புதன், 16 டிசம்பர், 2020

பதிப்புத்துறையின் முகம் - இமையம்

 

பதிப்புத்துறையின் முகம்!

                                                                                                                                                இமையம்

ஜெயா என்கிற ஜெயலட்சுமியும், எஸ்.ராமகிருஷ்ணனும் இணைந்து 1974-ல் ஆரம்பித்த பதிப்பகம்தான் க்ரியா. இந்நிறுவனத்தில் கவிஞர் சி.மணி, எழுத்தாளர் சுந்தர ராமசாமி போன்றவர்கள் பங்குதாரர்களாக இருந்திருக்கிறார்கள். க்ரியாவினுடைய முதல் நூலாக .முத்துசாமியின்நாற்காலிகாரர்வெளியிடப்பட்டது. க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் மறைவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு 15.11.2020-ல் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் விரிவுப்படுத்தப்பட்ட க்ரியாவின்தற்காலத் தமிழ் அகராதிமூன்றாவது பதிப்பை வெளியிட்டார். மூன்றாவது முறையாக விரிவுபடுத்தப்பட்ட அகராதியை பதிப்பாசிரியரே வெளியிட்ட பெருமை இந்தியாவில் அவருக்கு மட்டுமே உரியது. க்ரியா இதுவரை 144 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

க்ரியாவின் வெளியீடுகள் என்பது தமிழ் எழுத்தாளர்களால், வாசகர்களால் கொண்டாடப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. காரணம் க்ரியா வெளியிட்ட புத்தகங்களின் உள்ளடக்கம், வடிவமைப்பு, நேர்த்திதான். இதுவே க்ரியாவின் அடையாளமாகவும் இருக்கிறது.

ஜெர்மன் மொழியிலிருந்து காஃப்காவின்விசாரணை’, ழிக் பிரட் லென்ஸின்நிரபராதிகளின் காலம்’, பிரஞ்ச் மொழியிலிருந்து ஆல்பெர் காம்யுவின்அந்நியன்’, ழீன் பால் சார்த்தரின்மீள முடியுமா?’, எக்சுபெரியின்குட்டி இளவரசன்‘, ழாக் பிரெவரின்சொற்கள்போன்ற மிக முக்கியமான நூல்களை நேரடியாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. க்ரியாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுக்கு, வாசகர்களுக்குப் பெரும் வெளிச்சமாக இருந்தன. நாவல், சிறுகதை, கவிதை என்றில்லாமல் சினிமா சார்ந்தஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ’, ‘ரோபெர் ப்ரெஸ்ஸோன்’, ‘லூயி மால்போன்ற உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் குறித்த நூல்களையும் வெளியிட்டிருக்கிறது. தமிழ் நூல்களை, மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதோடு ஆங்கிலத்திலும் ‘The Message Bearers’, ‘Tamil Revivalism in the 1930s’, ‘Growth Inequalities and Poverty in Tamilnadu’, ‘How I made my Dictionary?’, ‘Colporul : A History of Tamil Dictionaries’, ‘Zen Heart, Zen Mind’, ‘Computational Approaches to Tamil Linguistics’, ‘The BBI Combinatory Dictionary of English’, ‘New Dimensions in Tamil Epigraphy’ போன்ற நூல்களையும் வெளியிட்டிருக்கிறது. ‘Chola Bronzes’, ‘Tiruvengadu Bronzes’ போன்ற அரிய நூல்களையும், ‘Spiders : An Introduction’ என்ற பூச்சிகள் பற்றிய நூலையும் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது.

நாடகம், நாட்டியம், பொருளாதாரம், மருத்துவம் குறித்த நூல்களையும் க்ரியா வெளியிட்டிருக்கிறது. மிகவும் கவனம் பெற்றடாக்டர் இல்லாத இடத்தில்என்ற நூலையும் ‘Healthcare India’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறது. க்ரியா வெளியிடாத அறிவுத்துறை என்று எந்தத் துறையும் இல்லை.

க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இசை சார்ந்து, இலக்கியம் சார்ந்து, மொழி சார்ந்து, பிற கலைகள் சார்ந்து தெளிவான, தீர்க்கமான ஒரு பார்வை இருந்தது. அந்தப் பார்வையின் அடிப்படையில்தான் வெளியிட வேண்டிய நூல்களை அவர் தேர்ந்தெடுத்தார். க்ரியா வெளியிட்டிருக்கிறது என்பதற்காகவே புத்தகத்தை வாங்குகிற பழக்கம் கொண்ட வாசகர் கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு புத்தக உருவாக்கத்தின்போதும் புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ப வராக ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு புது முயற்சியும் மற்ற பதிப்பாசிரியர்களுக்குப் பாடமாக இருந்திருக்கிறது.

க்ரியாவில் தன்னுடைய ஒரு நூலாவது வரவேண்டும் என்று ஆசைப்பட்ட எழுத்தாளர்கள் உண்டு. பல எழுத்தாளர்களுடைய எழுத்துகளை க்ரியா வெளியிட மாட்டேன் என்று நிராகரித்திருக்கிறது. நண்பர்களுக்காக புத்தகம் போடுவது, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக, கட்டாயத்திற்காக புத்தகம் போடுவது என்ற பேச்சே அவரிடம் கிடையாது. அவர் தனக்கென்று உருவாக்கிக்கொண்டிருந்த ரசனையின் அடிப்படையில்தான் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார்.

தற்காலத் தமிழ் அகராதி, ஐராவதம் மகாதேவன் எழுதிய ‘Tamil Epigraphy’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, ‘நெல் சாகுபடி’, ‘கோவேறு கழுதைகள்’, ‘கூலித்தமிழ்’, ‘அஞ்ஞாடி‘, ‘தாவோ தே ஜிங்போன்ற நூல்கள் தமிழ் வாசகப் பரப்பில் பெரும் கவனம் பெற்ற நூல்கள்.

நான் 1986-ல்மீள முடியுமா?’ என்கிற நாடகத்தைப் படித்துவிட்டுத்தான் க்ரியாவின் வெளியீடுகளைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். நான் நாவல் எழுதியதும் க்ரியாவில்தான் வெளியிடவேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். இதுவரை என்னுடைய ஆறு நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், ‘பெத்தவன்நெடுங்கதையையும் வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து முப்பதாண்டுகளாக நான் க்ரியாவுடன் பயணித்திருக்கிறேன். ஒரு பதிப்பாசிரியராக அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். அவர் மூலமாக என்னுடைய எழுத்து கூடுதல் வெளிச்சம் பெற்றிருக்கிறது. ஒரே நேரத்தில் கற்றுத்தருபவராகவும், கற்றுக்கொள்கிறவராகவும் அவர் இருந்தார். இந்தப் பழக்கம் வேறு எந்தத் தமிழ்ப் பதிப்பாளரிடமும் இல்லை.

பதிப்புத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது என்றும் போற்றக்கூடியது, பின்பற்றக்கூடியது. அவர் உருவாக்கிய மதிப்பீட்டிற்காகத் தமிழ் அறிவுலகம், பதிப்புலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

 

02.12.20

ஆனந்த விகடன்

1 கருத்து:

  1. Thanks to S Ramakrishnan & Jeyaladsumy for creating Kriya publications & introducing Great writers& publishing 144 books from 1974! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent!

    பதிலளிநீக்கு