புதன், 5 ஏப்ரல், 2017

எப்போது பேசுவீர்கள் மருத்துவர்களே : இமையம்

எப்போது பேசுவீர்கள் மருத்துவர்களே : இமையம்
       
2001-ல் சிறுநீர்கழிப்பதில் சிரமப்படுகிறது என்று ஒரு வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றார்கள். விஷயத்தை கேட்ட மருத்துவர் "வளரவளர சரியாகிவிடும்" என்று சொல்லி அனுப்பினார். இரண்டாவது, மூன்றாவது வயதிலும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்ததால் மீண்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் போன போது "இது பெரிய பிரச்சினை இல்லை. தானாக சரியாகிவிடும். பயப்படுவதற்கு எதுவுமில்லை" என்று சொன்னார். "தொட்டுப்பார்த்து என்னான்னு சொல்லுங்க" என்று குழந்தையின் தாய் கேட்டபோது "அதற்கு அவசியமே இல்லை" என்பதுபோல மருத்துவர் சிரிக்கமட்டுமே செய்தார். அடுத்த முறைபோனபோதும் மருத்துவர் "தானா சரியாகிவிடும்" என்றுதான் சொன்னார். மருத்துவரே கவலைப்பட தேவை இல்லை என்று சொன்னதால் பெற்றோர்கள் அதோடு விட்டுவிட்டார்கள். ஆறு, ஏழு வயதாகி பையன் தானாகவும், மறைவாகவும் சிறுநீர் கழிக்க ஆரம்பித்த பிறகு தன்னால் ‘முக்கிமுக்கித்தான்சிறுநீர் கழிக்க முடிகிறது என்பதை சொல்லவில்லை. பின்னாளில் முக்கிமுக்கி சிறுநீர் கழிப்பது அவனுக்குப் பழக்கமாகிவிட்டது.
        2016-ல் பையனுக்கு பதினைந்து வயது, பள்ளியில் மயங்கி விழுந்துவிட்டான். பகல் முழுவதும் சிறுநீரே வரவில்லை. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு போய் சோதனை செய்தபோது சிறுநீர் வெளியேறக்கூடிய பாதையில் அடைப்பு இருக்கிறது. அதனால் சிறுநீர் தேங்கிதேங்கி, அதிலிருந்த கழிவுகள் வெளியேறாமல் உள்ளேயே தங்கி நோய் தொற்று ஏற்பட்டு இரண்டு சிறுநீரகங்களையும் செயல் இழக்க செய்துவிட்டது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். சிறுநீரகங்கள் வேலை செய்யாததால் பையன் இப்போது வாரத்திற்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்துகொண்டு மூளைச்சாவு அடைபவர்கள் தானமாக கொடுக்கும் சிறுநீரகத்திற்காக பதிவு செய்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறான். இந்த காத்திருப்பு எத்தனை ஆண்டுகள்? காத்திருப்பதற்கு பலன் கிடைக்குமா? மாற்று சிறுநீரகம் கிடைத்தாலும் அது எவ்வளவு காலம் வேலை செய்யும்? மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கு எவ்வளவு செலவாகும்? எதுவுமே தெரியாது. பையனுடைய வாழ்க்கை கேள்விக்குறியில் நிற்கிறது. அவனுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக நடுத்தெருவில் நிற்கிறது. இதற்கு யார் காரணம்? பெற்றோர்களா? மருத்துவரா?
        சிறுநீர் வெளியேறக்கூடிய பாதையில் ஏதாவது அடைப்பு இருக்கலாம். அதை சோதித்துப் பார்த்துவிடுங்கள் என்று மருத்துவர் ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தால் பதினைந்து வயதுடைய பையனுடைய வாழ்க்கை இன்று வேறாக இருந்திருக்கும். அவனுடைய குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்காது. இது மாதிரி தமிழகத்தில் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்? கூடுதலாக ஒரு வார்த்தை பேசுவதின் மூலமாக மருத்துவர் பொருளாதார ரீதியாக இழப்பது என்ன? நோயாளியை தொடக்கூடாத ஒரு பொருளாக கருதுவது ஏன்?  மருத்துவர்கள் நோயாளிகளிடம் அதிகமாக அல்ல, பேசுவதே இல்லை. மீறிபேசினாலும் வேத வாக்காக அவர் சொல்கிற ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும்தான் கேட்க வேண்டும். நோயாளி ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால் ஒரு புழுவைப் போலத்தான் பார்ப்பார்கள். நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா என்பதுபோல கண்களில் திமிர்த்தனம் மிளிர பார்ப்பார்கள். உலகில் யாரும் படிக்காத படிப்பை படித்துவிட்டதாக நினைக்கிறார்கள். எவ்வளவு படிக்கிறோமோ அதே அளவுக்கு அன்பும், மனிதநேயமும் கூடியிருக்க வேண்டும். அதுதானே கல்வி என்பது. நீங்கள் படித்த படிப்பும், உங்களுக்கு போதித்த கல்வி நிறுவனமும் நோயாளிகளிடம் பேசவே கூடாது, நோயாளிகளை தொடவேக்கூடாது என்று சொல்லி தந்திருக்கிறதா? அப்படியென்றால் மருத்துவத்தை படித்ததின் அடிப்படையையே நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
        மருத்துவர்களே - மருந்து கம்பனி ஏஜென்டுகளிடம் நீங்கள் பேசுவதில்லையா? ரயில் பயணத்தில், டோல் கேட்டுகளில் மருத்துவர் என்ற சலுகைக்காக பேசுவதில்லையா? உங்களுடைய செல்ல நாய்க்குட்டியிடம் பேசத்தான் செய்கிறீர்கள். ‘சிறப்பு மருத்து நிபுணர் வருகைஎன்று நோட்டீஸ் அடிக்கவும், விளம்பரம் செய்யவும், நோயாளிகளை பிடித்துவரவும் பல ஊர்களிலுள்ள மருந்து கடைக்காரர்களிடம் பேசுகிறீர்கள். மருந்து சீட்டை இலவசமாக அச்சடித்து தருவதற்கு ஒரு மருத்துக்கடைக்காரரிடம் பேசுகிறீர்கள். இங்கு ‘அன்பளிப்பு, நன்கொடை வழங்கப்பட மாட்டாது என்று எழுதிப்போட பேசுகிறீர்கள். ஒரு நாளைக்கு செல்போனில் எத்தனை முறை பேசுகிறீர்கள்? ஸ்டெத்தாஸ்கோப்பைக்கூட எடுத்துவர மறந்துவிடுவீர்கள். ஆனால் செல்போனை எடுத்துவர மறப்பதில்லை. நோயாளியை எதிரில் உட்கார வைத்துவிட்டு செல்போனில் சிரித்துசிரித்து பேசுகிறீர்கள். அப்போது உங்களுடைய முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருக்கிறது. அந்த மலர்ச்சி ஏன் நோயாளியைக் கண்டதும் எதிராளியைக் கண்டதுபோல் இருண்டுபோகிறது? உங்களுடைய வாய் ஏன் அடைத்துப் போகிறது? கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என்பதற்காக நோயாளிகள் கிழிந்த நோட்டையோ, அழுக்கடைந்த நோட்டையோ கொடுத்தால் வாங்குவீர்களா? உங்களிடம் கடன் சொல்ல முடியுமா? பாக்கி வைக்க முடியுமா?
        கூடுதலாக ஒரு வார்த்தை பேசாத, பேச விரும்பாத உங்களைப் பார்ப்பதற்காக நரசுகளிடம் நோயாளிகள் படும் அவமானங்களை பட்டியலிட முடியாது. வெடி குண்டு வைத்திருப்பவன் மாதரிதான் ‘அங்க நில், இங்க நில், டாக்ட்டர் வரநேரம், டாக்ட்டர் போற நேரம், டாக்ட்டர் கோபப்படுவார், டாக்ட்டர் பாக்காத மாதிரி நில்லுங்க’, இப்படி எத்தனை கெடுபிடிகள். நரசுகள் நடக்கிற நடையும், பேசுகிற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும், நோயாளிகளுக்கு நரக வேதனைதான். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் நரசுகள் தரும் நரக வேதனையை, சிறுமைப்படுத்தல்களை தாங்கிக்கொண்டுதான் உங்களை சந்திக்க வருகிறோம். உங்கள் மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் நர்சுகளில் எத்தனைப் பேர் முறையாகப் படித்தவர்கள்?
"என்ன செய்யுது?" என்ற ஒரு வார்த்தைதான். அதோடு உங்களுடைய வாய் மூடிக்கொள்ளும். நோயாளி பேசுவதை கேட்காமலேயே மருந்து பட்டியலை எழுத ஆரம்பித்துவிடுவீர்கள். நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போது நோயாளி ஏதாவது பேசினால், கேள்விக் கேட்டால் வெடிகுண்டை போட்டுவிட்டது மாதிரி உங்களுடைய நரசு பதறிப்போய் ‘பேசக்கூடாதுஎன்பது மாதிரி வாயில் விரலை வைத்து காட்டுவார். மிரட்டுவது மாதிரி பார்ப்பார். மீறியும் நோயாளி ஏதாவது பேசினால், கேள்வி கேட்டால் "இந்த மாத்திரய சாப்புடுங்க. ஒரு வாரம் கழிச்சிவாங்க. பாப்பம்" என்று சொல்லிவிட்டு மருந்து சீட்டை நரசிடம் நீட்டுவீர்கள். அதற்குமேல் நோயாளி எதுவும் பேசக்கூடாது என்ற பதட்டத்தில் தெரு நாயை இழுத்துகொண்டு வருவது போல, நோயாளியை இழுத்துகொண்டு வெளியே வந்துவிடுவார் நரசு. கொஞ்சம்பேரும், கொஞ்ச கூட்டமும் சேர்ந்துவிட்டால் உங்களுடைய வாய் சுத்தமாக திறக்காது. உங்களுடைய நரசுகளின் அடாவடித்தனத்திற்கு எல்லை இருக்காது. நகைக்கடையில்கூட ஆளைப் பார்த்து, வாங்கும் தொகையின் மதிப்பைப் பார்த்து, ரெகுலர் வாடிக்கையாளர் என்றால் நூறு, ஐம்பது என்று குறைப்பார்கள். நீங்கள் எட்டணாகூட குறைப்பதில்லை.
        உடம்பு சரியில்லை என்றால் சர்வ வல்லமை படைத்ததாக நம்பப்படும் கோவிலுக்கா போகிறோம்? உங்களிடம் தானே வருகிறோம். உங்களை நம்பி, உடலை மட்டுமல்ல, உயிரை மட்டுமல்ல, குடும்பத்தையும்தான் ஒப்படைக்கிறோம். அதற்காக நீங்கள் நிர்ணயித்த பணத்தையும் தருகிறோம். மருத்துவர்களே உங்களுடைய ஒரு சொல் நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை, ஆற்றலை, மனவலிமையை தரும் என்பதை அறிவீர்களா? நீங்கள் எழுதி தரும் மருந்துகளைவிட, நீங்கள் போடும் ஊசிகளைவிட பெரிய மருந்தாக இருப்பது உங்களுடைய வார்த்தைகள்தான். தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த நிலை என்றால் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், நர்சுகள் எப்படி நடத்துவார்கள்? அங்கு செல்லும் நோயாளிகளின் நிலை என்ன?
        பொதுவாக மருத்துவர்களைப் பார்த்தால் பேசுவதற்கு கூச்சப்பட்டவர்கள் மாதிரி தெரிகிறார்கள். அது உண்மையில்லை. படிப்பு முடிந்து, முதன்முதலாக கிளினிக் திறக்கும்போதே ‘மருத்துவ நிபுணர்என்று பெயருக்கு பின் போட்டுக்கொள்ளவும், விளம்பரம் செய்யவும் கூச்சப்படாதவர்கள் தானே நீங்கள். ஒரு துறையில் பத்து இருபது ஆண்டுகள் பணி செய்து, அதில் கைதேர்ந்தவர்கள் என்று பெயர் எடுத்தவர்தானே நிபுணர்? நிபுணர் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்த கூசாதவர்கள்தானே நீங்கள்? மற்ற மருத்துவர் எழுதி தந்த மருந்து சீட்டை படிக்காமலேயே இடதுகையால் ஒதுக்கித்தள்ள கூசாதவர்கள்தானே நீங்கள். தாலியை விற்றாவது பணத்தைக் கட்டு என்று சொல்லக்கூடியவர்கள்தானே? தாலி விற்ற பணத்தையும் வாங்க கூசாதவர்கள்தானே நீங்கள்?
        மருத்துவர்களே நீங்கள் பேசவேண்டும், அதற்காகத்தான் படித்தீர்கள். அதற்காகத்தான் பணம் வாங்குகிறீர்கள்? உங்களால் பேச முடியும். நீங்கள் பேசாதவர்களும் அல்ல. பேச வேண்டியவர்களிடம் பேசாமல் இருப்பது பெரும்குறை. குற்றம். நீங்கள் படித்த படிப்பிற்கே அவமானம். பேசவிரும்பாத நீங்கள் ஏன் க்ளினிக் திறக்கிறீர்கள்? வாங்குகிற பணத்திற்காகக்கூட பேசவேண்டாம். சகமனிதன் வலியில் துடிக்கும்போது, நம்பிக்கையிழந்து அழும்போது பிச்சைப்போடுவது மாதிரிகூட உங்களால் நான்கு வார்த்தை கூடுதலாக பேச முடியாதா? அவ்வளவு இழிவானவர்களா நோயாளிகள்? அவர்களுடைய வரிப் பணத்தில்தான் உங்களில் பலர் அரசு மருத்துவ கல்லூரியில் இலவசமாக படித்ததை மறக்க வேண்டாம்.

உயிர்மை எப்ரல் 2017

1 கருத்து:

  1. second opinionக்காக வேறு மருத்துவர்களை ஆலோசித்திருக்கலாம். ஒன்றுக்கு 2 அல்லது 3 மருத்துவர்களைக் கூட ஆலோசிக்கலாம் நம்பகத்தன்மை, பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து. இதை ஒரு நுகர்வோர் விழிப்புணர்வாக எளிய மக்களிடமும் பரப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு