வியாழன், 6 டிசம்பர், 2018

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் – மா.சண்முகசிவா விமர்சனம் - இமையம்



       மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்மா.சண்முகசிவா
விமர்சனம் - இமையம்
மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூல் மலேசிய எழுத்தாளர், மருத்துவர் மா.சண்முகசிவா மருத்துவம் தொடர்பாக தினசரி நாளிதழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. மனோவியல், பொதுமருத்துவம், காது-மூக்கு-தொண்டை, தோல்நோய், நீரழிவுநோய், சிறுநீரகம், எலும்பு, புற்றுநோய், கண்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவருக்கும் வரக்கூடிய அனைத்து விதமான நோய்களையும், நோய் வருவதற்கான காரணங்களையும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் எந்தெந்த நோய்க்கு எந்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகவும் விரிவாகவும் எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கங்களை அளித்திருக்கிறார்.
மா.சண்முகசிவாவின் பதில்களில் அச்சுறுத்தல்கள் இல்லை, "உயிருக்கு ஆபத்து" என்று சொல்லி நோயாளிகளைப் பதட்டப்பட வைக்கவில்லை. மருத்துவரின் பதில்களிலிருந்து நோயாளிகளுக்குத் தெரியவருவது நோய் குறித்த தெளிவும், நோய்க்கான சிகிச்சை முறை குறித்த தெளிவும்தான்.  நோயாளிகள் கவலையுடன், பயத்துடன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் "இவ்வளவுதானா, இதற்காகவா இவ்வளவு பயப்படுகிறீர்கள்?  சரி செய்துவிடலாம். சரி செய்யக்கூடிய நிலையில்தான் நோய்  உங்களை  தாக்கியுள்ளது.  கவலை வேண்டாம்"  ன்று ஆறுதலாகவும், அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பதில்களைத் தந்திருக்கிறார். நோயாளிகளுக்கு மன தைரியம் ஏற்படும் விதத்திலும், நோய் குறித்த மனதிலிருக்கும் அச்சத்தைப் போக்கும் விதத்திலும் பதில் அளித்திருக்கும் விதம் சிறப்பு.
நோயாளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்கிற எல்லாவிதமான கேள்விகளுக்கும், கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் கேள்விகளுக்கும், கேள்வி கேட்பவருக்கு புரியும் வண்ணம் பதிலளித்திருக்கிறார். தான் ஒரு மருத்துவர், தன்னிடம் கேள்வி கேட்பதா என்ற அகம்பாவமோ, தான் ஒரு மேதை என்ற எண்ணமோ இல்லாமல், கேள்வி கேட்பவரின் மனநிலைக்கேற்ப பொறுப்புணர்வுடன் பதிலளித்திருப்பது வித்தியாசமானது.  நட்புடனும் கருணையுடனும் அணுக வேண்டிய இடம் மருத்துவமனை. மனிதநேயம்  நிரம்பி இருக்க வேண்டிய இடம். கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என்பதை மா.சண்முகசிவாவின் பதில்களில் இருந்து அறிய முடிகிறது.
எந்த நோயாளியாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக எந்த தரத்திலிருக்கும் நோயாளியாக இருந்தாலும், நோய் குறித்தும், நோயின் தன்மை குறித்தும், நோய்க்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்பதும், மருத்துவரும் நோயாளியும் சேர்ந்துதான் நோயைப் போக்க முடியும் என்றும் சொல்கிற மா.சண்முகசிவாவின் பதில் புதுமை. நோயாளிகள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மழுப்பலான பதில்களையோ, குழப்பமான,  ஆங்கில வார்த்தைகள் நிறைந்த மருத்துவ சொற்களையோ அதிகமாக பயன்படுத்தாமல் நல்ல தமிழில் தெளிவாகவும் சுருக்கமாகவும் பதிலளித்திருக்கிறார்
               உயிருக்கு ஆபத்து உடனே மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள் என்று கூறி ஒரு நோயாளியையும் அவர் பயமுறுத்தவில்லை. அதே நேரத்தில் என்ன நோய், எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, நோயின் பாதிப்பிற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை, மருந்து, மாத்திரைகள், அணுகவேண்டிய மருத்துவர் என்பன போன்ற தகவல்களைத் துல்லியமாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பதிலையும் படிக்கும் போது நாமே மருத்துவராகிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாசகன் மனதில் இந்த எண்ணத்தை ஏற்படுத்திய விதத்தில் மா.சண்முகசிவாவின் பதில்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
பொதுவாக மருத்துவர்கள் நோயாளியைப் பார்த்ததும் என்ன செய்கிறது?” என்று மட்டும்தான் கேட்பார்கள். நோயாளி பேசத் தொடங்கியதும் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனிக்காமல் மருத்துவர், மருந்து சீட்டில் எழுத ஆரம்பித்து விடுவார். நோயாளி தன்னுடைய குறைகளை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே மருந்து சீட்டை கையில் கொடுத்து, மருந்து மாத்திரை சாப்பிடுங்கள். ஒரு வாரம் கழித்து வாருங்கள், பார்க்கலாம்.” என்று கூறி வெளியே அனுப்பிவிடுவார்கள். மருத்துவப் பாடத்தில், நோயாளிகளிடம் அதிகம் பேசக்கூடாது, மருந்து சீட்டையும் புரியும்படி எழுதக்கூடாது என்று சொல்லித் தருவார்கள் போலிருக்கிறது. மருத்துவத்தில் இதுதான் முக்கியமான பாடமாக இருக்கும். ஆனால் மா.சண்முகசிவாவின் புத்தகம் சொல்கிற மிக முக்கியமான செய்தி நோயாளிகள் பேசவேண்டும், மருத்துவர்கள் பேச வேண்டும் என்பதுதான். நோயாளிகள் மனதில் இருக்கும் நோய் குறித்த அச்சத்தைப் போக்குவதுதான் நோய்க்கான, நோயாளிக்கான முதல் சிகிச்சை என்று சொல்கிறார். கண் மருத்துவர், தோல், சிறுநீரக, எலும்பு மருத்துவர் என்ற முறையில் மட்டும் நோயாளியை அணுகாமல் உளவியல் மருத்துவர் என்ற அடிப்படையிலும் அணுக வேண்டும் என்று சொல்வது மிகவும் கவனம் கொள்ள வேண்டியது. நம்முடைய மருத்துவர்கள் தோற்றுப்போகிற இடம் இதுதான். உடல் நோய்க்கான பதில்களை மட்டும் சொல்லவில்லை. மன நோய்க்கான, நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை சொல்லித்தரவில்லை. மாறாக கற்றுத்தந்திருக்கிறார் மருத்துவர்.
மா.சண்முகசிவா தருவது கசப்பு மருந்துதான். ஆனால் இனிக்கிறது. எப்படி? அவருடைய பதிலில் இருக்கும் நகைச்சுவை உணர்வு, உண்மைகள், மேற்கோள் காட்டும் சம்பவங்கள், எளிய உதாரணங்கள், கதைகள், 54 நவீன தமிழ் கவிதைகளை மேற்கோள்களாக அப்படியே தந்திருப்பது அதிசயம். ஒரு மருத்துவராக மட்டுமல்ல நோய்க்கான காரணத்தையும், சிகிச்சை முறைகளையும் ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்தும் பதில் சொல்லி இருக்கிறார். Diagnoss is a science, therapy is an art என்று சொல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. மருத்துவரின் பதில்களில் எங்குமே பயமுறுத்தல், அச்சுறுத்தல், பொறுப்பற்ற குரல் என்பது இல்லை. மருத்துவத் துறை சம்பந்தமான கேள்விபதில் நூல்தான். ஆனால், சுவாரசியமான கதையைப் படிப்பதுபோல படிக்க முடிவது ஆச்சரியம். நூலைப் படித்து முடித்ததும் உடலில் உள்ள உறுப்புகள், அதற்கு வரக்கூடிய நோய்கள், நோய்களுக்கான மருந்து மாத்திரைகள், சிகிச்சை பெறுவது எப்படி என்பது நமக்கே தெரிந்துவிட்டது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அனேகர் வீட்டில் பஞ்சாங்கம், ஜாதாக நோட்டு இருக்கும். ஆனால் இவை இரண்டும் நோயைத் தீர்க்காது. நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையை சொல்லாது. ஆனால் மா.சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உடல்நலக் கையேடு. மனநலக் கையேடு.

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்                              புதிய தலைமுறை
மா.சண்முகசிவா                                               வார இதழ்
உமா பதிப்பகம்                                                22 நவம்பர் 2018
85 CP, Jalan Perhentain, Sentul,
51100 Kuala Lumpur, Malaysia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக