“ராமன்ங்கிற பேஷன்ட்டோட அட்டண்டர் யாரு?” என்று நர்ஸ் கேட்டதும், “நான்தான்” என்று சொல்லிக்கொண்டே பதைபதைப்புடன் எமர்ஜென்சி வார்டின் கதவை நோக்கி மீனாட்சி ஓடினாள்.
“டாக்டர் கூப்பிட்டாரு. உள்ளார வாங்க” என்று
சொல்லிவிட்டு கதவைத் திறந்துவிட்டாள் நர்ஸ்.
ராமனின் படுக்கையை நோக்கி வேகமாகப் போனாள்
மீனாட்சி. படுக்கை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது. ராமனின் படுக்கைக்குச் சற்று
தள்ளி நின்றுகொண்டிருந்த ஒரு மருத்துவர், “நீங்கதான் அட்டண்டரா?” என்று கேட்டார்.
“ஆமாம் சார்.”
“ட்ரை பண்ணினோம். முடியல. முடிஞ்சிடிச்சு.
யாருக்குத் தகவல் சொல்லணுமோ சொல்லிடுங்க” என்று மருத்துவர் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத
மீனாட்சி, “என்ன சார் ஆச்சி?” என்று கேட்டாள்.
“எறந்துட்டாரு. தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன்”
என்று சொன்ன மருத்துவரின் வார்த்தை மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது மீனாட்சிக்கு.
அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. வாய் உலர்ந்துபோய்விட்டது. கை, கால்கள் நடுங்கின.
உடல் குளிர்ந்து சில்லிட்டு, வியர்த்துப்போயிற்று.
“புரசிஜர் முடியுறதுக்கு ஒரு மணி நேரமாகும்.
புரசிஜர் முடிஞ்சதும் பாடி மார்ச்சுவரிக்குப் போயிடும். அப்புறம் நீங்க வாங்கிக்கிட்டுப்
போயிடலாம்” என்று மருத்துவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மீனாட்சியின் காதில் விழுந்த
மாதிரியே தெரியவில்லை. ‘ஹெல்ப் டெஸ்க்’ என்று எழுதியிருந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த
நர்ஸைக் கூப்பிட்டு, “புரசிஜர் செய்யுறதுக்குச் சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு மருத்துவர்
தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், “சார்” என்று கூப்பிட்டதும், “என்ன வேணும்?”
என்பதுபோல் பார்த்தார். மீனாட்சிக்கு அழுகைதான் வந்தது, பேச்சு வரவில்லை. கை கால்கள்
நடுங்க, வியர்த்துப்போய், நின்றுகொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்த மருத்துவர், “சிவியர் ஸ்ட்ரோக்கா வந்திருக்கு. ஒண்ணும் செய்ய
முடியல. சோ, விஷயம் முடிஞ்சிடிச்சி” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டார்.
ராமன் இறந்துவிட்டார் என்ற விஷயத்தைத் தான்
சொல்வதைவிட மருத்துவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்த மீனாட்சி மருத்துவரின்
அறைக்குள் போனாள்.
விஷயம்தான் முடிந்துவிட்டதே அப்புறம் என்ன
என்பது போல் மருத்துவர் பார்த்தார். மீனாட்சி
மருத்துவரையே பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர அவளால் பேச முடியவில்லை. “என்ன?” என்று
மருத்துவர் கேட்டார்.
“நான் வெறும் அட்டண்டர் சார்.”
“சரி.”
“பிணத்துக்குச் சொந்தக்காரி நான் இல்ல சார்.”
“வாட்?” என்று அதிர்ச்சி அடைந்ததுபோல் கேட்ட
மருத்துவர், “லேபரா?” என்று கேட்டார்.
“ஆமாம் சார்.”
“சொந்தக்காரங்ககிட்ட சொல்லிடுங்க.”
“இறந்துபோனவரோட மகனும் மகளும் அமெரிக்காவில
இருக்காங்க. அவரோட அக்கா மட்டும்தான் இங்க இருக்காங்க. செத்திட்டார்ன்னு சொல்றதுக்குப்
பயமா இருக்கு. நீங்க சொன்னா நல்லா இருக்கும் சார்” என்று மீனாட்சி சொல்லி முடிப்பதற்குள், “அது
என்னோட வேல இல்ல. நான் சொல்லவும் கூடாது. நான் ரிப்போர்ட் மட்டும்தான் கொடுப்பன்” என்று
சொல்லிவிட்டு மருத்துவர் வெளியே போனார்.
“என்னடா இது வம்பா இருக்கு?” என்று சொல்லி,
தன்னுடைய தலையில் அடித்துக்கொண்ட மீனாட்சி மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அழுதுகொண்டே செல்போனில் வாட்ஸ்அப் கால் போட்டு
ராமனின் மகனிடம் விஷயத்தைச் சொன்னதும், “அப்படியா? எப்ப நடந்துச்சு? டாக்டர் என்ன சொன்னாரு?
முடியலன்னுட்டாங்களா?” என்று நூறு கேள்விகளை கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டான்.
ராமனின் மகளுக்குச் செய்தியைச் சொன்னாள்.
“என்ன சொல்ற? பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நல்லா இருக்காருன்னு சொன்னியே” என்று கேட்டுக்கொண்டே
அழ ஆரம்பித்துவிட்டாள். போனின் இணைப்பு கட் ஆனதும், ஏஜென்ஸிகாரருக்கு போன் போட்டு ராமன்
இறந்த செய்தியைச் சொன்னதோடு, “எனக்குப் பயமா இருக்கு வர முடியுமா சார்?” என்று கேட்டாள்.
சாரோட பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பேசுறேன். என்ன ஏற்பாடு செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு
சொல்றன். ரிலாக்ஸா இருங்க. நானே கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தது மீனாட்சிக்கு
எரிச்சலாக இருந்தது.
ராமனின் மகனிடமும் மகளிடமும், ஏஜென்ஸிக்காரரிடமும்
விஷயத்தைச் சொன்ன பிறகுதான் மீனாட்சிக்கு நெஞ்சின் படபடப்பு குறைந்தது. கை, கால்கள்
நடுங்குவதும், வியர்ப்பதும் மட்டுப்பட்டது. ஏஜென்ஸிக்காரரிடமிருந்து போன் வந்தது.
“சாரோட பொண்ணுகிட்டயும், பையன்கிட்டயும் பேசிட்டேன். பாடிய என்ன செய்யுறதுங்கிறதப்
பத்தி சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. தகவல் வந்ததும் சொல்றேன்” என்று சொன்ன வேகத்தில்
போனை வைத்துவிட்டார். ஏஜென்ஸிக்காரர் போனை வைத்த மறுநிமிஷமே ராமனின் மகனிடமிருந்து
போன் வந்தது.
“காலயில அத்த வருவாங்க. பாடிய நாளைக்கே வாங்கிக்கிறதா,
நாங்க வந்த பிறகு வாங்கிக்கிறதாங்கிறத கொஞ்ச நேரம் கழிச்சி சொல்றன். நீங்க ஆஸ்பிட்டலியே
இருங்க. நான் கூப்பிடுறன். எங்க அத்த ஒங்ககிட்ட பேசுவாங்க” என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டான்.
ராமனின் அக்காவிடமிருந்து போன் வந்தது. பதற்றத்தில்
சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று தன்னையே திட்டிகொண்டு போனை எடுத்துப் பேசினாள். “விஷயம்
கேள்விபட்டன். எனக்கு முன்னாடியே அவன் போயிட்டான். அதான் வருத்தமா இருக்கு. பாடிய எப்ப
வாங்குறதுங்கிறது இன்னும் முடிவாகல. முடிவானதும் சொல்றன். இப்ப என்னால வர முடியாது.
வந்தாலும் செய்யுறதுக்கு ஒன்னுமில்ல. எனக்கும் வயசாயிடிச்சி இல்லையா? பில் செட்டில்மண்ட்
எல்லாம் ஆன்லைனிலியே பண்ணிடுவாங்க. அதப் பத்தி நீ ஒண்ணும் கவலப்பட வேண்டாம். காலயில வரன். வச்சிடு” என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டாள்.
ராமன் இறந்துவிட்டார் என்று சொன்ன போது ஏற்பட்ட
பயத்தைவிட மீனாட்சிக்கு இப்போதுதான் கூடுதலாக பயம் ஏற்பட்டது. ராமனின் மகனும் மகளும்
வந்த பிறகுதான் பிணத்தை வாங்குவார்களா, அவருடைய அக்கா வந்து வாங்குவார்களா, அவருடைய மகனும் மகளும் ஊருக்கு வருவதற்கு
எத்தனை நாளாகும்? அதுவரை பிணம் மருத்துவமனையிலேயே இருக்குமா? பிணத்தை வாங்கினால் எத்தனை
நாள் வீட்டில் வைத்திருப்பார்கள்? அதுவரைக்கும் இருக்க வேண்டுமா? பிணத்துடன் எத்தனை
நாட்கள் இருக்க முடியும், மீனாட்சிக்கு கோபத்திலும் பயத்திலும் அழுகை வந்தது. “இப்படி
வந்து மாட்டிக்கிட்டனே” என்று தன்னையே நொந்துகொண்டான்.
எமர்ஜென்ஸி வார்டை விட்டு வெளியே போய்விடலாம்
என்று நினைத்தாள். பிணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு போய்விடலாம் என்று தோன்றியது. பிணம்
இருந்த படுக்கை பக்கம் பார்த்தாள். நான்கு பக்கமும் திரைச் சீலையால் மூடப்பட்டிருந்தது. “இப்படியா ஒரு ஆளுக்கு சாவு வரும்? சனங்க எப்படி
எப்படியோ எல்லாம் செத்துப்போறாங்க” என்று முனகிய மீனாட்சிக்கு வாய்விட்டு அழ வேண்டும்போல்
இருந்தது.
என்றும் போல்தான் இன்றும்
இரவு எட்டு மணிக்கு ராமன் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்த ஐந்தாவது நிமிஷமே கழிவறைக்குப்
போனார். வெளியே வந்து, “ஒரு மாதிரியா இருக்கு” என்று சொன்னார். “கொஞ்சம் நடந்துட்டு
வர்றீங்களா சார்” என்று கேட்டதற்கு, “நெஞ்சடைக்கிற மாதிரி இருக்கு. என்னான்னு தெரியல”
என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்தார். “ஃபேன கூட்டிவை” என்று சொன்னார்.
சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த மீனாட்சி, பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு
வந்து, ஃபேனின் வேகத்தைக் கூட்டி வைத்தாள். “ஆஸ்பத்திரிக்குப் போகலாமா சார்” என்று
கேட்டாள். “தேவயில்ல” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியிலிருந்து
கீழே விழுந்துவிட்டார். ஓடிப்போய், தூக்கி உட்கார வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்து,
“ஒண்ணுமில்ல சார். ஃபிரியா இருங்க. சுடுதண்ணி தரட்டுமா? ஆஸ்பத்திரிக்குப் போகலாமா சார்?”
என்று கேட்டாள். எதற்கும் பதில் இல்லை என்பதால் ராமனுடைய மகனுக்கும் மகளுக்கும் போன்
போட்டு விஷயத்தை சொன்னாள். பதற்றமாக இருந்தாலும் ஏஜென்ஸிகாரருக்கு விஷயத்தைச் சொன்னாள்.
ஆம்புலன்சுக்கு போன் போட்டாள். எந்த மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று ராமனின்
மகனிடம் கேட்டாள். தனிவீடு என்பதால் அக்கம்பக்கத்தில் யாரையும் துணைக்குக்கூட கூப்பிட
முடியாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை ஒற்றை ஆளாக அல்லாடினாள். ஆம்புலன்ஸ் வந்ததும் ராமனை
ஏற்றிக்கொண்டுவந்து, எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்த பிறகுதான் மீனாட்சிக்கு மூச்சு விடவே
முடிந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை வரும்வரை நிமிஷத்திற்கு நிமிஷம் ராமனின் மகனிடமும்
மகளிடமும் வாட்ஸ்அப் காலில் தகவல் சொல்லிக்கொண்டே இருந்தாள். ராமன் வீட்டில் சாப்பிடும்போது
மணி எட்டு. அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர் சொல்லும் போது மணி ஒன்பதே கால்.
ராமனின் மகனிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்து.
“சொல்லுங்க சார்” என்று சொன்னாள். “இங்க பேசக்
கூடாது, வெளியே போயி பேசுங்க” என்று முகத்தில் அறைவதுபோல் நர்ஸ் சொன்னதும், “நான் எமர்ஜென்ஸி
வார்டுகுள்ளார இருக்கிறன் வெளியே வந்திட்டு பேசறன் சார்” என்று சொன்ன மீனாட்சி, “நான்
பாக்கலாமா?” என்று கேட்டாள்.
“பார்த்துட்டு ஒடனே போயிடனும்.”
“கொஞ்சம் கூட வர முடியுமா?” என்று மீனாட்சி
கெஞ்சுவதுபோல் கேட்டாள். ஃபைலில் ஏதோ எழுதிக்கொண்டே,
“நீங்கதான அட்டண்டர்? ஒங்களுக்கு என்ன பயம்?” நர்ஸ் கேட்டாள்.
“நான் பொணத்துக்கு சொந்தக்காரி இல்லெ. சம்பளத்துக்கு
வேல செய்ய வந்த அட்டண்டர்தான்” மீனாட்சி சொன்னதும், ஏற இறங்க பார்த்த நர்ஸ், “வெயிட்
பண்ணுங்க” என்று சொன்னாள். ஃபைலை எழுதி முடித்துவிட்டு, “வாங்க” என்று சொன்னாள். நர்ஸுடன்
போனாள். திரைச்சீலையை லேசாக விலக்கிவிட்டு, “பாருங்க” என்று சொல்லும்போது போன் மணி
அடிக்கிற சத்தம் கேட்டது. “பார்த்திட்டு ஒடனே வந்திடணும்” என்று சொல்லிவிட்டு, போனை
எடுப்பதற்காக வேகமாக ஓடினாள்.
பிணம் பச்சைநிற போர்வையால் மூடப்பட்டிருந்தது.
பிணத்தை ஒட்டி நின்றுகொண்டிருப்பது மாய உலகத்தில் நின்றுகொண்டிருப்பதுபோல இருந்தது.
பிணத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு
பார்ப்பது எப்படி? அதுதான் அவளுக்குத் தெரியவில்லை. “முடிஞ்சிடுச்சி” என்று மருத்துவர்
சொன்ன போது ஏற்பட்ட பயத்தைவிட இப்போதுதான் கூடுதலான பயமும் நடுக்கமும் ஏற்பட்டிருந்தது.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி எழுந்து வந்ததுபோல் வியர்த்துக் கொட்டிவிட்டது.
“புரசிஜர் செய்யுறதுக்கு வந்துட்டாங்க, வெளியே
வாங்க” என்று நர்ஸ் சொன்னது கேட்டதும், பிணத்தின் மீது இருந்த போர்வையை விலக்கிவிட்டு
முகத்தைப் பார்த்தாள். தூங்கிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. பிணத்தின் முகத்தைப் பார்த்த
மறுநொடி முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்த அன்று ராமன், “ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு,
பேங்க் புக் கொடுங்க. ஏஜென்ஸிக்காரர் தவிர ஒங்களப் பாக்குறதுக்கு இங்கே யாரும் வரக்
கூடாது. லீவு போட்டா, மாற்று ஆள் வந்த பிறகுதான் போகணும். இஷ்டத்துக்கு லீவ் போடக்
கூடாது” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
ராமன் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம்
ஒரு மணி நேரம் நடைபயிற்சிக்குப் போவார். யோகா பயிற்சி செய்வார். அவ்வளவுதான். பேப்பர்
படிப்பது, மியூசிக் கேட்பது மட்டும்தான் அவருடைய வேலை. ஒரு நாளும் மீனாட்சியின் அறைக்குள்
வந்ததில்லை. முன்னே விட்டு பின்னால் ஓரக்கண்ணால் பார்த்ததில்லை. நேற்று இரவு சாப்பிடும்போது,
“என்னோட ஒய்ஃப் எறந்து நாலு மாசம் தனியாத்தான் இருந்தன். வயசு எழுபத்தி நாலு ஆகுது.
ஒரு அட்டண்டர் கூட இருக்கட்டும்னு கட்டாயப்படுத்தினதாலதான் ஒன்னெ வேலக்கி எடுத்தன்.
என்னெ அமெரிக்காவுக்கு வந்திட சொல்லி கட்டாயப்படுத்துகிறாங்க. நான் இந்த வீட்டுல அம்பத்திரண்டு
வருஷமா இருந்துட்டன். இந்த வயசில இனிமே எங்க போறது? போனாலும் அது என்னோட வீடுல்லதானே.
இங்கயும் எனக்கு ஒரு வேலயும் இல்லெ. ஆன்லைனிலேயே எல்லா வேலயயும் பசங்க செஞ்சிடுறாங்க.
பென்ஷன் வாங்குறதுக்காக வருஷத்துக்கு ஒரு முற
‘நான் இன்னும் சாகல’னு ஒரு படிவம் தரணும்.
அதுக்காக ட்ரசரிக்குப் போவன். எனக்கும் என் பசங்களுக்கு இருக்குற ஒரே தொடர்பு செல்போன்தான்.
படிக்கிறப்பவே அமெரிக்காவுல வேல பாக்குற மாதிரி படிங்கனு சொன்னதும், அமெரிக்காவில போயி
வேல பாக்குறது நல்லதுன்னு சொன்னதும் நாங்கதான்” என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக
இருந்தார். பிறகு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். ஒரு நாளும் இல்லாமல்
அதிகமாப் பேசியது, குடும்ப விஷயத்தைப் பேசியதெல்லாம் மீனாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இப்படி செத்துப்போறதுக்காகத்தான் அப்படி பேசினாரா?”
பிணத்தின் முகத்தைப் பார்க்கபார்க்க மீனாட்சிக்கு
அழுகை வந்துகொண்டேயிருந்தது. ராமனின் வீட்டுக்கு மீனாட்சி அட்டண்டராக வந்த பிறகு, உறவினர்
வீட்டுக்கென்று அவர் ஒரு நாளும் போனதில்லை. உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவரைத்
தேடிக்கொண்டு யாரும் வந்ததில்லை. அவருடைய அக்காகூட ஒரே ஒருமுறைதான் வந்தார். அதுவும்
காலையில் வந்து சாயங்காலமே போய்விட்டார். நண்பர்கள் என்று அபூர்வமாக ஒரு ஆள், இரண்டு
ஆள் என்று வருவார்கள். வந்தாலும் அரை மணி நேரத்தில், ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே போய்விடுவார்கள்.
‘அதிசயமான ஆள்தான்’ என்று நினைத்துக்கொள்வாள்.
மீனாட்சி
இதுவரை மருத்துவரின் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொண்டது, மருத்துவமனையில் குழந்தை
பெற்ற பெண்ணுடன் இருந்தது, சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று பைத்தியமான பையனை பார்த்துக்கொண்டது,
வயதான கணவன் மனைவியைப் பார்த்துக்கொண்டது என்று மொத்தம் எட்டு இடங்களில் வேலை செய்திருக்கிறாள்.
எட்டு இடங்களில் வேலை செய்தாலும் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்த பெண்ணுடன்
இருந்தபோதுதான் அவஸ்தைப்பட்டாள். அதிலிருந்து எலும்பு முறிவு என்று படுத்திருக்கும்
நோயாளிகளுக்கு அட்டண்டராகப் போகக் கூடாது என்று முடிவாக இருந்துவிட்டாள். பல இடங்களில்
அட்டண்டராக வேலை பார்த்தாலும் ராமனின் வீட்டில்தான் கொஞ்சம் சொகுசாக இருந்தாள். ஒரே
ஆள். தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிற, சம்பளத்தையும் முதல் தேதியே தந்துவிடுகிற
ஆள் என்பதால் முடிந்தவரை ராமனின் வீட்டிலேயே காலத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நினைத்துகொண்டிருந்தாள்.
“அமெரிக்காவுல வேல பாக்குறதால அங்கியே வேல
பாக்குற பெண்ணையும், பையனையும் பார்த்து கல்யாணம் கட்டிவச்சம். ரெண்டு மூணு வருஷத்துக்கு
ஒரு முறதான் வருவாங்க. அதுவும் கல்யாணம், சாவுன்னாத்தான். கடசியா அவங்க வந்தது என்னோட
ஒய்ஃப் சாவுக்குத்தான். இனிமே எப்போ வருவாங்கன்னு சொல்ல முடியாது” என்று ராமன் சொன்னது
ஞாபகத்திற்கு வந்தது.
“எவ்வளவு நேரமாப் பாத்துக்கிட்டு இருப்பீங்க,
வெளியே போங்க. புரோசிஜர் செய்யறதுக்கு ஸ்டாஃப்ங்க வந்துட்டாங்க” என்று அதட்டும் குரலில்
நர்ஸ் சொன்ன பிறகுதான் மீனாட்சிக்கு சுயநினைவு வந்த மாதிரி பிணத்தின் முகத்தைக் கவனமாகப்
பார்த்தாள். படுக்கையை ஒட்டி வந்து நின்றுகொண்டு, “வெளியே போயி வெயிட் பண்ணுங்க. பாடி வெளியே வரும்போது
பாத்துக்கங்க” என்று நர்ஸ் சொன்னதும், திரைச்சீலைக்குள்ளிருந்து அரைகுறை மனதுடன் வெளியே
வந்தாள் மீனாட்சி.
காக்கி நிற உடையணிந்திருந்த இரண்டு பேர் பிணம்
இருந்த இடத்துக்கு வந்ததும், நர்ஸ் திரைச்சீலையை விலக்கிவிட்டாள். எல்லோரும் திரைச்சீலைக்குள்
போய்விட்டார்கள். புரோசிஜர் என்றால் என்ன?
எப்படிச் செய்வார்கள்? என்று பார்க்கலாம் என்று தோன்றியது. எமர்ஜென்ஸி வார்டு முழுவதுமே
மருந்து வாடையால் நிரம்பியிருந்தது. பகல்போல் வெளிச்சமாக இருந்தது. அதிசயமான உலகம்போல்
இருந்தது. ராமனின் பிணம் இருந்த படுக்கையை ஒட்டி மூன்று படுக்கைகளும் அதற்கு எதிர்ப்புறம்
நான்கு படுக்கைகளும் இருந்தன. எல்லாப் படுகைகளிலும் ஆட்கள் இருப்பது தெரிந்தது. உதவியாளர்கள்
என்று யாரும் இல்லை. ஒரு ஆள் ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். “இங்க ஏன்
நிக்கிறீங்க, வெளியே போங்க” என்று அடித்து விரட்டுவதுபோல் சொன்னான். எமர்ஜென்ஸி
வார்டைவிட்டு வெளியே வந்த மீனாட்சி உதவியாளர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தாள்.
நாற்காலியில் உட்கார்ந்தபடியே இரண்டு ஆண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
மருத்துவமனை எப்படி இருக்கிறது? எந்த மாடியில்
இருக்கிறோம்? பக்கத்தில் என்ன நடக்கிறது? யார் இருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்குக்கூட
மீனாட்சிக்கு நேரமில்லை. வீட்டை விட்டு கிளம்பும்போது எப்படியாவது போய் மருத்துவமனையில்
சேர்த்தால் போதும் என்ற அவசரத்தில் இருந்தாள். மருத்துவமனையில் சேர்த்தப் பிறகு எப்படியாவது
உயிர் பிழைத்தால் போதும் என்ற பதைபதைப்புடன் இருந்தாள். இறந்துவிட்டார் என்று தெரிந்ததும்,
ஐயோ இறந்துவிட்டாரே என்று அழுதாள். இப்போது பிணத்தை வாங்கிக்கொண்டுபோய் எப்போது புதைப்பார்களோ
என்ற கவலையில் நின்றுகொண்டிருந்தாள். ராமன் இப்படிச் சட்டென்று இறந்துபோவார் என்றோ
தன்னந்தனியாக இப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவோம் என்றோ அவள் நினைத்துக்கூடப்
பார்த்ததில்லை.
‘இப்படி
வந்து நிக்குறேனே’ என்று நினைத்ததுமே அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. “எனக்கு
ஏன் இந்தத் தலயெழுத்து?”
மீனாட்சி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதுதான்
அவளுடைய அப்பா இறந்தார். அவர் இறந்த மூன்றாவது மாதமே, “உனக்கு கல்யாணம் பண்ணபோறேன்”
என்று அவளுடைய அம்மா பூங்கோதை சொன்ன போது, “நான் படிக்கப் போறன்” என்று சொல்லி அடம்பிடித்து,
பன்னிரண்டாம் வகுப்புவரைப் படித்தாள். “அண்ணன், தம்பி இல்ல. ஆம்பள தொணா இல்ல, சொத்துபத்து
இல்ல, வயசுக்கு வந்த பொண்ண வச்சியிருக்க மாட்டன்” என்று சொல்லி, கட்டாயப்படுத்தித்
தன்னுடைய அண்ணன் மகன் பாலுவுக்குக் கட்டி வைத்தாள் பூங்கோதை. கல்யாணமான மறுவருசமே மீனாட்சிக்கு
ஆண் பிள்ளை பிறந்தது, அதற்கடுத்த வருசம் பெண் பிள்ளை பிறந்தது. பாலு டிரைவராக இருந்தான்.
லாரி ஓட்டப் போனால் திரும்பி வருவதற்குப் பத்திருபது நாட்கள் ஆகும். ஆந்திராவுக்குப்
போன போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டான் என்று போன் வந்தது. பிணம் வந்துசேர்வதற்கு
மூன்று நாள் ஆனது. பாலு இறந்து மூன்று நான்கு மாதம் கழித்து விசாரிப்பதற்காக வந்த ஜீவிதா,
“மெட்ராசுக்கு வா, நான் வேலை வாங்கித் தர்றேன், நானும் அட்டண்டர் வேலதான் செய்யுறன்,
நீயும் செய்” என்று சொன்னாள். கூட படித்தவள் கூப்பிடுகிறாள், போய் பார்க்கலாம். பிடித்தால்
செய்வோம், இல்லை என்றால் ஊருக்குப் போய்விடுவோம் என்ற எண்ணத்தில் முதன்முதலில் அட்டண்டர்
வேலைக்குப் போனாள்.
ஆறு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது. சென்னைக்கு
வந்து ஆறு வருடத்திற்கு மேல் ஆனாலும் ஊருக்குப் போனது மொத்தமாக ஏழெட்டு முறைதான் இருக்கும்.
ஊருக்குப் போகிற ஒவ்வொரு முறையும் மீனாட்சியினுடைய அம்மாவும் மாமியாரும், “திரும்பிப்
போகக் கூடாது, மீறி போனா, உன்னோட ரெண்டு குட்டிகளையும் இழுத்துகிட்டு போ, ஒனக்கு வேல
முக்கியமா? புள்ளைங்க முக்கியமா?” என்று கேட்பார்கள்.
“புள்ளைங்கள இங்க விட்டுட்டுப் போய் அங்கு
இருக்கிறதுக்கு எனக்கு ஆசயா? எனக்கும்தான் புள்ளைங்ககூட இருக்க ஆச. வீட்டிலேயே இருந்தா
பணம் எப்படி வரும்? சோறு எப்படித் திங்கிறது?” என்று எதிர்க் கேள்வி கேட்டாலும் சின்ன
பிள்ளைகளை விட்டுவிட்டுப் போகிறோம், சென்னையில் தங்கி இருக்கிறோம் என்ற கவலை எப்போதும்
அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
“புள்ளைங்க அழுவது. மாமியாரும் திட்டுறா,
எங்கம்மாவும் ஊருக்கு வந்திடச் சொல்லி திட்டுவது” என்று சொல்லும்போதெல்லாம், “நான்
ஏஜென்ஸி ஆரம்பிக்கலாம்னு இருக்கன். நம்பகமான ஆள் வேணும். அதனாலதான் சொல்றேன் கொஞ்சம்
நாள் மட்டும் பாரு” என்று சமாதானம் செய்து விடுவாள். ஏஜென்ஸி ஆரம்பித்தால், அங்கே இங்கே
என்று யாருடைய வீட்டிலும் போய் வேலை செய்யாமல் அலுவலகத்திலேயே இருந்துகொண்டு வேலை செய்யலாம்
என்ற ஆசை மனதில் இருந்ததால்தான் ஜீவிதாவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். ஏஜென்சி ஆரம்பிப்பதும் நடத்துவதும் சுலபமல்ல என்று
தெரிந்தாலும், ‘நானா பணம் போடப்போறன். கூட இருந்து வேலதான செய்யப்போறேன்” என்று தன்னையே
சமாதானம் செய்துகொள்வாள்.
ஏஜென்ஸி நடத்துவதற்குப்
பெரிய வீடு வேண்டும். ஏஜென்ஸியைப் பதிவு செய்ய வேண்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதற்கு
ஆள் வேண்டும். கம்ப்யூட்டரும், கம்ப்யூட்டரில் வேலை செய்வதற்கு ஆள் வேண்டும். ஆன்லைனில்
விளம்பரம் செய்ய வேண்டும். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று எல்லா வகையிலும்
விளம்பரம் செய்ய வேண்டும். மருத்துவர்களோடும் மருத்துவமனைகளோடும் தொடர்பில் இருக்க
வேண்டும். மருத்துவமனைகளின் வழியாகத்தான் அட்டண்டர்கள் தேவை பற்றிய தகவல்கள் அதிகமாக
வரும். எந்தெந்த வயதில் ஆட்களைக் கேட்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில்
ஆண், பெண், பிள்ளைகள் என்று அனுப்ப வேண்டும். வேலை கேட்டு போன் செய்கிறவர்களோடு தொடர்பில்
இருக்க வேண்டும். வேலைக்குப் போகிற அட்டண்டர்களால் பிரச்சினை வந்தாலும், வேலைக்கு ஆள்
எடுக்கிறவர்களால் பிரச்சினை வந்தாலும் பேசித் தீர்ப்பதற்கு வாய் திறமை வேண்டும். அட்டண்டரால்
பிரச்சினை வந்தால், ‘எதுக்கு ஏஜென்ஸியோட பேர
கெடுக்குறீங்க? அனுப்புறப்பவே போற எடத்துல சொல்றத மட்டும் செய்யுங்க. தேவ இல்லாமப்
பேச வேண்டாம். தேவயில்லாம வெளியே போகக் கூடாது. செக்ஸ் டார்ச்சர் கொடுத்தா, திட்டுனா,
அடிச்சா மட்டும் சொல்லுங்கன்னுதான் சொல்லி
அனுப்புனன். நீங்க வேல புடிக்கலன்னு போயிடுவீங்க, ஏஜென்ஸி பேருதான கெட்டுப்போகும்’
என்று அட்டண்டர்களிடம் சொல்வது போல், வேலைக்கு ஆள் எடுக்கும் ஆட்களிடம், ‘ஆள் சரியில்லன்னா,
வேற ஆள் மாத்தி அனுப்புறன். பேமண்ட் மட்டும் ஒடனே அனுப்பிடுங்க’ என்று சொல்வார்கள்.
எவ்வளவுதான் உண்மையைச் சொன்னாலும் ‘அட்டண்டர்கள்
சொல்வதைவிட, வேலைக்கு ஆள் எடுத்தவர்கள் சொல்வதைத்தான் ஏஜென்ஸிகாரர்கள் கேட்பார்கள்.
ஏனென்றால் அவர்கள்தான் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பதினெட்டாயிரம் ரூபாய் கமிஷன் தருகிறவர்கள்.
ஒரு ஏஜென்ஸி பிடிக்கவில்லை என்று அடுத்த ஏஜென்ஸிக்கு அட்டண்டர்கள் எளிதில் போய்விட
முடியாது. ஏஜென்ஸிகாரர்களுக்கிடையே போட்டியிருந்தாலும், ஒற்றுமையும் உண்டு, ஒரு அட்டண்டர்
தவறு செய்துவிட்டால், தவறு செய்த அட்டண்டர் பற்றி, ‘ஆள் சரியில்லை, வந்தா பாத்துக்கங்க’
என்று அடுத்தடுத்த ஏஜென்ஸிகாரர்களிடம் சொல்லிவிடுவார்கள்.
ஏஜென்ஸி ஆரம்பிப்பது பற்றி ஜீவிதா பேசும்போதெல்லாம்,
“ஏஜென்சி ஆரம்பிச்சி பணம் சம்பாதிக்கிறமோ இல்லியோ அட்டண்டரா இருந்து நல்ல பேர் வாங்கினாலே
போதும்” என்று சொல்வாள். மீனாட்சி இதுவரை வேலைக்குப் போன எந்த இடத்திலும், “எனக்கு
இங்க புடிக்கல. என்னெ வேற எடத்துக்கு மாத்திவிடுங்க” என்று கேட்டதில்லை. அதே மாதிரி
வீட்டுக்காரர்களும் இதுவரை, “நீங்கள் அனுப்பி ஆள் சரியில்ல. வேற ஆள அனுப்புங்க” என்றும்
ஏஜென்ஸிக்காரரிடம் கேட்டதில்லை.
அட்டண்டராக வேலைக்குப்போகிறவர்கள் எல்லாருமே
நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பணம் திருடுபவர்கள், நகை திருடுபவர்கள்,
சபல புத்திகொண்ட ஆண்கள் இருந்தால் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பறிப்பவர்கள்,
அடிக்கடி வெளியே போகிறவர்கள், ஓயாமல் போன் பேசிக்கொண்டேயிருப்பவர்கள் என்று ஒரு சிலர்
இருப்பார்கள். அந்த மாதிரியெல்லாம் மீனாட்சி ஒருநாளும் இருந்ததில்லை. அட்டண்டர்கள்
என்றாலே மிஷின் மாதிரி இருப்பார்கள் என்று பெயர் எடுத்தவளில்லை. ஓயாமல் தொலைக்காட்சி
பார்க்கிறாள் என்று கெட்ட பெயரும் எடுத்தவளில்லை.
சினிமா எடுக்கப்போகிறேன் என்று பைத்தியமான
பையனைப் பார்த்துக்கொண்டபோதுதான் தொந்தரவு இருந்தது. பணமும் கொடுத்தான். பொருட்களும்
வாங்கிக் கொடுத்தான். “தம்பி நான் வயித்து சோத்துக்காக வேல செய்ய வந்திருக்கன். ஒன்னோட
அஞ்சி நிமிஷ ஆசைக்காக என்னோட வயித்த நிரப்பி வுட்டுடாத. அப்புறம் சாவு வரைக்கும் நாந்தான்
அவஸ்தைப் படணும். எனக்கு ஒன்னோட பணமும் வாணாம், பொருளும் வாணாம்” என்று சொல்லிவிட்டாள்.
ஆனாலும் அந்தப் பையன் அவ்வப்போது ‘அங்கே இங்கே’
என்று தொடுவான், தட்டுவான். அவன் தொடுவதும் தட்டுவதும் தெரிந்தாலும் தெரியாதது போலவே
நடந்துகொள்வாள். கோபம் வரும்போதும், வருத்தம் வரும்போதும், ”எம் புருஷன் சாவாம இருந்திருந்தா
நான் எதுக்கு இங்க வந்து புழுக்க வேல செய்யுறன்” என்று தன்னைத் தானே நொந்துகொள்வாள்.
எப்போதெல்லாம் வேலை கடினமாக இருக்கிறதோ, எப்போதெல்லாம் மனம் கஷ்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம்,
“ஏன்தான் அடிப்பட்டு செத்தானோ” என்று பாலுவைத் திட்டுவாள். வேலையெல்லாம் முடித்துவிட்டு
படுத்தப் பிறகுதான் அவளுக்குத் தன்னுடைய பிள்ளைகள் பற்றி, தன்னுடைய அம்மா பற்றி ஞாபகம்
வரும். வீடியோ கால் போட்டு பேசுவாள். எப்போதாவது, “சொத்து பத்து இருந்தா நான் எதுக்கு
யாரோட வீட்டிலேயோ படுத்திருக்கேன்?” என்று மனம் சலித்து புலம்புவாள். சலிப்பு ஏற்படும்
போதெல்லாம், “விடிஞ்சதும் ஊருக்குப் போய்விட வேண்டும்” என்று முடிவெடுப்பாள். மறுநொடியே
ஊருக்குப் போய் என்ன செய்வது என்ற கேள்வி எழும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்வரை
காட்டு வேலைக்குப் போனதில்லை, அவளுடைய அம்மாவும் கூப்பிட்டதில்லை. பாலு லாரி டிரைவராக
இருந்ததால் பணப்புழக்கம் இருந்தது. வேலைக்குப் போ என்று பாலுவும் கட்டாயப்படுத்தவில்லை,
காட்டு வேலைக்குப் பழகியிருந்தால் அட்டண்டர் வேலைக்கே வந்திருக்கவே மாட்டாள்.
பாலுவுடன் மொத்தமே ஏழு வருசங்கள்தான் இருந்தாள்.
ஏழு வருசத்தில் எத்தனை நாள் அவன் வீட்டிலிருந்தான் என்று எண்ணிவிடலாம். “வண்டிக்கிப்
போவணும்” என்றுதான் வீட்டிலிருக்கும்போதுகூட சொல்லிக்கொண்டிருப்பான். பாலுவைப் பற்றி
நினைக்கும்போதெல்லாம், “ரொம்ப அவாரமாய் போயி சேந்திட்டான். என்னெ ரோட்டுல வுட்டுட்டு”
என்று சொல்வாள்.
‘யாரோட சாவுக்காகவோ இப்பிடி நடு ராத்திரியில்
நின்னுக்கிட்டிருக்கனே’ என்று நினைத்ததுமே மீனாட்சிக்குக் கண்கள் கலங்கிவிட்டது. ராமன்
இரவில் இறந்ததற்குப் பதிலாகப் பகலில் இறந்திருக்கலாம் என்று தோன்றியது. பகலில் இவ்வளவு
பயம் இருக்காது என்று நினைத்தாள். காலையில் யார்தான் வந்து பிணத்தை வாங்குவார்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கும்போது ராமன் மகனிடமிருந்து போன் வந்தது. “காலையில எங்கத்தையும்
மாமாவும் வருவாங்க. எனக்கு டிக்கெட் போட்டிருக்கன். ஆஸ்பிட்டலியே இருங்க. பாடியக் காலையிலேயே
வாங்குறதா, நானும் என் தங்கச்சியும் வந்த பிறகு வாங்குறதான்னு இன்னும் முடிவாகல, முடிவானதும்
சொல்றன் ரெண்டு, மூணு நாளக்கி இருங்க. மத்த விஷயத்த அப்புறம் சொல்றன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். மீனாட்சிக்கு கோபம் வந்துவிட்டது.
“இவங்க எப்ப வந்து பிணத்த வாங்குறது? அதுவரைக்கும் பொணத்துக்கு யாரு காவல் இருக்கிறது?”
என்று சொல்லி முணுமுணுத்தாள். அப்போது எமர்ஜென்ஸி வார்டிலிருந்து வெளியே வந்த நர்ஸ்,
“ராமனோட
அட்டண்டர் யாரு?” என்று கேட்டு, ஒரு படிவத்தில் கையெழுத்து கேட்டாள்.
“நான் பொணத்துக்குச் சொந்தக்காரி இல்லீங்க.
அட்டண்டர்.”
“அட்மிஷன் போட்டது யாரு?”
“நான்தான்.”
“அப்படின்னா நீங்களே போடலாம். போடுங்க, தப்பு
ஒன்னுமில்ல” என்று சொல்லி கட்டாயப்படுத்தியதால் பயந்துகொண்டே கையெழுத்துப் போட்டாள்.
படிவத்தை எடுத்துக்கொண்டு நர்ஸ் உள்ளே போனதும், அவசரஅவசரமாக ராமனின் மகனுக்கு நர்ஸ்
கையெழுத்து வாங்கிய விஷயத்தைச் சொன்னாள். “கையெழுத்துப் போட்டச்சில்ல. விடுங்க விஷயத்த.
அப்புறம் பேசறன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
“பெத்த அப்பன விட்டுட்டுப் போயி அப்படியென்ன
வெளிநாட்டுல பணம் சம்பாதிக்கிறது? பணத்துக்காக, சொத்துக்காக, சொகத்துக்காகத்தான் போயிட்டாங்க?”
என்று யோசித்த அடுத்த நொடியோ மீனாட்சிக்குக் கல்லால் மண்டையில அடித்ததுபோல், “நானும்
பத்து வயசு, பதினோரு வயசு புள்ளைங்கள வுட்டுட்டு வந்து பணத்துக்காகத்தான் அட்டண்டர்
வேல பார்க்குறன்” என்ற எண்ணம் உண்டானதும் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
“அநாத பொணமா கெடந்து சாகணும்னு அவருக்கு விதிபோல. அநாத பொணத்துக்குக் காவ காக்கணும்னு எனக்கு விதிபோல” என்று சொல்லும்போது ராமனின் பிணத்தை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவது பிணத்திற்குச் சொந்தக்காரி ஓடுவதுபோல் ஸ்டெச்சரை நோக்கி அரக்கப்பரக்க ஓடினாள் மீனாட்சி.
ஆனந்த விகடன் 10/11/2022
மிகச் சிறப்பான சிறுகதை ஐய்யா.
பதிலளிநீக்குசமூகத்தின் பல நிலை மனிதர்கள் குறித்து சிந்திக்க வைத்தது.