைப்பதன் மூலம் நாவலைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறார். இது ஓர் உதாரணம். இந்த உதாரணத்தின் விரிவாகவே பிற படைப்புகளைப் பற்றிய கருத்துகளையும் காணலாம்.

தனது படைப்பின் நோக்கம் குறித்தும் இயல்பு குறித்தும் தெளிவான பார்வையுடையவர் இமையம். ஓர் எழுத்தாளனாகத் தான் வாழும் காலத்தின் வாழ்க்கையை நேர்மையாகச் சொல்வதுதான் தனது கடமை என்ற திடமான நம்பிக்கையைப் படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். தனது விமர்சனத்தின் எல்லைகளையும் வலுவையும் சரியாக உணர்ந்திருப்பவர் அரவிந்தன். இந்த இரு நிலைகளும் சந்திக்கும் புள்ளியில் உருவாகும் இலக்கிய உரையாடலே இந்த நூல். இந்த உரையாடலிலிருந்தே இமையத்தின் படைப்புகளைப் பற்றிய அரவிந்தனின் மதிப்பீடுகள் உயிர்பெறுகின்றன. அந்த மதிப்பீடுகள் தாம் இமையத்தை சார்புகளைத் துறந்த கலைஞனாக முன்னிறுத்துகின்றன. ஒருவகையில் தனது எழுத்தாள அடையாளத்தையும் விலக்கி மானுட இணக்கத்தைப் பேசும் குரலுக்குரியவராக இமையத்தைக் காட்டுகின்றன. இது அரிதானது. ஆனால் இலக்கியத்துக்கு இன்றியமையாதது.

தலித் மாத இதழ் - ஜூன் 2024

இமையம்: அடையாளத்தை அழித்துக்கொள்ளும் கலைஞன்  

ISBN: 978-81-965855-0-1

வெளியீடு - க்ரியா பதிப்பகம்

விலை ரூ. 180

 கைபேசி:+91 7299905950


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக